அரசு Flcus religiosa, Linn.; Moraceae.
|
இம்மரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம், ஆவூர்ப்பசுபதீச்சுரம் , திருஅரசிலி , திருவியலூர், திருவெண்காடு , திருச்சுழியல் முதலிய சிவத்தலங்களில் தலமரமாக விளங்குகிறது. தமிழகமெங்கும் காணப்படும் கூரிய இலைகளையுடைய பெருமரம் (இது திருவாவடுதுறை தலத்தில் படர்ந்து காணப்படுவதால், படர் அரசு எனப்படுகிறது). இம்மரத்தைத் திருமரம் என்றும் கூறுவதுண்டு. ஏரி, குளக்கரைகளில் வேம்புடன் இணைத்து வளர்க்கப்பெறுவதுண்டு; இவ்விணை மரங்களை வலம் வருவதால் மகப்பேறு வாய்க்கும் என்று மக்களால் நம்பப்படுகிறது. இந்நம்பிக்கை அரச விதையால் ஆண்மலடு நீங்கும் என்பதையும், வேப்பிலையால் பெண்மலடு நீங்கும் என்பதையும் குறிப்பால் உணர்த்தியதேயாம். இம்மரத்தில் துளிர், பட்டை, வேர், விதை ஆகிய பாகங்கள் மருத்துவக் குணமுடையது.
கொழுந்து வெப்பு அகற்றி தாகந்தணிக்கவும், விதை காமம் பெருக்கவும், வேர், பட்டை ஆகியவை வீக்கம் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுகிறது.
திருமுறைகளில் அரச மரம் பற்றிய குறிப்பு :-
பரசுபாணியர் பாடல்வீணையர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தரசுபேணி நின்றார் இவர்தன்மை யறிவாரார் 3.112.1
ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து
மேதரு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலில் சோடசம் காண்உப சாரமே. 10.07.19.13
செம் பொனின் பரிகலத்தினில்
செந்நெல் வெண்பரப்பின்
வம்பு அணிந்த நீள் மாலை
சூழ் மருங்குற அமைத்த
அம் பொன் வாச நீர்ப் பொற்
குடம் அரசு இலை தருப்பை
பம்பு நீள்சுடர் மணி விளக்கு
ஒளிர் தரும் பரப்பில். 12.034.1185