இறைவர் திருப்பெயர்: அரசிலிநாதர், ஆலாலசுந்தரர், அஸ்வத்தேஸ்வரர், அரசலீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி, அழகியநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : அரசடித் தீர்த்தக்குளம்.
வழிபட்டோர்:வாமதேவர், சம்பந்தர் - பாடல் வண்டறை, சேக்கிழார் முதலியோர்
- வாமதேவர் எனும் முனிவர் பல தலங்களுக்கு சென்று சிவபெருமானை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது ஒரு அரசமரத்திற்கு அருகில் சற்று நேரம் அமர்ந்து ஒய்வெடுத்தார். உடலுக்கு குளிர்ச்சி தரும் அரசமரத்தின் அடியில் சற்று நேரம் இருக்கும் நமக்கே இவ்வளவு சுகமாக இருக்கிறதே என்று நினைத்த முனிவர், இங்கு சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பினால் எப்படி இருக்கும் என மனதில் நினைத்து கொண்டார். அவரது எண்ணத்தை அறிந்த சிவபெருமான், அரசமரத்திற்கு அடியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். மகிழ்ந்த வாமதேவ முனிவர் அருகில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினார். சிவபெருமான் அவர் முன் காட்சி தந்தார். அரச மரத்தை இறைவன் வீடாக (இல்லாக) கொண்டமையால் இப்பெயர் (அரசிலி) பெற்றது.
- வாமதேவ முனிவர் வழிபட்டுப் பிரதோஷ நாளில் பேறு பெற்றார்.
- சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். சிவபெருமான் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னனுக்கு பிள்ளைகள் இல்லை. எனவே, ஒரு நந்தவனம் அமைத்து அருகிலுள்ள மற்றொரு சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து வழிபட்டு வந்தான். இதற்காகப் பணியாள் ஒருவர் தினமும் நந்தவனத்தில் இருந்து மலர்களை எடுத்து வரும் பணியைச் செய்து வந்தார். ஒருசமயம் பணியாள், நந்தவனத்திற்கு சென்றபோது அங்கு மலர்கள் இல்லை. அரண்மனைக்குத் திரும்பிய பணியாளன், மன்னனிடம் செடியில் மலர்கள் இல்லாத விபரத்தைக் கூறினான். மன்னரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அன்று வேறு மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்தான். மறுநாளும் பணியாள் நந்தவனம் சென்றபோது அங்கு செடியில் மலர்கள் இல்லை. அவன் மீண்டும் மன்னரிடம் சென்று தகவலை கூறினான். மலர்களை அதிகாலையில் யாரோ பறித்து சென்று விடுவதாக சந்தேகம் கொண்ட மன்னன், அடுத்தநாள் காலையில் தன் படையினருடன் நந்தவனத்திற்கு சென்று கண்காணித்தார். அப்போது நந்தவனத்திற்குள் புகுந்த மான் மலர்களை உண்டதைக் கண்டான். சிவபூஜைக்கு என்று ஒதுக்கப்பட்ட மலர்களை மான் சாப்பிட்டதைக்கண்ட மன்னன் கோபத்துடன், மான் மீது அம்பு எய்தான். மான் தப்பிவிடவே, காவலர்கள் அதனை விரட்டிச் சென்றனர். அந்த மான் ஒரு அரசமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்து கொண்டது. மன்னன் மரத்திற்குள் அம்பு எய்தான். அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. மான் அம்பால் தைக்கப்பட்டிருக்கும் என நினைத்த மன்னன் உள்ளே பார்த்தபோது, அங்கு மான் இல்லை. அதற்கு பதில் சிவலிங்கம் (பல்லாண்டுகளுக்கு முன் மறைந்தது) இருந்தது. அதன் தலையில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. அதிர்ந்த மன்னன் சிவபெருமானை வேண்டினான். சிவபெருமான் மன்னனுக்கு காட்சி தந்து, மான் வடிவில் அருள்புரிந்தது தான் என்று உணர்த்தியதோடு, மன்னனுக்கு புத்திர பாக்கியமும் கொடுத்து அருளினார்.
அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான். சாளுவ மன்னனும் பிரதோஷ விரதமிருந்து பேறு பெற்றுள்ளான். ஆதலின் இத்தலத்தில் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். - சிரவையாதீனம் கெளமார மடாலயம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் இத்தலத்திற்குப் பாடல்களைப் பாடியுள்ளார்.
தேவாரப் பாடல்கள் பதிகங்கள் : சம்பந்தர் - 1. பாடல் வண்டறை (2.95) பாடல்கள் : சேக்கிழார் - ஏறணிந்த வெல் கொடியார் (12.28.1134 & 1135) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
வழி பாண்டிச்சேரி - திண்டிவனம் (வழி - கிளியனூர்)சாலையில் ஒழுந்தியாப்பட்டு அருகில் 2-கி. மீ.ல் உள்ளது.
தொடர்பு :
04147-235472