logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருஆனைக்கா ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் வரலாறு

Om symbol

இறைவர் திருப்பெயர்: நீர்த்தீரள்நாதர், ஜம்புகேசுவரர், அப்புலிங்கம்

இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி.

தல மரம்:

தீர்த்தம் : நவ தீர்த்தங்கள் 1. பிரம்ம தீர்த்தம்: தெற்கு நான்காம் திருச்சுற்றில் உள்ளது. 2. இந்திர தீர்த்தம்: மூன்றாம் திருச்சுற்றில் தென்மேற்கில் காசி விஸ்வநாதர் சந்நிதிக்குப் பக்கத்தில் உள்ளது. 3. ஜம்பு தீர்த்தம்: முன்னரே திருச்சுற்றுக்குக் கிழக்கில் பழைய ஜம்புகேஸ்வரர் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது. 4. இராம தீர்த்தம்: ஐந்தாம் திருச்சுற்றுக்கு வெளியே சந்நிதிக்கு மேற்கில் உள்ள தெப்பக்குளம். தை மாதத்தில் தெப்ப உற்சவம் நடக்கும். 5. ஸ்ரீமத் தீர்த்தம்: கர்ப்பக்கிருகத்தில் சிவலிங்கப் பெருமானுக்கு அருகில் ஊற்றுக்கண் போல் சுரப்பதாகும். 6. அக்னி தீர்த்தம்: மூன்றாம் பிராகாரத்தில் தென்கிழக்கில் வசந்த மண்டபத்திற்கு அருகில் உள்ள பெரிய கிணறு. 7. அகஸ்திய தீர்த்தம்: அம்மன் கோயில் முதல் திருச்சுற்றில் சந்நிதிக்கு எதிரில் பள்ளியறைக்குப் பக்கத்தில் உள்ள சிறிய கிணறு. 8. சோம தீர்த்தம் (சந்திர தீர்த்தம்): திருவரங்கத்தில் உள்ள சந்திர புஷ்கரணி 9. சூரிய தீர்த்தம்: நான்காம் திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு எதிரில் உள்ள தெப்பக்குளம். இதைச் சுற்றிலும் இரண்டடுக்கு வரிசை மண்டபம் உள்ளது. இதில் ஆடிப்பூரத்தில் தெப்பத் திருவிழா நடக்கும். காவிரி

வழிபட்டோர்:அம்பிகை, நந்தி, பிரம்மா, ஜம்பு முனிவர், சிலந்தி, யானை, இராமன், கௌதம முனிவர், பராசர முனிவர், கோட்செங்கட் சோழ நாயனார், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேக்கிழார், தாயுமானவர் முதலியோர்

Loading map...

Sthala Puranam

thiruanaikkatemple

  • திருவானைக்கா, கஜாரண்யம், ஜம்புகேஸ்வரம், வெண்ணாவல் வனம், ஜம்புவனம், ஞானக்ஷேத்ரம். ஞானபூமி, காவை, தந்திபுகாவாயில், அமுதேஸ்வரம், தந்திவனம், இபவனம் என்ற பெயர்கள் உடையது இப்பதி.
  • ஜம்பு முனிவர் ஒரு வெண்ணாவல் காட்டில் தவமிருந்தபோது அருமையான வெண்ணாவல் பழமொன்று கிடைத்தது. அதை கயிலையில் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தார். மீதமுள்ள கொட்டையைப் பிரசாதமாக ஜம்பு முனிவர் விழுங்க அது அவர் வயிற்றில் வளர்ந்து பெரிய வெண்ணாவல் மரமாயிற்று. அந்த அற்புதத்தைக் கண்ட முனிவர் சிவபெருமானின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். சிவபெருமான் அவரிடம் காவிரிக் கரையில் தவமியற்றுமாறும் அன்னை அகிலாண்டேஸ்வரி அவருடைய வெண்ணாவல் நிழலில் சிவலிங்கம் சமைக்க எழுந்தருளுவோம் என்றும் திருவருள் புரிந்தார். அந்த முனிவரும் வெண்ணாவலாக இறைவனுக்கு நிழல் பரப்புகிறார். இதனால் இத்தலம் ஜம்புகேஸ்வரம் (ஜம்பு - நாவல்) என்று பெயர் பெற்றது.
  • உலகம் உய்யும் பொருட்டு இறைவி சிவபெருமானே தனக்கு குருவாக வந்து ஞானோபதேசம் செய்யவேண்டும் என்று விரும்பினார். சக்தி இந்த வெண்ணாவல் வனத்தில் காவிரியின் நீரையே சிவலிங்கமாகத் தன் கரங்களால்  திரட்டி வழிபாடு செய்தார். அவர் தம் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன், குருவாக வந்து இறைவிக்கு உபதேசித்து அருளினார். இதன் காரணமாக இத்தலம் ஞானக்ஷேத்ரம் ஞானபூமி என்று அழைக்கப்படுகிறது. இறைவியின் தொடரும் வழிபாட்டைக் குறிக்கும் வண்ணம் தினமும் உச்சிகால பூஜையில் இறைவி வேடம் அணிந்து வந்து புஜகர் வழிபடு செய்கிறார். இறைவனும் இறைவியும் இத்தலத்தில் குரு சிஷ்ய பாவத்தில் இருப்பதால் இத்தலத்தில் இறைவன் இறைவிக்குத் திருக்கல்யாண விழா செய்வதில்லை. இறைவி நீரால் சிவலிங்கம் செய்ததால் இத்தல இறைவர் அப்புலிங்கம் (அப்பு - நீர்) ஆனார். இத்தலம் பஞ்ச பூதத் தலங்களில் அப்பு தலமாக வணங்கப்படுகிறது. இறைவன் நீர்த்திரளால் ஆன குறிப்பு அப்பர் தேவாரத்தில் "செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே" என்று உள்ளது.
  • பிரம்மா தன் படைப்புத் திறனெல்லாம் சேர்த்து மிக அழகான பெண்ணை உருவாக்கினார். அந்தப் பெண்ணிற்குத் திலோத்தமை என்று பெயரிட்டார். அந்தப் பெண்ணின் அழகில் தன் படைப்பு என்றும் அறியாது மயங்கினார். அந்த மயக்கம் தீர ஜம்புகாரண்யத்தில் தவம் இருந்து சிவபெருமானை வணங்கினார். பிழை பொறுக்கும் பரமேஸ்வரன் பிரம்மாவிடம் திருவிளையாடல் புரிய திருவுள்ளம் கொண்டு உமை ஆணாகவும், தான் பெண்ணாகவும் அவர் முன் காட்சியளித்தார். அதனை உணர்ந்த பிரமன் தன தவறைப் பொறுக்க வேண்டி அவர்களை வணங்கினார். இறைவன் அவரின் குறை நீக்கி மீண்டும் படைத்தல் தொழில் புரியும் வல்லமையை வழங்கினார்.
  • அகலிகையைக் கல்லாக சபித்த கௌதம முனிவர், கோபம் தணிந்து, அகலிகை நல்வாழ்வு பெற்றுத் தன்னுடன் நல்வாழ்வு வாழ இறைவனை இந்த வெண்ணாவல் வனத்தில் வழிபட்டார். அவர் வழிபாட்டின் பயனாக அகலிகை இராமரால் சாப விமோசனம் பெற்று இருவரும் நல்வாழ்வு வாழ்ந்தனர்.
  • இராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷத்தை இராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்து நீக்கிக்கொண்ட இராமர், கும்பகர்ணனைக் கொன்ற தோஷம் தீரும் பொருட்டு ஜம்புகாரண்யத்தில் அங்கதனைக் கொண்டு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து பிரம்மஹத்தி தோஷத்தை நீங்கப் பெற்றார். இராமன் வழிபட்ட மூர்த்தி கரியமாலீஸ்வரர் (நீலக்ரீவேஸ்வரர்) திருக்கோயிலாக மேற்குப் புறத்தில் திகழ்கிறது.
  • வசிஷ்டரிடம் தோற்ற விசுவாமித்திரர் சினத்தினால் வேள்வி செய்து அதில் எழுந்த பூதத்தின் மூலம் வசிஷ்டரை அழிப்பதாக நினைத்து அவரது மகன் சக்தியை அழித்துவிட்டார். சாந்தியுறாமல் அலைந்த அவர்தம் ஆன்மாவிற்கு சக்தியின் மகனான பராசர முனிவர் திருவானைக்காத் திருத்தலத்தில் வழிபட்டு பேயுருவம் நீங்கி மானுட யாக்கை பெறச் செய்தார். அத்துடன் துஷ்ட அரக்கர்களை திருக்கோயிலின் வடகிழக்கு மூலையில் வேள்வி செய்து அதில் விழச் செய்து அடக்கினார்.
  • சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் இருப்பது கண்ட சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும், பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அநுசிதமாகக் கருதி அதைத் தன துதிக்கையால் அழித்துவிட்டு வழிபடு செய்யும். சிலந்தி மறுபடியும் வலை பின்னித் தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, தன இறைவனுக்குச் செய்யும் கூரையை அழிக்கும் யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில்  கோச்செங்கட்சோழராகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோயில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் கோயில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும். யானை வழிபட்டதால் இவ்வூர் ஆனைக்கா கஜாரண்ய க்ஷேத்ரம் என்று பெயர் பெற்றது.
  • சோழ மன்னன் ஒருவன் தன் தேவி அணிந்திருந்த அழகிய முத்துமாலை ஒன்றை இறைவனுக்கு அளிக்க வேண்டும் என்று விரும்பினான். அரசனும் தேவியும் காவிரியில் குளிக்கும் போது முத்துமாலை தண்ணீரில் காணாமல் போய்விட்டது. காவிரி நீரிலேயே நின்று ஆனைக்கா அண்ணலை வேண்டி, "இறைவா! உனக்காக எண்ணிய மாலை, ஏற்றுக்கொண்டருள்க!" என்று மனம் உருக வேண்டினான். அவர்கள் இருவரும் ஜம்புகேஸ்வரரை தரிசனம் செய்யச் சென்றபோது, திருமஞ்சனக் குடத்திலிருந்து முத்து மாலை இறைவன் திருமேனி மேல் விழுந்தது. மன்னன் மிகுந்த ஆனந்தத்துடன் வணங்கினான். இச்செய்தியை "ஆரமாய மார்புடை ஆனைக்காவில் அண்ணலை" என்று சம்பந்தரும், "தாரமாகிய பொன்னி தண் துறை ஆதி விழுத்து நீரில் நின்று அடி போற்றி நின்மலா கொள்! என ஆங்கே ஆரம் பூண்ட எம் ஆனைக்காவுடை ஆதி" என்று சுந்தரரும் குறித்துள்ளனர்.
  • இத்திருக்கோயிலின் ஐந்தாம் சுற்று மதிலைக் கட்ட ஒரு சித்தர் வந்து திருநீற்றையே வேலை செய்பவர்களுக்குக் கூலியாக வழங்கினார். கூலி பெற்றவர்கள் வீட்டிற்குச் செல்லும்  பொழுது அவர்கள் செய்த உழைப்புக்கு ஏற்ப பணமாக மாறிவந்தது. இவ்வாறு திருநீற்றையே கூலியாகக் கொடுத்துக் கட்டிய பிராகாரம் என்பதால் ஐந்தாம் திருச்சுற்று மதிலுக்குத் திருநீற்றான் மதில் என்று பெயர்.
  • ஆனைக்கா ஜம்புகேஸ்வரரை தரிசிப்பதற்காகவே திருவரங்கத்தில் அரங்கநாதர் எழுந்தருளியிருப்பதாக கஜாரண்ய க்ஷேத்ர மஹாத்மியம் கூறுகிறது. இவ்விடத்திலுள்ள ஒரு தோப்பில் (நாச்சியார் தோப்பு) பெருமாள் புறப்பட்டு வந்து தங்கியிருந்து அன்றிரவு சிறப்பு அலங்காரத்துடன் திரும்புவது வழக்கம்.

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்  :  சம்பந்தர்   - 1. மழையார் மிடறா (2.23),                                 2. வானைக்காவில் வெண்மதி (3.53),                                 3. மண்ணது வுண்டரி (கூடற்சதுக்கம்) (3.109);                அப்பர்     - 1. கோனைக் காவிக் (5.31),                                 2. எத்தாயர் எத்தந்தை (6.62),                                 3. முன்னானைத் தோல்போர்த்த (6.63);                                            சுந்தரர்    -   1. மறைகள் ஆயின நான்கும் (7.75);                                   பாடல்கள்   :   அப்பர்  -  ஆனைக் காவில் (4.15.2),                             சிலந்தியும் ஆனைக் காவிற் (4.49.4),                             செல்வப் புனற்கெடில (6.7.1),                             அன்னமாம் பொய்கைசூழ் (6.22.4),                             செருவளருஞ் செங்கண் (6.30.10),                             ஆரூர்மூ லத்தானம் ஆனைக் காவும் (6.70.2),                             நள்ளாறும் பழையாறுங் (6.71.10),                             பூச்சூழ்ந்த பொழில்தழுவு (6.75.8),                             மையாருங் கண்ட (6.78.7),                             கரும்பிருந்த கட்டிதனைக் (6.79.8);               சுந்தரர்   -   தேனைக் காவல் கொண்டு (7.47.7);  மாணிக்கவாசகர்       -   முன்னானை மூவர்க்கும் (8.8.19); ஐயடிகள் காடவர்கோன் நாயனார்  -  குழீஇயிருந்த சுற்றம் (11.6.11),                                        அடுத்தபொன் அம்பலமே (11.24.26);   சேக்கிழார்             -    பொங்கு புனலார் (12.21.301) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                              செம்மணி வாரி அருவி (12.28.344,345 & 346) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                              செய்ய சடையார் (12.29.75) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,                              ஆன செயலால் (12.68.3 & 13) கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்.  

 

Specialities

  • மிகப்பெரிய திருக்கோயில். 2500 அடி நீளமும், 1500 அடி அகலமும் உடையது. ஐந்து பிராகாரங்கள் கொண்டது.
  • ஐந்தாவது திருச்சுற்று மதில் திருநீற்றான் மதில் அல்லது விபூதிப் பிராகாரம் என்று சிறப்புப் பெயருடையது.
  • பஞ்ச பூத தலங்களுள் இது அப்புத் தலமாகும்.
  • நடராஜர் சந்நிதிக்கு எதிரில் கோட்செங்கட் சோழ நாயனாரின் திருவுருவம் தனிச் சந்நிதியில் அமையப்பெற்றுள்ளது.
  • இஃது கோட்செங்கட் சோழ நாயனார் அவதாரப் பதியாகும்.
    அவதாரத் தலம் : திருஆனைக்கா. வழிபாடு : லிங்க வழிபாடு. முத்தித் தலம் : தில்லை (சிதம்பரம்). குருபூசை நாள் : மாசி - சதயம்.
  • ஆதிசங்கரர், இங்குள்ள அம்பிகைக்கு இரண்டு ஸ்ரீ சக்கரங்களைச் செய்து, அதைத் தோடாக அணிவித்தார்.
  • வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மறறும் முக்கிய திருவிழா நாட்களில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும்.
  • இக்கோயிலில் பிற்காலத்துச் சோழ மன்னர்கள், பாண்டியர்கள், ஹொய்சலர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் இவர்கள் காலங்களில் பொறிக்கப்பெற்ற நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. 
  • இக்கோயில் சிவபெருமான் திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர் என்னும் திருப்பெயர்களாலும், அம்பிகை அகிலாண்டநாயகி என்னும் பெயராலும் குறிக்கப்பெற்றுள்ளனர். 
  • இக்கோயில் முதற் பிராகாரத்துத் துவார பாலகர் இருவரையும் எழுந்தருளுவித்தவர் இருங்கொளப்பாடி வளநாட்டுக் கருப்பூரில் இருந்த இளைய நயினார் மகனார் தெய்வங்கள் பெருமாள் ஆவர். இச்செய்தி அத்துவார பாலகர்களின் அடிப்பீடங்களில் பொறிக்கப்பட்டிருக்கின்றது.
  • நான்காம் பிராகாரத்தில் அகிலாண்டநாயகி அம்மன் கோயிலின் முன் உள்ள பசுபதீஸ்வரம் உடையாரை எழுந்தருளுவித்தவர் நீலகண்ட நாயக்கராவர். இச்செய்தி ஹெய்சால வம்சத்தைச் சேர்ந்த வீர ராமநாததேவரின் பதினான்காவது ஆண்டுக் கல்வெட்டால் தெரியவருகின்றது. 
  • இக்கோயிலின் உற்சவ மண்டபத்தைக் கட்டியவர் சதாசிவ வரஜப்பைய யாஜி தீட்சிதராயர் ஆவர். இவரே அமாவாசை, பொங்கல் இவைகளின் சிறப்புப் பூசனைக்கு நிவந்தமும் அளித்துள்ளார்.
  • முதற் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள எடுத்தருளிய ஸ்ரீபாதீஸ்வரம் உடைய நாயனார் கோயிலைக் கட்டியவர், திருஞானசம்பந்தர் என்னும் பெயரினர் ஆவர். 
  • நான்காவது பிராகாரத்திலுள்ள மேலக்கோபுரம் ஆதித்யதேவனது மகனான சந்தபேந்திரனால் 1435-இல் கட்டப் பெற்றதாகும். 
  • வலம்புரி விநாயகரையும், சுப்பிரமணியரையும் மும்முடி திம்மரசர் என்பார் எழுந்தருளுவித்துள்ளார்.
  • விபூதி பிராகாரத்து மதிற்சுவரைத் திருநீற்றுச் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான்.
  • ஹொய்சல அரசனான வீரசோமீசுவரன் (சோழநாட்டில்) திருவரங்கத்துக்கு வடக்கே 8 கி. மீ. தூரத்தில் உள்ள கண்ணனூர்க் கொப்பத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். இவன் சிறந்த சிவபக்தன் ஆவான். ஆதலின், திருவானைக்கா கோவிலின் கிழக்குக் கோபுரமான எழுநிலைக் கோபுரத்தைக் கட்டுவித்தான். வீரசோமீசுவரன் திருநாள் என்று தன் பெயரால் இத்திருக்கோயிலில் ஒரு விழா நடத்திவந்தான். வட திருவானைக்காவில் தன் பாட்டனாகிய பாலாலன் II என்பவன் பெயரால் வாலால ஈசுவரத்தையும், தன் பாட்டியாராகிய பத்மலா தேவியின் பெயரால் பதுமலீசுவரத்தையும் எடுப்பித்துள்ளான். இந்த வீர சோமீசுவரனது தாயார் கல்லலா தேவியார் ஆவார். இவரது மேன்மையின் பொருட்டுக் கண்ணனூரிலுள்ள பாலீஸ்வரம் உடையார்க்கு இந்த அரசன் நிபந்தம் அளித்துள்ளான். இக்கோயிலும் இவனால் எடுப்பிக்கப் பெற்றதாகும். இந்த வீர சோமீசுவரனது இருபத்திரண்டாவது ஆட்சியாண்டில் திருவானைக்கா கோயில் மூன்றாவது பிராகாரத்தின் வடபக்கத்தில் கல்வாக்கூர் தியாகப்பெருமாள், தியாகவிநோதீசுவரம் என்னும் கோயிலைக் கட்டியுள்ளனர்.
  • திருபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழதேவன் (இவனே இக்கல் வெட்டில் கோனேரின்மை கொண்டான்) என்பவன் நித்த விநோத வளநாட்டு வில்லவநல்லூரில் இருபத்தைந்து வேலி நிலத்தைத் தன் அத்தையாகிய திருப்பெரியதேவியார் பேரால் திருவானைக்காவுடைய சிவபெருமானுக்குத் திருநாமத்துக்காணியாக இறையிலி செய்து கொடுத்துள்ளான். 
  • திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் இருபதாம் ஆண்டுக் கல்வெட்டினால் இக்கோவிலுக்கு இருபது காவலாளிகள் இருந்தனர் என அறிகின்றோம். இக்கல்வெட்டில் பிணைத்தீட்டு (ஜாமீன்) என்ற பெயர் உளது.
  • அகிலாண்ட ஈஸ்வரி கோயில், ஜம்புநாதர் கோயில் இவைகளின் தளவரிசைகளைச் செய்தவர் பாஸ்கரராயபாரதி தீட்சிதர் ஆவர். 
  • தோப்பு ஒன்றிற்குச் சிலந்தியைச் சோழனாக்கினான் என்னும் பெயரும் பட்டன் ஒருவனுக்கு என்னானைக் கன்று என்ற பெயரும் வைக்கப் பெற்றிருந்தன. என்னானைக் கன்று என்னும் பெயர் இவ்வூர்த் திருத்தாண்டகத்திலும் கூறப் பெற்றுள்ளது.
  • விஜயரங்க சொக்கநாத நாயகருடைய நாடகசாலை ஆசிரியர் வைத்தியப்ப ஐயா, ஜம்புதீர்த்த மண்டபத்திற்குப் படித்துறைகள் கட்டியுள்ளார்.
  • சங்கரமகா தேவர்க்கு இவ்வூரில் மடம் இருந்தது. நாற்பத் தெண்ணாயிரவர் என்னும் பெயருள்ள மற்றொரு மடமும் இருந்தது. அதில் துறவிகட்கு அன்னம் அளிக்கப்பட்டுவந்தது.
முந்தைய தலம்<திருப்பாற்றுறை (திருப்பாலத்துறை)

 அடுத்த தலம்>திருப்பைஞ்ஞீலி

 

 

Contact Address

அமைவிடம் அ/மி. ஜம்புகேசுவரர் திருக்கோயில், திருஆனைக்கா, திருச்சிராப்பள்ளி. தொலைபேசி : 0431 - 2230257. மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் திருச்சிராப்பள்ளி நகரில் உள்ளது. திருச்சிராப்பள்ளி தமிழ் நாட்டின் எல்லா இடங்களிலிருந்தும் பேருந்து மூலமாகவும், இரயில் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி நகரிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.
Loading map...

Related Content

திரிசிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)

திருஎறும்பியூர் (திருவெறும்பூர்) திருக்கோயில் தலவரலாறு

வெள்ளூர் திருக்காமேஸ்வரர் திருக்கோயில்

திருச்செந்துறை சந்திரசேகரஸ்வாமி திருக்கோயில்