நாவல் Syzygium jambolanum, D.C., Myrtaceae.
விண்ணி னண்ணு புல்கிய வீரமாய மால்விடைச்
சுண்ண வெண்ணீ றாடினான் சூலமேந்து கையினான்
அண்ணல் கண்ணொர் மூன்றினான் ஆனைக்காவு கைத்தொடி
எண்ணும் வண்ணம் வல்லவர்க் கேதமொன்றும் இல்லையே.
. - திருஞானசம்பந்தர்.
திருவானைக்கா, திருநாவலூர் ஆகிய திருக்கோயில்களில் தலமரமாக விளங்குவது நாவல் மரமாகும். பழங்காலத்தில் மக்கள் மரத்தின் அடியிலேயே தெய்வங்களை வைத்து வணங்கினர் எனும் கருத்துக்கு அரண் செய்வதாக திருவானைக்கவில் கருவறைக்கு அருகில் மிகவும் பழமையான வெண்நாவல் மரம் அமைந்திருப்பதை இன்றும் நாம் காணலாம். இதையே, ‘வெண்ணாவல் அமர்ந்துறை வேதியனை’ என்றும், ‘வெண்ணாவல் விரும்பும்’ என்றும்,‘வெண்ணாவலின் மேவியயெம் அழகர்’ என்றும் திருஞானசம்பந்தர் சிறப்பித்துள்ளார். தமிழகமெங்கும் ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் தானே வளரும் பெருமரம். உண்ணக் கூடிய கருஞ்சிவப்பு நிறக் கனிகளை உடையது. இதில் வெண்நாவல், கருநாவல், நரிநாவல் எனப் பல வகைகள் உள்ளன.
பட்டை சதை, நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது.
திருமுறைகளில் நாவல் பற்றிய குறிப்பு :-
அரணிலா வெளிய நாவல்
அருள்நிழ லாக ஈசன்
வரணிய லாகித் தன்வாய்
நூலினாற் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை
முடியுடை மன்ன னாக்கித்
தரணிதான் ஆள வைத்தார்
சாய்க்காடு மேவி னாரே. 4.065.3
நாவ லம்பெருந்
தீவினில் வாழ்பவர்
மேவி வந்து
வணங்கி வினையொடு
பாவ மாயின
பற்றறு வித்திடுந்
தேவர் போல்திரு
நாகேச் சரவரே. 5.052.2
பூவ னூர்தண்
புறம்பயம் பூம்பொழில்
நாவ லூர்நள்
ளாறொடு நன்னிலங்
கோவ லூர்குட
வாயில் கொடுமுடி
மூவ லூருமுக்
கண்ணனூர் காண்மினே. 5.058.8
மூவுருவின் முதலுருவாய் இருநான் கான
மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ்
செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே
நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
காவலரே யேவி விடுத்தா ரேனுங்
கடவமலோங் கடுமையொடு களவற் றோமே. 6.098.6
திருநாவலூர் - கோவலன் நான்முகன்
நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து
நீங்க லாமென்று மனத்தினைத் தெருட்டிச்
சேடு லாம்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைத் திருவடி யிணைதான்
நாடெ லாம்புகழ் நாவலூ ராளி
நம்பி வன்றொண்ட னூரன் உரைத்த
பாட லாந்தமிழ் பத்திவை வல்லார்
முத்தி யாவது பரகதிப் பயனே.
செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ்
சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை
மறந்து நான்மற்று நினைப்பதே தென்று
வனப்ப கையப்பன் ஊரன்வன் றொண்டன்
சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ்
சிந்தையுள் ளுருகிச் செப்ப வல்லார்க்
கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி
இன்பவெள் ளத்துள் இருப்பர்க ளினிதே.
கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப்
பேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால்
உன்னி மனத்தயரா உள்ளுரு கிப்பரவும்
ஒண்பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன்
பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார்
பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழ
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும்
மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே.
கொங்கணை வண்டரற்றக்
குயிலும்மயி லும்பயிலும்
தெங்கணை பூம்பொழில்சூழ்
திருநாகேச் சரத்தானை
வங்கம் மலிகடல்சூழ்
வயல்நாவலா ரூரன்சொன்ன
பங்கமில் பாடல்வல்லார்
அவர்தம்வினை பற்றறுமே.
மாட மல்கு கடவூரில்
மறையோ ரேத்தும் மயானத்துப்
பீடை தீர அடியாருக்
கருளும் பெருமா னடிகள்சீர்
நாடி நாவ லாரூரன்
நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடு மடியார் கேட்பார்மேற்
பாவ மான பறையுமே.
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.
என்பினையே கலனாக அணிந்தானை எங்கள்
எருதேறும் பெருமானை இசைஞானி சிறுவன்
வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன்
வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன
அன்பனை யாவர்க்கும் அறிவரிய அத்தர்
பெருமானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்பொன்னை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.
செறுவினிற்செழுங் கமலமோங்குதென்
புகலூர்மேவிய செல்வனை
நறவம்பூம்பொழில் நாவலூரன்
வனப்பகையப்பன் சடையன்றன்
சிறுவன்வன்றொண்டன் ஊரன்பாடிய
பாடல்பத்திவை வல்லவர்
அறவனாரடி சென்றுசேர்வதற்
கியாதுமையுற வில்லையே.
வேத வேதியர் வேத நீதியர்
ஓது வார்விரி நீர்மிழலையுள்
ஆதி வீழிகொண்டீர்அடி
யேற்கும் அருளுகென்று
நாத கீதம்வண் டோதுவார்பொழில்
நாவலூரன்வன் றொண்டன் நற்றமிழ்
பாதம் ஓதவல் லார்பர
னோடு கூடுவரே.
நீரூர்தரு நிமிலன்றிரு
மலையார்க்கயல் அருகே
தேரூர்தரும் அரக்கன்சிரம்
நெரித்தான்றிருச் சுழியல்
பேரூரென உறைவானடி
பெயர்நாவலர் கோமான்
ஆரூரன தமிழ்மாலைபத்
தறிவார்துயர் இலரே.
நல்லாரவர் பலர்வாழ்தரு
வயல்நாவல வூரன்
செல்லல்லுற அரியசிவன்
சீபர்ப்பத மலையை
அல்லலவை தீரச்சொன
தமிழ்மாலைகள் வல்லார்
ஒல்லைச்செல உயர்வானகம்
ஆண்டங்கிருப் பாரே.
அன்னஞ்சேர்வயல் சூழ்பைஞ்ஞீலியில்
ஆரணீய விடங்கரை
மின்னும்நுண்ணிடை மங்கைமார்பலர்
வேண்டிக்காதல் மொழிந்தசொல்
மன்னுதொல்புகழ் நாவலூரன்வன்
றொண்டன்வாய்மொழி பாடல்பத்
துன்னிஇன்னிசை பாடுவார்உமை
கேள்வன்சேவடி சேர்வரே.
பழிசே ரில்புகழான்
பரமன் பரமேட்டி
கழியார் செல்வமல்குங்
கழிப்பாலை மேயானைத்
தொழுவான் நாவலர்கோன்
ஆரூரன் உரைத்ததமிழ்
வழுவா மாலைவல்லார்
வானோருல காள்பவரே.
சேரும் புகழ்த்தொண்டர் செய்கை
அறாத்திரு நின்றியூரிற்
சீருஞ் சிவகதி யாயிருந்
தானைத் திருநாவலா
ரூரன் உரைத்த உறுதமிழ்
பத்தும்வல் லார்வினைபோய்ப்
பாரும் விசும்புந் தொழப்பர
மன்னடி கூடுவரே.
தண்புனலும் வெண்மதியுந் தாங்கியசெஞ் சடையன்
தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி
உண்பலிகொண் டுழல்பரமன் உறையுமூர் நிறைநீர்
ஒழுகுபுனல் அரிசிலின்தென் கலயநல்லூர் அதனை
நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்
பண்பயிலும் பத்துமிவை பத்திசெய்து நித்தம்
பாடவல்லா ரல்லலொடு பாவமிலர் தாமே.
ஊழிதோ றூழிமுற் றுமுயர்
பொன்னொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும் பின்சுவை
நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமி ழால்இசைந்
தேத்திய பத்தினையும்
ஆழி கடலரை யாஅஞ்சை
யப்பர்க் கறிவிப்பதே.
விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்டஎம் மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
செல்வனை நாவலா ரூரன்
உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும்
உள்குளிர்ந் தேத்த வல்லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி
நண்ணுவர் விண்ணவர்க் கரசே.
கோட ரம்பயில் சடையுடைக் கரும்பைக்
கோலக் காவுளெம் மானைமெய்ம் மானப்
பாட ரங்குடி அடியவர் விரும்பப்
பயிலும் நாவலா ரூரன்வன் றொண்டன்
நாடி ரங்கிமுன் அறியுமந் நெறியால்
நவின்ற பத்திவை விளம்பிய மாந்தர்
காட ரங்கென நடம்நவின் றான்பாற்
கதியும் எய்துவர் பதியவர்க் கதுவே.
விரித்த வேதம் ஓத வல்லார்
வேலை சூழ்வெண் காடு மேய
விருத்த னாய வேதன் றன்னை
விரிபொ ழிற்றிரு நாவ லூரன்
அருத்தி யாலா ரூரன் தொண்டன்
அடியன் கேட்ட மாலை பத்துந்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார்
செம்மை யாளர் வானு ளாரே.
ஓவு நாளுணர் வழியும் நாளுயிர்
போகும் நாளுயர் பாடைமேல்
காவு நாளிவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 3
வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனென்
றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்
சடையன் காதலன் வனப்பகை அப்பன்
நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்
நங்கை சிங்கடி தந்தை பயந்த
பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேல்
பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே.
வேகங்கொண் டோ டிய வெள்விடை
ஏறியோர் மெல்லியலை
ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டார்
போகங்கொண் டார்கடற் கோடியின்
மோடியைப் பூண்பதாக
நாகங்கொண் டார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே. 3
செந்நெ லங்கலங் கழனித்
திகழ்திரு வாஞ்சியத் துறையும்
மின்ன லங்கலஞ் சடையெம்
இறைவன தறைகழல் பரவும்
பொன்ன லங்கனல் மாடப்
பொழிலணி நாவலா ரூரன்
பன்ன லங்கனல் மாலை
பாடுமின் பத்தரு ளீரே.
எந்தை இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தை செயுந்திறம் வல்லான்
திருமரு வுந்திரள் தோளான்
மந்த முழவம் இயம்பும்
வளவயல் நாவலா ரூரன்
சந்தம் இசையொடும் வல்லார்
தாம்புகழ் எய்துவார் தாமே.
தேரார் வீதித் தென்நாகைத்
திருக் காரோணத்து இறையானைச்
சீரார் மாடத் திருநாவலூர்க் கோன்
சிறந்த வன் தொண்டன்
ஆரா அன்போடு உரைசெய்த
அஞ்சோடு அஞ்சும் அறிவார்கள்
வாரார் முலையாள் உமை கணவன்
மதிக்க இருப்பார் வான் அகத்தே. 11
கலிவ லங்கெட ஆரழல் ஓம்புங்
கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்
வலிவ லந்தனில் வந்துகண் டடியேன்
மன்னும் நாவலா ரூரன்வன் றொண்டன்
ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும்
உள்ளத் தாலுகந் தேத்தவல் லார்போய்
மெலிவில் வானுல கத்தவர் ஏத்த
விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே.
பாரூர்பல புடைசூழ்வள
வயல்நாவலர் வேந்தன்
வாரூர்வன முலையாள்உமை
பங்கன்மறைக் காட்டை
ஆரூரன தமிழ்மாலைகள்
பாடும்மடித் தொண்டர்
நீரூர்தரு நிலனோடுயர்
புகழாகுவர் தாமே.
எந்தம் அடிகள் இமையோர் பெருமான்
எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன்
அந்தண் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை
மந்தம் முழவுங் குழலும் மியம்பும்
வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்ன
சந்தம் மிகுதண் தமிழ்மாலை கள்கொண்
டடிவீ ழவல்லார் தடுமாற் றிலரே.
ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல
எம்பெரு மானென்றெப் போதும்
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்
தடிகளை அடிதொழப் பன்னாள்
வாயினாற் கூறி மனத்தினால் நினைவான்
வளவயல் நாவலா ரூரன்
பேசின பேச்சைப் பொறுக்கில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.
செய்யார் கமல மலர்நாவ
லூர் மன்னன்
கையால் தொழுதேத்தப்
படுந்துறை யூர்மேல்
பொய்யாத் தமிழ்ஊரன்
உரைத்தன வல்லார்
மெய்யே பெறுவார்கள்
தவநெறி தானே.
தன்மையி னாலடி யேனைத்தாம்
ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன்
என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்
தென்னைப்போ கம்புணர்த்த
நன்மையி னார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே. 2
அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்தா ரூரன்
ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்
அவரெந் தலைமேற் பயில்வாரே.
வஞ்சிநுண் ணிடையார் மயிற்சாய லன்னார்
வடிவேற் கண்நல்லார் பலர்வந் திறைஞ்சும்
வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியே
னையும்வேண் டுதியே என்றுதான் விரும்பி
வஞ்சியா தளிக்கும் வயல்நா வலர்கோன்
வனப்பகை யப்பன் வன்றொண்டன் சொன்ன
செஞ்சொல் தமிழ்மா லைகள்பத் தும்வல்லார்
சிவலோ கத்திருப் பதுதிண் ணமன்றே.
மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்
தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்
வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கவொண் ணாததோர் வேழத்தி
னையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே. 10
ஏரார் முப்புரமும்
எரியச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன்
மழபாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன்
ஆரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார்
பரலோகத் திருப்பாரே.
கொல்லை வளம்புற விற்றிருக்
கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பர வுந்திரு
நாவல வூரனவன்
நெல்லிட ஆட்கள்வேண் டிநினைந்
தேத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துல கின்அண்டர்
வானுல காள்பவரே.
கூடலர் மன்னன் குலநாவ
லூர்க்கோன் நலத்தமிழைப்
பாடவல் லபர மன்னடி
யார்க்கடி மைவழுவா
நாடவல் லதொண்டன் ஆரூரன்
ஆட்படு மாறுசொல்லிப்
பாடவல் லார்பர லோகத்
திருப்பது பண்டமன்றே.
உம்பரார் கோனைத்திண் டோள்முரித்
தாருரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ண
நீற்றரோர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே. 5
திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்
செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்
கானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது
உரையினார் மதயானை நாவலா ரூரன்
உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார்
வரையினார் வகைஞாலம் ஆண்டவர்க்குந் தாம்போய்
வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.
பொடியாடு மேனியன் பொன்புனஞ்
சூழ்புன வாயிலை
அடியார் அடியன் நாவல
வூரன் உரைத்தன
மடியாது கற்றிவை யேத்தவல்
லார்வினை மாய்ந்துபோய்க்
குடியாகப் பாடிநின் றாடவல்
லார்க்கில்லை குற்றமே.
அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற்
சேவினை ஆட்சிகொண்டார்
தஞ்சங்கொண் டாரடிச் சண்டியைத்
தாமென வைத்துகந்தார்
நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டு
நஞ்சங்கொண் டார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே. 4
காரா ரும்பொழில்சூழ்
கடவூர்த்திரு வீரட்டத்துள்
ஏரா ரும்மிறையைத்
துணையாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்னடியான்
அடித்தொண்டன் உரைத்ததமிழ்
பாரோ ரேத்தவல்லார்
பரலோகத் திருப்பாரே.
காரா* ரும்பொழில்சூழ்
கணநாதனெங் காளத்தியுள்
ஆரா வின்னமுதை
அணிநாவலா ரூரன்சொன்ன
சீரூர் செந்தமிழ்கள்
செப்புவார்வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம்
பெறுவார்பிழைப் பொன்றிலரே.
பிறையா ருஞ்சடையெம்
பெருமான் அருளாயென்று
முறையால் வந்தமரர்
வணங்கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில்
வயல்நாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க்
கெளிதாஞ்சிவ லோகமதே.
வஞ்சிநுண்ணிடை மங்கைபங்கினர்
மாதவர்வள ரும்வளர்பொழில்
பஞ்சின் மெல்லடியார்
பயிலுந் திருப்பனையூர்
வஞ்சியும்வளர் நாவலூரன்
வனப்பகையவ ளப்பன்வன்றொண்டன்
செஞ்சொற் கேட்டுகப்பார்
அவரே அழகியரே.
பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
குளிர்பொ ழில்திரு நாவலா ரூரன்
நற்றமிழ் இவைஈ ரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே.
பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
பற்றாய பெருமானே மற்றாரை உடையேன்
உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்
ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவுங்
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரென்
றண்மயத்தால் அணிநாவ லாரூரன் சொன்ன
அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.
நாதனுக் கூர்நமக் கூர்நர
சிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும்
ஊரணி நாவலூரென்
றோதநற் றக்கவன் றொண்டனா
ரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர்
தம்வினை கட்டறுமே.
காலமும் நாழிகை யுந்நனி
பள்ளி மனத்தினுள்கி
கோலம தாயவ னைக்குளிர்
நாவல ஊரன்சொன்ன
மாலை மதித்துரைப் பார்மண்
மறந்துவா னோருலகிற்
சாலநல் லின்பமெய் தித்தவ
லோகத் திருப்பவரே.
கூடலை யாற்றூரிற்
கொடியிடை யவளோடும்
ஆடலு கந்தானை
அதிசயம் இதுவென்று
நாடிய இன்றமிழால்
நாவல வூரன்சொற்
பாடல்கள் பத்தும்வல்லார்
தம்வினை பற்றறுமே.
மின்னெடுஞ் செஞ்சடையான்
மேவிய ஆரூரை
நன்னெடுங் காதன்மையால்
நாவலர் கோன்ஊரன்
பன்னெடுஞ் சொல்மலர்கொண்
டிட்டன பத்தும்வல்லார்
பொன்னுடை விண்ணுலகம்
நண்ணுவர் புண்ணியரே.
படிசெய்நீர்மையிற் பத்தர்காள்பணிந்
தேத்தினேன்பணி யீரருள்
வடிவிலான்றிரு நாவலூரன்
வனப்பகையப்பன் வன்றொண்டன்
செடியனாகிலுந் தீயனாகிலுந்
தம்மையேமனஞ் சிந்திக்கும்
அடியனூரனை ஆள்வரோநமக்
கடிகளாகிய அடிகளே. 10
மூவல் தழீஇய அருண்முத லோன்தில்லைச் செல்வன்முந்நீர்
நாவல் தழீஇயவிந் நானிலந் துஞ்சும் நயந்தவின்பச்
சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும் யான்துயி லாச்செயிரெங்
காவல் தழீஇயவர்க் கோதா தளிய களியன்னமே. 8.கோவை.191
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி
ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே. 10.9.17.21
சிறைநன் புனல்திரு நாவலூ
ராளி செழுங்கயிலைக்
கிறைநன் கழல்நாளை எய்தும்
இவனருள் போற்றஇன்றே
பிறைநன் முடியன் அடியடை
வேன்என் றுடல்பிரிந்தான்
நறைநன் மலர்த்தார் மிழலைக்
குறும்பன் எனும்நம்பியே. 11.34.28
பல்லவை செங்கதி ரோனைப்
பறித்தவன் பாதம்புகழ்
சொல்லவன் தென்புக லூர்அரன்
பால்துய்ய செம்பொன்கொள்ள
வல்லவன் நாட்டியத் தான்குடி
மாணிக்க வண்ணனுக்கு
நல்லவன் தன்பதி நாவலூர்
ஆகின்ற நன்னகரே. 11.34.58
தகுமகட் பேசினோன் வீயவே
நூல்போன சங்கிலிபால்
புகுமணக் காதலி னால் ஒற்றி
யூர்உறை புண்ணியன்தன்
மிகுமலர்ப் பாதம் பணிந்தரு
ளால்இவ் வியனுலகம்
நகுவழக் கேநன்மை யாப்புணர்ந்
தான்நாவ லூர்அரசே. 11.34.70
தலம்விளங் குந்திரு நாவலூர்
தன்னில் சடையன்என்னும்
குலம்விளங் கும்புக ழோனை
உரைப்பர் குவலயத்தில்
நலம்விளங் கும்படி நாம்விளங்
கும்படி நற்றவத்தின்
பலம்விளங் கும்படி
ஆரூரனைமுன் பயந்தமையே. 11.34.85
கூட்டம்ஒன் பானொ டறுபத்து
மூன்று தனிப்பெயரா
ஈட்டும் பெருந்தவத் தோர்எழு
பத்திரண் டாம்வினையை
வாட்டும் தவத்திருத் தொண்டத்
தொகைபதி னொன்றின்வகைப்
பாட்டும் திகழ்திரு
நாவலூராளி பணித்தனனே. 11.34.88
அந் நாளில் தம் பெருமான்
அருள் கூடப் பணிந்து அகன்று
மின் னார் செஞ்சடை முடியார்
விரும்பும் இடம் பல வணங்கிக்
கன் னாடும் எயில் புடை
சூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி
தென் னாவலூர் மன்னர்
திருத் தில்லை வந்து அடைந்தார். 12.35.166
அப் பூங்கானில் வெண்ணாவல் அதன்
கீழ் முன்னாள் அரிதேடும்
மெய்ப் பூங்கழலார் வெளிப்படலும்
மிக்க தவத்தோர் வெள்ளானை
கைப்பூம் புனலும் முகந்து ஆட்டிக்
கமழ் பூங்கொத்தும் அணிந்து இறைஞ்சி
மைப்பூங் குவளைக் களத்தாரை
நாளும் வழிபட்டு ஒழுகுமால். 12.74.2
மை வளர் கண்டர் அருளினாலே
வண்டமிழ் நாவலர் தம் பெருமான்
சைவ விடங்கின் அணி புனைந்து
சாந்தமும் மாலையும் தாரும் ஆகி
மெய்வளர் கோலம் எல்லாம் பொலிய
மிக்க விழுத்தவ வேந்தர் என்னத்
தெய்வ மணிப் புற்றுளாரைப் பாடித்திளைத்து
மகிழ் வொடுஞ் செல்லா நின்றார். 130
மின்னார் செஞ்சடை அண்ணல்
விரும்பு திருப்புகலூரை
முன்னாகப் பணிந்தேத்தி முதல்வன்
தன்அருள் நினைந்து
பொன்னாரும் உத்தரியம் புரி
முந்நூல் அணிமார்பர்
தென் நாவலூராளி திருவாரூர்
சென்று அணைந்தார். 117
அன்பின் வந்து எதிர் கொண்ட சீர்அடியார்
அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ
முன்பு இறைஞ்சினரியாவர் என்று அறியா
முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து
பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு
நாவல் நகரார் பெரு மானும்
பொன் பிறங்கு மணி மாளிகை நீடும்
பொருவிறந்த திரு வீதி புகுந்தார். 98
அயலோர் தவம் முயல்வார் பிறர்
அன்றே மணம் அழியும்
செயலால் நிகழ் புத்தூர் வரு
சிவ வேதியன் மகளும்
உயர் நாவலர் தனி நாதனை
ஒழியாது உணர் வழியில்
பெயராது உயர் சிவ லோகமும்
எளிதாம் வகை பெற்றாள். 77
திரண்ட மாமறையோர் தாமும் திரு
நாவலூரர் கோ முன்
மருண்டது தெளிய மற்ற மறை
யவன் எழுத்தால் ஓலை
அரண் தரு காப்பில் வேறுஒன்று
அழைத்து உடன் ஒப்புநோக்கி
"இரண்டும் ஒத்திருந்தது என்னே! இனிச்
செயல் இல்லை" என்றார். 62
அருமறை நாவல் ஆதி
சைவன் ஆரூரன்செய்கை
பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப்
பித்தனுக்கியானும் என்பால்
வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு
செய்தற்கு ஓலை
இருமையால் எழுதி நேர்ந்தேன்
இதற்குஇவை என்எழுத்து. 59
வேத பாரகரின் மிக்கார்
விளங்கு பேரவை முன்சென்று
நாதனாம் மறையோன் சொல்லும்
"நாவலூர் ஆரூரன் தான்
காதல் என் அடியான்
என்னக் காட்டிய ஓலைகீறி
மூதறிவீர் முன் போந்தானிது
மற்றென் முறைபாடு" என்றான். 51
பிஞ்ஞகனும் நாவலர் பெருந்
தகையை நோக்கி
என்னிடையும் நின்னிடையும் நின்ற
இசை வால்யான்
முன்னுடையது ஓர் பெரு
வழக்கினை முடித்தே
நின்னுடைய வேள்வியினை நீ
முயல்தி என்றான். 35
அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
சிந்தியா உணர்ந்தம் முனி தென்திசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன்
எந்தையார் அருளால் அணைவான் என. 17
நாவலர் தம் பெருமானும்
திருவாரூர் நகர் ஆளும்
தேவர் பிரான் கழல் ஒரு
நாள் மிக நினைந்த சிந்தையராய்
ஆவியை ஆரூரானை
மறக்கலுமாமே என்னும்
மேவிய சொல் திருப்பதிகம்
பாடியே வெருவுற்றார். 156
கழறிற்றறியுந் திருவடியும் கலை
நாவலர் தம் பெருமானாம்
முழவில் பொலியும் திரு நெடுந்தோள்
முனைவர் தம்மை உடன் கொண்டு
விழவில் பொலியும் மாளிகையில்
விளங்கு சிங்காசனத்தின் மிசை
நிழல் திக்கு ஒளிரும் பூணாரை
இருத்தித் தாமும் நேர் நின்று. 150
நம்பி பாதம் சேரமான்
பெருமாள் பணிய நாவலூர்
செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர்
பெருமான் எதிர் வணங்கி
உம்பர் நாதர் உமக்கு அளித்தது
அன்றோ என்ன உடன் மகிழ்ந்து
தம்பிரானைப் போற்றி இசைத்து தடம்
காவேரி நடு அணைந்தார். 137
நாவலர் மன்னவர் அருளால்
விடை கொண்ட நரபதியார்
ஆவியின் ஒன்றா நண்பின்
ஆரூரர் தமை நினைந்து
மாவலரும் சோலை மா
கோதையினில் மன்னிமலைப்
பூவலயம் பொது நீக்கி அரசு
உரிமை புரிந்து இருந்தார். 173
நாட்டு நல்லிசை நாவ
லூரன் சிந்தை
வேட்ட மின்னிடை இன்
அமு தத்தினைக்
காட்டுவன் கடலை கடைந்தது
என்ப போல்
பூட்டும் ஏழ் பரித்
தேரோன் கடல்புக. 157
வாவி புள் ளொலி மாறிய மாலையில்
நாவ லூரரும் நங்கை பரவையாம்
பாவை தந்த படர் பெருங் காதலும்
ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார். 163
மன்னும் புகழ் நாவலர்கோன் மகிழ "மங்கை
பரவை தன்னைத் தந் தோம்
இன்னவ்வகை நம் அடியார் அறியும் படியே
உரை செய்தனம்" என்று அருளிப்
பொன்னின் புரி புன் சடையன் விடையன்
பொருமா கரியின் உரிவை புனைவான்
அன்னந் நடையாள் பரவைக்கு "அணியது ஆரூரன்
பால் மணம்" என்று அருள. 179
நாவலூர் வந்த சைவ நற்
தவக் களிறே என்றும்
"மேலவர் புரங்கள் செற்ற விடை
யவர்க்கு அன்பர்" என்றும்
"தாவில் சீர்ப் பெருமை ஆரூர்
மறையவர் தலைவ" என்றும்
மேவினர் இரண்டு பாலும் வேறு
வேறா யம் போற்ற. 186
திருநாவலூர் வேந்தர் சேரர்
குல வேந்தர் உடன்
வருவாரைத் திருவாரூர்
வாழ்வார்கள் எதிர்கொள்ளத்
தரும் காதலுடன் வணங்கித்
தம் பெருமான் கோயிலினுள்
பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும்
பேறு பெறப் புகுந்தார். 121
தேவர் முனிவர் வந்து இறைஞ்சும்
தெய்வப் பெருமாள் கழல் வணங்கி
மூவர் தமக்கு முதல் ஆகும்
அவரைத் திருமும் மணிக் கோவை
நாவலூரர் தம் முன்பு
நன்மை விளங்கக் கேட்பித்தார்
தாவில் பெருமைச் சேரலனார்
தம்பிரானார் தாம் கொண்டார். 69
ஆடும் பெருமான் பாடல் கேட்டருளித்
தாழ்த்த படி தமக்குக்
கூடும் பரிசால் முன்பு அருளிச்
செய்த நாவலூர்க் கோவை
நீடும் பெரும் காதலில் காண
நிறைந்த நினைவு நிரம்பாமல்
தேடும் பாதர் அருளினால் திருவாரூர்
மேல் செல எழுந்தார். 60
பிழை உள்ளன பொறுத்திடுவர்
என்று எடுத்துப் பெண் பாகம்
விழைவடிவில் பெருமானை வெண்
பாக்கம் மகிழ்ந் தானை
இழைஎன மாசுணம் அணிந்த
இறை யானைப் பாடினார்
மழை தவழும் நெடும்
புரிசை நாவலூர் மன்னவனார். 280
செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும்
சேரர் பிரானும் தம் பெருமான்
எஞ்சல் இல்லா நிறை ஆற்றின்
இடையே அளித்த மணல் வழியில்
தஞ்சம் உடைய பரிசனமும்
தாமும் ஏறித் தலைச்சென்று
பஞ்ச நதி வாணரைப் பணிந்து
விழுந்தார் எழுந்தார் பரவினார். 138
நாரணன் நான்முகன் காணா உண்மை
வெண் நாவல் உண்மை மயேந்திரமும்
சீரணி நீடு திருக்கயிலை செல்வத்
திருவாரூர் மேய பண்பும்
ஆரணத்து உட் பொருள் ஆயினாரை
ஆனைக் காவின் கண் புகழ்ந்து பாடி
ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை
ஏந்தலார் எல்லை இல் இன்பம் உற்றார். 346
அங்கண் எய்திய திரு அணுக்கன்
திரு வாயிலின் அடல் சேரர்
தங்கள் காவலர் தடையுண்டு
நின்றனர் தம்பிரான் அருளாலே
பொங்கு மாமதம் பொழிந்த வெள்ளானையின்
உம்பர் போற்றிடப் போந்த
நங்கள் நாவலூர்க் காவலர்
நண்ணினார் அண்ணலார் திருமுன்பு. 41
நாவலூர் மன்னர் நாதனைத்
தூதுவிட்டு அதனுக்கு
இயாவர் இச்செயல் புரிந்தனர்
என்று அவர் இழிப்பத்
தேவர் தம்பிரான் அவர்திறம்
திருத்திய அதற்கு
மேவ வந்த அச்செயலினை
விளம்புவான் உற்றேன். 8
திருநாவலூர் மன்னர் சேர்கின்றார்
எனக் கேட்டுப்
பெரு நாமப் பதியோரும்
தொண்டர்களும் பெருவாழ்வு
வருநாள்என்று அலங்கரித்து வந்து
எதிர்கொண்டு உள்அணையச்
செருநாகத்து உரிபுனைந்தார் செழுங்கோயில்
உள் அணைந்தார். 169
வந்து திரு மாளிகையின் உள்
புகுந்து மங்கல வாழ்த்து
அந்தமிலா வகை ஏத்தும் அளவு
இறந்தார் ஒலி சிறப்பச்
சிந்தை நிறை மகிழ்ச்சி உடன்
சேயிழை யாருடன் அமர்ந்தார்
கந்த மலி மலர்ச் சோலை
நாவலர் தம் காவலனார். 139
தேவர் ஒதுங்க திருத் தொண்டர்
மிடையும் செல்வத் திருவாரூர்
காவல் கொண்டு தனியாளும் கடவுள்
பெருமான் கழல் வணங்கி
நாவலூரர் அருள் பெற்று நம்பர்
பதிகள் பிற நண்ணிப்
பாவை பாகர்தமைப் பணிந்து பாடும்
விருப்பில் சென்று அணைவார். 32
நாவலூர் மன்னனார்க்கு நாயனார்
அளித்த நெல் இங்கு
யாவரால் எடுக்கல் ஆகும் இச்
செயல் அவர்க்குச் சொல்லப்
போவன் யான் என்று போந்தார்
புகுந்தவாறு அருளிச் செய்து
தேவர் தம் பெருமான் ஏவ
நம்பியும் எதிரே சென்றார். 16
திருத் தொண்டத் தொகை
அருளித் திருநாவலூர் ஆளி
கருத்து ஒன்று காதலினால்
கனக மதில் திருவாரூர்
ஒருத்தர் கழல் முப்பொழுதும்
உருகிய அன்பொடு பணிந்து
பெருத்து எழும்மெய் அன்பினால் பிரியாது
அங்கு உறையும் நாள். 9
மண்ணில் திகழும் திருநாவலூரில்
வந்த வன் தொண்டர்
நண்ணற்கு அரிய திருக்கயிலை
நாளை எய்தநான் பிரிந்து
கண்ணில் கரிய மணிகழிய
வாழ்வார் போலவாழேன் என்று
எண்ணிச் சிவன்தாள் இன்றேசென்று
அடைவன் யோகத்தால் என்பார். 9
மேவரிய பெருந் தவம் யான்
முன்பு விளைத்தன என்னோ
ஆவதும் ஓர்பொருளல்லா என்
மனத்தும் அன்றியே
நாவலர் காவலர் பெருகு நதி
கிழிய வழி நடந்த
சேவடிப் போது எப்போதும்
சென்னியினும் மலர்ந்தனவால். 13
வன் தொண்டர் தம்பால் சென்று
வள்ளலார் அருளிச் செய்வார்
இன்று நம் ஏவலாலே ஏயர்
கோன் உற்ற சூலை
சென்று நீ தீர்ப்பாய் ஆகஎன்று
அருள் செயச் சிந்தையோடு
நன்று மெய்ம் மகிழ்ந்து போற்றி
வணங்கினார் நாவல் ஊரர். 394
செம்மை நெறி சேர் திரு
நாவலூரர் ஒற்றியூர் சேர்ந்து
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மைக்
குலவு மணம் புணர்ந்த
மெய்ம்மை வார்த்தை தாம் அவர்பால்
விட்டார்வந்து கட்டு உரைப்ப
தம்மை அறியா வெகுளியினால் தரியா
நெஞ்சி னொடும் தளர்வார். 314
திருநா வலூ ராளி தம்
உடைய செயல் முற்றிப்
பொரு நாகத்து உரி புனைந்தார்
கோயிலின் உள்புகுந்து இறைஞ்சி
அருள் நாளும் தர இருந்தீர்
செய்தவாறு அழகு இதுஎனப்
பெருநாமம் எடுத்து ஏத்திப் பெரு
மகிழ்ச்சி உடன் போந்தார். 262
அங்குமவன் திரு முடிமேல் மீண்டும்
அவர் தாள் நீட்டச்
செங்கயல் பாய் தடம் புடை
சூழ் திரு நாவலூராளி
இங்கு என்னைப் பலகாலும் மிதித்தனை
நீ யார் என்னக்
கங்கை சடைக் கரந்த பிரான்
அறிந்திலையோ எனக் கரந்தான். 87
திரு நாவலூ ராளி சிவ
யோகியார் நீங்க
வரு நாம மறைய வனார்
இறையவனார் என மதித்தே
பெரு நாதச்சிலம்பு அணி சேவடி
வருந்த பெரும்பகல் கண்
உருநாடி எழுந்து அருளிற்று என்
பொருட்டாம் என உருகி. 181
காமத் துயரில் கவல்வார் நெஞ்சிற் கரையில்
இருளும் கங்குல் கழி போம்
யாமத்து இருளும் புலரக் கதிரோன் எழு
காலையில் வந்து அடியார் கூடிச்
சேமத் துணையாம் அவர் பேர் அருளைத்
தொழுதே திரு நாவலர் கோன் மகிழத்
தாமக் குழலாள் பரவை வதுவை
தகு நீர்மை யினால் நிகழச் செய்தார். 180
ஓவிய நான் முகன்
எழுத ஒண்ணாமை உள்ளத்தால்
மேவிய தன் வருத்தமுற
விதித்ததொரு மணி விளக்கோ
மூவுலகின் பயனாகி முன்
நின்றது என நினைந்து
நாவலர் காவலர் நின்றார்
நடு நின்றார் படைமதனார். 141
புற்றிடங் கொண்ட புரா தனனைப்
பூங் கோயில் மேய பிரானையார்க்கும்
பற்று இடம் ஆயபரம் பொருளைப்
பார்ப்பதி பாகனை பங்க யத்தாள்
அர்ச்சனை செய்ய அருள் புரிந்த
அண்ணலை மண்மிசை வீழ்ந்து இறைஞ்சி
நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால்
நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார். 125
ஓலை காட்டு என்று நம்பி
உரைக்க "நீஓலை காணல்
பாலையோ அவை முன் காட்டப்
பணிசெயற் பாலை" என்ற
வேலையில் நாவ லூரர் வெகுண்டு
மேல் விரைந்து சென்று
மாலயன் தொடரா தானை வலிந்து
பின் தொடரல் உற்றார். 43
என்றான் இறையோன் அது
கேட்டவர் எம் மருங்கும்
நின்றார் இருந்தார் "இவன்
என்நினைந்தான் கொல்" என்று
சென்றார் வெகுண்டார் சிரித்தார்
திரு நாவ லூரான்
"நன்றால் மறையோன் மொழி"
என்று எதிர்நோக்கி நக்கான். 38
நாவலர் கோன் ஆரூரன் தனை
வெண்ணெய் நல் ஊரில்
மேவும் அருள் துறை அமர்ந்த
வேதியர் ஆட்கொண்டு அதற்பின்
பூ அலரும் தடம் பொய்கைத்
திரு நாவலூர் புகுந்து
தேவர் பிரான் தனைப் பணிந்து
திருப் பதிகம் பாடினார். 78
தென் நாவலூர் மன்னன் தேவர்
பிரான் திரு வருளால்
மின்னாருங் கொடி மருங்குல் பரவை
எனும் மெல்லியல் தன்
பொன் ஆரும் முலை ஓங்கல்
புணர் குவடே சார்வாகப்
பன் னாளும் பயில் யோக
பரம்பரையின் விரும்பினார். 181
ஆவதிது கேண்மின் மறையோர்!
என் அடியான் இந்
நாவல்நகர் ஊரன் இது
நான் மொழிவது என்றான்
தேவரையும் மாலயன் முதன்
திரு வின் மிக்கோர்
யாவரையும் வேறு அடிமை
யாவுடைய எம்மான். 37
வரும் பான்மையினில் பெரும் பாணர்
மலர்த்தாள் வணங்கி வயல் சாலிக்
கரும்பார் கழனித் திருநாவலூரில்
சைவக் கலை மறையோர்
அரும்பா நின்ற அணி நிலவும்
பணியும் அணிந்தார் அருள் பெற்ற
சுரும்பார் தொங்கல் சடையனார்
பெருமை சொல்லல் உறுகின்றாம். 12
ஆனைக் காவில் தாம் முன்னம்
அருள் பெற்று அதனை அறிந்து அங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார்
மகிழும் கோயில் செய்கின்றார்
ஞானச் சார்வாம் வெண்நாவல் உடனே
கூட நலம் சிறக்க
பால் நல் களத்துத் தம்பெருமான் அமரும்
கோயில் பணி சமைத்தார். 13
கொத்தார் மலர்க்குழலாள் ஒரு
கூறாய் அடியவர் பால்
மெய்த் தாயினும் இனியானை
அவ்வியன் நாவலர் பெருமான்
"பித்தா பிறை சூடி
எனப் பெரிதாம் திருப்பதிகம்
இத்தாரணி முதலாம் உலகு
எல்லாம் உய்ய எடுத்தார். 74
மயங்கிய நண்பர் உய்ய வாக்கு
எனும் மதுர வாய்மை
நயம் கிளர் அமுதம் நல்க
நாவலூர் மன்னர் தாமும்
முயங்கிய கலக்கம் நீக்கி உம்
அடித் தொழும்பன் ஏனைப்
பயம் கெடுத்து இவ்வாறு அன்றோபணி
கொள்வது என்று போற்ற. 357
திருத்தினை மாநகர் மேவும் சிவக்
கொழுந்தைப் பணிந்து போய்
நிருத்தனார் அமர்ந்து அருளும் நிறை
பதிகள் பல வணங்கிப்
பொருத்த மிகும் திருத் தொண்டர்
போற்று திரு நாவலூர்
கருத்தில் வரும் ஆதரவால் கை
தொழச் சென்று எய்தினார். 168
சித்த நிலை திரியாத திரு
நாவ லூர் மன்னர்
அத் தகுதி யினில் பள்ளி
உணர்ந் தவரை காணாமை
இத்த னையா மாற்றம் அறிந்
திலேன் என எடுத்து
மெய்த் தகைய திருப் பதிகம்
விளம்பியே சென்று அடைந்தார். 163
தேவர் பெருமான் தன்னைத் திருச்
சாய்க் காட்டினில் பணிந்து
பாவலர் செம் தமிழ் மாலைத்
திருப் பதிகம் பாடிப்போய்
மேவலர் தம் புரம் எரித்தார்
வெண்காடு பணிந்து ஏத்தி
நாவலர் காவலர் அடைந்தார் நனி
பள்ளித் திரு நகரில். 148
செங்கோல் அரசன் அருள் உரிமைச்
சேனாபதி ஆம் கோட்புலியார்
நங் கோமானை நாவலூர் நகரார்
வேந்தை நண் பினால்
தங்கோ மனையில் திருஅமுது செய்வித்து
இறைஞ் சித்தலை சிறந்த
பொங்கு ஓதம்போல் பெரும் காதல்
புரிந்தார் பின்னும் போற்றுவா. 37
விண்ணவர் போற்றி செய் ஆனைக் காவில்
வெண் நாவல் மேவிய மெய்ப் பொருளை
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து
எழுந்து நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல் கோச் செங்கண் அரசன்செய்த
அடிமையும் அஞ்சொல் தொடையில் வைத்துப்
பண்ணுறு செந்தமிழ் மாலை பாடிப்
பரவி நின்று ஏத்தினர் பான்மையினால். 345
தேவர் தங்குழாம் நெருங்கிய
வாய்தலில் திருநாவலூரார் தம்
காவல் மன்னரும் புறப்பட
எதிர்கொண்டு கயிலை வீற்றிருக்கின்ற
பூவலம்பு தண் புனல் சடை
முடியவர் அருளிப்பாடு எனப் போற்றி
ஏவல் என்றபின் செய்வது ஒன்று
இலாதவர் பணிந்தெழுந்து எதிரேற்றார். 33
தம்பிரான் அருள் போற்றித் தரையின்
மிசை விழுந்து எழுந்தே
உம்பரால் உணர்வு அரிய திருப்
பாதம் தொழுது ஏத்திச்
செம் பொன் நேர் சடையாரைப்
பிறபதியும் தொழுது போய்
நம்பர் ஆரூர் அணைந் தார்
நாவலூர் நாவலன் ஆர். 22
திரு நாவலூர் மன்னர் திரு
வாரூர் வீற்று இருந்த
பெரு மானைத் திரு மூலட்
டானம் சேர் பிஞ்ஞகனைப்
பருகா இன் அமுதைக் கண்
களால் பரு குதற்கு
மருவார் வத்துடன் மற் றைகண்
தாரீர் என வணங்கி. 308
பெருகிய நலத்தால் மிக்கபெரும்
திருநாடு தன்னில்
அரு மறைச் சைவம்
ஓங்க அருளினால் அவதரித்த
மருவிய தவத்தால் மிக்க
வளம்பதி வாய்மை குன்றாத்
திரு மறையவர்கள் நீடும்
திரு நாவலூராம் அன்றே. 2