logo

|

Home >

hindu-hub >

temples

திருநாவலூர் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: பக்தஜனேஸ்வரர், திருநாவலேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மனோன்மணி, சுந்தரநாயகி, சுந்தராம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : கெடில நதி, கோமுகி தீர்த்தம்.

வழிபட்டோர்:பிரம்மா, விஷ்ணு, சப்தரிஷிகள், கருடன், அப்பர், சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையரையர், சுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், சுக்கிரன்.

Sthala Puranam

Tirunavalur temple

  • இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார். நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம் தான் திருநாவலூர். 
  • சுக்ரபகவான் இத்தலத்தில் இறைவனை வணங்கி பூஜித்து வக்ர தோஷம் நிவர்த்தி பெற்றார். சுக்கிரன் காசியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பலகாலம் பூஜித்தார்.  இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவபெருமான்  இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார்.  இதை அறிந்த அசுரர்கள் சுக்கிரனைத் தங்கள் குல குருவாக ஏற்றுக் கொண்டார்கள். தேவாசுரப்போரில் இறந்த அசுரர்களை எல்லாம்  சுக்கிரன் தன் சஞ்சீவினி மந்திரத்தால் உயிர்க்கச் செய்தார்.  தேவர்கள்  அசுரர்களுக்கு நியதிக்கு மாறாக  அழிவில்லாமல் போகவே சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவபெருமான் சுக்கிரனை  விழுங்கினார்.  சிவபெருமான் வயிற்றில் பல காலம் சுக்கிரன் யோகத்தில் இருந்தார்  சிவபெருமான் அவருடைய  வழிபாட்டிற்கு மெச்சி நவக்கிரக பதவி கொடுத்து  அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார். சுக்கிரன்  பூலோகம் வந்து சிவலிங்க ஸ்தாபித்து வழிபாடு செய்தார்.  அந்த இடம் திருநாவலூர் ஆகும்
  • கிருத யுகத்தில் விஷ்ணு வழிபட்டார் 
  • திரேதாயுகத்தில்  சிவப்பிரியர் என்பவர் சிவபூஜை செய்து சண்டிகேஸ்வர பட்டம் பெற்றார்.
  • துவாபர யுகத்தில் பிரம்மா வழிபட்டார்.
  • பார்வதி தேவி சிவபூஜை செய்தார் 
  • ஆதிசேஷன் யூமிஸ்ந்த நஞ்சினை கருநிறமடைந்த கருடன் சிவபூஜை செய்து விஷம் நீங்கிய தலம்.

 

தேவாரப் பாடல்கள்     : 

பதிகங்கள்     :    சுந்தரர்   -   1. கோவலன் நான்முகன் (7.17); 

பாடல்கள்       :    அப்பர்     -      பூவ னூர்தண் (5.65.8);                      

                                சுந்தரர்   -      விரித்த வேதம் (7.006.10), 

                                                         செய்யார் கமல மலர் (7.013.11),                                     

                                                         படிசெய்நீர்மையிற் (7.033.10),                                       

                                                         செறுவினிற் (7.034.11),

                                                         அன்னஞ்சேர்வயல் (7.036.11),                                       

                                                         என்பினையே கலனாக (7.038.10),

                                                         மன்னியசீர் மறைநாவன் (7.039.11),                                       

                                                         நீடு பொக்கையிற் (7.064.10), 

                                                         செறிந்த சோலைகள் (7.068.10),                                           

                                                         வஞ்சிநுண்ணிடை (7.087.10),                                     

                                                         வேத வேதியர் (7.088.10);       

    நம்பியாண்டார் நம்பி    -     சிறைநன் புனல் (11.34.28,58,70,85 & 88);            

               சேக்கிழார்              -     பெருகிய நலத்தால் (12.5.2,38,43,51,62,78,87,157,163 & 186) தடுத்தாட்கொண்ட புராணம்,                                       

                                                         நாவலூர் மன்னர் (12.29.8,9,16,22,32,37,163,168,169,181,262,280,308,357 & 394) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,                                       

                                                         ஆடும் பெருமான் (12.37.60,69,121 & 137) கழறிற்றறிவார் நாயனார் புராணம்,                                       

                                                         தேவர் தங்குழாம் (12.72.33 & 41) வெள்ளானைச் சருக்கம்.

Specialities

  • மக்கள் வழக்கில் மட்டும் கொச்சையாகத் 'திருநாமநல்லூர் ' என்று வழங்குகின்றனர்.
  • சுந்தரரின் தந்தையாரான சடைய நாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றிய பெரும்பதி. அவதாரத் தலம் : திருநாவலூர். வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : திருநாவலூர். குருபூசை நாள் : மார்கழி - திருவாதிரை.
  • சுந்தரர் அவதாரத் திருத்தலம். அவதாரத் தலம் : திருநாவலூர். வழிபாடு : குரு வழிபாடு. முத்தித் தலம் : திருஅஞ்சைக்களம் / திருக்கயிலாயம் குருபூசை நாள் : ஆடி - சுவாதி.
  • இஃது சுந்தரரின் தாயாரான இசைஞானியார் வாழ்ந்து, தொண்டாற்றி, முத்தி பெற்றத் தலமுமாகும்.
  • உள்ளே சுந்தரர் சந்நிதி உள்ளது; பரவை, சங்கிலியார் சூல எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி காட்சி தருகிறார்.
  • நரசிங்க முனையரையர் அவதரித்து, அரசு வீற்றிருந்தவர்; குறுநில மன்னர். அவதாரத் தலம் : திருநாவலூர். வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : திருநாவலூர். குருபூசை நாள் : புரட்டாசி - சதயம்.
  • உள்பிரகாரத்தில் நரசிங்க முனையரையர் பூசித்த மிகப்பெரிய சிவலிங்க மூர்த்தம் உள்ளது.
  • கருவறைச் சுவரில் சண்டேஸ்வரர் வரலாறு சிற்ப வடிவில் - பால் கறப்பது, தந்தையார் மரத்தின் மீதேறிப் பார்ப்பது, திருமஞ்சனம் செய்வது, தந்தையின் கால்களை துணிப்பது, இறைவன் கருணை செய்வது வடிக்கப்பட்டுள்ளது.
  • நவக்கிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிராக அவன் வழிப்பட்ட சுக்கிரலிங்கம் உள்ளது.
  • நவக்கிரகங்களில் நடுவில் உள்ள சூரியன் திசைமாறி மூலவரைப் பார்த்தவாறு உள்ளார்.
  • கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி உருவம் - ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின்மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் அமைப்பு; கண்டு மகிழத் தக்கது.
  • சுந்தரர் மடாலயம் அழகான முன்மண்டபம்; சுந்தரர் கையில் செண்டுடன் அழகாக காட்சிதருகிறார்; இங்குள்ள உட்கோயில் தொண்டீச்சரம் எனப்படுகிறது; இது முதற்பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தனால் கட்டுவிக்கப் பெற்றது என்பது கல்வெட்டுச் செய்தி.
  • பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் மூலவர் மீது படுகின்றன. 
  • சுந்தரர் ஜனன உற்சவம் ஆவணி மாதம் உத்திர நட்சத்திரம் அன்று சிறப்பாக நடைபெறும்.
  • சித்திரைத் தேர்த்திருவிழா 15 நாட்கள்.
  • வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரலிங்கத்திற்கும் சுக்கிரனுக்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
  • இவ்வூரின் பெயர் திருநாவலூர் ஆயினும் இங்குள்ள கோயிலுக்குத் திருத்தொண்டீச்சரம் என்று பெயர். இக்கோயிலிலுள்ள முதலாம் பராந்தக சோழருடைய இருபத் தொன்பதாம் ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும், ஏனைய கல்வெட்டுக்களும் இவ்வூரைத் திருமுனைப்பாடித் திருநாவலூர்த் திருத்தொண்டீஸ்வரமான இராஜாதித்த ஈஸ்வரம் என்று குறிப்பிடுகின்றன.
  • இத்தொண்டீஸ்வரத்தைக் கற்றளியாகக் (கருங்கல்லால்) கட்டுவித்தவன் முதற் பராந்தக சோழனது முதல் மகனாகிய இராசாதித்தன் ஆவன். இச்செய்தி `ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு இருபத்தெட்டாவது திருமுனைப்பாடி, திருநாவலூர்த் திருத்தொண்டீஸ்வரம் திருக்கற்றளி செய்வித்த இராஜாதித்ததேவர் தாயார் நம்பிராட்டியார் கோக்கிழானடிகள் பரிவாரத்தாள் சித்திரகோமளம் வைத்த சாவாமூவாப் பேராடு தொண்ணூறு. ஈழ விளக்கு ஒன்று. இது பன்மாஹேஸ்வரரகை்ஷ என்னும் கல்வெட்டால் தெளிவாக அறியக்கிடக்கின்றது. (Epigraphica Indica, Volume VII page 133)
  •  முதற் பராந்தகசோழனின் இருபத்தெட்டாம் இராச்சிய ஆண்டில் அதாவது கி.பி. 935 இல் தொண்டீச்சரத்தைக் கருங்கல்லால் கட்டிய இராசாதித்தனுடைய தாயார், கோக்கிழானடிகளின் பரிவாரத்தாள் சித்திரகோமளம் என்பவள் ஒரு நுந்தா விளக்கு ஒன்றுக்கு, தொண்ணூறு ஆடுகளையும் ஒரு ஈழவிளக்கையும் கொடுத்துள்ளாள் 
  • இராசாதித்தன் இக்கோயிலைக் கருங்கல்லால் கட்டி அதற்கு இராசாதித்தஈஸ்வரம் என்று தன்பெயரை வைத்தாலும் முன்னுள்ள தொண்டீச்சரம் என்னும் பெயர் மறைந்து போகாமல் இருத்தற்கு அதற்குத் திருநாவலூர்த் திருத்தொண்டீஸ்வரமான இராஜாதித்த ஈஸ்வரம் என்றும் இக்கோயில் கல்வெட்டுக்களில் குறித்துள்ளான். 
  • கர்ப்ப கிருகத்திற்கு முன்புள்ள மண்டபங்களைக் கட்டியவர் திருநாவலூர் வியாபாரி வேளூர் கிழவர் பள்ளிபட்டணசுவாமி ஆவார். இச்செய்தி `உடையார் திருத்தொண்டீஸ்வரமுடைய நாயனார் ஏவலாலே இவ்வூர் வியாபாரி வேளூர் கிழவன் பள்ளிபட்டணசாமி பெரியான் இத்திருமண்டபம் இரண்டும் செய்து கீழைத்திருவாசலும் திறந்து அத்திருவாசலும் செய்வித்தான்`( S.I.I. Vol. VII No. 1002) என்னும் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. இக்கல்வெட்டின் தொடக்கத்தில் அரசர் பெயர் குறிக்கப்படாமையால் இம்மண்டபங்கள் எந்த அரசர்களின் காலங்களில் கட்டப்பட்டன என அறுதியிட்டு உரைத்தற்கு இல்லை.
  • இக்கோயில் நடராசப் பெருமானைப் பற்றிய செய்தி: முதலாம் இராசராச சோழனின் 21-ஆம் இராச்சிய ஆண்டில் அதாவது கி.பி. 1006இல் மும்முடி சோழ பிரமராயர் கன்மி கழுப்பருடையான் சித்திரகுப்தன் ஐய்யக் குமரடி, இக்கோயிலில் ஆடி அருளுகிற கூத்தர்க்கு, திருநாவலூர்க் கோலால் 1750 பலம் நிறையுள்ள பாத பீடம் ஒன்றைக் கொடுத்துள்ளான்.
  • திருவமுது வகைகள்: இறைவர்க்குத் திருவமுதுக்குப் படிஇரட்டி மூன்று சந்தியும் குத்தல் அரிசி பன்னிரு நாழியும், நெய் முப்பிடியும், கறியமுதுக்கு நெல்லு முந்நாழியும் உள்ளிட்டவைகளுக்கு, கோப்பரகேசரிவர்மரின் மூன்றாம் ஆண்டில் முனையதரையர் அபராயிதன் குலமாணிக் கெருமனார் அருளிச் செய்ய, செம்மனங் கூருடைய நம்பூரன் பெருமுகிலன் விக்கிரமாபரண பல்லவரையன், காடுவெட்டித் திருத்தின நிலத்தைக் கொடுத்துள்ளான்.
  • தேவதான நிலங்கள்: திருத்தொண்டீச்சரமுடையார்க்கு மேலூர் நாட்டுத் திருநாவலூரும் இந்நாட்டுப் பெரும்பாக்கமும் மங்கல நாட்டு ஏகதீர சதுர்வேதிமங்கலமும் உரியனவாய் இருந்தன. இச்செய்தி முதலாம் இராசராச சோழனுடைய பதினெட்டாம் இராச்சிய ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டால் புலப்படுகின்றது. இவைகளுள் பெரும்பாக்கம் என்னும் ஊர், திருநாவலூர்க்கு வட மேற்கே நான்கு மைல் தொலைவில் இருக்கின்றது.
  • இத்திருக்கோயிலில் திருவலகிடுவார் நால்வர், திருப்பள்ளித்தாமம் தொடுப்பார் இருவர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு, கோவிராச கேசரிபன்மரின் மூன்றாம் இராச்சிய ஆண்டில் வீரஸோக பண்டிதன் நாற்பது கழஞ்சு பொன்னை மூலதனமாக வைத்திருந்தான்.
  • இவ்வூரில் திருமால்கோயில் ஒன்று இத்தொண்டீச்சரத்துக்கு மேற்கில் உள்ளது என்பதும், அத் திருமாலின் திருப்பெயர் திருமேற்றளி மகாவிஷ்ணுக்கள் என்பதும் முதற்பராந்தக சோழனின் 32 ஆம் ஆட்சியாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டால் புலப்படுகின்றது.(S.I.I. Vol VII No. 978 )
  • முதற்பராந்தக சோழனது தேவியாரின் திருப்பெயர் கோக்கிழானடிகள் என்பதாகும். இவ்வம்மையார் சேரர் குலத்தினர் ஆவர். இம்மன்னனது முதல் மகன் இராஜாதித்தன். இந்த இராஜாதித்தன் மனைவியாரின் பெயர் மகாதேவடிகள் என்பதாகும். இவ்வம்மையார் மிலாடதரையர் மகளாவர். இந்த அம்மையாருடைய அண்ணன் இராஜாதித்த ஈஸ்வரத்துக்கு ஒரு நுந்தாவிளக்குக்கு நூறுசாவா மூவாப் பேராடுகளைக் கொடுத்துள்ளான்.(A.R.E. 1902 No. 363). கண்டராதித்த சோழருடைய தேவியாரின் திருப்பெயரும் மாதேவடிகள் என்பதாகும். இச்செய்தி, ``கண்டராதித்ததேவர் தேவியார் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார்`` என்னும் கல்வெட்டுப் பகுதியால் அறியக்கிடக்கின்றது.(S.I.I. Vol III Part III No. 146 page 296) திருவையாற்று ஓலோகமா தேவீச்சரத்திலுள்ள கல்வெட்டு ஒன்று, ``ராஜராஜதேவர் திருமகளார் மாதேவடிகளார்`` என்று குறிப்பிடுகின்றது. எனவே மாதேவடிகள் என்பது இயற்பெயராகவே உள்ளது என்பது ஈண்டு அறிதற்குரியதொன்றாகும்.
  • இவ்வூர், முதற் பராந்தக சோழன் காலத்துக் கல்வெட்டுக்களில், `திருமுனைப்பாடித் திருநாவலூர்` என்றும், பூமியும் திருவும் தாமே புணர் என்னும் மெய்க்கீர்த்தியை யுடைய விசயராசேந்திரன் கல்வெட்டில் `இராஜேந்திர வளநாட்டுத் திருமுனைப்பாடி மேலூர் நாட்டுத் திரு நாவலூர்` என்றும், முதற்குலோத்துங்க சோழனின் 37வது ஆண்டுக் கல்வெட்டில் `கங்கை கொண்ட சோழ வளநாட்டுத் திருமுனைப்பாடி மேலூர் நாட்டுத் திருநாவலூர்` என்றும், `பூமேவிவளர் திருப்பொன் மாதுபுணர` என்னும் மெய்க்கீர்த்தியை யுடைய குலோத்துங்க சோழனின் கல்வெட்டில் `இராஜராஜ வளநாட்டுத் திருமுனைப்பாடி மேலூர் நாட்டுத் திருநாவலூர்` என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
  • நுந்தா விளக்கு என்பது தூண்டப் பெறாத விளக்கு ஆகும். இந்த நுந்தாவிளக்கு ஒன்றுக்கு, நிசதம் உழக்கு நெய் எரிப்பதற்கு ஆடாயின் தொண்ணூற்றாறும் பசுவாயின் நாற்பத்தெட்டும், எருமையாயின் பதினாறும் அளிப்பது வழக்கம் என்பது முதலாம் இராசராசனுடைய தஞ்சை இராசராசேச்சரக் கல்வெட்டால் அறியலாம். இங்ஙனம் கொடுக்கப்பட்ட ஆடுகளும், பசுக்களும் சாவா மூவாப் பேராடுகள், சாவாமூவாப் பெரும் பசுக்கள், எனக் குறிக்கப் பட்டிருக்கும். இனம் பெருகிக்கொண்டிருக்கும் ஆடுகள், இனம் பெருகிக்கொண்டிருக்கும் பசுக்கள் என்பன அத்தொடர்களின் பொருள்.
  • இத்திருநாவலூர்க் கல்வெட்டுக்களில் பெரும்பான்மை நுந்தா விளக்குகளுக்கு 100 ஆடுகள் விடப்பட்ட செய்திகளே குறிக்கப்பட்டுள்ளன. இந் நுந்தா விளக்குகளுக்கு நிவந்தம் வழங்கியவர்களில் பெரும்பான்மையோர் இந்த இராஜாதித்தனுடைய பரிவாரத்தார்களேயாவர். பகைதீர ஒருவர் நுந்தா விளக்குக்கு நிவந்தம் அளித்திருப்பது இவ்வூர்க் கல்வெட்டால் அறியப்படும் செய்தியாகும்.
  • இக் கோயிலிலுள்ள முதற்பராந்தக சோழனின் இருபத்தொன்பதாம் ஆண்டுக் கல்வெட்டு திருநாவலூர்த் திருவகத்தீஸ்வரத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்த அகத்தீச்சரம் என்பது தொண்டீச்சரத்துக்கு வேறுபட்ட கோயிலாகும். இம் மன்னனுடைய இதே ஆண்டில் பொறிக்கப்பட்ட இக்கோயில் கல்வெட்டு `இராஜாதித்த ஈஸ்வரத்து மகாதேவர்க்கொன்றும், திருவகத்தீஸ்வரத்து மகாதேவர்க்கொன்றும் வைத்த விளக்கு`(S.I.I.Vol. VII No..977) என்னும் கல்வெட்டுப் பகுதி வலியுறுத்துகின்றது.

Contact Address

அமைவிடம் அ/மி. பக்தஜனேசுவரர் திருக்கோயில், திருநாவலூர் & அஞ்சல், உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம் - 607 204. மாநிலம் : தமிழ் நாடு சென்னை - திருச்சி டிரங்க் ரோடில் விழுப்புரம் தாண்டி உளுந்தூர்ப்பேட்டைக்கு முன்பாக, மடப்பட்டு தாண்டி, பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரிந்து எதிரே இடப்பக்கமாக செல்லும் பண்ருட்டி சாலையில் 2-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். தொடர்பு : 09486150804, 04149-224391.

Related Content

திருநெல்வாயில் அரத்துறை தலவரலாறு

திருத்தூங்கானைமாடம் (பெண்ணாகடம்) தலவரலாறு

திருக்கூடலையாற்றூர்

திருஎருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரப்பட்டணம்) தலவரலாறு

திருத்தினைநகர் (தீர்த்தனகிரி) தலவரலாறு