இறைவர் திருப்பெயர்: மல்லிகார்ச்சுனர், ஸ்ரீசைலநாதர், சீபர்ப்பதநாதர்.
இறைவியார் திருப்பெயர்: பிரமராம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : அம்ருத குண்டம் (கிலபாவி) - கோயிலுக்குள் தென் பகுதியில் உள்ளது. மல்லிகார்ஜுனரின் அபிஷேகத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. மல்லிகா குண்டம் - கோயிலுக்குள் வடக்கே உள்ளது. மல்லிகார்ஜுன சுவாமியின் அபிஷேக தீர்த்தம் இதில் சேர்கிறது. இதில் நீராடுவோர் சர்வஞர் ஆவர் என்று தலபுராணம் கூறுகிறது. மனோஹர தீர்த்தம் - அம்ருதகுண்டத்திற்கு அருகில் உள்ளது. கங்கை போல் புனிதமானது. கண்ட பாவி - கோயிலின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. சங்கு தீர்த்தம் - கோயிலின் வடகிழக்குப் பகுதியில் அத்தி மரத்தடியில் அமைந்துள்ளது. சேதுது பாவி: கோயிலின் தென்பகுதியில் அமைந்துள்ளது. கபாலகுண்டம்: கோயிலுக்கு வடக்கே சாரங்கேஸ்வரர் கோயிலுக்கு அருகில். சூர்யகுண்டம்: கோயிலுக்குத் தெற்கே. காலஹ்ரதம்: ஸ்ரீசைல மலையில் வட பகுதியில். நீராடுவோர்க்கு அஸ்வமேத யாக பலன். தேவஹ்ரதம்: ஸ்ரீசைல மலையில் வட பகுதியில். மஹாபாரதத்தில் குறிக்கப்பட்டது. சரஸ்வதி தீர்த்தம்: ஸ்ரீசைல மலையின் வடபக்கத்தில் சரஸ்வதி நதியாக கிழக்கு நோக்கி ஓடுகிறது. கண்ட குண்டம்: சரஸ்வதியின் வடக்கே கண்டசித்தேஸ்வரர் கோயில் அருகே. சந்திர குண்டம்: கண்டா குண்டத்தின் வடக்கே சந்திரேஸ்வரர் கோயில் அருகே. தக்ஷிணாவர்த்த தீர்த்தம்: சரஸ்வதி, ஜான்ஹவி, பாதாளகங்கை நதிகளின் சங்கமம். சாருகேஸ்வரம்: வசுமதி தவம் செய்த தீர்த்தம். பாபவிநாசம்: சாருகேஸ்வரத்திற்கு மேற்கிலுள்ள தீர்த்தம். குப்த மஹேஸ்வரம்: மஹேஸ்வரகிரியில் மஹேஸ்வரர் ஆலயத்திரு அருகில் உள்ளது. முனிபுரம்: மஹேஸ்வர தீர்த்தத்திற்கு அருகில் உள்ள தீர்த்தம். குண்டலீ தீர்த்தம், பாவுக தீர்த்தம், சக்ர தீர்த்தம், பவ்ய தீர்த்தம், பஞ்சபாலவ தீர்த்தம், தாரா தீர்த்தம், யம கோண தீர்த்தம், ருத்ரபாத தீர்த்தம், பாதாள கங்கை, மந்தாகினி தீர்த்தம், போகவதி தீர்த்தம், கட்டி பாவி, ஹாடக குண்டம். கர்ம ஹரேஸ்வர தீர்த்தம், குபேர தீர்த்தம், கோடிலிங்க தீர்த்தம், கண்டிக குண்டம், நந்த தீர்த்தம், பஞ்சதாரா தீர்த்தம், ப்ரஹ்ம தீர்த்தம், லவுக தீர்த்தம், வராஹ தீர்த்தம், சிவ தீர்த்தம், சிகரேஸ்வர தீர்த்தம், சாரங்க தீர்த்தம், ஸந்த்யாதீர்த்தம், கன்யகாகுண்டம், நீலஹ்ரதம், சமாதி தீர்த்தம், கணேஸ்வர தீர்த்தம்,
வழிபட்டோர்:முருகன், சிலாதர், நந்தி, பர்வதன், மன்மதன், அகத்தியர், லோபாமுத்திரை, வசிஷ்டர், கர்கர், துர்வாசர், வியாசர், நாரதர், இராமர், பாண்டவர், ஹிரண்யகசிபு, இராவணன், சம்பந்தர், அப்பர், சுந்தரர், நக்கீரதேவ நாயனார்,பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், சங்கர பகவத்பாதர், ரேணுகாச்சார்யார், அக்க மஹாதேவி, ஹேமரெட்டி மல்லம்மா எனப் பலர்.
Sthala Puranam
ஸ்ரீபர்வதம், ஸ்ரீகிரி, சகோர சேதகிரி, ருத்ரபர்வதம், சேஷாசலம் போன்ற பெயர்கள் பல உடையது. மக்கள் வழக்கில் தற்போது "ஸ்ரீசைலம்" என்று வழங்குகிறது.
ஒருமுறை, சந்திராவதி என்ற இளவரசி, தவம் மற்றும் தியானம் செய்யக் காட்டிற்குச் செல்ல முடிவு செய்தாள். இதற்காக கதலி வனத்தைத் தேர்ந்தெடுத்தாள். ஒரு நாள், அவள் ஒரு அதிசயத்தைக் கண்டாள். ஒரு கபில பசு பில்வ மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தது, அதன் நான்கு மடிகளிலிருந்தும் பால் வடிந்து, தரையில் மூழ்கியது. மாடு இதை அன்றாடம் ஒரு வழக்கமான வேலையாக செய்து வந்தது. சந்திரவதி அந்தப் பகுதியை தோண்டி எடுத்து பார்த்ததில் அதிசயித்தாள். அங்கு ஸ்வயம்பு சிவலிங்கம் இருந்தது. அது சூரியக் கதிர்களைப் போல பிரகாசமாக இருந்தது, மேலும் அது எரிவது போல் இருந்தது, எல்லா திசைகளிலும் தீப்பிழம்புகளை வீசியது. சந்திராவதி இந்த ஜோதிர்லிங்கத்தில் மல்லிகை மலர்களால் சிவபெருமானைப் பூஜித்தாள். அவள் அங்கே ஒரு பெரிய சிவாலயத்தைக் கட்டினாள். அவள் மீது சங்கரர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். சந்திராவதி காற்றில் கைலாசத்திற்குச் சென்றாள். முக்தியையும் பெற்றாள். கோயிலின் கல்வெட்டு ஒன்றில், சந்திராவதியின் கதை செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சோலாப்பூரில் 12 ம் நூற்றாண்டில் முத்தன்ன கெளட - சுகுலா தேவி என்ற வயோதிக தம்பதியர் வசித்து வந்தனர். பிள்ளை இல்லாத அவர்களுக்குக் குலகுருவான ரேவண சித்தர் ஒரு நாரத்தம் பழத்தைக் கொடுத்து, சிவ பூஜை செய்து வருமாறு ஆசி வழங்கினார். அப்படியே செய்த அத்தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான். சித்தர் அருளால் பிறந்ததால் அக்குழந்தைக்கு ஸித்தப்பா எனப் பெயரிட்டனர். அச் சிறுவனுக்கு ஆறு வயதான போது ஒரு வயோதிகர் அவன் முன் தோன்றித் தன் பெயர் மல்லையா என்றும் தான் மிகவும் பசியோடு இருப்பதாகவும் கூறவே, ஸித்தப்பா ஓடோடிச் சென்று அவரது பசி தீர்க்க வேண்டி உணவும் பாயசமும் கொண்டு வந்தான். ஆனால் அங்கு வயோதிகர் காணப்படவில்லை. அவரது பெயரைக் கூவிக் கொண்டு ஸ்ரீ சைலம் செல்லும் பக்தர்களோடு உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஸ்ரீ சைலத்தை அடைந்தான். மல்லையா என்பவரைப் பார்த்தீர்களா என்று பக்தர்களைக் கேட்டபோது, அதற்கு அவர்கள் மல்லிகார்ஜுன லிங்கத்தைக் காட்டி, " இவரே மல்லையா " என்றனர். சிறுவனானபடியால் அதனை நம்பாமல் தேடுவதைத் தொடர்ந்தபோது ஓரிடத்தில் கையிலிருந்த பாயசத்துடன் ஒரு பள்ளத்தில் தவறிப்போய் விழும் தருவாயில் சுவாமி அவன் முன் தோன்றி அவனைக் காப்பாற்றினார். இன்று அப்பள்ளம் , ஸித்தராமப்பா குளம் எனப்படுகிறது. பின்னர் தனது ஊரை அடைந்த ஸித்தராமப்பா , அங்கு ஓர் சிவாலயத்தைக் கட்டினான். அதில் வேலை செய்தவர்களுக்குக் குளத்து மண்ணைக் கூலியாகக் கொடுத்தான். அது தங்கத் துகளாக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் , தான் வெட்டிய குளத்திலேயே ஜீவசமாதி அடைந்தான். பிற்காலத்தில் அங்கு ஸித்தராமேஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டது.
ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ராமாபுரம் என்ற ஊரில் 14 ம் நூற்றாண்டில் வசித்து வந்த நாகி ரெட்டி- கௌரம்மாள் இருவரும் பிள்ளை வரம் வேண்டி ஸ்ரீ சைலம் வந்தனர். இறைவனருளால் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை மல்லம்மா என்று அழைக்கப்பட்டாள். வயது வந்தவுடன் அவளை ,அருகிலுள்ள சித்தாபுரத்தைச் சேர்ந்த பரமா ரெட்டி என்பவனுக்கு மணம் செய்து வைத்தனர். புகுந்த வீட்டுக்கு மல்லம்மா வந்தவுடன் அங்கு பசுக்களும் விளைச்சலும் பல மடங்கு அதிகரித்தன. ஏழைகளுக்கு மல்லம்மா உதவி செய்து வந்தாள் . இதைக் கண்டு பொறாமை கொண்ட உற்றார் உறவினர்கள், அவளது கணவனிடம் சென்று வீண் பழி சுமத்தி அவனைக் கோபமுறச் செய்தார்கள். அதை உண்மை என நம்பிய கணவனும், மல்லம்மாவைக் கொன்று விட நினைத்து அவளிடம் சென்றான். ஆனால் அவளோ மெய் மறந்து சிவபூஜை செய்து கொண்டிருப்பதைக் கண்டு தனது செயலுக்கு வருந்தினான். மல்லம்மாவும், தவறு செய்த அனைவரையும் மன்னித்து, அனைவருக்கும் சிவ மகிமையைப் போதித்து, கடைசியில் பெருமானுடன் ஐக்கியம் ஆனாள். ஸ்ரீ சைல ஆலயத்தில் பின் பிராகாரத்தில் மல்லமாவின் பசுத் தொழுவம் இருக்கிறது. அருகில் மல்லம்மாவின் விக்கிரகமும் இருக்கிறது.
ஸ்ரீசைலத்தைச் சேர்ந்த உமாமகேசுவரத்தில் இருந்த சிற்பி இரு நந்தி சிலைகளைச் செய்தான். அவற்றை கிருஷ்ணா நதியைத் தாண்டி எவ்வாறு ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு செல்வது என்று கவலையில் ஆழ்ந்தான். அவனது கனவில் தோன்றிய இறைவன், ஒரு கயிற்றைக் கொடுத்து, அதைக் கொண்டு நந்திகளைத் திரும்பிப் பார்க்காமல் இழுத்துச் செல்லும்படி கட்டளை இட்டார். துயில் நீங்கிக் கயிற்றைக் கண்ட சிற்பி, அதைக் கொண்டு இரு நந்திகளையும் பிணைத்து இழுத்து வரும்போது, ஒரு நந்தி பாறைகளிடையே சிக்கவே, திரும்பிப் பார்த்தான். அதனால் அந்த நந்தி அங்கேயே நின்று விட்டது. மற்றொரு நந்தியை மட்டுமே ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு வந்தான் என்று சொல்வார்கள். ஆற்றின் நடுவில் உப்பிலி பசவண்ணா என்று பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து வந்த நந்தி இப்போது ஸ்ரீ சைலம் அணைக்கட்டில் ஆழத்தில் மூழ்கி இருக்கிறது.
ஸ்கந்த புராணம் (ஸ்ரீசைல கண்டம்), பத்மபுராணம், வாயுபுராணம், பிரம்மாண்ட புராணம், மார்க்கண்டேய புராணம், மத்ஸ்யபுராணம், அக்னிபுராணம், விஷ்ணுபுராணம், சிவபுராணத்தில் கோடிருத்ர சம்ஹிதை ஆதித்ய புராண சூத ஸம்ஹிதை, பாகவத பத்தாம் ஸ்கந்தம், ரச ரத்னாகர ரசாயன காண்டம், போன்றவை ஸ்ரீசைலத்தின் பெருமையைப் பேசுகின்றன.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. சுடுமணி யுமிழ்நாகஞ் (1.118); அப்பர் - 1. கன்றினார் புரங்கள் (4.58); சுந்தரர் - 1. மானும்மரை இனமும்மயில் (7.79); பாடல்கள் : சம்பந்தர் - மலையினார் பருப்பதந் (1.76.1), அண்ணாமலை (2.39.2), பரிய மாசுணங் (2.95.6); அப்பர் - போகமார் (4.66.8), பொருப்பனை (5.17.9), நெருப்பி னாற் (5.30.7), தெய்வப் புனற்கெடில (6.07.6), பாரார் பரவும் (6.22.1), வேலைசேர் (6.23.7), திருமணியைத் (6.29.1), மண்ணிலங்கு (6.59.5), கார்மல்கு (6.82.5), உருத்திரனை (6.90.5), குராமலரோ (6.96.11); நக்கீரதேவ நாயனார் - மயலைத் தவிர்க்கநீ (11.10.25 & 35) கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி; பட்டினத்துப் பிள்ளையார் - மணியார் (11.30.57 & 58) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; நம்பியாண்டார் நம்பி - வையம் மகிழயாம் வாழ (11.34.34) திருத்தொண்டர் திருவந்தாதி, பதிகப் பெருவழி (11.35.2) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி; சேக்கிழார் - அங்கண் மா மலைமேல் (12.21.348) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், கூற்றுதைத்தார் (12.28.1027) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், வட மாதிரத்துப் பருப் பதம் (12.29.198) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், கங்கை நீர்த் துறை ஆடிக் (12.30.4) திருமூல நாயனார் புராணம், திருப்புன வாயில் பதியில் (12.37.119) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.
Specialities

ஜோதிர்லிங்கத் தலமான இத்தலத்தில் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியன்று மல்லிகார்ஜுனர் பிரம்மராம்பிகை கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. சிவராத்திரியன்று மகாமண்டபத்தின் சிகரத்திலிருந்து ஒரே ஒரு தேவாங்கர் நெசவாளியால் நெய்யப்பட்ட துணி சுற்றப்படுகிறது. இது சிவராத்திரிக்குப் பிறகு சிறுசிறு துணிகளாக வெட்டிப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
Contact Address