logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயில் ஜோதிர்லிங்கம்

Om symbol

இறைவர் திருப்பெயர்: மல்லிகார்ச்சுனர், ஸ்ரீசைலநாதர், சீபர்ப்பதநாதர்.

இறைவியார் திருப்பெயர்: பிரமராம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : அம்ருத குண்டம் (கிலபாவி) - கோயிலுக்குள் தென் பகுதியில் உள்ளது. மல்லிகார்ஜுனரின் அபிஷேகத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. மல்லிகா குண்டம் - கோயிலுக்குள் வடக்கே உள்ளது. மல்லிகார்ஜுன சுவாமியின் அபிஷேக தீர்த்தம் இதில் சேர்கிறது. இதில் நீராடுவோர் சர்வஞர் ஆவர் என்று தலபுராணம் கூறுகிறது. மனோஹர தீர்த்தம் - அம்ருதகுண்டத்திற்கு அருகில் உள்ளது. கங்கை போல் புனிதமானது. கண்ட பாவி - கோயிலின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. சங்கு தீர்த்தம் - கோயிலின் வடகிழக்குப் பகுதியில் அத்தி மரத்தடியில் அமைந்துள்ளது. சேதுது பாவி: கோயிலின் தென்பகுதியில் அமைந்துள்ளது. கபாலகுண்டம்: கோயிலுக்கு வடக்கே சாரங்கேஸ்வரர் கோயிலுக்கு அருகில். சூர்யகுண்டம்: கோயிலுக்குத் தெற்கே. காலஹ்ரதம்: ஸ்ரீசைல மலையில் வட பகுதியில். நீராடுவோர்க்கு அஸ்வமேத யாக பலன். தேவஹ்ரதம்: ஸ்ரீசைல மலையில் வட பகுதியில். மஹாபாரதத்தில் குறிக்கப்பட்டது. சரஸ்வதி தீர்த்தம்: ஸ்ரீசைல மலையின் வடபக்கத்தில் சரஸ்வதி நதியாக கிழக்கு நோக்கி ஓடுகிறது. கண்ட குண்டம்: சரஸ்வதியின் வடக்கே கண்டசித்தேஸ்வரர் கோயில் அருகே. சந்திர குண்டம்: கண்டா குண்டத்தின் வடக்கே சந்திரேஸ்வரர் கோயில் அருகே. தக்ஷிணாவர்த்த தீர்த்தம்: சரஸ்வதி, ஜான்ஹவி, பாதாளகங்கை நதிகளின் சங்கமம். சாருகேஸ்வரம்: வசுமதி தவம் செய்த தீர்த்தம். பாபவிநாசம்: சாருகேஸ்வரத்திற்கு மேற்கிலுள்ள தீர்த்தம். குப்த மஹேஸ்வரம்: மஹேஸ்வரகிரியில் மஹேஸ்வரர் ஆலயத்திரு அருகில் உள்ளது. முனிபுரம்: மஹேஸ்வர தீர்த்தத்திற்கு அருகில் உள்ள தீர்த்தம். குண்டலீ தீர்த்தம், பாவுக தீர்த்தம், சக்ர தீர்த்தம், பவ்ய தீர்த்தம், பஞ்சபாலவ தீர்த்தம், தாரா தீர்த்தம், யம கோண தீர்த்தம், ருத்ரபாத தீர்த்தம், பாதாள கங்கை, மந்தாகினி தீர்த்தம், போகவதி தீர்த்தம், கட்டி பாவி, ஹாடக குண்டம். கர்ம ஹரேஸ்வர தீர்த்தம், குபேர தீர்த்தம், கோடிலிங்க தீர்த்தம், கண்டிக குண்டம், நந்த தீர்த்தம், பஞ்சதாரா தீர்த்தம், ப்ரஹ்ம தீர்த்தம், லவுக தீர்த்தம், வராஹ தீர்த்தம், சிவ தீர்த்தம், சிகரேஸ்வர தீர்த்தம், சாரங்க தீர்த்தம், ஸந்த்யாதீர்த்தம், கன்யகாகுண்டம், நீலஹ்ரதம், சமாதி தீர்த்தம், கணேஸ்வர தீர்த்தம்,

வழிபட்டோர்:முருகன், சிலாதர், நந்தி, பர்வதன், மன்மதன், அகத்தியர், லோபாமுத்திரை, வசிஷ்டர், கர்கர், துர்வாசர், வியாசர், நாரதர், இராமர், பாண்டவர், ஹிரண்யகசிபு, இராவணன், சம்பந்தர், அப்பர், சுந்தரர், நக்கீரதேவ நாயனார்,பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், சங்கர பகவத்பாதர், ரேணுகாச்சார்யார், அக்க மஹாதேவி, ஹேமரெட்டி மல்லம்மா எனப் பலர்.

Loading map...

Sthala Puranam

  • Shilada muni and his sons Nandi and Parvata worshiping Shivaஸ்ரீபர்வதம், ஸ்ரீகிரி, சகோர சேதகிரி, ருத்ரபர்வதம், சேஷாசலம் போன்ற பெயர்கள் பல உடையது. மக்கள் வழக்கில் தற்போது "ஸ்ரீசைலம்" என்று வழங்குகிறது.
  •  சிலாத முனிவருக்கு மூன்று குமாரர்கள். அவர்களுள் முதலாமவரான நந்தியும், இரண்டாமவரான பர்வதரும் பெரும் சிவபக்தர்கள். நந்தி பெரும் தவம் செய்து சிவபெருமான் திருமுன்னர் எப்போதும் இருக்கவும் அவரது வாகனமாகவும்  பேறு பெற்றார். மஹாநந்தி முதலாக இங்குள்ள  நந்திமண்டலம் நந்தி பெருந்தவத்தைக் குறிப்பது. இரண்டாவது மகனான பர்வதன் செய்த பெருந்தவத்திற்கு மகிழ்ந்து சிவபெருமான் அவர் வேண்டும் வரங்களைக் கொடுக்க வந்தார். பர்வதன் அவரை வணங்கி அவர்தம் திருவருள் பெற்றதே பெரும் பேறு என்று தன்னை ஒரு மலையாக மாற்றி முப்பத்து முக்கோடி தேவர்களும் புண்ணிய தீர்த்தங்களும் அம்மலையில் குடி கொள்ளவேண்டும் என்றும் அதன் சிகரமாக சிவபெருமான் எழுந்தருளவேண்டும் என்றும் அங்கு சிவபெருமானை வழிபடுபவர்கள் எல்லோரும் எந்தவிதப் பாகுபாடும் இன்றி மோக்ஷம் பெறவேண்டும் என்றும் விண்ணப்பித்தார். சிவபெருமானும் அவ்வருளை நல்கிப் பர்வதத்தின் மீது அங்கு எழுந்தருளினார். (சிலாத முனிவர் தவஞ்செய்த தலமாதலின் இஃது ஸ்ரீசைலம் எனப்படுகிறது.) 
  • முற்காலம் இது மந்தர பர்வதம் எனப்பட்டது. வசுமதி என்ற பெண் இங்கு பெரும் தவம் செய்ய, பிரம்மா வசுமதியை "ஸ்ரீ"தேவதை ஆக்கினார். ஸ்ரீ தவம் செய்த தலமாதலால் இது ஸ்ரீபர்வதம் எனப்பெயர் பெற்றது. 
  • (ஸ்ரீபர்வதம் தமிழில் திருப்பருப்பதம் எனப்படுகிறது.)
  • Chandravati worshiping Srisaila Swami with Jasmine flowers ஒருமுறை, சந்திராவதி என்ற இளவரசி, தவம் மற்றும் தியானம் செய்யக் காட்டிற்குச் செல்ல முடிவு செய்தாள். இதற்காக கதலி வனத்தைத் தேர்ந்தெடுத்தாள். ஒரு நாள், அவள் ஒரு அதிசயத்தைக் கண்டாள். ஒரு கபில பசு பில்வ மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தது, அதன் நான்கு மடிகளிலிருந்தும் பால் வடிந்து, தரையில் மூழ்கியது. மாடு இதை அன்றாடம் ஒரு வழக்கமான வேலையாக செய்து வந்தது. சந்திரவதி அந்தப் பகுதியை தோண்டி எடுத்து பார்த்ததில் அதிசயித்தாள். அங்கு ஸ்வயம்பு சிவலிங்கம் இருந்தது. அது சூரியக் கதிர்களைப் போல பிரகாசமாக இருந்தது, மேலும் அது எரிவது போல் இருந்தது, எல்லா திசைகளிலும் தீப்பிழம்புகளை வீசியது. சந்திராவதி இந்த ஜோதிர்லிங்கத்தில் மல்லிகை மலர்களால் சிவபெருமானைப் பூஜித்தாள். அவள் அங்கே ஒரு பெரிய சிவாலயத்தைக் கட்டினாள். அவள் மீது சங்கரர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். சந்திராவதி காற்றில் கைலாசத்திற்குச் சென்றாள். முக்தியையும் பெற்றாள். கோயிலின் கல்வெட்டு ஒன்றில், சந்திராவதியின் கதை செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
  • மல்லிகையும் அர்ஜுனமும் (மருத மரமும்) இங்கு தலமரமாக இறைவனோடு இருப்பதால் மல்லிகார்ஜுனம் என்று பெயர்பெற்றது. 
  • கரவீரன் தவம் செய்து சிவபெருமானுக்குத் தன்னையே தந்து அருச்சனையில் பயன்படவேண்டும் என்று வேண்டியதால் கரவீரம் (அரளி) என்ற சிவபெருமானுக்கு உகந்த புஷ்பமாக மாறிய தலம்.
  • கிருதயுகத்தில் இரணியனும், திரேதாயுகத்தில் இராமனும், துவாபரயுகத்தில் பஞ்ச பாண்டவர்களும், கலியுகத்தில் திருநாவுக்கரசர், ஆதி சங்கரர், ரேவணர் போன்றோர் வழிபட்ட தலம்.
  • சிவபக்தையான அக்கமஹா தேவியை கௌசிகன் என்ற ஜைன அரசன் மணக்க விரும்பியபோது, அதற்கு சம்மதிக்காத அக்கமஹா தேவி, அரசனை வீர சைவன் ஆக்குவேன் எனக் கூறிவிட்டு, அவனைச் சந்திக்கச் சென்றாள் . அரசனின் தவறான  செய்கையால் மனம் நொந்து, தவத்தை மேற்கொண்டு இறைவனது கழலடிகளை அடைந்தாள். தன்னுடைய ஒவ்வொரு பாடல்களிலும் சென்ன மல்லிகார்ஜுன ஸ்வாமியைப் வணங்கிப் பாடியுள்ளார். ஸ்ரீ சைல ஆலய வளாகத்தில் அக்க மகா தேவியின் திருவுருவச் சிலை பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.
  • Siddhappa and his service to Mallikarjuna Swamiமகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சோலாப்பூரில் 12 ம் நூற்றாண்டில் முத்தன்ன கெளட -  சுகுலா தேவி என்ற வயோதிக தம்பதியர் வசித்து வந்தனர். பிள்ளை இல்லாத அவர்களுக்குக் குலகுருவான ரேவண சித்தர்  ஒரு நாரத்தம் பழத்தைக் கொடுத்து, சிவ பூஜை செய்து வருமாறு ஆசி வழங்கினார். அப்படியே  செய்த அத்தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான். சித்தர் அருளால் பிறந்ததால் அக்குழந்தைக்கு ஸித்தப்பா  எனப் பெயரிட்டனர். அச் சிறுவனுக்கு ஆறு வயதான போது ஒரு வயோதிகர் அவன் முன் தோன்றித்  தன் பெயர்  மல்லையா என்றும் தான்  மிகவும் பசியோடு இருப்பதாகவும் கூறவே, ஸித்தப்பா  ஓடோடிச் சென்று அவரது பசி தீர்க்க வேண்டி உணவும் பாயசமும் கொண்டு வந்தான். ஆனால் அங்கு வயோதிகர் காணப்படவில்லை. அவரது பெயரைக் கூவிக் கொண்டு ஸ்ரீ சைலம் செல்லும்  பக்தர்களோடு உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஸ்ரீ சைலத்தை அடைந்தான். மல்லையா என்பவரைப் பார்த்தீர்களா என்று பக்தர்களைக் கேட்டபோது, அதற்கு அவர்கள் மல்லிகார்ஜுன லிங்கத்தைக் காட்டி, " இவரே மல்லையா " என்றனர். சிறுவனானபடியால் அதனை நம்பாமல் தேடுவதைத் தொடர்ந்தபோது ஓரிடத்தில் கையிலிருந்த பாயசத்துடன் ஒரு பள்ளத்தில் தவறிப்போய் விழும் தருவாயில் சுவாமி அவன் முன் தோன்றி அவனைக் காப்பாற்றினார். இன்று அப்பள்ளம் , ஸித்தராமப்பா குளம் எனப்படுகிறது.  பின்னர் தனது ஊரை அடைந்த ஸித்தராமப்பா , அங்கு ஓர் சிவாலயத்தைக் கட்டினான். அதில் வேலை செய்தவர்களுக்குக் குளத்து மண்ணைக் கூலியாகக் கொடுத்தான். அது தங்கத் துகளாக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் , தான் வெட்டிய குளத்திலேயே ஜீவசமாதி அடைந்தான். பிற்காலத்தில் அங்கு ஸித்தராமேஸ்வரர்  ஆலயம் எழுப்பப்பட்டது. 
  • Hemareddy Mallammas stubborn devotion to Mallannaஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ராமாபுரம் என்ற ஊரில் 14 ம் நூற்றாண்டில் வசித்து வந்த  நாகி ரெட்டி- கௌரம்மாள்  இருவரும் பிள்ளை வரம் வேண்டி ஸ்ரீ சைலம் வந்தனர். இறைவனருளால் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது.  அக்குழந்தை மல்லம்மா என்று அழைக்கப்பட்டாள். வயது வந்தவுடன் அவளை ,அருகிலுள்ள சித்தாபுரத்தைச் சேர்ந்த பரமா ரெட்டி என்பவனுக்கு மணம் செய்து வைத்தனர். புகுந்த வீட்டுக்கு மல்லம்மா வந்தவுடன் அங்கு பசுக்களும் விளைச்சலும் பல மடங்கு அதிகரித்தன. ஏழைகளுக்கு மல்லம்மா உதவி செய்து வந்தாள் . இதைக் கண்டு பொறாமை  கொண்ட உற்றார் உறவினர்கள், அவளது கணவனிடம் சென்று   வீண் பழி சுமத்தி அவனைக் கோபமுறச் செய்தார்கள். அதை உண்மை என நம்பிய கணவனும், மல்லம்மாவைக் கொன்று விட நினைத்து அவளிடம் சென்றான். ஆனால் அவளோ மெய் மறந்து சிவபூஜை செய்து கொண்டிருப்பதைக் கண்டு தனது செயலுக்கு வருந்தினான். மல்லம்மாவும், தவறு செய்த அனைவரையும் மன்னித்து, அனைவருக்கும் சிவ மகிமையைப் போதித்து, கடைசியில் பெருமானுடன் ஐக்கியம் ஆனாள்.  ஸ்ரீ சைல ஆலயத்தில் பின் பிராகாரத்தில் மல்லமாவின் பசுத் தொழுவம் இருக்கிறது. அருகில் மல்லம்மாவின் விக்கிரகமும் இருக்கிறது. 
  • ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கேசப்பா என்ற குயவன் மண்பாண்டங்கள் விற்று அந்த வருமானத்தில் சிவ பக்தர்களுக்கு அன்னம்  பாலித்து வந்தான். அதனைக் கண்டவர்கள் அவனது மண்பாண்டங்களையும் சக்கரத்தையும் உடைத்து விடவே, சிவராத்திரிக்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதம் உணவு அளிப்பேன் என்ற ஆழ்ந்த கவலையோடு இருந்தான். அப்போது அவனது வீட்டுப் பரணில் சுவாமி தங்கலிங்க மயமாகப் ப்ரத்யக்ஷமாகி, "அஞ்சாதே, உனது வீட்டில் குறைவில்லாமல் எப்போதும் உணவு அளித்து வருவாயாக "  என்று அருளினார்.  வீட்டிற்குள் சென்ற கேசப்பா, பாத்திரங்கள் நிறையப் பல உணவு வகைகளைக் கண்டு, திருவருளை வியந்தவனாக, அடியார்களுக்கு அன்னம் பாலித்தான். அவ்வாறு பெருமான் அவனுக்குக் காட்சி அளித்த இடம், அடிகேச்வரம்  எனப்படுகிறது. (அடிக என்றால் பானை) 
  • பறவை ஒன்று ஒரு பாம்பைக் கவ்விக்கொண்டு செல்லும்போது பாம்பின் வாயிலிருந்த இரண்டு பூச்சிகள் கர்மஹரேஸ்வர தீர்த்தத்தில் விழுந்தன. அத்தீர்த்ததில் மூழ்கிய புண்ணிய பலனால் அவை பல்லாஹ அரசின் அரசன் அரசி ஆயின. அவர்கள் இருவரும் முற்பிறவியின் நன்றியறிதலுடன் ஸ்ரீகிரி மல்லிகார்ஜுன ஸ்வாமிக்கு வழிபாடு செய்து திருக்கோயில் மடப்பள்ளி அருகே மண்டபமும் அடியார்கள் தங்கி அமுதுண்ண மடமும் அமைத்து தம்முடைய செல்வத்தை மல்லிகார்ஜுன ஸ்வாமியின் சேவைக்கு அள்ளி வழங்கினார்கள். பின்னர் கர்மஹரேஸ்வர தீர்த்தத்தில் முழுமை அடைந்தவர்களாக மூழ்கினார்கள்; மோக்ஷமும் பெற்றார்கள்.
  • Uppili Basavanna Nandi at Srisailamஸ்ரீசைலத்தைச் சேர்ந்த உமாமகேசுவரத்தில் இருந்த சிற்பி இரு நந்தி சிலைகளைச் செய்தான். அவற்றை கிருஷ்ணா நதியைத் தாண்டி எவ்வாறு ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு செல்வது என்று கவலையில் ஆழ்ந்தான். அவனது கனவில் தோன்றிய இறைவன், ஒரு கயிற்றைக் கொடுத்து, அதைக் கொண்டு நந்திகளைத் திரும்பிப் பார்க்காமல் இழுத்துச் செல்லும்படி கட்டளை இட்டார். துயில் நீங்கிக் கயிற்றைக் கண்ட சிற்பி, அதைக் கொண்டு இரு நந்திகளையும் பிணைத்து இழுத்து வரும்போது, ஒரு நந்தி  பாறைகளிடையே சிக்கவே, திரும்பிப் பார்த்தான். அதனால் அந்த நந்தி அங்கேயே நின்று விட்டது. மற்றொரு நந்தியை மட்டுமே ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு வந்தான் என்று  சொல்வார்கள். ஆற்றின் நடுவில் உப்பிலி பசவண்ணா என்று பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து வந்த நந்தி இப்போது ஸ்ரீ சைலம்  அணைக்கட்டில் ஆழத்தில் மூழ்கி இருக்கிறது.
  • சத்ரபதி சிவாஜி ஹிந்து ஸ்வராஜ்யத்தை ஒன்றிணைக்கத் தெற்கு நோக்கிப் படையெடுத்து வரும்போது ஸ்ரீசைல நாதரிடம் தன்னிலை மறந்து 10 நாட்கள் தியானத்தில் ஈடுபட்டார். அப்போது பிரமராம்பிகை அவர் கனவில் தோன்றி அவர் செய்யவேண்டிய கடமையை நினைவூட்டி திவ்விய வாளை அருளினார். அதன் நினைவாக இக்கோயிலின் வடக்கு கோபுரத்தையும் தியான மந்திரத்தையும் கட்டினார். தொடர்ந்து அந்த திவ்விய வாளுடன் வெற்றிகள் பல பெற்று ஹிந்து சாம்ராஜ்யத்தின் சத்ரபதியாக விளங்கினார்.
  • Chatrapati Shivaji Maharaj getting sword from Ma Bhavani and renovating Srisailamஸ்கந்த புராணம் (ஸ்ரீசைல கண்டம்), பத்மபுராணம், வாயுபுராணம், பிரம்மாண்ட புராணம், மார்க்கண்டேய புராணம், மத்ஸ்யபுராணம், அக்னிபுராணம், விஷ்ணுபுராணம், சிவபுராணத்தில் கோடிருத்ர சம்ஹிதை  ஆதித்ய புராண சூத ஸம்ஹிதை, பாகவத பத்தாம் ஸ்கந்தம், ரச ரத்னாகர ரசாயன காண்டம், போன்றவை ஸ்ரீசைலத்தின் பெருமையைப் பேசுகின்றன.
  • மஹாபாரதத்தில் (வன பர்வம்) ஸ்ரீசைலம் புகழப்பட்டுள்ளது.
  • பாணபட்டரின் காதம்பரி, ஹர்ஷசரித்திரம், ஹர்ஷவர்தனின் "ரத்னாவளி", பவபூதியின் "மாலதிமாதவ", வசுபந்துவின் "வசவதத்தா"  கல்ஹனரின் ராஜதரங்கினி, சங்கராச்சார்யார் (சிவானந்தலஹரி) போன்ற வடமொழி இலக்கியங்களில் ஸ்ரீசைலம் வர்ணிக்கப்பட்டுள்ளது.
  •  அக்க மஹாதேவி, அல்லமபிரபு, ஸ்ரீநாத, பல்குர்கி சோமண்ணா (பண்டிதாராத்ய சரித்ரம்), மல்லிகார்ஜுன பண்டிதாராத்யா, பிடபர்த்தி சோமநாத (பிரபு லிங்க லீலாலு), நகலுடி சேஷயாசார்ய (ஸ்ரீபர்வத புராணம்), சென்னம்மலு (மல்லிகார்ஜுன சீஷ பத்யாலு, பண்டிதாராத்யா சரித்ராவில் பர்வத ப்ரகரண), ரங்கநாத (ஸ்ரீகிரிநாத விக்ரமமு, சிவபக்த தீபிகா, நமசிவாய), ஸ்ரீகிரி (சிவராத்ரி மஹாத்ம்யம்), அக்கண்ணா (சிவராத்ரி மஹாத்ம்யம்), அட்லூரி பாப்பையாமத்ய (ஸ்ரீசைல கண்டம்), சோமேஸ்வரரின் கதா சரித்ர சாகரம்,  சாளுக்கிய சோமேஸ்வரனின் விக்ரமங்காப்யுதய,நித்யநாதரின் ரசரத்னாகரம், கௌரனரின் நவநாத சரித்திரம், ஸ்ரீகிரி கவியின் நவநாத சம்பு, தொணயமாத்யரின் ஸஸ்யானந்தம், ஸ்ரீநாத கவி, சேஷனாராத்யரின் ஸ்ரீபர்வதபுராணம், சக்ரபாணி ரங்கநாதரின் ஸ்ரீகிரிநாத விக்ரம, ஸ்ரீகிரிகவி இயற்றிய சதகம், தெனாலி ஸ்ரீகிரிகவியின் தெலுங்கு ஸ்ரீஷைல கண்ட, சர்பபூஷண சிவயோகியின் கைவல்ய கல்பவல்லரி, லக்கண்ண தண்டேசரின் சிவத்துவ சிந்தாமணி, ஹேமரெட்டியின் மல்லம்ம புராண,  போன்ற கவிகள் இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். பண்டிதாராத்யா இத்தலத்தின் மேல் மல்லிகார்ஜுன சதகம் பாடியுள்ளார். தெலுங்கு மொழியில் முதல் சதகம் இது.
  • சம்பந்தரும், சுந்தரரும் திருக்காளத்தியை வணங்கிய பின்னர், அங்கிருந்தே வடக்கு நோக்கித்தொழுது பாடிப் பரவினர். அப்பர் பெருமான் தம்முடைய கயிலையாத்திரையில் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டுப் பாடியுள்ளார். சம்பந்தர், அப்பர் திருப்பதிகங்களில் இத்தலம் "திருப்பருப்பதம்" என்றும், சுந்தரர் திருப்பதிகத்தில் "சீபர்ப்பதம்" என்றும் குறிக்கப்படுகிறது.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :   சம்பந்தர்      - 1. சுடுமணி யுமிழ்நாகஞ் (1.118);                     அப்பர்       - 1. கன்றினார் புரங்கள் (4.58);                    சுந்தரர்       - 1. மானும்மரை இனமும்மயில் (7.79); பாடல்கள்     :  சம்பந்தர்       -        மலையினார் பருப்பதந் (1.76.1),                                           அண்ணாமலை (2.39.2),                                            பரிய மாசுணங் (2.95.6);                    அப்பர்        -        போகமார் (4.66.8),                                           பொருப்பனை (5.17.9),                                           நெருப்பி னாற் (5.30.7),                                           தெய்வப் புனற்கெடில (6.07.6),                                           பாரார் பரவும் (6.22.1),                                           வேலைசேர் (6.23.7),                                           திருமணியைத் (6.29.1),                                           மண்ணிலங்கு (6.59.5),                                           கார்மல்கு (6.82.5),                                           உருத்திரனை (6.90.5),                                           குராமலரோ (6.96.11);          நக்கீரதேவ நாயனார்   -        மயலைத் தவிர்க்கநீ (11.10.25 & 35) கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி;     பட்டினத்துப் பிள்ளையார்   -        மணியார் (11.30.57 & 58) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;        நம்பியாண்டார் நம்பி    -        வையம் மகிழயாம் வாழ (11.34.34) திருத்தொண்டர் திருவந்தாதி,                                           பதிகப் பெருவழி (11.35.2) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி;             சேக்கிழார்           -        அங்கண் மா மலைமேல் (12.21.348) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                            கூற்றுதைத்தார் (12.28.1027) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                            வட மாதிரத்துப் பருப் பதம் (12.29.198) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,                                            கங்கை நீர்த் துறை ஆடிக் (12.30.4) திருமூல நாயனார் புராணம்,                                            திருப்புன வாயில் பதியில் (12.37.119) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.

Specialities

  • வட நாட்டுப் பாடல் பெற்றத் தலங்களில் இது முதலாவது தலமாகும்.
  • பன்னிரண்டு "ஜோதிர்லிங்கங்களுள்" இத்தலமும் ஒன்று. பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களாவன 1. "சோமநாதம்" - குஜராத்திலும், 2. வைத்தியநாதம், 3. பீமசங்கரம், 4. நாகேசம், 5. த்ரயம்பகம், 6. குஸ்மேசம் முறையே - மகாராஷ்டிரத்திலும், 7. ஸ்ரீசைலம் - ஆந்திராவிலும், 8. ஓங்காரம், 9. உஜ்ஜையினி முறையே - மத்தியப் பிரதேசத்திலும், 10, விச்வேசம் (வாரணாசி), 11. கேதாரம் முறையே - உத்திரப் பிரதேசத்திலும், 12. இராமேசுவரம் - தமிழ்நாட்டிலும் உள்ளன.
  • குருக்ஷேத்திரத்தில்  தானங்கள் செய்தல் , கங்கையில் நீராடுதல் , நர்மதைக் கரையில் வாசம் செய்தல் காசியில் வசித்தல் ஆகிவற்றால் ஏற்படும்  பலன்களைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிக பலனை ஸ்ரீ சைல மல்லிகார்ஜுன ஜோதிர் லிங்கத்தைத் தரிசிப்பதால் பெறலாம் என்று ஸ்காந்த மகா புராணம் கூறுகிறது. ஸ்ரீ சைல சிகரத்தைக் கண்டால் மறு பிறவி இல்லை என்று சொல்லப்படும்.
  • ஆந்திரம் த்ரிலிங்க தேசம் எனப்பட்டது. த்ரிலிங்க தேசத்தில் பேசும் மொழியே தெலுங்கு எனப்பட்டது. இவ்வாறு மிகவும் போற்றப்படும் த்ரிலிங்கங்களாவன - ஸ்ரீசைலம், காலேஸ்வரம் மற்றும் த்ராக்ஷாராமம் ஆகும்.
  • பாசுபதர், காளாமுகர், வேதாந்திகள், வீரசைவர் எனப் பல்வேறு சித்தாந்தவர்களாலும் மடங்கள் அமைத்து வழிபடப்பட்ட உயர் ஞானப்பதி ஸ்ரீசைலம்.
  • அர்ஜுன (மருத) விருக்ஷத்தைக் கொண்ட சிறப்பான பழமையான தலங்கள் மூன்று. அவையாவன, மல்லிகார்ஜுனம்,புடார்ஜுனம் மற்றும் மத்யார்ஜுனம் என்பதாம். இதில் மல்லிகார்ஜுனம் என்பது ஸ்ரீ சைலத்தையும், புடார்ஜுனம் என்பது திருநெல்வேலிக்கு அருகிலுள்ள திருப்புடை மருதூரையும் மத்யார்ஜுனம் என்பது கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூரையும் குறிக்கும்.
  • சிவபெருமான் மல்லிகையாகவும் (மல்லிகார்ஜுனர்) அம்பிகையை மல்லிகையைச் சுற்றி வரும் தேனீயாகவும் கூறுவர் (பிரமராம்பிகை பிரமரம் என்றால் தேனீ). இக்கோயிலில் எப்போதும் தேன் கூடுகள் இருக்கின்றன. 
  • இது நல்லமலைக் காட்டுப் பகுதியில் கிருஷ்ணவேணி நதிக்கரையில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது. கிருஷ்ணவேணி நதி கிழக்கு, வடக்கு, மேற்கு ஆகிய திசைகளில் ஸ்ரீசைலத்தைச் சூழ்ந்து வலமாகச் செல்கிறது.
  • காலப்போக்கில் அழிந்தவை போக , ஐந்து மடங்கள் ஸ்ரீசைல ஆலயத்திற்குத்  தென்மேற்கில் சுமார் 2 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றன. அவையாவன: மிகப் பழமையான கண்டா மடம். இங்கு கண்டா சித்தேசுவரர் சன்னதியும், வற்றாத கண்டா கர்ண தீர்த்தமும் உள்ளன. அருகில் பீமசங்கரர் மடம், வீர பத்திரர் ஆலயம் ஆகியன உள்ளன. மேலும் விபூதி மடம் , ருத்ராக்ஷ மடம் ,சாரங்கேசுவர முனிவர் வாழ்ந்த சாரங்க தாரா மடம், பிக்ஷாவ்ருத்தி மடம் ஆகியவை உள்ளன.
  • சக்தி பீடத்தில் இத்தலம் பிரமராம்பாள் பீடமாகப் போற்றப்படுகிறது.
  • தேவார திருமுறைப் பதிகங்களைப் பெற்றுள்ள மூன்று ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. ஏனைய இரண்டும் இராமேசுவரம் மற்றும் திருக்கேதாரம் ஆகும்.
  • வீரசைவர்களுக்கு இது மிக முக்கியமான தலமாகும். ஷட் ஸ்தானங்கள் என்ற முக்கிய ஆறு கோயில்களில் ஸ்ரீசைலமும் ஒன்று.
  • அத்தி, ஆல் மற்றும் அரச மரங்களின் சேர்க்கையே தலமரம். தத்தாத்ரேயர் இம்மரத்தினடியில் தவஞ்செய்ததால் இஃது தத்தாத்ரேய விருக்ஷம் என்றும் சொல்லப்படுகிறது. இம்மரம் விருத்த மல்லிகார்ஜுனர் கோயிலில் உள்ளது. [இங்கு கரவீரம் என்னும் பழமையான மரமும் உள்ளது.]
  • கோயில் அமைந்துள்ள இம்மலையடிவாரத்தில் கிருஷ்ணா நதி ஓடுகிறது; இந்நதியைப் பாதாள கங்கை என்று கூறுகின்றனர்.
  • இக்கோயிலில் பாண்டவர்கள் கட்டியதாக சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் மேற்குப் பிரகாரத்தில் உள்ளன.
  • நவபிரம்ம சந்நிதி: இங்கு அஷ்டமூர்த்தியாக (நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர்) எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு வேதம் சொன்ன எட்டுத் திருநாமங்களுடன் (பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்கிரன், பீமன், மஹாதேவன்) சிவலிங்கத் திருமேனிகள் இருக்க மேலாக மோக்ஷ லிங்கம் அமைந்துள்ளது. இது காகதியர்கள் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம்.
  • திருக்கோயிலின் மதில்களில் புடைப்புச் சிற்பங்கள் நிறைந்துள்ளன. கீழிரண்டு வரிசைகளில் யானைவரி மற்றும் குதிரை வரி உள்ளது. மேலே உள்ள வரிசைகளில் புராணக் கதைகள், நாயன்மார்கள், தேவர்கள் காட்டப்பட்டுள்ளனர்.
  • இங்கு சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், அன்னபூரணி கோயில், பஞ்சநதீஸ்வரர் கோயில், பளிங்குக் கல்லாலான சண்முகர் ஆலயம் ஆகியன தரிசிக்கத்தக்கன.
  • இப்பகுதிப் பழங்குடியினர் மல்லிகார்ஜுன ஸ்வாமியைத் தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக "செஞ்சு மல்லய்யா" என்று அழைக்கின்றனர். 
  • இங்குள்ள மல்லிகா குண்டத்தில் முன்பு தெப்போற்சவம் நடைபெற்று வந்தது.
  • திரௌபதியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பஞ்சலிங்கேஸ்வரர் திருமேனி இப்போது திருக்கோயிலில் இல்லை.
  • ஜோதிர்லிங்கத் தலமான இத்தலத்தில் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியன்று மல்லிகார்ஜுனர் பிரம்மராம்பிகை கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. சிவராத்திரியன்று மகாமண்டபத்தின் சிகரத்திலிருந்து ஒரே ஒரு தேவாங்கர் நெசவாளியால் நெய்யப்பட்ட துணி  சுற்றப்படுகிறது. இது சிவராத்திரிக்குப் பிறகு சிறுசிறு துணிகளாக வெட்டிப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
  • கர்நாடகத்திலிருந்து பக்தர்கள் நந்திக் காவடி எடுத்து வருகின்றனர். 
  • சித்திரா பௌர்ணமியன்று மருக்கொழுந்தினால் வழிபாடு செய்கின்றனர். (தவன பூர்ணிமா). இந்நாளில் குங்கிலியமும் சிறப்பாக இடப்படுகிறது. இசுலாமிய அட்டூழியங்களின் போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செய்யப்படுகிறது.
  • சித்திரா பௌர்ணமிக்கு அடுத்து வரும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் கும்போத்சவம் (வசந்தோத்சவம்) கொண்டாடப்படுகிறது. அன்று பிரமராம்பிகை தேவிக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இரவில் மல்லிகார்ஜுன சுவாமிக்குத் தயிர்சாதம் நைவேத்யம் செய்யப்படுகிறது.
  • சப்த சப்தாஹம்: ஆவணி வளர்பிறை தசமியிலிருந்து 49 நாட்கள் அகண்ட சிவநாம சங்கீர்த்தனம் 49 நாட்களுக்கு நடத்தப்படுகிறது.
  • பங்குனி ஏகாதசியிலிருந்து 40 நாட்கள் மல்லிகார்ஜுன சுவாமிக்கு கோடி வில்வார்ச்சனையும், பிரமராம்பிகை அம்மனுக்குக் கோடி குங்குமார்ச்சனையும் நடத்தப்படுகிறது.
  • ஒவ்வொரு மத சிவராத்திரியன்று மல்லிகார்ஜுனருக்கு லக்ஷ வில்வார்ச்சனை நடக்கிறதுல் ஒவ்வொரு பௌர்ணமியும் அம்மனுக்கு லக்ஷ குங்குமார்ச்சனை நடக்கிறது.
  • ஒரு காலத்தில் ஸ்ரீ சைலம் வரை மலை ஏறி வர இயலாதவர்கள் ஸ்ரீ சைல பர்வதங்களிலேயே மிக உயரமான (  2830 அடிகள் ) சிகரேசுவரத்தைத்  தரிசித்தபடியே மல்லிகார்ஜுன சுவாமியைத் தியானிப்பார்கள்.  இங்கிருந்தபடியே, ராமபிரான் , மல்லிகார்ஜுனரைத் தரிசித்ததாகச் சொல்வர்.  8 கி.மீ  தொலைவிலுள்ள இச்சிகரத்தின் மேலுள்ள வீர சங்கர சுவாமிக்குப் பக்தர்கள் செக்கில் எள்ளை  ஆட்டி  அதனைப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து நந்தியின் கொம்புகளுக்கு இடையிலிருந்து மல்லிகார்ஜுன ஆலய சிகரத்தைத் தரிசிக்கிறார்கள்.
  • பாதாள கங்கையில் கலக்கும் பீமன்குள  ஊற்றுக்கு அருகில் பீமேசுவர சுவாமி ஆலயம் உள்ளது. பாதாள கங்கையிலிருந்து பரிசிலில் கிருஷ்ணா நதியில் சென்று அக்க மகா தேவி தவம் செய்த குகையை அடையலாம். அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இஷ்ட காமேசுவரி ஆலயத்தையும் பக்தர்கள் பிரார்த்தனைத் தலமாக வழிபடுகிறார்கள். பரிசிலில் அக்கரை  அடைந்தபின், தத்தாத்ரேயர்  தவம் செய்த கதலீ  வனத்தைக் காணலாம். தியானம் செய்வதற்கேற்ற அமைதியான இடம் இது.
  • ஹாடகேஸ்வரம், பில்ஹேஸ்வரம், சிகரேஸ்வரம், கர்ம ஹரேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களும் ஸ்ரீசைலத்தில் உள்ளன.
  • பரந்து விளங்கும் இந்த க்ஷேத்திரத்திற்குப் பிரகாசம் ஜில்லாவிலுள்ள திரிபுராந்தகம் , கிழக்கு வாயிலாகவும், கடப்பா ஜில்லாவிலுள்ள சித்த வடம் தெற்கு வாயிலாகவும், மெகபூப் நகர் ஜில்லாவிலுள்ள அலம்புரம் ,மேற்கு வாயிலாகவும், உமாமகேசுவரம் வடக்கு வாயிலாகவும் விளங்குகின்றன.
  • இதன் தென்கிழக்கில் புஷ்பகிரி க்ஷேத்திரமும், தென்மேற்கில் சோமசீல க்ஷேத்திரமும் , வடமேற்கில் சங்கமேசுவர க்ஷேத்திரமும், வட கிழக்கில் ஏலேச்வர க்ஷேத்திரமும் விளங்குகின்றன. 
  • விஜயவாடாவிலிருந்து ஸ்ரீ சைலம் வரும் வழியில் சுமார் 80 கி.மீ. தொலைவில் குமார கிரியில் திரிபுராந்தகேச்வரர் கோயில் உள்ளது. முற்காலத்தில் ஸ்ரீ சைலத்திற்குக் கால்நடையாகச் சென்ற பக்தர்கள் முதலில் இங்கு தரிசித்து விட்டுச் செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்த இடமாதலால் குமார கிரி எனப்பட்டது. திரிபுராதிகளை வென்ற பரமேசுவரன், திரிபுரசுந்தரியோடு இங்கு கோயில் கொண்டுள்ளார். ஸ்ரீ சைல காண்டத்தில் இத்தலத்தின் பெருமை பேசப்பட்டுள்ளது. இங்கு வடபுறம் உள்ள குன்றில் தாரகாசுரன் பூஜித்த சிவலிங்கம், தாமிர தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேற்புறக் குன்றில் விஷ்ணு பூஜித்த சிவலிங்கம், ஜானவி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இங்கிருந்து காசிக்கும்,ஸ்ரீ சைலத்திற்கும் சுரங்க வழி இருப்பதாகச் சொல்வர்.  கௌரீஸ்வரம், சோமேஸ்வரம், கேதாரேஸ்வரம், கட்கேஸ்வரம், பாபவிநாசநம், கபிலேஸ்வரம், உத்தரேஸ்வரம், விமுக்தேஸ்வரம், மல்லிகார்ஜுனம், கன்யாசித்தநாதம், ரச சித்தேஸ்வரம், இஷ்ட காமேஸ்வரம், சந்த்ரமௌலீஸ்வரம், இந்திரேஸ்வரம், தூர்ஜடீஸ்வரம், கெளரீஸ்வரம், கோடீஸ்வரம், கோபிலேஸ்வரம், மண்டூகேஸ்வரம், சகஸ்ர ராமேஸ்வரம், சங்கமேஸ்வரம், ஸ்கந்த சோமேஸ்வரம், பரசுராமேஸ்வரம், பிரமரேஸ்வரம் , மணிகர்ணேஸ்வரம், முக்தேஸ்வரம், துலா சித்தேஸ்வரம், ஸ்ரீகர்ணேஸ்வரம், தர்மேஸ்வரம், புஷ்கரேஸ்வரம், விபூதி நகரம், மந்த்ர தீர்த்தம், புஷ்கரணி, குண்டி பிரபா தீர்த்தம், கந்தவதி, புஷ்பவதி, நேத்ராவதி, சித்ராவதி, லிங்கவதி, அம்ருதேஸ்வரம், பிரதம மல்லிகார்ஜுனம், பிரமரேஸ்வரம், பாபவிநாசனம், சுரபேஸ்வரம், முக்தீஸ்வரம், தர்மேஸ்வரம், இந்த்ரேஸ்வரம், பிரம்மேஸ்வரம்,  கதேஸ்வரம், பீமேஸ்வரம், அதாஹகர்ணேஸ்வரம், கடிக சித்தநாதம், கமலேஸ்வரம், ஸ்ரீஸ்கந்தசோமேஸ்வரம், சாலங்கேஸ்வரம், விபீஷணேஸ்வரம், ராமேஸ்வரம், ராவணேஸ்வரம், சாலங்க மத்ஸ்யகேஸ்வரம் போன்ற தலங்கள் இங்கு உள்ளன.
  • ஸ்ரீ சைலத்தின் தென்வாயிலாகக் கூறப்படும் சித்தவடம் சுமார் 500 கி.மீ. பரப்பளவு உடையது. இறைவர் ஸ்பர்ஷ வேதீஸ்வரர். அகஸ்த்ய, அத்ரி, ப்ருகு, உத்தானபாத, மார்க்கண்டேய, வசிஷ்டாதி முனிவர்களும், ரசசித்த, நித்யநாத, ஜட பரதர் போன்ற சித்தர்களும் வாழ்ந்த இடம் இது ஸ்காந்தத்தில் ஸ்ரீ பர்வத காண்டத்தில் இங்கு அனேக வனங்களும், சிகரங்களும், நதிகளும், தீர்த்தங்களும், சிவ லிங்க மூர்த்திகளும் இருப்பது பற்றி விவரிக்கப்படுகிறது. இங்கு வாசம் செய்து, பினாகினி நதியில் நீராடி சித்தேசுவரரைத் தரிசித்தால் ஜீவன் முக்தி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. சித்தேசுவரர், பால சித்தேசுவரர், கண்டா சித்தேசுவரர், கன்யா சித்தேசுவரர், இஷ்ட சித்தேசுவரர், வியாம சித்தேசுவரர், பஸ்ம சித்தேசுவரர், பிக்ஷா சித்தேசுவரர், பில சித்தேசுவரர், புரா சித்தேசுவரர், ஜல சித்தேசுவரர், ஆகிய சித்தி தர வல்ல லிங்கங்களை இங்குக் காணலாம். காசிக்குச்  சமமான இங்கு வாசம் செய்வதாலும், உயிர்நீப்பதாலும் லிங்க ஸ்வரூபத்தை அடையலாம் என்று ஸ்காந்தம் விவரிக்கிறது. வட பெண்ணை நதிக்கரையில் உள்ள சித்தவடத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி பிரபலமானது. வருணேஸ்வரம், ராமேஸ்வரம், பிராணேஸ்வரம், கபிலேஸ்வரம், ஓம்காரேஸ்வரம், சங்கரேஸ்வரம், புஷ்பகிரி, தர்ம குலோத்த நந்தி, அஹோபிலம், பிருகுபத தீர்த்தம், குமுதவதி தீர்த்தம், காம்ய தீர்த்தம், சாகர தீர்த்தம், மட்வலங்க தீர்த்தம், நவ நந்தி தீர்த்தம், துர்வாச தீர்த்தம், ருத்ரகோடி தீர்த்தம் போன்ற தலங்கள் இங்குள்ளன.
  • கர்நூலிலிருந்து ஹைதராபாத் செல்லும் வழியிலுள்ள அலம்புரம் ரயிலடிக்கு9 கி.மீ. தொலைவில் யோகாம்பிகா சமேத பால ப்ரம்மேசுவரர் ஆலயம் உள்ளது. நவ பிரம்மாக்களின் சன்னதியோடு கூடிய இக் கோயிலில் யோகாம்பிகா தேவி சக்தி பீட நாயகியாகக் காக்ஷி  அளிக்கிறாள்.  பயங்கர வடிவுடன் காட்சி அளிக்கும் இத்தேவியைப் பக்தர்கள் நேராகத் தரிசனம் செய்யாமல் பக்க வாட்டில் இருந்தே தரிசிக்கிறார்கள். தக்ஷிண காசியாகச் சொல்லப்படும் இத்தலத்தில் ப்ரம்மேசுவரரே காசி விச்வநாதர்.; துங்க பத்திரையே கங்கை.  காசியைப் போலவே இங்கும் கணபதி, கால பைரவர் சன்னதிகளும் 64 படித்துறைகளும் உள்ளன.  மூலவர் ருத்ராக்ஷத்தால் ஆனவர். சிவலிங்கத்தின் மீது எத்தனை குடம் தண்ணீர் அபிஷேகித்தாலும் துளியும் வெளியே வருவதில்லை.
  • ஸ்ரீ சைலத்தின் வடக்கு வாயிலாகத் திகழும் உமாமகேசுவரம், ஹைதராபாத் செல்லும் வழியில் மன்னனூர் அல்லது ரங்காபுரத்திலிருந்து 3கி.மீ. தொலைவில் உள்ளது.மலை மீதும் அடிவாரத்திலும் இரு சிவாலயங்கள் உள்ளன. இங்குள்ள ருத்ர தாரகையில் நீராடி, சுவாமி தரிசனம் செய்பவர்களைப் பத்து தலைமுறையினர் வணங்குவார்கள். இங்கு செய்யும் தானங்களின் பலன் அளவிட முடியாதது. அந்திம காலத்தை இங்குக் கழிப்பவர்கள், ஈசுவரனோடு இரண்டறக் கலப்பர். குபேரனால் காக்கப்படும் இந்த ஸ்தலத்தை வழிபடுவதற்கு, ரிஷிகளும் சகல தேவதைகளும் மகா சிவராத்திரியன்று வருகிறார்கள் என்று புராணம் கூறும். இங்குள்ள மாமரத்தின் பழத்திலுள்ள வண்டினை நீக்கிவிட்டுப் பாலுடன் கலந்து 21நாட்கள் உண்டு வந்தால் தேகம் வஜ்ரம் போல் ஆகும் என்றும் இங்கிருந்து காத தூரத்திலுள்ள பத்மாவதி குகையிலுள்ள மிருதங்கத்தை வாசித்தால் அம்பிகை தோன்றி, அமிர்தம் வழங்கி தேவ பதவியை அளிப்பாள் என்று ரத்னாகரம் என்ற நூல் கூறுகிறது. இங்கு காலபைரவர், வீரபத்ரர், நடராஜர் மிக அழகான திருவுருவங்கள். இங்குள்ள ஏகாதச ஆலயங்கள்: சப்தமஹேஸ்வரம், ஜருடேஸ்வரம், ஸந்த்யாசமாதி, கருடேஸ்வரம், கலஹதேஸ்வரம், பாபவிநாசம், கணேஸ்வரம், தேவஹ்ரதேஸ்வரம், சித்தேஸ்வரம், நீலஹ்ரதம், நகம்பூ.
  • ஸ்ரீ சைலத்தின் தென்கிழக்கு வாசலான சோம சீலம் , நெல்லூர்-கடப்பா வழியில் வடபெண்ணை நதிக் கரையில் உள்ளது . ஸ்கந்தன் என்ற ரிஷி தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை சோம தீர்த்தக் கரையில் வைத்து விட்டு நீராடச் சென்றார். இதற்குள் சிவலிங்கமானது அவ்விடத்திலேயே பிரதிஷ்டை ஆகி விட்டது. அந்த ரிஷியின் பெயரால் சுவாமி ஸ்கந்த ஸோமேசுவரர் எனப்படுகிறார். கோயிலின் முன்பு ஓர் ஆலமரம் உள்ளது.
  • பிரசூனாசலம் எனப்படும் புஷ்பகிரி ஸ்ரீ சைலத்தின் தென்மேற்கு வாயிலாகக் கருதப்படுகிறது. இது கடப்பா ஜில்லாவில் பெண்ணை நதிக் கரையில் உள்ளது. ஒருசமயம் கருடன் இந்திரலோகத்திலிருந்து அமிர்த கலசத்தை எடுத்து வரும்போது அதிலிருந்து ஒரு துளி புஷ்பகிரியில் உள்ள தடாகத்தில் விழவே, அங்கிருந்த மக்கள் அதை அருந்தி, பிறப்பு இறப்பு இன்றி வாழ்ந்தனர். கடைசியில் ஹனுமான் ஒரு பாறையைக் கொண்டு அதனை மூடினான். அம்மலையோ பூவைப்போல அத் தடாகத்தில் மிதந்தது. மும்மூர்த்திகள் அதனை நிலை பெறச் செய்தனர். இங்கு சந்தான மல்லேசுவரர், உமாமஹேஸ்வரர், புஷ்பகிரீஸ்வரர், ஆதிகேசவர், லக்ஷ்மி, ஹனுமான் சன்னதிகள் உள்ளன.
  • கர்னூல் ஜில்லா நந்தி கொட்கூருக்கு 20  கி.மீ. தூரத்திலுள்ள சங்கமேசுவரம்,  ஸ்ரீ சைலத்தின் உப த்வாரமாக/ வட மேற்கு வாயிலாக  ஸ்ரீ சைல காண்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. கிருஷ்ணா, வேணி, துங்கா, பத்ரா, பீமரதி,  மால, பவநாசனி ஆகிய ஏழு நதிகளும் இங்கு சங்கமிக்கின்றன. கிரகண காலத்தில் ஏழு கடல்களும், சகல தீர்த்தங்களும் இங்கு சங்கமிக்கின்றன. இதுபோன்ற புண்ணிய காலங்களில் இந்த நிவர்த்திசங்கமத்தில்  நீராடினால் யாக பலன் கிட்டும். கல்மாஷபாதன்,விசுவாமித்திரர், சாண்டில்யர், கபிலர் ஆகிய ரிஷிகளும் இங்கு வந்து தவம் செய்துள்ளனர்.
  • வடக்கு வாயிலான ஏலேசுவரம், பல படை எடுப்புக்களுக்கு ஆளாகித் தற்போது நாகார்ஜுனசாகர் அணையில் மூழ்கியுள்ளது. அதனைத தற்காலத்தில்  புனர் நிர்மாணம் செய்துள்ளனர். இங்கு ஹரிஹரர், ஹாடகேஸ்வரர், நீலகண்டேஸ்வரர், ரச சித்தேஸ்வரர், ராமேஸ்வரம், உமாமஹேஸ்வரம், சங்கமேஸ்வரம், ஜரமேஸ்வரம், ஜாபாலேஸ்வரம், ஏலேஸ்வரம், சித்தி முக்தேஸ்வரம், கௌதமேஸ்வரம், மாதங்கேஸ்வரம் போன்ற சிவாலயங்கள் அங்கு சூழ்ந்துள்ளன.
  • இத்தலத்திற்கு அருகில் நந்திமலை, நந்தியால் உள்ளன. இம்மலைப்பகுதியை "பூகயிலாயம்" என்று புகழ்வர் வீரசைவர்கள். நந்திகளாவன - 1. பிரதம நந்தி, 2. நாக நந்தி, 3. விநாயக நந்தி, 4. கருட நந்தி, 5. சிவ நந்தி, 6. மகா நந்தி, 7. சூரிய நந்தி, 8. விஷ்ணு நந்தி, 9. சோம நந்தி என்பனவாகும். 
  • இம்மலையில் எட்டு சிகரங்களும், ஒன்பது நந்திகளும் உள்ளன. அவை முறையே, சிகரங்களாவன - 1. வைடூரிய சிகரம் (திரிபுராந்தகம்), 2. பரவாள சிகரம் (புஷ்பகிரி) , 3. ரெளப்ய சிகரம் (சோமேஸ்வரம்), 4. மாணிக்கச் சிகரம் (மஹேஸ்வரம்), 5. மரகத சிகரம் (அஹோபிலம்), 6. பிரம்ம சிகரம் (அனந்தபூர்), 7. ஹேம சிகரம், 8. வஜ்ர சிகரங்கள் (நந்தி மண்டலம்) ஆகும்; அவ்வாறே இங்கு 1. பிரமேஸ்வரம், 2. ஜனார்த்தனேஸ்வரம், 3. வருணேஸ்வரம், 4. ஹேமேஸ்வரம், 5. சப்தகோடீஸ்வரம், 6. மோக்ஷேஸ்வரம், 7. இந்திரேஸ்வரம், 8. அக்னேஸ்வரம், 9. குக்குடேஸ்வரம் என்று ஒன்பது கோயில்களும் உள்ளன.
  • 171 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன.
  • ஸ்ரீசைலம் மிகப் பழமையானதும் புகழ் வாய்ந்ததுமான சிவஸ்தலம் என்பதற்குப் புராண, இலக்கியங்கள் தவிர கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன. மௌரியப் பேரரரசன் அசோகனின் (கிமு 3ம் நூற்றாண்டு) எர்ரகுடி மற்றும் அமராவதிக் கல்வெட்டுகள் ஸ்ரீசைலத்தைக் குறிப்பிடுகின்றன.
  • கி.பி. 1 ம் நூற்றாண்டில் இத்தலம் சாத வாகனர்களால் சிரிதான  என்று வழங்கப்பட்டது. புலமாவி என்ற சாதவாகன மன்னனின் நாசிக் கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. சாதவாகனர்களின் தோழர்களான இக்ஷ்வாகுக்கள் இதனை ஸ்ரீ பர்வதம் என்று அழைத்தார்கள்.
  • ஸ்ரீசைலத்திலுள்ள கல்வெட்டுக்களால், அன்னதானத்திற்குக் கட்டளைகள் அமைத்தது, கோயிலில் திருப்பணிகள் செய்தது, தீர்த்தக்குளம் வெட்டியது, கோயில் பணியாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது முதலான பல செய்திகளை அறிய முடிகிறது.
  • இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் விஜயநகர மன்னர்கள், சாளுவ காகதீய மன்னர்கள் காலத்தியவை என்று சொல்லப்படுகிறது.
  • நான்காம் நூற்றாண்டில் சிம்ம வர்ம பல்லவன் இப்பகுதியைத் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டான். த்ரிலோசனபல்லவன் என்பவன் ஸ்ரீ சைலக் காட்டின் ஒரு பகுதியைப் புனரமைத்து அந்தணர்களை அங்கு இருத்தினான். இப்பணியைப் பின்னர் பல்லவர்களை வென்ற சோழர்கள் செய்து முடித்தார்கள். 
  • நான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த விஷ்ணுகுண்டியர்கள் இப்பகுதியை ஆண்டனர். அப்போது ஸ்ரீ சைல ஆலயம் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது. 
  • பின்னர்  கடம்பர்கள் இதனைச்  சிறிது காலம் ஆண்டனர்.  ஆறாம் நூற்றாண்டில் கரிகால் சோழனின் சந்ததியினர் கடப்பா, கர்னூல் பகுதிகளை ஆண்டனர். பின்னர் கி.பி. 973 வரை ராஷ்ட்ரகூடர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். மீண்டும் சாளுக்கியர்களது ஆட்சி மலர்ந்தபோது, சோழர்கள்  அவர்களை வென்றனர். 
  • கி.பி 980-1058 காலகட்டத்தில், கல்யாண சாளுக்கியராஜா, த்ரயலோகமல்ல தேவர், சிவபுரம் மற்றும் ஜூடூரு கிராமங்களை இங்குள்ள குருகுலம் நடத்துவதற்காகவும், கோயிலின் மேற்கு வாயிலிலுள்ள ஆதி பைரவர் வழிபாட்டிற்காகவும் கொடுத்தார். கர்பகிருஹ விமானத்தைக் கட்டினார். 
  • சாளுக்கிய மன்னர் புவனைகமல்லர் (1069) ஸ்ரீசைலத்திலுள்ள சத்திரங்களின் பராமரிப்புக்காக சுரேஸ்வரபண்டிதருக்கு ஒரு கிராமம் சர்வமான்யமாக வழங்கப்பட்டது. அரசி மைலாலதேவியும் தன் ஸ்ரீசைல தரிசனத்தின்போது சுரேஸ்வர பண்டிதருக்கு தானங்கள் வழங்கினாள்.
  • காகதீயபேடரச 1090 ல் ஒரு கிராமத்தை காளாமுக ஆச்சார்யரான ராமேஸ்வர பண்டிதருக்கு தானமாக வழங்கினான்.
  • தெலுங்குச் சோழ அரசன் போதனஹெக்கட தன் சகோதரன் நலம்பெறவேண்டி மல்லிகார்ஜுன ஸ்வாமிக்கும் ஸ்ரீசைலத்தின் நான்கு வாயில்களான திரிபுராந்தகம், சித்தேஸ்வரம், ஆலம்பூர், மகேஸ்வரம் ஆகிய தலங்களுக்கும் அகண்ட தீபம் அமைத்தும், இத்திருக்கோயில்களுக்கான பாதையைச் சீர் செய்தும் தொண்டு செய்தான்.
  • வீரராஜேந்திர சோழனின் தந்தை இரண்டாம் கொங்கா 1169 ல் ஸ்ரீசைல விமானத்திற்குப் பொற்கலசம் செய்தார்.
  • 12 ம் நூற்றாண்டில் ஸ்ரீசைலம் காகதீயர்களின் வசமாயிற்று.  பிரதாப ருத்ரன் என்பவர் தன்  மனைவியோடு இங்கு வந்து மல்லிகார்ஜுனருக்குத்  துலாபாரம் தந்ததாக வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
  • பாதாள கங்கைக்கு இரண்டாம் ஹரிஹரனின் மனைவியான விட்டலம்பா படிக்கட்டு கட்டினாள். விட்டலேசுவரருக்கு ஒரு உருவச்சிலை வழங்கினாள். இந்தத் தருமங்களைச் செய்ய இறைவன் அவளுக்குக் கனவில்வந்து அருளியதாகக் குறிப்பிடுகிறாள்.
  • விஜயநகரப் பேரரசு இப்பகுதியை வசமாக்கிக் கொண்ட பிறகு, ஆலய முன் மண்டபம், தெற்கு கோபுரம்  ஆகியவை கட்டப்பெற்றன. நிறைய தானங்கள் அளிக்கப் பட்டன. கிருஷ்ண தேவ ராயர் காலத்தில் கிழக்கு கோபுரமும் ரத வீதியில் மண்டபங்களும் கட்டப்பட்டன. விமானத்திற்குத் தங்க முலாம் பூசப்பட்டது. பிற்காலத்தில் அனேக பக்தர்கள் மூலம்  கொடிமரம், நந்தவனம், கோயில் மணி ஆகியவை அளிக்கப்பட்டன. பாருமஞ்சலா, ஆத்மகூர் என்ற இரண்டு ஊர்களும் மல்லிகார்ஜுனருக்கு நைவேத்யத்திற்காகக் கொடுக்கப்பட்டன.
  • ஆலயத்தின் கிழக்கு, மேற்கு, தெற்கு கோபுரங்கள் கிருஷ்ண தேவராயரால் 15  ம்  நூற்றாண்டில் கட்டப்பட்டது. வடக்குக் கோபுரத்தை  கி.பி. 1677 ல்  சத்ரபதி சிவாஜி கட்டினார். மல்லிகார்ஜுன சுவாமியின் விமானம் கி.பி. 1230 ம் ஆண்டு காகதீய கணபதி ராஜனின் சகோதரி மைலம்ம தேவியால் கட்டப்பட்டது.ஆலயத்தின் முன்புறம் உள்ள ரங்க மண்டபத்தை  விஜய நகர அரசர் இரண்டாம் ஹரிஹர ராயர் கட்டினார்.
  • விஜயநகர மன்னன் ஹரிஹரராயன் தெற்கு மதிலை புனருத்தாரணம் செய்து மண்டபம் கட்டி கோபுரம் எழுப்பினார். இக்கோபுரம் ஹரிஹரராயன் கோபுரம் என அழைக்கப்படுகிறது.
  • விஜயநகர அரசனான வீரப்பிரதாப வீரநரசிங்கராயன் இங்கு வந்து வழிபட்டிருக்கிறான்.
  • பருவதையன் என்பானும் அவன் மனைவியும் இங்குவந்து `சித்தபுரம்` என்னுமிடத்தில் ஒரு குளம் வெட்டி நந்தவனம் அமைத்தனர். 
  • கிருஷ்ணதேவராயர் கிழக்கு கோபுரத்தின் முன் ரத வீதியில் இரண்டு சிலாமண்டபங்களைக் கட்டுவித்தார்.
  • கிருஷ்ணதேவராயனுடைய மந்திரியான சந்திரசேகர அமாத்யா என்பவன் கல்யாண மண்டபத்தைக் கட்டிப் பொற்கலசம் ஸ்தாபித்தான். மல்லிகார்ச்சுன கோயிலுக்கு முன் புறத்தில் ஒரு மண்டபங் கட்டினான். நந்தீசுவரத்திற்கும், பிருங்கீசு வரத்திற்கும் பொன்னாலேயே திருவுரு அமைத்துக் கொடுத்தான். அந்த மண்டபத்தில் தமராசா என்பவன் கிருஷ்ணதேவராயர் சந்திர சேகர அமாத்யா இவர்களுடைய கற்சிலைகளை அமைத்தான். கோயில் செலவுகளுக்காகச் சிவபுரம் என்னும் ஊரைத் தானமாக வழங்கினான். பொற்கிண்ணமும், வெள்ளிப்பீடமும் அளித்தான். நந்தியைப் பிரதிஷ்டைசெய்து அதற்கு முன்பக்கத்தில் பொற்றூண் ஒன்றை நிறுவினான். 
  • வீரப்பிரதாப அச்சுதராயன் காலத்தில் மல்லப்ப நாயுடு என்பவன் பிரமராம்பா அம்மைக்கு ஒரு மணியும் சரிகையாடையும் அளித்தான்.
  • விஜயராய மகாராயன் மகளும், பாண்டிய பெருமாள் தேவனின் மனைவியுமாகிய லெட்சம்மாள் என்பவள் தினசரி ஐந்து ஜங்கமர்களுக்கு உணவளிக்க நிலம் வழங்கினாள். 
  • சாளுவ அரசனான பதமல்லப்பன் ஒருகுளம் வெட்டியிருக்கிறான். 
  • காகதீய அரசனான பிரதாபருத்திரதேவ மகாராஜர் காலத்தில் அவனுடைய முதல் மந்திரி உச்சிக்கால வழிபாட்டிற்காக கமநாட்டில் நிலம் வழங்கியிருக்கிறார். ஜனமாதா மண்டபத்திற்கருகில் ஒரு கோயிலையும் கட்டியிருக்கிறார்.
  • கி.பி. 1674 ல் சத்ரபதி சிவாஜி மகாராஜ்  இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். பிற்காலத்தில் ஸ்ரீ சைல ஆலயத்தின் மீது படையெடுப்பு நிகழ்ந்தபோது மராட்டிய வீரர்கள் கடைசி வீரன் உள்ளவரை போரிட்டதாகக் கூறுவர். அவர்களது சந்ததியினர் இன்றும் ஆண்டுக்கு ஒரு முறை  தங்களது முன்னோரது நினைவாக இங்கு வருகை தந்து வழிபடுகிறார்கள்.
  • ஆந்திரத்தின் 72 சிற்றரசர்கள் முகமதியர்களோடு போரிட்டு  மீண்டும் இந்து ராஜ்ஜியங்களை நிறுவினார்கள். இவர்களுள் அத்தங்கி வேமா ரெட்டி என்பவர் குறிப்பிடத்தக்கவர். அவரது குல தெய்வம் திரிபுராந்தகத்தில் உள்ள மூர்த்தியே ஆவார். ப்ரோலய ரெட்டி என்பவர் தன்னை  ஸ்ரீசைல மல்லிகார்ஜுனரின்  பாத சரண தாசன் என்று சொல்லிக் கொண்டார். ஸ்ரீ சைல மலை ஏறி வரும் பக்தர்களுக்காக ரெட்டி மன்னர்கள் படிக்கட்டுக்களை அமைத்ததாக சாசனங்கள் மூலம்  அறிகிறோம். ஸ்ரீ சைலத்தில் பாதாள கங்கை எனப்படும் கிருஷ்ணா நதிக்குச் செல்வதற்குப்  படிக்கட்டுக்கள் கட்டப்பட்டன.  அன மேவா ரெட்டியின் ஆட்சிக்கு ஸ்ரீ சைலம், மகா நந்தி பகுதிகள் உட்பட்டன.
  • அன்னப்பையன் என்பவன் மல்லிகார்சுன தேவர்க்கும் பிரமராம்பா தேவிக்கும் நைவேத்திய நிபந்தங்களை அளித்ததோடு முகமண்டபங் கட்டுவித்தான். தென்னண்டை மதில் பிராகாரத்தைப் பழுதுபார்த்தான். இரும்புத் தூண்களை நிறுத்தித் தெற்குக் கோபுரத்தையும் பழுதுபார்த்தான். 
  • பயிராகி ஸந்தகி என்பவன் தன் மனைவியின் பெயரால் பூந்தோட்டத்திற்கு நிலம் அளித்துள்ளான். இவையன்றி நந்திநாதர், பிருங்கிநாதர் முதலியவர்களை வழிபடுகிறவர்களுக்கு வீடுகள் கட்டி அளித்த செய்தியும், செங்கையன் என்பார் சந்தனக்கல் வைத்ததும் அறியப்பெறுகின்றன.
  • மேலும் சந்திரசேகரன் வீரபத்திர தேவர் கோபுரத்தையும் , தூண்களையும், பொற்கலசங்களையும் அமைத்திருக்கிறான். 
  • உதயகிரி அப்பனையங்காரு நந்தித் தூணிலிருந்து துர்க்காதேவிகோயில் வரையில் படிக்கட்டுகளைக் கட்டுவித்தான். 
  • கொண்டபட்டி என்பவன் கோயில் முழுமையும் புதுப்பித்திருக்கிறான்.

 

முந்தைய தலம்<திருஅஞ்சைக்களம்

 அடுத்த தலம்>திருஇந்திரநீலப்பருப்பதம்

Contact Address

அமைவிடம் மாநிலம் : ஆந்திரா ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் நந்தியாலுக்கு அருகில் உள்ளது. திருப்பதியிலிருந்து 500 கி. மீ. தொலைவாகும். சென்னையிலிருந்தும் ஸ்ரீசைலத்திற்கு பேருந்து வசதி உள்ளது.
Loading map...

Related Content

திருஇந்திரநீல பருப்பதம் (பத்ரிநாத் - நீலகண்ட சிகரம்)

திருக்கேதாரம் (கேதார்நாத் ஜ்யோதிர்லிங்கம்) தலபுராணம்

திருக்கயிலாயம் (திருநொடித்தான்மலை) - கயிலையின் பெருமை - கயி

ஸோமநாதம் ஜோதிர்லிங்கம் (சோம்நாத், சௌராஷ்ட்ரம், குஜராத் )

உஜ்ஜைனி மஹாகாலேஸ்வரர் திருக்கோயில் (ஜோதிர்லிங்கம்)