இறைவர் திருப்பெயர்: ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்.
இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை, வடிவுடை மாணிக்கம்.
தல மரம்:
தீர்த்தம் : பிரம தீர்த்தம், நந்தி தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் , பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன், பிரமன், திருமால், நந்திதேவர், சந்திரன், வால்மீகி முனிவர், 27 நட்சத்திரங்கள் முதலியோர்.
- முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா வழிபட்ட போது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்பக் கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
- உபமன்யு முனிவரிடத்து சிவதீட்சை பெற்றுத் தம்மை வழிபட்ட வாசுகியைத் தம் திருமேனியில், இறைவன் ஐக்கியம் செய்து கொண்டமையால், "படம்பக்கநாதர் " என்ற திருநாமத்தையும் பெற்றார். அப்பாம்பின் வடிவத்தை (சுவடு) இறைவன் திருமேனியில் இன்றும் காணலாம்.
- ஒரு காலத்தில் திருத்தலங்கள் உட்பட எல்லா ஊர்களுக்கும் இறை (வரி) விதித்து, அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது, அரசனுக்கும் ஓலைநாயகத்திற்கும் தெரியாதபடி, இறைவனருளால் ஓலையில் வரி பிளந்து, "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாக கொள்க" என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து, அவ்வூருக்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், இறைவனுக்கு "எழுத்தறியும் பெருமான்" என்றும் பெயர் ஆயிற்று. இச்செய்தி பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
- 27 நட்சத்திரங்கள் இங்கு சிவபெருமானை வழிபட்ட 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ளன.
- நந்தி தேவருக்காக சிவபெருமான் பத்ம தாண்டவம் ஆடிய தலம்.
- திருவொற்றியூரில் வசித்த ஏலேல சிங்கர் என்பவர் மன்னனுக்குக் கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார். அச்சமயம் காசியில் இருந்து வந்த சிவ பக்தர்கள் இருவருக்கு அந்த மாணிக்கத்தை கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது சிவபெருமானே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர் மாணிக்கத் தியாகர் என்று அழைக்கப்படுகிறார்.
- சுந்தரர், சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, இத்தலமரமான மகிழ மரத்தின் முன்னால், "நான் உன்னைப் பிரியேன்" என்று சங்கிலியாரிடம் சத்தியம் செய்து, இத்தல எல்லையைத் தாண்டியதும், தன் கண்பார்வையை இழந்தார்.
- 'வட்டப்பாறை அம்மன் ' (காளி) சந்நிதி - இந்த அம்மன் ஒரு காலத்தில் மிக்க உக்கிரத்துடன் விளங்கி, பலிகளைக் கொண்டதாகவும், ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்துச் சாந்தப்படுத்தியதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.
- பட்டினத்துப் பெருமானுக்குப் பேய்க் கரும்பு இனித்த இடம் இஃது ஆகும்; ஆதலின் தனக்குரிய இடம் இதுவே என்று முடிவு செய்து கடற்கரையொட்டிய (அவர் கோயில் உள்ள) இவ்விடத்தில் சமாதியானார் என்பது வரலாறு.
- பட்டினத்தார், காளமேகம், அருணகிரிநாதர், தியாகய்யர், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் சுவாமி,
அம்பாள்மீது பாடல்களை- கீர்த்தனைகளைப் பாடியுள்ளனர்.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. விடையவன் விண்ணுமண்ணுந் (3.57); அப்பர் - 1. வெள்ளத்தைச் சடையில் (4.45), 2. ஓம்பினேன் கூட்டை வாளா (4.46), 3. செற்றுக் களிற்றுரி கொள்கின்ற (4.86), 4. ஒற்றி யூரும் ஒளிமதி (5.24), 5. வண்டோங்கு செங்கமலங் (6.45); சுந்தரர் - 1. அழுக்கு மெய்கொடுன் (7.54), 2. பாட்டும் பாடிப் பரவித் (7.91); பட்டினத்துப் பிள்ளையார் - 1. இருநில மடந்தை (11.31) திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது; பாடல்கள் : சம்பந்தர் - உளங்கொள்வார் (1.76.4); அப்பர் - பற்றற் றார்சேர் (4.15.1), ஓம்பினேன் கூட்டை (4.46.1 & 2), திரையார் புனற்கெடில (6.7.4), காடலாற் கருதாதார் (6.10.2), சிறையார் வரிவண்டு (6.22.3), கானேறு களிற்றுரிவைப் (6.30.4), வானவர்க்கு (6.41.8), அண்ணா மலையமர்ந்தார் (6.51.3), உரையாரும் (6.62.6), பிறையூருஞ் (6.71.4), காரார் கடல்நஞ்சை (6.78.9), வானகத்தில் வளர்முகிலை (6.80.8), உழையாடு (6.81.7), கார்முகிலாய்ப் (6.91.6), பாரிடங்கள் (6.96.6); சுந்தரர் - வாரமாகித் திருவடிக்குப் (7.5.9), சுற்றுமூர் (7.31.2), ஒற்றியூ ரென்ற (7.32.8), வேதம் ஓதி (7.49.7), விண்பணிந் தேத்தும் (7.69.3), வாரிடங்கொள் (7.89.8); ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - தஞ்சாக மூவுலகும் (11.6.22) க்ஷேத்திரத் திருவெண்பா; கபிலதேவ நாயனார் - அடியோமைத் (11.22.15) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை; பரணதேவ நாயனார் - மகிழ்ந்தன்பர் (11.24.65 & 99) சிவபெருமான் திருவந்தாதி; பட்டினத்துப் பிள்ளையார் - சென்றேறி (11.30.63) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; நம்பியாண்டார் நம்பி - கம்பக் கரிக்கும் (11.34.55 & 70) திருத்தொண்டர் திருவந்தாதி; சேக்கிழார் - வரை வளர் (12.21.332,333,334 & 338) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், தென் திசையில் (12.28.1028,1030,1069,1070,1072 & 1073) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், அங்கு சிலநாள் (12.29.199,201,204,213,217,218,219,231,243,264,266,269,274 & 345) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், பேருலகில் ஓங்கு (12.45.1 & 7) கலிய நாயனார் புராணம்.
அமைவிடம்
அ/மி. தியாகராசர்சுவாமி திருக்கோயில்,
திருவொற்றியூர்,
சென்னை - 600 019.
தொலைபேசி : 044 - 25733703, +91-9444479057.
மாநிலம் : தமிழ் நாடு
சென்னையின் ஒரு பகுதி. 'உயர்நீதி மன்றப்' பகுதியிலிருந்து திருவொற்றியூருக்கு அடிக்கடி நகரப் பேருந்து செல்கிறது. காலடிப்பேட்டையை அடுத்து, 'தேரடி' நிறுத்தத்தில் இறங்கினால் வீதியின் கோடியில் கோயிலைக் காணலாம். சென்னையின் முக்கியப் பகுதிகளிலிருந்தும் நகரப்பேருந்து வசதி உள்ளது.