பேருலகில் ஓங்கு புகழ்ப்
பெருந் தொண்டை நன்னாட்டு
நீருலவும் சடைக் கற்றை
நிருத்தர் திருப்பதியாகும்
காருலவும் மலர்ச் சோலைக்
கன்னிமதில் புடை சூழ்ந்து
தேருலவு நெடு வீதி
சிறந்த திருஒற்றியூர் 1
பீடு கெழும் பெருந் தெருவும்
புத்தருடன் பீலி அமண்
வேடம் உடையவர் பொருள்
போல் ஆகாசவெளி மறைக்கும்
ஆடு கொடி மணி நெடுமாளிகை
நிரைகள் அலை கமுகின்
காடனைய கடல் படப்பை என
விளங்கும் கவின் காட்டும் 2
பன்னு திருப்பதிக இசைப்
பாட்டு ஓவா மண்டபங்கள்
அன்ன நடை மடவார்கள் ஆட்டு
ஓவா அணி அரங்கு
பன் முறை தூரியம் முழங்கு
விழவு ஓவா பயில் வீதி
செந்நெல் அடிசில் பிறங்கல்
உணவு ஓவா திருமடங்கள் 3
கெழு மலர் மாதவி புன்னை
கிளைஞாழல் தளை அவிழும்
கொழு முகைய சண்பகங்கள் குளிர்
செருந்தி வளர் கைதை
முழு மணமே முந் நீரும்
கமழ மலர் முருகு உயிர்க்கும்
செழு நிலவின் துகள் அனைய
மணல் பரப்பும் திருப்பரப்பு 4
எயிலணையும் முகில் முழக்கும்
எறிதிரை வேலையின் முழக்கும்
பயில் தரு பல்லிய முழக்கும்
முறை தெரியாப் பதி அதனுள்
வெயில் அணி பல் மணி
முதலாம் விழுப்பொருள் ஆவன விளக்கும்
தயில வினைத் தொழில் மரபில்
சக்கரப் பாடி தெருவு 5
அக்குலத்தின் செய்தவத்தால் அவனி
மிசை அவதரித்தார்
மிக்க பெரும் செல்வத்து
மீக்கூர விளங்கினார்
தக்க புகழ்க் கலியனார் எனும்
நாமம் தலை நின்றார்
முக்கண் இறைவர்க்கு உரிமைத் திருத்
தொண்டின் நெறி முயல்வார் 6
எல்லையில் பல் கோடி
தனத்து இறைவராய் இப்படித்தாம்
செல்வ நெறிப் பயன்
அறிந்து திருஒற்றியூர் அமர்ந்த
கொல்லை மழவிடையார் தம்
கோயிலின் உள்ளும் புறம்பும்
அல்லும் நெடும் பகலும் இடும்
திருவிளக்கின் அணி விளைத்தார் 7
எண்ணில் திரு விளக்கு நெடு
நாள் எல்லாம் எரித்து வரப்
புண்ணிய மெய்த் தொண்டர்
செயல் புலப்படுப்பார் அருளாலே
உண்ணிறையும் பெரும் செல்வம் உயர்த்தும்
வினைச் செயல் ஓவி
மண்ணில் அவர் இருவினை
போல் மாண்டது மாட்சிமைத்தாக 8
திருமலி செல்வத்துழனி தேய்ந்து
அழிந்த பின்னையுந்தம்
பெருமை நிலைத் திருப்
பணியில் பேராத பேராளர்
வருமரபில் உள்ளோர் பால்
எண்ணெய் மாறிக் கொணர்ந்து
தரும் இயல்பில் கூலியினால்
தமது திருப்பணி செய்வார் 9
வளம் உடையார் பால் எண்ணெய்
கொடுபோய் மாறிக் கூலி
கொள முயலும் செய்கையும் மற்று
அவர் கொடாமையின் மாறத்
தளருமனம் உடையவர் தாம்
சக்கர எந்திரம் புரியும்
களனில் வரும் பணி
செய்து பெறுங்கூலி காதலித்தார் 10
செக்கு நிறை எள் ஆட்டிப்
பதம் அறிந்து தில தயிலம்
பக்கம் எழ மிக உழந்தும்
பாண்டில் வரும் எருது உய்த்தும்
தக்க தொழில் பெறும் கூலி
தாம் கொண்டு தாழாமை
மிக்க திரு விளக்கு
இட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார் 11
அப் பணியால் வரும் பேறு
அவ் வினைஞர் பலர் உளராய்
எப்பரிசும் கிடையாத வகை
முட்ட இடர் உழந்தே
ஒப்பில் மனை விற்று எரிக்கும்
உறு பொருளும் மாண்டதன் பின்
செப்பருஞ் சீர் மனையாரை
விற்பதற்குத் தேடுவார் 12
மனம் மகிழ்ந்து மனைவியார் தமைக்
கொண்டு வள நகரில்
தனம் அளிப்பார் தமை எங்கும்
கிடையாமல் தளர்வு எய்திச்
சின விடையார் திருக் கோயில்
திரு விளக்குப் பணிமுட்டக்
கன வினும் முன்பு
அறியாதார் கையறவால் எய்தினார் 13
பணி கொள்ளும் படம்
பக்க நாயகர்தம் கோயிலினுள்
அணி கொள்ளும் திருவிளக்குப்
பணிமாறும் அமையத்தில்
மணி வண்ணச் சுடர் விளக்கு
மாளில் யான் மாள்வன் எனத்
துணிவுள்ளங் கொள நினைந்து அவ்
வினை முடிக்கத் தொடங்குவார் 14
திரு விளக்குத் திரி இட்டு அங்கு
அகல் பரப்பிச் செயல் நிரம்ப
ஒருவிய எண்ணெய்க்கு ஈடா
உடல் உதிரம் கொடுநிறைக்கக்
கருவியினால் மிடறு அரிய
அக்கையைக் கண் நுதலார்
பெருகு திருக் கருணையுடன்
நேர்வந்து பிடித்தருளி 15
மற்றவர் தம் முன்னாக மழ
விடை மேல் எழுந்தருள
உற்றவூறு அது நீங்கி ஒளி
விளங்க உச்சியின் மேல்
பற்றிய அஞ்சலியினராய் நின்றவரைப்
பரமர் தாம்
பொற்புடைய சிவபுரியில் பொலிந்து
இருக்க அருள் புரிந்தார் 16
தேவர் பிரான் திருவிளக்குச் செயல்
முட்ட மிடறு அரிந்து
மேவரிய வினை முடித்தார் கழல்
வணங்கி வியன் உலகில்
யாவர் எனாது அரன் அடியார்
தமை இகழ்ந்து பேசினரை
நாவரியும் சத்தியார் திருத்தொண்டின்
நலம் உரைப்பாம் 17