பாதிரி Stereospermum suaveblens, Dt.; Bignoniaceae.
விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தான் இனிநமக்கிங்
கடையா அவலம் அருவினை சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர்
உடையான் அடியார் அடியடி யோங்கட் கரியதுண்டே.
. - திருநாவுக்கரசர்.
திருப்பாதிரிப்புலியூர், திருவலிதாயம், திருவாரூர், ஆரூர் அரநெறி, ஆரூர்ப்பரவையுண்மண்டளி, திருப்புக்கொளியூர் (அவிநாசி), அவளிவணல்லூர் முதலிய சிவத் தலங்களில் பாதிரி தலமரமாக விளங்குகின்றது. இவற்றுள் பாதிரிப்புலியூரில் வெண்பாதிரியும், திருவாரூரில் செம்பாதிரியும் தலமரமாக உள்ளது. இணையில்லாத எதிர் அடுக்கில் அமைந்த சிறகமைப்புக் கூட்டிலைகளையுடைய வறட்சியான காடுகளில் வளரும் மரம். வெண்பாதிரி மலர் சிவப்பு வரிகளுடைய மஞ்சள் நிறமும், செம்பாதிரி மலர் மங்கிய செம்மஞ்சள் நிறமும் உடையது. இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயன் உடையது.
பாதிரி - பூக்கும், ஆனால் காய்க்காது. சித்திரை மாதம் முழுவதும் பாதிரிப்பூ பூத்திருக்குமாம்.
சிறுநீர் பெருக்குதல், வெப்பகற்றுதல் ஆகிய மருத்துவக் குணங்களையுடையது.
திருமுறைகளில் பாதிரி பற்றிய குறிப்பு :-
முன்னம்நின்ற முடக்கால் - திருப்பாதிரிப்புலியூர்
ஈன்றாளு மாயெனக் - திருப்பாதிரிப்புலியூர்
கோங்கு செண்பகங் குருந்தொடு
பாதிரி குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி
வடகரை மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமுந்
தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள்
நாவினில் தலைப்படுந் தவத்தோரே. 2.110.05
கோங்கமே குரவமே
கொன்றையம் பாதிரி
மூங்கில்வந் தணைதரு
முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி
யடிகளை அடிதொழ
வீங்குவெந் துயர்கெடும்
வீடெளி தாகுமே. 3.036.03
கோங்கமே குரவமே கொழுமலர்ப்
புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா
திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி அடிகளா
ரிடமென விரும்பினாரே. 3.091.1
சிறையார் புனற்கெடில வீரட்டமுந்
திருப்பா திரிப்புலியூர் திருவாமாத்தூர்
துறையார் வனமுனிக ளேத்தநின்ற
சோற்றுத் துறைதுருத்தி நெய்த்தானமும்
அறையார் புனலொழுகு காவிரிசூழ்
ஐயாற் றமுதர் பழனம்நல்ல
கறையார் பொழில்புடைசூழ் கானப்பேருங்
கழுக்குன்றுந் தம்முடைய காப்புக்களே. 6.007.3
இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் டோ ளும்
இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மே லூன்றி
நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாச மாகி
நிற்பனவும் நடப்பனவாம் நின்மலனூர் வினவிற்
பலங்கள்பல திரையுந்திப் பருமணிபொன் கொழித்துப்
பாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக்
கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்றென் கரைமேற்
கயலுகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே. 7.016.7
அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. 10.04.03.1
வாய்ந்த சீர் வருணனே
வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே
சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டு எழுந்து
அருள் வித்தனன்
பூந்திருப் பாதிரிப்
புலியூர்ப் பாங்கரில். 12.27.131
தொழும் தகை நாவினுக்கு
அரசும் தொண்டர் முன்
செழும் திருப் பாதிரிப்
புலியூர்த் திங்கள் வெண்
கொழுந்து அணி சடையாரைக்
கும்பிட்டு அன்புற
விழுந்து எழுந்து அருள்
நெறி விளங்கப் பாடுவார். 12.27.133
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில்
திரு நடம் பணிந்து ஏத்திப்
பல் பெரும் தொண்டர் எதிர் கொளப்
பரமர் தம் திருத்தினை நகர் பாடி
அல்கு தொண்டர்கள் தம்முடன் திருமாணிக்
குழியினை அணைந்து ஏத்தி
மல்கு வார் சடையார் திருப் பாதிரிப்
புலியூரை வந்து உற்றார். 12.34.962