இறைவர் திருப்பெயர்: தோன்றாத்துணைநாதர், பாடலீஸ்வரர், கன்னிவன நாதன், கடைஞாழலுடைய பெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், கரையேற்றும்பிரான்.
இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி அம்மை, கோதைநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : கெடில நதி, சிவகர தீர்த்தம், பிரம தீர்த்தம்(கடல்), பாலோடை, தென்பெண்ணையாறு
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், வியாக்ரபாதர், உபமன்யு முனிவர், அகத்தியர், கங்கை, அக்னி, மங்கண முனிவர்.
- இத்தலத்திற்கு; கடைஞாழல், கன்னிவனம், பாடலபுரம், ஆதிமாநகர், உத்தாரபுரம், பாதிரிப்பதி, புலிசை எனப்பல பெயர்களுண்டு. 'கடை ஞாழலூர்' என்பது மருவி 'கடலூர்' என்றாயிற்று என்பது இலக்கியவாணர்
கூறும் செய்தியாகும். - பாதிரியைத் தலமரமாகக் கொண்டதாலும், புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்) வழிபட்டதாலும் (பாதிரி+புலியூர்), இப்பெயர் பெற்றது.
- ஒரு முறை கைலாயத்தில் பரமனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடினர். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பார்வதி தன் திருக்கரங்களால் மூடினாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன் சிவபெருமான் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு பாதிரி வனமாகத் திகழ்ந்த இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக (உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்றாள்.
- மத்யந்தின முனிவரின் மகன் சிவபெருமானின் வழிபாட்டிற்காக வண்டுகள் வருவதன் முன் பூப்பறிக்க புலியின் கண்களும் பாதங்களும் பெற்றுப் புலிக்கால் முனிவரான (வ்யாக்ரபாதர்) தலம்.
- மங்கண முனிவர், பூசித்து, தான் பெற்ற முயல் வடிவ சாபம் நீங்கப்பெற்றத் தலம்.
- திருநாவுக்கரசரை - அப்பரை, கல்லிற்பூட்டிக் கடலில் இட்ட போது, ''சொற்றுணை வேதியன்" பதிகம் பாடி - 'நமசிவாய - நற்றுணையாக', கல்லே தெப்பமாக, வருணன் தன் கைகளால் தாங்கித் திருப்பாதிரிப்புலியூரின் பக்கத்தே அவரைக் கொண்டுவந்து கரை சேர்த்தான். கரையேறிய அப்பர் 'ஈன்றாளுமாய் எனத் தொடங்கும் பதிகம் பாடி திருப்பாதிரிப்புலியூர் அரனைப் பணிந்தார். அப்பதிகத்தில் 'தோன்றாத்துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே', என்று குறிப்பிடுவதால் இப்பெருமான் 'தோன்றாத்துணை நாதர்' என்னும் பெயரும் பெற்றார்
- சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும், தொல்காப்பியர் இயற்றிய கலம்பகமும் இருக்கின்றன.
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. முன்னம்நின்ற முடக்கால் (2.121);
அப்பர் - 1. ஈன்றாளு மாயெனக் (4.94);
பாடல்கள் : அப்பர் - சிறையார் (6.07.3);
சேக்கிழார் - வாய்ந்த சீர் வருணனே (12.21.131,132 & 133) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் (12.28.962) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, தற்பொழுது, கடலூர் எனப்படுகிறது. கோவில், திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்திற்கு அருகே உள்ளது. தமிழகத்தின் அனைத்து நகரங்களிருந்தும் கடலூருக்குப் பஸ் வசதி உள்ளது.
தொடர்பு :
04142 - 236728.