logo

|

Home >

hindu-hub >

temples

திருஆலவாய் - மதுரை

இறைவர் திருப்பெயர்: சொக்கலிங்கப்பெருமான், சோமசுந்தரேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: அங்கயற்கண்ணி, மீனாட்சியம்மை.

தல மரம்:

தீர்த்தம் : பொற்றாமரை, வைகை ஆறு, எழுகடல்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், நக்கீரதேவ நாயனார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், இந்திரன் முதலியோர்

Sthala Puranam

Madurai temple

 • இந்திரன் விருத்திராசுரனைக் கொன்ற சாபம் தீர்க்க விமானத்தில் எழுந்தருளியது.

 

 • இறைவன், சௌந்திர பாண்டியனாக இருந்து ஆட்சி செய்தது.

 

 • அங்கயற்கண்ணியாம் தடாதகைப் பிராட்டியார் இறைவனை மணம் புரிந்து ஆட்சி செய்த பதி.

 

 

 • இராஜசேகர பாண்டியனுக்கு இறைவன் வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிய தலம்.

 

 • மாணிக்க வாசகர் இறைவனது பெருமையை அரிமர்த்தன பாண்டியனுக்கு உணர்த்திய தலம்.

 

 • கூன் பாண்டியனின் வெப்பு நோய் ஞானசம்பந்தரால் நீக்கப்பெற்று, நின்றசீர் நெடுமாற நாயனார் ஆகிய தலம். அவதாரத் தலம் : ஆலவாய் (மதுரை). வழிபாடு : குரு வழிபாடு. முத்தித் தலம் : மதுரை. குருபூசை நாள் : ஐப்பசி - பரணி. 

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்  :  சம்பந்தர்   -    1. நீல மாமிடற்  (1.94),                                  2. மந்திரமாவது நீறு (2.66),                                  3. மானின்நேர்விழி மாதராய் (3.39),                                  4. காட்டு மாவ துரித்துரி (3.47),                                  5. செய்ய னேதிரு (3.51),                                  6. வீடலால வாயிலாய் (3.52),                                  7. வேத வேள்வியை (3.108),                                  8. ஆலநீழ லுகந்த (3.115),                                  9. மங்கையர்க் கரசி (3.120);                                       அப்பர்      -    1. வேதியா வேத கீதா (4.62),                                  2. முளைத்தானை முன்னே (6.19);                         பாடல்கள்  :  சம்பந்தர்   -        பாடக மெல்லடிப் (1.7) (திருநள்ளாறும் - திருஆலவாயும்),                                    மனவஞ்சர் (2.39.6);               அப்பர்     -         புகழும் பெருமையாய் (6.41.7); நக்கீரதேவ நாயனார்     -         சூல பாணியை (11.14.64வது வரி பாடல்) பெருந்தேவபாணி; நம்பியாண்டார் நம்பி     -         அவந்திரி (11.34.18) திருத்தொண்டர் திருவந்தாதி; சேக்கிழார்                -         மும்மைப் புவனங்களின் (12.15.7 & 10) மூர்த்தி நாயனார் புராணம்,                                        ஆண்ட அரசு (12.21.402 & 406) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                       அம்புய மலராள் (12.28.647, 661,662,663,664,665,675,704,706,740,764,861,863,865,867,872,876,903 & 947) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                      சேரர் பிரானும் (12.37.82,91,92 & 93) கழறிற்றறிவார் நாயனார் புராணம்,                                      எருக்கத்தம் புலியூர் (12.69.1,2 & 3)  திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்.

Specialities

 

 • ஐந்து சபைகளுள் இது வெள்ளிச் சபை.

 

 • தமிழ் சங்கம் நிறுவி தமிழ் வளர்த்த தலம்.

 

 • சம்பந்தர் அனல், புனல் வாதம் செய்து சைவத்தை நிலைப் பெறச் செய்த இடம்.

 

 • மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் சைவம் வளர்த்த தலம்.

 

 • மூர்த்தி நாயனார் அவதரித்த தலம். சொக்கநாதருக்கு சாற்ற மூர்த்தி நாயனார் சந்தனம் அரைத்தச் சந்தனக்கல் இன்றும் கோயிலில் உள்ளது.

    அவதாரத் தலம்    : மதுராபுரி - ஆலவாய் (மதுரை). 

    வழிபாடு        : இலிங்க வழிபாடு. 

    முத்தித் தலம்     : மதுரை. 

    குருபூசை நாள்     : ஆடி - கார்த்திகை. 

 • பாண்டிய மன்னனுக்குக் காலை மாற்றி ஆடிய கூத்தபிரான் கற்சிலையுருவில் வெள்ளியம்பலத்துள் காட்சியளிக்கிறார்.

 

 • நக்கீரர், தமது பிழையை உணர்ந்து, பொற்றாமரைக் குளத்தில் மூழ்கிக் "கோபப்பிரசாதம்" என்ற பனுவலை இயற்றி மன்னிப்புப் பெற்றதும் இங்கு நிகழ்ந்ததே.

 

 • சித்திரை பெருவிழாவில் மீனாட்சியம்மன் திக்விஜயம் திருக்கல்யாணம் முதலியனவும், ஆவணி மூலத்திருவிழாவில் பாண்டியன் ஜ்வரம் தீர்த்தது, சமணரை கழுவேறச் செய்தது, பிட்டுக்கு மண்சுமந்தது முதலியனவும், ஏனைய மாதங்களில் வெவேறு திருவிளையாடல்களும் உத்சவங்களாக நடைபெறுகின்றன.

பொற்றாமரைக் குளம்
இந்திரன் பூஜைக்கு பொன்மலர் பறித்ததாகக் கூறப்படும் பொற்றாமரைக் குளம். திருக்குறள் இங்கு வைத்துத்தான் சங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப் பட்டது என்பர். வடக்குக் கரையிலுள்ள தூண்களில் சங்கப்புலவர்கள் 24 பேர்களின் சிலைகளைக் காணலாம். இரு தூண்களில், இக்கோயிலை முதன் முதலில் கண்ட தனஞ்சயன் எனும் வணிகனும், கோயிலையும் நகரையும் அமைத்த குலசேகர பாண்டியனும் காட்சியளிக்கின்றனர். சுவர்களில் திருவிளையாடற் புராணக் காட்சிகள் வர்ணப்படங்களாகத் தீட்டப்பட்டிக்கின்றன. கிழக்குக் கரையில் நின்று பார்த்தால் சுவாமி, அம்மன் கோயில்களின் தங்க விமானங்களைத் தரிசிக்கலாம். தெற்குக்கரை மண்டபத்தில் திருக்குறள் முழுவதும் வெண்சலவைக் கற்களில் செதுக்கி சுவரில் பதிக்கப்பெற்றுள்ளது.

வண்டியூர் தெப்பக்குளம்
மதுரை நகரின் எல்லையில் அமைந்துள்ள பெரிய தெப்பக்குளத்தை வண்டியூர் தெப்பக்குளம் என்றும் அழைக்கின்றனர். 1000 அடி நீளமும் 950 அடி அகலமும் உள்ள இக்குளத்தின் மத்தியில் ஒரு நடு மண்டபமும், நான்கு சிறு மண்டபங்களும் இருக்கின்றன. தைப்பூச நாளன்று இங்கே நடைபெறும் தெப்பத்திருவிழா ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.

அஷ்டசக்தி மண்டபம்
அம்மன் கோயிலின் முன்பகுதி அஷ்டசக்தி மண்டபம். திருவிளையாடற் புராணக் காட்சிகள் நிறைந்த இம்மண்டபத்தில் மீனாட்சி, சமயக்குரவர், துவாரபாலகர், விநாயகர், சுப்ரமணியர் சிலைகளும் உள்ளன.
மீனாட்சி நாயக்கன் மண்டபம்
அஷ்டசக்தி மண்டபத்திலிருந்து மீனாட்சி நாயக்கன் மண்டபத்தை அடையலாம். மேலே யாளியும் கீழே சிறு சிற்பங்களும் நிறைந்த ஆறு வரிசைத் தூண்கள் இம்மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இம்மண்டபத்தை யும் அஷ்ட சக்தி மண்டபத்தையும் இணைக்கும் ஒரு சிறு மண்டபத்தில் வேடன், வேட்டுவச்சி சிலைகள் காணப்படுகின்றன. மீனாட்சி நாயக்கன் மண்டபத்தின் மேற்குக் கோடியில் ஆயிரத்தெட்டு சிறு விளக்குகளைக் கொண்ட பித்தளையாலான திருவாட்சி கண்களைக் கவரும் அமைப்புடையது.

முதலிப்பிள்ளை மண்டபம்
மீனாட்சி நாயக்கன் மண்டபத்தை அடுத்துள்ளது. இருட்டு மண்டபம் என்று அழைக்கப்படும் முதலிப் பிள்ளை மண்டபம். இங்குள்ள பிட்சாடனர், அவர் அழகில் மயங்கி நிற்கும் தாருகாவனமுனி பத்தினியர், மோகினி, விநாயகர், முருகன், மற்றும் இம்மண்டபத்தைக் கட்டிய கடந்தை முதலியார் ஆகியோர் சிற்பங்கள் கலையழகு மிக்கவை.
ஊஞ்சல் மண்டபம்
பொற்றாமரைக் குளத்தின் மேற்குப் பக்கம் ஊஞ்சல் மண்டபம் இருக்கிறது. இங்கு சலவைக் கல் தூண்கள் கொண்ட ஊஞ்சல் மேடையும், உயரே விட்டங்களில் முருகனின் அறுபடை வீடு சித்திரங்களும் உள்ளன. 
கிளிக்கூட்டு மண்டபம்
ஊஞ்சல் மண்டபத்தை அடுத்துள்ள கிளிக்கூட்டு மண்டபத்தில் பஞ்சபாண்டவர், வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், திரௌபதி முதலிய அழகிய சிற்பங்களைப் பார்க்கலாம். மண்டபத்தின் மேல்விதானத்தில் விநாயகர், முருகன், சிவபெருமான் முதலியோரின் பல்வேறு தோற்றங்கள் வர்ணச் சித்திரங்களாக மிளிர்கின்றன. அம்மன் சன்னதிக்கு நேராக மீனாட்சியின் திருக்கல்யாணம், முடிசூட்டும் கோலம் ஆகிய இருபெரும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.
அம்மன் கோயில் பிரகாரம் ஆறுகால் பீடத்தில்தான் குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றப்பட்டது.
கம்பத்தடி மண்டபம்
அற்புதமான சிற்பங்கள் அமைந்துள்ளது கம்பத்தடி மண்டபம். மண்டபத்தின் நடுவே நந்தியும் பலிபீடமும் தங்கக் கொடிமரமும் உள்ளன. சுற்றியுள்ள எட்டுத்தூண்களும் ஈடு இணையற்ற அழகிய சிலைகளைத் தாங்கி நிற்கின்றன. முப்புரம் எரித்த சிவன், சோமஸ் கந்தர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற சிவபெருமானின் (25) பல்வேறு தோற்றங்கள்; திருமாலின் தசாவதாரக் காட்சிகள் முதலிய சிற்பங்களைக் கண்டு மகிழலாம். 
கம்பத்தடி மண்டபத்தை அடுத்து இரு தூண்களில் அக்கினி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் சிலைகளும், மற்றிரு தூண்களில் ஊர்த்துவ தாண்டவர், காளி இவர்களின் உருவங்களும் காட்சியளிக்கின்றன.
சுவாமி சன்னிதி முதற் பிராகாரத்தில் திருவிளையாடற் புராணம் அரங்கேற்றப்பட்ட ஆறுகால் பீடம் இருக்கிறது.
கருவறை இந்திரவிமானம் என்று அழைக்கப்படுகிறது. இவ்விமானத்தை எட்டு யானைகளும், 32 சிங்கங்களும், 64 பூதகணங்களும் தாங்கி நிற்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கால் மண்டபம்
வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் வருடம் அறுபதையும் காட்டும் சக்கரம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் முன் பகுதியிலுள்ள கண்ணப்பர், பிட்சாடனர், சந்திரமதி, குறவன், குறத்தி முதலிய சிலைகளின் அழகு கண்டு அதிசயிக்கிறோம். உள்ளே கணக்கற்ற சிற்பங்கள் நிறைந்த 985 தூண்கள் உள்ளன. இத்தூண்களை எந்த கோணத்தில்
நின்று பார்த்தாலும் அவை நேரான வரிசையில் அமைந்திருப்பது மிக வியப்பளிக்கும். நிருத்த கணபதி, சரஸ்வதி, அர்ஜுனன், ரதி, மோகினி, மன்மதன், கலி, போன்ற இருபது அற்புத சிற்பங்களை இங்கு காணலாம். மண்டபத்தின் மறுகோடியின் நடுவே நடராஜரின் அழகிய சிலை உள்ளது.
மங்கையர்க்கரசி மண்டபம்
ஆயிரக்கால் மண்டபத்திற்குக் தெற்கே புதிதாக அமைக்கப்பட்டது மங்கையர்க்கரசி மண்டபம். இங்கு நின்றசீர் நெடுமாற பாண்டியன், மங்கையர்க்கரசி, ஞான சம்பந்தர்,
குலச்சிறையார் ஆகியோர் சிலைகள் இருக்கின்றன. 
வடக்கு ஆடி வீதியில், பெரிய கோபுரத்தை அடுத்து, ஐந்து இசைத்தூண்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 22 சிறு தூண்களைக் கொண்டது. தட்டினால் விதவிதமான இன்னிசை எழுப்புகின்றன இந்த அதிசயத் தூண்கள்.
புது மண்டபம்
கோயிலுக்கு வெளியே, கிழக்குக் கோபுரத்துக்கெதிரே, வசந்த மண்டபம் எனப்படும் புது மண்டபம் இருக்கிறது. தடாதகை, மீனாட்சி கல்யாணம் போன்ற அழகிய
சிற்பங்களுடன், திருவிளையாடற்புராணக் கதைகளும் பல சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. கல்யானை கரும்பு தின்பதும், இராவணன் கைலையைத் தூக்குவதும் மிக அழகிய சிற்பங்கள். 

கோயில் வரலாறு
மதுரை கோயிலின் மிகப் புராதனமான பகுதி சுவாமி கோயிலும் இந்திர விமானமுமே. மதுரை நகரமும் கோயிலும் 3600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கருதப்படுகிறது. அன்னை மீனாட்சிக்குத் தனியாக கோயில் அமைத்தது 12-ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட சடையவர்மன் குலசேகரபாண்டியன் என்று தெரிகிறது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கோயிலைச் சுற்றி மதில்கள் அமைத்து கிழக்குக் கோபுரத்தையும் கட்டினான். மேலக் கோபுரம் 14-ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியனால் கட்டப் பட்டது. சில சிறு கோபுரங்களும் இக்காலத்தில் தோன்றின. 16-ஆம் நூற்றாண்டில் செவ்வந்தி செட்டியார் தெற்குக் கோபுரத்தையும், கிருஷ்ணவீரப்ப நாயக்கர் வடக்குக் கோபுரத்தையும் கொடி மண்டபத்தையும் கட்டினர். அரியநாத முதலியார் ஆயிரக்கால் மண்டபத்தை அமைத்தார். 17-ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த திருமலை நாயக்கர் புதுமண்டபத்தையும், அவர் மனைவியர் அஷ்ட சக்தி மண்டபத்தையும் கட்டினர். வண்டியூர் தெப்பக் குளமும், கிளிக்கூட்டு மண்டபமும் இக்காலத்திலேயே
மாளால் கட்டப்பட்டன. 

கோபுரங்கள்
ஆடிவீதியில் கோயிலின் நான்கு பெரிய 9 நிலைக் கோபுரங்கள் உள்ளன. தெற்குக் கோபுரம் மற்றக் கோபுரங்களைவிட உயர்ந்தது. இதன் உயரம் 160 அடி. இதன் பக்கங்கள் சற்று வளைவாக இருப்பது தனி அழகாயிருக்கிறது. வடக்குக் கோபுரத்தில் சுதைகள் குறைவாதலால் இது மொட்டைக் கோபுரம் என அழைக்கப்படுகிறது. கிழக்குக் கோபுரம் மிகப் பழமையானது. இதன் உயரம் 153 அடி. இவை தவிர, சித்திரக் கோபுரம், வேம்பத்தூரார் கோபுரம், நடுக்கட்டுக் கோபுரம், இடபக்குறியிட்ட கோபுரம் முதலிய பல சிறிய கோபுரங்கள் கோயிலுக்கு அழகையும் சிறப்பையும் அளிக்கின்றன.இராய கோபுரம்  - புது மண்டபத்திற்கெதிரே ஒரு பெரிய கோபுரத்தின் அடித்தளம் காணப்படுகிறது. அதன் அளவைப் பார்க்கும்போது, இராய கோபுரம் என்ற இக்கோபுரம் கட்டி முடிக்கப் பெற்றிருந்தால் இந்தியாவிலேயே மிகப்பெரிய கோபுரமாக அமைந்திருக்கும் என்று தெரிகிறது.

 

Contact Address

அமைவிடம் அ/மி. ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை - 625 001. இ. ஆணையர் / செயல் அலுவலர் தொலைபேசி : 0452 - 2349868. மாநிலம் : தமிழ் நாடு மதுரை தமிழ் நாட்டின் முக்கிய ஊராகும்.பேருந்துகளும், இரயில் வண்டிகளும் வெகுவாக உள்ளன.

Related Content