திருச்சிற்றம்பலம்
ஆலநீழ லுகந்த திருக்கையே
யானபாட லுகந்த திருக்கையே
பாலின்நேர்மொழி யாளொரு பங்கனே
பாதமோதலர் சேர்புர பங்கனே
கோலநீறணி மேதகு பூதனே
கோதிலார்மனம் மேவிய பூதனே
ஆலநஞ்சமு துண்ட களத்தனே
ஆலவாயுறை யண்டர்கள் அத்தனே. 1
பாதியாவுடன் கொண்டது மாலையே
பாம்புதார்மலர்க் கொன்றைநன் மாலையே
கோதில்நீறது பூசிடு மாகனே
கொண்டநற்கையின் மானிட மாகனே
நாதன்நாடொறும் ஆடுவ தானையே
நாடியன்றுரி செய்ததும் ஆனையே
வேதநூல்பயில் கின்றது வாயிலே
விகிர்தனூர்திரு ஆலநல் வாயிலே. 2
காடுநீட துறப்பல கத்தனே
காதலால்நினை வார்தம் அகத்தனே
பாடுபேயொடு பூத மசிக்கவே
பல்பிணத்தசை நாடி யசிக்கவே
நீடுமாநட மாட விருப்பனே
நின்னடித்தொழ நாளும் இருப்பனே
ஆடல்நீள்சடை மேவிய அப்பனே
ஆலவாயினின் மேவிய அப்பனே. 3
பண்டயன்றலை யொன்று மறுத்தியே
பாதமோதினர் பாவ மறுத்தியே
துண்டவெண்பிறை சென்னி யிருத்தியே
தூயவெள்ளெரு தேறி யிருத்தியே
கண்டுகாமனை வேவ விழித்தியே
காதலில்லவர் தம்மை யிழித்தியே
அண்டநாயக னேமிகு கண்டனே
ஆலவாயினின் மேவிய கண்டனே. 4
சென்றுதாதை யுகுத்தனன் பாலையே
சீறியன்பு செகுத்தனன் பாலையே
வென்றிசேர்மழுக் கொண்டுமுன் காலையே
வீடவெட்டிடக் கண்டுமுன் காலையே
நின்றமாணியை யோடின கங்கையால்
நிலவமல்கி யுதித்தன கங்கையால்
அன்றுநின்னுரு வாகத் தடவியே
ஆலவாயர னாகத் தடவியே. 5
நக்கமேகுவர் நாடுமோர் ஊருமே
நாதன்மேனியின் மாசுணம் ஊருமே
தக்கபூமனைச் சுற்றக் கருளொடே
தாரமுய்த்தது பாணற் கருளொடே
மிக்கதென்னவன் தேவிக் கணியையே
மெல்லநல்கிய தொண்டர்க் கணியையே
அக்கினாரமு துண்கல னோடுமே
ஆலவாயர னாருமை யோடுமே. 6
வெய்யவன்பல் உகுத்தது குட்டியே
வெங்கண்மாசுணங் கையது குட்டியே
ஐயனேயன லாடிய மெய்யனே
அன்பினால்நினை வார்க்கருள் மெய்யனே
வையமுய்யவன் றுண்டது காளமே
வள்ளல்கையது மேவுகங் காளமே
ஐயமேற்ப துரைப்பது வீணையே
ஆலவாயரன் கையது வீணையே. 7
தோள்கள்பத்தொடு பத்து மயக்கியே
தொக்கதேவர் செருக்கை மயக்கியே
வாளரக்கன் நிலத்து களித்துமே
வந்தமால்வரை கண்டு களித்துமே
நீள்பொருப்பை யெடுத்தவுன் மத்தனே
நின்விரற்றலை யான்மத மத்தனே
ஆளுமாதி முறித்தது மெய்கொலோ
ஆலவாயர னுய்த்தது மெய்கொலோ. 8
பங்கயத்துள நான்முகன் மாலொடே
பாதம்நீண்முடி நேடிட மாலொடே
துங்கநற்றழ லின்னுரு வாயுமே
தூயபாடல் பயின்றது வாயுமே
செங்கயற்கணி னாரிடு பிச்சையே
சென்றுகொண்டுரை செய்வது பிச்சையே
அங்கியைத்திகழ் விப்பதி டக்கையே
ஆலவாயர னாரதி டக்கையே. 9
தேரரோடம ணர்க்குநல் கானையே
தேவர்நாடொறுஞ் சேர்வது கானையே
கோரமட்டது புண்டரி கத்தையே
கொண்டநீள்கழல் புண்டரி கத்தையே
நேரிலூர்கள் அழித்தது நாகமே
நீள்சடைத்திகழ் கின்றது நாகமே
ஆரமாக வுகந்தது மென்பதே
ஆலவாயர னாரிட மென்பதே. 10
ஈனஞானிகள் தம்மொடு விரகனே
யேறுபல்பொருள் முத்தமிழ் விரகனே
ஆனகாழியுள் ஞானசம் பந்தனே
ஆலவாயினின் மேயசம் பந்தனே
ஆனவானவர் வாயினுள் அத்தனே
அன்பரானவர் வாயினுள் அத்தனே
நானுரைத்தன செந்தமிழ் பத்துமே
வல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே.
சுவாமி : சொக்கலிங்கப்பெருமான்; அம்பாள் : அங்கயற்கண்ணி. 11
திருச்சிற்றம்பலம்