logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கச்சியேகம்பம் தல புராணம் (காஞ்சிபுரம்)

இறைவர் திருப்பெயர்: ஏகாம்பரநாதர், திருவேகம்பர், தழுவக்குழைந்த நாதர்

இறைவியார் திருப்பெயர்: ஏலவார்குழலி, காமாட்சியம்மை

தல மரம்:

தீர்த்தம் : கம்பா நதி, சிவகங்கை, சர்வ தீர்த்தம்

வழிபட்டோர்:உமையம்மை, பிரம்மா, திருமால், ருத்திரர், சம்பந்தர், அப்பர், சுந்தரர்,மாணிக்கவாசகர், பட்டினத்துப் பிள்ளையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், பரணதேவ நாயனார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

thirukacci_ekambam temple
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் 

தல புராணம்

  • தல புராணம் - மா மரத்தைத் தலமரமாக கொண்டுள்ளதால் ஏகாம்பரம் எனப் பெற்றது. (ஆம்ரம் - மாமரம். ஏகம் + ஆம்ரம் = ஏகாம்ரம் - ஒற்றை மாமரம். இம்மாவடியின்கீழ் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இறைவன்; ஏகாம்ரநாதர் எனப் பெயர் பெற்றார். இப்பெயரே ஏகாம்பரநாதர் என்று வழங்கலாயிற்று. "ஒரு மாவின்கீழ் அரையர்" என்னுந் தனிப்பாடல் தொடர் இங்கு 
    நினைக்கத்தக்கது.  'கம்பர்' என்பது தமிழில் வழங்கும் பெயர். )
  • கச்சி என்பது ஊரின் பெயர்.
  • தவம் செய்த அம்பிகைக்கு இறைவனார் மாமரத்தினடியில் காட்சி தந்து அருள்புரிந்த பதி.
  • உமா தேவி இறைவனிடம் கேட்ட ஆகம முறைப்படி வழிபட விரும்பி இத்தலத்தில் இறைவனைப் பூசித்தார்.
  • மூலவர் - அம்பாள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிருதிவி (மணல்) லிங்கம் ஆகும்.
  • பூசிக்கும்போது, வெள்ளம் பெருக்கெடுத்து எழ, தான் மணலால் நிறுவிய லிங்கத் திருமேனியைக் காமாட்சியம்மை தழுவி அணைக்க, இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச்சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார். இதனால் இறைவனுக்குத் 'தழுவக் குழைந்த பிரான்' என்றும் பெயர்.
  • காமாட்சியம்மை முப்பத்திரண்டு அறங்கள் செய்த இடம்.
  • உமை, திருமகள், வாணி ஆகிய மூவரும் முறையே வழிபட்ட ஏகம்பம், காயாரோகணம், கச்சபேசம், 
    ஆகிய கோயில்கள் உள்ள தலம்.
  • கண் பார்வையிழந்த சுந்தரர் இத்தலத்திற்கு வந்து காமக்கோட்டம் பணிந்து பின்னர்த் திருவேகம்பம் அடைந்து இறையருளால் இடக்கண்பார்வை பெற்ற அற்புதம் நிகழ்ந்த தலம்.
  • பிரம்மா, திருமால், ருத்திரர் பூசித்த இலிங்கங்கள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக்கம்பம், நல்லக்கம்பம் எனப்படுகின்றன.
  • சக்தி பீடமாகிய காமக்கோடிப் பீடம் உள்ள தலம்
  • விகடசக்கர விநாயகர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழிலாக வீற்றிருக்கிறார். (சலந்தரனை அழிக்கத் திருமால் இறைவனை வேண்டிப் பெற்ற சக்கராயுதத்தை, வீரபத்திரர்மேல் ஏவியபோது அவர் அணிந்திருந்த வெண்டலைமாலையில் உள்ள ஒருதலை அதை விழுங்கிவிட்டது. திருமால் பெரிதும் வருந்தினார். இதையறிந்த விஷ்வக்சேனர் வீரபத்திரரிடம் சென்று வேண்டி, அவர் 
    சொல்லியவாறே பிரம கபாலம் சிரிக்கும் வகையில் விகடக் கூத்தாடினார். அக்கூத்தைக் கண்டு பிரமகபாலம் சிரிக்க, சக்கரப்படை கீழே விழுந்தது. அப்போது அருகிலிருந்த விநாயகர், அதை விரைந்து எடுத்துக்கொண்டு, மறுமுறையும் விகடக்கூத்து ஆடுமாறு பணிக்க ,  அவரும் அவ்வாறே ஆடினார். மகிழ்ந்து விநாயகரும் சக்கரப்படையைத் தந்தருளினார். ஆதலின் விகடக் கூத்தினை விரும்பிக்கொண்டமையால் ‘விகடசக்கர விநாயகர்' என்று பெயர் பெற்றார். )

தேவாரப் பாடல்கள் :   பதிகங்கள்: சம்பந்தர்     - 1. வெந்த வெண்பொடிப் பூசு (1.133),                             2. மறையானை மாசிலா (2.12),                             3. கருவார் கச்சி (3.41),                             4. பாயுமால்விடை (3.114);     அப்பர்       -  1. கரவாடும் வன்னெஞ்சர்க்கு (4.7),                              2. நம்பனை நகரமூன்றும் (4.44),                              3. ஓதுவித் தாய்முன் அற (4.99),                              4. பண்டு செய்த பழவினை (5.47),                              5. பூமே லானும் பூமகள் (5.48),                              6. கூற்றுவன் காண் கூற்றுவனை (6.64),                              7. உரித்தவன்காண் உரக்களிற்றை (6.65;     சுந்தரர்       -  1. ஆலந் தானுகந் தமுதுசெய் (7.61); பட்டினத்துப் பிள்ளையார் -   1. மெய்த்தொண்டர் செல்லும் (11.30); பாடல்கள்: சம்பந்தர்        -    உளங்கொள்வார் (1.76.4);             அப்பர்          -    கொடிகொள் செல்வ (5.32.1),                                   காரானை ஈருரிவைப் (6.1.8),                                   தீர்த்தப் புனற்கெடில (6.7.2),                                   விற்றூணொன் றில்லாத (6.8.1,4 & 6),                                  ஊக முகிலுரிஞ்சு (6.16.5),                                   உலர்ந்தார்தம் (6.20.5),                                   வெண்டலையும் (6.22.8),                                   கருவாகிக் குழம்பிருந்து (6.25.6),                                   நன்றருளித் தீதகற்றும் (6.30.7),                                   செடியேறு தீவினைகள் (6.31.2),                                   விண்ணோர் தலைவனே (6.37.7 & 9),                                   எல்லா வுலகமு மானாய் நீயே (6.38.7 & 9),                                   அறைகலந்த (6.40.2),                                     மின்னே ரிடை (6.41.4 & 9),                                   எனக்கென்றும் (6.43.3),                                   நம்பனே (6.44.5),                                   சவந்தாங்கு (6.50.2),                                   வளங்கிளர்மா மதிசூடும் (6.59.9),                                   உரையாரும் (6.62.6),                                   மகிழ்ந்தானைக் (6.63.8),                                   செம்பொன்னை (6.74.4),                                   கருமருவு வல்வினைநோய் (6.76.5),                                   காரார் கடல்நஞ்சை (6.78.9),                                   கங்கையெனுங் (6.79.5),                                     மலைமகள் (6.80.3 & 4),                                   கண்டலஞ்சேர் (6.81.1),                                   கடுவெளியோ (6.82.7),                                   இணையொருவர் (6.83.7),                                   எத்திக்கு மாய்நின்ற (6.84.7);        மாணிக்கவாசகர்   -      ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி (8.4.151 வது வரி) திருவாசகம்,                                   படமாக என்னுள்ளே (8.13.14) திருவாசகம்,                                   ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் (8.14.2) திருவாசகம்,                                   குன்றங் கிடையுங் (8.18.3) திருக்கோவையார்; ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - என்னெஞ்சே உன்னை (11.6.20) க்ஷேத்திரத் திருவெண்பா;       பரணதேவ நாயனார்  -     எரியாடி ஏகம்பம் (11.24.22,56, 57 & 96) சிவபெருமான் திருவந்தாதி;    நம்பியாண்டார் நம்பி   -     தகடன ஆடையன் சாக்கியன் (11.34.42) திருத்தொண்டர் திருவந்தாதி;                சேக்கிழார்   -     கோதிலா அமுது (12.19.67,92 & 99) திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்,                                    திரு வாயிலினைப் (12.21.322,323,326,328 & 329) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                    நீல மா விடம் (12.28.959 & 999) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                     ஆண்ட நம்பி (12.29.186,285,286 & 290) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.    

 

 

 

 

Specialities

  • காஞ்சிபுரம், நிலமகளின் உந்தித் தானம் போன்றது என்று புகழப்படுகின்றது.
  • காஞ்சிபுரம், வரலாற்று நகரம் என்னும் சிறப்புடையது. கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் சிறப்பாக இருந்த செய்தி, சீன யாத்ரிகர் யுவான்சுவாங் குறிப்பின் மூலம் தெரிய வருகின்றது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பதஞ்சலி, தம் பாஷ்யத்துள் காஞ்சியின் சிறப்பைக் கூறியுள்ளார்.
  • காஞ்சிபுரம், கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பல்லவர்களுக்குத் தலைநகராக விளங்கியது.
  • ''கல்வியைக் கரையிலாத காஞ்சிமாநகர்" என்று அப்பர் தேவாரத்தில் புகழப்படும் இத்தலம் 
    பண்டைக்காலத்தில் கல்விக்கு இருப்பிடமாக விளங்கிக் 'கடிகாஸ்தானத்தை'யும், புகழ்பெற்ற 
    அறிஞர்களையும் பெற்றிருந்தது. ஹர்ஷர் காலத்தில் புகழுடன் விளங்கிய நாலந்தாப் பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கிய தர்மபாலரும், பேராசிரியர் தின்னாகரும், பௌத்த சமயத் தத்துவ நூல்களை எழுதி உதவிய போதிதர்மரும் காஞ்சியைச் சேர்ந்தவர்களே.
  • காஞ்சிபுரம் கோயில்கள் மலிந்த நகரம். எப்போதும் விழாக்கள் மலிந்து விளங்கும் நகரமாதலின் 'விழவறாக் காஞ்சி' என்று புகழப்படும் பெருமை பெற்றது.
  • பெரும்பாணாற்றுப்படை, தண்டியலங்காரம் முதலிய நூல்கள் இத்தலத்தின் புகழைப் பாடுகின்றன. 
  • இத்தலபுராணமாகிய காஞ்சிப் புராணம் - மாதவச் சிவஞான சுவாமிகளால் இயற்றப்பட்டது.
  • பஞ்ச பூதத் தலங்களில் இது பிருத்துவித் (மண்) தலம்.
  • முத்தித் தல நகர் ஏழனுள் முக்கியமானது.
  • நகரங்களில் சிறந்த காஞ்சி எனப்படுவது. (நகரேஷு காஞ்சி).
  • வேறு பெயர்கள் - 1.பிரளயசித்து 2. காமபீடம் 3. மும்மூர்த்திவாசம் 4. சிவபுரம் 5. விண்டுபுரம் 6. தபோமயம் 7. சகலசித்தி 8. கன்னிகாப்பு 9. துண்டீரபுரம் 10. சத்திய விரதக்ஷேத்திரம் 11. பூலோக கயிலாயம் 12. பிரமபுரம்
  • உயர்ந்த ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடன் கம்பீரமாகக் காட்சி தருகின்றது. இக்கோபுரம் 
    விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயரால் கி. பி. 1509ல் கட்டப்பட்டதாகும். 'ஒன்பது நிலை தழீஇ ஓங்கும் கோபுரம்' என்பது காஞ்சிப் புராணம்.
  • பூஜை முறைகள் 'காமிக' ஆகம அடிப்படையில் அமைந்தவை
  • மூலஸ்தான மணலாதலால் அதற்கு அபிஷேகம் இல்லை.புனுகுச் சட்டமே சாத்தப்படுகிறது. ஆவுடையாருக்கே அபிஷேகம்.
  • சந்நிதியுள் பெருமான் சோமாஸ்கந்த வடிவில் காட்சி தருகிறார். இம்மூர்த்தம் இராசசிம்ம பல்லவனின் 
    உபயமாகச் செய்துவைக்கப்பட்டது. இதற்குச் சான்றாக இதன் பின்னால் பிரபாவளி செருகுமிடத்தில் சிங்கம் உள்ளது. 
  • ரதசப்தமி நாளில் சூரிய ஒளி சுவாமிமீது படும்.
  • காமாட்சியம்பிகையின் ஆலயம் காமக்கோட்டம் எனப்படும். இறைவனிடம் இருநாழி நெல் பெற்று அம்பிகை முப்பத்திரண்டு அறங்களையும் செய்தருளிய அற்புதத் தலம். 
  • மூவர் பெருமக்களாலும் பாடப் பெற்றத் திருத்தலம்.
  • கந்தபுராணம் தோன்றிய பெருமையுடைய தலம்.
  • திருவேகம்பமும் குமரகோட்டமும் காமக் கோட்டமும் சோமாஸ்கந்த வடிவில் அமைந்திருப்பது இத்தலத்திற்குள்ள தனிச் சிறப்பாகும். 
  • கோயிலுக்கு முன்புள்ளது 'திருக்கச்சி மயானம்' கோயிலாகும். இது வைப்புத் தலமாகும். 
  • ஏகம்பத்தின் நாற்புறத்திலும் நான்கு கோயில்கள் உள்ளன. கச்சிமயானம், வாலீசம், 
    ரிஷபேசம், சத்தியநாதேசம்.
  • நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம் பெற்றது. இங்கு, தீர்த்தம் 
    தரப்பெற்றுச் சடாரியும் சிவாசாரியாரால் சார்த்தப்படுகிறது. 
  • ஐயடிகள் காடவர்கோன் அவதரித்து, ஆட்சி செய்து தொண்டாற்றியத் தலம். அவதாரத் தலம் : திருக்கச்சியேகம்பம் (காஞ்சிபுரம்) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : காஞ்சிபுரம். குருபூசை நாள் : ஐப்பசி - மூலம்.
  • கழற்சிங்க நாயனார் அவதரித்து ஆட்சி செய்த திருப்பதி. அவதாரத் தலம் : திருக்கச்சியேகம்பம் (காஞ்சிபுரம்). வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : காஞ்சிபுரம். குருபூசை நாள் : வைகாசி - பரணி.
  • திருக்குறிப்புத் தொண்ட நாயனார் அவதரித்து சிவனடியார்களுக்கு கந்தை வெளுத்துக் கொடுத்து தொண்டாற்றிய பெரும்பதி. அவதாரத் தலம் : காஞ்சிபுரம். வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : காஞ்சிபுரம் (காந்தி சாலை, ஆடிசன்பேட்டை, காஞ்சிபுரம் மார்க்கெட் அருகில்  உள்ள முத்தீசுவரர் திருக்கோயில்; இத்திருக்கோயில் வளாகத்தில் இவருக்கெனத்  தனிச் சந்நிதி உள்ளது.) குருபூசை நாள் : சித்திரை - சுவாதி.
  • ஐயடிகள் நாயனார், சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் ஆகியோரது திருவுருவச் சிலை திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.
  • பரிமேலழகர், கச்சியப்ப சிவாச்சாரியார் வாழ்ந்த தலம்.
  • காஞ்சி காமக்கோடி சங்கராசாரிய சுவாமிகள் ஸ்ரீமடம், தொண்டை மண்டலாதீனம் திருமடம் உள்ள இடம்.
  • இத்திருத்தலத்தில் பங்குனிப் பெருவிழா மிகச்சிறப்பாக பதினான்கு நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.
  • சுந்தரர் இடக்கண் பெற்ற விழாகொண்டாடப்படுகிறது.
  • கச்சி மயானத்தில் பதினைந்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவைகளில் காகதீயகணபதி (கி.பி.1250) சோழர்களில் உத்தமன், இராசராசன், இராசாதிராசன், குலோத்துங்கன், இராசராசன்ருருபிறரில் விஜயகண்ட கோபாலன், விஜயநகரசதாசிவன் முதலியோர்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. உத்தம சோழன் கல்வெட்டில் வீரராணியார் அவன் தேவி எனக் கூறுகிறது.
  • நடராசர் மண்டபத்தில் புக்கராயன் (கி.பி. 1406) கல்வெட்டு மூன்று இருக்கின்றன.
  • ஆயிரக்கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது.
  • சபாநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டு, பாண்டிய புவனேஸ்வரன் சமரகோலாகலன் (கி.பி.1469) ஏகம்பர் காமாட்சியம்மன் ஆலயங்களுக்குப் பாண்டிநாட்டு ஊர்கள் இரண்டு கொடுத்தான் எனத் தெரிவிக்கிறது. காகதீயகணபதி (கி.பி.1250) காலத்தில் அவர் மந்திரி சாமந்தபோஜன் ஓர் ஊரைத் தானம் செய்தான். மற்றும் விஜயகண்ட கோபாலனது கல்வெட்டு ஒன்றில் அவன் அரசுபெற்றது கி.பி.1250 எனத் தெரிகிறது.
  • ராயர்மண்டபத்தில் கம்பண உடையார் ஆனந்த ஆண்டுக் கல்வெட்டு இருக்கிறது.
  • காமாட்சி அம்மன் கோயில் அச்சுதராயன் (கி.பி.1534) படையெடுத்து வெற்றியடைந்து கோயிலுக்கு எட்டு ஊர்கள் கொடுத்த செய்தி கண்டிருக்கிறது.
  • கோபுரத்தில் விஜயநகரமல்லிகார்ச்சுனனுடைய (கி.பி.1456) கல்வெட்டு இருக்கிறது.
  • ஏகாம்பரநாதருக்கும், நாச்சியார் காமாட்சிக்கும் தேவை காவலன், திருவணைகாவலன், வேதியர்காவலன், வீரகஞ்சுகன், புவனேகவீரன், சமரகோலாகலன் சகாப்தம் 1391 இல் தன்பெயரால் புவனேகவீரன் சந்தியாக ஒருசந்தி பூசைக்கும், மாதம் பிறந்த நட்சத்திரத்திற்கும் விசேட பூசை நடக்கும்படிக்கு அமுதுபடி, கறியமுது, இலையமுது, அடைக்காயமுது, திருப்பரிவட்டம், சாத்துப்படி திருவிளக்கு உட்பட வேண்டும் நிவந்தங்களுக்குப் பாண்டி மண்டலத்து வீரநாரயண வளநாட்டுப் புவனேக வீரநல்லூரையும் சமரகோலாகல நல்லூரையும் விட்டுள்ளான்.
  • சக ஆண்டு 1187 இல் திருஏகம்பமுடையார் திருமுன்பு திருநொந்தாவிளக்கு ஒன்றைச் சந்திர சூரியர் உள்ளவரை எரிப்பதற்குப் புலியூர்க்கோட்டத்து வல்லங்கிழான் பள்ளி கொண்டான் கோயிற் பிள்ளைவைத்துள்ளான். சக ஆண்டு 1172 இல் காஞ்சிபுரத்து உடையார் திருஏகம்பமுடைய நாயனார்க்கு ஜயங்கொண்ட சோழ மண்டலத்துத் தாமர்க்கோட்டத்துக் களத்தூரைத் திருவிடையாட்டம் நீக்கி, ஊர் அடங்கலும் கணபதிதேவன் சந்திக்குத் திருவமுதுபடிகறியமுது உள்ளிட்ட வியஞ்சனங்களுக்கும் சாத்தியருளத் திருப்பரி வட்டங் களுக்கும் திமேற்பூச்சு கற்பூரம் பனிநீர் உள்ளிட்டவற்றிற்கும் இச்சந்தி பூசிக்கும் நம்பிமார்க்கும், திருப்பரிசாரகர்க்கும், திருமஞ்சனம் எடுப் பார்க்கும், திருப்பள்ளித்தாமம் தொடுப்பார்க்கும் மற்றும் இச்சந்திக்கு வேண்டும் நிவந்தங்களுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது. இராஜராஜதேவர்க்கு ஆண்டு இரண்டாவதில் சளுக்கியநாராயணன் மனுமசித்தரசன் திருஏகம்பமுடையார்க்குத் தேவதானமாக மாற்பட மடுவில் பொன்மேந்தகம்பன் வளாகம் என்னும் பெயருள்ள ஆயிரம் குழி நிலத்தை விட்டுள்ளான். இராஜராஜதேவர்க்குயாண்டு பதினைந்தில் ஏகம்பமுடையார்க்குத் திருநுந்தாவிளக்குக்குப் பால்பசு பத்து, சினைப்பசுப் பன்னிரண்டு, வறள்பசு ஆறு, கிடாரி நான்கு, ரிஷபம் ஒன்று ஆக உருக்கள் முப்பத்து மூன்று விடப்பட்டுள்ளன.
  • மூன்றாங்குலோத்துங்க சோழனின் இருபத்தேழாம் ஆட்சியாண்டில் சயங்கொண்டசோழ மண்டலத்து  குவளாலபுர பரமேஸ்வரன், கங்ககுலோற்பவன், சீயகங்கன் அமராபரணனான திருஏகம்பமுடையான் ஏகம்பமுடையார்க்கு நொந்தா விளக்கு ஒன்றினுக்கு முப்பத்திரண்டு பசுவைக் கொடுத்துள்ளான்.
  • கச்சி ஏகாம்பரநாதர் கோயிலின் கீழக்கோபுரத்திற்கு அருகில் ஆலாலசுந்தரன் மடம் ஒன்று இருந்தது. புதுக்கோடு மருந்தவள்ளலின் சிஷ்யனாகிய திருநாவலூர், கூடலுடையான் தழுவக்குழைந்தான் நிலம் அளித்திருந்தான். அம்மடத்தைப்பற்றி, சகம் 1403-இல் குறிப்பிடப் பெற்றுள்ளது. இதுவன்றி ஈசானதேவர் மடம் ஒன்றும் இருந்தது.
  • சகம் 1378-இல் ஏற்பட்ட மல்லிகார்ச்சுன தேவ மகாராயர் கல்வெட்டு, புதுப்பாக்கம், வேளையூர் இவை இரண்டு ஊர்களும் திருவேகம்பமுடைய நாயனார்க்கும், காமாட்சி தேவியார்க்கும் முறையே கொடுக்கப்பட்டன என்பதைக் குறிக்கின்றது.

Contact Address

அமைவிடம் அ/மி. ஏகாம்பரேசுவரர் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631 502. தொலைபேசி : 044 - 27222084, 044 - 27230343, +91-94431 29456, +91-98459 54730. மாநிலம் : தமிழ் நாடு தமிழகத்தின் முக்கிய ஊர்களில் ஒன்று. சென்னையிலிருந்தும் பிற ஊர்களிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.

Related Content

திருக்கச்சிமேற்றளி (திருமேற்றளீஸ்வரர் கோயில், பிள்ளையார்பாள

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

திருக்கச்சிஅனேகதங்காவதம் (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்

திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்தில

திருமாற்பேறு தலவரலாறு (திருமால்பூர்)