கருவார் கச்சித், திருவே கம்பத்
தொருவா வென்ன, மருவா வினையே. 1
மதியார் கச்சி, நதியே கம்பம்
விதியா லேத்தப், பதியா வாரே. 2
கலியார் கச்சி, மலியே கம்பம்
பலியாற் போற்ற, நலியா வினையே. 3
வரமார் கச்சிப், புரமே கம்பம்
பரவா ஏத்த, விரவா வினையே. 4
படமார் கச்சி, இடமே கம்பத்
துடையா யென்ன, அடையா வினையே. 5
நலமார் கச்சி, நிலவே கம்பம்
குலவா வேத்தக், கலவா வினையே. 6
கரியின் னுரியன், திருவே கம்பன்
பெரிய புரமூன், றெரிசெய் தானே. 7
இலங்கை யரசைத், துலங்க வூன்றும்
நலங்கொள் கம்பன், இலங்கு சரணே. 8
மறையோன் அரியும், அறியா வனலன்
நெறியே கம்பம், குறியால் தொழுமே. 9
பறியாத் தேரர், நெறியில் கச்சிச்
செறிகொள் கம்பம், குறுகு வோமே. 10
கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம்
மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே.
சுவாமி : தழுவக்குழைந்த நாதர்; அம்பாள் : ஏலவார்குழலி. 11
திருச்சிற்றம்பலம்