தாழை Pandanus Odoratissimus, Roxb.; Pandanaceae.
ஏழைமார் கடைதோ றுமிடு பலிக்கென்று
கூழைவா ளரவாட் டும்பிரா னுறைகோயில்
மாழையொண் கண்வளைக் கைநுளைச் சியர்வண்பூந்
தாழைவெண் மடற்கொய்து கொண்டாடு சாய்க்காடே.
. - திருநாவுக்கரசர்.
திருச்சாய்க்காடு, பல்லவனம், திருமயேந்திரப்பள்ளி சங்கவனேச்வரம் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக விளங்குவது தாழையாகும். இது கைதை, கேதை, கண்டல் என்றும் குறிக்கபெறும். விளிம்பில் முள்ளுள்ள நீண்ட தோல் போன்ற இலைகளையுடைய சிறுமரங்கள்; விழுதுகளைப் போன்ற புறவேர்கள் உள்ளன. மணம் மிக்க மலர்களைக் கொண்டது. தமிழகமெங்கும் கடற் கரைகளிலும் காணப்பெறும். செந்தாழை, வெண்தாழை என்ற இருவகைகள் காணப்படுகின்றன. வெண்தாழையே எளிதிற் கிடைக்கக் கூடியதாகவுள்ளது. இலை, பூ, சாறு, விழுது ஆகியவை மருத்துவக் குணமுடையது.
வியர்வை பெருக்குதல், வலி நீக்குதல், நாடிநடையை மிகுத்து உடல்வெப்பந் தருதல் ஆகிய குணங்களை உடையது.
திருமுறைகளில் தாழை / கைதை / கேதகை பற்றிய குறிப்பு :-
கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல்
குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர்
வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்
யாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந்
துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற்
தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப்
புள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே. 6
மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய
நிகரொப் பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே. 3
ஏழை வெண்குரு கயலே
யிளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடற் புல்குந்
தண்மறைக் காடமர்ந் தார்தாம்
மாழை யங்கய லொண்கண்
மலைமகள் கணவன தடியின்
நீழ லேசர ணாக
நினைபவர் வினைநலி விலரே. 4
மொட்டையமண் ஆதர்துகில்
மூடுவிரி தேரர்
முட்டைகள் மொழிந்தமுனி
வான்றனிட மென்பர்
மட்டைமலி தாழைஇள
நீரதிசை பூகம்
பட்டையொடு தாறுவிரி
கின்றபழு வூரே. 10
கட்டலர்த்த மலர்தூவிக்
கைதொழுமின் பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருத்தி
கோங்கமருந் தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை
முருகுயிர்க்குங் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டெம்
பரமேட்டி பாதமே. 4
விடமுண்ட மிடற்றண்ணல்
வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை
மலர்நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை
தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்த
நகைகாட்டுங் காட்சியதே. 4
ஏழைமார் கடைதோ
றுமிடு பலிக்கென்று
கூழைவா ளரவாட்
டும்பிரா னுறைகோயில்
மாழையொண் கண்வளைக்
கைநுளைச் சியர்வண்பூந்
தாழைவெண் மடற்கொய்து
கொண்டாடு சாய்க்காடே. 5
அலைவளர் தண்மதி யோடய
லேயடக் கியுமை
முலைவளர் பாகமு யங்கவல்
லமுதல் வன்முனி
இலைவளர் தாழைகள் விம்முகா
னல்இரா மேச்சுரம்
தலைவளர் கோலநன் மாலையன்
தானிருந் தாட்சியே. 1
கோழைமிட றாககவி கோளுமில
வாகஇசை கூடும்வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன
சொல்மகிழும் ஈசனிடமாம்
தாழையிள நீர்முதிய காய்கமுகின்
வீழநிரை தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல்
சேறுசெயும் வைகாவிலே. 1
போழுமதி தாழுநதி பொங்கரவு
தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி யேழையிள
மாதினொ டிருந்தபதிதான்
வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை
துன்னுபொழில் மாடுமடலார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தமென
உந்துதகு சண்பைநகரே. 3
மொட்டையமண் ஆதர்முது தேரர்மதி
யில்லிகள் முயன்றனபடும்
முட்டைகள் மொழிந்தமொழி கொண்டருள்செய்
யாதமுதல் வன்றனிடமாம்
மட்டைமலி தாழையிள நீர்முதிய
வாழையில் விழுந்தஅதரில்
ஒட்டமலி பூகம்நிரை தாறுதிர
வேறுதவி மாணிகுழியே. 10
அலைவளர் தண்புனல் வார்சடைமேல்
அடக்கி யொருபாகம்
மலைவளர் காதலி பாடஆடி
மயக்கா வருமாட்சி
இலைவளர் தாழை முகிழ்விரியும்
இராமேச் சுரமேயார்
தலைவளர் கோலநன் மாலைசூடுந்
தலைவர் செயுஞ்செயலே. 3
ஞாழலுஞ் செருந்தியும்
நறுமலர்ப் புன்னையுந்
தாழைவெண் குருகயல்
தயங்கு கானலில்
வேழம துரித்தவெண்
காடு மேவிய
யாழின திசையுடை
இறைவ ரல்லரே. 4
கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்
கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர்
பண்டலர் அயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்
படர்சடை யடிகளார் பதியத னயலே
வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்
மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற்
கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 2
கந்தமுந் தக்கைதை பூத்துக்
கமழ்ந்து சேரும்பொழிற்
செந்துவண் டின்னிசை பாடல்மல்
குந்திகழ் சிக்கலுள்
வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி
ரான்விரை யார்கழல்
சிந்தைசெய் வார்வினை யாயின
தேய்வது திண்ணமே. 4
வெறிகொளாருங் கடற்கைதை
நெய்தல்விரி பூம்பொழில்
முறிகொள்ஞாழல் முடப்புன்னை
முல்லைம்முகை வெண்மலர்
நறைகொள்கொன்றைந் நயந்தோங்கும்
நாதற் கிடமாவது
கறைகொளோதங் கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே. 3
பனைமல்கு திண்கை மதமா வுரித்த
பரமன்ன நம்பன் அடியே
நினைவன்ன சிந்தை அடையாத தேரர்
அமண்மாய நின்ற அரனூர்
வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு
முகுளங்க ளெங்கு நெரியச்
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு
திருமுல்லை வாயி லிதுவே. 10
மலையிலங்குஞ் சிலையாக
வேகம்மதில் மூன்றெரித்
தலையிலங்கும் புனற்கங்கை
வைத்தவ்வடி கட்கிடம்
இலையிலங்கும் மலர்க்கைதை
கண்டல்வெறி விரவலால்
கலையிலங்குங் கணத்தினம்
பொலியுங்கடற் காழியே. 7
கொண்டல்சேர் கோபுரங்
கோலமார் மாளிகை
கண்டலுங் கைதையுங்
கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி
மயேந்திரப் பள்ளியுள்
செண்டுசேர் விடையினான்
திருந்தடி பணிமினே. 2
வண்டுவாழுங் குழல்மங்கை
யோர்கூறுகந் தார்மதித்
துண்டமேவுஞ் சுடர்த்தொல்
சடையார்க் கிடமாவது
கெண்டைபாய மடுவில்
லுயர்கேதகை மாதவி
புண்டரீகம் மலர்ப்பொய்கை
நிலாவும் புகலியே. 3
கந்தமார் கேதகைச் சந்தனக்
காடுசூழ் கதலிமாடே
வந்துமா வள்ளையின் பவரளிக்
குவளையைச் சாடியோடக்
கொந்துவார் குழலினார் குதிகொள்கோட்
டாறுசூழ் கொச்சைமேய
எந்தையார் அடிநினைந் துய்யலாம்
நெஞ்சமே அஞ்சல்நீயே. 4
வேதமொடு வேள்விபல வாயினமி
குத்துவிதி யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ
நின்றருள்செ யொருவனிடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு
ஞாழலவை மிக்கஅழகால்
மாதவிமணங்கமழ வண்டுபல
பாடுபொழில் வைகாவிலே. 5
என்றுமோ ரியல்பின ரெனநினை
வரியவ ரேறதேறிச்
சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும்
பலிகொளும் இயல்பதுவே
துன்றுதண் பொழில்நுழைந் தெழுவிய
கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வே
லியுறை செல்வர்தாமே. 2
துறைவளர் கேதகை மீதுவாசம்
சூழ்வான் மலிதென்றல்
கறைவள ருங்கட லோதமென்றுங்
கலிக்கும் கலிக்காமூர்
மறைவள ரும்பொரு ளாயினானை
மனத்தால் நினைந்தேத்த
நிறைவள ரும்புக ழெய்தும்வாதை
நினையா வினைபோமே. 6
பூக்குந் தாழை
புறணி அருகெலாம்
ஆக்குந் தண்பொழில்
சூழ்மறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி
யீர்அடி கேள்உமை
நோக்கிக் காணக்
கதவைத் திறவுமே. 6
பூக்குந் தாழை
புறணி அருகெலாம்
ஆக்கந் தானுடை
மாமறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி
யீர்அடி யார்தமை
நோக்கிக் காண்பது
நும்பணி செய்யிலே. 2
வேழத் தின்னுரி
போர்த்த விகிர்தனார்
தாழச் செஞ்சடை
மேற்பிறை வைத்தவர்
தாழைத் தண்பொழில்
சூழ்ந்தபைஞ் ஞீலியார்
யாழின் பாட்டை
யுகந்த அடிகளே. 5
நெய்தற் குருகுதன் பிள்ளையென்
றெண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடற்புல்கு தென்கழிப்
பாலை யதனுறைவாய்
பைதற் பிறையொடு பாம்புடன்
வைத்த பரிசறியோம்
எய்தப் பெறின்இரங் காதுகண்
டாய்நம் மிறையவனே. 1
காடுடைச் சுடலை நீற்றர்
கையில்வெண் டலையர் தையல்
பாடுடைப் பூதஞ் சூழப்
பரமனார் மருத வைப்பிற்
தோடுடைக் கைதை யோடு
சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த
ஏடுடைக் கமல வேலி
இடைமரு திடங்கொண் டாரே. 1
கண்டகங்காள் முண்டகங்காள்
கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான்
பாட்டோ வாப் பழனத்தான்
வண்டுலாந் தடமூழ்கி
மற்றவனென் தளிர்வண்ணங்
கொண்டநாள் தானறிவான்
குறிக்கொள்ளா தொழிவானோ. 2
வீழக் காலனைக் கால்கொடு
பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறுகந் தானிடங்
கொண்டதுங் கோவலூர்
தாழையூர் தகட்டூர்
தக்களூர் தருமபுரம்
வாழை காய்க் கும்வளர்
மருகல் நாட்டு மருகலே. 1
வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை
மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப்
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 1
இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் டோ ளும்
இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மே லூன்றி
நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாச மாகி
நிற்பனவும் நடப்பனவாம் நின்மலனூர் வினவிற்
பலங்கள்பல திரையுந்திப் பருமணிபொன் கொழித்துப்
பாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக்
கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்றென் கரைமேற்
கயலுகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே. 7
சிகரத்திடை இளவெண்பிறை
வைத்தான்இடந் தெரியில்
முகரத்திடை முத்தின்னொளி
பவளத்திரள் ஓதத்
தகரத்திடை தாழைத்திரள்
ஞாழற்றிரள் நீழல்
மகரத்தொடு சுறவங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே. 2
வாழை யின்கனி தானும்
மதுவிம்மு வருக்கையின் சுளையுங்
கூழை வானரந் தம்மிற்
கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டாற்
செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
ஏழை பாகனை யல்லால்
இறையெனக் கருதுத லிலமே. 9
யாழைப்பழித் தன்னமொழி
மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை
வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழி லூடேசென்று
பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்
குண்ணும்மறைக் காடே. 1
மைகொள் கண்டர்எண் தோளர்
மலைமக ளுடனுறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை
குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலங் கழனி
கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்
பைதல் வெண்பிறை யோடு
பாம்புடன் வைப்பது பரிசே. 5
அடல்விடையினன் மழுவாளினன்
அலராலணி கொன்றைப்
படருஞ்சடை முடியுடையவர்க்
கிடமாவது பரவைக்
கடலிடையிடை கழியருகினிற்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே. 6
மைதயங் குந்திரை வாரியை நோக்கி மடலவிழ்பூங்
கைதையங் கானலை நோக்கிக்கண் ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப்
பொய்தயங் குந்நுண் மருங்குல்நல் லாரையெல் லாம்புல்லினாள்
பைதயங் கும்மர வம்புரை யும்மல்குற் பைந்தொடியே. 199
குரவம் கோங்கம் குளிர்புன்னை
கைதை குவிந்த கரைகள்மேல்
திரைவந் துலவும் தில்லை
மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண்
டபத்து மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம் ஆட அனல்கை
ஏந்தி அழகன் ஆடுமே. 6
யாதுநீ நினைவ(து) எவரையாம் உடையது
எவர்களும் யாவையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்
பனிமலர்க் கண்ணுள்நின் றகலான்
கேதகை நிழலைக் குருகென மருவிக்
கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர்
மாதவன் மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தன்என் மனம்புகுந் தானே. 9
மாதவியும் புன்னையும்
மண்ணும் மலர்க்குரவும்
கேதகையும் எங்கும்
கெழீஇஇப் - போதின் 25
கேதகையும் சண்பகமும்
நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த
மாதவியின் போதை
மருங்கணைத்துக் - கோதில். 90
வாழ்த்துவ தெம்பர மேயாகும்
அந்தத்து வையமுந்நீர்
ஆழ்த்திய காலத்தும் ஆழா
ததுஅரன் சேவடியே
ஏத்திய ஞானசம் பந்தற்
கிடம்இசைத் தும்பிகொம்பர்க்
காத்திகழ் கேதகம் போதகம்
ஈனும் கழுமலமே. 22
வாழை முழுமுதல்
துமியத் தாழை
இளநீர் விழுக்குலை
உதிரத் தாக்கிக் 11.018
மன்றுளாடு மதுவின் நசை யாலே மறைச்
சுரும் பறை புறத்தின் மருங்கே
குன்று போலு மணி மாமதில் சூழுங்
குண்ட கழக்கமல வண்டலர் கைதைத்
துன்று நீறு புனை மேனிய வாகித்
தூயநீறு புனை தொண்டர்கள் என்னச்
சென்று சென்று முரல்கின்றன கண்டு சிந்தை
அன்பொடு திளைத்து எதிர் சென்றார். 96
குழல் செய் வண்டு இனம்
குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி
முழவு கார் கொள
முல்லைகள் முகைப்பன முல்லை
மழலை மென் கிளி
மருதமர் சேக்கைய மருதம்
நிழல் செய் கைதை சூழ்
நெய்தலங் கழியன நெய்தல். 10
சூத பாடலங்கள் எங்கும்சூழ்
வழை ஞாழல் எங்கும்
சாதி மாலதிகள் எங்கும்
தண்தளிர் நறவம் எங்கும்
மாதவி சரளம் எங்கும்
வகுள சண்பகங்கள் எங்கும்
போதவிழ் கைதை எங்கும்
பூக புன்னாகம் எங்கும். 29
ஆங்கவர் விட முன்
போந்த அறிவுடைமாந்தர் அங்கண்
நீங்கி வண்தமிழ் நாட்டு எல்லை
பிற்பட நெறியின் ஏகி
ஞாங்கர் நீர் நாடும் காடும்
நதிகளும் கடந்து வந்து
தேன் கமழ் கைதை நெய்தல்
திருமறைக் காடு சேர்ந்தார். 608
கெழு மலர் மாதவி புன்னை
கிளைஞாழல் தளை அவிழும்
கொழு முகைய சண்பகங்கள் குளிர்
செருந்தி வளர் கைதை
முழு மணமே முந் நீரும்
கமழ மலர் முருகு உயிர்க்கும்
செழு நிலவின் துகள் அனைய
மணல் பரப்பும் திருப்பரப்பு. 4
சுழிப் புனல் கடல் ஓதமுன்
சூழ்ந்து கொண்டு அணிய
வழிக் கரைப் பொதி
பொன்னவிழ்ப்பன மலர்ப் புன்னை
விழிக்கு நெய்தலின் விரை
மலர்க் கட்சுரும்பு உண்ணக்
கழிக்கரைப் பொதி சோறு
அவிழ்ப்பன மடற்கைதை. 36
நள்ளிருட்கண் நின்று ஆடுவார் உறை
பதி நடுவு கண்டன போற்றி
முள்ளிடைப் புற வெள் இதழ்க்
கேதகை முகிழ் விரி மணம் சூழப்
புள்ளிடைத் தடம் பழனமும் படு
கரும்புடை கழிந்திடப் போந்து
கொள்ளிடத் திரு நதிக்கரை அடைந்தனர்
கவுணியர் குல தீபர். 145