தருப்பை Imperata Cylindrica, Var. Kinigii; Dur.; Gramineae.
உள்ளா றாததோர் புண்டரி கத்திரள்
தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக்
கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை
நள்ளா றாஎன நம்வினை நாசமே.
. - திருஞானசம்பந்தர்.
திருநள்ளாறு தலத்தின் தலமரமாக விளங்குவது தருப்பைப் புல் ஆகும். இஃது நீர்வளமிக்க இடங்களான வாய்க்கால் வரப்புகள், ஆற்றங்கரை ஓரங்களில் அடர்ந்து உயர்ந்து வளரும் ஒரு வகை புல்லினமாகும். பூசை முதலிய காரியங்களுக்குப் பயன்படுத்துவதால் அருச்சனைப் புல் என்றும் குறிக்கப்படுகிறது. செடி முழுமையும் மருத்துவக் குணமுடையது.
திருமுறைகளில் தருப்பை பற்றிய குறிப்பு :-
மீது சொரிந்திடும் வெண்ணீறும் கண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே. 10.7.19.12
உப்புனல் விடும்பொழு
துரிஞ்சிய மீசைப்
புன்மயிர் குசையினும்
நம்முடிக் கினிதே, அவன்தலை
தங்கிய சருகிலை
தருப்பையிற் பொதிந்த
அங்குலி கற்பகத்
தலரே 11.019
மனமாய நோய்செய்தான்
வண்கொன்றை தாரான்
மனமாய உள்ளார
வாரான் -மனமாயப்
பொன்மாலை சேரப்
புனைந்தான் புனைதருப்பைப்
பொன்மாலை சேர்சடையான் போந்து. 11.023.75
செய்ய புன் சடை கரந்தது
ஓர் திருமுடிச் சிகையும்
சைவ வெண் திரு நீற்று
முண்டகத்து ஒளித் தழைப்பும்
மெய்யின் வெண் புரி நூலுடன்
விளங்கும் மான் தோலும்
கையில் மன்னிய பவித்திர
மரகதக் கதிரும். 12.013.7
கண்டவர்க்கு உறு காதலின்
மனம் கரைந்து உருகத்
தொண்டர் அன்பு எனும் தூ
நெறி வெளிப் படுப்பார் ஆய்த்
தண்டின் மீதிரு கோவணம்
நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்து அமர் நீதியார்
திரு மடம் குறுக. 12.013.9
ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க
அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாசப்
பூரண கும்பங்கள் நிறை கரகம் ஏந்திப்
புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி
வாரணங்கு முலை உமையாள் குழைத்த
செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரைச்
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது
செழுந்தரளக் குடை நிழல் கீழ்ச் சென்று கண்டார். 12.034.258
செம் பொனின் பரிகலத்தினில்
செந்நெல் வெண்பரப்பின்
வம்பு அணிந்த நீள் மாலை
சூழ் மருங்குற அமைத்த
அம் பொன் வாச நீர்ப் பொற்
குடம் அரசு இலை தருப்பை
பம்பு நீள்சுடர் மணி விளக்கு
ஒளிர் தரும் பரப்பில். 12.034.1185
மா மறை மைந்தர் எல்லாம்
மணத்து எதிர் சென்று மன்னும்
தூமலர்ச் செம் பொன் சுண்ணம்
தொகு நவமணியும் வீசத்
தாமரை மலரோன் போல்வார்
அரசிலை தருப்பை தோய்ந்த
காமர் பொற் கலச நன்னீர்
இருக்குடன் கலந்து வீச. 12.034.1224