logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-coconut-tree

Om symbol

temple-trees-தலமர சிறப்புகள் தென்னை மரம்

Om symbol

தலமர சிறப்புகள்


தென்னை Cocos nucifera, Linn.; Arecaceae.

அடையும் வல்வினை யகல அருள்பவர் அன்னுடை மழுவாம் 
படையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன் 
சடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண் 
விடையர் வீங்கெழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்தாரே. 

                                                                                                                                 . - திருஞானசம்பந்தர்.

திருத்தெங்கூர், வடகுரங்காடுதுறை முதலிய தலங்களில் தென்னை தலமரமாக விளங்குகின்றது. இது நீண்ட ஓலைத் தொகுதியை இலையாகவும், பாளையாக பூங்கொத்தினையும் கிளைகளற்று நெடிதுயர்ந்து வளரும் புல்லின மரமாகும். தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது. பூ, இளநீர், காய், மட்டை ஆகியன மருத்துவக் குணங்கொண்டவை.

பூ சிறுநீர் பெருக்கும், வெப்பகற்றும், உடல் உரமாக்கும், பசி மிகுக்கும். இளநீர் தாகம் தணிக்கும், குளிர்ச்சியுண்டாக்கும், உள்ளழல் அகற்றும். தேங்காய்ப் பால் மலமிளக்கும், தாது வெப்பகற்றும், உடல் பலம் பெருக்கும்.

திருமுறைகளில் தென்னை பற்றிய குறிப்பு :-

பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார் 
போம்வழி வந்திழி வேற்றமானார்
இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும் 
இறையவ ரென்றுமி ருந்தவூராம்
தெங்குயர் சோலைசே ராலைசாலி 
திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்பும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே.  1.008.3 

தெங்குநீண்ட சோலைசூழ்ந்த 
 சிரபுரம் மேயவனை
அங்கம்நீண்ட மறைகள்வல்ல 
 அணிகொள்சம் பந்தன்உரை
பங்கம்நீங்கப் பாடவல்ல 
 பத்தர்கள் பாரிதன்மேற்
சங்கமோடு நீடிவாழ்வர் 
 தன்மையி னாலவரே. 1.047.11

வீளைக்குரலும் விளிசங்கொலியும் 
 விழவின் னொலியோவா
மூளைத்தலைகொண் டடியாரேத்தப் 
 பொடியா மதிளெய்தார்
ஈளைப்படுகில் இலையார்தெங்கிற் 
 குலையார் வாழையின்
பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் 
 பழன நகராரே.  1.067.6 

மலையார் மங்கை பங்கர் 
 அங்கை அனலர் மடலாரும்
குலையார் தெங்கு குளிர்கொள் 
 வாழை யழகார் குடமூக்கில்
முலையா ரணிபொன் முளைவெண் 
 நகையார் மூவா மதியினார்
கலையார் மொழியார் காதல் 
 செய்யுங் காரோ ணத்தாரே.  1.072.3 

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த 
 அரக்கர்கோன் தலைகள்பத்தும்
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக் 
 கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ 
 இளமேதி இரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல 
 வயல்படியுந் திருவையாறே.  1.130.8

தக்கனது பெருவேள்விச் சந்திரன்இந் 
 திரன்எச்சன் அருக்கன்அங்கி
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே 
 தண்டித்த விமலர்கோயில் 
கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு 
 குயர்தெங்கின் குவைகொள்சோலை
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா 
 நீள்வயல்சூழ் முதுகுன்றமே.  1.131.3 

வேன லானை வெருவவுரி
 போர்த்துமை யஞ்சவே
வானை யூடறுக் கும்மதி
 சூடிய மைந்தனார்
தேன்நெய் பால்தயிர் தெங்கிள
 நீர்கரும் பின்தெளி
ஆனஞ் சாடும் முடியானும்
 ஐயாறுடை ஐயனே.  2.006.5 

மங்குல்தங் கும்மறை யோர்கள்மா
 டத்தய லேமிகு
தெங்குதுங் கப்பொழிற் செல்வமல்
 குந்திகழ் சிக்கலுள்
வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி
 ரானடி மேவவே
தங்குமேன் மைசர தந்திரு
 நாளுந்த கையுமே.  2.008.5 

வங்கமலி யுங்கடல்
 விடத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்திசெய்
 திருக்குமிட மென்பர்
கொங்கண வியன்பொழிலின்
 மாசுபணி மூசத்
தெங்கணவு தேன்மலி
 திருப்புகலி யாமே.  2.029.6

மொட்டையமண் ஆதர்துகில்
 மூடுவிரி தேரர்
முட்டைகள் மொழிந்தமுனி
 வான்றனிட மென்பர்
மட்டைமலி தாழைஇள
 நீரதிசை பூகம்
பட்டையொடு தாறுவிரி
 கின்றபழு வூரே.  2.034.10 

நாறுகூ விளநா
 கிளவெண் மதியத்தோ(டு)
ஆறுசூ டும்அம
 ரர்பிரா னுறைகோயில்
ஊறுதேங் கனிமாங்
 கனியோங் கியசோலைத் 
தாறுதண் கதலிப்
 புதல்மேவு சாய்க்காடே.  2.038.3 

ஆறைவட மாகறல் அம்பர்ஐயா
 றணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர்
சேறைதுலை புகலூரக லாதிவை காதலித்தா
 னவன் சேர்பதியே 2.039.5

மடலார்ந்த தெங்கின்
 மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான்
 கபாலீச் சரம்அமர்ந்தான்
அடல்ஆனே றூரும்
 அடிக ளடிபரவி
நடமாடல் காணாதே
 போதியோ பூம்பாவாய்.  2.047.6 

பரும ராமொடு தெங்கு பைங்கத    
 லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்    
கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழித்    
திருவின் நாயக னாய மாலொடு    
 செய்ய மாமலர்ச் செல்வ னாகிய    
இருவர் காண்பரியா னென ஏத்துத லின்பமே.  2.049.9 

கொங்கு லாமலர்ச் சோலை வண்டினம்
 கிண்டி மாமது வுண்டி சைசெயத்
தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னொடுங் கூடிய மண
 வாள னேபிணை கொண்டொர் கைத்தலத்
தங்கையிற் படையாய் அடைந்தார்க் கருளாயே.  2.051.5 

திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும்

சங்குலாவு திங்கள்சூடி
 தன்னையுன்னு வார்மனத்
தங்குலாவி நின்றஎங்க
 ளாதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு
 தேனுலாவு செண்பகம்
அங்குலாவி யண்டநாறும்
 அந்தணாரூ ரென்பதே.  2.101.5 

கங்கைபொங்கு செஞ்சடைக்
 கரந்தகண்டர் காமனை
மங்கவெங்க ணால்விழித்த
 மங்கைபங்கன் மன்னுமூர்
தெங்கினூடு போகிவாழை
 கொத்திறுத்து மாவின்மேல்
அங்கண்மந்தி முந்தியேறும்
 அந்தணாரூ ரென்பதே.  2.101.7 

குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்
விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச்

 செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
 நல்கு மாறருள் நம்பனே.  3.006.3 

நெடுமுடி பத்துடைய
 நிகழ்வாளரக் கன்னுடலைப்
படுமிடர் கண்டயரப்
 பருமால்வரைக் கீழடர்த்தான்
கொடுமடல் தங்குதெங்கு
 பழம்வீழ்குட மூக்கிடமா
இடுமணல் எக்கர்சூழ
 இருந்தானவன் எம்மிறையே.  3.059.8 

கோழைமிட றாககவி கோளுமில
 வாகஇசை கூடும்வகையால்    
ஏழையடி யாரவர்கள் யாவைசொன
 சொல்மகிழும் ஈசனிடமாம்    
தாழையிள நீர்முதிய காய்கமுகின்
 வீழநிரை தாறுசிதறி    
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல்
 சேறுசெயும் வைகாவிலே.  3.071.1 

மொட்டையமண் ஆதர்முது தேரர்மதி
 யில்லிகள் முயன்றனபடும்
முட்டைகள் மொழிந்தமொழி கொண்டருள்செய்
 யாதமுதல் வன்றனிடமாம்
மட்டைமலி தாழையிள நீர்முதிய
 வாழையில் விழுந்தஅதரில்
ஒட்டமலி பூகம்நிரை தாறுதிர
 வேறுதவி மாணிகுழியே.  3.077.10 

தாங்கருங் காலந் தவிரவந் திருவர் 
 தம்மொடுங் கூடினா ரங்கம் 
பாங்கினால் தரித்துப் பண்டுபோ லெல்லாம் 
 பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமாச் 
 செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயில்புகா வீழி 
 மிழலையா னெனவினை கெடுமே.  3.119.4 

கஞ்சிப்போ துடையார் கையிற்கோ சாரக் 
 கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சித்தே விரிய எழுந்தநஞ் சதனை 
 யுண்டம ரர்க்கமு தருளி
இஞ்சிக்கே கதலிக் கனிவிழக் கமுகின் 
 குலையொடும் பழம்விழத் தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழி 
 மிழலையா னெனவினை கெடுமே.  3.119.10 

பூங்கழல்தொழு தும்பரவியும் 
 புண்ணியாபுனி தாவுன்பொற்கழல்
ஈங்கிருக்கப் பெற்றேன் 
 என்னகுறை யுடையேன்
ஓங்குதெங்கிலை யார்கமுகிள 
 வாழைமாவொடு மாதுளம்பல
தீங்கனி சிதறுந் 
 திருவாரூ ரம்மானே.  4.020.4 

சுடலைசேர் சுண்ண மெய்யர் 
 சுரும்புண விரிந்த கொன்றைப்
படலைசேர் அலங்கல் மார்பர் 
 பழனஞ்சேர் கழனித் தெங்கின்
மடலைநீர் கிழிய வோடி 
 அதனிடை மணிகள் சிந்துங்
கெடிலவீ ரட்ட மேய 
 கிளர்சடை முடிய னாரே.  4.028.4 

அருகெலாங் குவளை செந்நெல் 
 அகவிலை யாம்பல் நெய்தல்
தெருவெலாந் தெங்கு மாவும் 
 பழம்விழும் படப்பை யெல்லாங்
குருகினங் கூடி யாங்கே 
 கும்மலித் திறகு லர்த்தி
மருவலா மிடங்கள் காட்டும் 
 வலம்புரத் தடிக ளாரே.  4.055.8 

திங்கள் தங்கிய
 செஞ்சடை மேலுமோர்
மங்கை தங்கும்
 மணாளன் இருப்பிடம்
பொங்கு சேர்மணற்
 புன்னையும் ஞாழலுந்
தெங்கு சேர்கடம்
 பூர்க்கரக் கோயிலே.  5.020.5 

வானஞ் சாடு
 மதியர வத்தொடு
தானஞ் சாதுடன்
 வைத்த சடையிடைத்
தேனஞ் சாடிய
 தெங்கிள நீரொடும்
ஆனஞ் சாடிய
 ஆமாத்தூர் ஐயனே.  5.044.10 

எங்கே என்னை
 இருந்திடம் தேடிக்கொண்டு
அங்கே வந்துஅடை
 யாளம் அருளினார்
தெங்கே தோன்றும்
 திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாஎன்று
 போனார் அதுஎன்கொலோ.  5.050.1 

கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை 
கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி
உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால் 
வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்
மருவாகி நின்னடியே மறவே னம்மான்
மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணந்
திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்
செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே.  6.025.6 

நெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண்
நித்தமண வாளனென நிற்கின் றான்காண்
கையின்மழு வாளொடுமான் ஏந்தி னான்காண்
காலனுயிர் காலாற் கழிவித் தான்காண்
செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னான்காண்
வெய்ய கனல்விளையாட் டாடி னான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.  6.052.5 

தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி
தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்
வீரட்டங் கோகரணங் கோடி காவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி
முழையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங்
கயிலாய நாதனையே காண லாமே.  6.070.1 

கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்
கலைபயில்வோர் ஞானக்கண் ணானான் கண்டாய்
அலைக்கங்கை செஞ்சடைமே லேற்றான் கண்டாய்
அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்
மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டை யூரிற்
கோடீச்சரத் துறையுங் கோமான் றானே.  6.073.2 

தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்
சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி
செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி
மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்
கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.  6.075.4 

தேங்கூ ருந்திருச் சிற்றம்
 பலமுஞ் சிராப்பள்ளி 
பாங்கூர் எங்கள் பிரான்உறை
 யுங்கடம் பந்துறை 
பூங்கூ ரும்பர மன்பரஞ்
 சோதி பயிலும்ஊர் 
நாங்கூர் நாட்டு நாங்கூர்
 நறையூர் நாட்டு நறையூரே.  7.012.4 

பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்
புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய்
நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி
ஞாயிறாய் மதியமாய் நின்றவெம் பரனைப்
பாளைபடு பைங்கமுகின் சூழலிளந் தெங்கின்
படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.  7.040.4 

செருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத்
தேவர்கள்சூ ளாமணியைச் செங்கண்விடை யானை
முருக்குவாய் மலரொக்குந் திருமேனி யானை
முன்னிலையாய் முழுதுலக மாயபெரு மானை
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்பு ளெங்கும்
வேள்வியிருந் திருநிதியம் வழங்குநக ரெங்கும்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.  7.040.5 

வரைமான் அனையார் மயிற்சாயல் நல்லார் 
 வடிவேற் கண்நல்லார் பலர்வந் திறைஞ்சத் 
திரையார் புனலுட் பெய்துகொண்டு மண்டித் 
 திளைத்தெற்று சிற்றா றதன்கீழ்க் கரைமேல் 
நிரையார் கமுகும் நெடுந்தாள் தெங்கும் 
 குறுந்தாட்பலவும் விரவிக் குளிரும் 
விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக் கூடல் 
 விகிர்தா அடியே னையும்வேண் டுதியே.  7.042.3 

தாங்கூர் பிணிநின் னடியார் மேல
 அகல அருளாயே
வேங்கூர் உறைவாய் விளமர் நகராய்
 விடையார் கொடியானே
நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய்
 நல்லூர் நம்பானே
பாங்கூர் பலிதேர் பரனே பரமா
 பழனப் பதியானே.  7.047.6 

காளை யாகி வரையெடுத் தான்றன்
 கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம்
மூளை போத ஒருவிரல் வைத்த
 மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப்
பாளை தெங்கு பழம்விழ மண்டிச்
 செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்
வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்
 மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.  7.057.9 

அங்கங்களும் மறைநான்குடன்
 விரித்தானிடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும்பெண்ணையும்
 பழம்வீழ்மணற் படப்பைச்
சங்கங்களும் இலங்கிப்பியும்
 வலம்புரிகளும் இடறி
வங்கங்களும் உயர்கூம்பொடு
 வணங்கும்மறைக் காடே.  7.071.3 

கொங்கணை சுரும்புண
 நெருங்கிய குளிரிளந்
தெங்கொடு பனைபழம்
 படுமிடந் தேவர்கள்
தங்கிடும் இடந்தடங்
 கடற்றிரை புடைதர
எங்கள தடிகள்நல்
 இடம்வலம் புரமே.  7.072.4 

பரவும் பரிசொன் றறியேன்நான்
 பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும்
 எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத்
 தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக்கோட்டத்
 தையா றுடைய அடிகளோ.  7.077.1 

பழகா நின்று பணிசெய்வார்
 பெற்ற பயனொன் றறிகிலேன்
இகழா துமக்காட் பட்டோர்க்கு
 வேக படமொன் றரைச்சாத்தி
குழகா வாழைக் குலைத்தெங்கு
 கொணர்ந்து கரைமேல் எறியவே
அழகார் திரைக்கா விரிக்கோட்டத்
 தையா றுடைய அடிகளோ.  7.077.4 

அங்கத்துறு நோய்களடி
 யார்மேலொழித் தருளி
வங்கம்மலி கின்றகடல்
 மாதோட்டநன் னகரிற்
பங்கஞ்செய்த மடவாளொடு
 பாலாவியின் கரைமேற்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக்
 கேதீச்சரத் தானே.  7.080.5 

கொங்கணை வண்டரற்றக் 
 குயிலும்மயி லும்பயிலும் 
தெங்கணை பூம்பொழில்சூழ் 
 திருநாகேச் சரத்தானை 
வங்கம் மலிகடல்சூழ் 
 வயல்நாவலா ரூரன்சொன்ன 
பங்கமில் பாடல்வல்லார்  
 அவர்தம்வினை பற்றறுமே. 7.099.1

செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.  8.008.1

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.  8.016.9 

நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் 
 நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய 
 சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் 
 கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி 
 மன்னிப் பொலியுமே.  8.042.3 

தெங்கம் பழங்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத் தொளிர்குளிர் நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றிற் குன்றன்ன மாபதைப்பச்
சிங்கந் திரிதரு சீறூர்ச் சிறுமியெந் தேமொழியே.    8.கோவை.100

ஆண்டி லெடுத்தவ ராமிவர் தாமவ ரல்குவர்போய்த்
தீண்டி லெடுத்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ டெற்றப் பழம்விழுந்து
பாண்டி லெடுத்த பஃறாமரை கீழும் பழனங்களே.    8.கோவை.249

அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.  10.01.14.1

விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம் இள நீரும்
குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.  10.07.19.11

வாழை முழுமுதல் 
 துமியத் தாழை
இளநீர் விழுக்குலை 
 உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் 
 சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை 
 பலவுடன் வெரீஇக் (310) 11.018

சூதத் திரளும் 
 தொகுகனிக ளால்நிவந்த
மேதகுசீர்த் தெங்கின் 
 வியன்பொழிலும் 11.038

பாளை விரி மணங் கமழும் 
 பைங்காய் வன் குலைத்தெங்கின்
தாளதிர மிசை முட்டித் தடம் 
 கிடங்கின் எழப்பாய்ந்த
வாளை புதையச் சொரிந்த 
 பழமிதப்ப வண் பலவின்
நீளமுதிர் கனி கிழி 
 தேன் நீத்தத்தில் எழுந்துகளும்.  12.024.4 

ஓங்கு செந்நெலின் புடையன 
 உயர் கழைக் கரும்பு
பூங்கரும்பு அயல் மிடைவன 
 பூகம் அப்பூகப்
பாங்கு நீள் குலைத் தெங்கு 
 பைங்கதலி வண் பலவு
தூங்கு தீங்கனிச் சூத 
 நீள் வேலிய சோலை.  12.025.27 

தூங்கானை மாடத்துச் சுடர்க் 
 கொழுந்தின் அடிபரவிப் 
பாங்காகத் திருத் தொண்டு செய்து 
 பயின்று அமரும் நாள் 
பூங்கானம் மணம் கமழும் பொருவில் 
 திரு அரத் துறையும் 
தேங்காவின் முகில் உறங்கும் 
 திருமுது குன்றமும் பணிந்து.  12.027.154 

சூதம்நெருங்கு குலைத் தெங்கு
பலவும் பூகஞ்சூழ் புடைத்தாய்
வீதிதோறும் நீற்றின் ஒளிவிரிய
 மேவி விளங்கு பதி
நீதிவழுவா நெறியினராய் நிலவும்
 குடியால் நெடு நிலத்து
மீதுவிளங்கும் தொன்மையது மிழலை
 நாட்டுப் பெரு மிழலை.  12.029.1

மொய் திகழ் சோலை அம் மூதூர் 
 முன் அகன்று அந் நெறி செல்வார் 
செய் தரு சாலி கரும்பு தெங்கு 
 பைம் பூகத்து இடை போய் 
மை திகழ் கண்டர் தம் கோயில் 
 மருங்கு உள்ள எல்லாம் வணங்கி 
எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர் 
 ஈசர்தம் கோயில்.  12.034.296 

நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து 
 நலம் கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப் 
பைம் புனல் மென் பணைத்தேவூர் அணைந்து 
 போற்றிப் பரமர் திருநெல்லிக்காப் பணிந்து பாடி 
உம்பர் பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர் 
 ஓங்கு புகழ்த் திருக் கொள்ளிக்காடும் போற்றி 
செம் பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித் 
 திருமலி வெண்துறை தொழுவான் சென்று சேர்ந்தார்.  12.034.574

கருங்கழி வேலைப் பாலைக் 
 கழிநெய்தல் கடந்தருளித் 
திருந்திய சீர்ப் புனல் நாட்டுத் 
 தென் மேற்பால் திசை நோக்கி 
மருங்கு மிடை தடஞ் சாலி 
 மாடு செறி குலத்தெங்கு 
நெருங்கி வளர் கமுகு உடுத்த 
 நிறை மருத வழிச் சென்றார்.  12.034.625 

 

< PREV <
துளசி
Table of Content> NEXT >
தேற்றாமரம்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)