இறைவர் திருப்பெயர்: அர்த்தநாரீஸ்வரர். (முருகன் - செங்கோட்டு வேலவர்).
இறைவியார் திருப்பெயர்: பாகம்பிரியாள்.
தல மரம்:
தீர்த்தம் : தேவ தீர்த்தம். பிரம தீர்த்தம்
வழிபட்டோர்:சம்பந்தர், கபிலதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், கேதார கௌரி.
Sthala Puranam
மலை சிவந்தநிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி எனப் பல பெயர்களும் உள்ளது.
மலையேற உள்ள படிகளில் 60 ஆம் படி மிகச் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு நின்று சத்தியம் செய்தால் அது நீதி மன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை இருந்ததாம்.
கேதாரகௌரி, மரகத லிங்கத்தைப் பூசித்து, இறைவனின் பாகத்தைப் பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது.
சம்பந்தர் கொங்கு நாட்டுத் தல யாத்திரையில் முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை 'நளிர்சுரம்' பற்றி வருத்த 'அவ்வினைக் கிவ்வினை' என்னும் பதிகம் பாடி, 'தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்' என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு.
இத்தலத்துச் சொல்லப்படும் ஒரு செய்தி :- இங்கு வாழ்ந்த குணசீலர் என்ற புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டாராம். பாண்டிப்புலவரேறு என்பவர்; "சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே" - என்று பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடினாராம்; அப்போது, சிறுவனாக வந்த வேலவன் "அஃது குமரன் திருமால் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே" - எனப் பாட்டினை முடித்து அப்புலவரைத் திரும்பிப் போகும்படிச் செய்தார் என்ற செய்தி இம்மலையடிவாரத்தில் நிகழ்ந்ததாகுமென்று சொல்லப்படுகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வெந்தவெண் ணீறணிந்து (1.107); பாடல்கள் : கபிலதேவ நாயனார் - சிவன்மாட் டுகவெழுதும் (11.23.95), சிவபெருமான் திருவந்தாதி, பட்டினத்துப் பிள்ளையார் - இறைத்தார் புரம்எய்த (11.30.59) திருஏகம்பமுடையார் திருவந்தாதி, சேக்கிழார் - அண்டர் பிரான் (12.28.324 & 327) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
இத்தலம் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் உள்ளன.
வேளாளக்கவுண்டர் மண்டபத்தூண் ஒன்றில் வீரபத்திரர் உருவமும், மற்றொன்றில் அர்ச்சுனன் தவக்கோலம், வேடன், குருவிக்காரியின் உருவமும் சிற்பக்கலையழகு நிறைந்தவை.
அர்த்தநாரீஸ்வரர் மூலவர் - நின்ற திருமேனி. (இலிங்க வடிவமில்லை) பாதி புடவை - பாதி வேஷ்டி அலங்காரம்; இந்த கோலத்திலேயே (மூலவர்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.
திருவடியில் கீழ் குளிர்ந்த நீர் சுரக்கின்றது. இது தேவ தீர்த்தம் எனப்படுகின்றது. இத்தீர்த்தம் நாடொறும் வரும் அன்பர்கட்கு வழங்கப்படுவதைப்போல, அமாவாசை நாள்களில் 3, 4 அண்டாக்களில் சேகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இத்தலத்தில் முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியத் தேவர், மைசூர்கிருஷ்ணராஜ உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.
Contact Address