இறைவர் திருப்பெயர்: | அருட்சோமநாதேஸ்வரர், நிருத்தகானப்பிரியர், கானநிர்த்தனசங்கரர், பத்ரகாளீஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | ஆதித்ய அபயப்ரதாம்பிகை, வேதநாயகி, ஆலாலசுந்தரநாயகி, வேயுறுதோளியம்மை. |
தல மரம்: | |
தீர்த்தம் : | சந்திர புட்கரணி, இந்திர தீர்த்தம், செங்கழு நீரோடை, பத்திரகாளி தீர்த்தம், பருதிகுண்டம், வருண தீர்த்தம் ஆகியன. |
வழிபட்டோர்: | இந்திரன், சூரியன். |
ஊழிக் காலத்தும் இத்தலம் அழியாது நீடித்திருக்குமாதலின் இஃது 'நீடூர் ' என்று பெயர் பெற்றதென்பர்.
தலமரம் மகிழமாதலின் மகிழவனம், மகிழாரண்யம், வகுளாரண்யம் எனவும் இத்தலத்திற்கு பெயர்களுண்டு.
கிருத யுகத்தில் இந்திரனும், திரேதா யுகத்தில் சூரியனும், துவாபர யுகத்தில் பத்திரகாளியும், கலியுகத்தில் நண்டும் பூசித்து பேறு பெற்றுள்ளனர்.
இந்திரன் காவிரி மணலைப் பிடித்து வைத்துப் பூசித்த லிங்கம் - இதுவே இறுகி வெள்ளையாக மாறியது. பின்னால் நண்டு பூசித்ததும்; அதன் கால் சுவடு இலிங்கத்தில் பதிந்துள்ளது. வழிபட்ட இந்திரனுக்கு அம்பாள் அருள் புரிந்ததாகத் தலவரலாறு சொல்லப்படுகிறது.
இந்திரன் காவிரி மணலால் இலிங்கத் திருமேனி எடுத்து மந்திர விதிமுறைகளோடு வழிபடவும் மார்கழித் திருவாதிரை நாளில் இறைவனார் பாடியாடும் பரமனாக வெளிப்பட்டு இந்திரன் முதலான தேவர்களுக்கு அருள் பாலிக்கவே கோடித் தேவர்கள் கும்பிடும் நீடூர் என்றும் இத்தலம் போற்றப்படுகிறது.
தேவாரப் பாடல்கள் : 1. அப்பர் - பிறவாதே தோன்றிய 2. சுந்தரர் - ஊர்வ தோர்விடை ஒன்றுடை
தல மரம் : மகிழ மரம்
சிவலிங்கத் திருமேனி சுயம்பு மூர்த்தியாகும்.
இந்திரன், சூரியன், சந்திரன், காளி, நண்டு ஆகியோர் வழிபட்டத் தலம்.
திருநாவுக்கரசரால் திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமியுடன் இணைத்துப் போற்றிப் பரவப்பட்டது. மேலும் பொதுத் திருத்தாண்டகத்திலும், திருப்புறம்பயம், திருப்பள்ளியின்முக்கூடல் திருத்தாண்டகங்களிலும் போற்றப்பட்ட பெருமைக்குறியது.
திருஞானசம்பந்தர் திருநின்றியூரிலிருந்து திருப்புன்கூர் செல்லும் வழியில் "நாடு சீர் நீடூர் வணங்கி"ச் சென்ற வரலாறு சேக்கிழார் பெருந்தகையரால் குறிக்கப்பட்டுள்ளது.
தன் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஈசன் அடியார்கட்கு உதவியும் பல்சுவை விருந்தளித்தும் மன்னும் அன்பின் நெறிபிறழா வழித்தொண்டாற்றிய முனையடுவார் நாயனாரின் அவதாரத் தலம்; அவர் தொண்டு செய்து முத்தி பெற்ற தலம்.
அவதாரத் தலம் : திருநீடூர். வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : திருநீடூர். குருபூசை நாள் : பங்குனி - பூசம்.
முனையடுவார் நாயனாரின் கைகூப்பியவாறு உள்ள திருமேனி உள்ளது.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநின்றியூர் இறைவரை வணங்கி புகழ் நீடூர் பணியாது திருப்புன்கூர் இறைவரை பணிந்திறைஞ்ச செல்லும்போது, மெய்யுணர்வு ஓங்கவே, நீடூர் இறைவரை வந்துப் பாடிப் பணிந்து தங்கிப் பின் திருப்புன்கூர் சென்ற வரலாற்றை சேக்கிழார் பதிவு செய்துள்ள வண்ணம் எண்ணி மகிழத்தக்கது.
வடமலை நாரணக்குடை மன்னர் என்பவரால் இயற்றப்பட்ட திருநீடூர் தல புராணம் 14 சருக்கம், 400 பாக்களைக் கொண்டுள்ளது; மிக அரிய செய்திகளைக் கொண்டுள்ளது.
சோழ மன்னர்களில் முதல் குலோத்துங்கன், இரண்டாம் இராசராஜன், மூன்றாம் இராசராஜன் ஆகியோர் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன.
முதற்குலோத்துங்கன் காலக் கல்வெட்டுப் பாடலால் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள உமையொடு நிலாவின பெருமானுக்கு மிழலை நாட்டு வேள்கண்டன் மாதவன் உத்தம விமானத்தை அமைத்த செய்திப் பெறப்படுகிறது.
3-வது இராசாதிராசன் காலத்திய கல்வெட்டில் இவ்வூர் ராஜசிகாமணி சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் திரு. அரு. அண்ணாமலை செட்டியார் குடும்பத்தினர் திருப்பணிகளால் முற்றிலும் கற்றளியாக மாற்றப்பட்டது.
அமைவிடம் இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் உள்ளது. மயிலாடுதுறை - நீடூர் பேருந்து வசதி உள்ளது. என். கல்யாணசுந்தரக் குருக்கள், அ/மி. அருட்சோமநாதேசுவரர் திருக்கோயில், நீடூர் - 609 203. மயிலாடுதுறை வட்டம். தொலைபேசி : 04364 - 250 424 , 99436 68084.