இறைவர் திருப்பெயர்: பழமலைநாதர், விருத்தகிரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: பெரிய நாயகி, பாலாம்பிகை, விருத்தாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : நித்யானந்தகூபம், மணிமுத்தாறு, அக்னி, குபேர, சக்கர தீர்த்தங்கள்.
வழிபட்டோர்:முருகப்பெருமான், விபச்சித்து முனிவர், உரோமேச முனிவர், சுக்கிராசாரியார், யாக்ஞவல்க்கிய முனிவர், சிகண்டி, கோசிகன், விதர்க்கண செட்டி, குபேரன் தங்கை, சம்பந்தர், அப்பர், சுந்தரர், சுவேத மன்னர், நாதசர்மா, அநவர்த்தினி, பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், பிரமன், அகஸ்தியர் , குருநமசிவாயர், சிவப்பிரகாசர், இராமலிங்க வள்ளலார் முதலியோர்
- சிவபெருமானால் முதலில் (ஆதியில்) படைக்கப்பெற்றது. எனவே,முதுகுன்றம் எனப்படுகிறது. ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.
- பிரமனும் அகத்தியரும் வழிபட்ட பெருமையுடைய பதி.
- இங்கு இறப்பவர்களுக்கெல்லாம் உமாதேவியார் தமது ஆடையால் வீசி இளைப்பாற்ற, இறைவன் அவர்களுக்கு ஐந்தெழுத்தை உபதேசித்துத், தமது உருவமாக்கும்(சாரூப நிலை) திருப்பதி. ஆதலால், இது காசியினும் மேம்பட்டதாகும்.
"தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்
மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்."
(கந்தபுராணம் - வழிநடைப்படலம்)
- இத்தலத்தின் தல விருட்சமான வன்னிமரம் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆதி காலத்தில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர் திருப்பணி வேலை செய்தவர்களுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்து கூலியாக கொடுத்தார் என்றும் அவை அத்தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ப பொற்காசுகளாக மாறியது என்று தலபுராணம் கூறுகிறது.
- கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு மூலையில் 28 ஆகமக் கோயில் உள்ளது. முருகக் கடவுள் 28 ஆகமங்களையும் சிவலிங்கங்களாக வைத்துப் பூசித்தார் என்பது இதன் வரலாறு. காமிகேசுவரர் முதலாக வாதுளேசர் ஈறாக ஆகமங்களின் பெயர்களை இத்திருமேனிகள் பெற்றுள்ளன.
- சம்பந்தரால், இத் தலத்தை அடையும்போதும், வலஞ் செய்தபோதும், வழிபட்டபோதும் தனித்தனிப் பதிகங்கள் பாடியருளப்பெற்ற பெருமையுடையது.
- சுந்தரர், இறைவனைப் பாடிப் பன்னீராயிரம் பொன்பெற்று அவற்றை மணிமுத்தாறு நதியிலிட்டு, திருவாரூர் கமலாயக் குளத்தில் பெற்றார்.
- இத்தலத்திற்கு 'விருத்த காசி' என்றும் பெயருண்டு. பண்டை நாளில் இத்தலத்துள்ளோர் காசிக்குச் செல்வதில்லை என்ற மரபு இருந்ததாகத் தெரிகின்றது.
- இங்கு வாழ்ந்து சாரூப நிலையடைந்த நாதசர்மா, அநவர்த்தினி ஆகியோரின்
பெயர்களில் அமைந்த கோயில்களும் உள்ளன. - குருநமசிவாயர் என்னும் மகான் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஒருமுறை அவர் திருவண்ணாமலையிலிருந்து தில்லை சென்றார். வழியில் திருமுதுகுன்றத்தில் இரவு தங்கினார். பழமலை நாதரையும் பெரிய நாயகியையும் தரிசித்து விட்டுக் கோயிலுள் ஒருபக்கத்தில் படுத்திருந்தார். பசிமிகுந்தது. பசி உண்டான போதெல்லாம் அம்பிகையைப் பாடி உணவைப் பெற்று உண்ணும் வழக்கமுடைய இவர் பெரிய நாயகியைத் துதித்து
"நன்றி புனையும் பெரிய நாயகி எனுங்கிழத்தி
என்றும் சிவனாரிடக் கிழத்தி - நின்ற
நிலைக் கிழத்தி மேனி முழுநிலக் கிழத்தி
மலைக் கிழத்தி சோறு கொண்டு வா" - என்று பாடினார்.
பெரிய நாயகி, முதியவடிவில் எதிர்தோன்றி "எனைப் பலமுறையும் கிழத்தி என்று ஏன் பாடினாய்?' கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டுவர முடியும் என்று கேட்க; குருநமசிவாயர்
"முத்தி நதி சூழும் முதுகுன் றுறைவாளே
பத்தர் பணியும் பதத்தாளே - அத்தன்
இடத்தாளே முற்றா இளமுலை மேலார
வடத்தாளே சோறு கொண்டு வா" என்று பாடினார்.
அம்மையும் மகிழ்ந்து இளமை நாயகியாக வடிவு கொண்டு வந்து உணவு படைத்தாள் என்று சொல்லப்படுகிறது. இதனால் உண்டானதே பாலாம்பிகை கோயிலாகும்.
- குமாரதேவர் பாடியுள்ள பெரியநாயகியம்மன் பதிகமும்; குருநமசிவாயர் பாடியுள்ள க்ஷேத்திரக்கோவையும்; வள்ளற் பெருமானின் குருதரிசனப் பதிகமும்; சொக்கலிங்க அடிகளார் என்பவர் (19-ஆம் நூற்றாண்டு) எழுதிய பெரியநாயகி பிள்ளைத் தமிழும் இத்தலத்திற்கு உள்ளன. சிவப்பிரகாச சுவாமிகள் பழமலையந்தாதி, பெரியநாயகியம்மை விருத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை, பிக்ஷாடன நவமணிமாலை முதலிய நூல்களைப் பாடியுள்ளார்கள். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஞானக்கூத்தர் என்பவர்தாம்' திருமுதுகுன்றத் தல புராணத்தைத்
தமிழில் பாடியுள்ளார்.
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. மத்தாவரை நிறுவிக்கடல் (1.12),
2. தேவராயும் அசுரராயும் (1.53),
3. நின்று மலர்தூவி (1.93),
4. மெய்த்தாறு சுவையும் (1.131),
5. தேவா சிறியோம் பிழையை (2.64),
6. வண்ணமா மலர்கொடு (3.34),
7. முரசதிர்ந் தெழுதரு (3.99);
அப்பர் - 1. கருமணியைக் கனகத்தின் (6.68);
சுந்தரர் - 1. பொன்செய்த மேனியினீர் (7.25),
2. நஞ்சி யிடையின்று நாளை (7.43),
3. மெய்யை முற்றப்பொடி (7.63);
பாடல்கள் : சம்பந்தர் - அண்ணாமலை (2.39);
அப்பர் - மாவாய்ப் பிளந்துகந்த (6.82);
சுந்தரர் - முந்தையூர் (7.31.1);
பட்டினத்துப் பிள்ளையார் - இறைத்தார் (11.30.59) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;
சேக்கிழார் - தூங்கானை மாடத்துச் (12.21.154) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,
அங்கு நின்று (180.181 & 182) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,
கூடலை ஆற்றூர் (12.29.104,127,132.133) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,
உளத்தில் (12.47.9) ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, இன்று விருத்தாசலம் என்று வழங்கப்படுகிறது. விழுப்புரம் - திருச்சி இரயில் பாதையில் உள்ள முக்கிய இரயில்நிலையமாகும். நிலையத்திலிருந்து 2-கி. மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பஸ் வசதி உள்ளது.
தொடர்பு :
04143 - 230203