கோங்கு (முள்ளிலவு) Bombax malabaricum, DC.; Bombacaceae.
குளிர்தரு திங்கள் கங்கை குரவோடரக் கூவிளமும் மிளிர்தரு புன்சடைமே லுடையான் விடையான் விரைசேர் தளிர்தரு கோங்கு வேங்கை தடமாதவி சண்பகமும் நளிர்தரு நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
. - சுந்தரர்.
திருநன்னிலத்துப் பெருங்கோயில், திருமங்கலக்குடி, திருக்கோடி, திருக்கைச்சினம் முதலிய தலங்களில் கோங்கு தலமரமாக உள்ளது. தற்பொழுது எந்தத் தலத்திலும் வளர்ப்பதாகத் தெரியவில்லை. இது கைபோல் பிரிந்த இலைகளையும், இலையுதிர்ந்த காலத்துத் தோன்றும் மிகவும் செந்நிற மலர்களையும், வெண்ணிறப் பஞ்சிற் பொதிந்த வழவழப்பான உருண்டை விதைகளையும் உடைய நீண்டு ஓங்கி வளரும் மரமாகும். மரம் முழுவதும் கூம்புவடிவ முட்களைக் கொண்டிருக்கும். தமிழகத்துக் காடுகளிலும், ஆற்றோரங்களிலும் தானே வளரும் தன்மை கொண்டவை. இதன் இலை, பூ, விதை, பட்டை, பிசின், பஞ்சு, வேர் ஆகியன மருத்துவக் குணம் கொண்டவை.
இலை குளிர்ச்சியுண்டாக்கி அக உறுப்பு அழற்சியைத் திணிக்கும்; பூ சிறுநீர் பெருக்கும், மலசிக்கலகற்றும்; விதை குருதிப் பெருக்கு அடக்கும், காமம் பெருக்கும்; பட்டை சிறுநீர் மிகுக்கும், உடலுரமாக்கும்; பிசின் குருதிப் பெருக்கை கட்டுப்படுத்தும்; வேர் உடல் வெப்பத்தையும் பலத்தையும் மிகுக்கும்.
< PREV < கொன்றைமரம் |
Table of Content | > NEXT > கோரை |