logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருக்கோளிலி (திருக்குவளை) திருக்கோயில் தலவரலாறு Sthala puranam of Thirukkolili (Thirukkuvalai) Temple

Om symbol

இறைவர் திருப்பெயர்: பிரமபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: வண்டமர் பூங்குழலி.

தல மரம்:

தீர்த்தம் : எதிரே பிரம தீர்த்தம். வடபுறம் முத்தி நதியாகிய சந்திர நதி, தென்புறம் இந்திர தீர்த்தம், மேற்கே அகத்திய தீர்த்தம், தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் அருகில் விநாயக தீர்த்தம், அம்மன் சந்நிதியில் சக்தி தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், பரணதேவ நாயனார், சேக்கிழார், பிரமன், திருமால், இந்திரன், அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், ஹேமகாந்த மன்னன் முதலியோர்.

Loading map...

Sthala Puranam

Tirukkolili temple

  • இத்தலம் மக்கள் வழக்கில் "திருக்குவளை" என்று வழங்கப்படுகிறது.
  • இத்தலத்திற்கு பிரமதபோவனம், கதகாரண்யம் (தேற்றாமரவனம்), புஷ்பவனம், தென்கயிலை எனப்பல பெயர்களுண்டு.
  • ஆதியில் பிரம்மதேவன் படைத்தல் தொழிலைப் பெற விரும்பி புஷ்பவனம் என்னும் இத்தலத்தை அடைந்து சந்திர நதியில் வெண்மணலை எடுத்துச் சிவலிங்கத் திருமேனி செய்து சிவ பூஜை செய்திருந்தார். சிவ பெருமான் வழிபாட்டிற்கு இரங்கிக் காட்சியருளிப் படைத்தல் தொழிலும் வரம்பலவும் அளித்தார். இதனால் இத்தலத்தின் பெயர் பிரம்மபுரம், ப்ரம்மதபோவனம்  என்றும் சுவாமியின் திருப்பெயர் பிரம்மபுரநாதர் என்றும் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்றும் வழங்கப்பட்டது.
  • நவக்கிரகங்கள் முதலியோர்க்கு உண்டாய குற்றங்களை நீக்கி அருள் புரிந்தமையால் "கோளிலி" என்று பெயர் பெற்றது. "கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்" என்பது ஞானசம்பந்தர் வாக்கு.
  • பகாசூரனைக் கொன்றதனால் உண்டான பாவத்தை (பிரமகத்தித் தோஷம்) வீமன் இங்குப் போக்கிக் கொண்டான் என்பது வரலாறு.
  • இத்தலத்திற்கு அருகில் உள்ள குண்டையூரில் வாழ்ந்து வந்த கிழாரின் சிவ பக்திக்கு இறங்கி இறைவன் அளித்த நெல் மலைகளை திருவாரூருக்குக் கொண்டு செல்ல ஆட்கள் வேண்டி சுந்தரர் பெருமான் பதிகம் விண்ணப்பம் செய்து சிவபூதங்களால் அது நிறைவேற்றப்பெற்ற தலம்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :          சம்பந்தர்       -  1. நாளாய போகாமே நஞ்சணியுங் (1.62);                            அப்பர்        -  1. மைக்கொள் கண்ணுமை (5.56),                                              2. முன்ன மேநினை யாதொழிந் (5.57);                            சுந்தரர்       -  1. நீள நினைந்தடி யேனுமை (7.20); பாடல்கள்     :  பரணதேவ நாயனார்   -     கரையேனு மாதர் (11.24.49) சிவபெருமான் திருவந்தாதி;                          சேக்கிழார்     -     மல்லல் நீடிய வலிவலம் கோளிலி (12.28.515) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                                 நீர் ஆரும் சடை முடியார் (12.21.228) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                                 ஆளிட வேண்டிக் (12.29.20) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.  

Specialities

  • சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்மலையை எடுத்துச் செல்ல ஆள்வேண்டிப் பாடிய சிறப்புக்குரியதாய் விளங்குவது இத்தலம்.
  • இத்தலம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. (அவனி விடங்கத்தலம், பிருங்கநடனம்)
  • முன்கோபுரத்தில் பகாசூரன் உருவமும், பிரமகத்தி உருவமும் உள்ளது.
  • இரண்டாம் கோபுரத்தில் தென்புற மதிலில் பிரம்மன் பூஜிப்பதும், பஞ்சபாண்டவர் பூஜித்து வழிபடும் கோலமும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.
  • சுவாமி, அம்பாள் சந்நிதிக்கு நடுவில் அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.
  • இறைவன் வெண் மணலால் ஆன சிவமூர்த்தமாக காட்சி தருகிறார்.
  • இங்குள்ள நவக்கிரகங்கள் ஒருமுகமாகத் தென்திசையை நோக்கி விளங்குகின்றன.
  • ஆலயத்திற்கு தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) உள்ளார்.
  • மாசி மகத்தில் சுந்தரருக்கு பூதங்கள் நெல் அட்டிச் செல்லும் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது,
  • கார்த்திகை நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் தீர்த்தவாரி பிரம்மதீர்த்ததில் நடைபெறுகிறது.
  • ஆண்டுதோறும் தியாகராஜப் பெருமானுக்கு முசுகுந்தார்ச்சனை நடைபெறுகிறது.
  • தைப்பூசத்தில் இந்திர தீர்த்தத்திலும், மார்கழியில் அகஸ்திய தீர்த்தத்திலும், மாசிமகத்தில் சந்திர தீர்த்தத்திலும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
  • ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று இறைவனுக்கு சாம்பிராணித் தைலம் சாற்றி வழிபாடு செய்யப்படுகிறது.
  • இக்கோயிலில் 19 கல்வெட்டுக்கள் - சோழர், பாண்டியர் காலத்தியவை (சடாவர்மன் சுந்தரபாண்டியன், குலசேகரபாண்டியன், இராஜராஜன், இராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜேந்திரன்) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • கல்வெட்டுக்களில் இறைவன் 'திருக்கோளிலி உடைய நாயனார் ' என்றும், தியாகேசர் 'அவனிவிடங்கத் தியாகர் ' என்றும் குறிக்கப்படுகிறார்.

 

முந்தைய தலம்<திருக்கைச்சினம் (கச்சினம்)

 அடுத்த தலம்>திருவாய்மூர்

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - எட்டிக்குடி சாலையில் எட்டிக்குடிக்கு முன்னால் உள்ள தலம்; திருவாரூரிலிருந்து 19-கி. மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது. தொடர்புக்கு :- 04366 - 245 412.
Loading map...

Related Content