logo

|

Home >

hindu-hub >

temples

திருஈங்கோய்மலை (திருவிங்கநாதமலை)

இறைவர் திருப்பெயர்: மரகதாசலேசுவரர், மரகத நாதர்.

இறைவியார் திருப்பெயர்: மரகதவல்லி.

தல மரம்:

தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்

வழிபட்டோர்:அம்பிகைஅம்பிகை, அகத்தியர் (ஈ வடிவில்), சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நக்கீரதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

ingoi (malai) mountainingoi mountainway to ingoimalai templeingoimalai templeingoimalai temple

தற்போது மக்கள் வழக்கில் திருவிங்கநாதலை என்று வழங்குகிறது.

 

  • தக்ஷிணா மூர்த்தியிடம் உபதேசம் பெற்ற சனத் குமார முனிவர், ஒரு சமயம் நந்திகேசுவரரிடம் சென்று , " தாங்கள் முன்பு ஒருமுறை மரகதாசல மகிமை பற்றி சுருங்கக் கூறி அருளியுள்ளீர்கள். தற்போது அதனை விரிவாகக் கூறி அருளவேண்டும் " என்று விண்ணப்பம் செய்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த நந்தியெம்பெருமான் அத்தலப் பெருமையை விரிவாகக் கூறியருளினார்.முன்பொரு சமயம், ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் தங்களுக்குள் யார் வலிமை மிக்கவர் என்ற போட்டி எழுந்தது. அப்போது ஆதிசேஷனானவன் தனது ஆயிரம் முடிகளாலும் மேரு மலையைச் சுற்றிக் கொண்டு, வாயுவைச்  செல்ல முடியாமல் தடுத்தபோது, வாயு சஞ்சாரமற்ற இடங்களில் உயிர்கள் மடியத் தொடங்கின. தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிய ஆதிசேஷன், தனது முடிகளில் ஒன்றைச் சற்று ஒடுக்கி, வாயு செல்ல வழி ஏற்படுத்தினான். வாயுவும் , தனது முழு வேகத்தோடு, அந்த இடைவெளியில் புகுந்து, மேருச் சிகரங்கள் ஐந்தைப் பிடுங்கியவாறு தென்திசை நோக்கிச் சென்றான். அச்சிகரங்கள் வீழ்ந்த இடங்கள் சிவத்தலங்கள் ஆயின. அவற்றுள் ஒன்றே, மரகதாசலம் ஆகும். அங்கு ஆதிசேஷனின் அம்சமாகப் புளிய மரம் முளைத்தது. அதனைச் சிவ ரூபமாகவும் கூறுவர்.
  • பிரமதேவன் இங்கு வந்து மரகதாசலேசுவரரைப் பூஜித்து , சிருஷ்டித்  தொழிலைச் செய்யும் வலிமை பெற்றான் . விஷ்ணுவும் இப்பெருமானை வழிபட்டுக் காக்கும் தொழிலைச் செய்யும் அதிகாரம் பெற்றார். மேலும், யமுனை, ரோமச ரிஷி ஆகியோரும் நற்கதி பெற்றுள்ளனர்.  
  • பிரமன் வழிபட்டது : தனக்கு ஏற்படும் இரஜோகுணம் நீங்க வேண்டி, கிருத யுகத்தில் பிரமதேவன்  இத் தலத்தை அடைந்து பிரம தீர்த்தம் ஏற்படுத்தி அதில், பிரம ஞானம் எனத் தொடங்கும் மந்திரத்தை ஜபித்தவனாக அதில் ஸ்நானம் செய்து, திருப் புளிய மர  நீழலில் ஜபம் செய்தும், தானங்கள் செய்தும் இறைவனைப் பல காலம் பூஜித்து வந்தான். இவ்விடத்தில் செய்யும் தான பலன்களை அளவிடமுடியாது. இதனைச் செய்பவர்கள்    இம்மை மறுமைப் பலன்கள் பெற்று, உத்தம லோகத்தை அடைவர். இங்கு சிவராத்திரி தினத்தில் பிரம தீர்த்த ஸ்நானம் செய்து நறு மலர்களாலும், வில்வத்தாலும் இறைவனை அர்ச்சித்தால், பிற தலங்களில் மூன்று கோடி சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதற்கு ஒப்பாகும். புளியடியையும் பெருமானையும் ஒருங்கே வலம் வருவபர்கள் உலகையே வலம் வந்தவர்களாவார்கள். முனிவர்கள் பலர் இங்குத் தவம் செய்திருக்கிறார்கள். இத்தலத்தில் செய்யப்படும் அன்னதானத்திற்கு விசேஷ பலன் உண்டு. அப்படிச் செய்பவர்கள் செல்வந்தர்களாவர். தெய்வீகம் வாய்ந்த புளிய விருக்ஷத்தை நெடும் தொலைவிலிருந்து தரிசித்தாலும் முக்தி கிட்டும். ஒ சனற்குமார முனிவரே ! இத்தலத்தை நினைத்த நீரும், அதன் மகிமையைப் பகர்ந்த யானும் பாக்கிய சாலிகள் ஆனோம். மறைகளின் முடிவாகவும், முக்தி தரவல்ல புண்ணிய மூர்த்தியாகவும், கற்பகக் கொழுந்தாகவும் அடியார்கள் பொருட்டு நின்மலனாகிய பரமேசுவரன் இங்கு எழுந்தருளியிருக்கிறார்."  என்று நந்தியெம் பெருமான் அருளிச் செய்தார். 
  • உமை வாம பாகம் பெற்றது :  ஒரு காலத்தில், பிருங்கி ரிஷியானவர் அம்பிகையைத் துதியாமல் சிவனை மட்டுமே துதித்து வந்தார். அது கண்டு வருந்திய அம்பிகை, மரகதாசலத்தை அடைந்து, லக்ஷ்மி தீர்த்தம் உண்டாக்கிப் பன்னிரண்டு ஆண்டுகள் ஈசனைக் குறித்துத்தவம் செய்து வந்தாள். கிருபாநிதியாகிய எம்பெருமான் தேவிக்கு முன்னர் தோன்றி, அவள்  வேண்டியபடியே தனது நீங்காத பாகமாக ஏற்றதால்  அர்தநாரீசுவரன் என்று அழைக்கப் பட்டான். இருப்பினும் அவ்வடிவிலுள்ள சிவபாகத்தை மட்டும் பிருங்கி முனிவர் வலம் வரவே, தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டது. நிற்கும் சக்தியை இழந்த அவருக்கு இரங்கிய பெருமான் தண்டம் போன்ற கால் தந்து நிற்கும்படிச் செய்ததாக வரலாறு. இத்தலம் போக மோக்ஷத்தைத் தரவல்லது.. கார்த்திகை சுக்கிர வாரத்தில் இத்தீர்த்தத்தில் நீராடி, பாயசான்னம் தானம் செய்தால், துன்பங்கள் எல்லாம் நீங்கும். நவராத்திரியின்போது வரும் நவமியில் கருநெய்தல் மலர்களால் தேவியின் பாதங்களை அர்ச்சித்தால் கலைகளில் நிபுணர்கள் ஆவார்கள். இத்தீர்த்தத்தைக் கண்ணால் காண்பவன் உலகில் உயர்ந்தவனாவான். பெருமானையும் பெருமாட்டியையும் நியமத்துடன் வழிபட்டால், தம் பித்ருக்களுடன் சிவலோகத்தை அடையலாம். எனவே,இத்தலப் பெருமையை அளவிட்டுச் சொல்வது அரிது. 
  • அகத்தியர் வழிபட்டது : முனிவர்களால் வணங்கப்பெறும் அகத்தியர் தன்  சிஷ்யர்களாகிய பிற முனிவர்களோடு ஒரு சமயம் தீர்த்த யாத்திரையாக திருக் கேதாரம் முதல் திருவிராமேசுவரம் வரை சென்று கொண்டிருக்கும்போது வழியில் கடம்பவனத்தை அடைந்து காவிரியிலிருந்து பன்னிரண்டு குடம் நீர் எடுத்து வந்து கடம்பவன நாதருக்கு அபிஷேகம் செய்து, மலர்களால் அர்ச்சனை செய்து வந்தார். பின்னர், அருகிலுள்ள இரத்தினகிரிக்குச் சென்று, சூரிய தீர்த்தத்தில் நீராடிவிட்டு, காவிரியிலிருந்து  புனிதநீரை  மூன்று குடங்களில் எடுத்துவந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரமும் அர்ச்சனையும் செய்து வேதகீதங்களால் துதித்து, ஆலயத்தை மும்முறை வலம் வந்து, மீண்டும் கடம்பவனத்தை அடைந்தார். மாலைக் காலம் வருவதறிந்த அகத்தியர், காவிரியைக் கடந்து, மரகதாசலத்தை அடைந்தார். அவ்வேளையில், கோயில் அர்ச்சகர்கள் பூஜையை முடித்துக் கொண்டு, ஆலயக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு, சென்று விட்டனர். இதனை அறிந்த அகத்தியர், இறைவனைத் தரிசிக்க முடியாமல் போனது பற்றி மிக்க வருத்தமடைந்தார். அப்போது ஒரு அசரீரி  வாக்கு ஒலித்தது:  " மாபாதகங்களையும் தீர்த்து அருள் புரியும் இம்மலையை அடைந்தபிறகும் ஏன் துயரம் அடைகிறாய் ? பசுக்கள்,பக்ஷிகள், மிருகங்கள் ஆகியவை எந்தக் காலத்தில் இங்கு  வந்தாலும் குற்றமில்லை. அவற்றிலும், காற்று, ஈ, பசு, அக்கினி, நெய், நெல், யோகி, அந்தணர் ஆகியோர் எக்காலத்திலும் அசுத்தமாவதில்லை. ஆகவே நீ இப்போது ஈ உருவில் உள்ளே சென்று இறைவனை வழிபடுவாயாக. இறைவனருளால் அவரது திருமேனியில் தங்கிய தக்ஷகன் என்னும் நாகராஜன் இம்மலையின் மேற்புறம் சர்ப்ப நதி வடிவில் இருக்கிறான். அங்கு ஸ்நானம் செய்பவர்கள் தாம் விரும்பிய வடிவைப்  பெறுவார்கள். ஆகவே நீ அத்தீர்த்தத்தை நாடிச் சென்றால் உன் கருத்து நிறைவேறும் " என்று கூறியவுடன் , மகிழ்வுற்ற அகத்தியர், இறைவனைத் துதித்தார். பெருமானது கருணையினால், அவரது கண்டத்தில் இருந்த தக்ஷகன் , நதி ரூபமாக ஆகிக்  காவிரியோடு கலந்தது. அச்சங்கமத்தில் ஸ்நானம் செய்து ஈ வடிவம் பெறுமாறு அகத்தியருக்கு அசரீரி வாக்கு . அருளியபடியே   சர்ப்ப நதியும் காவிரியும் கூடுமிடத்தில் அகத்தியர் ஸ்நானம் செய்தவுடன் ஈயுருவம் பெற்றார். இவ்வடிவுடன் ஆலயத்தினுள் சென்று, பெருமானைக் கண்ணாரத் தரிசித்தார். மனத்தினால் அனைத்து பூஜைகளையும் செய்தார். பிறகு வெளியில் வந்து சர்ப்ப நதியில் ஸ்நானம் செய்தவுடன் முந்திய முனிவடிவம் பெற்றுத் தனது இருப்பிடம் சென்றடைந்தார். அது முதல் இம்மலை ஈங்கோய் மலை எனப் பெயர் பெற்றது. மாசி மாதப் பௌர்ணமியில் அகத்தியர் சித்திகள் பெற்றதால், அவ்வாறு அந்தநாளில் சர்ப்ப  நதியில்  ஸ்நானம் செய்து இயன்ற அளவு தானங்கள் செய்தால் பாவங்கள் நீங்கப்பெற்று, விரும்பிய சித்திகள் அனைத்தும் கைகூடும். 
  • வீதிஹோத்திரன் முக்தி பெற்றது :   கிருத யுகத்தில் நர்மதை நதி தீரத்தில் அக்னிசர்மா என்ற அந்தணர் சிவபிரானை விதிப்படி வழிபாட்டு வந்தார். அவருக்கு வீதிஹோத்திரன் , தூமகந்தன், மேதாவி ஆகிய மூன்று சீடர்கள் இருந்தனர். ஒருநாள் அக்னிசர்மா வீதிஹோத்திரனை அழைத்து " இன்று நான் செய்யவிருக்கும் பிதுர் சிரார்தத்திற்குத் தேவையான பாலைக் கொண்டு வருவாயாக " என்றார். வீதிஹோத்திரனும் தனது வீட்டிற்குச் சென்று தர்மகேது என்னும் தன்து தந்தையிடம் இது பற்றிக் கூறினான். பிதாவானவர் வீட்டிலிருந்த பாலைக் குடத்தில் நிரப்பி, ஆசிரியரிடம் கொடுக்குமாறு கூறினார். அக்குடத்தை  எடுத்துச் செல்லும் வழியில் பசி மிகுந்ததால் வீதிஹோத்திரன் குடத்திலிருந்த பாலை ஒரு படி அளவு எடுத்துக் குடித்துவிட்டு மீண்டும் குடத்தை நீரால் நிரப்பிக் கொண்டு ஆசிரியரிடம் சென்றான். இவனது செயலை ஞானத்தால் அறிந்த ஆசிரியர், பிதுர் சிரார்தத்திற்குப் பழுது ஏற்பட்டதைக் கண்டு சினந்தவராக, வீதிஹோத்திரனைப் பிசாசாக அலையுமாறு சபித்து விட்டு வேறு பால் கொண்டு வந்து பிதுர் காரியத்தைச் செய்தார். பிசாசாகப் பலவிடங்களிலும் அலைந்த வீதிஹோத்திரனைக் கண்ட கோபில முனிவர்  அவனுக்கு இரங்கி, " மிகக் கொடியதான குருத்துரோகத்தை நீக்க வல்லது மரகதாசலம் மட்டுமே ஆகும். எனவே என்னோடு அங்கு சென்று அங்குள்ள சுதா புஷ்கரணியில் நீராடி சாபம் நீங்கப்பெறுவாய்" என்றார். பாற்கடல் கடையப்பெற்றபோது அதிலிருந்து எழுந்த திவலை இங்கு வந்து விழுந்த வேகத்தால்   இத்தீர்த்தம் உண்டாயிற்று  கோபில முனிவரும் அவனை மரகதாசலத்திற்கு அழைத்துச் சென்று சர்ப்ப நதி சங்கமத்திலும் சுதா புஷ்கரணியிலும் நீராடச் செய்தவுடன் வீதி ஹோத்திரனது பாவம் நீங்கியது. இத்தீர்த்தம் நினைப்பதே தவம். மார்கழி பௌர்ணமியும் திருவாதிரை நக்ஷத்திரமும் கூடிய சுப தினத்தில் இதில் நீராடினால் நற்பலன்கள் வாய்க்கும். இச்சரிதத்தைப் படிப்பவரும் கேட்பவரும் பாவம் நீங்கப்பெற்றுச் சிவனருள் பெறுவர். 
  • தீர்த்தச் சிறப்பு : தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஐராவதம், கற்பக விருக்ஷம்,காமதேனு, உச்சி சிரவம், சிந்தாமணி, மகாலட்சுமி ,அமிர்தம் ஆகியவை தோன்றின. ஆலகாலவிஷம் வெளிப்பட்டபோது அனைவரும் அஞ்சி ஓடிக்  கயிலை நாதனைச் சரண் அடைந்தனர்.   உமாபதியான பரமேசுவரன் அனைவரிடமும் கருணை கூர்ந்து, அவ்விஷத்தை அருந்தி,  கண்டத்தில் இருத்தி, நீலகண்டரானார். எழுந்த அமுதம் சிறு திவலைகளாகப் பல இடங்களில் சிதறியபோது, ஒரு திவலை மரகத மலையின் வட பாகம் வந்து வீழ்ந்தது. இப்புஷ்கரணியின் ஒரு துளி பட்டால் இறந்த மிருகங்களும் ,பறவைகளும் கூட உயிர் பெறலாயின. இத்தீர்த்தத்தை உட்கொண்டால் எல்லாவித விஷங்களும் நீங்கும். பிறவித் துயரும் நீங்கும். இயமனும் இவ்விடத்தில் பொன்னி நதியின் வடபுறம் தீர்த்தம் அமைத்தான். அதில் மார்கழி மாத மங்கள வாரத்தில் நீராடினால் பிறவித்துயர் நீங்கும். பித்ருக்கள் மகிழ்வர். தீர்த்தக்கரையில் செய்யப்படும் தானங்கள்  அளவற்ற பலன் கொடுக்கும். அங்கு கிருஷ்ணனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் மாக மாத பௌர்ணமி ஸ்நான விசேஷம் உடையது. வைகாசி பிரமோற்சவத்தில் சித்திரை நக்ஷத்திரத்தில் நடைபெறும் தேர்த் திருவிழாவைக் கண்டோர் பெறும் பலனை எவ்விதம் சொல்ல முடியும் ? முத்து பவளம், ஸ்படிகம், ருத்ராக்ஷம் ஆகியவற்றால் ஆன மாலைகளைப் பெருமானுக்கு அணிவித்தால் சாயுஜ்ஜிய பதவி பெறலாம். தைப் பூசத்தன்று காவிரியில் நீராடி, ஈங்கோய் மலையை வலம் வந்தால் உலகையே வலம் வந்த பலன் கிட்டும். அவ்வாறு வலம் வந்தால் ஒவ்வொரு அடிக்கும் ஒரு அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறலாம். சுவாமி சன்னதியில் விளக்கேற்றினால் பேரறிவும் ஞானமும் வாய்க்கும். நந்தவனம் அமைத்தல், கீதங்கள் பாடுதல், சிறிது பொழுதேனும் அம்மலையில் இருத்தல் ஆகியவற்றைச் செய்தால் இம்மை மறுமைப் பலன்கள் யாவும் சித்திக்கும். இத்தகைய தொண்டர்கள் சிவபெருமானுடைய திருவடி நீழலைப் பெற்று உய்வார்கள் என்பது சத்திய வாக்கு என்று உரைத்தார் சூத மா முனிவர். 
  • நவசித்தர்கள் பூஜித்தது:   " முனிவர்களே, இத்தல மகாத்மியம் இரகசியமானது; தெய்வ இலக்கணமானது; ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது; நாத்திகர்களுக்கு இதனைப் பகர்ந்தால்  மிகுந்த பாவத்திற்கு ஏதுவாகும். மரகத மலைக்கு ஒன்பது சிகரங்கள் ஏற்பட்ட வரலாற்றை இப்போது கூறுவோம். ஒருசமயம் திருக் கயிலாயத்தில் பெருமானது சன்னதியில் சித்தர்கள் ஒன்பது பேர் சென்று தவம் செய்வதற்கு ஏற்ற இடம் எதுவென்று கேட்க, அம்மையப்பரும், " சித்தர்களே, காவிரியின் வடகரையிலுள்ள மரகத கிரிக்குச் சென்று தவம் செய்தால் யாம் அங்கு உமக்குக்  காட்சி அளித்து வேண்டிய வரங்களை நல்குவோம். இனிமேல் அச்சிகரம் ஒன்பது முடிகளைக் கொண்டு விளங்கும்  " என்றருளினார். அது கேட்டு மகிழ்ந்த சித்தர்கள் மரகதாசலத்தை அடைந்தவுடன் அம்மலைக்கு ஒன்பது முடிகள் உண்டாயின. இந்த அற்புதத்தைக் கண்டு அதிசயித்தசித்தர்கள், காவிரியில் நீராடி, சிவபிரானை இடைவிடாது கருத்தில் இருத்திப்  பன்னிரண்டு ஆண்டுகள்  தவம் செய்தனர்.  அதன்பிறகு, வில்வ  இலைகள், வெட்சி, புன்னை, அரளி, மாதுளை, மந்தாரை, கொங்கு , இலவு ஆகியவற்றால் அர்ச்சித்து, பஞ்ச கவ்யங்களாலும், இளநீர்,சந்தனம் ஆகிய அபிஷேகப் பொருள்களாலும் விதிப்படி பூஜித்தனர். பழ வகைகள், சித்திரான்னம், ஆகிய நிவேதனங்கள் செய்து, சத்ரம், சாமரம்,நிருத்தம்,கீதம்,தாம்பூலம் ஆகிய உபசாரங்கள் செய்து பரமசிவனைத் தோத்திரம் செய்து வணங்கினார்கள்.  சித்தர்களின் தவத்திற்கு இரங்கி சிவபிரான் காட்சி தந்ததும், ஒன்பது சித்தர்களும் விழிகள் ஆனந்த நீர் பெருக, கைகளை உச்சியில் கூப்பியவாறு, பெருமானது பாத கமலங்களில் வீழ்ந்து வணங்கித் தோத்திரம் செய்தனர். " தேவாதி தேவா, மரகதாசல  நாயகா, ஞானமூர்த்தியே, பசுபதியே, பரம யோகியே, மும்மூர்த்திகளுக்கும் மேலானவனே, புவனாதிபதியே, அன்பர்க்கு அன்பனே, வாக்கும் மனமும் கடந்த ஆனந்த மயனே, கருணை வடிவே, பிரணவப் பொருளே, நினது  திருவடிகளை வணங்கி உய்ந்தோம்.உம்மையன்றிப் பிறிதொன்றையும் வேண்டோம்  நின்னடிக்கு அபயம். " என்றெல்லாம் போற்றினர். உலகோர் உய்யும் வண்ணம் இவ்வீங்கோய் மலையில் உமாதேவியாருடன் தாங்கள் எப்பொழுதும் வீற்றிருக்க வேண்டும். இங்கு வரும் அடியார்கள் வேண்டிய யாவும் சித்திக்க அருள் புரிதல் வேண்டும். அறுபத்துநான்கு கலைகளும் எங்களுக்கு எளிதில் விளங்குமாறு கருணை புரிய வேண்டும் " என்று வரம் வேண்டினர். அவ்வாறே ஆகுமாறு வரமருளிய பெருமான் அவர்களை எப்போதும் அம்மலையிலேயே இருக்குமாறு திருவருள் புரிந்தார். அதனால் அவர்கள் இன்னமும் அங்கு வசித்து வருகிறார்கள் என்று முனிவர் கூறினார். 
  • தேன் அபிஷேகச் சிறப்பு :  முன்பு அகத்திய முனிவர் ,தாமே ஈ வடிவம் கொண்டு கானகம் சென்று, தேன் கூடுகளிலிருந்து பெற்ற தேனைக் கொண்டு வந்து பல்லாண்டுகள் மரகதாசலேசுவரரை அபிஷேகித்து வந்ததால் இம்மலை ஈங்கோய் மலை எனப்பட்டது. இப்பொழுதும் ஈ வடிவில் அகத்தியர் பெருமானைத் தேனினால் எந்நாளும் அபிஷேகித்து வருகிறார். வைகாசி,கார்த்திகை மாதங்களில் தேனபிஷேகம் செய்வதால் அவ்வாறு செய்பவர்க்கும் அவரது சுற்றத்தார்க்கும் அளவற்ற புண்ணியம் கிடைக்கும். முன்பு ஒரு குரங்கானது இங்குள்ள (திருப்) புளிய மரத்தின் மீதிருந்த தேன் கூட்டை இழுக்கும்போது அங்கிருந்த தேனீக்கள் வெளிப்பட்டு அக்குரங்கைக் கடித்தன. அத்துன்பத்தால் குரங்கானது, தன்  கையிலிருந்த தேன் கூட்டைக் கை நழுவ விட்டு விட்டது. அக்கூடானது அம்மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின் மீது விழவே, அதில் இருந்த தேன்,  பெருமானுக்கு அபிஷேகமாயிற்று. அப்புண்ணியத்தால் அக்குரங்கானது மறு பிறப்பில் சுப்பிரபன் என்ற அரசனானது. அரசனான சுப்பிரபன், தன் சுற்றமும் படையும் உடன் வர ஈங்கோய் மலையை அடைந்து தானங்கள் பல செய்து, திருப்பணிகள் செய்து, நாள் தோறும் சுவாமிக்குத் தேன் அபிஷேகம் செய்வித்தான். மற்றொரு சமயம், சுப்பிரப மகாராஜாவுக்கு எங்கே தேடியும் தேன் கிடைக்காமல் போகவே, மனம் வருந்தித் தனது காதுகளை வாளினால் அறுக்கத் தொடங்கும்போது ரிஷப வாகனனாய் மரகதாம்பிகையுடன் இறைவன் காட்சி கொடுத்து அவனைக் கயிலையில் சிவ கணங்களுக்கு அதிபன் ஆக்கினார். விண்ணோரும் மண்ணோரும் இவ்வதிசயத்தைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தனர்.  
  • இந்திரன் மந்திரோபதேசம் பெற்றது : முன்னர் கௌதம ரிஷியின் சாபம் பெற்ற தேவேந்திரன், நாணம் கொண்டு ஒரு வாவியினுள் மறைந்திருந்தான். பின்னர் நாரதரின் அறிவுரைப்படி மரகதாசலத்தை அடைந்து அங்கிருக்கும் அகத்திய முனிவரை வணங்கி, அவரிடம் மந்திரோபதேசம் பெற்றான். அம்மந்திரம் மாபாவியர் தியானித்தாலும் கொடிய பாவங்களையும் நீக்க வல்லது. அதற்கு ரிஷி  அகஸ்தியர். சந்தஸ் அனுஷ்டுப். தெய்வம் கிருபாசமுத்திரமாகிய மரகதாசல  நாதர். அம்மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை ஜபிக்குமாறு இந்திரனிடம் அகத்தியர் கூறியருளினார். இந்திரனும் அதன்படியே, அம்மந்திர த்தைப் பல்லாண்டுக் காலம் ஜபித்து வந்தான். அவனது தவத்தைக் கண்ட இறைவன் அவன் முன்பு காட்சி அளித்தருளினார். பரவசப்பட்டவனாய் இந்திரன்,சிவபெருமானைத் தோத்திரம் செய்தான்: ஓ நின்மலா, நான் மறை முடிவே, உலகங்களுக்கு அதிபதியே, ஒப்பற்ற பரம்பொருளே, பார்வதி நாதா, நின் பாதங்களைச் சரண் அடைந்தேன். கொடியேனது பாவங்களைத் தாங்கள்தான் போக்கி அருளி நற்கதி தர வேண்டும்" என்று மனமுருகி வேண்டினான். சிரத்தின் மீது  கைகளை அஞ்சலி செய்தவனாக, " பெருமானே, கௌதமரின்  சாபம் நிவர்த்தி ஆகவேண்டும். அடியேன் தேவரீரது திருவடிகளை எக்காலமும் மறவாத வரம் தர வேண்டும். என்று பிரார்த்தனை செய்ய, பரமனும் அவ்வாறே ஆகட்டும் என வரம் அளித்தருளினான். பாவம் நீங்கப்பெற்ற இந்திரன், திருக்கோயிலைத திருப்பணி பலவும் செய்து, வைகாசி மாதத்தில் உற்சவமும் செய்வித்தான். அமாவாசை, பௌர்ணமி, கிரகண காலங்கள், சிவராத்திரி, பிரதோஷம், ஆகிய நாட்களில் மரகதாசல  மூர்த்திக்குப்  பாலினால் அபிஷேகம் செய்விப்பது பெரும் புண்ணியமாம். அதுவே சிறந்த சிவபுண்ணியமாக வளர்ந்து பலன்களைக் கொடுக்கும் என்பது சத்திய வார்த்தை ."
  • " புண்ணியசாலிகளான முனிவர்களே, நாம் முன் செய்த தவப்பயனால் இம்மகாத்மியத்தை ஓதவும் கேட்கவும் பெற்றோம். இதனை ஆலயங்களிலும் ஆசிரமங்களிலும் படிப்போரும் கேட்போரும் மரகதாசல  மூர்த்தி திருவருளால் இம்மை மறுமைப் பலன்கள் அனைத்தும் பெறுவர் . நிறைவாக, பரமேசுவரனது திருவடி நீழலில் நீங்காது வீற்றிருந்து முக்தி இன்பத்தைப் பெறுவர் ." எனக் கூறி அருளினார். 

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்   :   சம்பந்தர்    -     1. வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் (1.70);         நக்கீரதேவ நாயனார் -     1. அடியும் முடியும் (11.11) திருஈங்கோய்மலை எழுபது; பாடல்கள்    :   அப்பர்      -         ஆல நிழலிருப்பர் (6.17.3),                                           பெரும்புலியூர் விரும்பினார் (6.51.6),                                         நெருப்பனைய திருமேனி (6.54.7),                                         பொழிலானைப் (6.60.10);             மாணிக்கவாசகர் -        சேவகன் ஆகித் (8.2.84 வது வரி பாடல்) கீர்த்தித் திருவகவல்,                                         ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி (8.4.158 வது வரி பாடல்) போற்றித் திருவகவல்,                                         ஏறும் பழிதழை யேன் (8.12.24) சேட்படை,வகுத்துரைத்தல், திருக்கோவையார்;         பரணதேவ நாயனார் -        இடமாய எவ்வுயிர்க்கும் (11.24.96) சிவபெருமான் திருவந்தாதி;    பட்டினத்துப் பிள்ளையார்  -        வையார் மழுப்படை (11.30.16) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;    சேக்கிழார்                 -        பண்பயில் வண்டு (12.28.322 & 323) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                            பரவி அப்பதிகத் (12.29.85) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

 

Specialities

 

அம்பிகை வழிபட்டதால் இதற்கு சிவசக்திமலை என்றும் பெயர் வழங்குகிறது.

 

சிவலிங்கம், பெயருக்கேற்ப மரகதக்கல் போல நல்ல பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கிறது.

 

நக்கீரர் இம்மலை மீதுள்ள பெருமான் மீது 'ஈங்கோய் எழுபது ' என்ற நூலைப் பாடிப் பரவியுள்ளார்.

 

சிவராத்திரியன்று அல்லது முன்நாளில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படுகின்றது.

 

ஈங்கோய்மலைக் கோயில் அருகில் உள்ள வாட்போக்கிமலை, கடம்பந்துறையை பார்க்கிறது; கடம்பந்துறைக் கோயில் ஈங்கோயைப் பார்த்த வண்ணமுள்ளது. இம்மூன்று மலைகளும் சோமாஸ்கந்த வடிவில் உள்ளதென்பர். ஒரேநாளில் காலையில் கடம்பர் கோயிலையும் (கடம்பத்துறை) நண்பகலில் வாட்போக்கியையும், மாலையில் திருஈங்கோய் மலையையும் தரிசித்தல் விசேஷமானது என்பர். 'காலைக் கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் ' என்னும் வழக்குள்ளது. இவ்வாறு தரிசிப்பது எல்லா நாட்களும் ஏற்றவையெனினும் கார்த்திகைச் சோமவாரம் சிறப்பான நாளாகச் சொல்லப்படுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி - சேலம் பெருவழிப் பாதையில் முசிறிக்கு அண்மையில் இத்தலம் உள்ளது. திருச்சி - நாமக்கல் - சேலம் பேருந்துகளில் செல்லலாம். தொடர்பு : 04326 - 262744, 09443950031.

Related Content