அடியும் முடியும்
அரியும் அயனும்
படியும் விசும்பும்பாய்ந்
தேறி - நொடியுங்கால்
இன்ன தென அறியா
ஈங்கோயே - ஓங்காரம்
அன்னதென நின்றான் மலை. 1
அந்தஇள மாக்குழவி
ஆயம் பிரிந்ததற்குக்
கொந்தவிழ்தேன் தோய்த்துக்
குறமகளிர் - சந்தின்
இலைவளைக்கை யாற்கொடுக்கும்
ஈங்கோயே மேரு
மலைவளைக்கை வில்லி மலை. 2
அம்பள வாய்மகளிர்
அம்மனைக்குத் தம்மனையைச்
செம்பவளந் தாவென்னச்
சீர்க்குறத்தி - கொம்பின்
இறுதலையி னாற்கிளைக்கும்
ஈங்கோயே நம்மேல்
மறுதலைநோய் தீர்ப்பான் மலை. 3
அரிகரியைக் கண்டவிடத்
தச்சலிப்பாய் ஓடப்
பிரிவரிய தன்பிடியைப்
பேணிக் - கரிபெரிதும்
கையெடுத்து நீட்டிக்
கதஞ்சிறக்கும் ஈங்கோயே
மையடுத்த கண்டன் மலை. 4
அரியும் உழுவையும்
ஆளியுமே ஈண்டிப்
பரியிட்டுப் பன்மலர்கொண்
டேறிச் - சொரிய
எரியாடி கண்டுகக்கும்
ஈங்கோயே கூற்றம்
திரியாமற் செற்றான் சிலம்பு. 5
ஆளி தொடர
அரிதொடர ஆங்குடனே
வாளி கொடுதொடரும்
மாக்குறவர் - கோளின்
இடுசிலையி னாற்புடைக்கும்
ஈங்கோயே நம்மேற்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று. 6
இடுதினைதின் வேழங்
கடியக் குறவர்
வெடிபடு வெங்கவண்கல்
ஊன்ற - நெடுநெடென
நீண்டகழை முத்துதிர்க்கும்
ஈங்கோயே ஏங்குமணி
பூண்டகழை யேறி பொருப்பு. 7
ஈன்ற குறமகளிர்க்
கேழை முதுகுறத்தி
நான்றகறிக் கேறசலை
நற்கிழங் - கூன்றவைத்
தென்னன்னை உண்ணென்
றெடுத்துரைக்கும் ஈங்கோயே
மின்னன்ன செஞ்சடையான் வெற்பு. 8
ஈன்ற குழவிக்கு மந்தி
இறுவரை மேல்
நான்ற நறவத்தைத்
தான்நணுகித் - தோன்ற
விரலால்தேன் தோய்த்தூட்டும்
ஈங்கோயே நம்மேல்
வரலாம்நோய் தீர்ப்பான் மலை. 9
உண்டிருந்த தேனை
அறுபதங்கள் ஊடிப்போய்ப்
பண்டிருந்த யாழ்முரலப்
பைம்பொழில்வாய்க் -கண்டிருந்த
மாமயில்கள் ஆடி
மருங்குவரும் ஈங்கோயே
பூமயிலி தாதை பொருப்பு. 10
ஊடிப் பிடியுறங்க
ஒண்கதலி வண்கனிகள்
நாடிக் களிறு
நயந்தெடுத்துக் - கூடிக்
குணமருட்டிக் கொண்டாடும்
ஈங்கோயே வானோர்
குணமருட்டுங் கோளரவன் குன்று. 11
எய்யத் தொடுத்தோன்
குறத்திநோக் கேற்றதெனக்
கையிற் கணைகளைந்து
கன்னிமான் - பையப்போ
என்கின்ற பாவனைசெய்
ஈங்கோயே தூங்கெயில்கள்
சென்றன்று வென்றான் சிலம்பு. 12
ஏழை இளமாதே
என்னொடுநீ போதென்று
கூழை முதுவேடன்
கொண்டுபோய் - வேழ
இனைக்குவால் வீட்டுவிக்கும்
ஈங்கோயே நந்தம்
வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு. 13
ஏனம் உழுத
புழுதி இனமணியைக்
கானவர்தம் மக்கள்
கனலென்னக் - கூனல்
இறுக்கங் கதிர்வெதுப்பும்
ஈங்கோயே நம்மேல்
மறுக்கங்கள் தீர்ப்பான் மலை. 14
ஏனங் கிளைத்த
இனபவள மாமணிகள்
கானல் எரிபரப்பக்
கண்டஞ்சி - யானை
இனம்இரிய முல்லைநகும்
ஈங்கோயே நம்மேல்
வினைஇரியச் செற்றுகந்தான் வெற்பு. 15
ஒருகணையுங் கேழல்
உயிர்செகுத்துக் கையில்
இருகணையும் ஆனைமேல்
எய்ய - அருகணையும்
ஆளரிதான் ஓட
அரிவெருவும் ஈங்கோயே
கோளரிக்கும் காண்பரியான் குன்று. 16
ஓங்கிப் பரந்தெழுந்த
ஒள்ளிலவத் தண்போதைத்
தூங்குவதோர் கொள்ளி
எனக்கடுவன் - மூங்கில்
தழையிறுத்துக் கொண்டோச்சும்
ஈங்கோயே சங்கக்
குழையிறுத்த காதுடையான் குன்று. 17
ஓடும் முகிலை
உகிரால் இறஊன்றி
மாடுபுக வான்கை
மிகமடுத்து - நீடருவி
மாச்சீயம் உண்டு
மனங்களிக்கும் ஈங்கோயே
கோச்சீயம் காண்பரியான் குன்று. 18
கண்ட கனிநுகர்ந்த
மந்தி கருஞ்சுனைநீர்
உண்டு குளிர்ந்திலஎன்
றூடிப்போய்க் -கொண்டல்
இறைக்கீறி வாய்மடுக்கும்
ஈங்கோயே நான்கு
மறைக்கீறு கண்டான் மலை. 19
கருங்களிற்றின் வெண்கொம்பால்
கல்லுரல்வாய் நல்லார்
பெருந்தினைவெண் பிண்டி
இடிப்ப - வருங்குறவன்
கைக்கொணருஞ் செந்தேன்
கலந்துண்ணும் ஈங்கோயே
மைக்கொணருங் கண்டன் மலை. 20
கனைய பலாங்கனிகள்
கல்லிலையர் தொக்க
நனைய கலத்துரத்தில்
ஏந்தி - மனைகள்
வரவிரும்பி ஆய்பார்க்கும்
ஈங்கோயே பாங்கார்
குரவரும்பு செஞ்சடையான் குன்று. 21
கடக்களிறு கண்வளரக்
கார்நிறவண் டார்ப்பச்
சுடர்க்குழையார் பாட்டெழவு
கேட்டு - மடக்கிளிகள்
கீதந் தெரிந்துரைக்கும்
ஈங்கோயே ஆல்கீழ்நால்
வேதந் தெரிந்துரைப்பான் வெற்பு. 22
கறுத்தமுலைச் சூற்பிடிக்குக்
கார்யானை சந்தம்
இறுத்துக்கை நீட்டும்ஈங்
கோயே - செறுத்த
கடதடத்த தோலுரிவைக்
காப்பமையப் போர்த்த
விடமிடற்றி னான்மருவும் வெற்பு. 23
கங்குல் இரைதேரும்
காகோ தரங்கேழற்
கொம்பி னிடைக் கிடந்த
கூர்மணியைப் - பொங்கி
உருமென்று புற்றடையும்
ஈங்கோயே காமன்
வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு. 24
கலவிக் களிறசைந்த
காற்றெங்குங் காணா
திலைகைக்கொண் டேந்திக்கால்
வீச - உலவிச்சென்
றொண்பிடிகாற் றேற்றுகக்கும்
ஈங்கோயே பாங்காய
வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு. 25
கன்னிப் பிடிமுதுகிற்
கப்பருவ முட்பருகி
அன்னைக் குடிவர
லாறஞ்சிப் - பின்னரே
ஏன்தருக்கி மாதவஞ்செய்
ஈங்கோயே நீங்காத
மான்தரித்த கையான் மலை. 26
கள்ள முதுமறவர்
காட்டகத்து மாவேட்டை
கொள்ளென் றழைத்த
குரல்கேட்டுத் -துள்ளி
இனக்கவலை பாய்ந்தோடும்
ஈங்கோயே நந்தம்
மனக்கவலை தீர்ப்பான் மலை. 27
கல்லைப் புனம்மேய்ந்து
கார்க்கொன்றைத் தார்போர்த்துக்
கொல்லை எழுந்த
கொழும்புறவின் - முல்லையங்கண்
பல்லரும்பு மொய்த்தீனும்
ஈங்கோயே மூவெயிலும்
கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று. 28
கல்லாக் குரங்கு
பளிங்கிற் கனிகாட்ட
எல்லாக் குரங்கும்
உடன்ஈண்டி - வல்லே
இருந்துகிராற் கற்கிளைக்கும்
ஈங்கோயே மேனிப்
பொருந்தஅராப் பூண்டான் பொருப்பு. 29
கண்கொண் டவிர்மணியின்
நாப்பண் கருங்கேழல்
வெண்கோடு வீழ்ந்த
வியன்சாரல் -தண்கோ
டிளம்பிறைசேர் வான்கடுக்கும்
ஈங்கோயே வேதம்
விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு. 30
காந்தளங் கைத்தலங்கள்
காட்டக் களிமஞ்ஞை
கூந்தல் விரித்துடனே
கூத்தாடச் - சாய்ந்திரங்கி
ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும்
ஈங்கோயே செஞ்சடைமேல்
கார்க்கொன்றை ஏற்றான் கடறு. 31
குறமகளிர் கூடிக்
கொழுந்தினைகள் குத்தி
நறவமாக் கஞ்சகங்கள்
நாடிச் - சிறுகுறவர்
கைந்நீட்டி உண்ணக்
களித்துவக்கும் ஈங்கோயே
மைந்நீட்டுங் கண்டன் மலை. 32
கூழை முதுமந்தி
கோல்கொண்டு தேன்பாய
ஏழை இளமந்தி
சென்றிருந்து - வாழை
இலையால்தேன் உண்டுவக்கும்
ஈங்கோயே இஞ்சி
சிலையால்தான் செற்றான் சிலம்பு. 33
கொல்லை இளவேங்கைக்
கொத்திறுத்துக் கொண்டுசுனை
மல்லைநீர் மஞ்சனமா
நாட்டிக்கொண் - டொல்லை
இருங்கைக் களிறேறும்
ஈங்கோயே மேல்நோய்
வருங்கைக் களைவான் மலை. 34
கொவ்வைக் கனிவாய்க்
குறமகளிர் கூந்தல்சேர்
கவ்வைக் கடிபிடிக்கும்
காதன்மையாற் -செவ்வை
எறித்தமலர் கொண்டுவிடும்
ஈங்கோயே அன்பர்
குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று. 35
கொடுவிற் சிலைவேடர்
கொல்லை புகாமல்
படுகுழிகள் கல்லுதல்பார்த்
தஞ்சி - நெடுநாகம்
தண்டூன்றிச் செல்லுஞ்சீர்
ஈங்கோயே தாழ்சடைமேல்
வண்டூன்றுந் தாரான் மலை. 36
கோங்கின் அரும்பழித்த
கொங்கைக் குறமகளிர்
வேங்கைமணி நீழல்
விளையாடி - வேங்கை
வரவதனைக் கண்டிரியும்
ஈங்கோயே தீங்கு
வரவதனைக் காப்பான் மலை. 37
சந்தனப்பூம் பைந்தழையைச்
செந்தேனில் தோய்த்தியானை
மந்த மடப்பிடியின்
வாய்க்கொடுப்ப - வந்ததன்
கண்களிக்கத் தான்களிக்கும்
ஈங்கோயே தேங்காதே
விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு. 38
சந்தின் இலையதனுள்
தண்பிண்டி தேன்கலந்து
கொந்திஇனி துண்ணக்
குறமகளிர் - மந்தி
இளமகளிர் வாய்க்கொடுத்துண்
ஈங்கோயே வெற்பின்
வளமகளிர் பாகன் மலை. 39
சாரற் குறத்தியர்கள்
தண்மருப்பால் வெண்பிண்டி
சேரத் தருக்கி
மதுக்கலந்து - வீரத்
தமர்இனிதா உண்ணுஞ்சீர்
ஈங்கோயே இன்பக்
குமரன்முது தாதையார் குன்று. 40
தாயோங்கித் தாமடருந்
தண்சாரல் ஒண்கானம்
வேயோங்கி முத்தம்
எதிர்பிதுங்கித் - தீயோங்கிக்
கண்கன்றித் தீவிளைக்கும்
ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கொன்றைத் தாரான் வரை. 41
செடிமுட்டச் சிங்கத்தின்
சீற்றத்தீக் கஞ்சிப்
பிடியட்ட மாக்களிறு
பேர்ந்து - கடம்முட்டி
என்னேசீ என்னுஞ்சீர்
ஈங்கோயே ஏந்தழலிற்
பொன்னேர் அனையான் பொருப்பு. 42
சுனைநீடு தாமரையின்
தாதளைந்து சோதிப்
புனைநீடு பொன்னிறத்த
வண்டு - மனைநீடி
மன்னி மணம்புணரும்
ஈங்கோயே மாமதியம்
சென்னி அணிந்தான் சிலம்பு. 43
செந்தினையின் வெண்பிண்டி
பச்சைத்தே னாற்குழைத்து
வந்தவிருந் தூட்டும்
மணிக்குறத்தி - பந்தியாத்
தேக்கிலைகள் இட்டுச்
சிறப்புரைக்கும் ஈங்கோயே
மாக்கலைகள் வைத்தான் மலை. 44
தடங்குடைந்த கொங்கைக்
குறமகளிர் தங்கள்
இடம்புகுந்தங் கின்நறவம்
மாந்தி - உடன்கலந்து
மாக்குரவை ஆடி
மகிழ்ந்துவரும் ஈங்கோயே
கோக்குரவை ஆடிகொழுங் குன்று. 45
தாமரையின் தாள்தகைத்த
தாமரைகள் தாள்தகையத்
தாமரையிற் பாய்ந்துகளும்
தண்புறவில் - தாமரையின்
ஈட்டம் புலிசிதறும்
ஈங்கோயே எவ்வுயிர்க்கும்
வாட்டங்கள் தீர்ப்பான் மலை. 46
தெள்ளகட்ட பூஞ்சுனைய
தாமரையின் தேமலர்வாய்
வள்ளவட்டப் பாழி
மடலேறி -வெள்ளகட்ட
காராமை கண்படுக்கும்
ஈங்கோயே வெங்கூற்றைச்
சேராமற் செற்றான் சிலம்பு. 47
தேன்பலவின் வான்சுளைகள்
செம்முகத்த பைங்குரங்கு
தான்கொணர்ந்து மக்கள்கை
யிற்கொடுத்து - வான்குணங்கள்
பாராட்டி யூட்டுஞ்சீர்
ஈங்கோயே பாங்கமரர்
சீராட்ட நின்றான் சிலம்பு. 48
தேன்மருவு பூஞ்சுனைகள்
புக்குச் செழுஞ்சந்தின்
கானமர்கற் பேரழகு
கண்குளிர - மேனின்
றருவிகள்தாம் வந்திழியும்
ஈங்கோயே வானோர்
வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு. 49
தோகை மயிலினங்கள்
சூழ்ந்து மணிவரைமேல்
ஓகை செறியாயத்
தோடாட - நாகம்
இனவளையிற் புக்கொளிக்கும்
ஈங்கோயே நம்மேல்
வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு. 50
நறவம் நனிமாந்தி
நள்ளிருட்கண் ஏனம்
இறவி லியங்குவான்
பார்த்துக் - குறவர்
இரைத்துவலை தைத்திருக்கும்
ஈங்கோயே நங்கை
விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு. 51
நாக முழைநுழைந்த
நாகம்போய் நன்வனத்தில்
நாகம் விழுங்க
நடுக்குற்று -நாகந்தான்
மாக்கையால் மஞ்சுரிக்கும்
ஈங்கோயே ஓங்கியசெந்
தீக்கையால் ஏந்தி சிலம்பு. 52
நாகங் களிறுநு(ங்)க
நல்லுழுவை தாமரையின்
ஆகந் தழுவி
அசைவெய்த - மேகங்
கருவிடைக்க ணீர்சோரும்
ஈங்கோயே ஓங்கு
பொருவிடைக்க ணூர்வான் பொருப்பு. 53
பணவநிலைப் புற்றின்
பழஞ்சோற் றமலை
கணவ னிடந்திட்ட
கட்டி - உணவேண்டி
எண்கங்கை ஏற்றிருக்கும்
ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கங்கை ஏற்றான் மலை. 54
பன்றி பருக்கோட்டாற்
பாருழுத பைம்புழுதித்
தென்றி மணிகிடப்பத்
தீயென்று - கன்றிக்
கரிவெருவிக் கான்படரும்
ஈங்கோயே வானோர்
மருவரியான் மன்னும் மலை. 55
பாறைமிசைத் தன்நிழலைக்
கண்டு பகடென்று
சீறி மருப்பொசித்த
செம்முகமாத் - தேறிக்கொண்
டெல்லே பிடியென்னும்
ஈங்கோயே மூவெயிலும்
வில்லே கொடுவெகுண்டான் வெற்பு. 56
பிடிபிரிந்த வேழம்
பெருந்திசைதான் கோடிப்
படிமுகிலைப் பல்காலும்
பார்த்திட் - டிடரா
இருமருப்பைக் கைகாட்டும்
ஈங்கோயே வானோர்
குருவருட்குன் றாய்நின்றான் குன்று. 57
பொருத கரியின்
முரிமருப்பிற் போந்து
சொரிமுத்தைத் தூநீரென்
றெண்ணிக் - கருமந்தி
முக்கிவிக்கி நக்கிருக்கும்
ஈங்கோயே மூவெயிலும்
திக்குகக்கச் செற்றான் சிலம்பு. 58
மறவெங் களிற்றின்
மருப்புகுத்த முத்தம்
குறவர் சிறார்குடங்கைக்
கொண்டு - நறவம்
இளவெயில்தீ யட்டுண்ணும்
ஈங்கோயே மூன்று
வளவெயில்தீ யிட்டான் மலை. 59
மலைதிரிந்த மாக்குறவன்
மான்கொணர நோக்கிச்
சிலைநுதலி சீறிச்
சிலைத்துக் - கலைபிரிய
இம்மான் கொணர்தல்
இழுக்கென்னும் ஈங்கோயே
மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு. 60
மரையதளும் ஆடு
மயிலிறகும் வேய்ந்த
புரையிதணம் பூங்கொடியார்
புக்கு -நுரைசிறந்த
இன்நறவுண் டாடி
இசைமுரலும் ஈங்கோயே
பொன்நிறவெண் ணீற்றான் பொருப்பு. 61
மலையர் கிளிகடிய
மற்றப் புறமே
கலைகள் வருவனகள்
கண்டு -சிலையை
இருந்தெடுத்துக் கோல்தெரியும்
ஈங்கோயே மாதைப்
புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு. 62
மத்தக் கரிமுகத்தை
வாளரிகள் பீறஒளிர்
முத்தம் பனிநிகர்க்கும்
மொய்ம்பிற்றால் - அத்தகைய
ஏனற் புனம்நீடும்
ஈங்கோயே தேங்குபுனல்
கூனற் பிறையணிந்தான் குன்று. 63
மந்தி இனங்கள்
மணிவரையின் உச்சிமேல்
முந்தி இருந்து
முறைமுறையே - நந்தி
அளைந்தாடி ஆலிக்கும்
ஈங்கோயே கூற்றம்
வளைந்தோடச் செற்றான் மலை. 64
மந்தி மகவினங்கள்
வண்பலவின் ஒண்சுளைக்கண்
முந்திப் பறித்த
முறியதனுள் -சிந்திப்போய்த்
தேனாறு பாயுஞ்சீர்
ஈங்கோயே செஞ்சடைமேல்
வானாறு வைத்தான் மலை. 65
முள்ளார்ந்த வெள்ளிலவம்
ஏறி வெறியாது
கள்ளார்ந்த பூப்படியும்
கார்மயில்தான் - ஒள்ளார்
எரிநடுவுட் பெண்கொடியார்
ஏய்க்கும்ஈங் கோயே
புரிநெடுநூல் மார்பன் பொருப்பு. 66
வளர்ந்த இளங்கன்னி
மாங்கொம்பின் கொங்கை
அளைந்து வடுப்படுப்பான்
வேண்டி - இளந்தென்றல்
எல்லிப் புகநுழையும்
ஈங்கோயே தீங்கருப்பு
வில்லிக்குக் கூற்றானான் வெற்பு. 67
வான மதிதடவல்
உற்ற இளமந்தி
கான முதுவேயின்
கண்ணேறித் - தானங்
கிருந்துயரக் கைநீட்டும்
ஈங்கோயே நம்மேல்
வருந்துயரந் தீர்ப்பான் மலை. 68
வேய்வனத்துள் யானை
தினைகவர வேறிருந்து
காய்வனத்தே வேடன்
கணைவிசைப்ப - வேயணைத்து
மாப்பிடிமுன் ஓட்டும்ஈங்
கோயே மறைபரவு
பூப்பிடிபொற் றாளான் பொருப்பு. 69
வழகிதழ்க் காந்தள்மேல்
வண்டிருப்ப ஒண்தீ
முழுகிய தென் றஞ்சிமுது
மந்தி -பழகி
எழுந்தெழுந்து கைநெரிக்கும்
ஈங்கோயே திங்கட்
கொழுந்தெழுந்த
செஞ்சடையான் குன்று. 70
திருச்சிற்றம்பலம்