வழிபட்டோர்:தொண்டைமான், சம்பந்தர், அப்பர், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர்
Sthala Puranam
ஓத்து - வேதம். (ஓதப்படுவதால் வேதம் ஓத்து எனப்படுகிறது.) இறைவன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலின் ஓத்தூர் - 'திரு' அடைமொழி சேர்ந்து 'திருஓத்தூர் ' - திருவோத்தூர் என்றாயிற்று.
நந்தி மூலவரை நோக்காது வாயிலைப் பார்த்தபடி இருக்கிறார். ஈசன் தேவர்களுக்கு வேதப்பொருள் ஓதிக் கொண்டிருந்தபோது இடையூறு வராமல் இருக்க வேறு யாரையும் உள்ளே விடாது பார்த்துக்கொள்ள நந்தி வெளிப்புறம் நோக்கி உள்ளார் என்று தலபுராணம் தெரிவிக்கிறது.
சம்பந்தர் பதிகம் பாடி, இப்பெருமான் அருளால் ஆண்பனை குலையீன்ற பெரும்பதி.
நத்தி சுவாமியை நோக்கியிராமல் முன் கோபுரத்தைப் பார்த்தவண்ணம் உள்ளது. இதுகுறித்து தலப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ள வரலாறு - விசுவாவசு என்னும் மன்னனின் வலிமைக்கு ஆற்றாது தோற்று, ஓடி, காட்டில் திரிந்த தொண்டைமான் வேதபுரீஸ்வரரைத் துதித்து வழங்கினான். இறைவன் காட்சி தந்து, அவனுக்கு அதிக பலத்தையும் சேனைகளையும் அருளி, விசுவாவசுவுடன் போரிட்டு மீண்டும் தன் அரசை எய்துமாறு பணித்தார். கேட்ட மன்னன் 'எங்ஙனம் போரிடுவேன்' என்று அஞ்சியபோது, 'நந்தி உனக்கு படைத் துணையாக வருவார், நீ அதற்கு முன்பாக யாம் கொடுத்த சேனைகளோடு சென்று போரிடுவாயாக' என்றார். மேலும்; "நாம் கூறியதில் உன் மனத்திற்கு சந்தேகமிருப்பின் சாட்சி காட்டுகின்றோர். நீ போய்ப்பார்; அந்த நந்திதேவன் கீழ்த்திசை நோக்கியிருக்கின்றார்." என்றார். அவ்வாறே தொண்டைமான் வந்து பார்க்க, (அவனுக்கு படைத்துணையாகும் நிலையில்) மேற்கு நோக்கியிருந்த நந்திதேவர் கீழ்த்திசையில் திரும்பியிருப்பதைக் கண்டு பயம் நீங்கினான். இறைவன் நந்தியைத் தளபதியாக்கி, சிவகணங்களைக் குதிரைகள் யானைகள் தேர்களைச் சேனைகளாகச் செய்து தந்து, தொண்டடைமானைப் போர்க்கு அனுப்ப, அவனும் அவ்வாறே சென்று, விசுவாவசுவை வென்று நாட்டாட்சியை அடைந்தான்
சுந்தரர் இந்த வழியாக வந்து கொண்டிருந்தபோது நண்பகலில் பசியின் களைப்பு அடைய, சிவபெருமான் ஒரு முதியவர் வடிவில் சென்று பசியாற உணவு கொடுத்தார். அவரிடம் சுந்தரர் உணவு கொடுத்த நீங்கள் பருகுவதற்கு நீரும் தர வேண்டும் என்று கேட்க, நீர் கிடைக்கும் என்று முதியவர் நகர, அவ்விடத்தில் இருந்து நீர் ஊற்று துவங்கியது. சுந்தரர் முதியவர் சென்ற திசையில் நந்தியின் கால் தடம் பார்த்து இத்தலத்தை வந்து அடைந்து பதிகம் பாடினார் என்பது புராணம். இந்த தீர்த்தற்கு சுந்தரர் தீர்த்தம் என்று கூறுகின்றனர். மாசி மாத பிரம்மோற்சவத்தில் தீர்த்தத்தில் கட்டமுது படைக்கும் விழா நடக்கிறது.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. பூத்தேர்ந் தாயன கொண்டு (1.54); பாடல்கள் : சம்பந்தர் - நெற்குன்றம் ஓத்தூர் (2.39.9); அப்பர் - ஒப்பொருவ ரில்லாத (6.33.9), உஞ்சேனை மாகாளம் (6.70.8), கார்மல்கு (6.82.5); பட்டினத்துப் பிள்ளையார் - நிலாவு புகழ்த்திரு (11.30.64) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; நம்பியாண்டார் நம்பி - குரைசேர் குடுமிக் (11.37.4 வது வரி 4 வது பாடல்) ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை, மாண்புதிகழ் (11.38.81) ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை, மாடத் தொளிரும் (11.40.28 வது வரி பாடல்) ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை; சேக்கிழார் - செக்கர் சடையார் (12.21.316 & 317) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், மங்கை பாகர் (12.28.973 & 974) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
மக்கள் வழக்கில் செய்யாறு, திருவத்திபுரம், திருவத்தூர் என்றெல்லாம் வழங்கப்படுகிறது. கோயில் உள்ள பகுதி திருவத்திபுரம் ஆகும்.
ஆலயத்துள் வெளிப் பிரகாரத்தில் (தல மரமான) பனைமரங்கள் உள்ளன.
பஞ்சபூதத் தலங்களை நினைவூட்டும் வகையில், தனித்தனி சிவலிங்கத் திருமேனிகள், தனித்தனி சந்நிதிகளாக - திருச்சிற்றம்பலவன், திருக்காளத்தியார், திருஆனைக்காவுளார், திருவண்ணாமலையார், திருவேகம்பன் சந்நிதிகளாக அமைந்துள்ளன.
சண்டேஸ்வரர் - ஒரு காலை மடக்கி, ஒரு காலைத் தொங்கவிட்டு, ஒருகையில் மழுவுடன்; ஒரு கையை மடக்கிய காலின் தொடைமீது வைத்தவாறு காட்சி தருகிறார்.
தட்சிணாமூர்த்திக்கும், துர்க்கைக்கும் தனிக் கோயிலாக உள்ளது.
சுவாமி மீது தினமும் சூரிய ஒளி படுவது இத்தல விசேஷம்.
ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பும் தலமரமான பனை மரத்திற்கும் நாகலிங்கத்திற்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது
தை மாதம் ரத சப்தமியைத் தேர் திருநாளாக பத்து நாள் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.
கல்வெட்டுக்கள் 29 உள்ளன. அவற்றுள் இராஜாதிராஜன், குலோத்துங்கன், இராஜேந்திரன், பொத்தப்பிச் சோழன், இராஜராஜன் -1,3, விக்கிரமசோழன் ஆகிய சோழ அரசர்கள் காலத்தனவும், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் காலத்தனவும், கோப்பெருஞ்சிங்கன் காலத்தனவும், இராஷ்டிரகூட கன்னரதேவன் காலத்தனவும் ஆக அமைந்துள்ளன.
இறைவன் பெயர் வேதபுரீசுவரர் எனவும், ஓத்தூர் உடைய நாயனார் எனவும் வழங்கும். கோயில்வழிபாட்டிற்கும் நிவேதனத் திற்கும், அர்ச்சகர்க்கும் நிலமளித்த செய்திகளும், பூந்தோட்டத்திற்கு நிலமளித்த செய்திகளும் அறிவிக்கப்பெறுகின்றன. விளக்கிற்காகப் பசுக்கள் வாங்கி விடப்பெற்றமையைத் தெரிவிக்கின்றன. சிறப்பாக, விளையாட்டாக வேட்டைக்குச் சென்ற ஒருவன் எய்த அம்பு குறிதவறி ஒரு மனிதன்மேல் பட்டுவிட, அதற்காகத் திருஓத்தூர் சபையாரைக் கூட்டி, குற்றத்தைக் கூறி, சபை விதித்தவண்ணம் குற்றத்தண்டமாகக் கோயிலுக்கு 16 பசுக்களை வாங்கிக்கொடுத்து விளக்கிடச் செய்தான்.( 77 of 1900) விக்கிரமசோழன் (கி.பி. 1118-35) காலத்து வெள்ளம்புகுந்து விளைச்சலழிந்ததால் குடிகளுக்கு வரிகட்ட முடியாமல்போக இரண்டாயிரம் குழி நிலத்தை 25 காசிற்கும், 4450 குழி புன்செய்யை 20 காசிற்கும் கோயிலுக்கு விற்று இறையிலி செய்தான்(87, 88), மூன்றாம் குலோத்துங்கன் பொன் ஆபரணங்கள் அளித்திருக்கின்றான். அதேகோயிலில் சிதம்பரேசுவர ஆலயம் ஒன்று இருப்பதாக அறியப்படுகிறது(100). கேதாரிநாதர் மடம் என்ற ஒன்று குறிப்பிடப் பெறுகிறது( 98 of 1910).
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
வந்தவாசி, திருவண்ணாமலை, போளூர், ஆரணி முதலிய ஊர்களில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
தொடர்பு :
04182 - 224387