logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-thiruottur-puttern-tayana

திருஞானசம்பந்தர் தேவாரம - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன


 1.54 திருஓத்தூர்    
        
பண் -  பழந்தக்கராகம்        
        
திருச்சிற்றம்பலம்        
        
        
    பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி    
    ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்    
    ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக்    
    கூத்தீ ரும்ம குணங்களே.    1.54.1
        
    இடையீர் போகா இளமுலை யாளையோர்    
    புடையீ ரேபுள்ளி மானுரி    
    உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்    
    சடையீ ரேயும தாளே.    1.54.2
        
    உள்வேர் போல நொடிமை யினார்திறம்    
    கொள்வீ ரல்குலோர் கோவணம்    
    ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்    
    கள்வீ ரேயும காதலே.    1.54.3
        
    தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை    
    ஆட்டீ ரேயடி யார்வினை    
    ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்    
    நாட்டீ ரேயருள் நல்குமே.    1.54.4
        
    குழையார் காதீர்1 கொடுமழு வாட்படை    
    உழையாள் வீர்திரு வோத்தூர்    
    பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்    
    அழையா மேயருள் நல்குமே.    1.54.5
        
    மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்    
    தக்கார் தம்மக்க ளீரென்    
    றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்    
    நக்கீ ரேயருள் நல்குமே.    1.54.6
        
    தாதார் கொன்றை தயங்கு முடியுடை    
    நாதா என்று நலம்புகழ்ந்    
    தோதா தாருள ரோதிரு வோத்தூர்    
    ஆதீ ரேயருள் நல்குமே.    1.54.7
        
    என்றா னிம்மலை யென்ற அரக்கனை    
    வென்றார் போலும் விரலினால்    
    ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்    
    என்றார் மேல்வினை யேகுமே.    1.54.8
        
    நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்    
    சென்றார் போலுந் திசையெலாம்    
    ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்    
    நின்றீ ரே2யுமை நேடியே.    1.54.9
        
    கார மண்கலிங் கத்துவ ராடையர்    
    தேரர் சொல்லவை தேறன்மின்    
    ஓரம் பால்எயில் எய்தவ னோத்தூர்ச்    
    சீர வன்கழல் சேர்மினே.    1.54.10
        
    குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்    
    அரும்பு கொன்றை யடிகளைப்    
    பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்    1.54.11
    விரும்பு வார்வினை வீடே.    
        
    திருச்சிற்றம்பலம்.    
    பாடம்: 1. காதா, 2. நின்றாரே.    

 

Related Content