இறைவர் திருப்பெயர்: அமிர்தகடேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அபிராமி.
தல மரம்:
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், சிவகங்கை. கால தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், காவிரி, அம்மனாறு முதலான 7 தீர்த்தங்கள்
வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், திருமூலர் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீர தேவ நாயனார், பரணதேவ நாயனார், சேக்கிழார், திருமால், பிரமன், மார்க்கண்டேயர், எமன், ஏழு கன்னிகள், அகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி, துர்க்கை, பூமாதேவி, சிபி, சோமசருமன், சிவசருமர், ஏமகிரீடன், இரத்தினகைடன், சந்திரபூஷணன், பிரமாதிராசன், இரத்தினாகரன், பஞ்ச சூரியர்கள் முதலியர்.
Sthala Puranam
வில்வவனம்
ஞானோபதேசம் பெற விரும்பிய பிரமதேவன் இறைவனை வழிபட்டான். அப்போது இறைவன் ஒரு வில்வவிதையினைப் பிரமன் கையிலீந்து “இது இட்ட ஒரு முகூர்த்தத்துள் எந்த இடத்தில் முளைக்கின்றதோ அந்த இடத்தில் தங்கி எம்மை வழிபடுவாயாக' என்று கட்டளையிட்டான். இறுதியாக இத்தலத்திலிட அது குறித்தகாலத்திற்குள் முளைத்தது. பிரமனும் அதுகண்டு மகிழ்ந்து இங்குத் தங்கி இறைவனை பூசித்து ஞானோபதேசம் பெற்றான். அது முதலாகத் தலத்திற்கு வில்வவனம் என்றும் மூர்த்திக்கு வில்வவனேசுவரர் என்றும் திருநாமங்கள் வழங்கிவரலாயின.
கடவூர் திருமால் முதலிய தேவர்கள் தூயதோர் இடத்தில் உண்ண வேண்டுமென்று அமுதக் கடத்தை இங்குக் கொண்டுவந்து வைத்தமையால், 'கடபுரி ' அல்லது 'கடவூர் ' என்றாயிற்று. எம வாதனையைக் கடப்பதற்கு உதவும் ஊர் என்பதாலும் இப்பெயர் பெற்றது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. சடையுடை யானும்நெய் (3.8); அப்பர் - 1. பொள்ளத்த காய (4.31), 2. மருட்டுயர் தீரவன் (4.107), 3. மலைக்கொ ளானை (5.37); சுந்தரர் - 1. பொடியார் மேனியனே (7.28); பாடல்கள் : அப்பர் - அளியினார் (4.54.5), வில்லருளி வருபுருவத் (6.14.4), காவிரியின் (6.71.2); சுந்தரர் - கச்சையூர் (7.31.4); திருமூலர் நாயனார் - மூலத் துவாரத்து (10.2ம் தந்திரம் - 02. பதிவலியில் வீரட்டம் எட்டு, 7 வது பாடல்; சேரமான் பெருமாள் நாயனார் - திறமலி (11.8.24) திருவாரூர் மும்மணிக் கோவை; நக்கீர தேவ நாயனார் - பேணிக்கா லங்கள் (11.17.6 வது வரி பாடல்) போற்றித் திருக்கலிவெண்பா; பரணதேவ நாயனார் - திறமென்னுஞ் சிந்தை (11.24.71) சிவபெருமான் திருவந்தாதி; சேக்கிழார் - வாய்ந்த நீர் வளத்தால் (12.11.1,2 & 34) குங்குலியக் கலய நாயனார் புராணம், செங்குமுத மலர் வாவித் (12.21.247) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், இன்ன வாறு (12.28.533 & 926) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், அங்கண் ணரைப் பணிந்து ஏத்தி (12.29.145) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், மறையாளர் திருக்கடவூர் வந்து (12.49.1) காரிநாயனார் புராணம்.
Specialities
திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாபவிமோசன புண்ணிய வர்த்தம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
இப்பதியில் அவதரித்த குங்குலியகலய நாயனார், வறுமையுற்ற காலத்தும், தன் மனைவியாரின் தாலியை விற்றுக் குங்குலியத் தொண்டைச் செய்து பேறு பெற்றார். திருப்பனந்தாளில் சாய்ந்து யாராலும் நிமிர்த்த முடியாத சிவலிங்கத் திருமேனியை தனது சிவ பக்தியால் நேராக நிமிர்த்தியவர்.
அவதாரத் தலம் : திருக்கடவூர் (திருக்கடையூர்) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : திருக்கடவூர். குருபூசை நாள் : ஆவணி - மூலம்.
காரி நாயனாரும் இப்பதியிலேயே அவதரித்தவர் - இவர் அரசனிடம் சென்று பொருள்பெற்றுப் பல திருப்பணிகள் செய்து, தொண்டாற்றி முத்தியடைந்த பதி.
அவதாரத் தலம் : திருக்கடவூர் (திருக்கடையூர்) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : திருக்கடவூர். குருபூசை நாள் : மாசி - பூராடம்.
அப்பரும், சம்பந்தரும் ஒருசேர எழுந்தருளி, இறைவனைத் தொழுது, குங்குலிய கலய நாயனாரின் திருமடத்தில் தங்கியிருந்த பெருமை பெற்றப் பதி.
உள்ளமுருகப் பாராயாணம் செய்யப்படும் அபிராமி அந்தாதி (அபிராமி பட்டர் வாழ்ந்து - அம்பிகையின் அருளால்) பாடப்பட்ட அற்புதப் பதி.
அன்னை அபிராமியின் அருள் தலம்; யம பயம் போக்கவல்ல பதி.
இங்குள்ள காலசம்ஹாரமூர்த்தி - காலனை சம்ஹரித்த மூர்த்தி - மிகப்பெரிய மூர்த்தி - கம்பீரமான தோற்றம் - திருமேனியில் எமன் வீசிய பாசத்தின் தழும்பு உள்ளது.
மார்க்கண்டேயர் இறையருள் பெற வழிபட்ட 108 தலங்களுள் இது 108-வது தலமாகும். (107-வது திருக்கடவூர் மயானம்)
சுவாமிக்கு நாடொறும் அபிஷேகத்திற்குரிய நீர் திருக்கடவூர் மயானத் தலத்தின் தல தீர்த்தமான காசி தீர்த்தத்திலிருந்து வண்டியில் கொண்டு வரப்படுகின்றன. மார்க்கண்டேயருக்காக, பங்குனி மாதம், அசுவினி நட்சத்திரத்தில் கங்கையானது, இத்தீர்த்தமாக வந்ததாக வரலாறு. ஆதலின் இத்தீர்த்தம் 'அசுவினி தீர்த்தம்' எனவும் வழங்கப்படுகின்றன.
ம்ருத்யுஞ்சஹோமம், உக்ரக சாந்தி, பீமரதசாந்தி, சஷ்டியப்த பூர்த்தி(மணிவிழா), சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் முதலியவை செய்வதற்குரிய சிறப்புடைய தலம் இதுவாகும். (இச்சாந்திகள் வேறு தலத்தில் செய்ய நேர்ந்தாலும் இம்மூர்த்தியை நினைத்துத்தான் செய்ய வேண்டும்.)
ஏழுநிலைகளுடன் கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரதில் உள்ள அரிய சிற்பங்களுள் பாற்கடலைக் கடைந்தது, கஜசம்ஹாரமூர்த்தி, சிவபாத இருதயரின் தோளில் சம்பந்தர், பந்தரின் சிவிகையை அப்பர் தாங்குவது முதலியன கண்டு மகிழத்தக்கன.
பூமிதேவி பிரார்த்திக்க, மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் வேண்ட இறைவன், எமனை (தர்மராஜா) எழுப்பித் தந்தருளினாராதலின், அநுக்ரஹம் பெற்ற (எழுப்பப்பெற்ற) தர்மராஜா - எமனின் திருவுருவம் இம்மூர்த்திக்கு (மரகதலிங்கத்திற்கு) நேர் எதிரில் உள்ளதைக் காணலாம்.
கன்றிய காலனைக் காலாற்கடிந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டில் 11 விசேஷ காலங்களில் (சித்திரை விஷேச, பெருவிழாவில் 5, 6-ஆம் நாள்கள், பிராயசித்த அபிஷேகம், தக்ஷிணாயனபுண்ணிய காலம், ஆனி உத்திரம், புரட்டாசியில் கன்யாசதுர்த்தி, துலாவிஷ§, ஆருத்ரா, உத்தராயண புண்ணிய காலம், மாசி மகம் கும்பசதுர்த்தி) அபிஷேகம் நடைபெறுகின்றன.
கால ஸம்ஹார மூர்த்தி அபிஷேக காலங்கள்
1. சித்திரை விஷு உச்சிகால அபிஷேகம்
2. ஐந்தாம் திருவிழா படி இறங்குதல் அபிஷேகம்
3. ஆறாம் திருநாள் காலசம்ஹார வீர நடனக் காட்சியும் 100 கால் மண்டபத்தில் விசேஷ அபிஷேகம்
4. உத்சவ பிராயசித்த அபிஷேகம்
5. ஆனித் திருமஞ்சனம் உத்திரம் அபிஷேகம்
6. ஆடிமாதம் தக்ஷிணாயன புண்யகால அபிஷேகம்
7. கன்யா சதுர்தசி விஷேஷ இரவு 2ம் கால அபிஷேகம்
8. ஐப்பசி துலா விஷு உச்சிகால அபிஷேகம்
9. மார்கழி ஆர்த்ரா காலசந்தி அபிஷேகம்
10. தனுர் மாச வ்யதி பாத காலசந்தி அபிஷேகம்
11. உத்தராயண புண்யகால உச்சிகால அபிஷேகம்
12. கும்ப சதுர்தசி இரவு 2ம் கால அபிஷேகம்
கார்த்திகை சோமவார 1008 சங்காபிஷேகம் சிறப்பாகக் கண்டு தரிசிக்கத் தக்கது. பிரகதீச மகாராஜா பவப்பிணி நீங்க இச்சங்காபிஷேகத்தை உவப்புடன் செய்வித்தார்.
சித்திரை மாதத்தில் பிரம்மோத்சவம், ஆறாம் திருநாள் காலசம்ஹாரம். பங்குனி மாதத்தில் காசி கங்கையை மார்க்கண்டேயர் வரவழைத்து இறைவனுக்கு அபிஷேகித்த ஐதீகத்தை ஒட்டி மார்க்கண்டேயர் கடவூர் மயானத்திற்கு எழுந்தருளி தீர்த்தங்கொடுத்தருளுவார்
( 'சிலம்பில்' வரும் நடன மகள் 'மாதவி'யின் இல்லம் இத்திருக்கடவூரில் தேரோடும் வீதியில் உள்ளது. தற்போது இவ்வீடு பாழடைந்த நிலையில் உள்ளது.)
கல்வெட்டுகள்
திருக்கோயில் சுற்று மதில்களிலும், கர்ப்பக்கிருகத்திலும் ஐம்பத்து நான்கு. கலவெட்டுகள் காணப்படுகின்றன.
முதல் இராசராசன் முதல், மூன்றாம் இராசராசன் வரையில் உள்ள சோழ மன்னர்கள் ஒன்பதின்மருடைய வரலாற்றுக் குறிப்புகளும், வள்ளன்மையும், பெரும்பாலான கல்வெட்டுக்களால் அறிவிக்கப்படுகின்றன. பாண்டியர்களுள் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் குலசேகரபாண்டியன் ஆகிய மூவருடைய கொடைத் தன்மை பேசப்படுகிறது. விஜயநகரவேந்தருள் கிருஷ்ண தேவராயரும், மூக்கண உடையார் பரம்பரையில் விருப்பண உடையாரும் தேவஸ்தானத்தொடர்புடையவர்களாகக் காணப்படுகிறார்கள்.
திருக்கடவூர் திரிபுவனச் சக்கரவர்த்தி இராசராசன் காலத்து செயங்கொண்ட சோழவள நாட்டு ஆக்கூர் நாட்டுக் கடவூர் என்றும் முதற்குலோத்துங்கன் காலத்து இராசநாராயண வள நாட்டு அம்பர் நாட்டுத் திருக்கடவூர் என்றும், பரகேசரி இராஜேந்திரன் காலத்து, உய்யக்கொண்டான் வள நாட்டு அம்பர் நாட்டுக்கடவூர், என்றும் மூன்றாங் குலோத்துங்கன் காலத்து ஜெயங்கொண்ட வள நாட்டு ஆக்கூர் நாட்டுப்பிரிவான அம்பர் நாட்டுத் திருக்கடவூர் என்றும் குறிக்கப்பட்டுள்ளன. இதனால் வள நாடு, நாடுபற்றிய பிரிவினைகள் அந்தந்தக் காலத்தில் வேறுவேறாக இருந்தமை அறியலாம்.
மூர்த்திகளின் பெயர்கள்
வீரட்டமுடைய பரமசுவாமி என்றும், காலகாலதேவர் என்றும், திருக்கடவூர் நாயகர் என்றும் பெயர்கள் வழங்குகின்றன. திருக்கடவூர் திருவீரட்ட நாட்டுப் படையேவிய திருக்கடவூர், உட்படைமேவிய திருக்கடவூர் என்று குறிக்கப்பெறுகின்றது. உட்கோயில்களாகக் குலோத்துங்க சோளீச்சர முடையாரும் விக்கரம சோளீச்சரமுடையாரும் குறிக்கப்படுகிறார்கள் . விஜய நகர அரசர்காலத்துக்
கல்வெட்டுகளில் காலகாலதேவர் கோயிலோடு திருமால் கோயிலும் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறது.
பணி
குலோத்துங்க சோழன் தன்னாட்சிக் காலத்து மண்டபங்களை எடுத்துக்கட்டினான் போலும். அதனைக் “குலோத்துங்க சோழன் திருவெடுத்துக் கட்டிய மண்டபம்'' என்றதால் அறியலாம்
பெயர் அறியப்படாத கொழும்பு மன்னன் ஒருவனால், காலகாலதேவர் மேல் பாடல் ஒன்று செய்யப்பெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. பாண்டியநாட்டுப் பெருந்தனக்காரர் ஒருவரால் காலசம்காரமூர்த்திக்குச் சிம்மாசனம் வழங்கப்பட்டது.
முதல் இராசராசன்
இவனது 6-ஆம் ஆண்டு 242ஆம் நாள் திருவீரட்டானமுடையார் கோயில் நிலங்களுக்கும், அதனைச் சுற்றியுள்ள நிலங்களுக்கும், பெருந்தொகையைத் தள்ளுபடி செய்தான்.
13 வது ஆண்டில் திருக்கடவூர் சபையார் நிலத்தை வாங்கித் திருவீரட்டானமுடைய பரமேசுவரர் கோயிலுக்குச் சில திருவுருவருங்களின் முன் ஆண்டு முழுதும் மூன்று விளக்கிடவும், காலை மாலை நாட்பூசைக்குமாக, உதயசந்திரன் அமுதனானமயிலாற்றி என்னும் அவ்வூர் வணிகனிடம் வாரமிலலாது கொடுத்துத்தருமம் இடையீடின்றி நடந்துவர எற்பாடு செய்தான்.
15-ஆம் ஆண்டில், திருவீரட்டானத்துப் பெருமான் அடிகளாருக்குப் பணிசெய்யும் பணிப்பெருமக்களுக்கு நிலம்விடப்பெற்றது.
15ஆம் ஆண்டில், அம்பர் நாட்டுப் படையேவிய திருக்கடவூரில் சில நிலங்களை விற்ற செய்தி குறிப்பிடப்படுகிறது.
பரகேசரி இராஜேந்திரசோழன்
16-ஆம் ஆண்டில், உய்யக்கொண்டான் வள நாட்டுப் படையேவிய திருக்கடவூர் மகாசபையார் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.
24-ஆம் ஆண்டில் உண்டான இக்கல்வெட்டில் தன் ஆட்சி 18-ஆம் ஆண்டில் காலகாலதேவருக்குச் சித்திரை விழா நடத்தவும், நித்திய பூசைக்கு நாள்தோறும் நெல்லாக வருடந்தோறும் அளித்துவரவும் இராசராசன் மூவேந்த வேளான் நிலம்விட்ட செய்தி அறிவிக்கிறது.
விஜயராஜேந்திரன்
36-ஆம் ஆண்டைய நிகழ்ச்சி ஒன்று குறிப்பிடப்படுகிறது.
இதில் திருக்கொடியொடு என்று இவன் மெய்க்கீர்த்தி தொடங்குகின்றது. சோமக்குடி பிச்சனாதித்தனான விஐயராஜேந்திர சோழ மூவேந்த வேளாளனார் இராஜதிராஜன் சாலையில், பதினேழு மாகேசுரர்களுக்கு உணவுக்கும் காலகாலதேவர் பூசைக்குமாக நிலம்விட்டான். அந்நிலம், சாகுபடி செய்வதற்கு வரும்வரையில் குடிகள் அனுபவித்துக் கொள்வது என்றும், அதன் பிறகு சாலா
போகத்திற்கு எடுத்துக்கொள்வதென்றும் குறிப்பிட்டான்
இராஜாதிராஜன்
இவன் இராஜகேசரிவர்மனான திரிபுவன சக்கரவர்த்தி மதுரையும் ஈழமுங்கொண்ட இராஜாதிராஜன் என்று வழங்கப்படுகிறான். இவனுடைய மெய்க்கீர்த்தி "கடல் சூழ்ந்த" என்று தொடங்குகின்றது. ஆக்கூர் நாட்டுப் பிரிவான அம்பர் நாட்டு மகாசபையாராகிய 240 பேரிளமையர் நிலங்களிலிருந்து வரிவசூலித்தும், யாருக்கும் சொந்தமில்லாத நிலங்களை விற்றும் கோயிலுக்கு உரிமையாக்கின விவரம் தரப்பெற்றுள்ளது. மேற்படி ஆண்டு 180 ஆவது நாள் 240 வேளாளர்கள் அரசர் நினைவாகக் காலகால தேவர்க்குக் காணிக்கை அளித்தார்கள்.
நடுவில்நாடான இராஜஇராஜ வளநாட்டு ஏமப்பேரூர் நாட்டு ஏமப்பேரூரான் ஒருவனால் விளக்கும், இடையீடின்றி விளக்கெரிக்க நெடும்புறநாட்டில் நிலமும் அளிக்கப்பட்டன. உய்யக்கொண்டான் நாட்டு, பாம்புணிநாட்டு நாடாறுடையான் ஒருவனால் ஒரு விளக்கும் அளிக்கப்பெற்றது. குலாசனிவளநாட்டுப் பூதலூர் நாட்டுப் பூதலூருடையான் ஒருவனால்விளக்குக்கு நிலம் அளிக்கப்பட்டது.
வீரராஜேந்திரன்
2வது ஆண்டில் செயங்கொண்ட சோழவள நாட்டுத் திருக்கடவருடையார் காலகாலதேவர்க்கு விளக்குக்கு நிலம்விட்டான்
குலோத்துங்கன்
இவன் இராஜகேசரிவர்மனான திரிபுவனச் சக்கரவர்த்திகள் குலோத்துங்க சோழன் என்றே குறிப்பிடப் பெறுகிறான். விளக்குக்கு நிபந்தம் அளித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
14 ஆம் ஆண்டில், திருக்கடவூர் மகா சபையார் காலகாலதேவர் கோயில், குலோத்துங்க சோழன் திருவெடுத்துக் கட்டியமண்டபத்தில் சுவாமிகோயில் அணிகளை ஆராய்ந்து வைணவர்களும், மாகேசுரருமாகக் கலந்து விற்ற கீரிடத்தைத் திரும்ப வாங்கிச் சேர்த்தது அதேயாண்டில் நிலம் அளித்தமை குறிப்பிடப்படுகிறது. இதில் இறைவன் படையேவிய திருக்கடவூர் காலகாலதேவர் என்று குறிப்பிடப்பெறுதல் நுனித்தறியத் தக்கது.
26ஆம் ஆண்டில் இராசநாராயணன் வளநாட்டு அமரர் நாட்டு உட்படையேவிய திருக்கடவூர் மகாசபையார் செய்துகொண்ட ஒப்பந்தம் குறிப்பிடப்பட்டுள்ளது.
27ஆம் ஆண்டில் (தனுர் மாதம் 16உ அஷ்டமி திதி )3/4 வேலி நிலத்தை விற்று ஐம்பது ஆண்டிற்கு ஒரு கடமையும் பெறாதபடி, சட்டமலை வள நாட்டுப் பாம்புணிக் கூற்றத்துக் கொற்றமங்கலத்து வாணவராயர், அரசனுக்கு நன்றுண்டாக மார்க்கண்டேய மடத்தில் வேதாத்யயனம் செய்து பத்து சிவயோகியர்களுக்கு திருவமுதளிக்கமடப்புறமாக திருக்கடவூர் மகாசபையாருக்களித்தார். இச்சபையின் கூட்டம்,கோயிலுக்குள்ளேயுள்ள திருச்சிற்றம்பல வேலைக்காரன் திருமண மண்டபத்தில் கூடிய்து. இப்போது திருக்கடவூர்ப் பக்கமுள்ள மணல்மேட்டில் மார்க்கண்டேயர் கோயில் இருக்கிறது. மார்க்கண்டேய மடத்திற்கும் இதற்கும் தொடர்புண்டா என்பது ஆராயத்தக்கது
44ஆம் ஆண்டில், காலகாலதேவர்க்கு விளக்கிற்கும். விளக்குத் தண்டிற்குமாக நிலம் அளித்தான்.
48ஆம் ஆண்டுக் கல்வெட்டு சிதைந்துள்ளது.
விக்கரமசோழன்
இவனாட்சி 2 ஆம் ஆண்டில் திருக்கோயிலுக்கு நிலமளித்தான். இச்செய்தி விளக்கமாகக் கிடைக்காதவண்ணம் சிதைந்திருக்கிறது.
நான்காம் ஆண்டில் இராஜநாராயண வள நாட்டுக்குறும்பர் நாட்டுத்தில்லையாளி நல்லூரில், திருக்கடவூர் நாயனாரின் அர்ச்சனாபோகமாக நிலமளித்தது, அதனைத் திருக்கடவூர் மகாசபையார் அம்பர் நாட்டுத் திருக்கடவூரில் கல்வெட்டுவித்துக்கொள்ள உத்தரவிட்டான். அதில் அருளாகரன் வாய்க்கால் குறிப்பிடப்பெறுகின்றது.
7ஆம் ஆண்டில் விளக்குக்குப் பொன் அளித்தது குறிப்பிடப்பெறுகிறது.
மூன்றாம் குலோத்துங்கன்
பரகேசரிவர்மனான திரிபுவன குலோத்துங்கன் என்று குறிப்பிடப்படுகிறான். இவனுடைய 9 ஆம் ஆட்சியாண்டில் விருதராசபயங்கர வளநாட்டு நல்லுர் நாட்டு மூலங்குடியான் ஒருவனால், காலகாலதேவர் திருமுன் விளக்குக்காக நிலம்விடப்பட்டது இராசராசவளநாட்டுக் கீழ் வேங்கைநாட்டுப் பெருநல்லூருடையான் ஒருவனால் எருக்காட்டுச்சேரி மணற்குன்றில் நிலம்விடப்பெற்றது.
15ஆம் ஆண்டுக் கல்வெட்டில் ‘மதுரையும் பாண்டியன் முடித்தலையும் கொண்ட' என்று சிறப்பிக்கப்படுகிறான். மெய்க்கீர்த்தி, “புயல்வாய்த்து', என்று தொடங்குகிறது. மெர்கன் நாயகன் திருநடனம் புரிஞ்சான் என்பவனால் ஊர்ப் பொதுவான நிலங்களைப் பூந்தோட்டப் பாதுகாப்பிற்காகத் தோட்டக்காரர்களுக்கு அளித்து இறையிலி ஆக்கப்பெற்றது.
15ஆம் ஆண்டில் அரையன் இராசராசதேவனான வாணாதிராயனால் காலகாலர் கோயிலில் இராசராசேசுவரர் படிமத்தை எழுந்தருளுவித்து நிலம் வழங்கப்பெற்றது.
17-ஆம் ஆண்டில் திருவீரட்டானமுடையார், கோயிலிலுள்ள குலோத்துங்க சோளிச்சரமுடையார், விக்கிரம சோளீச்சுரமுடையார், கூத்தாடும் காலதேவராகிய காலகாலதேவர் இவர்களுக்குப் பூசை வழிபாட்டிற்காகபபரம்பரையாக இருந்த சைவாச்சாரியார்களை விலக்கிவிட்டுப் புதிதாக இரண்டு நபர்களை வைத்துத் திருக்கோயில் பூசை முறைகளையும் மாற்றினார். மாற்றியவர் சுவாமித் தேவர் என்பவர் 23-ஆம் ஆண்டு 283 ஆம் நாளில் அரசகவியாகிய வீராந்தப் பல்லவராயருடைய பரீதிக்காகப் பாரசைவன் பொன்னானாகிய காலவிநோத நிருத்த நிலைக்காக நியமித்து நெல் சம்பளம் வழங்க ஏற்பாடு செய்தான். இந்த நிகழ்ச்சி சிதம்பரம் கல்வெட்டிலும் குறிக்கப்பெற்றுள்ளது.
மூன்றாம் இராசராசன்
5 ஆம் ஆண்டில் செயங்கொண்ட சோழவளநாட்டு ஆக்கூர் நாட்டுத் திருக்கடவூருடையார் காலகாலதேவர்க்கு நிலம் அளித்தான் (32ஆப்/906) 18ஆம் ஆண்டில் மேல்வள நாட்டு பழையனூரான வேதவனமுடைய அம்மையப்பரால் நிலம் அளிக்கப்பெற்றது. பெரியதேவரான மூன்றாங்குலோத்துங்க தேவரால் ஆட்சி 13ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட நிபந்தங்களை இவனாட்சி 21-ஆம் ஆண்டில்
குறிப்பிடுகிறார்கள்.
கோநேரின்மை கொண்டான்
இப்பெயர் இரு அரசர்களுக்கு வழங்கியது. இவன் ஆட்சி 12ஆம் ஆண்டு 272 ஆம் நாள் ஆக்கூரான இராஜேந்திர சதுர்வேதி மங்கலத்துக் குலோத்துங்கசோழன் கருப்பூரில் காளிங்கராஜன் வேண்டுகோட்படி 3 வேலி நிலத்தை ஒதுக்கிக் கொடுத்துகுலசேகரன் சந்தி என்னும் நாள் வழிபாடும் தான் பிறந்த நாளாகிய ஆனி மூலத்தில் சிறப்பு வழிபாடும் நடக்க ஏற்பாடு செய்தான் 18ஆம் ஆண்டு 285-ஆம் நாள் மூவரையன் வேண்டுகோட்காக அரசனுக்கு நன்றுண்டாகக் கோயிலுக்குத் தென்பால் நந்தவனப்புறமாக நிலம் வழங்கப்பட்டது நுந்தா விளக்குக்கான எருக்கட்டாஞ்சேரி கிராமத்தையும் பாய்ச்சல் வசதி முழுதும் செய்து அளித்தான். கோயில் நகை பாதுகாப்பிற்காகக் காவிரிப்பூம்பட்டினத்தில் கட்டிடம் ஒன்று கட்டிக்கொடுத்தான்
சுந்தரபாண்டியதேவன்
பெருமான் சுந்தரபாண்டியதேவன் குறிப்பிடப்படுகிறான். இவனுடைய எழுத்து சிதைந்துவிட்டது
ஜடாவர்மன் வீரபாண்டியன்
இவனது ஆட்சி 34-ஆம் ஆண்டில் நிலம் விட்டான். இவன் முன்னோனது 41-ஆம் ஆண்டின் நிகழ்ச்சியும் இதில் குறிப்பிடப்படுகிறது.
மாறவர்மன் குலசேகரபாண்டியன்
உலகுடைய பெருமானின் நன்மைக்காகக் காலகாலதேவர் சந்நிதியில் 40 விளக்குகள் இட நிலம் விட்டான். இந்தக் காலத்தில் இவன் சகோதரர்களாலேயே நாட்டில் குழப்பமிருந்தது என்று இதில் குறிப்பிடப்படுகின்றது.
விருப்பண்ண உடையார்
சகம் 1307-இல் செயங்கொண்ட சோழவளவநாட்டுக் கீழ்பாக்கத்துப் பிரமதேயமான திருக்கடவூர் காலகாலதேவர் கோயிலுக்கு 100வேலி நிலத்தை எல்லாவகையான வரிகளையும் நீக்கித் தேவதானமாக அளித்தான். இவன் அரியப்ப உடையாருடைய மகன் என்று குறிப்பிடப்படுகின்றான்.
கிருஷ்ணதேவராயர்
இவர் விஜயநகர அரசர், இவர் காலத்து, திருக்கடவூர் ஆபத்சகாயன் என்ற அந்தணனால் கோயில் பழுது பார்க்கப்பெற்றது. இவ்வந்தணன் ரேச்சூரில் நடந்த போரில், பெரும் பங்கு எடுத்துக் கொண்டான் சகம் 1443 இல் (கி. பி. 1521) திருக்கடவூர் ஆதித்தபட்டர், கரியமாணிக்கப்பட்டர், புக்கத்துறைவல்ல சோழ பிரமராயர், இவர்கள் விசயநகரம் சென்று, அரசனைக் கண்டு சோதி சூலம் ஆகிய இவற்றைக் காட்டிக் கோயிலில் தங்களுக்குச் சில சலுகைகளைப் பெற்றுக்கொண்டார்கள். அரசன் எட்டு வேலி கோயிலுக்காக அளித்தான். திருக்கடவூரிலுள்ள சிவ விஷ்ணு கோயிலுக்குச் சுமார் 10000 பொன் வரை வஜா செய்ய உத்தரவளித்தான்
கொழும்பரசன்
திருக்கடவூர் கோயிலைக் கட்டினான். காலகாலதேவரைப் பற்றி ஒரு பாடல் இயற்றியிருக்கிறான் அந்தப்பாடல் மூன்றாம் கோபுரத்தில் இருக்கிறது.
Contact Address