இறைவர் திருப்பெயர்: வலம்புரநாதர்.
இறைவியார் திருப்பெயர்: வடுவகிர்க்கண்ணி.
தல மரம்:
தீர்த்தம் : பிரம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம். சுவர்ண தீர்த்தம், பங்கய தீர்த்தம்
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், திருமால், ஏரண்ட முனிவர் முதலியோர்
Sthala Puranam
மக்கள் வழக்கில் தற்போது 'மேலப்பெரும்பள்ளம்' என்று வழங்குகின்றது.
பூம்புகாருக்கு அதைச்சுற்றிய அகழியாக இவ்வூர் முற்காலத் திருந்தமையின் இஃது பெரும்பள்ளம் என்று பெயர் பெற்றது. கீழ்ப்புறமுள்ளது கீழப் பெரும்பள்ளம் என்றும்; மேற்புறமுள்ளது மேலப் பெரும்பள்ளம் என்றும் பெயர் வரலாயிற்று. காவிரிக்கு வலப்புறம் இருப்பதால் வலம்புரம் என்றாயிற்று.
சிவலிங்கத் திருமேனியின் திருமுடியின்மீது பெரும்பள்ளம் உண்டு. அதனால் மேலப்பெரும்பள்ளம் என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. கொடியுடை மும்மதி (3.103); அப்பர் - 1. தெண்டிரை தேங்கி (4.55), 2. மண்ணளந்த மணிவண்ணர் (6.58); சுந்தரர் - 1. எனக்கினித் தினைத்தனைப் (7.72); பாடல்கள் : சம்பந்தர் - நெற்குன்றம் (2.39.9), குன்றி யூர் (2.106.7); சேக்கிழார் - கறை அணி கண்டர் (12.28.120) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், திரு வீரட் டானத்துத் (12.29.146 & 147) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
தல மரம் : பனை
Specialities
இது காவிரியின் தென் கரையில் 44 வது பதியாகும்.
ஏரண்ட முனிவர் வலஞ்சுழியில் காவிரியில் இறங்கி, இவ்வூரில் கரையேறியதாகக் கூறப்படுகிறது. இங்கு அம்முனிவருக்கு கோயிலுள்ளது.
வீணைமீட்டும் பிக்ஷாடன மூர்த்தியின் (வட்டணை பட நடந்தார்) உற்சவ விக்கிரகம் மிகவும் அழகாக உள்ளது.
இக்கோயிலில் "பட்டினத்தாரை மன்னன் வரவேற்கும் ஐதீகவிழா " என்று ஒருவிழா நடைபெறுகிறது; அது தொடர்பாக சொல்லப்படும் செய்தி :- மன்னன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான். விளையாட்டுக்காகத் தான் இறந்து விட்டதாகப் பொய்ச் செய்தி சொல்லியனுப்பினான். அச்செய்தி கேட்ட அரசி அதிர்ச்சியுற்று இறந்தாள். மன்னனைப் பழி சூழ்ந்தது. நாடொறும் ஆயிரம் பேருக்கு உணவளித்தால் (சஹஸ்ரபோஜனம்) அதில் எவரேனும் மகான் ஒருவர் வந்து உணவுண்டால் அரண்மனை வாயிலில் உள்ள மணி ஒலிக்கும்; அப்போது பழிதீரும் என்று மன்னனுக்குச் சொல்லினர். அது கேட்ட மன்னனும் அவ்வாறே செய்வித்தான். பட்டினத்தார் ஒரு நாள் அங்கு வந்தார். உணவிடுதலையறிந்து அவ்விடம் சென்றார். அங்கிருந்தோர் அவரைப் பின்புறமாக வருமாறு சொல்ல அவரும் அவ்வாறே சென்றார். சென்றவர் அங்குக் குழியில் கஞ்சி வடிந்திருக்கக் கண்டு பசிபொறாமல் அதைத் தம் கைகளால் வாரிப் பருகினார். அவ்வளவில் மணியொலித்தது. மன்னன் ஓடிவந்து செய்தியறிந்து பட்டினத்தாரை வணங்கி வரவேற்றான்.
விக்கிரம சோழன் கல்வெட்டில் இத்தலம் "இராசராச வளநாட்டு ஆக்கூர் நாட்டு தலைச்சங்காட்டுத் திருவலம்புரம்" என்றும்; சுவாமி "வலம்புரி உடையார் " என்றும் அம்பாள் "தடங்கண் நாச்சியார் " என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுச் செய்தி ஒன்று "பண்டைநாளில் கோயில்களுக்கு ஆண்களை விற்கும் பழக்கம் இருந்ததாக" தெரிவிக்கின்றது.
Contact Address