logo

|

Home >

hindu-hub >

temples

திருஆமாத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: அழகியநாதர், அபிராமேச்வரர்

இறைவியார் திருப்பெயர்: முத்தாம்பிகை

தல மரம்:

தீர்த்தம் : பம்பை ஆறு, ஆம்பலப்பொய்கை

வழிபட்டோர்:விநாயகர், முருகன், பார்வதி, நாரதத்தர், அகத்தியர், வசிஷ்டர், துர்வாசர், பிருகு, பராசரர், விஸ்வாமித்ரர், வியாசர், உரோமசர், மதங்க முனி, அஷ்ட வசுக்கள், பிருங்கி முனிவர், இராமர், காமதேனு, சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

thiruamattur temple gOpuram
  • பசுக்கள் ஆகிய உயிர்களுக்கு(ஆ-பசு), தாயாக இறைவன் அருளும் தலம்.
  • ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பில்லாமல் படைக்கப்பட்டிருந்தன. தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் சிங்கம், புலி முதலிய மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும் அவைகள் வேண்டுவது சரியே என்று கூறி பம்பை நதிக்கரையிலுள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன. ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது. 
  • இறைவியால் சபிக்கப்பெற்ற பிருங்கி முனிவர் வன்னி மரமாகி, இங்கு சாபநீக்கம் பெற்ற பதி. பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டுமே வழிபடும் வழக்கமுடையவர். உமையம்மை இறைவன் உடலில் இடபாகத்தைப் பெற்ற போதும் வண்டு உரு எடுத்துத் துளைத்துச் சிவனையே வழிபட்டார். அதனால் அவரை உமையம்மை வன்னிமரம் ஆகுமாறு சபித்தார். பின்னர் முனிவர் இறைவியை வழிபட்டு அவர் அருளால் சாபநீக்கம் பெற்றார். ஆகையால் இத்தலத்தின் தலவிருட்சம் வன்னிமரம் ஆயிற்று.
  • சூரபத்மனை அழிப்பதற்கு முருகப்பெருமான் இங்கு வழிபட்டார்.
  • இராமர் வழிபட்டது. எதிரில் இராமர்கோயில் இருக்கின்றது. 
  • இரட்டை புலவர்கள் இவ்விறைவன் மீது கலம்பகம் பாடியுள்ளனர்.

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்  :  சம்பந்தர்   - 1. துன்னம்பெய் கோவணமுந் (2.44),                                  2. குன்ற வார்சிலை நாண் (2.50);                அப்பர்     - 1. மாமாத் தாகிய மாலயன் (5.44),                                  2. வண்ணங்கள் தாம் பாடி (6.9);                                    சுந்தரர்    - 1. காண்டனன் காண்டனன் (7.45); பாடல்கள்   :  அப்பர்     -       புத்தூ ருறையும் (4.15.10),                                    சிறையார் புனற்கெடில (6.7.3); கபிலதேவ நாயனார்       -      அரியாரும் பூம்பொழில் (11.23.15 & 70) சிவபெருமான் திருவந்தாதி; பரணதேவ நாயனார்       -      கருத்துடைய ஆதி (11.24.21 & 67) சிவபெருமான் திருவந்தாதி; சேக்கிழார்                 -      திருவதிகைப் பதி (12.21.148) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                    பரவி ஏத்திய (12.28.966 & 967) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                    மன்னு திருப் பதிகள் (12.29.292 & 293) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

Specialities

thiruamattur temple
  • மேல்புறம் சுவாமி, கீழ்புறம் அம்மன் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன. ஒன்றை ஒன்று எதிர்நோக்கி இருக்கின்றன.
  • விநாயகர், பூசை செய்யும் அமைப்பில் கையில் மலருடன் சந்நிதியில் காட்சி தருகிறார். 
  • அர்த்தமண்டபத்தில் நிலவறை உண்டு.
  • சர்ப்பக்கோவணத்துடன் அழகான பிட்சாடனமூர்த்தி காட்சி தருகிறார். 
  • வட்டப்பாறை அம்மன் சந்நிதி இங்குப் பிரசித்தமானது. இங்கு அம்பாள் சந்நிதியில் இருந்து பொய் சத்தியம் செய்தால் அவர்களைப் பாம்பு தீண்டிவிடும் என்பது அசையாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. அண்ணன் ஒருவன் இளையவனான தன் தம்பியை ஏமாற்றிச் சொத்தினைத் தனக்குச் சேர்த்துக் கொண்டான். வயது வந்து உண்மையறிந்த தம்பி அண்ணனைச் சென்று தனக்குரிய சொத்தைத் தருமாறு கேட்டான் - மறுக்கவே பஞ்சாயத்தைக் கூட்டினான். அண்ணன் மறுக்கவே அவர்களும் வட்டப்பாறை அம்பாள் சந்நிதியில் சத்தியம் செய்து தருமாறு கூறினர். அண்ணன் இதற்கென ஒரு சூழ்ச்சி செய்தான், தம்பியின் சொத்தால் பெற்ற மதிப்பைத் திரட்டிப் பொன்வாங்கி அதைத் தன் கைத்தடியில் பூணுக்குள் மறைத்து வைத்துக் கொண்டான். அத்தடியுடன் அவைக்கு வந்து, தம்பியிடம் தடியைத் தந்துவிட்டு. அம்பாள் சந்நிதியில் இருகைகளாலும் 'தன்னிடம் தம்பியின் சொத்து ஏதுமில்லை, எல்லாம் அவனிடமே உள்ளது' என்று சத்தியம் செய்து கொடுத்தான். சூழ்ச்சியறியாத அனைவரும் வேறுவழியின்றி அவனைத் தம்பியுடன் அனுப்பிவிட்டனர். திரும்பப் பெற்றுக் கொண்ட தடியுடன் சென்ற அண்ணன், இங்கிருந்து 9 கி. மீ. தொலைவிலுள்ள தும்பூர் நாகம்மன் கோயிலை அடைந்தபோது வாய் மதங் கொண்டு, தம்பியைத் திட்டியதோடு; தன்னைத் தெய்வ சக்தி - அம்பாள் சக்தி ஏதும் செய்து விடவில்லை என்று அம்பாளையும் சேர்த்துத் திட்டினானாம். அப்போது கரும்பாம்பு ஒன்று தோன்றி அவனைக் கடித்துச் சாகடித்தது" என்று வரலாறு சொல்லப்படுகிறது. 
  • அச்சுதராயர் திருப்பணி செய்த பதி.
veLip pirAkAram
  • வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் சமாதி இத்தலத்தே உள்ளது. 
  • பங்குனியில் பெருவிழா நடைபெறுகிறது. 
  • இத்திருக்கோயிலில் கோப்பரகேசரிவர்மன் (முதல் பராந்தகன்) முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திர சோழன் (கங்கைகொண்ட சோழன்). வீர ராஜேந்திரன், முதற் குலோத்துங்கன், இராஜகேசரி திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவன் முதலானோர் காலங்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
  • இக்கல்வெட்டுக்களில் இறைவர், திருவாமாத்தூர் உடைய பெருமானடிகள், திருவாமாத்தூர் ஆள்வார், திருவாமாத்தூர் ஆளுடையார் அழகியதேவர், திருவாமாத்தூர் உடைய பரமசுவாமி என்னும் பெயர்களால் குறிக்கப்படுகின்றார்.
  • இத்திருக்கோயில், கோப்பரகேசரி வர்மனது ஆட்சியாண்டில் கற்றளியாகக் கட்டப்பட்டது. இத்தளியைச் செய்தவன் அருகூர்த் தச்சன் நாராயணன் வேற்கந்தனாகிய திருவாமாத்தூர் ஆசாரியன் ஆவன், திருச்சுற்று மண்டபத்தைக் கட்டியவன் செம்பியன் காத்திமானடிகள் ஆவன்.
  • கோப்பரகேசரி வர்மன் கல்வெட்டில் இவ்வூர், அருவாநாட்டு மீய்வழி வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும், கோப்பரகேசரி வன்மரான இராஜேந்திர சோழதேவன் அல்லது கங்கைகொண்ட சோழன் கல்வெட்டில், ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் பனையூர்நாட்டு, வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும், முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் கங்கைகொண்ட சோழவளநாட்டுப் பனையூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும், ``பூமேவுவளர் திருப்பொன் மார்வுபுணர`` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை யுடைய இராசகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவர் காலத்தில் இராஜராஜ வளநாட்டுப் பனையூர்நாட்டு வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும், வழங்கப்பட்டிருந்தது.
  • இக்கல்வெட்டுக்களினால் திருநுந்தாவிளக்கு எரிப்பதற்குத் துலைநிறை செம்பொன், ஆடுகள் இவைகளையும் திருச்சந்திக்குத் திருச்சந்தனம், சீதாரி இவைகளுக்குப் பொன்னும், திருப்பதிகம் பாடுவதற்கு நிலநிவந்தமும் அளிக்கப்பெற்ற செய்திகள் புலப் படுகின்றன.
  • இத்தலத்துள்ள கல்வெட்டு ஒன்றின் மூலம் இக்கோயிலில் கால சந்திகள்தோறும் தேவாரத் திருப்பதிகம் ஓதுதற்குக் 
    குருடர்களை நியமித்து அவர்களை ஆதரித்த அரியசெய்தி தெரியவருகின்றது. இத்திருக்கோயிலில், மூன்று சந்திகளிலும், திருப்பதிகம் பாடி வருவதற்குக் குருடர்கள் பதினாறுபேர்களும், அவர்களுக்குக் கண் காட்டுவார் இருவரும் ஆகப் பதினெண்மர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். அவர்களுக்குத் தலைக்கு நெல் பதக்காக நாளொன்றுக்கு முக்கலமாக நாள் 360-க்கு நெல் ஆயிரத்து எண்பதின் கலமும், புடைவை முதலுக்குப் பேரால் காசு ஒன்றாக காசு பதி னெட்டுக்கு, காசு ஒன்றுக்கு நெல் இருபதின் கலமாகவும் வந்த நெல் 1440 கலத்துக்கு, வேலி ஒன்றுக்கு நெல் நூற்று இருபது கலமாக ஆமாத்தூர் இறைவர் தேவதானம் கடுவனூரில் பன்னிரண்டுவேலி நிலம் காணியாகக் கொடுக்கப்பட்டு வந்தது, இந்நிலையில், ``பூமேவு வளர் திருப்பொன் மார்வுபுணர`` என்னும் தொடக்கமுள்ள மெய்க் கீர்த்தியை உடைய இராசகேசரி திருபுவனச் சக்கரவர்த்தி, குலோத்துங்க சோழன், தன் ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், தன் தேவாரத்துத் திருப்பதியம்பாடிய பொய்யாதசேவடி தேவகண நாதனான இராஜராஜப் பிச்சனையும் அவன் வர்க்கத்தாரையும் இத்திருக்கோயிலில் திருப்பதியம் பாடுவித்துக்கொண்டு, முன்பில் ஆண்டுகள் குருடர்களுக்கு விட்டுவரும் நிவந்தப்படி இவர்களுக்கும் கொடுக்குமாறு கட்டளையிட்டுள்ளான்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு விழுப்புரம் நகரிலிருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்பு : 04146 - 223379, 09843066252.

Related Content

திருநாவலூர் தலவரலாறு

திருநெல்வெண்ணெய் (நெய்வெணை) தலவரலாறு

திருஅறையணிநல்லூர் தலவரலாறு

இடையாறு தலவரலாறு

திருவெண்ணெய்நல்லூர் தலவரலாறு