இறைவர் திருப்பெயர்: கிருபாபுரீசுவரர், அருட்டுறை நாதர், தடுத்தாட்கொண்டநாதர்.
இறைவியார் திருப்பெயர்: மங்களாம்பிகை, வேற்கண்ணிநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : தண்டதீர்த்தம், பெண்ணையாறு.
வழிபட்டோர்:சுந்தரர், அப்பர், சேக்கிழார், வேதங்கள், திருமால், வேதன், ஷண்முகன், விஜயன், சுந்தரமூர்த்தி நாயனார், கம்பர், மெய்கண்டார்
- வேதங்கள் சிவபெருமான் அப்படி இங்கு தவம் புரிய அவற்றின் நடுவே எரியுருவமாகத் தோன்றினார். எல்லோரும் வழிபட சுயம்பூ லிங்கமாகக் காட்சியளிக்கிறார்,
- இறைவியார் வெண்ணெய்யால் கோட்டை அமைத்து வழிபட்டதால் வெண்ணெய் நல்லூர் எனப் பெயர் பெற்றது. இறைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரைத் துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றதெனத் தலபுராணம் கூறுகிறது.
- சிவபெருமானால் அகந்தை நீக்கப்பட்ட தாருகாவனத்து ரிஷிகள் வழிபட்ட ஊர். அவர்களுக்குக் கருணை செய்து அருள் புரிந்ததால் இறைவன் கிருபாபுரீஸ்வரர் அல்லது அருள் துறை நாதர் என்று அழைக்கப்படுகிறார்.
- அருச்சுனன் தன அண்ணன் தருமன், திரௌபதியுடன் தனித்திருந்ததைப் பார்க்க நேர்ந்த பாவத்தை இங்கு வழிபட்டு விடுபட்டான். விஜய லிங்கத்தை வழிபட்டு அருச்சுனன் மகப்பேறு பெற்றான்.
- மஹாவிஷ்ணு பூஜித்தது சங்கரலிங்கம்.
- சுந்தர லிங்கம் தேவேந்திரனால் வழிபடப்பட்டது.
- கருவுற்ற பசுவை வேள்வி செய்த பாவத்தை வித கோத்திரர் என்ற அந்தணர் இங்கு வழிபட்டுத் தீர்த்துக் கொண்டார்.
- சுந்தரமூர்த்தி நாயனார், புத்தூர் சடங்கவி சிவாச்சாரியாருடைய மகளாரைத் திருமணஞ் செய்தருளும் போது, இறைவர், முன் கயிலாயத்தில் அருளியபடி வயது முதிர்ந்த அந்தணராய்த் தோன்றித் தடுத்தாட்கொண்டருளினார். அப்புத்தூர் இப்பொழுது மணம் தவிர்ந்தபுத்தூர் என்று வழங்கப்படுகின்றது. சிவபெருமான் சுந்தரரை ஓலை ஆவணம் காட்டி தடுத்தாட்கொண்டருளிய திருவூர் திருவெண்ணெய்நல்லூர். நின் 'வருமுறைமனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக' என்று கேட்டவர்க்கு 'என் இருப்பிடம் இதுவே' என்று இறைவன் காட்டிய திருக்கோயிலை உடைய பதி.
- சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் எழுந்தருளிய தலமும் இது.
- கல்வெட்டு மூலம் அறியவரும் இறைவர் திருப்பெயர்கள்: திருவெண்ணைநல்லூர்த் திருவருட்டுறை ஆள்வார், திருவெண்ணைநல்லுர் உடையார் ஆட்கொண்டதேவர், தடுத்தாட்கொண்டதேவர்.
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சுந்தரர் - 1. பித்தா பிறைசூடி (7.01);
பாடல்கள் : அப்பர் - சீரார் புனற்கெடில (6.07.9);
சுந்தரர் - கோவலன் (7.17.1,3,4,5,6,7,8,9 & 10),
அன்று வந்தெனை (7.62.5),
கற்ப கத்தினைக் (7.68.6),
நம்பனே (7.69.8);
சேக்கிழார் - என்றலும் நின்ற ஐயர் (12.5.47,48,49,50,59,76 & 78) தடுத்தாட்கொண்ட புராணம்,
மலர் மிசை (12.7.49) அமர் நீதி நாயனார் புராணம்,
திருவதிகைப் (12.21.148) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,
தேவர் தம்பிரான் (12.28.229) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,
அப் பதிக் கண் (12.29.97,184,236 & 239) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
தல மரம் : மூங்கில்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மாவட்டம் : தென்னாற்காடு; வழி - விழுப்புரம் திருச்சிராப்பள்ளி இருப்புப் பாதையில் திருவெண்ணெய்நல்லூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 7-கி. மீ. தொலைவில் உள்ளது.
தொடர்பு :
093456 60711