அம்பர்நகர் அந்தணர்சோ மாசி மாறர் அன்பர்களாம் யாவர்க்கும் அன்பின்அமு த்ளிப்பார் உம்பர்நிகழ் வகையாகம் பலவுஞ் செய்யும் உண்மையினார் ஐந்தெழுத்தும் ஓவா நாவார் நம்பர்திகழ் திருவாரூர் நயந்து போற்றும் நாவலர் கோன் அடிபரவும் நன்மை யாலே இம்பர்தொழ உம்பர்பணிந்து ஏத்த வேலை ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே
சோழமண்டலத்திலே, திருவம்பரிலே, பிராமணகுலத்திலே சோமாசிமாறநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனது ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை மிகுந்த அன்பினோடு ஜபித்தலை நித்திய நியமமெனக் கொண்டவர் எந்தக் குலத்தினராயினும், எந்தக் குணத்தினராயினும், பரமசிவன் மேல் அன்புடையவர்களாயின், அவர்களே நம்மை ஆள்பவர் என்னும் மெய்யறிவினையுடையவர் அவ்வன்பர்கள் தம்முடைய வீட்டுக்கு எழுந்தருளிவந்தால், அவர்களை எதிர் கொண்டு வணங்கித் திருவமுது செய்விப்பவர். பரமசிவனுக்குப்பிரீதியாகிய யாகங்களை, புகழ் பயன் முதலியன கருதாது நிஷ்காமியாக வேதவிதிப்படி செய்பவர், அவர் திருவாரூரிற் சென்று, சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்திநாயனாரை அடைந்து, அவருடைய திருவடிகளிலே பக்தி பண்ணி, அதனாலே சிவபதத்தைப் பெற்றார்.
திருச்சிற்றம்பலம்.
சிவம் பூதங்கள் தோறும் அந்தர்யாமியாய் நிற்கும் அதன் நிலையை ஆதாயப்படுத்திக் கொண்டு, பூதங்களுள், விசேட தூய்மையும் விசேட ஆற்றலும் விசேட வியாபகத் திறனும் உளதாதல்பற்றி அக்கினியைத் தெரிந்தெடுத்து, தியானமந்திர பாவனைகளால் ஆகுதி சகிதம் பூசித்துப் போற்றிப் பிரார்த்திக்கும் வழிபாடு யாகம் எனப்படும். வழிபாடு ஒன்றிருப்பின் அதை ஏற்றுப் பலனளிப்ப தொன்றுளதாக வேண்டுதலின் அது அக்கினியே என்றும் அக்கினி முறையான ஆகுதிகளாற் பிரீதி செய்து வழிபடப்படுகையில் தன் அந்தர்க்கதமான தெய்விக சக்தியால் வழிபடுவோர் மனச்சார்பான பாபநோக்குகளைத் தகித்தும் அவர்கள் வழிபாட்டியல்பை அறிந்தும் அவர்களை நல்வழியிற் செலுத்துமென்றும் அவர்க்கும் அவர் சந்ததிக்கும் நல்ல சுகபோகங்களை வழங்குமென்றும் அவர்கள் காண விரும்புந் தெய்வத்தைக் கொணர்ந்து சேர்க்குமென்றும் வேண்டும்போது அவர்கள் விரும்புந் தேவதையாகத் தானே நின்றுதவும் என்றும் கொள்ளப்பட்ட யாகவழிபாட்டியல்புகள் வேதங்களில் உள. அவை, "அக்னே நய சுபதா அஸ்மான் விச்வானி தேவ வயுனானி வித்வான் யுயோத்யஸ் மச்ஜுஹுராணம் ஏனோ பூயிஷ்டாம் தேநம உத்திம்விதேம" என ஈசாவாஸ்ய உபநிடதத்தும் "தாம்ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் அநபகாமினீம்" எனச் சிறீ சூத்தத்தும் "அக்னே த்வம் பாரயாநவ்யோ அஸ்மான் ஸ்வஸ்திபி: அதிதுர்க்காணி விச்வா பூ:ச ப்ருதிவீ பகுலான உர்வீபவா தோகாய தனயாய சம்யோ:- தாம் அக்னிவர்ணாம் தபஸாஜ்வலந்தீம் துர்க்காம் தேவீம் சரணம் அஹம்ப்ரபத்யே சுதரஸிதரஸேநம:" எனத் துர்க்காசூத்தத்தும் வருவனவற்றால் அறியப்படும். இத்தகு யாகங்களில் இடம் பெறும் அக்கினி வைதிகாக்கினி எனவும் அது சார்ந்த யாகம் வைதிக வேள்வி எனவும் பெயர்பெறும். அங்ஙனமல்லாது, தியான பாவனா கிரியா மந்திரவிதிகளால் அக்கினியைச் சிவகர்ப்பத்திலிருந்து தோன்றுஞ் சிசுவாகப் பெற்று வளர்த்தெடுத்து ஆகுதிகளால் மேலுஞ் சிவத்துவம் பொலியச் செய்யப் படுகையில் சிவனே அது தானாய் நின்று சம்பந்தப்பட்ட பூசை பிரார்த்தனைகளை ஏற்றுப் பலனளிப்பார் என்ற பாங்கில் நடைபெறுகையில் அது சிவாக்கினி எனவும் அது சம்பந்தப்பட்ட யாகம் சிவவேள்வி எனவும் பெயர் பெறுவதாகும். இவ்விருவகை வேள்விகளில் வைதிக வேள்வி இம்மை மறுமைப் பயன்களைத் தந்தொழிதலன்றி, "பிறப்பறுத்துச் சிவத்தடையும் ஆன்ம விமோசனப் பேற்றுக்கு உத்தரவாதமற்றதாதல் பற்றி அதைக் காமிய வேள்வியென்றமட்டிற் கணித்துக் கொண்டு, ஆன்ம விமோசனப் பேற்றுக்கு உத்தரவாதமுள்ளதெனச் சிவவேள்வியே சிவாகமங்களால் நிலைநாட்டப்படும். இச்சிவவேள்விக்குச் சிவனே ஏற்போனும் பயனளிப்போனுமாதலின் சிவனே யாகபதியாதல் பெறப்படும். சிவமகிமை அறியவராக் குறைபாட்டால் அக்கினியே யாகபதியாகக் கொண்டியலுங் காமிய வேள்விகளிலும் அவ்வக்கினி மூலமாக அவ்வவ் வேள்விப்பயன் அளிப்பவர் சிவபெருமானல்ல தில்லை என்பது சித்தாந்தமாகலின் எவ்வகை வேள்விக்கும் பதி சிவனேயென்றுந் துணியப்படும். சிவபிரான் வெளிப்படற்கிடமாதலின் சிவாக்கினி சாக்ஷாத் சிவபெருமானே எனலும் பிரசித்தமாம். அது, தேவாரத்தில், "எரிபெருக்குவ ரவ்வெரியீசன துருவருக்கம தாவதுணர்கிலார்" எனவும் திருத்தொண்டர் புராணத்தில். "அருப்புமென் முலையினார்தம் அணிமலர்க்கைப் பிடித்தங்கு (தீவலஞ்செய்ய) ஒருப்படு முடையபிள்ளையார் திருவுள்ளந் தன்னில் விருப்புறு மங்கியாவார் விடை உயர்த்தவரே என்று திருப்பெரு மணத்தை மேவுஞ் சிந்தையில் தெளிந்து செல்வார்" எனவும் வருவனவற்றாற் பெறப்படும். சிவபெருமானே யாகபதி என்றற்கு இதுவும் சார்பு வகையால் ஓராதாரமாம். இங்ஙனஞ் சிவனையே யாக பதியாகக் கொண்டு வேள்வியியற்றலே சைவமரபாதல் திருத்தொண்டர் புராணத்தில், "ஆதிமாமறை விதியினா லாறுசூழ் வேணிநாதனாரை முன்னாகவே புரியநல்வேள்வி தீது நீங்கநீர் செய்யவும்" என வருவது கொண்டும், கந்தபுராணத்தில், "புங்கவரெவர்க்கு நல்கும் புவிபுகழவி கொள்வானும் அங்கியின் முதலும் வேள்விக் கதிபனும் அளிக்கின்றானுஞ் சங்கரன் தானே வேதஞ் சாற்றுமால் மகத்துக்காதி இங்கொரு தேவுண்டென்னி லெழுகெனவுரைத்திமாதோ" என்பது கொண்டும் நிரூபிக்கப்படும். அகந்தையினால் சிவனுக்குரிய யாகாதிபத்தியத்தை விஷ்ணுவுக்கு மாற்றித் தக்கன் செய்த வேள்வி அகிலமறியப் பட்டபாடுங் கெட்டகேடும் சிவனையே யாகாதி பதியாகக் கொள்ள வேண்டுவதன் இன்றியமையாமையைத் தெரித்தலுங் காண்க.
மெய்யுணர்வு தலைப்பட்டுச் சிவனடியார் வழிபாடும் திருவைந்தெழுத் துபாசனையும் சுந்தரமூர்த்திநாயனார் பால் நண்புறவுங் கைவரப் பெற்றிருந்த சோமாசிமாறநாயனாரே, தாம் "ஈசன் மலர்க்கழல் பேணுதற்குச்" சிவவேள்வியே செவ்விய நெறியாகக் கொண்டிருந்தாரெனின் இதன் மகிமையை எண்ணியுணர்ந்து கடைப்பிடித்தல் அவசியமாதல் சொல்லாமே அமையும்.
திருச்சிற்றம்பலம்.
See Also:
1. சோமாசி மாற நாயனார் புராணம் (தமிழ் மூலம்)
2. chOmAchi mARa nAyanAr purANam in English prose
3. Somasi Maara Nayanar Puranam in English Poetry