கொண்டல்பனி வளர்சோலை மிழலை நாட்டுக் கோதில்புகழ்ப் பெருமிழலைக் குறும்ப னார்சீ ரண்டர்பிரா னடியவருக் கடியா ராகு மாதரவா லணுக்கவன் றொண்டர்க் காளாய் மண்டொழுமெண் டருசித்தி வாய்த்து ளார்தாம் வன்றொண்டர் வடகயிலை மருவு நாண்மு னெண்டிகழு மறைமூல நெறியூ டேகி யிலங்கொளிசேர் வடகயிலை யெய்தி னாரே.
மிழலைநாட்டிலே பெருமிழலை என்னும் ஊரிலே, சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்த பெருமிழலைக்குறும்ப நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்களைக் காணுந்தோறும் விரைந்தெதீர்கொண்டு வணங்கி, அவர்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்பவர். அவர்களை நாடோறுந் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுப்பவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பெருமையை அறிந்து அவருடைய திருவடிகளை மனம் வாக்குக் காயங்களினாலே சிந்தித்துத் துதித்து வணங்குதலே பரமசிவனுடைய திருவடிகளை அடைதற்கு உரிய நெறியென்று அப்படிச் செய்து வந்தார். அதனால் அவர் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமகாசித்திகளையும் அடைந்தார். அடைந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்து வந்தார்.
இப்படி நிகழுங்காலத்திலே, திருவஞ்சைக்களத்திற் சென்று திருப்பதிகம்பாடுஞ் சுந்தரமூர்த்திநாயனாருக்குப் பரமசிவனுடைய திருவருளினாலே உத்தரகைலாசத்தை அடையும் வாழ்வு கிடைப்பதைத் தம்முடைய ஊரிலிருந்து கொண்டே யோகப் பிரத்தியக்ஷத்தால் அறிந்து; "சுந்தரமூர்த்திநாயனார் உத்தர கைலாசத்தை நாளைக்கு அடைய நான் பிரிந்து இங்கே வாழ மாட்டேன்" என்று நினைந்து, "இன்றைக்கு யோகத்தினாலே சிவபிரானுடைய திருவடியை அடைவேன்" என்று துணிந்து, யோகமுயற்சியினாலே பிரமரந்திரந்திறப்ப உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்
கண்மணியானது இது நன்று இது தீது என்று காட்டுதல் போலச் சற்குருவானவர் இது நன்னெறி இது தீநெறி என்று உணர்ந்து வோராதலால், அவரைச் சிவபெருமான் எனவே பாவித்து, நியமமாக மனம் வாக்குக் காயங்களினாலே சிரத்தையுடன் வழிபடுவோர் சித்தி முத்திகளைப் பெறுவர். அது "சிவனே சிவஞானி யாதலாற் சுத்த - சிவனே யெனவடி சேரவல் லார்க்கு - நவமான தத்துவ நன்முத்தி நண்ணும் - பவமான தின்றிப் பரலோக மாமே; தெளிவு குருவின் றிருமேனி காண்ட - றெளிவு குருவின்றிருவார்த்தை கேட்ட - றெளிவு குருவின் றிருநாமஞ் செப்ப - றெளிவு குருரூபஞ் சிந்தித்த றானே" எனத் திருமந்திரத்திற் கூறுமாற்றால் அறிக. இப்பெருமிழலைக் குறும்பநாயனார் உலகம் உய்யும் பொருட்டுத் திருத்தொண்டத்தொகை அருளிச் செய்த சமயகுரவராகிய சுந்தரமூர்த்தி நாயனாரை நியமமாகச் சிரத்தையோடு சிந்தித்துத் துதித்து வணங்கினமையாலன்றோ, அணிமா முதலிய அட்டசித்திகளையும் பெற்று, ஸ்ரீ பஞ்சாக்ஷரமே தமக்குச் சுற்றமும் பொருளும் உணர்வும் எனக் கொண்டார். இவரது குருபத்தி முதிர்ச்சி, சுந்தரமூர்த்தி நாயனார் உத்தர கைலாசத்தை அடைவதை முன்னுணர்ந்து, தாம் அவரைப் பிரிதலாற்றாமையால் முதனாள் யோக முயற்சியினாலே பிரமரந்திர வழியால் உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தை அடைந்தமையாலே செவ்விதிற்றெளியப்படும்.
திருச்சிற்றம்பலம்
See Also:
1. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் (தமிழ் மூலம்)
2. perumizalaik kuRumba nAyanAr purANam in English prose
3. Perumizhalai-k-Kurumpa Nayanar Puranam in English Poetry