நாளும் நம்பி ஆரூரர்
நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும் படியால் அணிமாதி
சித்தியான அணைந்த அதற்பின்
மூளும் காதலுடன் பெருக
முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும்
கேளும் பொருளும் உணர்வுமாம்
பரிசு வாய்ப்பக் கெழுமினார். 6
இன்ன வாறே இவர்ஒழுக
ஏறுகொடி மேல்உயர்த்தவர் தாம்
பொன்னின் கழல்கள் மண்ணின்மேல்
பொருந்த வந்துவழக்கு உரைத்து
மன்னும் ஓலைஅவை முன்பு
காட்டி ஆண்ட வன்தொண்டர்
சென்னி மதிதோய் மாடமலி
கொடுங் கோளூரைச் சேர்வுற்றார். 7
அஞ்சைக் களத்து நஞ்சுண்ட
அமுதைப் பரவி அணைவுறுவார்
செஞ்சொல் தமிழ் மாலைகள்
மொழியத்தேவர் பெருமான் அருளாலே
மஞ்சில் திகழும் வடகயிலைப்
பொருப்பில் எய்தவரும் வாழ்வு
நெஞ்சில் தெளியஇங்கு உணர்ந்தார்
நீடு மிழலைக் குறும்பனார். 8
மண்ணில் திகழும் திருநாவலூரில்
வந்த வன் தொண்டர்
நண்ணற்கு அரிய திருக்கயிலை
நாளை எய்தநான் பிரிந்து
கண்ணில் கரிய மணிகழிய
வாழ்வார் போலவாழேன் என்று
எண்ணிச் சிவன்தாள் இன்றேசென்று
அடைவன் யோகத்தால் என்பார். 9
நாலு கரணங்களும் ஒன்றாய்
நல்ல அறிவுமேல் கொண்டு
காலும் பிரமநாடி வழிக்கருத்துச்
செலுத்தக் கபால நடு
ஏலவே முன்பயின்ற நெறிஎடுத்த
மறை மூலம் திறப்ப
மூல முதல்வர் திருப்பாதம்
அணைவார் கயிலைமுன் அடைந்தார். 10
பயிலைச் செறிந்த யோகத்தால்
பரவை கேள்வன் பாதமுறக்
கயிலைப் பொருப்பர் அடிஅடைந்த
மிழலைக் குறும்பர்கழல் வணங்கி
மயிலைப் புறம்கொள் மென்சாயல்
மகளிர் கிளவி யாழினொடும்
குயிலைப் பொருவும் காரைக்கால்
அம்மை பெருமை கூறுவாம். 11
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
பண் :
நாடு :
தலம் :
சிறப்பு: திருத்தொண்டர் புராணம் - முதற் காண்டம் - திருநின்ற சருக்கம் - பெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம்