தில்லை Excoecaria agallocha, Linn.; Euphorbiaceae.
கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம்பல மேத்த
மாணா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே.
. - திருஞானசம்பந்தர்.
திருத்தில்லை (கோயில், சிதம்பரம்) தலமரமாக விளங்குவது தில்லை மரமாகும். தில்லை மரங்கள் நிறைந்ததாலேயே தில்லைவனம் என்ற பெயர் பெற்று (ஊரின் பெயர் தில்லை; கோயிலின் பெயர் சிதம்பரம். தற்போது கோயிலின் பெயராலேயே ஊர் பெயர் விளங்குகின்றது.) தில்லையானது. இது கூர்நுனிப்பற்களுள்ள இலைகளை உடைய பசுமையான மரம். இம்மரத்தின் பால் உடலில் பட்டால் உடல் புண்ணாகும். தமிழகக் கடற்கறையோரக் காடுகளில் இது தானே வளர்கின்றது. இலை, விதை, பால் முதலியன மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.
திருமுறைகளில் தில்லை பற்றிய குறிப்பு :-
வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய
கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே. 6
மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள்
பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்
செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே. 3
கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலம்ஏத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே. 9
பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே. 10
செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே. 5
நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே. 4
பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே. 2
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே. 1
ஆரூர்தில்லை யம்பலம் வல்லந்நல்லம்
வடகச்சியு மச்சிறு பாக்கம் நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி
கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்
நீரூர் வயல்நின்றியூர் குன்றியூருங்
குருகா வையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர்நன் னீள்வயல் நெய்த்தானமும்
பிதற்றாய்பிறை சூடிதன் பேரிடமே. 1
வென்றி மாமல ரோனும்
விரிகடல் துயின்றவன் தானும்
என்றும் ஏத்துகை யுடையார்
இமையவர் துதிசெய விரும்பி
முன்றில் மாமலர் வாசம்
முதுமதி தவழ்பொழில் தில்லை
மன்றி லாடல துடையார்
வாழ்கொளி புத்தூ ருளாரே. 9
தொல்லைஆரமு துண்ணநஞ் சுண்டதோர்
தூமணிமிட றாபகு வாயதோர்
பல்லையார்தலை யிற்பலியேற்றுழல் பண்டரங்கா
தில்லையார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
சேர்தலாற்கழற் சேவடி கைதொழ
இல்லையாம்வினை தானெரியம்மதி லெய்தவனே. 5
தாரினாற்விரி கொன்றை யாய்மதி
தாங்குநீள் சடையாய் தலைவாநல்ல
தேரினார்மறுகின் திருவாரணி தில்லைதன்னுட்
சீரினால்வழி பாடொழி யாததோர்
செம்மையாலழ காயசிற் றம்பலம்
ஏரினாலமர்ந்தா யுனசீரடி யேத்துதுமே. 9
சாதியார்பளிங் கின்னொடு வெள்ளிய
சங்கவார்குழை யாய்திக ழப்படும்
வேதியாவிகிர்தா விழவாரணி தில்லைதன்னுள்
ஆதியாய்க்கிட மாயசிற் றம்பலம்
அங்கையால்தொழ வல்லடி யார்களை
வாதியாதகலுந் நலியாமலி தீவினையே. 7
கொட்டமேகம ழுங்குழ லாளொடு
கூடினாயெரு தேறி னாய்நுதல்
பட்டமேபுனைவாய் இசைபாடுவ பாரிடமா
நட்டமேநவில் வாய்மறை யோர்தில்லை
நல்லவர்பிரி யாதசிற் றம்பலம்
இட்டமாவுறைவா யிவைமேவிய தென்னைகொலோ. 2
கொல்லையே றுடையவன்
கோவண ஆடையன்
பல்லையார் படுதலைப்
பலிகொளும் பரமனார்
முல்லையார் புறவணி
முதுபதி நறைகமழ்
தில்லையான் உறைவிடந்
திருவுசாத் தானமே. 2
நாறுபூம்பொழில் நண்ணிய காழியுள்
நான்மறைவல்ல ஞான சம்பந்தன்
ஊறும்இன் தமிழா லுயர்ந்தாருறை தில்லைதன்னுள்
ஏறுதொல்புக ழேந்துசிற் றம்பலத்
தீசனைஇசை யாற்சொன்ன பத்திவை
கூறுமாறுவல்லார் உயர்ந்தாரொடுங் கூடுவரே.
ஒன்றி யிருந்து நினைமின்கள்
உந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற்
கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட்
சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னும் எம்பெரு
மான்றன் திருக்குறிப்பே. 2
செஞ்சடைக் கற்றை முற்றத்
திளநிலா எறிக்குஞ் சென்னி
நஞ்சடைக் கண்ட னாரைக்
காணலா நறவ நாறும்
மஞ்சடை சோலைத் தில்லை
மல்குசிற் றம்ப லத்தே
துஞ்சடை இருள் கிழியத்
துளங்கெரி யாடு மாறே. 1
கருத்தனாய்ப் பாட மாட்டேன்
காம்பன தோளி பங்கா
ஒருத்தரா லறிய வொண்ணாத்
திருவுரு வுடைய சோதீ
திருத்தமாந் தில்லை தன்னுட்
டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
நிருத்தம்நான் காண வேண்டி
நேர்பட வந்த வாறே. 2
பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ
றணிந்து புரிசடைகள்
மின்னொத் திலங்கப் பலிதேர்ந்
துழலும் விடங்கவேடச்
சின்னத்தி னான்மலி தில்லையுட்
சிற்றம் பலத்துநட்டம்
என்னத்தன் ஆடல்கண் டின்புற்ற
தாலிவ் விருநிலமே. 9
மண்ணுண்ட மால வனும்
மலர்மிசை மன்னி னானும்
விண்ணுண்ட திருவு ருவம்
விரும்பினார் காண மாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க
தில்லைச்சிற் றம்ப லத்தே
பண்ணுண்ட பாட லோடும்
பரமநீ யாடு மாறே.
தெரித்த கணையாற் திரிபுர
மூன்றுஞ்செந் தீயின்மூழ்க
எரித்த இறைவன் இமையவர்
கோமான் இணையடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற
தில்லைச்சிற் றம்பலவன்
சிரித்த முகங்கண்ட கண்கொண்டு
மற்றினிக் காண்பதென்னே. 7
தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி
யுன்னித் தடவரையை
வரைக்கை களாலெடுத் தார்ப்ப
மலைமகள் கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்தும்
அணிதில்லை யம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட
கண்கொண்டு காண்பதென்னே.
ஓருடம் பிருவ ராகி
ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
பாரிடம் பாணி செய்யப்
பயின்றஎம் பரம மூர்த்தி
காரிடந் தில்லை தன்னுட்
கருதுசிற் றம்ப லத்தே
பேரிடம் பெருக நின்று
பிறங்கெரி யாடு மாறே. 6
பாலனாய் விருத்த னாகிப்
பனிநிலா எறிக்குஞ் சென்னி
காலனைக் காலாற் காய்ந்த
கடவுளார் விடையொன் றேறி
ஞாலமாந் தில்லை தன்னுள்
நவின்றசிற் றம்ப லத்தே
நீலஞ்சேர் கண்ட னார்தாம்
நீண்டெரி யாடு மாறே. 10
சடையனார் சாந்த நீற்றர்
தனிநிலா எறிக்குஞ் சென்னி
உடையனா ருடைத லையில்
உண்பதும் பிச்சை யேற்றுக்
கடிகொள்பூந் தில்லை தன்னுட்
கருதுசிற் றம்ப லத்தே
அடிகழ லார்க்க நின்று
வனலெரி யாடு மாறே. 3
பெருமைநன் றுடைய தில்லை
யென்றுநான் பேச மாட்டேன்
ஒருமையால் உன்னை உள்கி
உகந்துவா னேற மாட்டேன்
கருமையிட் டாய வூனைக்
கட்டமே கழிக்கின் றேன்நான்
அருமையா நஞ்ச முண்ட
ஆவடு துறையு ளானே. 4
மனத்தினார் திகைத்து நாளும்
மாண்பலா நெறிகள் மேலே
கனைப்பரால் என்செய் கேனோ
கறையணி கண்டத் தானே
தினைத்தனை வேதங் குன்றாத்
தில்லைச்சிற் றம்ப லத்தே
அனைத்துநின் னிலயங் காண்பான்
அடியனேன் வந்த வாறே. 8
பாளையு டைக்கமு கோங்கிப்பன்
மாடம்நெ ருங்கியெங்கும்
வாளையு டைப்புனல் வந்தெறி
வாழ்வயல் தில்லைதன்னுள்
ஆளவு டைக்கழற் சிற்றம்ப
லத்தரன் ஆடல்கண்டாற்
பீளையு டைக்கண்க ளாற்பின்னைப்
பேய்த்தொண்டர் காண்பதென்னே. 1
நெஞ்சினைத் தூய்மை செய்து
நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ
வானவர் தலைவ னேநீ
மஞ்சடை சோலைத் தில்லை
மல்குசிற் றம்ப லத்தே
அஞ்சொலாள் காண நின்று
அழகநீ யாடு மாறே. 9
கருநட்ட கண்டனை அண்டத்
தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதி லெய்யவல்
லானைச்செந் தீமுழங்கத்
திருநட்ட மாடியைத் தில்லைக்
கிறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்ட மாடியை வானவர்
கோனென்று வாழ்த்துவனே. 1
படைக்கல மாகவுன் னாமத்
தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லேன் எழுபிறப்
பும்முனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது
வணங்கித்தூ நீறணிந்துன்
அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச்
சிற்றம் பலத்தரனே. 8
சாட எடுத்தது தக்கன்றன்
வேள்வியிற் சந்திரனை
வீட எடுத்தது காலனை
நாரணன் நான்முகனுந்
தேட எடுத்தது தில்லையுட்
சிற்றம் பலத்துநட்டம்
ஆட எடுத்திட்ட பாதமன்
றோநம்மை யாட்கொண்டதே.
சித்தத் தெழுந்த செழுங்கம
லத்தன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற
தில்லைச்சிற் றம்பலவன்
முத்தும் வயிரமும் மாணிக்கந்
தன்னுள் விளங்கியதூ
மத்த மலர்கண்ட கண்கொண்டு
மற்றினிக் காண்பதென்னே. 9
வைச்ச பொருள்நமக் காகுமென்
றெண்ணி நமச்சிவாய
அச்ச மொழிந்தேன் அணிதில்லை
யம்பலத் தாடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி
உந்தியின் மேலசைத்த
கச்சின் அழகுகண் டாற்பின்னைக்
கண்கொண்டு காண்பதென்னே. 4
முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்
நோக்கும் முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்தவெண்
ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித்
தோலுமென் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பலக்
கூத்தன் குரைகழலே. 7
ஏறனார் ஏறு தம்பால்
இளநிலா எறிக்குஞ் சென்னி
ஆறனார் ஆறு சூடி
ஆயிழை யாளோர் பாகம்
நாறுபூஞ் சோலைத் தில்லை
நவின்றசிற் றம்ப லத்தே
நீறுமெய் பூசி நின்று
நீண்டெரி யாடு மாறே. 2
பார்த்திருந் தடிய னேன்நான்
பரவுவன் பாடி யாடி
மூர்த்தியே என்பன் உன்னை
மூவரில் முதல்வன் என்பன்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்
தில்லைச்சிற் றம்ப லத்துக்
கூத்தாவுன் கூத்துக் காண்பான்
கூடநான் வந்த வாறே. 6
விருத்தனாய்ப் பால னாகி
விரிநிலா எறிக்குஞ் சென்னி
நிருத்தனார் நிருத்தஞ் செய்ய
நீண்டபுன் சடைகள் தாழக்
கருத்தனார் தில்லை தன்னுட்
கருதுசிற் றம்ப லத்தே
அருத்தமா மேனி தன்னோ
டனலெரி யாடு மாறே. 9
பத்தனாய்ப் பாட மாட்டேன்
பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கேன்
என்னைநீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை
அம்பலத் தாடு கின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான்
அடியனேன் வந்த வாறே. 1
மறையனார் மழுவொன் றேந்தி
மணிநிலா எறிக்குஞ் சென்னி
இறைவனார் எம்பி ரானார்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறைகொள்நீர்த் தில்லை தன்னுட்
டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
அறைகழ லார்க்க நின்று
வனலெரி யாடு மாறே. 8
மதியிலா அரக்க னோடி
மாமலை யெடுக்க நோக்கி
நெதியன்றோள் நெரிய வூன்றி
நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
மதியந்தோய் தில்லை தன்னுள்
மல்குசிற் றம்ப லத்தே
அதிசயம் போல நின்று
வனலெரி யாடு மாறே.
சிந்தையைத் திகைப்பி யாதே
செறிவுடை அடிமை செய்ய
எந்தைநீ அருளிச் செய்யாய்
யாதுநான் செய்வ தென்னே
செந்தியார் வேள்வி ஓவாத்
தில்லைச்சிற் றம்ப லத்தே
அந்தியும் பகலும் ஆட
அடியிணை அலசுங் கொல்லோ. 4
பையர வசைத்த அல்குற்
பனிநிலா எறிக்குஞ் சென்னி
மையரிக் கண்ணி யாளும்
மாலுமோர் பாக மாகிச்
செய்யெரி தில்லை தன்னுட்
டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
கையெரி வீசி நின்று
கனலெரி யாடு மாறே. 4
தொடுத்த மலரொடு தூபமுஞ்
சாந்துங்கொண் டெப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு
மாலுக்குங் காண்பரியான்
பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய
தில்லைச்சிற் றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு
மற்றினிக் காண்பதென்னே. 3
செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற
தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள்
கண்டு மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த
நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக்
கண்கொண்டு காண்பதென்னே. 5
மூவா உருவத்து முக்கண்
முதல்வமீக் கூரிடும்பை
காவா யெனக்கடை தூங்கு
மணியைக்கை யாலமரர்
நாவா யசைத்த வொலியொலி
மாறிய தில்லையப்பாற்
தீயாய் எரிந்து பொடியாய்க்
கழிந்த திரிபுரமே. 3
கன்மன வீர்கழி யுங்கருத்
தேசொல்லிக் காண்பதென்னே
நன்மன வர்நவில் தில்லையுட்
சிற்றம் பலத்துநட்டம்
பொன்மலை யில்வெள்ளிக் குன்றது
போலப் பொலிந்திலங்கி
என்மன மேயொன்றிப் புக்கனன்
போந்த சுவடில்லையே. 3
பொருவிடை யொன்றுடைப் புண்ணிய
மூர்த்தி புலியதளன்
உருவுடை யம்மலை மங்கைம
ணாளன் உலகுக்கெல்லாந்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லைச்சிற் றம்பலவன்
திருவடி யைக்கண்ட கண்கொண்டு
மற்றினிக் காண்பதென்னே. 2
ஊனத்தை நீக்கி உலகறிய
என்னை யாட்கொண்டவன்
தேனொத் தெனக்கினி யான்தில்லைச்
சிற்றம் பலவனெங்கோன்
வானத் தவருய்ய வன்னஞ்சை
யுண்டகண் டத்திலங்கும்
ஏனத் தெயிறு கண்டாற்பின்னைக்
கண்கொண்டு காண்பதென்னே. 6
ஓதினார் வேதம் வாயால்
ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
பூதனார் பூதஞ் சூழப்
புலியுரி யதள னார்தாம்
நாதனார் தில்லை தன்னுள்
நவின்றசிற் றம்ப லத்தே
காதில்வெண் குழைகள் தாழக்
கனலெரி யாடு மாறே. 5
அல்லல் என்செயும்
அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத்
தொந்தந்தான் என்செயும்
தில்லை மாநகர்ச்
சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோர்
அடிமைபூண் டேனுக்கே. 4
காரு லாமலர்க்
கொன்றையந் தாரனை
வாரு லாமுலை
மங்கை மணாளனைத்
தேரு லாவிய
தில்லையுட் கூத்தனை
ஆர்கி லாவமு
தைமறந் துய்வனோ. 9
ஒருத்த னார்உல
கங்கட் கொருசுடர்
திருத்த னார்தில்லைச்
சிற்றம் பலவனார்
விருத்த னார்இளை
யார்விட முண்டவெம்
அருத்த னார்அடி
யாரை அறிவரே. 7
வில்லைவட் டப்பட
வாங்கி அவுணர்தம்
வல்லைவட் டம்மதின்
மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை
கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந்
தோடுதல் உண்மையே. 9
கொல்லை யேற்றினர்
கோளர வத்தினர்
தில்லைச் சிற்றம்
பலத்துறைச் செல்வனார்
தொல்லை யூழியர்
சோற்றுத் துறையர்க்கே
வல்லை யாய்ப்பணி
செய்மட நெஞ்சமே. 1
முல்லை நன்முறு
வல்லுமை பங்கனார்
தில்லை யம்பலத்
தில்லுறை செல்வனார்
கொல்லை யேற்றினர்
கோடிகா வாவென்றங்
கொல்லை யேத்துவார்க்
கூனமொன் றில்லையே. 3
ஓங்கு மால்வரை
ஏந்தலுற் றான்சிரம்
வீங்கி விம்முற
ஊன்றிய தாளினான்
தேங்கு நீர்வயல்
சூழ்தில்லைக் கூத்தனைப்
பாங்கி லாத்தொண்ட
னேன்மறந் துய்வனோ.
கட்டும் பாம்புங்
கபாலங் கைமான்மறி
இட்ட மாயிடு
காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை
யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு
தும்மறந் துய்வனோ. 3
நாடி நாரணன்
நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந்
துங்காண வல்லரோ
மாட மாளிகை
சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென்
னெஞ்சுள் இருக்கவே. 10
நல்ல நான்மறை
யோதிய நம்பனைப்
பல்லில் வெண்டலை
யிற்பலி கொள்வனைத்
தில்லை யான்றென்
பராய்த்துறைச் செல்வனை
வல்லை யாய்வணங்
கித்தொழு வாய்மையே. 6
சிட்டர் வானவர்
சென்று வரங்கொளுஞ்
சிட்டர் வாழ்தில்லைச்
சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி
கைதொழச் செல்லுமச்
சிட்டர் பாலணு
கான்செறு காலனே. 6
அன்னம் பாலிக்குந்
தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு
மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு
மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு
மோவிப் பிறவியே. 1
புல்ல மூர்தியூர்
பூவனூர் பூம்புனல்
நல்ல மூர்திநல்
லூர்நனி பள்ளியூர்
தில்லை யூர்திரு
வாரூர் சீர்காழிநல்
வல்ல மூரென
வல்வினை மாயுமே. 5
தாயவனை எவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத்
தகுதில்லை நடம்பயிலுந் தலைவன் றன்னை
மாயவனும் மலரவனும் வானோ ரேத்த
மறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் றன்னை
மேயவனைப் பொழிலாரூர் மூலட் டானம்
விரும்பியஎம் பெருமானை யெல்லாம் முன்னே
ஆயவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 6
செல்வப் புனற்கெடில வீரட்டமுஞ்
சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமுந்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலுந்
தென்னானைக் காவுஞ் சிராப்பள்ளியும்
நல்லூருந் தேவன் குடிமருகலும்
நல்லவர்கள் தொழுதேத்து நாரையூருங்
கல்லலகு நெடும்புருவக் கபாலமேந்திக்
கட்டங்கத் தோடுறைவார் காப்புக்களே. 1
முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச்சிற் றம்பல மேயாய் போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி. 3
பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்
பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
சிட்டராய்த் தீயேந்திச் செல்வார் தம்மைத்
தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே
ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
கட்டங்கங் கையதே சென்று காணீர்
கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே.
அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார்
ஆலால அருநஞ்சம் அமுதாக் கொண்டார்
கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார்
காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார்
மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார்
மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார்
துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார்
சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக்கொண் டாரே. 7
அல்ல லடியார்க் கறுப்பார் போலும்
அமருலகந் தம்மடைந்தார்க் காட்சி போலும்
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்
நள்ளாறு நாளும் பிரியார் போலும்
முல்லை முகைநகையாள் பாகர் போலும்
முன்னமே தோன்றி முளைத்தார் போலுந்
தில்லை நடமாடுந் தேவர் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 9
வானத் திளமதியும் பாம்புந் தம்மில்
வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலுந்
தேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந்
தில்லை நடமாடுந் தேவர் போலும்
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்
நன்மையுந் தீமையு மானார் போலுந்
தேனொத் தடியார்க் கினியார் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 1
தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி
தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்
வீரட்டங் கோகரணங் கோடி காவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி
முழையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங்
கயிலாய நாதனையே காண லாமே. 1
பார்முழுதாய் விசும்பாகிப் பாதா ளமாம்
பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத்
தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் றன்னை
வாட்போக்கி யம்மானை எம்மா னென்று
வாரமதா மடியார்க்கு வார மாகி
வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ்
சீரரசைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 4
கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்
கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய்
படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய்
பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்
அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய்
அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்
கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 6
அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை
அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக்
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்
கடல்நாகைக் காரோணங் கருதி னானை
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா
திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6
பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்
நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில்வாங்கி யெய்த நாளோ
விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே. 3
ஆத்தம் என்றெனை ஆளுகந் தானை
அமரர் நாதனைக் குமரனைப் பயந்த
வார்த்த யங்கிய முலைமட மானை
வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த
தீர்த்த னைச்சிவ னைச்செழுந் தேனைத்
தில்லை அம்பலத் துள்நிறைந் தாடுங்
கூத்த னைக்குரு மாமணி தன்னைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. 4
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 1
கொல்லை விடைக்கழகுங் கோல நறுஞ்சடையிற்
கொத்தல ரும்மிதழித் தொத்தும் அதனருகே
முல்லை படைத்தநகை மெல்லிய லாளொருபால்
மோகம் மிகுத்திலங்குங் கூறுசெய் யெப்பரிசுந்
தில்லை நகர்ப்பொதுவுற் றாடிய சீர்நடமுந்
திண்மழு வுங்கைமிசைக் கூரெரி யும்மடியார்
கல்ல வடப்பரிசுங் காணுவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 5
கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங்
கோவலுங் கோத்திட்டையும்
வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டார்
ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம்
பலத்தே அருக்கனைமுன்
நாட்டங்கொண் டார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே. 6
பத்தர் சூழப் பராபரன் பாரில்
வந்துபார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான் தில்லை
மூதூர் நடஞ்செய்வான்
எத்தனாகிவந் தில்புகுந்தெமை ஆளுங்
கொண்டெம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே. 4
பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும் பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம். 1
படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங்
கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான்
தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா
நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 14
தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. 9
குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல் வளையாள்
நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாள்தோறும்
அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 20
புத்தன் புரந்தராதியர் அயன்மால் போற்றிசெயும்
பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த
அத்தன் அணிதில்லை அம்பலவன் அருட்கழல்கள்
சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ. 16
திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும்
திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 2
வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னந் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 11
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
கொம்மை வரிமுலைக்
கொம்பனையாள் கூறனுக்குச்
செம்மை மனத்தால்
திருப்பணிகள் செய்வேனுக்கு
இம்மை தரும்பயன்
இத்தனையும் ஈங்கொழிக்கும்
அம்மை குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 10
இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே. 1
பேருங் குணமும்
பிணிப்புறும்இப் பிறவிதனைத்
தூரும் பரிசு
துரிசறுத்துத் தொண்ட ரெல்லாஞ்
சேரும் வகையாற்
சிவன்கருணைத் தேன்பருகி
ஆருங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 5
மதிக்குந் திறலுடைய
வல்லரக்கன் தோள்நெரிய
மிதிக்குந் திருவடி
என் தலைமேல் வீற்றிருப்பக்
கதிக்கும் பசுபாசம்
ஒன்றுமிலோம் எனக்களித்திங்
கதிர்க்குங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 7
என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை அம்பலவன்குணம்பரவித்
துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ. 2
வல்லைவாளரக்கர் புரமெரித்தானே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எல்லைமூவுலகும் உருவியன் றிருவர்
காணும்நாள் ஆதியீ றின்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 4
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
மானேர் நோக்கி உமையாள்
பங்கா வந்திங் காட்கொண்ட
தேனே அமுதே கரும்பின்
தெளிவே சிவனே தென்தில்லைக்
கோனே உன்தன் திருக்குறிப்புக்
கூடு வார்நின் கழல்கூட
ஊனார் புழுக்கூ டிதுகாத்திங்
கிருப்ப தானேன் உடையானே. 55
தில்லை மூதூர் ஆடிய திருவடி
தேன்புக்க தண்பணை சூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. 14
இடக்குங் கருமுருட்
டேனப்பின் கானகத்தே
நடக்குந் திருவடி
என்தலைமேல் நட்டமையால்
கடக்குந் திறல்ஐவர்
கண்டகர்தம் வல்லாட்டை
அடக்குங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 8
பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே
எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல்
விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால்
புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 4
வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்
தனைச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே. 2
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே. 3
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன்நல் தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய். 12
பாழ்ச்செய் விளாவிப்
பயனிலியாய்க் கிடப்பேற்குக்
கீழ்ச்செய் தவத்தாற்
கிழியீடு நேர்பட்டுத்
தாட்செய்ய தாமரைச்
சைவனுக்கென் புன்தலையால்
ஆட்செய் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 9
வையகம் எல்லாம் உரலதாக
மாமேரு என்னும் உலக்கைநாட்டி
மெய்யெனும் மஞ்சள் நிறையஅட்டி
மேதகு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி
ஐயன் அணிதில்லை வாணனுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 9
வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி
மத்தமும் பாடி மதியும்பாடிச்
சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
சிற்றம்ப லத்தெங்கள் செல்வம்பாடிக்
கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக்
கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல்
இட்டுநின் றாடும் அரவம்பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்துநாமே. 19
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 2
குறியும் நெறியும்
குணமுமிலார் குழாங்கள்தமைப்
பிரியும் மனத்தார்
பிறிவரிய பெற்றியனைச்
செறியுங் கருத்தில்
உருத்தமுதாஞ் சிவபதத்தை
அறியுங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 4
என்புள் ளுருக்கி
இருவினையை ஈடழித்துத்
துன்பங் களைந்து
துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்புள்ள வற்றை
முழுதழிய உள்புகுந்த
அன்பின் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 3
எம்பிரான் போற்றி வானத்
தவரவர் ஏறு போற்றி
கொம்பரார் மருங்குல் மங்கை
கூறவெண் ணீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத்
திருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி என்னை
ஆளுடை ஒருவ போற்றி. 67
கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே
ஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்
சாவா ரெல்லாம் என்னளவோ தக்க வாறன் றென்னாரோ
தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே. 6
கொம்பில் அரும்பாய்க்
குவிமலராய்க் காயாகி
வம்பு பழுத்துடலம்
மாண்டிங்ஙன் போகாமே
நம்புமென் சிந்தை
நணுகும்வண்ணம் நானணுகும்
அம்பொன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 6
ஓடுங் கவந்தியுமே
உறவென்றிட் டுள்கசிந்து
தேடும் பொருளுஞ்
சிவன்கழலே எனத்தெளிந்து
கூடும் உயிரும்
குமண்டையிடக் குனித்தடியேன்
ஆடுங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 1
பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை
ஓங்கியுளத் தொளிவளர உலப்பிலா அன்பருளி
வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே. 9
அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி
விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு
அளவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக்
களவிலா வானவருந் தொழுதில்லை கண்டேனே. 8
துடியேர் இடுகிடைத்
தூய்மொழியார் தோள்நசையால்
செடியேறு தீமைகள்
எத்தனையுஞ் செய்திடினும்
முடியேன் பிறவேன்
எனைத்தனதாள் முயங்குவித்த
அடியேன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 2
பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப்
பித்தனிவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே. 7
பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே. 6
கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை
வல்லாள னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும் வண்ணம்
பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே. 4
சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக்
கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே. 5
பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. 10
தரிக்கிலேன் காய வாழ்க்கை
சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள்
விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர்
தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள்
நின்மலா போற்றி போற்றி. 61
வணங்கத் தலை வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து
இணங்தத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான்
அணங்கொடணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணங் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 7
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 5
புகழும் பழியும் பெருக்கிற் பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தினால் லாலிது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை யோனடிப் போதுசென்னித்
திகழு மவர்செல்லல் போலில்லை யாம்பழி சின்மொழிக்கே. 181
தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தந் திங்களின்வாய்ந்
தளிவளர் வல்லியன் னாய்முன்னி யாடுபின் யானளவா
ஒளிவளர் தில்லை யொருவன் கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரற் கரந்துங்ங னேவந்து தோன்றுவனே. 16
ஓராக மிரண்டெழி லாயொளிர் வோன்தில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம்பொதிந் தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகஞ் சிதர்ந்த பயோதர மிப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை யேயெம ரெண்ணுவதே. 194
மதுமலர்ச் சோலையும் வாய்மையும் அன்பும் மருவிவெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின் அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை யோன்தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த வாறென்ப ரேந்திழையே. 275
பற்றொன்றி லார்பற்றுந் தில்லைப் பரன்பரங் குன்றினின்ற
புற்றொன் றரவன் புதல்வ னெனநீ புகுந்துநின்றால்
மற்றுன்று மாமலரிட் டுன்னை வாழ்த்திவந் தித்தலன்றி
மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல ளோமங்கை வாழ்வகையே. 178
கொடுங்கால் குலவரையேழேழ் பொழிலெழில் குன்றுமன்று
நடுங்காதவனை நடுங்க நுடங்கு நடுவுடைய
விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ லாந்தில்லை ஈசன்வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில் நீழலந் தண்புனத்தே. 31
கண்கடம் மாற்பயன் கொண்டனங் கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி ஆரப்பருக வருக இன்னே
விண்கடம் நாயகன் தில்லையின் மெல்லியல் பங்கனெங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங் கானகந் தண்ணெனவே. 220
இரவணை யும்மதி யேர்நுத லார்நுதிக் கோலஞ்செய்து
குரவணை யுங்குழல் இங்கிவ ளால்இக் குறியறிவித்
தரவணை யுஞ்சடை யோன்தில்லை யூரனை யாங்கொருத்தி
தரவணை யும்பரி சாயின வாறுநந் தன்மைகளே. 360
பாப்பணி யோன்தில்லைப் பல்பூ மருவுசில் லோதியைநற்
காப்பணிந் தார்பொன் னணிவா ரினிக்கமழ் பூந்துறைவ
கோப்பணிவான் றோய்கொடி முன்றில் நின்றிவை ஏர்குழுமி
மாப்பணி லங்கள் முழங்கத் தழங்கும் மணமுரசே. 196
வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வீயினன்ன
தீயாடி சிற்றம் பலமனை யாள்தில்லை யூரனுக்கின்
றேயாப் பழியென நாணியென் கண்ணிங்ங னேமறைத்தாள்
யாயா மியல்பிவள் கற்புநற் பால வியல்புகளே. 374
இறுமாப் பொழியுமன் றேதங்கை தோன்றினென் னெங்கையங்கைச்
சிறுமான் தரித்தசிற் றம்பலத் தான்தில்லை யூரன்திண்டோள்
பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக் குப்பெற்ற பெற்றியினோ
டிறுமாப் பொழிய இறுமாப் பொழிந்த இணைமுலையே. 373
விசும்புற்ற திங்கட் கழும்மழப் போன்றினி விம்மிவிம்மி
அசும்புற்ற கண்ணோ டலறாய் கிடந்தரன்! தில்லையன்னாள்
குயம்புற் றரவிடைகூ ரெயிற் றூறல் குழல்மொழியின்
நயம்பற்றி நின்று நடுங்கித் தளர்கின்ற நன்னெஞ்சமே. 198
மயிலெனப் பேர்ந்திள வல்லியி னொல்கிமென் மான்விழித்துக்
குயிலெனப் பேசுமெங் குட்டன்எங் குற்றதென் னெஞ்சகத்தே
பயிலெனப் பேர்ந்தறி யாதவன் தில்லைப்பல் பூங்குழலாய்
அயிலெனப் பேருங்கண் ணாயென் கொலாமின் றயர்கின்றதே. 224
பணிவார் குழையெழி லோன்தில்லைச் சிற்றம் பலமனைய
மணிவார் குழல்மட மாதே பொலிகநம் மன்னர்முன்னாப்
பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமுங் கொண்டுவண்தேர்
அணிவார் முரசினொ டாலிக்கும் மாவோட ணுகினரே. 330
மைதயங் குந்திரை வாரியை நோக்கி மடலவிழ்பூங்
கைதையங் கானலை நோக்கிக்கண் ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப்
பொய்தயங் குந்நுண் மருங்குல்நல் லாரையெல் லாம்புல்லினாள்
பைதயங் கும்மர வம்புரை யும்மல்குற் பைந்தொடியே. 199
விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குலெல் லாம்மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே. 177
பொன்னணி யீட்டிய ஒட்டரும் நெஞ்சமிப் பொங்குவெங்கா
னின்னணி நிற்குமி தென்னென்ப தேஇமை யோரிறைஞ்சும்
மன்னணி தில்லை வளநக ரன்னஅன் னந்நடையாள்
மின்னணி நுண்ணிடைக் கோபொருட் கோநீ விரைகின்றதே. 342
கார்த்தரங் கந்திரை தோணி சுறாக்கடல் மீன்எறிவோர்
போர்த்தரங் கந்துறை மானுந் துறைவர்தம் போக்குமிக்க
தீர்த்தரங் கன்தில்லைப் பல்பூம் பொழிற்செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தரங் கஞ்செய்யு மாலுய்யு மாறென்கொ லாழ்சுடரே. 187
கானமர் குன்றர் செவியுற வாங்கு கணைதுணையா
மானமர் நோக்கியர் நோக்கென மான்நல் தொடைமடக்கும்
வானவர் வெற்பர்வண் தில்லையின் மன்னை வணங்கலர்
போல்
தேனமர் சொல்லிசெல் லார்செல்லல் செல்லல் திருநுதலே. 274
தவஞ்செய் திலாதவெந் தீவினை யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா
தெவஞ்செய்து நின்றினி யின்றுனை நோவதென் அத்தன்முத்தன்
சிவன்செய்த சீரரு ளார்தில்லை யூரநின் சேயிழையார்
நவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந் தொடல்விடு நற்கலையே. 358
செய்ம்முக நீலமலர் தில்லைச் சிற்றம் பலத்தரற்குக்
கைம்முகங் கூம்பக் கழல்பணி யாரிற் கலந்தவர்க்குப்
பொய்ம்முகங் காட்டிக் கரத்தல் பொருத்தமன் றென்றிலையே
நெய்ம்முக மாந்தி இருள்முகங் கீழும் நெடுஞ்சுடரே. 356
அலரா யிரந்தந்து வந்தித்து மாலா யிரங்கரத்தால்
அலரார் கழல்வழி பாடுசெய் தாற்கள வில்லொளிகள்
அலரா விருக்கும் படைகொடுத் தோன்தில்லை யானருள்போன்
றலராய் விளைகின்ற தம்பல்கைம் மிக்கைய மெய்யருளே. 180
கருங்குவ ளைக்கடி மாமலர் முத்தங் கலந்திலங்க
நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற் றிலள்நின்று நான்முகனோ
டொருங்கு வளைக்கரத் தானுண ராதவன் தில்லையொப்பாய்
மருங்கு வளைத்துமன் பாசறை நீடிய வைகலுமே. 331
காமரை வென்றகண் ணோன்தில்லைப் பல்கதி ரோனடைத்த
தாமரை யில்லின் இதழ்க்கத வந்திறந் தோதமியே
பாமரை மேகலை பற்றிச் சிலம்பொதுக் கிப்பையவே
நாமரை யாமத்தென் னோவந்து வைகி நயந்ததுவே. 164
மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி காளெழிற் புள்ளினங்காள்
ஏதுற் றழிதியென் னீர்மன்னு மீர்ந்துறை வர்க்கிவளோ
தீதுற்ற தென்னுக்கென் னீரிது வோநன்மை செப்புமினே. 174
கருங்கழி காதற்பைங் கானலில் தில்லையெங் கண்டர்விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில் செற்றவொற் றைச்சிலைசூழ்ந்
தருங்கழி காதம் அகலுமென் றூழென் றலந்துகண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர்க்கைகளே. 190
பாயும் விடையரன் தில்லையன் னாள்படைக் கண்ணிமைக்குந்
தோயு நிலத்தடி தூமலர் வாடுந் துயரமெய்தி
ஆயும் மனனே யணங்கல்ல ளம்மா முலைசுமந்து
தேயு மருங்குற் பெரும்பணைத் தோளிச் சிறுநுதலே. 3
சேறான் திகழ்வயற் சிற்றம் பலவர்தில் லைநகர்வாய்
வேறான் திகழ்கண் இளையார் வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
பாறான் திகழும் பரிசினம் மேவும் படிறுவவேம்
காறான் தொடல்தொட ரேல்விடு தீண்டலெங் கைத்தலமே. 390
குடிக்கலர் கூறினுங் கூறா வியன்தில்லைக் கூத்தனதாள்
முடிக்கல ராக்குமொய் பூந்துறை வற்கு முரிபுருவ
வடிக்கலர் வேற்கண்ணி வந்தன சென்றுநம் யாயறியும்
படிக்கல ராமிவை யென்நாம் மறைக்கும் பரிசுகளே. 291
வில்லைப் பொலிநுதல் வேற்பொலி கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை யால்நின்று வான்வழுத்துந்
தில்லைப் பொலிசிவன் சிற்றம் பலஞ்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய் யேதக்க வாய்மையனே. 368
மூவர்நின் றேத்த முதல்வன் ஆடமுப் பத்துமும்மைத்
தேவர்சென் றேத்துஞ் சிவன்தில்லை யம்பலஞ் சீர்வழுத்தாப்
பாவர்சென் றல்கும் நரக மனைய புனையழற்கான்
போவர்நங் காதல ரென்நாம் உரைப்பது பூங்கொடியே. 337
வறியா ரிருமை யறியா ரெனமன்னும் மாநிதிக்கு
நெறியா ரருஞ்சுரஞ் செல்லலுற் றார்நமர் நீண்டிருவர்
அறியா வளவுநின் றோன்தில்லைச் சிற்றம் பலமனைய
செறிவார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் திருநுதலே. 333
மோட்டங் கதிர்முலைப் பங்குடைத் தில்லைமுன் னோன்கழற்கே
கோட்டந் தருநங் குருமுடி வெற்பன் மழைகுழுமி
நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் நாகம் நடுங்கச்சிங்கம்
வேட்டந் திரிசரி வாய்வரு வான்சொல்லு மெல்லியலே. 156
புரமன் றயரப் பொருப்புவில் லேந்திப்புத் தேளிர்நாப்பண்
சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச் சிற்றம் பலமனையாள்
பரமன் றிரும்பனி பாரித்த வாபரந் தெங்கும்வையஞ்
சரமன்றி வான்தரு மேலொக்கும் மிக்க தமியருக்கே. 321
கம்பஞ் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர் கற்சுர மாகுநம்பா
அம்பஞ்சி ஆவம் புகமிக நீண்டரி சிந்துகண்ணாள்
செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக் கும்மலர்ச் சீறடிக்கே. 209
மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யானரு ளால்விரி நீருலகங்
காப்பான் பிரியக் கருதுகின் றார்நமர் கார்க்கயற்கட்
பூப்பால் நலமொளி ரும்புரி தாழ்குழற் பூங்கொடியே. 312
ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் ஏத்த எழில்திகழுஞ்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்தமணலிற் கலந்த கன்றார்
தேர்ப்பின்னைச் சென்றவென் நெஞ்சென் கொலாமின்று செய்கின்றதே. 273
விறலியும் பாணனும் வேந்தற்குத் தில்லை யிறையமைத்த
திறலியல் யாழ்கொண்டு வந்துநின் றார்சென் றிராத்திசைபோம்
பறலியல் வாவல் பகலுறை மாமரம் போலுமன்னோ
அறலியல் கூழைநல் லாய்தமி யோமை யறிந்திலரே. 375
மலவன் குரம்பையை மாற்றியம் மால்முதல் வானர்க் கப்பாற்
செலவன்பர்க் கோக்குஞ் சிவன்தில்லைக் கானலிற் சீர்ப்பெடையோ
டலவன் பயில்வது கண்டஞர் கூர்ந்தயில் வேலுரவோன்
செலவந்தி வாய்க்கண் டனனென்ன தாங்கொன்மன் சேர்துயிலே. 155
பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற் றற்றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி யோனெவ ரும்புகலத்
தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற் சேக்கைகள் நோக்கினவால்
அகலோங் கிருங்கழி வாய்க்கொழு மீனுண்ட அன்னங்களே. 188