புரசு Butea frondosa, Roxb.; Papilionaceae. நிலநீரொ டாகாசம் அனல்காலாகி நின்றைந்து புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ் செய்யார் போற்றோவார் சலநீத ரல்லாதார் தக்கோர் வாழுந் தலைச்சங்கை நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே. - திருஞானசம்பந்தர்.
திருத்தலைச்சங்காடு, திருக்கஞ்சனூர் ஆகிய சிவத் தலங்களில் புரசு (பலாசம்) தலமரமாக உள்ளது. இது பலாசம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது பகட்டான செம்மஞ்சள் நிறப் பூங்கொத்தினையும், தட்டையான விதைகளையும் உடைய இலையுதிர் காடுகளில் தானே வளரும் மரமாகும். அழகுக்காக வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுவதுண்டு. இதன் இலை, பூ, விதை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவக் குணமுடையதாக விளங்குகிறது.
இலை உடலுரமாக்கி காமம் பெருக்கும், பூ சிறுநீர், காமம் பெருக்கும், விதை மலப் புழுக்களகற்றி மலமிளக்கும், பிசின் குருதி, சீழ்க் கசிவடக்கும்.