logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கஞ்சனூர்

இறைவர் திருப்பெயர்: அக்னீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: கற்பகாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : அக்கினி தீர்த்தம், பராசர தீர்த்தம்.

வழிபட்டோர்:அப்பர், சுந்தரர், சேக்கிழார்பராசர முனிவர், பிரம்மா, அக்கினி, கம்சன், சந்திரன், விருத்தகாளகண்டன், சித்திரசேனன், மார்க்கண்டேயர், சுரைக்கா முனிவர் முதலியோர்.

Sthala Puranam

 thiruadanai temple

கம்சன் வழிபட்டதால் இத்தலம் மருவி கஞ்சனூர் என்றாயிற்று.

 

முன்பொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. திருநீறு, உருத்திராக்கதாரியாகத் திகழ்ந்த அக்குழந்தை, தந்தை எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலிமீதமர்ந்து "சிவமே பரம்பொருள்" என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக் கண்டவர்கள் வியந்தனர். (இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராசர் சந்நிதியிலும் உள்ளது.) இறைவன் தட்சிணாமூர்த்தியாக வந்து சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தார். மேலும், இங்கு ஒரு செல்வந்தர் தினந்தோறும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி தான் அவ்வுணவை உண்ணும் காட்சியைத் தருவார். ஒரு நாள் அக்கனவு தோன்றவில்லை; காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர், ஹரதத்தரிடம் ஏழை அந்தணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கியுண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையைறிந்து அச்செல்வர் அவரை நாடிச் சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது.

 

இவ்வூரில் பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்றுப் பிழைத்து வந்தார். இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அப்பக்தர் செய்வதறியாது திகைத்தார். அதிதிகட்குச் சுரைக்காய் கறிக்கு ஆகாது என்றெண்ணிக் கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக "ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு " என்றருளிச் செய்து ஏற்று, அவருக்கு அருள்புரிந்தார் என்றொரு வரலாறு சொல்லப்படுகிறது. இதன் தொடர்பாகவே இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று.

 

இங்குள்ள நந்தி புல் உண்ட வரலாறு - அந்தணர் ஒருவர் புல்லுக்கட்டொன்றைத் தெரியாமல் போட்டுவிட்டதால் பசுக் கன்று ஒன்று இறந்துவிட்டது. இதனால் பசுத்தோஷம் அவருக்கு நேர்ந்தது என்று பிராமணர்கள் அந்த ஏழை அந்தணரை விலக்கி வைத்துவிட்டனர். அவர் செய்வதறியாது ஹரதத்தரிடம் சென்று முறையிட்டார் - அவ்வாறு முறையிடும்போது பஞ்சாட்சரத்தைச் சொல்லியவாறே சென்றார். அதைக்கேட்ட ஹரதத்தர் சிவபஞ்சாட்சரத்தைச் சொல்லியதால் அப்பாதகம் நீங்கிவிட்டதாகச் சொன்னார். பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்கட்கு நேரடிச் சான்று தந்து நிரூபிக்குமாறு கூறினர். ஹரதத்தர் உடனே அவ்வந்தணரை அழைத்து, காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்து வந்து அந்தக் கல் நந்தியிடம் தருமாறு பணித்தார். அவ்வந்தணரும் அவ்வாறே செய்து, "கல் நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நிங்கும் " என்று சொல்லிப் புல்லைத்தர, அந்த நந்தியும் உண்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. (இந்நந்தி புல் உண்டதால் நாக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கவில்லை).

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர்  - 1. மூவிலைவேற் சூலம் (6.90); பாடல்கள்  : அப்பர்  -    உஞ்சேனை (6.70.8);              சுந்தரர் -    நாளும் நன்னிலம் (7.12.8);           சேக்கிழார்  -    திருக்கோடி காவில் அமர்ந்த (12.28.292) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

தல மரம் : பலாச மரம் (புரசு).

Specialities

 

பலாசவனம், பராசரபுரம், பிரமபுரி, அக்கினிபுரம், கம்சபுரம், முத்திபுரி என்பன இத்தலத்திற்குள்ள வேறு பெயர்கள்.

 

பராசரருக்குச் சித்தப்பிரமை நீங்கியதும்; பிரம்மனுக்குத் திருமணக் காட்சி தந்ததும்; அக்கினிக்கு உண்டானசோகை நோயைத் தீர்த்ததும்; சந்திரனின் சாபம் நீங்கியதும்; கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி (மூத்திரதிருச்சிர நோய்) நீங்கியதும்; மாண்டவ்ய புத்திரர்களுக்கு மாத்ருகத்தி தோஷம் நீங்கியதும்; விருத்த காளகண்டன், சித்திரசேனன், மார்க்கண்டேயர், சுரைக்காய் முனிவர் ஆகியோர் அருள் பெற்றதும்; கலிக்காமருக்குத் திருமணம் நடந்ததும்; மானக் கஞ்சாற நாயனார் அவதரித்து வழிபட்ட சிறப்பினதும் ஆகிய பல்வகைப் பெருமைகளையும் உடையது இத்தலம். இவற்றுக்கும் மேலாக பஞ்சாட்சர மகிமையை வெளிபடுத்திய ஹரதத்த சிவாசாரியார் அவதரித்த தலம். இவருக்கு இறைவன் அருள் செய்த வரலாறு தனிப்பெருமையுடையது.

 

ஹரதத்தர் சிவபூசை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது.

 

மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்களை அடுத்து, பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சித் தருகின்றார்.

 

நடராச சபையில் நடராசர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் (சிலாரூபமாக) இருப்பது தனிச் சிறப்பு; இம்மூர்த்தியே பராசரருக்கு தாண்டவக் காட்சித் தந்தவர். இத்தாண்டவம் முத்தித் தாண்டவம் எனப்படுகிறது.

 

மூலவர் சுயம்பு மூர்த்தி - உயர்ந்த பாணத்துடன் காட்சித் தருகிறார். அம்பாள் திருமணக் கோலக் காட்சி தருகிறார்.

 

நாடொறும் ஆறு கால வழிபாடுகள்.

 

சோழர், விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலம் 'விருதராச பயங்கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டுக் கஞ்சனூர் ' என்றும்; இறைவன் பெயர் 'அக்னீஸ்வரம் உடையார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதியுள்ளது. திருவாவடுதுறைக்கு அருகில் உள்ள தலம் அலைபேசி : 0435 - 2473737

Related Content

அக்கீச்சுரம்

வடகஞ்சனூர் (கஞ்சனூர்) Vadakanjanur (Kanjanur)