logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

பேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்

கச்சியப்ப முனிவர் அருளிய

படலம் 19 - 29 (1277 -1859)

Perurp Puranam


சீலத்திரு கச்சியப்ப முனிவர் அருளிய 
"பேரூர்ப் புராணம்" - பாகம்-3 (1277-1859)

19. பள்ளுப் படலம் 1277-1345
20. அழகிய திருச்சிற்றம்பலப் படலம் 1346-1362
21. தீர்த்தப் படலம் 1363-1413
22. விம்மிதப் படலம் 1414-1430
23. வியாதன் கழுவாய்ப் படலம் 1431-1455
24. விசுவாமித்திரன் வரம்பெறு படலம் 1456-1479
25 அந்தகனரசுபெறு படலம் 1480-1501
26. தலவிசேடப் படலம் 1502-1549
27. அங்கிரன் கதிபெறு படலம் 1550-1596
28. கெளரி தவம்புரி படலம் 1597-1743
29. கெளரி திருமணப் படலம் 1744-1859


சிவமயம்

19. பள்ளுப்படலம் (1277-1343)

1277 கயிலை நாயகன் காமரு தன்னுருப்
பயிலு மாடியிற் பார்த்தங் கழைத்தலும்
வெயில்செய் வெங்கதிர் கோடி விராயெனச்
செயிரி லாதமெய்த் தேசொடுந் தோன்றினான்.
1
1278 அன்ன சுந்தரற் காலால மாழியின்
முன்ன முன்னவ னுண்ணமற் றன்னதைத்
தன்ன கங்கைத் தழீஇக்கொடு நல்கலால்
துன்னு மாலால சுந்தர நாமமே
2
1279 ஏழைபாகற் கினியநற் றொண்டுகள்
சூழு மாலால சுந்தர னோர்தினந்
தாழி ணர்க்கடித் தண்மலர் கொய்திட
வாழி நந்த வனத்திடை நண்ணினான்.
3
1280 வாம பாகத்து நாயகி வார்குழற்
காம லர்த்திரள் கொய்ய வனிந்திதை
காமர் மல்குங் கமலினி மற்றிவர்
தாமு மவ்வுழிச் சார்ந்தன ரென்பவே.
4
1281 இருவர் மாதர் வனப்பு மெழினடை 
ஒருவர் நோக்க ஒருவர் வனப்பெலாம்
இருவர் மாதரு நோக்கினர் மற்றிவர்க்
கொருவி லைங்கணை மார னுறுத்தினான்.
5
1282 நகுமு கத்தொடு நம்பி யகன்றனன்
புகுமு கம்புரி பூவையர் தாங்களும்
நெகும னத்தொடு நீங்கினர் தம்பிரான்
தகுதி நோக்கிப் பவத்திடைச் சார்த்தினான்.
6
1283 வேறு
நாவலூர்ச் சடைய னாரா நான்மறைக் கிழவர் மாட்டுத்
தேவரு மிறைஞ்சு நம்பி திருவவ தாரஞ் செய்திட்
டேவரும் புகழா ரூர ரெனும்பெயர் பற்றி னாராற்
பூவரில் கொண்ட கூந்தற் பூவைய ரிருவர் தம்முள்.
7
1284 கமலினி யென்னு மாது காமர்சோ ணாட்டில் பைந்தேன்
உமிழ்மலர்ச் சோலை யாரூ ருருத்திர கணிகை யார்பால்
அமரரும் வியக்குங் கற்பி னாரணங் கென்னத் தோன்றித்
தமர்பிறர் பரவை யென்று சாற்ரிடும் பெயர்பெற் றாளால்.
8
1285 அனிந்திதை யென்னுந் தைய லமர்பெருந் தொண்டைநாட்டில்
நனந்தலைப் பழனஞ் சூழ்ந்த ஞாயிறென் றுரைக்கும் வைப்பின்
இனந்தழை தரும்வே ளாளர் குலத்திடை யினிது தோன்றிச்
சனந்தழை யுலகு போற்றுஞ் சங்கிலி நாமம் பெற்றாள்.
9
1286 வளர்ந்திடு நாளா ரூரர் மறைபல திருந்த வோதி
அளந்துபல் கலைகண் மன்ற லாற்றுநற் பருவஞ் சார
உளந்தழைத் தீன்ற தாதை யொருமகட் பேசி யோகை
கிளர்ந்தெழு சுற்ற மெல்லாங் கெழீஇப்புரி வதுவை நாப்பண்.
10
1287 கண்ணுதற் கரந்து பெம்மான் காவணத் திடையே புக்கு
மண்ணவர் மருளச் சால வழக்கிட்டுத் தடுத்தாட் கொள்ள
வெண்ணெய்நல் லூரின் மேய விகிர்தனைத் தொடர்ந்து முன்னர்ப்
புண்ணியப் பொருளா யுள்ளார் பித்தனென் றெடுத்துப் போற்றி.
11
1288 நாவலூர் புகுந்து பாடி நற்றவ நெறிதா வென்று
தேவர்க டேவற் போற்றித் திருத்துறை யூரிற் பெற்றுத்
தீவண மேனி யார்தந் திருவதி கையின்பாற் கங்குற்
சேவடி சென்னி சூட்டத் திருவருள் போற்றிப் போந்து.
12
1289 வேறு
திருமாணி குழிவழுத்தித் தினைநகரைப் பரசிப்போய்க்
கருமாளத் திருத்தில்லைக் கனகசபை யிடைநவிற்றும்
பெருமான்மெய்த் திருநடனம் பேரார்வத் தொடும்பழிச்சி
மருவாரு பொழிற்புகலி மாநகரந் தொழப்புக்கார்.
13
1290 அங்கணர்தாங் கயிலைவரை வீற்றிருக்கு மருட்காட்சி
அங்கெதிரே கொடுத்தருள வதுகண்டு போற்றிசைத்துச்
செங்கண்வரா லுகள்பொய்கைத் திருக்கோலக் காவிறைஞ்சித்
தெங்குமலி நறும்பழனத் திருப்புன்கூர் பாடினார்.
14
1291 மயிலாடு துறையும்பொன் மாகாளம் புகலூரும்
பயில்வாய்மை யொடும்பாடிப் பணிந்துதிரு வாரூர்புக்
கெயில்வேவ நகைத்தாரை யின்றமிழ்ச்செந் தொடைபாடித்
துயிலாமுக் கண்ணர்தாந் தோழரா மருள்பெற்றார்.
15
1292 புற்றிடங்கொண் டவரருளாற் பூங்கோதைப் பரவையார்
முற்றிழைமென் முலைமன்றன் முறைமையாற் கலந்தருளிப்
பற்றுமணக் கோலத்திற் பயிலுநாள் விறன்மிண்டர்
செற்றமிகத் திருத்தொண்டத் தொகையருளி வழிபட்டார்.
16
1293 குண்டையூர்க் கிழவர்மனக் குறைவறுக்க நெற்றந்த
அண்டநா யகரந்த நென்மலையை யாரூரின்
வண்டுவாழ் குழற்பரவை மனையட்டித் தரவருளான்
மிண்டுபூ தரைவிடுப்பக் கோளிலியிற் பாடினார்.
17
1294 கோட்புலியார் நாட்டியத்தான் குடியதனில் வழிபட்டு
வேட்டருள்வீ ரெனப்பயந்த மென்கொடியா ரைக்கொடுப்பச்
சேட்டெழிலார் தமைமகண்மை கொண்டருளித் திருப்பாட்டில்
நாட்டிவலி வலத்துப்போய் நாதர்தமைப் பாடினார்.
18
1295 வேறு
இறைவர் புகலூ ரிட்டிகைக ளீழ மாக்கித் தரப்பாடி
நிறையு மகிழ்வாற் றிருப்பனையூர் நிமலர் நிருத்தந் தரப்போற்றி
நறைமென் கமலத் தடஞ்சூழ்நன் னிலமும் வீழி மிழலையு
மறவர் திருவாஞ் சியமரிசிற் கரைப்புத் தூரும் பாடினார்.
19
1296 வேறு
ஆவடு துறைசை யிடைமரு தான்ற திருநாகேச் சுரஞ்சிவ புரஞ்சீர்
மேவிய குடமூக் கிறைவலஞ் சுழிநல் லூர்சோற்றுத் துறைவிரி மலர்ப்பைங்
காவலர் கண்டி யூருமை யாறுங் கவின்றபூந் துருத்தியும் வினையின்
றாவறு திருவா லம்பொழி லென்னுந் தலமழ பாடியுந் துதித்தார்.
20
1297 சீர்வள ரானைக் காவினைப் பரசித் திருப்பாச்சி லாச்சிரா மத்துக்
கார்வளர் கண்டர் பொன்றரப் பாடிக் கைக்கொண்டு திருப்பைஞ்ஞீ லியின்வன்
கூர்வளர் சூலப் படையரைப் புகழ்ந்து குலவுபல் பதிகளும் வணங்கி
ஏர்வளர் கொங்கிற் கொடுமுடி வழுத்தி யெய்தினார் காஞ்சிவாய்ப் பேரூர்.
21
1298 ஆரண முழக்க மறாதபே ரூரி னமர்ந்துவா ழடியவ ரெல்லாந்
தாரணி கூந்தல் பாகனார் தோழர் சார்ந்தன ரெனப்பெருங் களிப்பால்
தோரணம் வாழை காவண முறுத்திச் சுடர்நிறை கும்பங்க ணிறுவிச்
சீரணி வீதி யலங்கரித் தெதிரே சென்றடி தொழவெதிர் தொழுதார்.
22
1299 வந்தமெய் யடியா ருடனள வளாவி மகிழ்கொடு போதுவா ரகிலுஞ்
சந்தனக் குறடும் பீலியு மணியுந் தபனியப் பொடிகளுந் திரையின்
உந்திவந் தொழுகுங் காஞ்சிமா நதியி னுற்றுநீர் படிந்தன ரேகிச்
சுந்தர மிகுந்த கோயின்முன் வணங்கித் தொழுதகம் புகுந்தனர் தொண்டர்.
23
1300 உயர்ந்தவுந் தாமே யிழிந்தவுந் தாமே யெனமறை யோலமிட் டுரைக்கும்
வியந்ததஞ் செய்கை யிரண்டனு ளொன்று வேதிய னாகிமுன் காட்டிப்
பயந்தரு மிறைவர் மற்றதுங் காட்டப் பள்ளனாய்த் திருவிளை யாட்டால்
நயந்தபூம் பணையின் வினைசெய வன்பர் நண்ணுமு னண்ணின ரம்மா.
24
1301 புலியதள் கழுவாக் காழக வுடையாய்ப் பொலியநால் வாய்க்கரி யுரிவை
ஒலிமயிர் நூற்ற படாமென வயங்க வொளிர்சடை தலைச்சுற்றாய் மிளிர
வலியரித் துவக்குப் பக்கறை யாக வாளரா வதன்கயி றாகக்
கலிகெழு மறையா கமங்கழ லாகக் கண்ணுதல் பள்ளனா தலுமே.
25
1302 பட்டிநா யகர்தம் மிடம்பிரி யாத பச்சைநா யகிபள்ளி யாகி
முட்டிலா தழலி னந்தண ருகுக்கு மூரியா னூன்களே யூனா
வட்டும்வா ரிழுதே யரியலா வங்க ணளித்திடு முணவெலா முணவா
விட்டுநா யகர்கைத் தலைக்கலத் தூட்டி யெழில்வயல் வினைசெய்வா னின்றாள்.
26
1303 கடலிடைத் துளபக் கமடமுன் பிடித்த கயமுகக் கடவுளு மீனின்
தடமுலைச் சுவைப்பால் பருகிய மணிவேற் சாமியும் பள்ளநற் சிறாராய்
இடனகல் வயலிற் கமடமு மீனு மெடுத்தெடுத் திரும்பணைப் புறத்துத்
திடரிடத் துறுத்திக் குறுகுறு நடந்து சிறுவிளை யாட்டயர்ந் தனரால்.
27
1304 இந்திரன் பிரம னாரணன் முதலா மிமையவர் நுகமல மேழி
வெந்திறற் கொழுவார் கயிறுகோல் பகடு வித்துநா றனைத்துமா யங்கு
வந்தனர் பயில வன்கண நாத ரேவல்செய் மள்ளராய் விரவி
முந்துறும் பட்டிப் பள்ளனை யடுத்துமொழிவழி வினைதொடங் கினரால்.
28
1305 உழுகுந ரொருபா லுழுதசே றழுந்த வொண்புனல் பாய்த்துந ரொருபான்
முழுவரப் பருகு சீக்குந ரொருபான் மொய்மரம் படுக்குந ரொருபாற்
செழுமணிப் பகடு பூட்டுவிட் டோப்பிச் செறிபுனன் மண்ணுந ரொருபால்
விழுமிய நாறு வார்க்குந ரொருபால் வித்துந ரொருபுற மானார்.
29
1306 திருமகள் வாணி சசிமுத லான தேவியர் பள்ளிய ராகி 
இருகையி லணிந்த குருகினந் தெழிப்ப விட்டிடை வருந்தவார் செவியின்
மருவிய தோடு நாலவார் கூந்தன் மல்கிய தோளின்வீழ்ந் தலைய
உருகெழு பச்சைப் பள்ளியோ டயர்ந்திட் டொண்முடி நாறுநட் டனரால்.
30
1307 இன்னண மிவர்கள் வயல்வினை யியற்றி யிருந்தன ராகவா லயத்து
முன்னிய நாவ லூர்வரு மன்பர் முதல்வனார் தமையெதிர் காணார்
மன்னிமி லேற்றை வினாயினா ரேறு வன்றொண்டர்க் குரையலென் றிறைவர்
சொன்னமை குறித்து விழியினா லுணர்த்தத் தொடர்ந்தனர் வயலிடந் துருவி
31
1308 வேதநா டரியவிழுப்பெரும் பொருளாய் விளங்கிய பட்டிநா யகருஞ்
சீதவான் முகத்து மரகத மயிலுந் தேவர்பூ தர்கள்புடை நெருங்கப்
பாததா மரைகள் சேதகத் தலரப் பயிறிரு விழாவினைத் தொண்டர்
காதன்மீக் கூரச் சேயிடை நோக்கிக் களிப்பொடு மெதிர்பணிந் தெழுந்தார்.
32
1309 மாசுதீர் தவத்து மாதவன் முதலோர் மணிநெடு மோலிக டீண்டக்
கூசுதாட் கமல முரவியுங் கயலுங் கூர்மமுங் கீடமு முதலாப்
பேசுமா ருயிர்க டீண்டுதற் கான பெருந்தவந் திருந்திய பேரூர்க்
காசுதீர் வரைப்பிற் களித்துவாழ்ந் ததுவே யாமெனக் கருத்துட்கொண் டடுத்தார்.
33
1310 அராவணி சடிலப் பள்ளனார் தோழ ரடுக்கவந் தமையறி யார்போற்
பராமுகத் தினராய்ப் பள்ளிகள் பள்ளர் தம்மொடும் பயின்றிருந் தொழிலின்
உராவுநீர்ப் பணையி னுழிதர னோக்கி யுறப்பணிந் தெழுந்துதோ ழமையால்
விராவிய வன்பர் மகிழ்ச்சிமீக் கிளைப்ப வியப்பொடு மசதியா டுவரால்.
34
1311 மறையவ னரசன் செட்டிதன் றாதை வயங்குநூற் சூத்திரன் புவனம்
பறைதரு நல்ல சங்கரன் வேடன் பணிசிவன் விளங்குமுக் கணக்கன்
அறைசெயம் பட்ட னகமது புறத்தே காலியாட் டரவமா ரிடையன்
பறையனு முன்ன ரானநீ யின்று பள்ளனா னமைதெரிந் தேன்யான்.
35
1312 இறையவன் வள்ள லெனப்புகன் றெடுத்த வெனக்குநீ பள்ளனாய்ப் பயந்தாய்
மறையவ னாகப் பள்ளனாஞ் செய்கை வனப்பிது நிற்கநின் றனக்கு
நிறையுண வாலங் கயமுகப் பிள்ளை நினைத்தவர் குறைமுடித் துண்ணுங்
கறைகெழு வேற்கைப் பிள்ளையோ செட்டி கழனிநெல் விளைப்பதிங் கார்க்கே.
36
1313 மரகத வல்லி யன்னபூ ரணியை வரவுயிர்த் தமரரா தியர்க்கு
விரவிய பசிமுன் கெடுத்தலி னவட்கு விளைத்துநீ சோறிடல் வேண்டா
பரவிவந் தெனைப்போ லடுத்தவர்க் குவந்து பரிசிலாப் பைம்பொனா திகளைத்
தரவிதின் முயன்று வருந்துதல் வேண்டா தனதனிற் சார்ந்தநற் றோழன்
37
1314 அல்லதூஉ மொருவர் சார்பினாற் பிழைத்த லடாதெனத் திருவுளத் துளதேல்
வல்லவா றதற்கே பிறந்தவே ளாளார் வழிவழி யடிமையா யுள்ளார்
நெல்லெலாம் விளைத்துத் தருகுவ ரதனா னிரம்புறா தெனிற்குண்டை யூரில்
நல்லவே ளாள னொருவனுக் களித்த நற்றிற முள்ளதே போலும்.
38
1315 அராப்பள்ளி யாற்கருளு நேமிப் பள்ளி
யறப்பள்ளி யகத்தியான் பள்ளி யான்ற
சிராப்பள்ளி நனிபள்ளி செம்பொன் பள்ளி
திருக்காட்டுப் பள்ளிகர வீரங் காட்டுள்
ஒராப்பள்ளி மகேந்திரப் பள்ளி நன்மை
யுற்றசிறப் பள்ளியிடைப் பள்ளி யெல்லா
மராப்பள்ளி யில்லாம லாண்டு கண்டோ
வயற்பேரூர்ப் பள்ளிகளை யாளா நின்றீர்.
39
1316 விண்ணின்மழை மறுத்திடினுங் கங்கை யுண்டு
விடையுண்டு பட்டியிட விடப்பாற் கண்ணே
வண்ணநெடும் பயிர்வளர்ப்ப துலகை நட்டு
மலக்களைதீ ரிடப்பள்ளீ வல்லி வல்லள்
பண்ணைநட்டுக் களைபறிப்ப மிருகங் காப்பப்
பசுந்துழாய்ப் பன்றியொரு கோடு வாங்குந்
திண்ணியசே யுளனரசும் வேறன் றென்றோ
திருவுளஞ்செய் தீருழவு செய்தற் கென்றார்.
40
1317 வேளாள னெனநம்மை யடுத்த தோழன்
வியனெடும்பண் னையிற்பள்ள னாகி நின்று
தாளாண்மை யியற்றிடினும் விட்டுப் போகான்
றனக்குவப்பச் செய்துமெனத் தம்பி ரானார்
கேளாகி வினைபுரிந்தா ருடங்கு போதக்
கிளர்மணிநீள் வரப்பேறிச் சென்று செம்பொன்
தோளாத மணிகொழிக்குங் காஞ்சி யாடிச்
சுடர்மணிக்கோ யிலிற்புகுந்தார் தோழ ரோடும்.
41
1318 வேறு
பண்ணையி லேரிற் பூட்டிப் பகட்டொடு முழாது வைத்தால்
நண்ணிய தொண்டர்க் குண்மை நவிற்றுறா திருப்பை கொல்லென்
றண்ணல்வெள் விடையைச் சீறி யானனஞ் சரிந்து வீழ
மண்ணகழ் கருவி தன்னால் வள்ளலார் துணித்திட் டாரால்.
42
1319 கடல்விடம் பருகு நீல கண்டனார் துணித்த லோடுஞ்
சுடரொளி நெய்த்தோர் பாயத் துண்ணென நடுங்கிப் புல்லம்
அடியனேன் பிழைத்த திந்த முறையினு மழியா தேனும்
உடையவ பொறுத்தி யென்னா வொண்பத மிறைஞ்சிப் போற்றி.
43
1320 தன்பெயர் விளங்கத் தீர்த்தத் தடமொன்று தொட்டுக் கோட்டின்
இன்பரு ளிலிங்க மொன்றாங் கிருத்திநற் பூசை யாற்றி
வன்பிழை தவிர்ந்த தன்று மழவிடை முகத்தை வீழ்த்த
பின்புயர் மன்றி னெய்திப் பிஞ்ஞகர் நடிக்க லுற்றார்.
44
1321 திரையெறி கங்கை யூடு திங்களு மரவு மாட
விரைகமழ் கொன்றைவேணி வெரிந்புறம் வருடி நாலக்
கரையறு கருணை வெள்ளங் கட்கடை யெழுந்து பாய
அரையுடைப் புலித்தோல் பொங்க வரிபெய்நூ புரங்க ளார்ப்ப.
45
1322 கோமுக முனியும் பட்டி முனிவனுங் குறுகி யேத்த
ஏமுறு பூத நாத ரிடனறத் துவன்றிப் போற்றக்
காமுறு விசும்பிற் றேவர் கடிமலர் மாரி தூர்ப்பத்
தீமுழங் கங்கை வள்ளற் றிருநட நவிற்ற லோடும்.
46
1323
வேறு
கருணையே நோக்கி யுள்ளகங் கசியக் கண்கணீ ரருவியிற் பாய
இருகையுஞ் சிரமேற் குவிதரப் புளக மெழவுடன் முழுதுங்கம் பிப்ப
அருணட நோக்கி நெடிதுபோ தவச மாகநின் றானந்தத் திளைத்துப்
பருகிய மதுவண் டெனப்பெருங் களிப்பாற் பாடினார் பரவையார் கொழுநர்.
47
1324 பாடிய தொண்டர் பைம்பொன்வேட் டிரப்பப் பதம்பெறா திருந்திருந் தெய்த்திங்
காடுத லொழிவ ரோஅனவரத தாண்டவ ரெனவரு ணடன
நீடிய விடையே பொன்றர விரந்தார் நிமலனார் குறுநகை காட்டி
நாடிமுன் னாண்டு தோழமை கொடுத்த நாவலா ரூரருக் குரைப்பார்.
48
1325 பாடிய நினது பாட்டையே பெரிதாப் படர்ந்தெமைப் பரிசிலிங் கிரந்தாய்
நீடிய வரியும் பிரமனு மறையு நெடுந்தவ மாற்றியுங் காணாப்
பீடிய னமது திருநட மதனைப் பெரிதென மதித்திலை போலும்
ஆடிய நடனம் பாடிய பாட்டுக் கருளிய பரிசிலே யாமால்.
49
1326 அறம்பொரு ளின்ப மூன்றையும் வெறுத்தோர்க் கானந்தத் திருநடங் காட்டித்
திறம்பயின் முத்தி யளிக்குமித் தலத்திற் செம்பொனீ வதுமுறை யன்று
மறம்பயில் பொறிக ளடக்கியீங் கடுத்த வானவ ரான்படைப் பெய்தப்
புறம்பயில் வஞ்சு ளாரணி யத்துப் பொற்புற வளித்தனங் காண்டி
50
1327 வேட்டவேட் டாங்கெம் பதியினாங் காங்கு விழுப்பொரு ணல்கின மன்றி
ஏட்டைநீ பொருந்தப் பார்த்திருந் திலமே யிப்பதி யொழியவாங் காங்குன்
பாட்டினுக் குவந்து செம்பொரு ளின்னும் பல்குறக் கொடுத்துமீ தன்றித்
தீட்டிய புகழான் சேரமான் றனக்குன் செய்திமுன் பேதெரித் தனமால்.
51
1328 ஆங்கவன் சோழ நாட்டுவந் துன்னை யன்பினா லுடன்கொடு போந்து
வீங்கிய பொருள்க ணல்குவ னறிக வென்றனர் கேட்டுமெய்த் தொண்டர்
ஓங்கிய மகிழ்வா னாண்டதம் பெருமா னொண்கழன் மறுவலும் வணங்கிப்
பாங்குறச் சிலநாட் பயின்றுபல் பதியும் பாடுவார் விடைகொடு போந்தார்.
52
1329 வெஞ்சமாக் கூடல் கற்குடி யாறை மேற்றளி யின்னம்பர் பிறவி
வஞ்சநோ யனுக்கும் புறம்பயங் கமல வாவிசூழ் கூடலை யாற்றூர்
நஞ்சமார் மிடற்று நாதரைப் பாடி நயந்துபோய் முதுகுன்ற மேத்தி
எஞ்சுறா திறைவ ரளித்தபொன் னாற்றி லிட்டுப்போந் தனர்கடம் பூரில்.
53
1330 அப்பதி வழுத்தித் தில்லைமூ தூரை யடுத்தரு ணடங்கண்டு தொழுவார்
எப்பொரு ளாயு மிருந்தரு ளிறைவ ரெறிதிரைக் காஞ்சிவாய்ப் பேரூர்
ஒப்பறு வெள்ளி மன்றிடைத் தெரித்த வுறுசுவை யானந்த நடனந்
துப்புறக் காட்ட விம்மித மெய்தித் துளும்புகண் ணீருர நனைப்ப.
54
1331 வேறு
சீரூர மடித்தாடு மெனவெடுத்து விளம்புதிருப் பதிகந் தன்னுட்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றா மென்று
பாரூர்பல் லவற்றுள்ளும் பேரூரே யிறைக்குரிய பதியா மாறு
நாரூரு முளத்தினாற் சிறப்பித்துப் பாடினார். நாவலூரர்.
55
1332 அங்ககன்று புறத்தமரும் பதிபலவும் பாடிப்போ யாரூர் நண்ணித்
திங்களணி முடியார்தந் திருவருளா லாற்றிலிடுஞ் செம்பொ னெல்லாம்
பொங்குபுனற் குளத்தெடுத்துப் பரவையார்க் கினிதளித்துப் புனனாட் டெல்லைத்
தங்குபல பதிபாடி நடுநாட்டிற் பலபதிக டாழ்ந்துபோகி
56
1333 தொண்டைநாட் டிற்பதிகள் பலபாடிக் காஞ்சியெனுந் தொல்லை மூதூர்
வண்டுவார் குழலுமையாள் வழிபட்ட வேகம்பம் வணங்கி யேத்தி
அண்டர்நா யகரமரு மப்பதியிற் பலபதிக ளன்பிற் போற்றிக்
கொண்டல்சூழ் நெடுமாடத் தோணகாந் தன்றளியைக் குறுகி னாரால்.
57
1334 அத்தளியிற் பெருமானர் பாட்டுவந்து செழுநிதிமிக் களிப்ப வாங்கி
மெத்தியவன் பொடுபுறம்போய்ப் பலபதியும் பணிந்தேத்தி விரிநீர் வேலை
முத்தினொடு மணிபவளங் கரையேற்று மொற்றியூர் முதல்வற் போற்றி 
உத்தலத்திற் சிவபெருமான் றிருவருளாற் சங்கிலிதோ ளுவந்து வாழ்ந்தார்.
58
1335 சிலபகலங் குறக்களித்துப் பலபதியும் பணிந்தேத்தித் திருவா ரூர்புக்
கலகிலொளிப் பூங்கோயி லமர்ந்தபிரான் பரவைமனத் தான்ற வுடற்
புலவியது தணிபாக்குத் தூதுசெலப் பலபாடிப் புணர்ந்தவ் வூரின்
விலகில்பல பொருணாகைக் காரோணத் தினிதேற்று மீண்டு வாழ்நாள்
59
1336 சேரர்கடம் பெருமானார் தில்லைமணி மன்றாடல் சென்று போற்றி
வாரமுறு மாரூரின் வந்திறைஞ்ச வளவளாய் மகிழ்ந்து பின்னர்ப்
பாரமரும் பலபதியும் பணிந்தேத்தி மலைநாட்டிற் பணியச் செல்வார்
சீரமரு மையாற்றி னதிதடுத்துப் பணிந்தேத்தித் திரும்பிப் போந்தார்
60
1337 கொங்குநா டடுத்தகன்று திருவஞ்சைக் களங்குறுகிக் குறுகா ருட்குந்
துங்கவேற் சேரலனார் பணிபுரியச் சிலவைக றொலைய வைகிப்
பொங்குவா னிதிபெருகப் பெற்றகன்று திருமுருகன் பூண்டி சேரத்
தங்குகா னடவையிடை நிதிபரிப்பார் முன்செல்லப் பின்பு சார்ந்தார்.
61
1338 ஆதிபுரத் திரசதமன் றிடைநடிக்கும் பிரான்றான்முன் னருளிச் செய்த
நீதியினை யுணர்ந்தௌத்துப் பெற்றபரி சுரையாமை நீங்கல் கண்டோ
பூதர்தமை விடவேட ராய்க்கவர்ந்தன் னவர்மறையப் பொருள்க ளெல்லாங்
காதலொடுந் திருமுருகன் பூண்டியிற்பெற் றாரூர்போய்க் கலந்து வாழ்ந்தார்.
62
1339 மறுவலுஞ்சே ரலர்பெருமான் மலைநாட்டுக் கேகுவார் வளமார் கொங்கின் 
நறுவிரைத்தண் மலர்ப்பொய்கை மருங்குடுத்த புக்கொளியூர் மணிப்பொன்வீதி
உறுமளவி னொருமனைமங் கலமுமொரு மனையில்ழு கையுமங் காகப்
பெறுமிவையென் னெனவினவி னார்வினவி னார்க்கறிந்தோர் பேச லுற்றார்.
63
1340 வேறு
இருவர் மங்கையர் மாலினி சுமாலினி யென்பார்
கருணை நாயகி கமலநாண் மலர்ப்பதம் பரசி
ஒருதி னந்தனி லிருவரு முயர்மகப் பயந்தார்
மருவி யத்தகு மகாருட னாட்டயர் வேலை
64
1341 வராலி னஞ்சுழன் மலர்ப்பெருங் குளத்தொரு வனைவன்
கராங்க வர்ந்துணப் பிழைத்தமற் றொருவற்குக் காலம்
விராவ நல்லுப நயனஞ்செய் மனையது விளிந்தோற்
கராவு மின்னலுற் றழுபவர் மனையிஃ தென்பார்.
65
1342 அன்ன செவ்வியி னழுகைதீர்ந் திருமுது குரவர்
வன்னி கூவிள மலைந்தவ ராண்டவன் றொண்டர்
முன்னி னாரெனக் கேட்டுமுன் வந்தடி பணிந்தார்
இன்ன லன்னவர்க் கொழிதர வின்மக வளித்தார்.
66
1343 இடங்கர் வாயிடை யிறந்தநாள் வளர்ச்சியு மிணங்கத்
தடங்கு ளத்தினின் றழைத்தரு ளியதனித் தொண்டர்
அடங்க லார்புர மழற்றினா ரடிபணிந் தேகி
நடங்கு யிற்றுவார் திருவஞ்சைக் களத்தைநண் ணினரால்
67
1344 அங்கு நாள்சில கழிதர வாண்டவ ரருளால்
துங்க நான்மருப் பிபம்வரத் தொல்லைவான் கயிலை
தங்கி னாரிரு மாதரு முன்புபோற் றலைவர்
பங்கி னாள்பணி புரிந்தனர் கயிலையிற் படர்ந்து.
68
1345 போதி யம்பலத் தாடுவார் பள்ளனாய்ப் புகுந்து
கோதி லாததந் தோழர்க்குக் கொழும்பொரு ளாங்காங்
கீது மென்றவா றீந்தது தெரித்துநற் சூதன்
ஓது தில்லையந் தணர்வழி படலினி யுரைப்பான்.
69
  • பள்ளுப்படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் – 1345
    ------------------------------- 

    20. அழகிய திருச்சிற்றம்பலப் படலம் (1346-1362)

    1346 ஆரூரர் பேரூரை யணைந்திறைஞ்சிப் போய்த்தில்லை
    நீரூருஞ் சடையாரை நேர்வழுத்தும் பதிகத்திற்
    பேரர் பெருமானைப் பெற்றாமென் றிசைத்ததமிழ்
    சீரூருந் தில்லைவா ழந்தணர்தஞ் செவிக்கேட்டார்.
    1
    1347 தம்பிரான் றோழரவர் தமைநோக்கி வினவுவார்
    எம்பிரா னமர்தில்லை யித்தலம்போ லொருதலமும்
    உம்பரார் தொழுமுலகி லுயர்ந்திருப்ப திலையன்றே
    நம்பிபே ரூர்சிறப்ப நயந்தெடுத்த தென்னென்றார்.
    2
    1348 மாண்டகுணத் தந்தணர்கள் வினவுதலும் வன்றொண்டர்
    நீண்டமகிழ் வினராகி நிலைமையவர்க் கருள்செய்வார்
    ஈண்டுநடம் புரிவதுபோ லெம்பிரான் போதிவனத்
    தாண்டுமன வரதமுநல் லானந்த நடம்புரியும்.
    3
    1349 ஆதிசிதம் பரமேலைச் சிதம்பரமென் றறைகிற்குஞ்
    சோதிவள ரத்தலத்திற் சுகவீடு தரலன்றி
    ஓதறமா திகண்மூன்று முறுத்துவதில் லதன்பெருமை
    மாதொருபா லுடையபிராற் கல்லது மதிப்பரிதாம்.
    4
    1350 எனவுரைத்த வன்றொண்டர் தமைப்பழிச்சி யெழிற்றில்லை
    அநகநடங் கண்டுவந்தா மாதிசிதம் பரநடமும்
    இனியுவந்து காண்டுமென வெண்ணியுயர் தில்லைநகர்ப்
    பனவருளக் களிப்பினராய்ப் படர்ந்தனர்தம் பதிதணந்து. 5
    5
    1351 தீம்புனனா டதுகடந்து செறிவனமுங் கற்சுரமுந் 
    தாம்பலவுங் கடந்துபோய்த் தகட்டுவரா லுடறுமிய
    ஓம்பலத்தின் பகட்டுழவ ருழுபணைப்பாட் டொலிபரக்குங்
    கூம்பவிழ்பங் கயவாவிக் கொங்குநாட் டினையடுத்தார்.
    6
    1352 வாரத்தால் வணங்குநர்தம் வல்வினைவே ரகழ்ந்தருளு
    மாரத்தார் மதிமுடியா ரானவிர சதவரையைத்
    தூரத்தே யெதிர்நோக்கித் தொழுதிறைஞ்சி யீசர்க்குப்
    பேரத்தா ணியினமர்ந்த பேரூர்புக் கிறைஞ்சினார்.
    7
    1353 வேரனரன் றுகுமணியும் வேழமருப் பினமணியுங்
    காரகிலுஞ் சந்தனமுங் கையரிக்கொண் டலையெறிந்து
    பேரரவத் தொடுபெயரும் பேரூர்வைப் பிடைக்காஞ்சித்
    தீரமெதிர் கண்டிறைஞ்சிச் செழும்புனல்புக் காடினார்.
    8
    1354 வெண்ணீறுங் கண்மணியு மெய்முழுது மணிந்தொளிர
    விண்ணீடு மெழிற்புரிசை வியத்தகுகோ யிலைச்சார்ந்தங்
    கெண்ணீடு முறுப்பினுமைந் தினுமார வெதிர்வணங்கிக்
    கண்ணீடு நுதலார்தங் காமருசே வடிதொழுதார்.
    9
    1355 வலம்வந்து போற்றிசைத்து மரகதவல் லியைப்பணிந்திட்
    டலமந்த பிறவிதப வணியரசம் பலத்தாடுஞ்
    சலமந்தி நிறச்சடிலந் தாங்கினார் தமையேத்திப்
    புலமந்தித் திடுமின்பப் புணரியிடை யழுந்தினார்.
    10
    1356 சீலமிக வழிநாளாற் செழும்புனற்றீர்த் தம்படிந்து
    காலவனீச் சரந்தனக்குக் கனற்றிசையி னோரிலிங்கஞ்
    சாலுமுறை யாற்பதிட்டை சமைத்துவழி பாடியற்றி
    ஞாலமிடர் முழுதகல நாடொறும்பூ சித்திருந்தார்.
    11
    1357 வேறு
    கள்ளவைம் பொறியைக் கடந்துபூ சனையின் கடன்புரி தில்லையந் தணர்க்கு
    வெள்ளியம் பலத்து நாதனார் நடனம் வியப்புறக் காட்டினார் கண்டு
    தெள்ளிய வின்ப முள்ளகந் திளைப்பச் செறிமயிர் பொடிப்பக்கண் டுளிப்ப
    உள்ளிய வுயிருஞ் சிவமுமொன் றாக வுளமழிந் தவசமாய் நின்றார்.
    12
    1358 கமழ்புனற்காஞ்சித் தீர்த்தமாய்ப் பேரூர்க் கடிவரைப் பாய்வெள்ளி வரையாய்
    அமரரும் வியக்கும் வெள்ளியம் பலமா யதனிடை மூர்த்தியு மாகி
    உமையவள் காண நடநவின் றருளு மொருவனே சயசய போற்றி
    விமலவாழ் வருளும் போதியங் கானின் வித்தக போற்றியென் றிசைத்தார்.
    13
    1359 இரசத வரையின் மன்றமும் போற்றி யெழில்வளர் மருதமால் வரையின்
    வரதனை வணங்கி மற்றுமப் பேரூர் வரைப்பிடைச் சிவாலயம் பலவுங்
    கரவறு முள்ளங் கசிதரப் பணிந்து கடவுணா யகர்விடை பெற்றுப்
    பரவுறு கீழைச் சிதம்பரம் புகுந்து பண்டுபோல் வாழ்ந்தன ரம்மா.
    14
    1360 அழகிய கீழைச் சிதம்பர வரைப்பி னந்தணர் பூசைகொண் டருள்வார்
    அழகிய திருச்சிற்றம்பல முடையா ராதலி னவர்கள்பூ சிப்ப
    அழகிய மேலைச் சிதம்பர வரைப்பி னமர்ந்தரு ளமலநா யகர்க்கும்
    அழகிய திருச்சிற் றம்பல முடையா ரெனும்பெய ராயது மாதோ.
    15
    1361 விழவறா வீதிக் குணசிதம் பரத்து மேவினோர்க் கருபய னளிப்பார்
    அழகிய திருச்சிற் றம்பல முடையா ரொருவரே குடசிதம் பரத்துப்
    பழகுநர்க் களிப்பா ரிரசத மன்றிற் பரதஞ்செய் பேரைநா யகரோ
    டழகிய திருச்சிற் றம்பல முடையா ரிருவரு மறிமின்கண் முனிவீர்.
    16
    1362 என்றுமா தவத்துச் சூதமா முனிவ னிறைஞ்சிய நைமிச வனத்தோர்க்
    கொன்றிய பேரூ ரழகிய திருச்சிற் றம்பல முடையவர் பெருமை
    நன்றுறத் தெளித்துப் போக்கியவ் வாதி நகர்வயி னுலகெலாம் படியத்
    துன்றிய தீர்த்த மான்மிய மவர்க்குச் சுவையமிழ் தெனத்தெருட் டுவனால்.
    17
    அழகிய திருச்சிற்றம்பலப் படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் - 1362 
    --------------

    21. தீர்த்தப்படலம் (1363-1413)

    1363 திசைதிசைமூன் றியோசனையி னளவையுறு மாதிநகர்த் தேத்து வானோர்
    அசுரர்முத லோர்பூசை யாற்றுசிவ லிங்கமள வில்லை யங்காங்
    கிசைமுரல்வண் டினம்படர்பூந் தீர்த்தமுமெண் ணிலபயின்ற விவற்றுண் மேலாய்
    வசையறுவண் பயன்விரைய வழங்குவன பலவிவற்றை வகுத்து மாதோ.
    1
    1364 திரைதவழ்பூங் காஞ்சிநதி காலவதீர்த் தம்பிரம தீர்த்தஞ் செங்கண்
    அரிதொடுசக் கரதீர்த்தந் தேவதீர்த் தம்பகலோ னகழ்ந்த தீர்த்தம்
    வரைதுளைத்தோன் மகிழ்கந்த தீர்த்தங்கன்னிகைதீர்த்த மாதர் தீர்த்தந்
    துரிசறுமிந் திரதீர்த்த முசுகுந்த தீர்த்தமொடு சோழதீர்த்தம்
    2
    1365 அங்கிரதீர்த் தந்துர்க்கை தீர்த்தமகத் தியதீர்த்தங் காளி தீர்த்தஞ்
    சிங்கதீர்த் தம்வசிட்ட தீர்த்தம்பார்க் கவதீர்த்தந் தேனு தீர்த்தந்
    தங்குநா ரததீர்த்த நச்சுதீர்த் தந்தகைசான் மருத வோங்கற்
    பொங்குமருச் சுனதீர்த்தங் கன்னியர்தீர்த் தம்பொலிந்த கந்த தீர்த்தம்.
    3
    1366 அவ்வரையின் வளரனும தீர்த்தமயன் வரைப்பிரம தீர்த்த மாழி
    தெவ்வியகை விண்டுவரைத் திகழ்விண்டு தீர்த்தமெனத் தெரிந்த வற்றுட்
    கெளவைநெடும் புனற்காஞ்சி கந்ததீர்த் தம்பிரம தீர்த்தம் வையத்
    தெவ்வெவரும் புகழ்விண்டு தீர்த்தமுயர்ந் தனவிவற்று ளேற்றங் காஞ்சி.
    4
    1367 விதந்தவுயர் தீர்த்தங்க ளிவற்றுள்ளும் விதவாத தீர்த்தத் துள்ளும்
    இதங்கருது மனத்தினர்க்குத் தெரிதருமா சிஃறீர்த்தத் தியல்பு சோறுங்
    கதந்தருவல் வினைத்திருக்கைக் கடிந்துமல மாயைகன்மக் கலக்கந் தம்மை
    அதம்புரியுஞ் சிவபெருமான் மான்மியமே விழைதக்க வந்த ணாளீர்.
    5
    1368 வேறு
    முந்திய பரார்த்தந் தன்னின் முளரிநாண் மலரின் மேலான்
    சுந்தர வுலக மாக்குந் தொழிறனக் கெய்தல் வேண்டி
    அந்தியின் மதியஞ் சூடி யம்பலத் தாடா நிற்கும்
    எந்தையை வழிபா டாற்றி யிருந்தவத் திருந்த வேலை.
    6
    1369 இனையநான் முகற்கு முன்ன ரிருந்ததி காரஞ் செய்த
    நனைமலர்த் தவிசி னோரு நாரணர் தாமும் பொல்லா
    வினைதபு முனிவர் யோகர் விண்ணவ ரநேக ரீண்டித்
    தனைநிகர் வீடு நாடித் தவம்பல வுழந்தா ராக.
    7
    1370 அன்பினுக் கெளிய னாகு மானந்த நடனத் தண்ணல்
    முன்பவர்க் கருளல் வேண்டி மூரியங் கிரியாய் நின்ற
    தன்பெரு வடிவு தன்னிற் றாண்டவ மியற்றா நின்றான்
    பொன்பெயர்க் கிரியாய் நின்ற பூங்கொடி மகிழ்ந்து காண.
    8
    1371 அனைவருங் கண்டு கும்பிட் டானந்தந் திளைக்கு மெல்லைக்
    கனைகதிர் மணித்திண் சூட்டுக் கட்செவி யார மாற்றா
    தினைவன நஞ்சு கால வெனைவரும் வேகந் தாக்கி
    முனைவனே காத்தி யென்ன முறைமுறை பணிந்து நைந்தார்.
    9
    1372 கடற்றலைப் பிறந்து சீந்துங் காளகூ டத்திற் சீர்த்த
    மிடற்றவ ரவர்கட் கந்நாள் வேகமுந் தணித்தல் வேண்டித்
    தடற்றுறை வாட்கட் கங்கை தலையிருந் தவளை நோக்கி
    உடற்றுமிவ் விடவே கந்தா னொழிதர வொழுகு கென்றார்.
    10
    1373 உமைமண வாளர் கூற வொலிபுனற் கங்கை சொல்வாள்
    இமையவர் முதலோர்க்காக வேவிய வாறு செல்வல்
    சிமையமால் வரையா மிந்தத் திருவுரு வாயே யையன்
    அமைதரல் வேண்டு மென்று மடியனேன் றணவா வண்ணம்.
    11
    1374 சரியைமுன் னான்குஞ் சாலச் சாதித்த தவத்தோர்க் கெய்தும்
    உரியநன் முத்தி நான்கு முரைத்தபா தகங்கண் மூன்றும்
    விரிசெயு மிழிஞ ராக மேவியெற் பரிசித் தார்க்கு
    வரிசையி னடியே னல்க வரமுமிங் கருளல் வேண்டும்.
    12
    1375 என்றெதிர் தாழக் கங்கைக் கெம்பிரான் வரங்க ணல்கி
    ஒன்றிய முறைமை யொன்றங் குவப்புட னருளிச் செய்யு
    மன்றமா மறைகள் வன்னி மரம்வன்னி மயமா மென்றுந்
    துன்றழ லிடத்துத் தோயந் தோன்றுவ தென்றுங் கூறும்.
    13
    1376 ஆதலா னமது மெய்யே யாகிய கிரிவ லப்பாற்
    காதடி யுரோம மான காமரு வன்னி மூலத்
    தேதமெவ் வுலகுந் தீர வெழுந்துசென் றொழுகு கென்றான்
    தீதற வுரைத்தாற் கவ்வா றெழுந்தது தெய்வக் கங்கை.
    14
    1377 வேதங்க ளெனைத்துந் தேறா விழுப்பொருண் முடியிற் றங்குஞ்
    சீதளக் கங்கை நீத்தஞ் செவியடி வன்னி மூலம்
    ஆதரித் தெழுந்த தாங்கே யைதெனப் பிடரிற் சூழ்ந்து
    மாதர்வா ளிடத்தோ ணின்று மாலையிற் றாழ்ந்த தம்மா.
    15
    1378 வேறு
    வரைமகட் கிடம்வல மாயற் காக்கிய
    புரையிலி நடுவுருப் புணர நல்கலுங்
    கரையழி காதலிற் கலந்திட் டாலெனக்
    குரைபுனற் கங்கைகூர்ந் துரத்திற் பாய்ந்ததே.
    16
    1379 சந்தன மலர்மணி தபனி யப்பொடி
    செந்தளிர் தனதுருத் திகழக் கொண்டது
    மைந்துடைக் கணவனார் மார்பந் தோய்தரச்
    சுந்தர மிகவணி யணிந்த தோற்றம்போல்
    17
    1380 உரகமு மதள்களு முருத்தி ராக்கமும்
    பரவைவெண் டிரைகளிற் பாங்கர் வீசிய
    தரனுர முயங்குத னாகத் தன்னவை
    விரவுவ வலவென விலக்கி னாலென.
    18
    1381 சிலம்பொடு கிங்கிணி செறிந்த மேகலை
    அலம்பிய வொலியென வதிர்த்து மேற்றவழ்
    சலம்பரு கியமுகிற் கூந்த றாழ்தர
    நலம்புரி கலவியி னுடக்க நண்ணிற்றே.
    19
    1382 பயிலுறு கலவியிற் பாறிப் பற்பல
    வெயிலுமி ழணித்திரள் விலகி னாலென
    வயிரமுந் தரளமு மலரும் வேகங்கொள்
    செயலினாற் புடையெலாந் தெறித்து வீழ்ந்தன.
    20
    1383 வெள்ளிய தூசணி விலக்கி னாலென
    ஒள்ளிய நுரைத்திரள் புடையொ துங்கின
    வள்ளியை வெயர்த்துளி வயங்கி னாலெனத்
    தெள்ளிய திவலைகள் செறிந்த வெங்கணும்.
    21
    1384 கலவியைக் கண்ணுறக் காணொ னாதென
    விலகுவ போன்றுவெவ் வேறுபுட்களும்
    அலகில்பன் மிருகமு மதிர்ப்புக் கஞ்சுபு
    பலபல திசைதொறும் பறைத லுற்றன.
    22
    1385 கணவர்த மார்புமுன் கலத்த லின்மையின்
    அணவிய விளர்ப்பெலா மாகந் தோய்தலும்
    தணவல்பெற் றாலெனத் தமனி யப்பொடி
    மணமலர் தாதுவின் வயக்க மாண்டதே.
    23
    1386 கையிணை யாமெனக் காந்த ளும்புய
    மெய்யிணை யாமென வேர லுங்கவின்
    செய்யிணை முலைவளர் சுணங்கிற் சீரிதென்
    றையிணர் வேங்கையு மடர்த்துச் சென்றதே.
    24
    1387 துணிகதிர்ப் பூண்முலை துணைவ தாமென
    மணிஅரைக் குவட்டினை மறியத் தள்ளியுந்
    திணிவளர் வேழத்தின் மருப்புஞ் செத்ததென்
    றணிவள ரலையிடை யலைத்துஞ் சென்றதே.
    25
    1388 கண்ணொடு நிகர்வன வென்று கற்சுனை
    நண்ணிய கயல்களு நறிய நீலமும்
    எண்ணில வாரியங் கெற்றிச் சொன்னிகர்
    வண்ணவொண் கனிகளும் வௌளவி யெற்றியதே.
    26
    1389
    கொன்றையுங் கூவிள முறியும் வன்னியுந்
    துன்றிய வாத்தியுந் தோய்ந்த நாயகன்
    தன்றிரு வுருவிடைத் ததைந்த மாலையென்
    றொன்றுற வவையெலா முடன்கொண் டேகிற்றே.
    27
    1390 நறாவுணத் தக்கதோ நல்ல வர்க்கென
    இறாலினை யிடந்தொறு மெறிந்து போந்துகான்
    மறாநறும் பானனி மாந்தி யூர்தொறும்
    அறாமலர்ப் பண்னையாட் டயர்ந்து ராயதே.
    28
    1391 புணர்ந்தவர் பூம்புன லாட றக்கதென்
    றுணர்ந்துநெய் நெல்லியொண் விரையுங் கானிடை
    மணந்துகொண் டகன்பணை மரீஇய கங்கைநீர்
    தனந்திடா தாழியைச் சார்ந்து தோய்ந்ததே.
    29
    1392 இடையிடை தனக்குநே ரெதிர்ந்த தீர்த்தங்கள்
    அடையவங் களவளா யழைத்துக் கொண்டுபோய்
    முடைபயில் கடலுமொய் தீர்த்த மாம்படி
    தடையறப் பாய்ந்தது தழங்கு கங்கைநீர்.
    30
    1393 கதிதரு காவிரி கடிகொ ளாம்பரா
    வதிமுத லானவார் நதிகள் யாவுமிந்
    நதியொடு தலையுறீஇ நரலை சென்றவே
    பதிபல நதிகட்கும் பண்டி துண்மையால்
    31
    1394 வேறு
    பறம்பின துருவாய் நின்ற பண்ணவர் பெருமானார்தம்
    நிறம்புணர் முலைக டோய நிகழ்த்திய கலவிக் கங்கை
    திறம்புறா துலக மெல்லாஞ் சென்றுசென் றணைத்துக் கொள்ள
    அறம்பொரு ளின்பம் வீடென் றருமகப் பயக்கு நாளும்.
    32
    1395 இத்தகு கங்கை நீத்த மெழுதலும் விடவே கத்தின்
    மொத்துணு மமரர் சான்ற முனிவரர் முதலா னோர்கண்
    மெத்திய தாக சோகம் விளிதரப் பருகி யாடி
    முத்தியு மெளிதிற் பெற்றார் மும்மல மிரியல் போக.
    33
    1396 சிவபிரா னுருவி னின்றுந் திகழ்ந்தெழுந் தொழுகு மாற்றாற்
    சிவநதி விடவே கத்தைத் தீர்த்தலா னமுத வுந்தி
    தவழ்வட கங்கை நோக்கித் தக்கிண கங்கை யந்த
    அவமறு கங்கைக் காதி யாதலா லாதி கங்கை.
    34
    1397 ஒப்பறு முத்தி தன்னை யுதவலான் ஞான தோயை
    பிப்பில வனத்தினூடு பெயர்ந்துசென் றொழுகு மாற்றாற்
    பிப்பில நதிபுக் காடும் பெற்றியோர் பிறவா மார்க்கந்
    துப்புறப் பெறலாற் சொல்வர் சூழ்பிற வாநெ றிப்பேர்.
    35
    1398 காஞ்சனம் பயக்கு நீராற் காஞ்சிமா நதியென் றாகும்
    பூஞ்சினைக்காஞ்சி நீழற் பொற்புறத் தவழ்த லானும்
    வாஞ்சையி னப்பேர் சால வழங்குமக் காஞ்சி யுந்தி
    ஆஞ்சிறி துண்டோர் தாமு மமராய் முத்தி சேர்வார்.
    36
    1399 கலியிடைக் கன்ம முற்றுங் காதிநா சஞ்செய் மாண்பாற்
    கலிகன்ம நாசி னிப்பேர் கைக்கொளு மனைய காஞ்சி
    ஒலிநதி விருத்த கங்கை யுறுபிர யாகை யென்னப்
    பலபரி யாயப் பேரும் பற்றுமா லுலகம் போற்ற
    37
    1400 நிவந்தெழு புனற்பூங் காஞ்சி நெடுங்கரை மருங்கு நண்ணித்
    தவஞ்செபந் தியானம் யோகந் தனிமகந் தரும மாற்றின்
    அவந்தெறும் பயனொ ரோவொன் றனந்தமாய் விளையு மந்தப்
    பவந்தெறு காஞ்சி மேன்மை பகரலாந் தகைமைத் தன்றே.
    38
    1401 வடகயி லாயத் தெல்லை வயங்கிய பிரம தீர்த்தங்
    கடன்முறை மூன்று பக்கங் காதலி னாடி யுள்ளும்
    படர்தரப் பருகி னோர்க்குப் பகர்ந்தநான் மலடு நீங்கும்
    அடர்தரு பூத மண்ணை யாதியி னலைப்புந் தீரும்.
    39
    1402 குட்டநோய் பெருநோய் வாதங் குன்மநோய் தொழுநோய் காசம்
    முட்டிய சலநோய் கண்ணோய் முயலகன் முடநோய் மற்றுங்
    கட்டழற் கதிய பஞ்சிற் கணத்திடை யனுங்குஞ் சால
    இட்டகா மியங்க ளெல்லா மெளிதின்வந் தீண்டு மன்றே.
    40
    1403 சமன்றனை யுருட்டுஞ் செய்ய தாளின ரருளா னீற்றின்
    அமர்ந்துவிண் ணவரு நோற்கு மயன்பத மெய்து மந்தக்
    கமண்டல தீர்த்தக் கீழ்சார் காலவ தீர்த்த மாடிற்
    சுமந்தவன் பிறவி யோட்டித் தூயவீ டெளிதி னெய்தும்.
    41
    1404 பட்டிநா யகற்குக் கீழ்பாற் பரிதிவா னவன்வ லாரி
    தொட்டதீர்த் தங்கள் வைகுஞ் சூரிய தீர்த்தங் கண்கட்
    கட்டொளி யீந்தந் தத்தி லவன்பதந் தருமற் றொன்றிங்
    கிட்டமார் செல்வ நல்கி யிந்திரன் பதம்பின் சேர்க்கும்.
    42
    1405 விமலனார் தமக்கீ சான விதிக்கிற்சண் முகதீர்த் தந்தான்
    இமிழ்தரு மன்பிற் றோய்ந்தோர்க் கிடர்செயு மலகை பூதம்
    அமரரி னாகு மின்ன லனைதையு மொருவிச் செல்வஞ்
    சமர்நல வலிமெய்ஞ் ஞானந் தக்கவீ டனைத்தும் வீசும்
    43
    1406 குறுமுனி வரைக்குக் கீழ்சார் குருமுனி தீர்த்தம் வாசஞ்
    செறிமலர் யோகி தீர்த்தஞ் சித்ததீர்த் தமும்வை குற்ற
    அறைதரு மவற்று ளொன்றி னாடினு மாடினோர்க்கு
    முறைமுறை வேட்ட வெல்லா முன்னுற்று நிற்கு நாளும்.
    44
    1407
    உம்பர்சூழ் பட்டி நாதர்க் குதீசியி னச்சுப் பொய்கை
    இம்பரிற் பருகி னோர்க ளிறந்துநற் கதியைச் சேர்வர்
    நம்பிய சித்தர்க் கெய்தி னவையுறு முலோகந் தன்னைச்
    செம்பொனு மாக்கிக் கொள்வர் திப்பியம் பலவுஞ் செய்வர்.
    45
    1408 வார்புனற் காஞ்சி யுந்தி வடாதுசார் வசிட்ட தீர்த்தஞ்
    சீர்வளர் வாம தேவ தீர்த்தம்பார்க் கவதீர்த் தந்திண்
    பார்தனி லிரணந் தீர்க்கும் பைம்பொனற் றீர்த்த நான்கும்
    ஆர்தரு மவற்றுட் டோய்ந்தோர்க் கரும்பயன் பலவு மெய்தும்.
    46
    1409 வயிரவர்க் கெதிரே சிங்க தீர்த்தம்வா ழுமையாண் முன்னர்ப்
    பயிலுருந் துர்க்கை தீர்த்தங் கேத்திர பாலதீர்த்தம்
    நயனுறு மமுத லிங்க நாதர்தந் தெனாது வைப்பிற்
    சயமுறு காளி தீர்த்தஞ் சக்கர தீர்த்தம் வாழும்.
    47
    1410 வேறு
    அண்ணலார் தமக்குந் தென்கிழக் கெல்லை யமர்குல சேகர தீர்த்தம்
    நண்ணுநந் தீச தீர்த்தமங் கியினற் றீர்த்தநன் றருளேம தீர்த்தம்
    தண்ணிய வியக்க தீர்த்தஞ்சண் டேசர் தமக்குவா யுத்திசை தன்னில்
    எண்ணிய தருள்சண் டேசுர தீர்த்தஞ் சோமதீர்த் தமுமிலங் கினவால்.
    48
    1411 மரகத வல்லிக் கடுத்தவா யுவினில் வளர்பிர மதகண தீர்த்தம்
    பரசுறும் பட்டி தனக்குவா யுவினிற் பகர்சத்த மாதர்க டீர்த்தம்
    விரவுறு மேல்பால் விலங்குறும் பால தீர்த்தமவ் வியத்தகு தீர்த்தம்
    உரிமையி னாடி னரைதிரை மூப்பங் கொழிதர வாலர்க ளாவார்.
    49
    1412 சுந்தர மளிக்கு முசுகுந்த தீர்த்தந் துலங்கிய வங்கிர தீர்த்தம்
    இந்திர தீர்த்தஞ் சோழதீர்த் தஞ்சீ ரிடுங்காம தேனுவின் தீர்த்தம்
    பந்தமுற் றிரிக்குங் கன்னிகை தீர்த்தம் பலவுநற் காஞ்சிமா நதியின்
    அந்தின்மேற் கிருந்து வரிசையிற் கீழ்சா ரவதியும் பயின்றன மாதோ.
    50
    1413 உரைத்தன தீர்த்தந் தம்முளொன் றேனு முவப்புட னாடுவோர் தமக்குத்
    தரைத்தலை வெறுக்கை விண்ணிடைப் போகஞ் சாரும்பின் முத்தியு மெய்தும்
    புரைத்தவல் வினையைப் புரட்டுமா தவத்தீர் புகழ்தகு தீர்த்தங்கள் புகன்றாம்
    நிரைத்துவைத் தனைய விம்மிதங்கேண் மினிகழ்த்து துமெனச் சொலுஞ்சூதன்.
    51
    தீர்த்தப் படலம் முற்றிற்று
    ஆகத் திருவிருத்தம் - 1413

    22. விம்மிதப்படலம் (1414-1430)

    1414 எம்மை யாளு மிரசத மால்வரை
    மும்மை வையக முந்தொழு மூன்றுகட்
    செம்ம லார்தந் திருவுரு வாதலால்
    விம்மி தங்கள் விறந்தன வாங்கரோ.
    1
    1415 வேறு
    பிறர்விழிக்குத் தனையடுத்தோர் தமைக்கட்டாத் திவ்வியாஞ் சனப்பேர்த்தாரு
    நிறுவிடிற்பா துகைகாலி னெடுவிசும்பிற் கொண்டேகு நீண்ட தாரு
    உறுபசிதா கந்தீர்க்குந் தாருநரை திரைமூப்பை யொழிக்குந் தாரு
    மறுவில்சிரஞ் சீவிதரும் தாருசதா னந்தம்வளர் விக்குந் தாரு.
    2
    1416 காயசித்தி தருந்தாரு வரோருககர தாருதிரி கால ஞானம்
    ஏயும்வகை தருந்தாரு யோகசித்தித் தருவிருநாற் சித்தித் தாரு
    மேயசர் வஞ்ஞசித்தி கலைஞான சித்தியிவை விளைக்குந் தாரு
    தோயமழல் வளிவிடம்வெவ் வேறுதம்பஞ் செயுந்தருவுந் துவன்று மெங்கும்.
    3
    1417 கொடியினுளுஞ் செடியினுளுங் கூறியவிம் மிதம்விளைப்ப குணிக்க வொண்ணா
    அடர்தருமாங் கிசபேதி யயபேதி சிலாபேதி யன்ன பேதி
    சுடருமிழு முலோகபே திகளும்வசி யாதியெனச் சொல்லு மாறும்
    படவழங்கு வனவுமொளி தருவனவுங் கொடிசெடிபா தவத்த னேகம். 4
    4
    1418 மிருதசஞ்சீ வியுமுளதங் கயக்காந்த மதிக்காந்தம் வெய்யோன் காந்த
    மருவினநாற் கோட்டிபங்கள் பலமலிந்த நவமணிகண் மலிந்த வந்தப்
    பொருவின்மணி விளைநிலமும் பலவுளசத் துருகதிநீர் புலிங்கத் தீகால்
    திருகுவிலங் கிவைதம்பஞ் செயுமணியு மனந்தமவட் செறிந்த வாகும்.
    5
    1419 இரசமணிக் கிணறமுத கிணறொளிர்கந் தகமடுவென் றிவையுமுள்ள
    பரசுறுமற் புதமான குகையனந்த முளவன்னம் பரம மாதி
    விரசுசர சுகள்பல்ல வுள்ளனவிவ் வதிசயத்தின் விளங்கா நின்ற
    இரசதமால் வரைத்தென்பா லேமவரை யதிலேம புரமொன் றுண்டால்.
    6
    1420 ஏமவரை மேற்புறத்தி லிடனகன்ற விடரகமொன் றிருக்கு மங்கண்
    தாமரைமல் கியவோடை யொன்றுளது சருவசித்தி தருவ தாகுஞ்
    சேமமுறு மவ்வரைத்தென் பாலுறுபாற் கிணறுளது தெவ்வி யுண்டாற்
    பூமருவு மானுடருக் காறுதிங்கள் பசிதாகம் புணரா வாகும்.
    7
    1421 ஓதலுறும் பாற்கிணற்றுக் கீழ்திசையி லோசனைமூன் றளவிற் காணுஞ்
    சோதிமர முளதாங்குச் சருக்கரைமா நதியந்தச் சூழன் மேல்பால்
    தீதகலு மனேகநதி யுளவந்தத் தீரத்திற் செறியா நின்றோர்
    கோதகலுஞ் சித்தர்சாத் தியரனந்தர் போற்றுநர்க்குக் கொடுப்பர் சித்தி.
    8
    1422 சருக்கரைமா நதிமேல்பாற் றேவவுதும் பரப்பொதும்பர் ததையு மாங்குத்
    திருக்கறுசிந் தையினமரர் முனிவர்முத லோர்தவஞ்செய் திருப்பர் பாங்கர்
    உருக்கிளர்தா மரையோடை யுலததற்குச் சிலாநதியென் றுரைப்ப ரந்த
    மருக்கிளர்நீர் படிந்தபொருள் யாவையுமக் கணஞ்சிலையாய் வயங்கா நிற்கும்.
    9
    1423 உரைத்தசிலா நதிக்கரையி னினைத்தவுடன் மரணமொண் கதியு நல்கும்
    விரைத்தமருந் துகளனந்த முளவந்த விழுநதிக்கு வடாது வைகுந்
    தரைத்தலையோர் புகழ்தேவ குங்கிலிய மரமதன்பா றனிலோர் விந்து
    கரத்தெடுத்துப் பருகினோர் நரைதிரைமூப் பறக்கலப்பர் காய சித்தி.
    10
    1424 வேறு
    அத்தருப்பா லொருதொடியு மூன்றுதொடிச் செம்பு
    மறைந்தசெம்பி னைந்துளொரு கூறுபொன்னுங் கூட்டி
    மெத்தெரியில் வைத்தெடுக்கின் மேருவரை போல
    விலங்குறுமா யிரத்தெட்டு மாற்றுறுசெம் பொன்னாங்
    கொத்துறுமத் தருவிற்கீ சானதிக்கி னிரவி
    கோடியுதித் தெனவொளிருங் குருப்பளிக்கு வரையுண்
    டுத்தமநற் சிவலிங்கம மதினியற்றிப் பூசை
    யுஞற்றினவ ரெதிரிறைவ ருற்றருள்வர் விரைவின்.
    11
    1425 பத்தியோ சனையாழங் கிழக்குமேற் கெல்லை
    பதிற்றுப்பத் துத்தரந்தெற் கெல்லைமுப்பா னளவை
    ஒத்தகுகை யொன்றுரைத்த படிகவரை வடபா
    லுளததனுக் கடுப்பயோ சனையொன்றி னகன்ற
    தத்துதிரைப் பாரதநற் சரசுளதச் சரசின்
    றடங்கரையி னொருகோடி தூணினொடு தயங்கும்
    எத்திசையும் புகழ்கனக மண்டபமுண் டதனி
    லெம்பெருமான் சிவலிங்க வடிவொடும்வீற் றிருப்பன்.
    12
    1426 நாரணர்நான் முகரைங்கைப் புத்தேளிர் வடிவே 
    னவின்றவலக் கரத்திறைவர் முதலோர நேகர்
    காரணியு மிடற்றிறைவர் கழறொழுதங் கிருப்பர்
    காலங்க டொறுமாங்குக் கறங்கிசைத்துந் துபியின்
    சீரணிநல் லொலிமுத்தி யருகருக்கல் லாது
    செவியிலுறா தக்கனக மயமாமண் டபத்துக்
    கேரணியும் வடமேல்பாற் றென்மேல்பா லொரோவொன்
    றெறிதிரைநீர் மலரோடை யுளவவற்றின் கரையின்.
    13
    1427 சந்தான கரணிசெள பாக்கியநற் கரணி
    சஞ்சீவ கரணிசல் லியகரணி யோடு
    நந்தாத சித்தியெலாந் தருமருந்து பலவு
    நலக்கவுள வெரிமணிச்சூட் டைந்தலையி னாக
    மைந்தாரு மெழுதலையி னாகமுஞ்சந் தனத்தண்
    மரச்செறிவி னாங்கியங்கு மற்றயன்றன் வரையிற்
    சிந்தாத வளமுடைத்தாய் மேற்றிசையி னுளது
    சிலாநதியந் நதிபடிந்த திரணமுங்கல் லாகும்.
    14
    1428 மண்டலமொன் றினிலெவையுஞ் சிலையாகு மந்த
    வார்நதியின் கரைப்பஞ்ச வன்னத்தும் வேறு
    கொண்டொளிர்சித்தி ரமூலங் கருமைவெண்மை சிவப்பிற்
    குலாவலுறு குன்றிபட்டுச் சிலம்பிகளு முளவால்
    விண்டுவரை யிடைவிண்டு தீர்த்தமருங் கேல
    மிலாமிச்சை கச்சோலஞ் சாதிக்கா யாதி
    எண்டிசையும் வியப்பவுள மருதவரை மேலா
    லெந்நாளும் பயின்றுறையு மெழிற்காம தேனு.
    15
    1429 வடகயிலைச் சூழலிற வாப்பனையும் பிறவா 
    வாய்மையுறு புளியுமுள விறவாது பிறவா
    தடர்குழைய சித்தேச மரமாதி லிங்கத்
    தருகுளது சித்தேச ராகியிறை யவனார்
    கடவுளர்க டொழவதன்கீழ்ச் சித்துமுனம் புரிந்த
    காரணத்தி னானுமதற் கப்பெயர்கட் டுரைப்பர்
    தடவரைத்தெய் வதக்காஞ்சி மரமுளதங் கதன்கீழ்த்
    தவழ்தலினா னதிகாஞ்சி நதியெனத்தக் கதுவே.
    16
    1430 ஆதிநக ரெல்லையிடை யுரைத்தனவே யன்றி
    யனேகவதி சயமுளவா லனைத்தினையும் வரைந்திட்
    டோதலுறு மாலையர்மூன் றுலகிடத்து மில்லை
    யுமைபாகர் தமையன்றி யுதுநிற்க முனிவீர்
    தீதகன்ற வியாதமுனி பரம்பிரமந் தெரிக்கிற்
    றிருமாலென் றஞ்சாது செங்கைமிசை யுயர்த்த
    ஏதமுறும் பழிபாவங் கழியவழி பட்ட
    தினியியம்பக் கேண்மினென வினிதருளுஞ் சூதன்.
    17
    விம்மிதப்படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் – 1430
    =========

    23. வியாதன் கழுவாய்ப் படலம் (1431-1455)

1431 தெள்ளொளி மணியும் பொன்னுந் தரைகளிற் கொணர்ந்து வீசும்
ஒள்ளிய கங்கை சூழ்ந்த வுயர்புகழ்க் காசி வைப்பிற்
கள்ளவிழ் கடுக்கை வேணிக் கடவுளார் பாதம் போற்றி
எள்ளருந் தவங்க ளாற்றி யிருந்தனர் முனிவர் பல்லோர்.
1
1432 பயிலுநா ளொருநா ளன்னோர் பகர்மறை முடிவு தேறார்
உயர்பரம் பிரம மாய னுருத்திர னென்னத் தம்முள்
வியனில மயிர்ப்பச் சால விதியொடுங் கலாய்த்துப் பின்னர்
மயரற வியாதன் றன்னை மரபுளி வினாவி னாரால்.
2
1433 வினவிய முனிவர் முன்னர் வியாதனங் கிறுக்க லுற்றான்
பனவிர்காண் மறைக ளெல்லாம் பகர்பரம் பிரம மாயன்
கனமுறழ் மிடற்று முக்கட் கடவுளன் றறிமி னென்றான்
வனமணி மாயன் சார்பின் மாதவர் மகிழ்ச்சி கொண்டார்.
3
1434 உருத்திரன் பிரம மென்ன வுரைத்தமா தவர்க ளெல்லாங்
கருத்துறத் தெளித லின்றிக் கரைந்தன னிவனென் றெண்ணித்
திருத்தகு முலக மெல்லாஞ் சிவன்பர மென்று தேற
விருத்தம தாகச் சொன்ன வியாதனுக் கிதனைச் சொன்னார்.
4
1435 விச்சுவ நாதர் மேவியிங் குரைத்தவாறே
நச்சிநீ யுரைத்தா யாகி னாமது கோடு மென்றார்
எச்சமின் மறைக ளெல்லா மினிதுதேர் வியாதன் கேளா
அச்சமொன் றானு மின்றி யதுசெய்வே னென்று போந்தான்.
5
1436 வெறிகமழ் கங்கை யாடி விச்சுவ நாதர் முன்போய்ச்
செறியிதழ்க் கமலை மார்பன் றிகழ்பரம் பிரம மேயாம்
அறிமின்க ளென்று செங்கை யந்தரத் துயர்த்திச் சொன்னான்
பிறிவில்வல் வினையை யாரே பேதுசெய் தொழிக்கு நீரார்.
6
1437 நந்தியெம் பெருமான் கேட்டு நன்றிவன் சூளி தென்னாச்
சந்தவொள் ளழல்கண் காலச் சபித்தனன் சபித்த லோடும்
அந்தின்மேக் குயர்த்த வார்கை யறைந்தநா வொடுந்தம் பிப்ப
எந்தையார் திருமுன் வெற்றித் தம்பமொத் திருந்தா னன்றே.
7
1438 மாயனைப் பிரம மென்று மதித்திடு மதத்தா ரன்றி
மேயபன் மதத்து ளாரும் விச்சுவ நாத ரன்றி
ஆயின்மெய்ப் பிரமம் வேறின் றாமென வறிவு கொண்டார்
தூயமெய்த் தவத்தோ ரெல்லாந் தொடர்ந்தெழு மைய நீத்தார்.
8
1439 சகமெலா மின்ப மெய்தத் தானொரு வனுமே துன்பம்
இகழுடன் பிணைய வல்லே யெய்திச்சூ ளுற்று நின்றோன்
அகனுற வரியை யுன்னி யடியிணை தொழுதா னன்னான்
முகனெதிர் தோஒன்றி யங்கு முகுந்தன்மற் றிதனைக் கூறும்.
9
1440 என்னையுங் கெடுப்ப மற்றீங் கென்னகா ரியத்தைச் செய்தாய்
முன்னவன் சத்தி யெங்கு மொய்த்தலான் மறைக ளெல்லாம்
வன்னியை யென்னை யாதி வானவர் தமையு மன்னோ
தன்னிகர் பிரம மென்னுந் தானது முகம னன்றே.
10
1441 நிறைதரு மின்ப வீட்டி னிச்சலும் வாழ்தல் வேட்டோர்
அறைதரு தேவ ரென்னும் பிறரெலா மகலப் போக்கிச்
சிறைசெய்நீர் வேணிச் செம்ம றென்முகத் திறைஞ்சு கென்ன
மறைமுடி வெடுத்துக் கூறும் வாய்மையே வாய்மை கண்டாய்.
11
1442 அன்னதோ ருண்மை நாடா தறைந்தனை யுய்தல் வேண்டின்
முன்னவன் சரணப் போதை முன்னுகென் றுரைத்து வாசக்
கன்னியந் துளவன் போகக் கரிசுறு வியாதன் கேளாப்
பன்னகத் தொடையன் மார்பிற் பரமனைப் போற்றி நின்றான்.
12
1443 புடைபல கணங்கள் சூழப் பூமழை பொழிய வானோர்
படைநவி லயனு மாலும்பாதுகை யிருபாற் றாங்க
விடையெதி ரூர்ந்து காசி விச்சுவ நாதர் நின்றங்
குடையவ காத்தி யென்னும் வியாதனுக் குரைக்க லுற்றார்.
13
1444 எவன்றனை முதல்வ னாக வெண்ணியெம் வயிற்சூ ளுற்றாய்
அவனிதோ காண்டி நந்த மகம்படித் தொழிற்க ணின்றான்
சவலைநெஞ் சுடையை நந்தந் தன்மையிற் சிறிது மெய்யாய்
கவலையங் கடலிற் றாழ்ந்தாய் கையொடு நாவுந் தோற்றாய்.
14
1445 ஈங்குநீ யிழைத்த குற்ற மிவ்வயிற் றீர்த லின்றாம்
பாங்குற நெஞ்சி னெம்மைப் படர்ந்தனை யாத லாலே
ஓங்கிய கொங்கு நாட்டி னொளிர்தரு வெள்ளி வெற்பின்
நீங்குமங் கேகு கென்று நிகழ்த்தினர் மறைந்தா ரையர்.
15
1446 கடனிகர் கருணை நாதர் கண்ணளித் தருள லோடும்
அடரும்வல் வினைக்கோட் பட்ட வருந்தவ வியாதன் றாழ்ந்து
மடமையி னென்ன செய்தா மெனமனத் தச்ச மெய்திப்
படர்திரைக் கங்கை யாடிப் படர்ந்தனன் றென்பா னோக்கி. 6
16
1447 வேறு
நெறிவயிற் செல்பவ னேர்ந்த தீர்த்தமும்
மறிமழுக் கரத்தவர் வதியுங் கோயிலும்
முறுகிய வன்பினான் முழுகித் தாழ்ந்துபோய்ச்
செறிவயற் கொங்குநாட் டெல்லை சேர்ந்தனன்.
17
1448 நீண்டவ னறிகலா நீர்மைத் தாகிய
மாண்டவெள் ளியங்கிரி மலர்க்க ணோக்கினான்
ஆண்டெதிர் வணங்கின னன்பு பொங்கமெய்
ஈண்டிய துதிபல வியம்பி நண்ணினான்.
18
1449 இழிந்திட வல்வினை யேறி மால்வரை
பொழிந்துதே னொழுக்கறாப் பொதும்பெ லாங்கடந்
தழிந்தவர்க் கருளெனு மாக்க நல்குறுஞ்
செழுந்திரைக் காஞ்சியிற் சென்று தோய்ந்தனன்.
19
1450 குடுமிமால் வரைதனைக் குறுகி யண்ணலைப்
படுகளி மனத்தனாய்ப் பரவிப் போற்றினான்
நெடுகிமே னிவந்தகை நிலத்தை நோக்கின
புடைபெயர்ந் ததுமறை புகன்ற நாவரோ.
20
1451 ஆடினான் பலமுற யாடித் தட்டமிட்
டோடினான் பலமுறை யோடி முன்னுறக்
கூடினான் றிருவுருக் கோல நோக்கியே
நீடினா னானந்த நிலையில் வேறற.
21
1452 வழங்குநா வின்றுகொன் மருவி னாமென
முழங்குறத் துதிபல முழக்கி யன்பினாற்
செழுங்கர மின்றுகொல் சேர்ந்து ளாமென
ஒழுங்கிய பூசனை யுஞற்றி னானரோ.
22
1453 பலபகல் கழிவுறப் பயிற்றிப் பூசனை
அலரொளி வெள்ளியம் பலமுந் தாழ்ந்துபோய்
இலகிய பிப்பில வனத்தி லெம்பிரான்
மலரடி போற்றினன் வாழ்ந்து போந்தனன்.
23
1454 தீங்கறு நூல்பல தெளிந்து மாணவம்
நீங்குமோ நின்மல ஞான மில்லவர்க் 
கோங்கிய வியாதனே யுண்மை தேர்கலான்
தூங்குகை நிமிர்த்துறு துரிசி னானெனின்.
24
1455 பொச்சமில் வியாதன்பூ சித்த தோதினாம்
விச்சுவா மித்திரன் வரங்கள் வேட்டது
நச்சியிங் குரைத்துநன் றறிமி னென்றுடல்
துச்சினீத் திடுந்தவர்க் கியம்புஞ் சூதனே.
25

வியாதன் கழுவாய்ப் படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் --1455 
----------


24. விசுவாமித்திரன் வரம்பெறுபடலம் (1456-1479)

1456 உலகமுண்ட வொளிமணி வண்ணனும்
மலரின் மேய வரதனு மாறுகொண்
டிலகும் யான்முதல் யான்முத லென்றுரைத்
தலகில் காலங் கலாய்த்தன ரவ்வுழி.
1
1457 கலாம றுப்பக் கனலுறழ் வேணியின்
நிலாவ ணிந்த நிமலர்முன் றோன்றினார்
புலான்மி டைந்த பொருபடை நேமியான்
சுலாவு நெஞ்சிற் றுணுக்கென் றிரிந்தனன்.
2
1458 அச்ச மின்றி யலர்ந்தவெண் கண்ணினான்
எச்ச மிங்கண் வருவதென் றெள்ளினான்
விச்ச தின்றி விளைவுசெய் வள்ளலார்
நச்செ னச்சிவந் தார்நய னங்களே.
3
1459 சுடுநெ ருப்பெனத் தோற்றிய கோபத்து
வடுகன் வந்து பழித்த மலரவன்
நெடுமு டித்தலை நீளுகி ரிற்கொய்து
படும தங்களைந் தீந்தனன் பண்பரோ.
4
1460 திருவி னாயக னாதிநற் றேவர்தங்
குருதி வாங்கியன் னாருளக் கோதொரீஇப்
பொருவி லாத புகழ்ப்பெருங் காசியின்
மருவு காவலும் வண்மையிற் பெற்றனன்.
5
1461 அங்கண் வாழ்தரு மாருயிர் செய்திடும்
பொங்கு பாவம் புயத்தவிர் சூலத்தில்
தங்க விட்டுத் திரித்துத் தவிர்த்திடுந்
துங்க மான தொழிலும் பரித்தனன்.
6
1462 இன்ன வாறிய மன்விரை யாக்கலி
அன்ன மாநக ருக்கற னோக்குபு
மின்னு மாதவ விச்சுவா மித்திரன்
இன்ன வைப்புக் கிணையில்லை யென்றுறீஇ.
7
1463 வேத மோதி விலங்கிய விச்சுவ
நாதர் பாதநன் றேத்தி வதிந்துநன்
மாத வங்கண் மரபி னியற்றுநாட்
காதல் யோகத்துக் கட்சியொன் றெய்தினான்.
8
1464 வேறு
தெள்ளுந் தரங்கப் புனல்சுமக்குஞ் சிவனார் போதி வனத்தெழுந்த
வெள்ளி மயமாஞ் சபையினடம் விளங்கக் காட்டி யவ்வரைப்பின்
உள்ள வுயிர்கள் செயும்பாவந் தண்டமொன்று முறுத்தாமே
விள்ள வருளி மேலான வீடும் வழங்குந் திறந்தெரித்தார்.
9
1465 இனைய காட்சி யோகத்தி னெய்தக் கண்ட மாமுனிவன்
அனைய தோநம் பேரூரென் றகத்தி னெழுந்த விம்மிதனாய்க்
கனைவெண் டரங்கக் கங்கைநதி கலவுங் காசி கையகன்று
வினைக ளிரியுங் காஞ்சிநதி விரவும் பேரூர் மருங்கடுத்தான்.
10
1466 நகரத் தெல்லை யெதிர்வணங்கி நண்ணிக் காஞ்சி நதிபடிந்து
சிகரக் கோயிற் றிருமுன்னர்ச் சென்று பணிந்தங் குட்புகுந்து
மகரத் துவச னுடல்பொடித்த வரதர் பாதந் தொழுதேத்தித்
தகரக் குழன்மா துமைபாதந் தாழ்ந்து சபையுந் தரிசித்தான்.
11
1467 அற்றை யிரவு புலர்காலை யணிநீர்க் காஞ்சி நதியாடி
முற்று மருளுஞ் சிவலிங்க முறையி னிறுவிப் பூசித்துப்
பற்றும் பொறிக ளகத்தடக்கிப் பயிலும் யோகத் திருக்குநாட்
பெற்ற முயர்த்த பெருமானார் பெருவா னிடையே வெளிநின்றார்.
12
1468 கண்டு முனிவன் சடைமுடிமேற் கரங்க ளெழவொய் யெனவெழுந்து
மண்டு புளக முடல்போர்ப்ப மலர்க்கண் பொழிய வெதிர்வணங்கிக்
கொண்ட லெனநான் மறைமுழக்கிக் குடந்தம் பட்டு மொழிகுழற
அண்டர் பெருமா னருணோக்கி யழுது வரங்க ளிரக்கின்றான்.
13
1469 வேறு
பொன்னை வென்ற புரிசடை வேதியா
நின்ன டித்துணைப் பத்திமை நிச்சலும்
மன்ன நாயடி யேற்கு வழங்குதி
கொன்னும் வல்வினை கூட்டொடு மாயவே.
14
1470 முத்தி நல்குத லேமுறை யாகிய
இத்த லத்திடை யாவர்க்கு மற்றினி
அத்த வேட்ட வறம்பொரு ளின்பமுங்
கைத்த லக்கனி போல வழங்குதி.
15
1471 கோதி லாக்குருக் கேத்திரங் காசியே
ஆதி நல்கு மரும்பய னாயிரம்
போத நல்கிப் புகல்குரு கேத்திரத்
தீதி னாமந் திகழ்கவிம் மாநகர்.
16
1472 பண்பின் முத்தில பாத்திரம் வைகலும்
எண்ப யின்றநற் காசியி னீந்திடும்
வண்ப யனொரு வைகலிங் கொன்றது
நண்ப வீந்தவர் நண்ணுதல் வேண்டுமே.
17
1473 அன்ன தானமொ ராயிரங் காசியின்
மன்ன நாளும் வழங்கும் பெரும்பயன்
இன்ன மாநக ரீந்திடும் பிச்சையால்
என்னை யாளுடை யாயெய்தல் வேண்டுமால்.
18
1474 என்று பற்பல் வரங்களும் வேட்டனன்
ஒன்று மன்பி னுறுதவ னின்புறக்
கொன்றை மாலைக் குழகன் முறுவலின்
அன்று நோக்கி யருளி னவிற்றுமால்.
19
1475 எண்ணி லாத வுயிருமின் பத்தினை
நண்ன விந்த நகரம் வரமெலாம்
பண்ண முன்பே பணித்தன மற்றது
புண்ணி யர்க்குப் புலப்பட நின்றதே.
20
1476 இன்று நீயிரந் திட்டமை யாலினித்
துன்று வையகத் தொல்லுயிர் யாவையும்
மன்ற வோர்ந்து மதித்த வரங்களை
நன்று பெற்று நவையற வாழிய.
21
1477 வேட்ட வேட்ட வரத்தினை மேவினு
நாட்ட நம்மிடை வைத்த கருத்தராய்
வீட்டை யேபின்பு மேவுக வென்றருள்
காட்டி யீசர் கரந்தன ரென்பவே.
22
1478 விளைத்த மெய்த்தவ விச்சுவா மித்திரன்
வளைத்த வன்பின் வரதனைப் போற்றினான்
திளைத்த மெய்ச்சிவ யோகந் தினம்பயின்
றிளைத்த லின்றி யிருந்தன னாங்கரோ.
23
1479 இற்று விச்சுவா மித்திர னின்வரம்
பெற்ற தந்தகன் பேணி வரம்பெரி
துற்ற வாறினிக் கேண்மினென் றோதுமாற்
கற்ற சூதன் கலந்த தவர்க்கரோ.
24

விசுவாமித்திரன் வரம்பெறு படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 1479 
-----------

25 அந்தகனரசுபெறு படலம் (1480-1501)

1480 வருங்கிரே தாவில் விச்சுவ நாதர் வளர்திரே தாயுக மதனிற்
பொருந்திய வமுத லிங்கநா யகரே போற்றிய துவாபர யுகத்தில்
திருந்திய தரும நாதர்பின் கலியிற் றிகழ்ந்தகோட் டீச்சர ரென்னப்
பெருந்திரு வளிக்கும் பெயர்பெரி தணிந்த பிஞ்ஞகர் வழங்கிய வரத்தால்.
1
1481 அரியமா தவங்க ளுழந்தமூ தறிவி னான்றவர் தாங்களே யன்றிப்
பெரியபா தகங்க ளுழந்தவர் தாமும் பிறங்கிய வாதிமா நகரை
உரிமையால் வழிபட் டும்பரார் கதியி னுற்றுமேல் வீட்டினை யடைய
எரிகுலா நிரய நீந்துவா ரின்றி யமநகர் வறுமைகூர்ந் ததுவே.
2
1482 பனைவகிர்ந் தனைய படர்மருப் பெருமைப் பாகன்மற் றனையது நோக்கி
வினையிலி கொடுத்த வெனததி காரம் வீழ்தர வுயிர்க்கெலா மேன்மை
தனையளிக் கின்ற தாதிமா நகரந் தானலா லிலையத னிடத்தே
முனைவன தருளாற் பெறுவலென் றுன்னி முன்னினா னத்தகு பேரூர்.
3
1483 வேறு
தக்கிண கங்கையின் றீரஞ் சார்ந்தனன்
பொக்கமி லன்பொடும் புனலிற் றோய்ந்தனன்
அக்கமும் பூதியு மணிந்து மெய்யெலாம்
நக்கனார் கோயின்மு னண்ணித் தாழ்ந்தனன்.
4
1484 மணிமலி கோயிலை வலம்வந் துள்புகுந்
தணிமலை பட்டிநா யகரை யண்ணினார்
பிணிமலி பெரும்பவம் பெயர்க்குஞ் செம்மலைப்
பணிமலி யன்பினாற் பரசிப் போற்றினான்.
5
1485 மரகத வல்லியின் மலர்ப்ப தங்களைச்
சிரமிசை யணிந்துளந் தேனித் தங்ககன்
றிரசத மன்றமு மிறைஞ்சிப் பாங்குப்போய்ப்
பரசுமைந் தெழுத்தையு முறையிற் பன்னினான்.
6
1486 அற்றைநா ளொழிதர வலரி கீழ்த்திசை
உற்றெழு மற்றைநா ளுஞற்று நாட்கடன்
முற்றுவித் தருட்குறி முறையிற் றாபியாப்
பொற்றபூ சனையெலாம் பொருந்தச் செய்தனன்.
7
1487 பன்னெடுங் காலங்கள் பரவிப் பூசனை
இன்னருட் குரியனா யியற்றுந் தென்றிசை
மன்னவன் மகிழ்கொள மழவெள் ளேற்றின்மேல்
என்னையா ளுடையவ னெதிர்நின் றானரோ.
8
1488 கண்டனன் றென்றிசை காவல் பூண்டவன்
தண்டென விழுந்தனன் தழுத ழுப்பநா
விண்டனன் றுதிபல விழியி னீருகுத்
தண்டனே சயசய சயவென் றார்த்தனன்.
9
1489 அன்புசெய் தருமனை யறவெள் ளேற்றினான்
இன்புற நோக்கிநீ யெண்ணுங் காரியம்
என்புக லாயென விறஞ்சி யந்தகன்
தன்படர் கருத்தினைச் சாற்றன் மேயினான்.
10
1490 வேறு
அறத்தி னீடிய விச்சுவா மித்திர னடிமைத்
திறத்தின் வாங்கிய வரத்தினாற் செறிந்தநா னிலத்து
மறத்தி னீடிய பாதக வுயிரும்வந் தடுத்துப்
பிறத்தன் மேவுறாக் கதிபெறு கின்றன வதனால்.
11
1491 அடிகண் முன்னெனக் கருளினா லருளிய வரசு
விடுதி பெற்றிட மிடியிடைப் பட்டுவந் தடைந்தேன்
கடிமலர்க் கொன்றைக் கண்ணியாய் கருணையா லதனை
முடிய வுய்க்குமா றருளென முறைமுறை பணிந்தான். 2
12
1492 செய்ய கோல்கொடு தென்புலத் தரசுசெ யியமன்
நைய வுள்ளக நவிற்றிய முறையினைக் கேளா
உய்ய வானவ ரொலிகடல் விடமிடற் றடக்கும்
ஐய னாங்கவன் மகிழ்கொள வருளினீ தறையும்.
13
1493 யாங்கு நல்வினை யியற்றினு மியற்றினர் தம்பால்
ஓங்கு நின்விரை யாக்கலி யுறுவதோ வன்றே
தீங்கு நீங்கநல் வினைபுரி செம்மையி னாரே
ஈங்கு நம்வயி னன்பரா யிருங்கதி யடைவார்.
14
1494 தீவி னைத்திறஞ் செய்குந ரிற்றைநாண் முதலா
மேவு மிந்நக ரிடத்துறு விழைவில ராகி
ஓவி நின்விரை யாக்கலிக் குட்படு வார்கள்
தாவி லாதநின் னரசினைச் சார்மதி யென்றான்.
15
1495 இறைவ னின்னண மருளியங் கிலிங்கத்தின் மறைய
நிறைம கிழ்ச்சியி னேரெதிர் வணங்கிநீ டியமன்
மிறைசெ யள்ளல்கண் மிடைதரு தன்னகர் மேவி
முறைசெய் தாருயிர்க் குறுதிசெய் திருந்துவாழ்ந் தனனால்.
16
1496 என்ற சூதனை முனிவரர் வினாவுவார் பாவ
நன்று செய்குந ராதிமா நகர்நய வாமே
ஒன்று தென்புலத் துறுவரே லபுத்தியாற் றலங்கள்
வென்று தீவினை கதிதரு மென்பதி வீணோ.
17
1497 ஆத லாலறிந் துறுதியால் வழிபடுந் தவரே
மேத குங்கதி விரவுவ ரென்பது தகுமோ
சூத மாதவ வென்றலுஞ் சூதன்மா தவர்கட்
கேத நீங்குறக் கடாவினுக் கெதிர்விடை கொடுப்பான்.
18
1498 புண்ணி யம்புரி வார்பிற வாநெறி புக்கான்
மண்ணின் மீட்டும்வந் துறாருடன் வான்கதி பெறுவார்
நண்ணு தீவினை யுடையவர் நணுகின்மற் றவர்போல்
எண்ணு முத்தியிற் கலப்புறு மியல்புற மாட்டார்.
19
1499 போதி மாநகர் புகுந்திடும் புண்ணியத் திறத்தால்
தீது தான்பெரி தொழிதர வெஞ்சுதீ வினையைக்
காது கூற்றிடைக் கழீஇமறு பிறப்பிற்பே ரூர்புக்
கேத நீங்கவான் முத்தியி லிரண்டறக் கலப்பார்.
20
1500 அல்ல தூஉமறன் கடைபுரி வார்தொல்லை யறத்தான்
நல்ல நெஞ்சின ராயறன் கடையினை நடுங்கி
ஒல்லை யாதிமா நகர்புகுந் தொழுக்கொடும் பணியின்
வல்லை நீத்திருள் வினையினை வரம்பிலின் புறுவார்.
21
1501 ஈது தீவினை யாளர்பே ரூர்வயி னெய்துங்
கோதி லாதநற் பயன்பய னின்மைகூ றிலமற்
றாதி நாயக நயன்றனக் கருளுமந் நகரின்
மூது மான்மியங் கேட்கென மொழிகுவன் சூதன்.
22

அந்தகனரசு பெறுபடலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 1501
--------

26. தலவிசேடப்படலம் (1502-1549)

1502 பொற்பங் கயப்பூம் பொகுட்டணையிற் புலவ னிறைவ னருளாலோர்
கற்பந் தனிற்பல் லுயிருலகங் கண்டு பரம னார்தலங்கள்
சிற்பந் திகழப் பலசமைத்துத் தீர்த்தம் பலவு மினிதுறீஇ
அற்ப வுணர்வா லிறுமாப்புண் டமர்ந்தா னந்த வமையத்தில்.
1
1503 பின்னற் சடிலத் தெம்பெருமான் பேரூர் வரைப்பு மந்நகரின்
மின்னற் கனக மணிகொழிக்கும் விரைநீர்க் காஞ்சித் தடநதியும்
நின்னிற் படைக்கப் பட்டனவோ நினையா யென்று நெடுவிசும்பின் 
மன்னிப் பொலிந்தங் கொருவாக்கு வயங்க வதனைக் கேட்டெழுந்தான்.
2
1504 நினைத்தார்க் கினிக்கும் பேரூரி னீடும் பெருமை வினாயறிவான்
தனைத்தா ழமரர் முனிவருடன் சார விமைய மால்வரைப்பால்
நனைத்தா துகுக்கும் பொழிற்கயிலை நண்ணித் துதிகள் பலநவின்று
வினைத்தா ளறுக்கும் பெருமானை விரையார் பாதம் பணிந்திரந்தான்.
3
1505 ஆதி புரியு மந்நகரி னறல்வார்ந் தொழுகுந் தடநதியும்
ஏத மனுக்கும் பொருள்பலவு மென்னா லியன்ற வல்லவென
ஓது நெடுவான் மொழிகேளா வுண்மை யுணர்ந்திங் கதன்பெருமை
வேத முதல்வா நின்பாங்கர் வேட்டேன் கேட்க வெனத்தாழ்ந்தான்
4
1506 ஊற்றும் விழிநீர் மணிமார்பத் தொழுக வென்பு நெகவன்பு
தோற்றும் பணிமென் மொழிகுழறத் தொழுது குடந்தம் பட்டெதிரே
போற்று மலரோன் வழிபாட்டின் பொலிவு நோக்கிப் புரமூன்று
நீற்றுந் தவள நீற்றழகர் நிகழ்பே ரருளா லருள்செய்வார்.
5
1507 வண்டு முரலத் தேன்றுளிக்கும் வனசப் பொகுட்டு நான்முகத்தோய்
பண்டு பூர்வ பரார்த்தத்துப் படைக்கு மாற்றல் பெறுபாக்குத் 
தொண்டு புரிந்தெம் மடிப்பூசை சூழ்ந்தா யந்நா ளாதிநகர்
அண்டர் வியப்ப நாந்தாமே யாக்கி நடனம் புரிந்தேமால்.
6
1508 அன்று தொடங்கிப் பலவுயிரு மருளிற் கலப்பச் சதாகாலம்
நின்று நடனம் புரிகின்றா நெடிய வெள்ளி வரையாயுந்
துன்று வளத்தி னாங்கெழுந்தாந் தூய நமது முடிக்கங்கை
என்று மொழுகுங் காஞ்சிநதி யென்னத் தழங்கித் தவழுமால்.
6
1509 வரியா ரளிமென் மலருழக்கும் வயல்கள் புரக்குங் காஞ்சிநதி
பிரியா திருக்க வெனநம்மைப் பெரிது மிரந்து கொளும்வரத்தால்
விரிநீள் சினைப்பிப் பிலவனமே விளங்கும் பேரத்தாணியென
வரிவாட் டடங்க ணுமையோடு மகிலந் தொழவீற் றிருக்கின்றாம்.
8
1510 அறவா ணர்கள்போற் றிடும்பேரூ ரழியா வெமக்கோ ரிடமாகி
உறவா மதனா லெமைப்போல வுலவா ததனுக் கொருசான்றங்
கிறவாப் பனையொன் றுளதன்றி யின்னு மநேக விம்மிதங்கள்
சிறவா நின்ற வதற்கொப்புச் செப்பி னெமக்கு மொப்புளதாம்.
9
1511 இறவா மையைவேட் டவரெல்லா மெறிநீர்க் காஞ்சி மருங்குடுத்த
பிறவா நெறியென் றுலகேத்தும் பேரூ ரெல்லை யினிதடுத்து
மறவா தெம்மை வழிபட்டு மரியா வுடலின் வசிக்கின்றார்
பிறவா மையைப்பெற் றவர்தாமும் பேசி னலகி லடங்காரால்.
10
1512 வேறு
விச்சுவா மித்திர னென்னு மெய்த்தவன்
பொச்சமி றவம்பல புரிந்தி யாவர்க்குங்
கைச்செழுங் கனியெனக் கதிகி டைக்குமா
றெச்சமில் வரம்பல விரந்தங் கேற்றபின்.
11
1513 உத்தம வசிட்டனோ டுடன்று விச்சுவா
மித்திரன் வேதிய முனிவ னாகுமா
றத்தலத் தருந்தவ மாற்று நாளையில்
வைத்தனன் றிரிசங்கை வானத் தின்புற.
12
1514 ஆதலா லத்தலத் தருந்த வஞ்செயின்
மேதகு பயனெலாம் விரைவி னெய்துறும்
போதினாய் திரிசங்கு புலவர் நாடுறுங்
காதையுங் கேளெனக் கரைதன் மேயினார்.
13
1515 வேறு
கொங்காதரிக்கு மாலைநெடுங் குடைக்கீ ழயோத்தி நகரிருந்து
செங்கோல் செலுத்து நாளந்தத் திரிசங் கென்னும் பெருவேந்தன்
நுங்கா விசும்பிற் கதியடைத னுதலு மனத்தா னரசொரீஇ
மங்கா விழைவிற் குருவான வசிட்ட முனிவன் மருங்கடுத்தான்.
14
1516 குளிர்மென் கமல மலர்மருட்டுங் குரவன் பாத முறவணங்கி
அளிமிக் களைந்த மென்மொழியா லறைவான் பெரிய மாதவத்தோய்
இளிவந் திடுமண் ணரசிருக்கை யெனக்கு வெறுத்த தாதலினால்
ஒளிவந் திடும்விண் ணவர்வாழ்வி னுறுத்தென் றிரந்து பலதுதித்தான்.
15
1517 எடுத்த வுடலோ டிருந்துறக்க மெய்த விழைந்து தன்பாங்கர்
அடுத்த திரிசங் கெனுமரைய னார்வ நோக்கி வசிட்டமுனி
விடுத்து மொழிவா னதற்கேற்ற பருவம் விளைந்த திலைநினக்குத்
தொடுத்த கரும மினிச்சிலநா டொலையி னறிது மெனமறுத்தான்.
16
1518 அடங்காக் காதன் மனந்துரப்ப வனைய வசிட்டன் மைந்தர்தமை
மடங்கா முறையின் வழிபட்டு வரவு கூற மற்றவருந்
தொடங்காக் கரும மிதுவென்று துணிந்து தந்தை போன்மறுத்தார்
தடங்கா சினியாள் திரிசங்கு தளர்ந்தன் னவர்மு னிதுகிளந்தான்.
17
1519 எந்தங் குடியி லடுக்கின்றா ரெவர்க்கு மருளுங் குரவனென
நுந்தை சரணஞ் சரணடைந்தே னோக்கம் வழங்கா தொழித்திட்டான்
அந்த ணாளிர் நுமையடுத்தேற் கவன்போல் வாளா தொழித்திட்டீர்
புந்தி விழைந்த வொருகுருவைப் புகல்கொண் டடைவல் கதியென்றான்.
18
1520 பண்டு தொடங்கி வருங்குருவாற் பயனொன் றிலையென் றவமதித்துத்
தொண்டு வேறு குருவின்பாற் றொக்க விழைந்தா யாதலினான்
மிண்டு நீச னாதியென விளைத்தார் சாபமதுவேற்றுக்
கொண்டு விசுவா மித்திரனைக் குறுகி விளைந்த பரிசுரைத்தான்.
19
1521 அச்ச மகறி நீவேட்ட வரிய கதிதந் தனநாமென்
றெச்ச மறுங்கண் ணருள்வழங்கி யெச்ச மாங்கொன் றினிதியற்றி
வெச்சென் றமர ருளந்துளங்க விண்ணா ளரசன் சபையேற
நச்சு மணிவேற் றிரிசங்கை விடுத்தா னவையி லருந்தவத்தோன்.
20
1522 அசும்புங் கிரண மணிமோலி யமரர் பெருமான் சபைநாப்பண்
விசும்பி னெழுந்து திரிசங்கு மேவி யிருந்தா னிருத்தலொடுந்
தசும்பு நிகர்த்த முலைச்சசிதன் றலைவன் வெகுண்டு நீசனிவன்
பசும்பொன் னுலகில் வருவதே யென்று பாரி னுகமறித்தான்.
21
1523 வேறு
மறிந்து வீழ்பவன் மாதவத் தலைவனை நோக்கி
அறிந்த விச்சுவா மித்திர வோலமிங் கடியேன்
செறிந்த விண்ணவர் தள்ளலிற் றிகைத்துவீழ் கின்றேன்
இறந்து றாவகை காத்திநீ யோலமென் றிசைத்தான்.
22
1524 அஞ்ச னீயிது பற்றியந் தரத்திரு வென்று
விஞ்சு மாதவ விச்சுவா மித்திர னறுநெய்
எஞ்சு றாதுதூஞ் சுருக்கினை யெடுத்தெதிர் விடுத்தான்
தஞ்ச முற்றவ னதுதழீத் தங்கின னிடைவான்.
23
1525 அடைக்க லம்புகுந் தவற்கியா னருங்கதி கொடுப்ப
விடைக்க விண்ணவர் செய்வரே யெனநனி வெகுண்டு
புடைக்க ணேசில வுடுக்களைப் பெயர்த்துறு புவனம்
படைக்க லுற்றனன் பண்ணவ ரனைவரும் பணிந்தார்.
24
1526 அந்த ரத்தவ னிருந்தவா றிருந்தரும் போகம்
எந்த வைகலுந் துய்த்திடத் துறக்கமாங் கியற்றித்
தந்த னன்பிரா மணமுனி யெனுந்தனிச் சிறப்பு
மைந்து கொண்டவம் மாதவன் பெற்றனன் மாதோ.
25
1527 இன்ன வாறெலாந் தவப்பய னினிதுமுற் றுதலின்
அன்ன வைப்பினைத் தவசித்தி புரவென வறைவர்
மன்னு மென்மலர் வாழ்க்கையோய் மற்றுமந் நகர்க்குப்
பன்னு பல்வகை நாமமும் பகருதுங் கேட்டி.
26
1528 வேறு
அச்சுதன் முதலோர் காணா தமர்பர வெளிய தாய்நாஞ்
சச்சிதா னந்த மான தாண்டவ மியற்றா நிற்ப
நிச்சலு மேல்பா லோங்கி நிற்றலாற் புலவ ரெல்லாம்
மெச்சுமந் நகர மேலைச் சிதம்பர மாய தன்றே.
27
1529 எண்ணில்பல் வரைக்கும் வேந்தா மிமவரை யாதி போலா
வண்ணநம் வடிவாம் வெள்ளி மலையகத் திருத்த லானுந்
திண்ணிய பாத கங்கள் சீத்துவீ டளித்த லானும்
நண்ணுமந் நகர்க்குத் தேர்ந்தோர் நாட்டுவர் பேரூர் நாமம்.
28
1530 உத்தம நகரமீதென் றும்பர்கண் முதலா னோர்கள்
பத்தியிற் பணித லானும் பத்தியில் லாரு மங்கு
வைத்ததங் கரும முற்ற வைகினு மவர்க்கும் பத்தி
மெத்துத லானும் பத்தி புரியென விளக்கஞ் சாலும்.
29
1531 வந்தனர் பணிகின் றார்க்கு வரம்பிலா னந்த மாங்கே
தந்திட லானு மோங்கற் றையலோ டெமக்குச் சால
வந்தில்வாழ்ந் திருக்கை தன்னி லானந்தம் விளைத லானும்
புந்தமிக் கருளு மந்தப் புரம்பரம் புரமென் றாமால்.
30
1532 மருவிய பாவ நீக்கி மனம்வெளிப் படுத்த லானுந்
துருவரு மேலா முத்திச் சுகமெனும் வெளிசார்ந் தோர்க்குத்
தருதலி னானும் விண்ணோர் தகுதியின் வசித்த லானுங்
கருதிய தருள்பேரூரைக் ககனமா புரியென் பாரால்.
316
1533 எதனைமற் றெவர்கள் வேட்டங் கெய்தினு மதனை யன்னோர்
மதவுறப் பெறுத லானும் வளவிய வாசை யாதி
கதுமெனக் களைத லானுங் கண்ணுநர்க் கின்ப வெள்ளம்
புதுவதி னியலும் போத புரமெனப் படுமப் பேரூர்.
32
1534 பெருகிய செல்வ மன்னிப் பேதுசெ யழுக்கா றாதி
திருகிய குற்ற நீக்கிச் செறிந்திடு மனைக டோறும்
மருவிய சிருங்கா ரத்தின் வண்குண நடித்த லாலே
பொருவினாட் டியபு ரப்பேர் பூண்டது பேரூர் வைப்பு.
33
1535 எவ்வகைத் திருவும் வேட்டோர்க் கியைக்குங்கா ரணத்தி னானும்
எவ்வகைத் திருவி னோடு மிருநிதி கூட லானும்
அவ்விய மனுக்கு மாதி தாண்டவ மாட லானும்
அவ்வியற் பேரூ ராதி புரியென வகிலத் தோங்கும்.
34
1536 விண்ணவர் வியக்குஞ் செம்பொன் மேருமால் வரைபோந் தாங்கு
வண்ணநம் முருவ முற்றும் வன்மீக வுருவாய் மூடி
நண்ணலா லனைய பேரூர் வன்மீக நகர மென்றுந்
திண்ணிய செம்பொன் மேரு நகரென்றுந் திகழ்வ தாகும்.
35
1537 துலங்கிய போக மெல்லாந் துவன்றிவிண் ணமுதின்மேலாம்
இலங்கிரு நிதியி னீடி யுலோபரை யெய்த லின்றி
நலங்கிளர் மேருப் போன்ற நன்மையி னானு மவ்வூர்
புலங்கெழு செம்பொன் மேரு புரியெனு மப்பேர் பூணும்.
36
1538 கலித்தவஞ் ஞானம் பெற்றோர் கலாவுத லின்மையானும்
ஒலித்தவிஞ் ஞானம் பெற்றோ ருறவுகொண் டேத்த லானும்
நலித்தஞர் யாகஞ் செய்வோர் ஞானிக ளாத லானுந்
தலத்துயர் பேரூர் ஞான புரமெனத் தக்க தாகும்.
37
1539 வேரொடு வினையைக் கீழ்ந்திட் டின்பங்கள் விளையா நிற்குஞ்
சீரொடு மெனதியா னென்னுஞ் செருக்கிலார்க் கிருக்கை யாகிப்
பேரொடு நிற்ற லாலே பிரமமா நகர மாகும்
பாரொடு வான நாளும் பணிதவ சித்தி வைப்பு.
38
1540 ஒன்னல ராவி மாய்க்கு முயர்மனு மறையோர் தம்மால்
துன்னுபா தகமாந் தெவ்வைத் தொலைத்திடப் பட்டோர் நாளும்
மன்னினர் போற்று மாற்றான் வளர்குட சிதம்ப ரந்தான்
கொன்னவில் பெருமை சாலக் கொளுங்குருக் கேத்தி ரப்பேர்.
39
1541 மண்டிய மூலங் கன்ம மாயையென் றுரைக்கப் பட்ட
விண்டிடற் கரிய பாசம் விலகிநற் பசுக்க ளாங்குக்
கண்டரு பதியா நம்மைக் கண்டுகொண் டிருக்கு மாற்றாற்
பண்டெனப் படுமப் பேரூர் பசுபதி புரமென் றாகும்.
40
1542 மல்குமா மகிமைப் பேற்றான் மாபுர மென்றுந் தேசு
பில்கிர சதவெற் பான பெற்றியே நடித்த லானு
மல்கிர சதமன் றாடற் கமைந்திட லானு மாய்ந்தோர்
பல்கிர சதமன் றென்றும் பசுபதி புரத்தைச் சொல்வார்.
41
1543 ஒற்கமுற் றிரிய வேட்டோர்க் கோங்குபூ தான மென்னும்
அற்கிய செல்வ நல்க லாற்குந்த கான மென்று
நற்சபை யிறைஞ்சி னோர்க்கு ஞானமங் குறுத்து மாற்றாற்
சிற்சபை யென்று மேலைச் சிதம்பரம் பெயர்பூண் டன்றே.
42
1544 தொடிபொலி தடக்கை வேற்கட் டுணைமுலைக் கவுரிக் காங்குக்
கடிவினை நிகழ்ந்த வாற்றாற் கலியாண புரம தாகும்
நெடுகிய போதிக் கான நிரந்தரித் தலினாற் போதி
வடுவறு கான மாகு மாபுர மென்னும் வைப்பு.
43
1545 தேனுமெய்த் தவங்க ளாற்றிச் சிருட்டிபெற் றேகு மாற்றால் 
தேனுநற் புரமென் றாகுந் திகழ்பிற வாநெ றிக்கண்
மானுடர் தமையு முய்க்கும் வாய்மையாற் குந்த கானந்
தானது படைத்த தாகுந் தகும்பிற வாநெ றிப்பேர்.
44
1546 இன்னுமத் தலத்துக் கெய்து மிரும்பெயர் பல்ல வுள்ள
அன்னமேக் குயர்த்தோய் காணென் றறைந்தன ரமலநாதர்
தன்னிக ரில்லா வின்பந் தலைசிறந் தலரின் மேலான்
பொன்னடித் தலத்திற் றாழ்ந்து புறவிடை கொண்டு போந்தான்.
45
1547 எறிதிரைக் காஞ்சி யாடி யெழுந்துசூழ் போதிக் கானத்
தறிவக லறிவ தான வாதிலிங் கத்தைப் போற்றி
மறிவிழி மருட்டும் வாட்கண் மரகத மயிலைத் தாழ்ந்து
வெறிகமழ் வெள்ளி மன்றும் விலங்கலுந் தரிசித் தானால்.
46
1548 சிலபகல் கழிய வாங்குச் சிவணிவாழ்ந் தினிது போற்றி
இலகிய பேரூர் வைப்பி னிடந்தொறும் விளங்கா நின்ற
பலதளி களினு முக்கட் பனவனைப் பரசிப் போற்றி
நிலவுதன் னுலகம் புக்கு நெடிதுவாழ்ந் திருந்தா னன்றே.
47
1549 தலவிசே டத்தை முக்கட் டம்பிரான் கருணை கூர்ந்து
மலரவன் றெரியக் கூறு மரபினைத் தெரித்துப் போக்கிக்
கலதிசெ யங்கி ரப்பேர் கைக்கொளு மொருவ னெய்து
நலனுறு முனிவர் தேர நவிற்றுவன் சூத னென்போன்.
48

தலவிசேடப்படலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் - 1549.
--------------

27. அங்கிரன் கதிபெறுபடலம் (1550-1596)

1550 பங்க யப்பெரும் பண்ணை மடைதொறுஞ்
சங்கி னங்க டவழ்ந்துயிர் நித்திலங்
கங்கு லும்பக லென்னக் கதிர்பொழி
வங்க மென்றொரு தேயம் வயங்குமால்.
1
1551 வங்க தேய வரைப்பி னொருசிறைப்
பொங்கு கானிடைப் புல்லிய வாழ்க்கையன்
வெங்கண் வேடன் வெருவரு காட்சியன்
அங்கி ரன்னென் றறைதரு நாமத்தான்
2
1552 தக்க காதன் மனைவியர் தாம்பலர்
மக்கள் பற்பலர் மன்னு முரிமையின்
ஒக்க லாரும் பலருடங் கண்முறத்
தொக்க செல்வந் துவன்றுற வைகினான்.
3
1553 அடைய லார்க்கரி யேறுற ழன்னவன்
படைகளேந்திப் பலர்தனைச் சூழ்தர
நடைவ யிற்செலு மாந்தர்க ணன்பொருள்
அடைய வெளவிக்கொண் டங்ஙனம் வாழுநாள்.
4
1554 கூர்த்த செல்வங் கொழித்திடு மாமக
தீர்த்த மாடவு மன்றல்கள் செய்யவும்
ஓர்த்த சுற்றமொ டொள்ளிய வந்தணர்
போர்த்த வோகையி னாற்றிடைப் போதுவார்.
5
1555 சுடர்ம ணிக்கல னுந்தொகு மாடையும்
படர்ப றிக்குல மும்பகட் டேற்றின்மேல்
இடுபொ ருட்பல மூடையு மீண்டுற
வடவி புக்குமு டுக்க ரடுத்தனர்.
6
1556 செவ்வி யீதெனத் தேர்ந்தடுத் தங்கிரன்
இவ்வெ லாங்கவர் தற்கிது வாமென
வெளவி யம்புரிந் தியாரையு மாய்த்தெலாம்
வெளவி யேகித்தன் வாழ்பதி நண்ணினான்.
7
1557 மக்க ளொக்க லறிந்து மலிபொருள்
தக்க தன்று நமக்குத் தகினுமிம்
மிக்க செல்வங் கவர்ந்து விடாதெலா
மொக்க வாவி யொழித்தன னாதலான்.
8
1558 வேந்தர் தேர்ந்து விழுக்குலத் தோடெமைச்
சீந்தி மாய்ப்ப ரெனத்தெருண் டொய்யெனக்
காந்து கண்ணின ராகிக் கழற்றினார்
சாந்த மில்லாத் தறுகணி னான்றனை.
9
1559 ஈது செய்குவ ரேயென வங்கிரன்
போது வைகிய பொங்கிருள் யாமத்துக்
காதி யாருயிர் காற்றினன் மக்களை
மூது சுற்றத் தவரொடு முற்றவே.
10
1560 வாழ்ந்த வைப்பினை விட்டு வனந்தொரறுஞ்
சார்ந்து தன்றொழி றண்டா தியற்றுவான்
போந்து தென்கயி லைப்புற நண்ணினான்
ஆர்ந்த வண்மைகண் டாங்கசைந் தானரோ.
11
1561 இயம தூதர்க ளெண்ணில ரோருருப்
பயிறல் கொண்டு படர்ந்தன தோற்றத்தான்
உயர்வி லங்குமொண் புட்களு நிச்சமும்
வயிறடங்க வதைத்துண லாயினன்.
12
1562 மிருக மற்ற விகங்கமு மற்றன
துருவி யாறலைத் துத்துயர் செய்வதோர்ந்
தொருவ ரும்பட ராமை யொழிதலின்
மருவு நீணெறி மாய்ந்தன மாடெலாம்.
13
1563 ஆய காலையொ ரந்தண னவ்வுழித்
தாயமாகிய தாரமோ டண்ணினான்
மேய வேதிய னாவியை வீட்டினான்
தீயன் பார்ப்பனி யைத்தெவ்வி யேகினான். 4
14
1564 தனதி ருக்கையைச் சார்ந்துயர் பார்ப்பனி
இனிது தன்வழி யேவ லியற்றுற
நனியொ றுத்தச் சுறுத்தின்ப நண்ணினான்
அனைய வங்கிர னாங்கொரு நாள்வயின்.
15
1565 வேட்டை யாட விழைந்து தனுவொடு
காட்டி னேகிக் கதழ்ந்து திரிதலான்
வாட்டு தாகமும் வன்பசி யீட்டமுங்
கோட்டி கொள்ளக் குழைந்துள மீட்டனன்.
16
1566 இருக்கை நாடிக்கொண் டேகுகின் றானிடை
வருக்கை மென்கனி மந்தி வகிர்ந்துணாத்
தருக்கு நீள்பொழி லூடு தவழ்ந்துசெல்
உருக்கொள் காஞ்சி யொளிநதி கண்டான்.
17
1567
வேறு
உய்ந்து ளேனென வோகை துள்ளுற
முந்து கண்டவம் முழங்கு காஞ்சிபுக
கந்தி னீர்மடுத் தயர்வு யிர்த்தலர்
சிந்து வார்கரை செல்ல வேறினான்.
18
1568 அங்கண் வைகுமோ ரராவெ ழுந்தவன்
செங்க ழற்பதஞ் சினந்தெ றிந்தது
தங்கு கார்முகந் தன்னின் மாட்டினான்
நுங்கிற் றவ்வரா நூறு பட்டரோ.
19
1569 பரிந்து பாப்புயிர் பாறு முன்னரே
விரைந்த வேகத்தின் விடந்த லைக்கொள
வரிந்த திண்சிலை வாகு வேட்டுவன்
கரிந்து மெய்யுயிர் கைய கன்றதே.
20
1570 இறந்த வேடனை யியம தூதர்கள்
விறந்து முற்றினார் வெருவத் தாக்கினார்
மறிந்து நெஞ்சுக வலிதிற் கட்டினார்
நிறைந்த செல்லல்செய் நெறிகொண் டேகினார்.
21
1571 தெரிந்து மற்றது சிவக ணங்கள்போய்
எரிந்த குஞ்சியி னியம தூதரை
முரிந்து வீழவு முடங்க ளாகவும்
இரிந்து போகவு மெருக்கி மீட்டன.
22
1572 மீட்ட வங்கிரன் விண்ணின் மாதரார்
நாட்ட மெய்க்கவி னல்வி ருந்துண
வேட்டை தீர்ந்தெழில் விமான மேறிப்போய்ச்
சேட்டி ருங்கயி லாயஞ் சேர்ந்தனன்.
23
1573 இரிந்த தூதுவ ரெரிசெய் குஞ்சிமண்
விரிந்த சென்னியின் வெய்து முன்னுறீஇ
வரிந்த திண்கழல் மன்னன் சேவடி 
புரிந்து போற்றினார் புகறன் மேயினார்.
24
1574 வேறு
வாழி வாழிநின் னரசியல் வாழிநின் செங்கோல்
ஊழி யூழியும் வாழிய வுருட்டுநின் றிகிரி
ஆழி வையகத் தங்கிர னென்றொரு பதகன்
பாழி யாக்கையைப் பாற்றியா ருயிர்கொடு மீண்டாம்.
25
1575 விலங்கி வண்சிவ கணமெமை வீற்றுவீற் றதுக்கி
உலங்கொ டோளினான் றனைக்கொடு கயிலையுற் றதனாற்
கலங்கி மாய்ந்தவ ரொழிதரக் கால்விரைந் திரிந்தே
மலங்கன் மார்பினாய் நின்சபை யடுத்தன மென்றார்.
26
1576 கைப்ப வஞ்செவி காலர்க ளுரைத்தமை கேளா
வெப்பி னுள்ளகம் விரவுற வேந்தனீ தெண்ணும்
எப்பெ ருந்தவ மிழைத்தவ ராயினு மிறுங்கால்
நப்பு ணர்ந்தலா தேகுறார் நாட்டுமேற் கதியில்
27
1577 தீய பாதகஞ் செய்தவன் றனைச்சிவ கணங்கள்
காய வாணரு நாடருங் கயிலையில் விடுதற்
கேயு மேயிஃ தென்னெனச் சித்திர குத்தன்
ஆய வான்கணக் கறிஞனை வியவரி னழைத்தான்
28
1578 வந்து வந்தனை புரிந்தெதிர் வைகியக் கணக்கன்
வெந்தி றற்பெரு மானெனை விளித்ததென் னென்ன
வந்த வங்கிர னாற்றுபுண் ணியமுள தாயிற்
புந்தி யாலுணர்ந் துரையெனப் புலவுவேற் றருமன்
29
1579 உருத்த நான்முத லுலந்தநாள் காறும்பா தகமே
விருத்தி யாவிளைத் திட்டதே யன்றிநல் வினையைக்
கருத்தி னானுமெண் ணிலனெனக் கணக்கனோர்ந் துரைப்பக்
குருத்து மீமிசைக் கொழுந்தெழுங் கோபங்கொண் டியமன்.
30
1580 இந்த மாணின்மை யியன்றபின் னிவ்வர சாட்சி
தந்த நாயகன் றாள்வயிற் சார்த்தலே யன்றி
முந்தை நாளென முறைசெயற் பாலதன் றென்னா
மைந்து நீடிய வன்கடாக் கடாய்வழிக் கொண்டான்.
31
1581 ஆயி ரத்தொரு நூற்றினை யடுத்தபன் னிரண்டென்
றாய வெண்ணினை நாற்றிய வரும்பெரு நோயும்
பாய பல்பரி சனமும்பின் றொடர்தரப் படர்ந்தோன்
தூய வெள்ளியங் கிரியினை மேயினன் றுனைந்து
32
1582 அங்க ணெம்பிரான் றிருமுன்ன ரடல்விடை மருங்கே
அங்கி ரப்பெய ரானிறு மாப்பொடு மமர்ந்தோன்
அங்கை கூப்பிலன் மதித்திலன் சிரித்தன னோக்கி
அங்கி நீள்விழி காலநா யகன்புடை யடுத்தான்.
33
1583 எட்டு றுப்பினு மைந்துறுப் பினுமெதிர் வணங்கித்
தட்ட மிட்டன னடித்தனன் சதுமறைப் பொருளே
கட்டு செஞ்சடைக் கடவுளே யிறைவனே யென்று
முட்டி லாதுபல் துதிகளை முழக்கியீ தறைவான்.
34
1584 அளவில் பாதக மாற்றிய வங்கிரச் சிதடன்
வளநி லாவுநின் சந்நிதி வரத்தரு மானாற்
களைக ணேயெனக் கருளதி காரமென் னாகும்
எளிய னேற்குவேண் டாவினி யென்றிது புரிந்தான்.
35
1585 மிறைசெ யங்கிரன் விளைத்தபா தகப்பெருங் கணக்கு
முறைசெய் தண்டமு முதிர்புகழ் வளர்க்குஞ்செங் கோலும்
இறைவ கண்டுகொ ளென்றுசே வடிதனக் கடுப்ப
நிறையு மன்பொடு மிட்டனன் வணங்கின னின்றான்
36
1586 நறுவி ரைச்செழுங் கடுக்கைநாண் மதிமுடிச் சடையோன்
முறுவ லித்தெறுழ் மறலிதன் முகத்தினை நோக்கித்
தெறுவ லிச்சிறு காலகே டிறம்பிய முறைமை
நிறுவல் செய்திலர் கணத்தவ ரெனவுண்மை நிகழ்த்தும்.
37
1587 பாத கம்புரி வாரெலாம் பதைபதைத் தஞ்சும்
பாத கம்பல கோடிகள் பயிற்றினா னேனு
மாத வம்புரி விரதரு மனதழுக் கறுப்ப
மாத வம்பெரி தியற்றிய வாய்மைய னனையான்.
38
1588 அன்ன மாதவம் யாதென வயிர்த்தகத் தழுங்கல்
பன்னு கின்றனங் கேள்பகட் டூர்தியங் கடவுள்
மின்னு நம்முரு வாகிய வெள்ளியங் கிரியைத்
துன்னி வைகினன் சுடர்வரை நோக்கின னிச்சம்.
39
1589 இறுதி வந்துழி யெறிதிரைக் காஞ்சியம் புனல்வாய்
முறுகு காதலின் மடுத்தனன் மூரியங் கரைநின்
றறுதி யாக்கைவீழ்ந் துருண்டதி னழுந்திய திகலன்
மறுவி னீற்றுமேட் டவன்றலை வாங்கியிட் டனவே.
40
1590 இன்ன மாதவந் தனக்கெதிர் மாதவ முளதோ
அன்ன தாதலிற் பாதக னவனென நினையன்
மன்னி நாம்பயில் கயிலையின் மற்றவன் வருமே
துன்னு பாதகத் தொடர்புடை யானெனிற் சூழ்தி.
41
1591 உறுதி யின்னுமொன் றுரைத்திடக் கேட்டிபே ரூரின்
இறுதி யுற்றவர் வசித்தவ ருடலினை யெடுத்தோர்
மறுவில் வெள்ளிமால் வரையினைக் கண்டவர் காஞ்சி
முறையிற் றோய்ந்தவர் குண்டநீ றணிந்தவர் முதலோர்.
42
1592 தணிப்பில் பாதகம் பற்பல சமைத்தன ரேனும்
இணர்க்க னற்கொழுந் தட்டபஞ் செனவவை யிறப்ப
மணப்ப சும்பொழில் வாங்குமிம் மால்வரை யடுப்பர்
பணைத்த பாவரென் றவர்தமைப் பற்றநீ முயலல்.
43
1593 ஆதி யம்புரி யெல்லையி னன்றியா ரேனுந்
தீது செய்திடி னவர்தமைச் சிக்கயாப் புறுத்துக்
கோத னுங்குமா முறைபுரி கொண்டதி காரம்
போதி யென்றனன் புரம்பொடித் தருளிய புனிதன்.
44
1594 மடந்தை பாகனீ தருலலு மறலிநெஞ் சுருகி
மடந்த வாதவென் பிழைபொறுத் தருளென வணங்கி
இடந்து மாலறி யாப்பதத் தன்பிடை விடாமற்
படர்ந்து தன்பதி பயின்றதி காரஞ்செய் திருந்தான்.
456
1595 துறந்து மேதைய ராயினுந் தோகையர் துணைத்தோள்
மறந்தி டாதவ ராயினும் வழியிலா வழியின்
இறந்த தீமைய ராயினு மிருங்கதி வேட்பின்
உறந்த போதியங் காடலா லுறுத்துவ துளதோ.
46
1596 வென்ற வைம்பொறி விரதமா தவத்தினீ ரறத்தைக்
கொன்ற வங்கிரன் கதியினைக் குறுகிய துரைத்தாங்
கன்ற லம்பிய கைத்துணைக் கவுரிதன் றவத்தை
நன்றி யம்புது மறிகென நவிற்றுவன் சூதன்.
47

அங்கிரன் கதிபெறுபடலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் – 1596
----

28. கெளரி தவம்புரிபடலம் (1597-1743)

1597 வண்டு முரலு மலர்க்கடவுள் வரத்தி னுயிர்த்த சிறுவிதிதான்
பண்டு பரனை வழிபட்டுப் பயின்மூ வுலகுந் தாட்படுத்துக்
கொண்டு மகிழு மந்நாளிற் குறைவி றவத்தா னுமையாண்மற்
றண்டர் வியப்பச் சதிதேவி யென்ன வவற்கு மகளானாள்.
1
1598 வளரு மகளுக் காறிரட்டி வருட மடுத்த பருவத்தின்
அளவி றவத்துச் சிறுவிதிநஞ் சயின்று மிடற்றிற் கணியாக்கித்
தளரு மமரர் மடமாதர் தங்கண் மிடற்றுக் கணிநிறுவு
மிளிர்பொற் சடைல வேதியர்க்கு விதியிற் புனல்வார்த் தளித்திட்டான்.
2
1599 தள்ளார் சிறப்பின் மகமொன்று சமைக்க முயன்று பின்னொருநாள்
நள்ளார் புரங்க ளொருநொடியி னகையிற் பொடித்த மருகனுக்குங்
கள்ளார்ந் தொழுகு மலர்க்கூந்தற் கயற்கண் மகட்கு மறிவிப்ப
விள்ளா விருப்பின் கயிலாய விலங்க லடுத்தங் கெதிர்போந்தான்.
3
1600 வற்றற் றலைமா லிகைப்பெருமான் வாளா திருந்தா னதுநோக்கி
எற்றுக் கிவண்வந் தனஞ்சூலி யிடுகாட் டாடி யெரியேந்தி
கற்றைச் சடிலி கங்காளி கபாலி யிவன்சீ ரறியாமே
உற்று மகளைக் கொடுத்தாமென் றுளைந்து வெகுட்சி யொடுமீண்டான்.
4
1601 விடமுண் டிரந்துண் டெருதேறி வியாள மதளென் பறலணிந்து
துடுமிக் குரப்பி யுழைபரசு சுடரு மருப்பா திகள் சுமக்கும்
அடலை யுருவத் தாற்களித்த வன்றே மகளை யிழந்தாமென்
றுடலை மனத்தி லிருவரையும் வெறுத்தா னுறவு பகையோரான்.
5
1602 மகத்தி னளிக்கு மவிப்பாகம் வடிகொள் சூலப் படையானுக்
ககற்றி யேனை யோர்க்கெல்லா மளிப்ப லவன்பா கமுமும்மைச்
சகத்தை யளிக்கு மரிக்களிப்ப லென்று தடுத்தும் பிடிவிடான்
மிகத்தன் மருங்கு விண்னவர்கண் மிடைய வேள்வி தொடங்கினான்.
6
1603 வேறு
கரும்புரு வரித்ததோட் கரிய கூந்தலாள்
இரும்புகழ்த் தாதையங் கியற்றும் வேள்வியை
விரும்பினள் காணவெள் விடையி னானெதிர்
அரும்பிய வன்பினா லடிவ ணங்கினாள்.
7
1604 யாதுநின் விழைவென விறைவி னாதலும்
மாதவண் மொழிகுவாள் வானின் மங்கையர்
பூதல மடந்தையர் குழுமிப் பொற்புறுங் 
காதலன் வேள்வியான் காண்க வென்றனள்.
8
1605 நினக்கவன் றாதையே யானு நீள்குழால்
எனக்கவன் பகைத்தன னின்ன தாதலால்
தமெக்கெனக் குரியநீ தானுந் தெவ்வென
மனக்கொளு மெனமறுத் தமலன் கூறினான்.
9
1606 தக்கனார் பெருந்தவந் தவிரும் பாணியுந்
தொக்கபல் வரைக்கெலாந் தோன்றல் செய்தவ
மிக்குறு பாணியும் விளைந்த நீர்மையான்
மைக்குழல் விழைவினை மாற்று கின்றிலள்.
10
1607 அவாவுநின் னுள்ளக மமைந்த தில்லெனின்
உவாநெடுங் கரத்தினை யொறுத்துத் தள்ளிய
கவானுடைக் காரிகை கதழ்ந்து செல்கெனத்
தவாததொல் லுருவினான் சாற்றி விட்டனன்.
11
1608 உடம்படல் போன்றிறை மறுத்த தோர்ந்துமவ்
வுடம்பிடித் தடங்கணா ளுகைக்குங் காதலால்
உடம்புமென் கொடியென வொசிய மீட்டுந்தாழ்ந்
துடங்குதன் பரிசன முறவங் கேகினாள்.
12
1609 வந்தனள் சதியென வழங்கு தூதுவர்
முந்துபுக் குரைப்பமுன் முகத்துச் சென்றனள்
தந்தைவம் மென்றிலன் றன்னைத் தேர்ந்தவன்
சுந்தர மனைவியுஞ் சொல்லொன் றாடிலள்.
13
1610 மக்களும் பேசிலர் மருங்கு துன்றிய
ஒக்கலு முவந்தில ரொரும ருங்குபோய்
இக்களத் தின்னுமென் விளையு மன்னது
மிக்கறி வாமென விருத்தன் மேயினாள்.
14
1611 உருத்திரச் செம்மலுக் குதவும் பாகமற்
றருத்தியின் மாயனுக் களித்திட் டானவன்
மருத்திகழ் பூங்குழல் வனச மென்முகைத்
திருத்திகழ் முலையவ ணோக்கிச் சிந்திப்பாள்.
15
1612 வள்ளலா ரருளினை மறுத்துப் போந்தனந்
தெள்ளிய வுணர்விலஞ் சிதம்புத் தக்கனும்
எள்ளின னிறையையு மிவன்ம கண்மையைத்
தள்ளுதன் முறையெனத் தழலின் மூழ்கினாள்.
16
1613 துவன்றிய முனிவருஞ் சுரரும் யாவரும்
கவன்றனர் துடித்தனர் கலுழ்ந்து தக்கனாம்
இவன்றனக் கிப்பழி யெய்திற் றம்மவோ
பவன்றனை யெள்ளிய பான்மைத் தாலென்றார்.
17
1614 அழுங்கிய சோடைகொண் டடுத்து ளார்விடம்
விழுங்கிய தெனமதி வேறு பட்டனர்
ஒழுங்கிலாத் தக்கனும் வெற்று டம்பனாய்
எழுங்கனன் மகத்தொழி லியற்றி நின்றனன்.
18
1615 வேள்வியந் தீயிடை மேவி னார்க்கெலாம்
வாழ்வினை யளிப்பவண் மாய்ந்த வண்ணமோர்ந்
தாழ்வினை விடமிடற் றடக்கி கோபியாத்
தாழ்வினைச் சடையொன்று தரையி னெற்றினான்.
19
1616 எற்றிய சடையினின் றெரிபொன் வேணியும்
நெற்றியின் விழியுநீ டலையின் கோவைகண்
முற்றிய வுரமுமொய் படைகை யேந்திய
வெற்றியும் விளங்குற வீரன் தோன்றினான்.
20
1617 வணங்கின னிறைவனை மலர்க்கை வாய்புதைத்
திணங்கலர்க் கிரும்படை யெடுப்ப நேர்கலா
துணங்குறத் திருவுளத் துன்னுஞ் சேவக
வணங்கரும் பணியெனக் கருள்க வென்றனன்.
21
1618 மாறுகொண் டொருமகம் வளர்க்குந் தக்கனைக்
கூறுசெய் தவ்வுழிக் குழுமி னார்க்கெலாம்
வீறுசெய் தண்டங்கள் விளைத்திட் டம்மகம்
நீறுசெய் தமர்கென நிமல னேவினான்.
22
1619 வேறு
நிழன்றவொரு வெண்கவிகை நீடுமர சாட்சி
கழன்றுவளர் தக்கனுயிர் கையகல வீரன்
தழன்றுபல சாரதர் கடற்புறம் வளாவ
வழன்றின்மகள் பின்றொடர வைதவ ணடுத்தான்.
23
1620 சிற்சில கணங்கடிசை தோரும்வழி காப்பப்
பற்பல கணங்களொடு பாழிமக மாற்றும்
பொற்புறு களம்புனித வீரனுற லோடு
மற்பவுணர் வாளரனை வோருமஞர் கூர்ந்தார்.
24
1621 தக்கன்முடி யெச்சன்முடி யீர்ந்துதழ லிட்டான்
தொக்கவழ லங்கையொடு நாத்திர டுணித்தான்
புக்கபகன் வாள்விழி புயந்துபக லோன்பல்
ஒக்கவுக வெற்றியொரு வீரன்மதி தேய்த்தான்.
25
1622 நாசியொடு மதர்க ணகிற்றுணை யிழந்தார்
பேசும்வகை யென்னைபெறு வானவர் திறத்தத்
தேசினுடல் பற்பலர் சிதைந்துயி ரிறந்தார்
கூசியுயிர் கொண்டுபலர் கொம்மென விரிந்தார்
26
1623 வேள்விவளர் சாலையழன் மேவவினி தூட்டித்
தாள்வினையி னேர்ந்துசம ராடுமுவ ணத்தோன்
வாள்விடு கனற்பரிதி மாயவலி காற்றி
மீள்வினை பரிந்தருளி னானிகரில் வீரன்.
27
1624 அன்றுவரு வீரனரி யேறென விறுப்பத்
தொன்றுவரு மாயன்முத லாஞ்சுரர்க ளெல்லா
மன்றவழு வைத்தொகுதி மானுவர்க ளென்றால்
வென்றிவிடை யான்வலியின் மேன்மையறி வாரார்.
28
1625 வேறு
வன்னியின் முழுகித் தக்கன் மகளெனு முறைமை நீத்த
கன்னிகல் வரைகட் கெல்லாங் காவலன் மகளாய் வைகி
மின்னவிர் சடில மோலி வேதியன் வதுவை யாற்றத்
தன்னுலத் தினிது முன்னித் தவம்பல புரியா நின்றாள்.
29
1626 ஆரண முறையிட் டின்னு மளவிடற் கரிய முக்கட்
பூரண ரருளால் வீணைப் புனிதமா முனிவன் போந்து
போரணி மதவே லுண்கட் புணர்முலை யுமையாள் செய்ய
தாரணி பாதந் தாழ்ந்தித் தவஞ்செய லெற்றுக் கென்றான்.
30
1627 வாயினான் மனத்தா னீண்ட வடிவினா லெட்ட வொண்ணாத்
தாயிலாத் தாயன் னானைச் சார்வது குறித்த தென்று
வேயினாற் புரிந்தா லன்ன வீங்குதோ ளிறைவி விள்ள
வாயினீ தமலை கேளென் றறைகுவன் வீணைச் செல்வன்.
31
1628 எவ்வயின் வதிந்து நீமற் றிருந்தவம் புரிந்தா யேனும்
அவ்வயி னிறைவன் மன்ற லாற்றினா னின்னைச் சேருஞ்
செவ்விநீட் டிக்கு மாற்றாற் சிறுவரை வதுவை முற்ற
ஒவ்வரும் பேரூர் வைப்பி னுஞற்றுதல் கரும மென்றான்.
32
1629 அங்ஙன மாக வென்னா வருந்தவ முனியைப் போக்கி
உங்ஙனந் தவங்க ளாற்று முமைமட மாது மேனைக்
கிங்ஙனந் தீர்ந்து பேரூர்க் கெய்துவ றவத்துக் கென்றாள்
எங்ஙன நின்னைப் போக்கி யிருத்துமென் றன்னை நைந்தாள்.
33
1630 அருகுறு பாங்கி மார்க ளன்னையை வணங்கி நந்த
மருமலர்க் கூந்த லாட்கு மாடகத் திவவு நல்யாழ்ப்
பொருவறு முனிவன் வந்து புகன்றனன் பேரூர் வைப்பிற்
கருதிய முக்கட் பெம்மான் கடியயர்ந் திடுவ னென்னா.
34
1631 ஆதலால் வதுவைக் கேகு மதுதனை விலக்க வொண்ணா
போதுக வென்ப தன்றே பொருத்தமென் றுரைப்ப வன்னை
காதலின் மகளை வல்லே கைகளா லணைத்து மோந்து
நீதியிற் கணவ னார்க்கு நிகழ்ந்தது நிகழ்த்தி னாளே.
35
1632 அருந்தவப் பேறு வாய்ந்த வாரணங் கென்னை யற்றேல்
வருந்துத லில்லை யென்னா மனத்திடை மகிழ்ச்சி கூர்ந்து
திருந்திய விமைய வெற்பன் றேவியங் குவப்பக் கூறி
முருந்திள முறுவற் செவ்வாய் மொய்குழன் மகளை நோக்கி.
36
1633 தேவரும் பரசு மேலைச் சிதம்பர நகரம் புக்கான்
மூவரு மிறைஞ்சு முக்கண் மூர்த்தியார் விரைந்து மன்றல்
ஆவது செய்யு மாயி னவ்வயி னின்னே யன்னாய்
போவது கரும மாகு மெனப்புகன் றுரைத்துப் பின்னர்.
37
1634 அணிகல னமைத்த பேழை யவிரிழைத் துகில்பெய் பேழை
தணிபெறு பனிநீர்ச் செப்பு தண்ணிய சாந்துச் செப்பு
மணமலி விரையின் செப்பு மான்மதச் செப்பு மற்றும்
இணர்மலர்க் குழலி னாளுக் கெண்ணில கொடுத்துப் பின்னர்.
38
1635 பாங்கியர் தங்கட் கெல்லாம் பலவகைச் சிறப்பு நல்கி
ஓங்கிய படைஞர்க் கூவி யொண்டொடி முன்கை மாது
தீங்கறு பேரூர்க் கின்று செல்லுவா ளுடங்கு போந்திட்
டீங்குவந் துறுக வென்றா னெழுந்தன ரவர்க டாழ்ந்து.
39
1636 புரசைவெங் களிறுந் தேரும் புரவியுந் தானை யோடு
விரசின கடைமுன் னால மிடைந்துதுந் துபிக ளார்ப்பப்
பரசுநர் பாங்கர்ப் போதப் பலசனம் விலக்கி முன்னே
கரிசில்கஞ் சுகியோர் செல்லக் கண்டவர் வியந்து நிற்ப.
40
1637 குறளொடு சிந்து முன்னே குறுகுறு நடந்து செல்ல
மறமலி வாள்கை யேந்தி யாணுடை மானத் தாங்குந்
திறனுறு பேடி மார்க ளண்மையிற் றிரண்டு சூழ
நறைமலை கூந்தற் செவ்வாய் நாடக மகளி ராட.
41
1638 கவரிகண் மருங்கு துள்ளக் கவிகைமே னிழற்றிச் சீர்ப்ப
அவிர்மணி வடங்கள் சுற்றி னமைத்தசாந் தாற்றி பம்பத்
தவிரருங் காதல் பூண்ட தந்தைதாய் விடைபெற் றம்பொற்
சிவிகையி னிவர்ந்து சென்றா டெள்ளியோர் மனத்துச் சென்றாள்.
42
1639 நரன்றுவே யுக்க முத்து நாகத்தின் மருப்பின் முத்தும்
வரன்றுவெள் ளருவிதூங்கு மருங்கெலாம் வேட ரீண்டி
முரன்றுதே னெழுந்துமொய்க்கு முதிரிறா லழித்து முக்கட்
பரன்றனிக் குமரற் போற்றும் பலவரை கடந்து சென்றாள்.
43
1640 பரம்பரன் றன்னை யெண்ணார் படர்பெருங் கும்பி போல
நிரம்பிய விடும்பை நல்கு நெறிவயி னியங்கு வோரை
அரம்புசெய் யெயினச் சாதியமர்ந்தபன் முரம்பு சூழ்ந்த
சுரம்பல கடந்து சென்றா டுவந்துவங் கடந்து சென்றாள்.
44
1641 நிரைமணி யோதை யாயர் நிகழ்த்துவேய்ங் குழலி னோசை
நுரைதயிர் கடையுஞ் சும்மை நுடங்குமென் கொடியின் முல்லை
விரைமலர் வண்டி னார்வம் வேறுவே றிசைப்பக் கேளாப்
பரையெனும் பசும்பொற் பாவை பலவனங் கடந்து சென்றாள்.
45
1642 முண்டக முறுக்கு விட்டு முகமல்ர்ந் திருப்பச் செந்தேன்
கொண்டுபைந் தாது பில்குங் குவளைகண் விழித்துக் காண
விண்டுபைந் தேறல் காலும் விரைக்கயி ரவம்வாய் விள்ளக்
கண்டுகண் டினிது சென்றாள் கழனிகள் பலவு மாதோ.
46
1643 தாந்திரை கொணர்ந்து வீசுந் தரளமுந் துவரு முழ்கப்
பூந்துணர்த் தாது போர்க்கும் புன்னையங் கான மெல்லாந்
தேந்துளி துளித்து வாசஞ் செறித்துமென் மலர்கண் முன்னர்
ஏந்துதண் கடல்சூழ் வைப்பி னிடம்பல கடந்து சென்றாள்.
47
1644 வேறு
பண்டு பரமன் முடிதேடிப் பரிந்த தெண்க ணோதிமமற்
றண்டர் பெருமான் மனைவியிவ ளடியு முடியு மறிந்துநலங்
கொண்டு மகிழ்வா மெனவெங்குங் குழுமுற் றெனநீர் நிலைதோறும்
மண்டு சிறக ரோதிமங்கண் மகிழ்கூர் கொங்கு நாடடுத்தாள்.
48
1645 அரும்பு விரிந்த மலர்த்தேனு மாலை படுத்துக் களமர்தெறுங்
கரும்பு சொரிந்த நறுஞ்சாறுங் கலந்து கால்க ளெனவொழுகிச்
சுரும்ப ருழக்கு மலர்ப்பண்ணைத் தொகுபைஞ் சாலி தனையோம்பப்
பெரும்பை திரநித் தலும்போற்றும் பேரூ ரெல்லை நண்ணினாள்
49
1646 வேறு
திருநக ரெல்லை தாழ்ந்து செழும்புனற் காஞ்சி தோய்ந்து
மருமலி மன்றம் போற்ரி வளரிர சதவெற் பேத்தி
அருவுரு வென்ன நின்ற வாதிலிங் கத்திற் பூசை
பெருகிய வன்பி னாற்றிப் பெருந்தவ மியற்றா நின்றாள்.
50
1647 உடங்குசென் றிறுத்த சேனை யொள்ளிய கழற்கால்வீரர்
அடங்கரு மகிழ்ச்சி பொங்க வாதிலிங் கத்தைப் போற்றித்
தொடங்கிய தவத்தி னாளைத் தொழுதருள் விடைபெற் றேகித்
தடங்கைவே ழங்கள் சூழத் தண்பனி வரையின் வாழ்ந்தார்.
51
1648 காலங்க டோறுங் காஞ்சிக் கடிபுன றோய்ந்து வேத
சீலங்கொண் டிமைய மாது செய்திடுந் தவத்தின் பேறு
ஞாலங்கண் டுய்யச் செய்வா னதிமதி பொதியும் வேணி
ஆலங்கொண் மிடற்றி னானோ ரந்தணக் கிழவ னானான்.
52
1649 வேறு
திங்களுமிழ் வெண்சுதை நிமிர்ந்தொளிர்வ தென்னத்
தங்குதலை வெண்ணரை தயங்கமதி யேபோல்
அங்கண்வளர் வெண்சிகை முடிந்ததமை வெய்தப்
பொங்குபொடி யென்னவுடல் போர்த்தநரை சீர்ப்ப
53
1650 மடங்கலுரி மாறியது போன்றுமணி மார்பில்
நுடங்குபுரி நூல்குலவ நோன்மைவளர் தோண்மேற்
படங்கழுவு றாதது பகட்டுரிமெய் வேறாய்
அடங்கியது போன்மென வமைந்துசரி கிற்ப.
54
1651 துவ்வமிழ்த மன்னதுவர் வாய்மொழி மடந்தை
இவ்வுருவி னேகலுறின் யாதுமிசை யாளென்
றவ்வரையி னார்த்ததுகி லைதிடைவி லக்குஞ்
செவ்வியி னெகிழ்ந்துதிகழ் வுற்றது சழங்க.
55
1652 திரைந்துதசை மெய்முழுதுஞ் சென்னிகை குலைப்ப
விரைந்துவளி நாசியின் விராவவிமை நால
நிரைந்தெழ நரம்புநெடு கித்தசைக டூங்க
வரைந்தறியொ ணாதமொழி வாயிடை வழங்க.
56
1653 அண்மையி னடுத்தவரை நோக்கவும கங்கைத்
திண்மைகொடு நான்றவிமை செவ்விதி னுயர்த்த
வண்மையுரை கேட்டிலது போன்றுவளர் காதின்
ஒண்மைமக ரக்குழை யொளிர்ந்துகதிர் வீச.
57
1654 நேடிநெடி யோனெடி துலந்துமறி யாத
பீடுவளர் சேவடிகள் பேணுமவ னில்லாஞ்
சேடுவளர் பாரினுறல் செவ்வியல தென்றாப்
பாடுமறை யின்கழல்கள் பாதமலர் சூட.
58
1655 நாளுமினி தாக்குபுகழ் நன்றிசெய வோங்கித்
தாளொடு வளைந்தனைய தண்குடை நிழற்ற
மீளியர் வெருக்கொள்வடி சூலமொரு கோலாக்
கோளிகுக ரங்கொடு குறித்தியவை சென்றான்.
59
1656 வில்லென வளைந்தவுட லாதரவு வீக்கும்
வல்லநெடு நாணென வயங்குதடி யின்பாற்
புல்லவெதிர் நின்றுவிடு பூசுரனை நோக்கி
நல்லவடி யாரென நயந்துமை பணிந்தாள்.
60
1657 வேறு 
பணிந்த பார்ப்பதி
அணங்குக் கண்ணலார்
மணங்கொண் மங்கலம்
இணங்கு கென்றனர்.
61
1658 ஏந்தல் யாண்டையை
போந்த புந்தியென்
ஈந்து வப்பல்யான்
கூர்ந்து கூறென்றாள்.
62
1659 வேறு
மாசை யன்னநன் மாமை யாயென
தாசை வீசுகே னென்றி யாதலாற்
றேச மோடுமென் செய்தி யாவையும்
பேசு கேனெனப் பேசும் பூசுரன்.
63
1660 வெள்ளி மால்வரை மேவும் வாழ்க்கையேம்
எள்ளு றாதவெம் மில்லின் வாழ்க்கையாள்
உள்ள மேயலா லுருவு மொன்றெனக்
கொள்ளு மன்பினாள் குறைவில் செல்வத்தாள்
64
1661 என்ன வாறுநா மியைந்து நின்றனம்
அன்ன வாறெலா மமையு மாற்றலாள்
கன்னி வாகனங் காமுற் றூரினுந்
தன்னை யன்றிநாந் தமிய மாகலம்.
65
1662 இரந்து செல்வதெம் மியற்கை யாயினும்
பரந்து வந்திடும் பண்பி னார்க்கெலாஞ்
சுரந்த காதலிற் றுறுத்துப் பல்பொருள்
புரந்து நிற்குமப் பொலிவி னீங்கிலள்.
66
1663 பகைய டுத்திடிற் பாரித் தெங்கர
மிகைசெய் தூணியின் விசிகம் பற்றுமுன்
நகைம ணிக்கொடி யன்ன நாயகி
தகைகொ டன்கரந் தனுவெ டுக்குமே.
67
1664 இயவை நீந்துத லெய்து மாயிடிற்
பயிறல் கொண்டொரு பாலு டங்குறுஞ்
செயலிற் றீர்ந்துபின் செல்லு வாளலண்
முயறல் கொண்டுதான் முந்த வுஞ்செயாள்.
68
1665 அருளிச் செய்யினு மறிந்து ளோருமெம்
மருளில் கண்சுடும் வன்க ணென்பர்கள்
வெருவக் காயினு மவள்வி யன்கணைப்
பொருவில் சீதளப் பூங்க ணென்பரால்.
69
1666 சுணங்கு பூத்தவிர் தொய்யின் மென்முலை
இணங்கி வைகலு மின்ப நல்கினும்
அணங்கு மற்றவ ளார்வ மென்சொல்கேம்
அணங்கு மெய்ப்பசப் பகல்வ தில்லையே.
70
1667 கொழுந னையலாற் றெய்வங் கொள்கலா
விழுமங் கற்பனை வீற்று மாதர்க்குத்
தொழும வட்கெனைத் தெய்வஞ் சொல்லுதல்
எழுபி றப்பினு மியற்கைத் தென்பவே.
71
1668 மன்னு மக்களை வாய்ப்ப நல்கியுங்
கன்னி யென்னுமக் கவின்ப டைத்துளாள்
துன்னு வையக முழுதுந் தாடொழு
தன்னை யென்றுசொல் லருளி னெல்லையாள்.
72
1669 தாயுந் தந்தையுஞ் சகோத ரங்களும் 
ஆய சுற்றமு மமைந்தி லேநமக்
கேயு நன்மனை யாளின் யாவையும்
மேய வாழ்க்கையே வீங்கு தோளினாய்.
73
1670 வேறு
பலவி ளம்புவ தென்னையெம் பலகுண மெல்லாங்
கலவு மன்னவ ளில்லையே லிலையவள் கழியச்
சுலவி யெங்கணுந் தலைவரு மோகத்தால் வேறாய்
மலிந ரைதிரை மூப்பெமை மருவிய தணங்கே.
74
1671 கல்ல ரத்தமெய் யூட்டிய காழக முடுத்து
வில்ல டுத்தபல் வார்சடை விளங்குற முடித்து
நல்ல டுத்தமெய்த் தவம்பல நாள்கழி வெய்த
வில்ல டுத்தவம் மாதுற வியற்றின மதனால்
76
1672 அனைய மாதுகொ லவளெழிற் சாயைகொ லென்ன
நினைய நின்றிடு நின்வயி னடுத்தன மினிமேல்
இனைவ தொன்றிலை யின்பமே யெமக்கடுப் பனவாம்
புனைமொ ழித்திற மன்றிது பூங்குழற் கோதாய்.
76
1673 பெண்மை பெற்றவர் தமக்கெலாம் பெருமகிழ் வளிக்குந்
திண்மை பெற்றதோட் கணவர்தங் கலவியிற் றிளைத்தல்
ஒண்மை மற்றஃ தொழிதர வனத்திடை யுணங்கி
வண்மை சிந்துற வருந்துவ தோவியன் மடவாய்.
77
1674 வாச நெய்த்தலை யுரைத்துவண் சீப்பினா னீவிப்
பூசு தண்கடிக் காசறை பொழிந்தல ரணிந்து
தேசி ருட்குழன் மகிழ்நற்குப் பாயல்செய் யாமை
ஊச லஞ்செவி யாய்சடை யுறுத்துத லழகோ.
78
1675 குவவு வாணுதல் குங்குமத் திலகமேற் பொறித்துக்
கவவு மாமணி யிலம்பகங் கவினக்கால யாத்திட்
டவவு நாயக னங்கைநீ வுதல்படுத் தாதே
உவவு மாமதி முகத்தினா யடலையூட் டுவதோ.
79
1676 அரிப ரந்தவாட் டடங்கணஞ் சனத்தக வெழுதி
உரிப ரந்தநா யகனுரு வுவப்புறக் காணா
தெரிப ரந்தவென் றூழெதி ரேறவார் புருவ
முரிப ரந்துற விடுத்துநீ முயறலுந் தகுமோ.
80
1677 நறுவி ரைத்தகா லேகமு நனைமது கரங்கள்
பெறும லர்ச்செழுந் தொங்கலும் பேணிய காந்தன்
முறுகு மெய்க்கடி மோந்துமோந் தின்புற லன்றி
வறுமை நாசியி னிறுவத லாகுமோ மடந்தாய்.
81
1678 திருந்து வாசனை செறித்தபா கடைநனி தின்று
முருந்து வென்றொளிர் முறுவலாய் செழுந்துவர்ச் செவ்வாய்
விருந்துண் டன்பனார் வியப்பமிக் கமிழ்தரு ளாதே
வருந்த மந்திரங் கணித்துணங் குதல்வழக் காமே.
82
1679 மகர வாய்க்குழை யணிந்தருண் மவுணர்வாய் மொழியுந்
தகர வார்குழ லவருழை யார்வந்து சாற்றும்
புகரி லாதமென் றீஞ்சொலும் புகாமைவீழ் செவிகள்
பகரு நீள்வனத் துழனியுங் கேட்பது பண்போ.
83
1680 துன்பெ லாந்தபத் துணைவனார் கலவியின் சுவையும்
அன்பி னாலவர் புரியுமா தரவுமுள் ளகங்கொண்
டின்ப மார்ந்தெழின் முகமல ராதிருந் தியான
வன்பி னல்கிய வுலத்தொடுங் குவிவதோ வனிதாய்.
84
1681 பூக மொத்தொளிர் மிடறுமங் கலியநாண் புணர்ந்து
போக மொத்தெழப் புட்குரல் பயிற்றுபு காம
தாக மிக்கறத் தலைவனார்க் கமுதளி யாதே
வேக முற்றழல் வறல்செய மெலிவதோ தோகாய்.
85
1682 அங்க தங்களு மவிர்மணிக் குருகும்பொற் றொடியுங்
கங்க ணங்களுங் கதிர்பொழி யாழியுஞ் செறித்து 
மங்க லந்திகழ் கேள்வனா ருடல்வளைத் தணைத்துத்
தங்கு கிற்றிலா திருப்பதோ தடங்கரந் தையால்.
86
1683 களப மங்கையிற் கொட்டியுங் கமழ்நறுந் தாது
வளர வட்டியும் வரித்துமா மணிவட மணிந்தும்
இளகி நண்பனா ரிறுகுறத் தழுவியின் புறாமே
விளர்தி றந்தகு மோமுலை மென்கொடிப் பாவாய்.
87
1684 மணிவி ரிச்சிகை பருமம்வண் கலாபமே கலையு
மணிசெய் காஞ்சியும் பட்டுமிட் டழகுசெய் யாமே
பணிவி ரித்தபை பாற்றிய நிதம்பம்வெண் டூசிற்
பிணிப டுத்தமை பிழையலா தழகுகொல் பேதாய்.
88
1685 சிலம்பு கிண்கிணி பரியக மலத்தகந் திருத்தி
அலம்ப வன்பனார் கலவியி னாடிமென் மலர்த்தாள்
புலம்பு வந்துழிப் புலந்தவர் சென்னியிற் பொறியா
திலம்ப டத்தவிர் விப்பதோ விளிமொழிப் பாவாய்.
89
1686
சொன்ன பல்வகை யுறுப்புடைத் தொழிலெலாந் துலங்கப்
பின்ன ரன்பரோ டாடுது மெனப்பெரி திருப்பிற்
கன்னி யித்தகு மிளமையுங் கழிதரா திருக்கும்
என்ன வெப்பெரு நூல்களு மியம்பிய திலையே.
90
1687 வாய்ந்த நுண்ணறி வுடையரே யாயினும் வளர்நூல்
ஆய்ந்த கல்விய ராயினு மறிவிலார் மடவார்
தேய்ந்த மெல்லிடை யாய்திகழ் கவினலம் வாடச்
சாய்ந்து வேறுறத் தவம்விளைக் கின்றனை யதனால்.
91
1688 வனப்பி ழக்கினு மிழக்குக வவாவினை யுரைத்தால்
தனைக்கொ டுப்பலென் றாய்மட வாய்நினைத் தழுவ
நினைத்த டுத்தன னீயஃது இசைந்திலை யாயின்
மனத்து வாய்மையி னிழந்தனை மாதவம் விளைத்தென்.
92
1689 உருக ணத்துநின் கண்ணரு ளுதவுறா தொழியின்
மறுக ணத்தினிவ் வடிவெமக் குதவுறா மாயுந்
தெறுகொ லைப்பழி தேமொழி சிவணுநிற் சிவணிற்
பெறுத வபபய னளித்திடுந் தேவரார் பேசாய்.
93
1690 வேற்று நீடுரு வெடுத்துறும் விண்ணவர் பெருமான்
சாற்றும் வாய்மொழி கேட்டருட் டையல்பூ சுரனிப்
போற்று மாக்கைய னாகியும் புணர்ந்தகா மத்தான்
ஆற்றி லானென வசித்தெதி ரறைகுவ ளானாள்.
94
1691 வேறு
நரைத்துமெய் நடுக்குற நண்ணும் வேதியா
உரைத்தமை நன்றுநன் ரொருத்தி கானகம்
புரைத்தகன் னிகையெனப் புந்தி கோடிகொல்
தரைத்தலைத் தவத்தையார் தாழ்த்து நீர்மையார்.
95
1692 இளமையு மிறக்குங்கொ லெடுத்த மாதவந்
தளர்வற முற்றுமேற் சார்ந்த மாணிக்கன்
றளவுசெ யெண்ணிரண் டாண்டெஞ் ஞான்றுமே
வளர்தர வளித்தவன் வரத்தைத் தேர்கிலாய்.
96
1693 ஆக்கையும் வாக்குமென் னகமும் வார்நுதல்
நோக்கினார் தமக்கென நுதலி வைத்தனன்
தீக்கெதி ரவர்மணஞ் செய்வ தில்லையேற்
போக்குவல் பொழுதெலாந் தவங்கள் போற்றியே.
97
1694 எடுத்தவிப் பவத்திடை யெம்பி ரான்மண
மடுத்தில தாயினு மந்த ணாளகேள்
தொடுத்தவித் தவத்தின்மேற் றோற்றத் தாயினும்
விடுத்திட லருங்கடி மேவத் தக்கதே.
98
1695 சிலபக லாயினுந் தவஞ்செய் யாதுறு
பலபகற் சிறியவர் பால ராவதிற்
பலபக லாயினும் பரிந்து நோன்பினாற் 
சிலபகன் மேலவர்ச் சேர்ச்சி செம்மற்றே.
99
1696 இளமையி னழகினி னெதிரில் செல்வத்து
வளமையின் மிக்கவா னவரு நஞ்சமார்
களனடி கருதுமென் காமர் வீழ்கலார்
விளரறி வினையெனை வீழ்தி வேதியா.
100
1697 ஈசனார் காதலி யென்றும் வேதியா
ஆசையை வெறுத்திலை யதிக பாதகம்
பேசிய நூல்வழி சிறிதும்பேணிலை
மாசுசெ யுடலென மடமு மூத்தனை.
101
1698 காதன்மிக் கடுத்துழிக் கற்ற கல்வியின்
ஆதரு பயனுமங் கடுப்ப தில்லென
மூதறி வுடையவர் மொழிந்த சொற்பயன்
வேதிய நின்னிடை விளங்கக் கண்டனன்.
102
1699 இத்தினத் தெந்தநா ழிகையின் மாயுமோ
அத்தகு நின்னுயி ரார்வ வேலையின்
மொத்துண விடுப்பதோ முதல்வன் றாளிணை
பொத்துற விடுப்பது போக்கிப் பூசுரா.
103
1700 ஆடிய கூத்தர்பா லமைத்த காதலர்
பீடிய றவத்தினைப் பேதித் தல்லதை
நாடிய தீயர்பா னாட்டும் வாய்மையுங்
கோடிய தீமையே குறிக்கின் விப்பிரா.
104
1701 பிறர்மனை யார்தவம் பேணி னாருழை
முறுகிய காதலின் மோகித் தார்தமை
இறுதிசெய் திடிற்பய னென்னை நின்னுயிர்
அறுதியுற் றாலதி னாவ தென்கொலாம்.
105
1702 பாங்கியர் திருப்பள்ளித் தாம மாதியில்
நீங்கினர் வருகுவர் நிற்றி யேலிவண்
தாங்கருந் தண்டங்கள் சமைப்பர் பைப்பய
வாங்குநின் னிருக்கையை யடுப்பச் செல்கென்றான்.
106
1703 பிணிமலர்க் கருங்குழற் பெரிய பூண்முலைப்
பணிமொழிப் பார்ப்பதி பகர்தல் கேட்டொளிர்
மணிநிற வண்ணனும் வணங்கும் விப்பிரன்
துணிவொடு மவளெதிர் சொல்லல் சொல்லினான்.
107
1704 வேறு
மழலையந் தீஞ்சொ னங்காய் வட்வினை நோக்கி யந்தோ
கிழவனென் றெம்மை யெண்ணிக் கீழ்மைசெய் தெள்ளி நின்றாய்
பழகிய காமந் துய்ப்பப் படர்ந்துநீ யிசைந்தா யாகில்
அழகிய காளை யாவ லஃதுநீ பின்பு காண்டி.
108
1705 நிற்றொழு மேவன் மாதர் நீங்கினார் வந்து சால
முற்றின ரடர்க்கத் தக்க மூப்பினை யுடையே மாகில்
பற்றிய மனமே கொண்டு படர்குவ மல்லேங் கண்டாய்
செற்றிய மலர்மென் கூந்தற் றேமொழிப் பாவை நல்லாய்.
109
1706 தேவர்கள் குழாம னைத்துந் திரளினுஞ் சீற்றத் துப்பிற்
காவலர் குழுக்கண் முற்றுங் கஞலினுங் கண்ணின் றெம்மைப்
போவது புரிய வல்லார் பூவைநின் வதுவைக் கோல
மாவது புரிந்திங் கல்லா லகல்கில மடியொன் றானும்.
110
1707 தகவறு பயிக்கம் புக்குத் தளர்ந்தழுந் தொழிலை யந்தோ
புகலுருத் திரப்பேர் பெற்றுப் புகழ்வெவ்வே றுருவு தாங்கிப்
பகுபெரு வாய பூதம் பலபரி சனமாக் கொண்டு
நகுதலை யிறகு கங்கை நகைமதி கபால மங்கி.
111
1708 பன்னக மென்பு கோடு பரசத ளோடு தாங்கிப்
பொன்னுருச் சாம்பல் பூசிப் பொருவிடை யூர்ந்து நஞ்சுண்
டுன்னருங் கனலி னாடு முழைமழுக் கரக்கங் காளி
என்னினு மழக னேயோ வென்னவற் காசை கொண்டாய்.
112
1709 என்றுவேற் றுருவாய் வந்த விறையவ ரிழித்துக் கூறுந்
துன்றிய பொருள்கட் கெல்லாந் துகளில்கா ரணங்கள் காட்ட
நன்றுற வலித்தா ளென்ப நகுகதிர் முத்த மூரன்
மன்றலங் கூந்தல் வேய்த்தோள் வளரிளங் கொங்கை மாது. 3
113
1710 வேறு
நரைத்த வெண்டலை வேதிய நல்லவர் போல
விரைத்த வெண்பொடி சாதன மணிந்தனை விமலர்க்
குரைத்தி மாசுரை யப்பொரு ளுற்றகா ரணங்கள்
தெரித்துங் கேளெனச் செப்புவாள் சினமொழி வாயாள்.
114
1711 கரும மாற்றுநர்க் கதன்பயன் கலந்துநின் றளிக்கும்
பொருவில் காரணன் போற்றுறுங் கருமமே பயனை
அருளு மாலெனு முனிவரை யாளுதற் பொருட்டு
மருவு தாருக வனத்திடைப் பயிக்கம்புக் கனனால்.
115
1712 பகர்ந்த தன்றியே வயிரவன் கூற்றினும் பயிக்கம்
புகுந்து ளானது தன்னையும் பூசுர கேண்மோ
முகுந்த னான்முக னிருவரு முன்னொரு நாளில்
திகழ்ந்த மேருவி னொருமருங் கிருந்தனர் சிறப்ப.
116
1713 ஆய காலையி னமர்ரு முனிவரு மடுத்து
மாயை காரண மாகிய வையகந் தனக்குத்
தூய னாகிய தனிமுத லியார் சொல்லு வீரென்
றேயு மாறெலா மிறைஞ்சினர் தொழுதெதிர் நின்றார்.
117
1714 செருக்கு மீக்கொளுந் திசைமுகன் பிரமம்யா னென்றான்
தருக்கி மாயவன் யானலா லிலையெனத் தடுத்தான்
ஒருக்கு றாமனத் தின்னணங் கலாய்த்துழி யுலக
முருக்கு நாயகன் முன்னெழுந் தருளினா னன்றே.
118
1715 இரியல் போயின னாரண னிருந்தய னிகழ்ந்தான்
திரியு மூவெயில் சிந்திய சேவகன் வெகுண்டான்
உரிய காரியங் குதித்திகழ் வுரைத்திடு மைந்தாம்
பெரிய நீண்முடி நகத்தினாற் கொய்துகை பிடித்தான்.
119
1716 முனிவர் வானவர் தருக்கெலா முடித்தருள் கொடுப்ப
நனியு லாயுதி ரப்பலி நனந்தலைக் கபாலத்
தினிது வாங்கின னிவைபலிக் குழந்தவா கபாலம்
பனவ வேற்றதும் பகர்ந்திடப் பட்டதா லீங்கே.
120
1717 உருவெ னப்படும் பாவநீள் கடலினின் றுயிரைத்
திரமெனப்படு மருட்கரை சேர்த்தலின் மறையோய்
பரனெ னப்படு வாற்குருத் திரப்பெயர் பயிலும்
அரனெ னப்படு மவன்வடி வத்தரும் பெறுவார்.
121
1718 மருத்து நண்பின னழுதனன் மற்றவற் கதனால்
உருத்தி ரப்பெய ருற்றதவ் வொலியழற் கல்லால்
திருத்து மப்பெயர் பிறருழைச் செல்வதொன் றன்று
கருத்த ழிந்தவ னழுததுங் கட்டுரைத் திடுவாம்.
122
1710 தேவர் தெவ்வவு ணரைத்தெறச் செல்லுழி யொருநாட்
பாவ கன்புடைப் பொருளெலாம் பதித்துப்பின் மீண்டு
மேவி நல்கென விசைந்திலான் வெய்தவ ரலைப்ப
வாவ மற்றவ னழுதன னருமறைக் கிழவோய்.
123
1720
வேறு வேறுரு வெடுத்தன னென்றிவிப் பிரகேள்
கூறு மாருயிர்க் கறிவினைக் கொளுத்துவா னவற்றின்
ஏறு பாகபே தங்களுக் கியையவெவ் வேறு
நீறு பூசிய நிருமலன் றிருவுரு வெடுத்தான்.
124
1721 விளங்கு தாருக வனத்திடைப் பலிக்கென மேவித்
துளங்கு நூலிடை மாதரார் தொன்னிறை யழிப்பக்
களங்கு லாவிய கண்டரைக் காதுது மெனத்தீ
துளங்கு லாவிய முனிவர ரொலிதழல் வலர்த்து.
125
1722 வேங்கை மான்மழு வியாளம்வெண் டலைதுடி செந்தீ
தாங்கு நீள்வலி முயலகன் றமைவிடு மந்நாள்
ஓங்கு பாரிடத் திரளையு முகைத்தன ரவற்றை
நீங்கு றாதபல் பரிசன மாக்கின னிமலன்.
126
1723 உடுத்த தோறலை மன்மழு வுரகந்தீ யிவையும்
எடுத்து வேதிய கூறிடப் பட்டன வீங்கு
நடித்து மான்முத லோர்க்கரு ணனிவழங் கிறைவன்
முடித்து ளானிற கென்றனை யதுமொழிந் திடக்கேள்.
127
1724 அண்டம் யாவையு மகட்டிடத் தொடங்கிய வாற்றன்
மண்டு மோர்பகா சுரனுயிர் மாட்டிவா ரிறகு
கொண்டு வேணியிற் செருகினன் குறையறு வலியோர்
கண்டு தீயன கருதுறா தடங்குதற் பொருட்டே.
128
1725 எருக்கு வேய்ந்தவ னிரும்புன லேற்றது கேளாய்
ஒருக்கு மாமனப் பகீரதற் குதவிய ஞான்று
தருக்கி னானில மழிதரச் சார்வது நோக்கி
மருக்கொள் வேணியி னொருமயிர் நுதியிடை மடுத்தான்.
129
1726 தாரை மாதர்மூ வொன்பதின் மரையுந்தந் திவர்பால்
வார நீவலை யென்றமை மறுத்துரோ கிணிபாற்
சார நோக்கியத் தக்கனா ரிடும்பெருஞ் சாபந்
தீர வேத்தலிற் றிங்களை முடித்தனன் செம்மல்.
130
1727 ஊழி வந்துழி யும்பரை நுதற்கணி னெரித்துப்
பாழி யென்புவெண் டலைபொடி பராபரன் றனது
வாழி நித்தியத் தியல்புமற் றவரநித் தியமுங்
கேழில் வையகந் தெரிந்துய்யக் கிளர்ந்துரு வணிந்தான்.
131
1728 அரியை வேதனை யொருமுறை யழற்றியென் பாதி
உரிய மேனியி னணிந்திடு மொருமுறை கரத்தின்
மரிய சூலத்தி னொருமுறை மடுத்துழி யவர்தங்
கரிய வார்சிகை மருமத்துக் காமர்நூ லாக்கும்.
132
1729 மாய னாதியர் தமையெரி வாயிடை மடுத்த
தூய தீவனத் தானந்த மீக்கொளத் தொண்டின்
மேய சாரதர் சூழ்தர விளிந்தவர்க் குறுதி
ஏயு மாறினி தாடின னிறையிலா விறையோன்.
133
1730 என்பு வெண்டலை மாலைநீ றணிந்தது மிருவர்
வன்பு மல்குட லணிந்தகங் காளியா மரபுந்
துன்ப மிக்குயிர்த் தொகைக்கறச் சுடலையா டியது
மன்பி லந்தண வறிந்தனை யேமற்று மறிமோ.
134
1731 இரணி யாக்கனை யிறுத்திடு மாயனாம் வராக
முரணி னீளுல கலைத்தலின் மோலிவா னவர்கள்
அரண நீயென வடர்த்தொரு கோட்டினை வாங்கிச்
சரண மேத்துற விடுத்துரத் தணிந்தனன் றலைவன்.
135
1732 வேத னார்வரம் பெறுகயா சுரன்விய னுலக
மோதி வாரணா சியுந்தப முன்னியங் கெதிர்ந்த
நாத னார்தமை விழுங்கின னாதர்கீண் டதனைச்
சோதி மேனியிற் போர்வையாக் கினர்சுரர் போற்ற.
136
1733 மண்டு போரிர ணியனுயிர் குடித்தமான் மடங்கல்
அண்டர் யாரையு மலைத்தலி னதனுயிர் குடித்துத்
துண்டமாகிய சிரஞ்சிரத் தணிந்துரி சுடுநஞ்
சுண்ட நாயக னாக்கின னுத்தரா சங்கம்.
137
1734 காரி கூற்றினுங் கண்ணுத லுலகெலா மளந்த
வேரி தூங்குபைந் துளவனார் வெரினெலும் பெடுத்துச்
சோரி தூங்குகைத் தண்டமாச் சுடர்தர வணிந்து
வாரி நீளுரி யாக்கினன் மணியுருக் கவயம்.
138
1735 கடலின் வானமிழ் தெடுத்தநாட் கச்சப வுருவாய்
உடலு மாயனை யுலகெலாம் வியப்புற வொறுத்துப்
படலை யோட்டினைப் பராபரன் பைத்தவா ளரவத்
தொடலை மார்பிடை யணிந்தனன் சுடர்ந்தபூ ணாக.
139
1736 உலகம் யாவையு மொடுங்குழி யிறப்பினுக் கஞ்சி
அலகி லாவறக் கடவுளா னேறென வடுப்பச்
சுலவு சோமுகா சுரனுயிர் தொலைத்தமீன் றருக்க
விலகு வாள்விழி சூன்றவ னேறியூர்ந் தனனால்.
140
1737 அடங்க லார்புர மழித்தஞான் றாழித்தேர் முரிய
மடங்கு றாவிறன் மாயனு மேறென வணங்கத்
தொடங்கு பூசையி னொருமலர் சோர்தர விழிகொண்
டிடங்கொணேமிமுன் னளித்தவ னிவர்ந்தனன் மறையோய்.
141
1738 தரங்க வார்கட லமிழ்துணச் சார்ந்துமுன் கடைந்த
வரங்கொ டேவர்கள் விடமெழ வல்விரைந் தோடி
இரங்கு நாதவென் றிரத்தலு மினிதுகண் ணோடிப்
புரங்கொல் சேவகன் பொருக்கென வதனைவாய் மடுத்தான்.
142
1739 வேறு
நின்றுபல் லுயிர்க்கு மின்ப நிகழ்த்துதற் கிறைவன் கொண்ட
துன்றுபல் பொருள்க டம்மாற் சுந்தர னலனோ வென்ன
நன்றுமை யுரைத்த லோடு நரைதிரை மூப்பு மாறி
வென்றிவெள்விடையி னின்றார் விரிபொரு ளனைத்து நின்றார்.
143
1740 அச்சமும் வியப்புந் தோன்ற வசலமீன் றெடுத்த நங்கை
நச்சிய வுளத்தி னோடு நான்மலர்ப் பாதம் போற்றிக்
கச்சிள முலையிற் கண்கள் கதுவுறச் சென்னி கோட்டிப்
பச்சிளங் கொடியி னொல்கிப் பண்பொடு மெதிரே நின்றாள்.
144
1741 வானவர் மலர்பூ மாரி பொழிந்தனர் வணங்கி நின்ற
தேனலர் கோதை யாளைச் சேவுகைத் தருகு சென்று
கானமர் கூந்த னல்லாய் கலங்கலை யென்று கையால்
ஏனவெண் கொம்பு பூண்டா ரெழீஇயுட றைவந் திட்டார்.
145
1742 முருகுயிர் கமலம் வென்ற முழுமதி முகத்தி னாடன்
ஒருகரங் கரத்தாற் பற்றி யுவளக மருங்கு போதந்
திருவியங் கவளை வைய மிணையடி யிறைஞ்ச நின்றார்
பொருவறு போதி நீழற் பூரணப் பொருளா யுள்ளார்.
146
1743 வரையினுக் கரைய னீன்ற மாதுமை தவங்க ளாற்றி
விரையநா யகனைப் பெற்ற விழுத்தகு காதை சொற்றாம்
புரையிலீ ரனையாண் மன்றல் புகலுதுங் கேண்மி னென்னத்
தரைவளம் பெருகச் சூத மாதவன் சாற்ற லுற்றான்.
147

கெளரி தவம்புரி படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் – 1743
-----------


29. கெளரி திருமணப்படலம் (1744-1859)

1744 சுணங்கு பூத்த துணைமுலைப் பார்ப்பதி
அணங்குக் கார்வ மளித்தருள் வள்ளலார்
கணங்கொண் டாருங் களிப்பொடுங் காணிய
மணஞ்செய் காதல்வைத் தார்திரு வுள்ளமே
1
1745 ஆர ணங்க ளளந்தறி யாதவர்
ஏர ணிந்த விசைமணி யாழெழூஉ
நார தப்பெயர் மாதவ னண்ணுமா
சீர ணிந்த திருவுளஞ் செய்தனர்.
2
1746 கட்டு வார்சடை யுங்கமழ் பூதியும்
இட்ட வக்க வடமு மிலங்குறச்
சட்ட நாரத மாமுனி சார்ந்தெதிர்
முட்டி லாவழி பாடுமு டித்தனன்.
3
1747 நகுமு கத்தின ராயரு ணாதனார்
மகதி வீணையி னாய்மண நந்தமக்
ககில லோகத்தி னாருமிங் கண்முரப்
பகர்தி போதி யெனப்பணித் தாரரோ
4
1748 தொழுத்தை யேனுய்ந் துளேனெனத் தொன்முனி
வழுத்தி யேகினன் மற்றெம் வதுவைக்கு
முழுத்த நாமே முழுக்கவின் செய்துமென்
றழுத்தி னார்திரு வுள்ளத்தி னண்ணலார்.
5
1749 புதுவ தாக நகர்கவின் பூப்பவும்
வதுவை மண்டப மாதி வயங்கவும்
விதுவ ணிந்தவர் வீழ்ந்தனர் வீழ்தலும்
எதிரி லாதவை யெண்ணியாங் கெய்தின.
6
1750 வேறு
உருத்திரர் பலரு முவகையின் வதிய வுயர்சிவ லோகமுஞ் சமழ்ப்பத்
திருத்தக விளங்கிற் ரொருபுற மொருபாற் றிருமறு மார்பனு மயனுங்
கருத்தமர்ந் திருப்ப வைகுந்த வுலகுங் காமரு சத்திய வுலகும்
வருத்துவ திதுவென் றுள்ளுடைந் தழிய வயங்கிய தாதிமா நகரம்.
7
1751 இந்திர னங்கி யியமனே நிருதி யீர்ம்புனற் கடவுள்காற் றிறைவன்
நந்திய நிதிக்கோ னலங்கொளீஇ சான னென்றிவர் நண்ணினர் வதியச்
சுந்தர விருக்கை கிழக்கினைத் தொடங்கிச் சொல்லிய வடகிழக் கீறா
அந்தரத் தவர்க ளிருக்கைக ணாண வமைந்ததா லாதிமா நகரம்.
8
1752 ஏனைய வுலகின் விண்ணவ ராதி யெனையவரு மிருந்தனர் மகிழ
ஏனைய வுலக மனைத்துமுட் கோட்டத் தினையவெவ் வேறிருக் கைகளாய்ப்
பானலொண் குவளை பங்கய மாம்பல் பலமலர் பொய்கையுட் டழுவித்
தேனகு மலர்ப்பூஞ் சோலையும் பிறவுஞ் செறிந்ததா லாதிமா நகரம்.
9
1753 நனையவிழ் தருவோ ரைந்துமற் றிரண்டு நிதிகளு நளிர்ச்சிந்தா மணியும்
புனைபுகழ்க் காம தேனுவும் வரங்கள் புக்குநின் றேற்பவே றாக
அனைவரும் வியப்ப வைந்தரு வாதி யொரோவொரு பொருளள விலவாய்
மனைதொறும் வதிந்து வேட்டவேட் டாங்கு வழங்குவ தாதிமா நகரம்.
10
1754 அன்றெழு கங்கை யனைத்துமீப் போர்ப்ப வகல்கென விலக்குவ போன்று
நின்றெழு கொடிக ணுடங்கின நுடங்கு நெடிங்கொடிக் காற்றில தாகி
ஒன்றுமக் கங்கை வீற்றுவீற் றாகி யொர்மண விழைவினின் றாங்குத்
துன்றிய தரளக் கோவைக டூக்குந் தோரண நிரைதுவன் றினவால்.
11
1755 புழுதிமிக் கவிய விரைப்பனி நீரும் புழுகுஞ்செங் குங்குமச் சேறும்
விழுதுசெய் கலவைச் சாந்தொமோ ராங்கு வெற்றிட மறவெங்கு மெத்திப்
பழுதறு செம்பொற் சுண்ணமு மலரிற் பம்பிய நறும்பசுந் தாது
முழுதுமுள் ளீரந் துவரமே லட்டி மூதெழில் வாய்ந்தன வீதி.
12
1756 கழிவலம் படைத்த வெமக்குமே லாகக் கடந்தபொன் னுலகுவாழ்ந் திருக்கை
அழகிய தாமென் றெழுந்துவிண் முழுது மடாதமைந் திருப்பவீ திகளின்
விழிகளை மறைத்து நின்றன போல விரைநடைக் காவண மோங்கி
ஒழுகின நிரைநீர்க் கும்பமும் புகையு மொளியுமற் றனைத்துமுட் டழுவி.
13
1757 தமனியப்பொடியு நறுவிரைத் தாதுஞ் சாந்தமு நிறைபுனற் றசும்பும்
நிமிர்பொரிக் கலனும் பாலிகைத் திரளு நீளொளி விளக்கமும் புகையும்
உமிழ்சுவைக் கனியும் பாகடை பிறவு மோங்குகா வணத்துள்வே திகையின்
அமர்வன நெடுமால் வயிற்றடக் கியஞான் றகிலமு மடங்கின போன்றே.
14
1758 உலகெலாந் தன்னை யன்றிவே றிலையென் றுறழ்தரக் காட்டுமா மாயை
நிலையினுட் புகுந்து பார்க்குநர்க் காங்கு நெடும்பயன் கிடைக்குமா போல
அலர்பொழிற் பரப்புட் புகுநருக் கெல்லா மளவிலா வரும்பெரும் போக
மலர்தரு தடமும் புளினமே டையுஞ்செய் வரைகளும் பிறவுமல் கினவே.
15
1759 இழுக்குவ புழுகுஞ் சந்தனச் சேறு மெரிமணிச் சிவிறியின் வாங்கி
ஒழுக்கிய பனிநீர் விரவுகுங் குமமு மூட்டின ருகுத்தவஞ் சனமுங்
குழுக்கொடு பதங்க ளிடறுவ மணிச்செய் கோவைகள் சிதர்ந்தவுங் கலனுஞ்
செழுக்கடி மலரின் றொங்கலு மல்லாற் சேதக முலமுமாங் கிலையே.
16
1760 மணிகளுந் துகிலும் வசமென் றொடையும் வாழையுங் கமுகும்வார் கொடியும்
அணிநிலை நெடுந்தேர் நிரைநிரை யாக வகன்மனை வாயில்க தோறுந்
துணிகதி ரெறிப்ப நின்றன விண்ணுந் தொழுதெழ வாவயின் வதியும்
பிணிமலர்க் கூந்தன் மாதரா ரல்குற் பெற்றிகற் றிடவடுத் தனபோல்.
17
1761 சந்தனச் செச்சை யெறிவன பனிநீர் தடங்கையிர் றூவுவ மேலாற்
கொந்தொளிச் சுண்ணம் வீசுவ மணியின் கோவைசுற் றழுத்துசாந் தாற்றி
பந்தியி னேந்தி யசைப்பன கவரி பாங்குற விரட்டுவ கவிகை
அந்தில்வந் தனைவோர் தமக்குறக் கவிப்ப வனைத்தும்பா வைகளிடந் தோறும்.
18
1762 குணிலெடுத் தொருவ ரெறிதரா தியல்பிற் குளிறுவ முரசங்க ளெங்கும்
பிணிநரம் புலரா திசையெழீஇ யின்பம் பெருக்குநல் யாழின மெங்கும்
அணிகயி றசையா தவிர்மணிப் பாவை யாடல்செ யரங்குக ளெங்குந்
துணியுமைம் பொறியும் புலனுக ராது சுவையெழக் களிப்பன வெங்கும்.
19
1763 குழைகளும் பூணும் பருமமுந் துகிலுங் கோதையுந் தொடிகளு மற்றை
இழைகளு மணிய வெடுத்திகு ளையர்பா லெய்திய மாதரார்க் காங்குப்
பழையன வணிமெய்க் கரந்திடப் புதிய படரொளி யணிகண்மெய் யினவாய்த்
தழையழ கெறிப்ப நோக்கினர் மகிழ்ந்து தமதணி யெறிவதெவ் விடனும்.
20
1764 பயிக்கமுற் றுழல்வோர் வறுமையிற் கவல்வோர் பருவரற் பிணியினுற் றழிவோர்
வயக்கமி லுருவோர் மகவிளம் பருவ மன்னினர் மூப்பின ரெல்லாந்
தயக்கமுற் றமைந்த தருணராய் வெறுக்கை தழைத்தவ ராய்ப்பிணி யிலராய்
நயக்குமுத் தியினர் போலவோ ரியல்பு நண்ணின ரிடந்தொறு மாதோ.
21
1765 வேறு
இன்னன வெழினக ரீண்டு மாக்கவின்
முன்னவன் போலிவை மொழிக்க டங்குறா
மன்னிய வதுவைசெய் மண்ட பத்தெழில்
தன்னமிங் கெடுத்தியாஞ் சாற்றற் பாலதே.
22
1766 பரவுமுக் குணமும்பான் மையினின் றாலென
மரகத மடித்தலம் வயங்கச் சேயொளி
அரதன மிடையுற வவற்றின் மேக்குவச்
சிரமொளிர் குறடுபஃ றிசையும் வென்றாதே.
23
1767 பாயதண் பாற்கடற் பரப்பி னின்றிடு
மாயவ ரெண்ணில ரென்ன வச்சிரத்
தூயவண் டலமெலா நீலத் தூணங்கண்
மீயுயர் விசும்பினூ டெழுந்து நின்றவே.
24
1768 தேவர்க ளொடுமகத் தீட்டுஞ் சீர்த்தியை
ஆவதென் றாழியான் கவர்ந்து சென்னிமேன்
மேவவைத் ததுபொரூஉம் விளங்கு தூண்டலைப்
பாவிய பளிக்குப்போ திகையின் வண்ணமே.
25
1769 கீர்த்தியைக் கவர்ந்தரி கெழும நிற்றலும்
ஆர்த்தபல் லமரரு மமர்ப்பச் சூழ்ந்தென
வார்த்தபித் திகைதொறும் வயங்கு சித்திரம்
பார்த்தக ணிமைப்புறாப் பண்பிற் றோன்றுமே.
26
1770 நந்தமை நாடொறு மிருக்கை யாக்குவ
தெந்திவன் சிரமிதித் திருத்து நாமெனச்
சந்திரன் மான்முடித் தவிர்ந்த் தும்பொரூஉங்
கொந்தொளிப் பளிக்குப்போ திகையின் கொள்கையே.
27
1771 புவனமுண் டவன்றலை மிதித்த புன்மையின்
அவிர்மதிச் சிரமிதித் தலரி நின்றெனத்
தவளவொண் போதிகைத் தலையி னொன்றுறப்
பவளவா னுத்திரம் பயின்ற பல்லவும். 8
28
1772 செக்கர்வா னிறங்கெடத் திகழுங் கேதுவில்
உக்கசீ தளமதி யுண்ண வோருழித்
தொக்குவாய் வைத்தவத் தோற்ற மும்பொரூஉந்
தக்கசெம் மணியினுத் திரத்த யக்கமே.
29
1773 வெய்யவ னிளங்கதிர் வெயிற்பி ழம்புலாய்
ஐயென விசும்பெலா மலங்கிற் றாமென
மையற வொளிர்வயி டூரி யத்தினாம்
பையவிர் பலகிமீப் பரவி நின்றவே.
30
1774 உள்ளெழின் மேக்கிருந் துடல்வ ளைத்துறீஇத்
தள்ளரு மதுகையிற் காணுந் தன்மையிற்
கொள்ளவொண் கொடுங்கைகோ மேத கத்தின்மே
னள்ளின புட்பரா கத்தி னாசியே.
31
1775 வாளுமிழ் மண்டபக் குறட்டின் மாடெலாங்
கோளறு கொழும்பொனிற் குயின்ற வார்படி
மூளுற வொன்றன்மே லொன்று முற்றியங்
கியாளிக ணித்திலத் தருகி யைந்தவே.
32
1776 பச்சைமால் காஞ்சியிற் பவள வானிற
மெச்சுநற் றவத்தினான் மேவி நின்றெனப்
பொச்சமீ னீனிறம் பொலிந்த தூணெலாஞ்
செச்சையின் வாருறை சேர்க்கப் பட்டன.
33
1777 விண்ணெழுஞ் சூரியன் வெயில்க ரப்பமிக்
கொண்ணிற முகில்பல வுராய்ப்ப ரந்தென
வண்ணம்வெவ் வேறுவாய்ந் தொளிர்வி தானங்கள்
கண்ணொளி கவர்வதோர் காட்சி மிக்கவே. 4
34
1778 பொன்மழை நவமணி மழைதண் பூமழை
பன்னுமப் புயல்பஃ றாரை கான்றென
மின்னவ மணித்தொடை விளங்கு பொற்றொடை
என்னவும் விதானக்கீ ழலங்கி நான்றவே.
35
1779
ஊற்றுபஃ றாரைநின் றொளிர வீழ்ந்துமண்
தோற்றியெங் கணுமவை துவன்றி னாலென
மாற்றரும் பலநிறம் வயங்கு கம்பலம்
வேற்றிட மிலையென விரிந்த தெங்கணும்.
36
1780 உமையுருக் கவின்கவர்ந் தோட முன்னியாங்
கமையம்பார்ப் பனவென வறிந்தங் கார்த்தெனக்
கமுகுதண் கரும்புநீல் கதலி பாங்கெலாம்
இமையவர் வியப்புற யாக்கப் பட்டன.
37
1781 பூரணி யல்குலொப் பாகப் புற்றினூ
டாருவ காலென வராவி னங்களை
நேரற வீக்கிய நீர்மை யாமெனத்
தோரண மணிநிரை சுற்று மார்த்தன.
38
1782 பல்கனிக் கோவையும் பசும்பொற் றார்களும்
புல்கொளி மணிகளும் பூவின் றொங்கலும்
நல்கெழி லாடியும் பிறவு நான்றன
வல்கெழிற் கொடுங்கையி னவனி தைவர.
39
1783 சிவபுர வரைப்புமித் திவளு மண்டபக்
குவமைகொ லோவென வுற்றங் கின்மையின்
தவவெழு மகிழ்வினாற் றலைது ளக்கியாங்
கவிர்மணிக் கொடிபல நிவந்தங் காடுவ.
40
1784 மரகத வல்லியின் வயங்கு மாணுருப்
பரவொளி பெறத்தவம் பயிறல் போன்றன
அரதன விளக்கமு மான நெய்பொழி
விரைகமழ் விளக்கமும் விராயுண் ணின்றன.
41
1785 தம்பிரா னிருந்தரு டவிசு நள்ளுற
உம்பரார் விழையநன் றோங்கத் திங்களிற்
பம்புதா ரகையெனப் பாங்க ரெங்கணும்
எம்பிரா னருளினர்க் கிருக்கை வாய்ந்தவே.
42
1786 வயங்குபொற் குண்டமு மணிச்செய் வேதியுந்
தயங்கொளிக் கரகமொண் டசும்பு பாலிகை
அயங்கொளி யகலுமற் றனைத்து மாவயிற்
பயங்கொள ஞெமிர்ந்தன பதம்வைப் பின்றியே.
43
1787 கவரிகண் ணடிகுடை கால்செய் வட்டமும்
அவிர்கலப் பேழையு மமுதம் பல்வகை
தவமலி செப்புஞ்சாந் தமைத்த தட்டமும்
இவர்தரப் பாவைக ளிடந்தொ றேந்தின.
44
1788
வண்ணவொண் மணியொடு தகர்த்த மாசையஞ்
சுண்னமு நறுவிரைத் துகளும் வண்டுணக்
கண்ணகு மலரும்வெண் கடுகுஞ் சாலியுந்
தண்ணிய வறுகுமுட் டதைந்த வென்பவே.
45
1789 மண்டப மருங்கெலா மலர்ப்பொற் காவணம்
அண்டரும் வியத்தக வமைந்த மற்றயற்
புண்டரி கத்தடம் பொலிந்த வாங்கயற்
கொண்டன குளிர்பொழில் கோல மல்கவே.
46
1790 இறையவ னாக்கிய வெழில்கொண் மண்டப
நிறைவினை யாவரே நிகழ்த்து வாரினி
உறைபயில் வீணைகை யுறுவ ரன்புகுந்
தறையமற் றவரவ ரடுத்த தோதுவாம்.
47
1791 வேறு
ஏகியநா ரதமுனிவ னெம்பிரான் போதிவனத் திமைய மீன்ற
பாகியல்சொன் மரகதவல் லியைமணப்பத் திருவுள்ளம் பற்றி னாராற்
போகுகவங் கெவருமெனப் புகன்றுபுகன் றனன்மீண்டான் புகலக் கேட்டோர்
தேகமுறு பயன்படைத்தா மெனமகிழ்ச்சி தலைசிறப்பச் சேற லுற்றார்.
48
1792 பிரமனொரு சிரமரிந்த வயிரவர்பே ணியதக்கன் யாகத் தையர்
வரனழித்த வயவீர னரகரபுத் திரன்வளர்கூர் மாண்டர் கால
எரியடுத்த வுருத்திரருனு மாடகே சனுமெண்மர் மூவரென்னும்
உரன்மிகுத்த வுருத்திரரு முவப்பில்கணம் புடைசூழ வுவந்து சென்றார்.
49
1793 மருக்கிளர்தண் டுளவணிந்த மணிமார்பன் மலரவன்மா திரத்தோ ரெண்மர்
அருக்கருருத் திரர்வசுக்கண் மருத்துவரென் றறைதருமுப் பத்து மூவர்
உருக்கிளர்விஞ் சையர்கருடர் கந்தருவ ருரகர்முத லும்பர் யாருந்
தருக்கறுமா றாயிரத்தெண் மருமனைவி மாருடங்கு சாரச் சென்றார்.
50
1794 பரிசனமும் வரிசைகளு முடன்கொண்டு வரைபலவும் பாங்கர்ச் சூழ
உரியமனை மாதெனுமே னையுந்தானும் வரையரைய னுவந்து புக்கான்
திரைதவழேழ் கடல்கங்கை யாதிமணித் தீர்த்தமெலாந் திரண்டு சேர்ந்த
வரைசெய்பல காலங்கண் மாதிரமெண் கயம்பிறவு மருவிப் போந்த
51
1795 கடகரியும் வயப்பரியுங் கதிர்மணிக்கூ விரக்கொடிஞ்சிக் காமர் தேரு
மிடல்படைத்த தானைகளும் பரிசனமும் புடைநெருங்க வேந்தர் போந்தார்
அடல்படைத்த நெடுஞ்சூலத் தடிகளைப்போந் தவர்யாரு மண்மித் தாழ்ந்தார்
நடலையறுத் திடுங்கருணை நறைமிதப்ப வாய்மடுத்து நலமே தக்கார்.
52
1796 வேறு
உருத்திரர்முன் னாகவுறு மானுடர்பின் னாகத்
தருக்கொடுகு ழீஇயினர்க டம்முளுயர் வுற்றுத்
திருக்குலவி னார்களிரு சேவடிகள் சேப்ப
உருக்கிளர்மு டித்தலைக டீட்டினரு வந்தார்.
53
1797 வண்டொடு நறைத்தமலர் மாலைக டொடுப்பார்
பண்டிகழ வீசர்புகழ் பாடினர் களிப்பார்
கண்டுளி துளிப்பவுள நெக்கருள் கலப்பார்
புண்டர நுதற்குலவு தொண்டரிவ ரோர்சார்.
54
1798 ஐவகை நறும்புகைக ளாலய நிறைத்துச்
செய்வகைய தொண்டுக டிருத்தக வியற்றிக்
கைவகையி னஞ்சலிமுன் காட்டிமுடி கோட்டிப்
பொய்வகை கடிந்துவரு புண்ணியர்க ளோர்சார்.
55
1799 எந்தையடி யார்களினி தேபுகுக வீங்கு
மைந்தரொடு மங்கையர்கண் மற்றுமுற வாமோ
நுந்திரு வடித்துணைய லாலென நொடித்துச்
சிந்தைமகி ழப்பணிகள் செய்குநர்க ளோர்சார்.
56
1800 ஏதலற வன்பினிரு போதுமிசை மல்க
வேதநனி யோதியழல் வேட்டெளிதி னாங்குப்
போதுமிமை யார்க்கவிகள் பொற்பவினி தூட்டிக்
காதர மிரித்திடு கருத்தினர்க ளோர்சார்
57
1801 கன்னிமணி பொன்னறுவை கம்பலம் விழுப்பூண்
நன்னர்நில மோடிரத நாகநடை வாமான்
துன்னுசுரை யான்களிவை தோயமொடு நல்கி
முன்னவ னடிக்கணுள முற்றுநர்க ளோர்சார்.
58
1802 பூவிணர் நறும்பொழில் புகுந்துவள நோக்கி
ஆவண மனைத்தினு மமன்றபொரு ணோக்கிக்
காவண நிரந்தகடி வீதிபல நோக்கித்
தூவண வுளத்துவகை துள்ளுநர்க ளோர்சார்.
59
1803 வாவிகளி னோடைகளின் வார்நதியி னொண்மை
மேவுமத லைக்குலம் விடுத்தெதிர் கடாவிப்
பூவினொடு சாந்துபொலந் தார்முதல வீசி
ஆவியனை யாரொடு மமர்க்குநர்க ளோர்சார்.
60
1804 புறநக ரடுத்துமலர் போதுபல கொய்து
பறவைக ளெழுப்புமிசை பண்பொடு நுகர்ந்து
நறவினை வடித்தன நரப்பிசை யெழுப்பி
உறவினொடு மாடுமொளிர் மங்கையர்க ளோர்சார்.
61
1805 மும்மையுல கத்தவரு முந்தையறி யாத
செம்மைய புலன்கள்செறி யைம்பொறியி னார்ந்து
விம்மிதம் விளக்குமொரு வேறுலகி தென்னத்
தம்மையறி யாதன மகிழ்ச்சிக டழைத்தார்.
62
1806 வேறுமுள தோவிதனின் வீட்டினை யடைந்து
பேறுபெறு மின்பநல மென்றுபெரி தோர்ந்தோர்
கூறவரை வின்புதுமை கும்பிடவ ணைந்தோர்க்
கூறுசுவை யின்பெருமை யாவருரை செய்வார்.
63
1807 வரம்பினுற லின்றிவள ரின்பமலி வெய்த
வரம்புபடு தீவினை யனுக்கியனை வோரும்
பரம்பொருளை நோற்றவொரு பார்ப்பதியை மாண
நிரம்பவணி யக்கருதி நேர்தொழுது நின்றார்.
64
1808 நின்றமை யறிந்தவரி னீடணி யெமக்கிங்
கொன்றுவன வல்லவென வும்பர்தொழு பெம்மான்
தன்றுனைவி யோடுமெழில் சார்தர நினைந்தான்
மன்றலழ கெய்தியன மன்னிருவர் மாட்டும்.
65
1809 ஆரணனு நாரணனு மாய்ந்துமறி யாத
பூரணர்தம் மாதொடணி பொற்பளவி னில்லாச்
சீரணிவ தேனுமவர் சேவடிகள் போற்றித்
தாரணியி னேன்றவகை சாற்றுதல்செய் வாமால்.
66
1810 வேறு
மரகத வல்லி தன்னை வதுவைசெய் கோல நோக்கிப்
பரவுளப் பொறாமை பொங்கப் பாய்புனற் கங்கை மாது
விரசின ருளைய மண்மேன் மேவலுஞ் செய்யு மென்னாப்
புரவுற மறைத்தா லென்னப் பொலிந்தது மகுடஞ் சென்னி
67
1811 வெண்மதி யணிந்து காத்த வித்தகன் கருணை நோக்கி
மண்மதித் திறைஞ்ச வேனைக் கோள்களும் வழிபா டாற்றி
ஒண்மையி னுருவம் வெவ்வே றுற்றிவர்ந் துடங்கு வைகும்
வண்மையே நிகர்க்கு மொன்பான் மணிகளு மிமைக்கு மோலி.
68
1812 வழங்குபல் கோளு நாளு மாய்தொறு முலகி னுய்ப்ப
ஒழுங்கிய கோளு நாளு மொரோவொன்றற் கனந்த மாகச்
செழுங்கதி ரெறிப்பச் சேமஞ் செறித்துவைத் ததும்போன் றன்றே
தழங்கிசை மெளலி மாட்டுத் தயங்குபன் மணியி னீட்டம்.
69
1813 சேணுறக் கதிர்கால் வீசுஞ் செம்பொனின் மோலி சென்னி
மாணுறக் கவிப்ப தோர்ந்து வதுவைநற் கோலங் காண்பான்
வேணியின் மிளிர்ந்த திங்கள் வெய்தெனப் பெயர்ந்த தென்ன
நீணுதல் செய்த நெற்றி யொளிர்ந்தது நீற்றுக் கோலம்.
70
1814 பாற்கடற் பரப்பிற் செங்கேழ்ப் பரிதிவந் தெழுந்த தென்ன
நூற்கடற் புலவர் போற்று நுண்பொடி திமிர்ந்த நெற்றி
ஏற்குமொள் ளெரியி னோக்க மிடைமறைத் திட்ட தேபோன்
மேற்கிளர் கிரணப் பட்டம் விளங்கிய திருள்கால் சீத்து.
71
1815 மாரனைப் பொடித்த தீங்கு மறைவதே கரும மென்ன
வாரமுன் மறைக்கப்பட்ட வழல்விழி யடங்கா தாங்கு
நேருறப் பாங்கர்த் தோன்றி நிறைகுளி ருமிழ்வ தொக்குஞ்
சீரிய பட்டப் பாங்கர்த் திருத்திய திலக மாட்சி
72
1816 முரிதிரைக் கங்கை மாது முடிகொடு மறைப்பப் பொங்கி
உரிமையி னொழியேன் யானென் றொண்களம் வளைத்தா லொப்பத்
தரளவண் டெரியல் பம்புந் தடம்புயங் குழைக டோய்ந்த
உரவுமக் கங்கை வெள்ளத் துழக்குமொண் மகரம் போன்றே.
73
1817 தொள்ளையோர் குணமே யென்ன வடக்கியுந் தோற்றா நிற்கும்
தள்ளரு மதுகை சான்ற் தழல்விடந் தம்பி ரானார்க்
குள்ளுறப் படரா வண்ண முறுநடை யியக்கிற் றேபோல்
வள்ளொளி கஞற்றுங் கட்டு வடங்களஞ் சூழ்ந்த தன்றே.
74
1818 மனையவ ளென்னுஞ் செங்கண் மால்கிடந் துறங்கும் பள்ளி
இனைபசி மாணிக் கீத லாதியி னெழுந்த கீர்த்தி
அனையென வீன்ற திண்டோ ளகடுறத் தழுவி யாங்குப்
புனைநலம் வேரின் றாகப் பொலிந்தன மணிக்கே யூரம்.
75
1819 சிலைசிலையாகக் கோலித் தெவ்வரை முருக்குந் தேசு
நிலைபெற வீன்ற தாயை நீக்கறக் காட்டல் போன்று
மலிகதிர்ப் பதும ராக வலயமுன் கைக்கை ணின்ற
அலரிசெங் கமலஞ் சேர்ந்த வமைதியு நிகர்த்த மாதோ.
76
1820 பெருவிலைச் சிறிய வாழி பெருகொளி விரல்கண் மாட்டு
மருவின முன்பு மாய்ந்த மாயவ ராழி யென்கோ 
பொருவிலன் புஞற்றி மேலே புரப்பதற் கடுப்போர் வேண்ட
அருளிய வைத்த வென்கோ யாதென வறைவ தம்மா.
77
1821 களத்திடை யுருத்து நின்ற காளகூ டத்தின் வேகம்
உளத்திடைத் தழற்றா வண்ண முறுகுளி ருறுத்த தேய்ப்ப
வளச்செழுஞ் சாந்து கொட்டி மான்மதம் பனிநீர் வாக்கித்
திளைத்தெழு மணப்பூந் தாது செறித்துரம் விளங்கிற் றன்றே.
78
1822 காதலின் மரும மூட்டுங் கமழ்நறுங் கலவைச்சேறு
சீதளம் வறலா வண்ணஞ் செறியமேற் பொதிவித் தாங்குப்
போதுசெய் தொடையல் பூண்கள் பொழிகதிர் மணியின் கோதை
மாதர்கண் மணியின் கோவை மாசையந் தாரும் வார்ந்த.
79
1823 பிரணவப் பொருள்யான் சேர்ந்த பிஞ்ஞக னெவரு மல்லர்
கரியென தகத்துள் ளீடும் பிரணவங் காண்மி னென்ன
விரிபொழி லனைத்துந் தேற மெய்ம்மையின் விளக்குந் தெய்வத்
தெரியலங் கொன்றை சாலத் திகழ்ந்ததவ் வணியின் மேலால்.
80
1824 ஊர்தொறு மிரப்ப வுள்ளே யுருத்தெழு பசிவெந் தீயும்
வார்தரு குழன்மென் சாயன் மரகத வல்லி மன்றல்
ஆர்தரு விழைவிற் காண வையென வெளிக்கொண் டாங்குச்
சீர்தரு பதும ராக வுதரபந் தனஞ்சீர்த் தன்றே.
81
1825 எட்டுத்தோல் பிணித்த வாடை யெரிவிழி யுழுவை தந்த
கட்டுத்தோ லாடை மற்றுங் காணிகைக் கொண்ட வல்குற்
பட்டுச்சூழ்ந் தரவே யென்னப் பன்மணி யிமைக்கும் பொன்ஞாண்
இட்டுச்சூழ் கதிர்ப்பொன் னாடை யிறுக்கப்பட் டிலங்கிற் றாலோ.
82
1826 வலப்புறக் கணைக்கான் மீது வரிகழல் வில்லுக் கால
நலத்தகு விழிமேல் கொண்டு நாரணன் றனக்குத் தோற்றாப்
புலத்தரு செய்ய பாதம் பொன்னரிச் சிலம்பு தாங்கிக்
குலத்தரு மடியார் கண்கள் குழுமுவண் டெரியல் சூழ்ந்த.
83
1827 பிப்பில வனத்துள் வைகும் பிஞ்ஞகன் வதுவைக் கோலஞ்
செப்பினன் சிறிது செம்பொற் சிலம்புயிர் தெய்வக் கற்பின்
மைப்படி கரிய வாட்கண் மரகத வல்லி கொண்ட
ஒப்பனை சிறிது சொல்வே னுஞற்றுமுன் வினையை வெல்வேன்.
84
1828 வேறு
கருமுகில் விளர்ப்ப வென்றுமோ ரியல்பாய்க் காசறை யாவியு மளைந்து
மருமலர்க் குவளைத் தூவிதழ் மடுத்து வலம்புரி தெய்வவுத் தியும்வைத்
துருகெழு பகுவாய் மகரம்வா ணுதலிற் றாழ்தர வுறுத்துற முடித்த
பெருகெழின் முச்சி மணிவட நான்று பிணையல்செய் முல்லைசூழ்ந் ததுவே.
85
1829 கற்பினுக் குரிய முல்லையந் தெரியல் கமழ்தரக் காட்டுத லானுஞ்
சிற்பமிக் குடைய வலம்புரி யோடு திருவுருத் திகழ்ந்திட லானும்
பொற்புமிக் குடைய பூங்குழ னெடுமால் புல்லிய புறவமே போலும்
விற்பயில் பகுவாய் மகரமவ் வுருவாம் விண்டுவே போலுமால் விளங்கி.
86
1830 மதுகர மெறிந்து தாதளைந் துழக்கி மதுநுகர்ந் தின்னிசை முரலும்
புதுமலர்த் தளவத் தொங்கல்சூழ்ந் திருண்ட பூங்குழன் முச்சியின் றோற்றம்
பதுமம்வென் றலர்ந்த திருமுகத் திங்கள் பரந்ததன் கற்றைவெண் கதிராற்
கதுமெனப் பிடித்துக் கழுமயாத் திருக்குங் காரிருட் பிழம்புபோன் றதுவே.
87
1831 ஒழுகொளிக் கிரண வெண்ணிறப் பாச மோச்சியே தன்னெதிர் கரவா
தெழுமிகற் கருமென் கூந்தல்வல் லிருளை யிறுகுறப் பிணித்தலி னெழுந்த
முழுதுல கிறைஞ்சித் தொழும்பிர தாப மொய்யொளி யிரவியை வதன
விழுமிய திங்க ளணிந்தது போல விளக்கம்வாய்ந் ததுநுதற் றிலகம்.
88
1832 அடுக்கிதழ்க் கமலஞ் சூதமே யசோக மயினுதி முல்லைதண் ணீலம்
எடுக்குமைங் கணையுங் கழைநெடுந் தனிவி லெரிமணித் தொடிக்கையின் வாங்கி
விடுக்குமத் தொழிற்கங் கியைதர மகர மிளிர்கொடி யுயர்த்தது போல
ஒடுக்கிவல் லிருளை வெயிலுமிழ் மகர வொண்குழை யொளிர்ந்தன செவியில். 89
89
1833 புருவம்வார் சிலையென் றெண்ணினர் தமக்குப் பொருகணை யெனமிகக் கூர்த்தும்
அருள்பொழி வதன மலர்ந்தவம் புயமென் றகத்துற நினைந்தவர் தமக்குக்
கருநிறச் சுரும்ப ரெனநனி களித்துங் கலைமதி முகமென நினைவோர்க்
குருவளர் சகோர மெனத்தவ நீண்டு மொளிர்விழி திகழ்ந்ததஞ் சனமே. 90
90
1834 வெண்ணிறம் படைத்த புன்மையெண் மலரை வீழ்த்துநன் மணமுயி ராத
வெண்மையின் குமிழை யிழித்துவண் டணுகா விழிவுடைச் சண்பகங் கழித்த
ஒண்ணிறங் கமழு முயிர்ப்பிரு விழிவண் டொடும்பயி னாசிசேர் தரளந்
திண்ணிய முறுவன் மணியடி யிறைஞ்சச் செவ்விபார்த் திருத்தல்போன் றதுவே.
91
1835 சங்கமென் றுரைப்போர்க் கதற்றகு சான்று தரளமா லிகைபுடை வளைத்தும்
பைங்கமு கென்போர்க் கதற்றகு சான்று பரிமளப் புதுநறுங் கலவை
பொங்கிளங் கொங்கைத் துணைச்செழும் பாக்குப் பொருவிற னடித்தலந் தெரித்தும்
ஓங்கிய மிடற்றின் மணிவடம் பொன்ஞா ணுறுவிரை பலததைந் தனவே.
92
1836 கரும்பெனத் திரண்டு நுதல்விழிப் பெருமான் கருத்தினுங் காமமிக் கூறக்
கரும்பனை விளைக்கும் பெருந்திற னோக்கிக் கலைமதிக் கவிகையங் கடவுட்
கரும்படுத் திறைஞ்ச விருஞ்சமர் பயிற்றக் காதலிற் ரழுவிய தேய்ப்பக்
கரும்பினி தெழுது தோளினங் கதமுங் கதிர்மணி வடங்களும் பொலிந்த.
93
1837 அரிபரந் தகன்ற விழிமலர் நீல மவிரொளி முறுவலந் தளவம்
பெரியதண் வடிவின் முலைச்செழுங் கமல மாதிகள் பிறைமுடிச் சடிலத்
துரியவற் கேவ நிறுத்தவார் கழைவி லொத்தகைத் துணையினத் தனுவின்
வரிகுண மொருகாற் சூழ்ந்துவைத் தனைய வளைதொட ரனைத்துஞ் சீர்த்தனவே.
94
1838 பொன்னரி மாலை நவமணித் தொடலை பொழிமது நறுமலர்த் தெரியன்
மின்னுவிட் டெரிக்கு மிலைமுகப் பைம்பூண் வீற்றுவீற் றொழுகின வவைதாம்
நன்னறுங் களப நகிற்றுணைச் செப்பி னலத்தக வெடுத்துமேல் விரித்தால்
என்னமிக் கழகு விரிந்தொளி யசும்பி யெம்பிரான் மனமும்வாங் கினவே.
95
1839 கடிதடக் கடலின் வாங்குசை வலந்தண் கயறுகிர் தரளமும் பிறவும்
தொடலைமென் குழல்கண் ணிதழ்நகை பிறவுந் தோற்றவண் ணாந்தெழு கொங்கைத்
தடவரை மருங்கு வாங்கிய மடங்க றனைப்பொரு மிடுகிடை யிறுகப்
படரொளி கஞற்றும் பல்வகைக் காசின் சில்வடம் பான்மையிற் சூழ்ந்த.
96
1840 மருபன் மணிக்கும் பிறப்பிட மாந்தன் வண்மையைப் பருமத்தின் விளக்கும்
பெருகெழி லல்குல் வாரிதி யெழுந்த பேதுசெய் நஞ்சமே விழிய
வெருவர வஃதூர் நெறிமயி ரொழுக்கா வீங்குமத் தொழுகிய தோளா
உருவளர் கூர்ம மெனப்படும் புறந்தா ளொளிர்ந்தன நூபுரம் பிறவும்.
97
1841 வேறு
திருமக டனக்குநற் றிருவ ளித்திடும்
ஒருமகள் வனப்பினை யுரைக்க லாகுமே
இருமுது குரவர்தம் மெழிலு நோக்குபு
மருவின வுலகெலா மல்கு மின்பமே.
98
1842 ஈங்கிவ ரழகினுக் கிவர்க ணோக்குறுந்
தாங்கிய வாடியிற் சாயை யன்றியே
யாங்கணு முவமைவே றில்லை யென்றுவிண்
ஓங்கிய வமரர்க ளுவந்து தாழ்ந்தனர்.
99
1843 எழுந்தன மதுரமங் கலங்க ளெங்கணும்
எழுந்தன துவசங்க ளியம்பிற் றின்னியங்
கொழுந்தெழு கதிர்மணிக் குடைக வித்தன
செழுந்திருக் கவுரிக டிரண்டு துள்ளின.
200
1844 அவிர்மணி யழுத்திய வால வட்டமுந் 
தவளி யெழுப்புசாந் தாற்றி யீட்டமுங்
கவர்நிழற் றொங்கலுங் கதிர்த்த நித்திலத்
திவர்புதுப் பந்தரு மெழுந்தி யங்கின.
102
1845 அரம்பையர் நிரைநிரை யடுத்தங் காடினர்
வரம்பெறு கின்னரர் மகிழ்ந்து பாடினர்
நரம்பிசை யெழுப்பினர் நார தாதியர் 
பரம்பின பனிவிசும் பமரர் பூமழை.
102
1846 மாயவன் பாதுகை வணங்கி யிட்டனன்
தூயவன் திருவடி தொடக்கிப் பாங்கரின்
வேயன தோளினாண் மேவ மென்மலர்ப்
பாயின வாடைமேற் படர்தன் மேயினான்.
103
1847 விற்பொரு நுதலியர் மேனை தன்னொடுங்
கற்புய ருமைபுடை களித்துச் சென்றனர்
அற்பொடு மிமவரை யரைய னாதியோர்
தற்பர னுழையராத் ததைந்து சென்றனர்.
104
1848 தூயதன் னருள்கொடு தொல்லை நான்முகன்
பாயபல் பாலிகை பிறவு முன்னரே
ஆயுநன் முறையுளி யமைத்த மண்டபந் 
தாயினு மினியவன் சாரச் சென்றனன்.
105
1849 அரத்தக வடியின ரட்ட மங்கலங்
கரத்தினி தேந்தினர் கண்டு வாழ்த்தினார்
புரத்தெரி யூட்டிய புனித னோக்குபு
வரத்தினை யளித்துமண் டபத்து ளெய்தினான்.
106
1850 பானலங் கருவிழிப் பாவை தன்னொடுங்
வானம ராதனம் வயங்க வைகுபு
தேனகு தொங்கலந் தேவர் யாவரு
மானமர் தவிசுற வருளிச் செய்தனன். 7
107
1851 மங்கலத் துழனியு மதுர கீதமும்
பங்கய வதனியர் பணிசெ யூக்கமுந்
தங்கிய வமரக டதையு மண்டபத்
தெங்கணூ மாயின வின்ப மல்கவே.
108
1852 வேறு
அடுக்கலுக் கிறைவ னண்மி யவிரிழை சுமக்க லாற்றா
நடுக்குமெல் லிடையின் மேனை வணங்கின ணறும்பால் வாக்க
மடுக்குமெய் யன்பிற் செம்மன் மலரடி விளக்கி நீர்பெய்
திடுக்கணெவ் வுலகு நீங்க வீந்தனன் புதல்வி தன்னை.
109
1853 விண்ணவர் மலர்கள் சிந்த விடையவ னங்கை யேற்றுத்
தண்ணிய மலர்மே லண்ண றழன்முறை வளர்ப்பத் தாலி
புண்ணிய மலர்ந்தா லன்ன பூங்கொடி மிடற்றிற் சேர்த்து
மண்ணவருய்யச் செய்யு மரபெலா மியற்றி னானே.
110
1854 இளமதி முடித்த வேணி யெம்பிரான் றோழ னான
அளகையர் பெருமா னோடு மடுக்கலுக் கிறைவ னோகை
உளனுறச் சாந்த மாலை பாகடை பிறவு முற்ற
வளமையோ டியைய யார்க்கும் வழங்கினன் றழங்க மன்றம்.
111
1855 அளித்திடும் பரிசி லானு மணிந்தமெய்க் கோலத் தானுங்
களித்ததம் மனையின் மாதர் கண்ணுற்று நிற்ற லானுந்
தெளித்தெழு மன்றல் காணத் திரண்டவர் தாமு மந்நாள் 
தளித்தெழு மின்ப மன்றல் சார்ந்தவ ரொத்து ளாரால்.
112
1856 கடியயர் வரைப்பி னின்றுங் கண்ணுதல் வெளிக்கொண் டும்பர் 
முடியொடு முடிக டாக்க மூரிமால் விடையி னேறிப்
பிடிநடை யுமைதன் னோடும் பேரெழி னகர்சூழ் போந்து
கொடிபல நுடங்குஞ் செம்பொற் கோயில்புக் கணையி னுற்றான்.
113
1857 திருமண வாளக் கோலஞ் சென்றுசென் றிறைஞ்சப் பெற்றோர்க்
கருள்வளம் பழுப்பவ்ட்ட வரமெலா மளித்துப் போக்கிப்
பெருகிய மகிழ்ச்சி துள்ளப் பெய்வளை யோடு மங்கண்
மருவுமெவ் வுயிரும் வாழ வாழ்க்கைமேல் கொண்டி ருந்தான்.
114
1858 விதுவணி சடில மோலி வித்தகன் வெற்பின் மாதைப்
புதுவதி னியன்று சீர்த்த பொலங்கல மணிந்தெல் லோருங்
கதுவினர் போற்ற வாற்றுங் கடித்திறங் கேட்டோ ரீண்டை
வதுவைமிக் கயர்ந்து முத்தி மன்றலு மயர்வ ரீற்றின்.
115
1859 உரககங் கணங்கை பூண்ட வொருவரங் கினிது வேட்ட
மரகத வல்லி மன்றல் வழுத்தின முனிவிர் வைவேல்
விரகினன் றெய்வ யானை யென்னுமென் கொடியை வேட்ட 
பரகதி யருளு மன்றல் கேட்கெனப் பகருஞ் சூதன்.
116

 

கெளரி திருமணப்படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் 1859

--------------------------

Related Content

பேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்

பேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்

பேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்