logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

பேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்

கச்சியப்பமுனிவர் அருளிய

படலம் 30 - 36 (1860 -2220)

Perurp puranam


சீலத்திரு கச்சியப்ப முனிவர் அருளிய 
"பேரூர்ப் புராணம்" - பாகம்-4 (1860-2220)

30. தெய்வயானை திருமணப்படலம் 1860-1993
31. குசத்துவன் வரம்பெறுபடலம் 1994-2015
32. குலசேகரன் குட்டநோய் தீர்ந்தபடலம் 2016-2039
33. திரிலோகசோழன் செயிர்தீர்ந்தபடலம் 2040-2072
34. உபதேசப் படலம் 2073-2155
35. திருநீற்று மேட்டுப்படலம் 2156-2196
36. விசேட பூசைப்படலம் 2197-2220


சிவமயம்

30. தெய்வயானை திருமணப்படலம் (1860-1993)

1860 கமஞ்சூற் கொண்டல் வயிறுளைந்து கான்ற புதுநீ ரருவிகொளும்
இமஞ்சூழ் விலங்கற் றடஞ்சார லிமையோர்க் கிடுக்கண் டவப்புரியும்
நிமஞ்சூ ழொருவ னுயிர்குடிப்ப நினைந்து நரநா ராயணர்தாந்
தமஞ்சூழ் வகன்ற வுளத்தினொடுந் தவஞ்செய் தமராச் சிரமத்து.
1
1861 தரங்கக் கடலின் வரைநிறுவித் தறுக ணரவ மிடைச்சுற்றி
இரங்கக் கடைந்து சுதையெடுத்த வெறுழ்த்தோண் மாயன் மீளிமையும்
அரங்கப் பொருதா யிரத்திருநான் கண்ட மரசாண் டவற்செகுத்தோன்
கரங்கைப் பிடிப்ப வளர்கடவுள் யானை கருதித் தவம்புரிந்தாள்.
2
1862 வெண்டூ சுடுத்துப் பட்டொருவி வெண்ணீ றணிந்து விரைசாந்தம்
வண்டூ தலர்மென் மாலிகையு மாற்றி யொளிர்கண் மணிதழுவிக்
கொண்டூ தியமின் றெனமணியின் கோவை யகற்றித் தவம்புரிதல்
கண்டூங் கடுத்த வீணைமுனி கருத்துள் வணங்கி யிதுசொன்னான்.
3
1863 அயிரா வதக்கோன் வளர்த்தெடுத்த யயிரா ணியினுயிருக்
குயிராய் விளங்கு மணிவிளக்கே யுவண முயர்த்தோன் றிருமகளே
செயிரா னவைதீர்த் தருள்பேரூர்த் தேத்துத் தவங்கள் புரிகிற்பின்
வயிராங் கிசைப்ப மணம்விரைவின் வடிவே லவன்செய் திடுமென்றான்.
4
1864 நாக மணர்ந்த கருங்கோட்டு நல்யாழ் முனிவன் மொழிகேளா
மாக ரரையன் மகடெய்வ யானை மகிழ்ந்து விரைவினெழா
யூக முகள மலர்ச்சோலை யுகுதேன் விரவிக் குளிர்காஞ்சி
வேக நதியூ ராதிநகர் மேவிப் பணிந்து தவமுயன்றாள்.
5
1865 உள்ள முருகன் றிருமேனி யொற்றித் திடக்கண் முகிழிப்பத்
தெள்ளு மதிவாண் முகங்குவியத் திகழ்பொன் மாமை யுருச்சாம்பக்
கள்ளம் பயிலைம் பொறிகரப்பக் காய மணியோ வியத்தசையா
விள்ளற் கரிய பெருந்தவங்கள் விண்ணோர் யானை நிரப்புதலும்.
6
1866 வேறு
இடுகிடை மிடைந்தெழுசொ லோடிரும றுன்னப்
படுகிழவ னாகியயில் பாணிவளர் செம்மல்
நெடுவழி நடந்தவ னிகர்ப்பவெய ராடக்
கடுகிடு முயிர்ப்பினொடு கன்னியெதிர் நின்றான்.
7
1867 உயிர்ப்பவெழு தன்னுலவை யோதையுடல் காதின்
அயிர்ப்பவினி தேறவன மன்னநடை நங்கை
பயிற்சியுறும் யோகொடு படர்ந்தவுள மீட்டுக்
கயற்கண்மல ரக்கிழவ னின்றபடி கண்டாள்.
08
1868
கைதவ மளைந்தகரு மூப்புடைமை யானைச்
செய்தவ மடந்தையிரு செங்கையெதிர் கூப்பி
உய்தவ முஞற்றலுறு வேனையொரு நீதான்
வெய்தென வடுத்தமை விளம்பென வுரைத்தாள்.
09
1869 மருதவரை யேபெரிதும் வாழெமது வைப்பிங்
கொருவனடி போற்றவுறு கின்றன மிடைக்கட்
பொருவிறவ மாற்றுமொரு பூவைநினை நோக்கிப்
பெருகுவிழை வாலுரிமை பேணியரு குற்றாம்.
10
1870 யாதனை விழைந்ததஃ தோதுதல்செய் கென்றான்
வேதனரி காணரிய வித்தகவி சாகன்
மாதடிகள் சூரனுயிர் மாய்த்தவ னெனைத்தன்
காதலி யெனக்கொள விழைந்ததுக ணென்றாள்.
11
1871 வேறு
என்னே நினதெண் னமிருந் தபடி
அன்னோ னினைமன் றலயர்ந் திடுமே
கொன்னே கவினைக் குலைவித் தனையே
மின்னே யெனவிண் டனன்வீழ் கிழவன்.
12
1872 சிவத்தான் முருகன் சிவணா தொழிக
தவத்தாற் கவினல் லதுசா ருயிரும்
அவத்தா னழிவெய் துகவஞ் சிலன்மேற்
பவத்தாற் பயனெய் துமென்றா ளனையாள்.
13
1873 நெஞ்சத் துறுதித் திறநே ரிழைபால்
விஞ்சத் தவநோக் கியவேன் முருகன்
வஞ்சக் கிழவுக் கிடமா மயின்மேல்
துஞ்சப் பரிவாங் கெதிர்தோன் றினனே.
14
1874 உயிர்கா வலனே யுருமா றியெதிர்
பயில்வா னெனில்யான் செய்தபாக் கியமென்
றயில்வாள் விழியா ளகனோ கையுற
மயிலூர் தியினா னைவணங் கினளே.
15
1875 விழியோ டுவிழித் துணைநோக் கியையக்
கழிகா தலரா யினர்கா ளைமதுப்
பொழிபூங் குழற்பூ வையுமென் றிவரென்
றழியா வருளீ சனகஞ் செய்தரோ.
16
1876 வேறு
எரிமணி யிமைக்கு மோலி யிந்திரன் றன்னைக் கூவித்
தெரியிழை சுமக்குங் கோலத் தெய்வயா னைக்கு மங்கை
உரிமைசெய் வேலி னாற்கு முறுமுறை மன்ற லீங்குப்
புரிவதற் கியைவ வெல்லாம் புரிகென வருளிச் செய்தான்.
17
1877 அடியே னுய்ந்தே னென்னா வடியிணை பணிந்து விண்ணங்
கொடிதுழாம் புரிசைக் கோயிற் கோபுர வாய்தன் முன்போய்
இடிவளர் கொடியோன் பேரூ ரெம்பிரா னருளீ தென்ன
முடிவிலின் பருளு மன்றன் முடங்கலெத் திசையு முய்த்தான்.
18
1878 வினைத்திற மினிது வல்ல விச்சுவ கன்மற் கூவிக்
கனைத்துவண் டுளருந் தெய்வக் கடம்பணி தாரான் மன்றற்
கனைத்துல கத்து மில்லா வழகின்மண் டபமொன் றீண்டை
எனைத்துள வுறுப்பு முற்ற வியற்றுதி கடிதி னென்றான்.
19
1879 கற்பக நிதிகள் சிந்தா மணிகாம தேனு வென்னும்
நற்பொரு ளனைத்துங் கூவி நகருளா ரடுத்தார்க் கெல்லம்
பொற்பம ரிழைக ளாதி புரிந்தன புரிந்த வாறே
அற்பொடும் வழங்குகென்ன வியங்கொண்டா னார்வந் தோன்ற.
20
1880 வியவரி னியவர்க் கூவி வியத்தகு வதுவைச் செய்தி
புயல்வளர் மாட மூதூர்ப் பொருந்தினா ரறிந்து சால
நயவரு நகர்கோ டிப்ப நளியிமி லேற்றின் வாங்கும்
வயவுரிப் போர்வை வள்வார் வண்முர செருக்கு கென்றான்.
21
1881 கிளையழு திரங்கக் காரா கிருகத்துக் குரங்கி நையும்
விளைபகை யவுண ராதி மேவலர் தம்மை யெல்லாம்
உளைவற விடுத்துப் போக்கி யுறுதிறை கறையுஞ் சின்னாள்
திளைமகி ழரச ரேனோர் தாங்களே தெவ்வ விட்டான்.
22
1882 இன்னணம் பணிக ளேவி யெம்பிரான் கழல்கள் போற்றி
மின்னவிர் குலிச வேலோன் விழைதக விருந்தா னாகத்
துன்னிய வியவர் தம்மாற் சொன்னதன் னரச னேவன்
மன்னிய வியவன் கேளா மகிழ்வொடு மிதனைச் செய்தான்.
23
1883 பழையன கலனுந் தூசும் பாற்றிமற் றினிய துய்த்துத்
தழைமணச் சாந்து பூசித் தகர்விரைச் சுண்ண மட்டி
மழைமதக் களிறு பண்ணி வார்வெரிந் முரச மேற்றிக்
குழவிவெண் டிங்க ளன்ன குணில்கரத் தெடுத்துக் கொண்டான்.
24
1884 வாழிய பட்டி நாதர் மரகத வல்லி வாழி
ஊழியு முலவாப் பேரூ ரொலிவளத் தோடும் வாழி
யாழியன் மொழியா டெய்வ யானைதன் வதுவை நோக்கி
ஏழிய னுலகி னுள்ளார் யாவரும் வாழி யென்றான்.
254
1885 வேறு
அறங்கள் யாவரும் பேணுக வறன்கடை யொழிக
மறங்கு லாவிய செற்றங்கண் மனத்திடை வரைக
திறங்கு லாவிய வவரவர் செய்தொழில் விடுக
கறங்கு போன்மெனச் சுலாவுறுங் கவலைநெஞ் சிறுக.
26
1886 வறுமை யாளர்கள் வளநிதி வேண்டின மடுக்க
உறுபொ னாளர்க ளுவப்பன வுடன்செயத் தொடுக்க
முறுகு காதலி னினியவூன் முறையினுண் டடுக்க
நறுமொ ருப்பவா னவர்கணல் லணிகண்மெய்ப் படுக்க.
27
1887 கந்த டர்த்தெழுங் கடகரிக் கணம்புற நகரின்
உந்தி யாத்துறு காவலி னோம்புதல் புரிக
எந்த வையத்து மில்லையென் றியாவரும் வியப்பச்
சுந்த ரந்திரு நகரெலாந் துறுக்கவென் றறைந்தான்.
28
1888 தாம ரைச்செழும் பூவினைத் தண்மதிக் குழவி
காம முற்றிட வணைதலுங் கனன்றஃ தறைமேல்
ஏம மல்குற வெறிந்தென வெறிகுணின் முரசி
னாம னைத்தையும் புரிந்தக நகரணி துறுப்பார்.
29
1889 வேறு
சிகர மாளிகை சேணுயர் வீதிகண்
மகர தோரணம் வார்கொடி பூகத
நெகும லர்த்தொடை நீண்மணி மாலையுந்
தகைசெ யுந்தடங் காவண மிட்டனர்.
30
1890 வேதி தோறும் விரைப்பனி நீர்களுங்
கோதை யுங்குளிர் பூரண கும்பமும்
மாதர் பாலிகை யீட்டமும் வாசமுந் 
தீதிலாப்பொரி யுஞ்செறி வித்தனர்.
31
1891 அரம்பை யாத்தணி செய்மனை வாய்தலில்
நிரம்பு நித்திலக் கோவை நிரைத்தனர்
சுரும்பு ணக்கடி மாலைக டூக்கினார்
விரும்பு கண்ணடி மீமிசை வைத்தனர்.
32
1892 கரைத்த செம்மணி நீர்கடிக் குங்குமம்
விரைத்த நீரின் விராய்மட மங்கையர்
சுரைத்த நாளத் துருத்தியிற் சிந்திமேல்
நிரைத்து ளார்நெடு வீதிபொற் சுண்ணமே.
33
1893 மணியும் பொன்னு மலருந்தண் சாந்தமும்
பிணிசெய் பட்டும் பெருகொளிச் சுண்ணமுந்
தணிவின் மாடமுந் தையலர் போன்மென
அணிய நின்றன வந்நக ரெங்கணும்.
34
1894 பூவ ணத்தொடை யும்பொலந் தார்களுந் 
தூவ ணப்பொடி யுந்துகி லீட்டமுங்
காவ ணத்திர ளும்பல காட்டலான்
ஆவ ணத்தை யடுத்தபல் வீதியும்.
35
1895 வேறு
கன்னிமா நகர மெல்லாங் கவின்கொளக் கோடித் தங்குத்
துன்னிய மாந்த ரின்பத் துறைதுறை முழுகா நிற்ப
முன்னிய முடங்க லேற்று முதிர்சுவை மன்றல் காண்பான்
என்னரு மகிழ்ச்சி துள்ள வெழுந்தனர் பேரூர் நோக்கி.
36
1896 மருங்குபல் கணங்கள்சூழ வயிரவன் வீரன் சாத்தன்
ஒருங்கிய கால வங்கி யுருத்திர னாடகேசன்
நெருங்குகூர் மாண்ட ரின்ப நிகழ்பதினொருவ ரென்னும்
இருங்கதி யருள வல்லா ரிவர்மகிழ் துளும்பப் புக்கார்.
37
1897 திருத்துழா யலங்கன் மார்பன் றிசைமுக னருக்கர் பல்வே
றுருத்திரர் வசுக்கண் மற்றை மருத்துவ ரொன்பா னெண்ணைக்
கருத்துற விரட்டி செய்த கணத்தவர் நதிக ளோங்கல்
பொருத்துகா லங்கள் வேலை புங்கமா தவருந் தொக்கார்.
38
1898 உரைத்திடப் பட்டோர் தங்க ளொண்டொடி மனைவி யாரும்
இரைத்தெழு கடல்போ லீண்டி யெய்தினர் நகரிற் சிந்தும்
அரைத்தசெஞ் சாந்துங் கோதை யலருமிழ் மதுவு மல்கித்
தரைத்தலை யிழுக்கப் பாதந் தளரிடைக் கின்னல் செய்தார்.
39
1899 அரிமதர் மழைக்க ணல்லா ராயமு மமரர் தாமும் 
விரிகட லுலகின் வாழு மேதகு மாந்த ரோடுந்
தெரியிழை தருக்க ணல்கத் தேனுவின் னடிசி லுய்ப்ப
உரியன நிதியுஞ் சிந்தா மணியுமிக் குதவப் பெற்றார்.
40
1900 விழுத்தகு முண்டி யானும் விலகிவில் லுமிழுந் தெய்வக்
குழுத்தகு கலனுந் தூசுங் குறைவற வணித லானும்
பழுத்தமெய் யன்பிற் றுன்னும் பாரினர் தம்மை விண்ணின் 
வழுத்தப வதிகின் றாரை வரவுசெய் தறிய லாகா
41
1901 உம்பர்கண் மிடைத லானு மொளிர்ந்தபொன் னிறத்தி னானும்
வம்பவிழ் தருக்க ளாதி வயின்வயி னிற்ற லானும்
பம்பிரு ளிரவு மாறப் பன்மணி கதிர்த்த லானும்
நம்பனார் பேரூர் நாக நகரொடு மலைத்த தன்றே.
42
1902 கண்டுகண் ணடியிற் பண்டைக் கலனெலா நீத்துத் தாரு
மண்டொளி யிழைகள் வாங்கி வனப்புற வணிகின் றாரும்
உண்டியி னுவக்கின் றாரு மொலிபுனற் றுளைகின் றாரும்
வண்டலாட் டயர்கின் றாரு மங்கைய ராயி னாரே.
43
1903 வாம்பரி யுகைக்கின் றாரு மதகரி துரக்கின் றாரும்
ஓம்பிய விமானம் பொற்றே ருழியுழி யூர்கின்றாரும்
ஆம்புற நகரி னேகி யரிவையை யணிகின் றாருந்
தாம்பல ராயி னார்க டடவுத்தோண் மருமப் பூணார்.
44
1904 பூவையிற் கிளியின் வென்றும் பூங்கழற் பந்தின் வென்று
மேவரு பிடியாட் டத்தின் மெல்லியர் தம்முள் வெல்ல
ஓவறு தகர்கள் கோழி யொண்சிவ லாதி விட்டுத்
தாவின்மைந் துடையோ ரெல்லாந் தம்முளே வெல்லா நின்றார்.
45
1905 துறக்கநாட் டவர்கட் கெல்லாந் துறக்கமண் ணுலகா வேறு
துறக்கமொன் றெய்திற் றென்னச் சுவைப்பயன் பலவு நல்கிச்
சிறக்குமப் பேரூர் மாட்டுச் செறிந்தவர்க் கொழிவி னுள்ளம்
பிறக்குமோ சுவைத்த வுள்ளம் பெயரினு மிறக்கு மோதான்.
46
1906 நகரினை யடுத்தோர் சால நல்லபே ரின்பந் துய்ப்பப்
புகரிலாத் தேவ தச்சன் புயன்மணி யூர்தி மன்னன்
புகலரு டலைமேற் கொண்டு புவனங்க ளெனைத்தி னுள்ளும்
நிகரில தாக நீண்ட மண்டப நிருமித் தானால்.
47
1907 வேறு
திண்ணென வடித்தலஞ் செம்பொ னோடவிட்
டொண்ணிற வச்சிர முறுத்தி யும்பரின்
நண்ணொளிச் செம்மணி நலக்க விட்டனன்
மண்ணற றீமுறை வயங்கி னாலென.
48
1908 ஒளிக்குமேல் வளியென வுறுகு றட்டின்மேல்
துளிக்குநீ னிறக்கதிர்த் தூண நாட்டிமேற்
பளிக்கினிற் போதிகை பயிற்றி யிட்டனன்
வளிக்குமேல் வெளியென மருட்கை கொள்ளவே..
49
1909 தொத்தொளி கஞற்றிவரு சூரியரை வார்த்து
வைத்தனைய வித்துரும வுத்திரம் வயக்கிப்
பொத்துகுளிர் வெண்மதி புணர்த்ததென மேலான்
நித்தில மழுத்திய நெடும்பலகை யிட்டான்.
50
1910 வெய்யவ னொழுக்கிய விழுக்கிரண மென்ன
வையவொளி யுத்திர மமைத்தபுடை யெல்லாஞ்
செய்யமணி செந்துகிர் செழும்பொனிவை செய்த
பெய்யுமொளி மாலைபிற வுந்துவள வார்த்தான்.
51
1911 சீதள நறுங்கிரணந் திங்களுமிழ் கின்றாங்
கோதமலி நித்தில வொலித்தொடையல் வேய்ந்த
மாதரள வொண்பலகை வைகுவயின் முற்றுஞ்
சோதிமலி யப்பெரிதுந் தூக்கியொளிர் வித்தான்.
52
1912 வண்டுபட ராதமலர் வண்டொடலை யானு
முண்டளி சுலாவுமல ரொண்டெரிய லானுங்
கொண்டநவ மாமணியின் கோதைகளி னானும்
எண்டவிர் வரைப்புமில் தாகவணி செய்தான்.
53
1913 பளிக்கினுயர் பித்திகை பயிற்றியதன் மாடே
வெளிக்கணிமை யார்கண்மிடை யுற்றநிரை யென்னத்
துளிக்குமொளி யோவிய வொழுங்குக டொகுத்தான்
களிப்பவெதிர் நோக்குநர்கள் கண்மலர்கள் வாங்க.
54
1914 வாய்ந்தபல தூண்கடொறும் வாருறைகள் சேர்த்தான்
ஆய்ந்துநில னெங்குமவிர் கம்பலம் விரித்தான்
வேய்ந்துமணி யும்பரின் விதானமு முறுத்தான்
பாய்ந்தவெழி னித்திரள்கள் பாங்குற வமைத்தான்.
55
1915 மாமணி விளக்குமலர் மாலையொடு சாந்துங்
காமர்கல னுங்கவரி யாடிகுடை மற்றுந்
தூமணி யியன்றசுடர்ப் பாவையினி தேந்தி
ஏமுற விடந்தொறு மியங்கவிசை வித்தான்.
56
1916 குண்டமொடு வேதிமுத லானகுறை தீர்த்திட்
டொண்டவிசு மன்றலுறு வார்க்கிடை யுஞற்றிக்
கண்டவிர் நுதற்கடவு ளார்முதலி னோர்க்கு
மண்டுமரி யாதனம் வயின்றொறு முறுத்தான்.
57
1917 கதலிவள ருங்கமுகு கன்னனெடு வானிற்
பொதுளிய தருக்களிவை போதுகனி மற்றும்
உதவவொளிர் தூண்டொறு முறுத்துநனி யாத்தங்
கெதிரில்பல தோரண மிடந்தொறும் விசித்தான்.
58
1918 மிகக்கவின் விளைத்தவியன் மண்டப மருங்கு
புகப்படி பொலிந்தவயி டூரியம தாக்கி
நகைகதிர்செய் வச்சிரநல் யாளியதன் மாடே
முகக்கவிணை வித்தனன் முதிர்ந்தழ கெறிப்ப.
59
1919 வேறு
கோமே தகத்தின் யாளிவரி கொளுத்திக் கொடுங்கை மரகதத்தின்
ஆமா றியற்றி யதினெங்கு மவிர்பொன் னரிமா லிகைவாசப் 
பூமா லிகிபன் மணிமலை புகரில் கவரி யாடிகனி
தூமா ணழகு பெறத்தூக்கித் துவண்டு நிலந்தோய்ந் தனநான்றே.
60
1920 மருங்கு பயின்ற வயின்றோறு மலர்ப்பூம் பந்த ரமைத்துள்ளால்
இருங்குங் குமச்சே றிழுத்தநிலத் திலகு மணிநித் திலம்பரப்பி
ஒருங்கு கமழு நறும்பனிநீ ருரைத்துத் தவழ விளந்தென்றல்
நெருங்கு பலவிம் மிதப்பொருள்க ணிரப்பிக் கொடியு மிசையுயர்த்தான்.
61
1921 வள்ள மருட்டும் வாய்க்கமல மலர்மென் குமுத நறுங்குவளை
வெள்ளை நிறத்தோ திமத்திரள்கள் விரிபூஞ் சிறைச்சக் கரவாகப்
புள்ளும் பிறவும் பயின்றுமணிப் புனன்மிக் குடைய தடம்பொய்கை
நள்ளு மலர்ப்பூம் பந்தரய னணூக வமைத்தா னலங்கொழிப்ப.
62
1922 சுரும்பு மிழற்றத் தேன்றுளிப்பத் தோகை நடிப்பக் கிளிபூவை
விரும்பிக் கிளவி யெதிர்பயிற்ற விழைந்து குயில்க ணனிகூவ
அரும்பு மொளிமே டைகள்புளின மமைத்த வரையென் றிவைபயில
இரும்பொ னுலகும் புறங்கொடுப்ப வெடுத்தான் மருங்காங் குய்யானம்.
63
1923 இன்ன படிமங் கலவதுவைக் கியைய மணிமண் டபமாதி
மன்ன வியற்றி மகிழ்கூர்ந்து வானோர் தச்ச னடிபணியக்
கொன்னும் வயிரப் படைவேந்தன் குறுகி யுமைபா கரைப்பணிந்து
நன்னர் வதுவைச் சிறப்பனைத்து நம்ப வியன்ற வெனக்கிளந்தாள்.
64
1924 கருணை யரும்புந் திருவுளத்துக் கடவுள் பெருமான் முகமலரா
அருகு வணங்கித் தொழுதேத்து மரவப்பள்ளி வானவனைப்
பெருகு மகிழ்வின் முகநோக்கிப் பேணா வவுணர் குலஞ்சாய்த்த
முருக னுருவ மணிசெய்தி முகுந்த வெனச்செவ் வாய்மலர்ந்தார்.
65
1925 குமிழ்மென் மலரைப் புறவகற்றுங் கொடிநா சியினித் திலகமணிந்த
அமிழ்த நிகர்த்த மொழிக்கமலை யடிக ளிறைஞ்ச வடுத்தாளை
இமிழ்தண் கருணை யானோக்கி யிமையார் பழிச்சும் யானைதனைத்
தமிழி னினிப்ப வணிகென்னச் சயில முயிர்த்தாள் வாய்மலர்ந்தாள்.
66
1926 வேறு
அருள்செயப் பணிசெய வரிய மாதவ
மருவின முன்னர்மண் ணிலத்து மாமெனத்
திருமறு மார்பனுங் கமலச் செல்வியும்
உருகிய வன்புகொண் டுஞற்றப் புக்கனர்.
67
1927 பெருங்கடற் பாயலான் பெட்ட பல்பொருள்
தருங்கடன் பூண்டனன் சதம கத்தினான்
ஒருங்கயி ராணியொண் கமலை வேட்டன
அருங்கல னாதிக ளளிக்க நின்றனன்.
68
1928 மங்கல மணிமுர சியம்ப வானமர்
கங்கைவெண் களிற்றின்மேற் கடத்திற் போதரா
அங்கலுழ் மேனியி னாட்ட வைத்தனர்
புங்கவர் முருகனைப் போற்றி மாயவன்.
69
1929 உவளக வரைப்பினொண் டவிசின் மேலிரீஇத்
தவளவெள் வளையினந் தழங்கத் தண்கடற்
பவளமொத் தவிர்நிறத் துருவிற் பல்கிய
திவளொளி யணிதிக ழன்பிற் போக்கினான்.
70
1930 அருக்கிய முதலிய வமைத்து வாநெய்
மருக்கிளர் சிகழிகை மலிய வைத்துரை
இருக்குரைத் தாட்டுவ வேனை யாவையும்
ஒருக்கிய சிந்தைகொண் டூழி னாட்டினான்.
71
1931 நுழையிழைக் கலிங்கநோன் கரத்தி னேந்துபு
தழைமணக் குஞ்சியந் தலையி னார்புனல்
விழைதகப் புலர்த்திமெய் யீர மொற்றினான்
மழையுறழ் திருவுரு வனப்பின் மாயனே.
72
1932 மட்டுமிழ் நறும்புகை மடுத்துக் குஞ்சியின்
அட்டிவண் புழுகலத் தார்கொண் டியாத்துமேற்
கட்டுபு காஞ்சனக் கயிற்றிற் சென்னியின்
இட்டனன் மணிமுடி யிமைப்ப வாட்கதிர்.
73
1933 திங்கள்சென் னியின்வழுக் குற்றுத் தேசுற
தங்கிய திதுபொடி தானன் றாலயற்
செங்கனல் விழியிது திலக மன்றிவன்
சங்கர னெனநுதற் கழகு சார்த்தினான்
74
1934 வழுக்கறும் யோகினர் மதிக்குந் திங்களின்
ஒழுக்கொளி மண்டலத் தொளியி தாமென
விழுக்குரு நீற்றொளி விளங்கு நெற்றியின்
முழுக்கவி னோடையு முறையின் யாத்தனன்.
75
1935 கண்ணுதல் பொடித்ததன் கான்மு ளைக்கொடி
நண்ணலு மதனைவே ளென்னு நாமத்திவ்
வண்ணலுக் காமென வமைத்த சீர்பொரத்
திண்மக ரக்குழை செவியி லேற்றினான்.
76
1936 செம்பொறி வாங்கிய திணிந்த தோளொடு
வம்பவிழ் மருமமு மறைப்பி னல்லது
கொம்பனா ருயிர்க்கொரு கொளுகொம் பின்றெனப்
பம்பிய மணிக்கலன் பலவுஞ் சாத்தினான்.
77
1937 மாதரா ருள்ளக மறுகும் வார்புயக்
கோதையார் மத்துமேற் கொளுவ நின்றதோர்
சீதவான் மதியெனத் தெளிந்த வச்சிரக்
காதலா ரங்கதங் கதிர்ப்பப் பூட்டினான்.
78
1938 பொழிகதிர்ச் செழும்பொனிற் பொதிந்த கண்மணி
அழகிய முழங்கைமே லமையக் கட்டினான்
ஒழுகிய புயமெனு மோங்கு மத்திடைத்
தழுவிய வாசுகித் தாம்பு மானவே.
79
1939 செங்களத் தெதிர்த்துநின் றிறலிற் றானவர் 
மங்கின ரகழ்ந்தவென் வடிவு நல்கெனத்
தங்கிய பரிதியைத் தாங்கி னாலென
அங்கைமேற் செம்மணிக் கடக மாக்கினான்.
80
1940
ஒருதலைச் செம்மணிக் கடக மொன்றமற்
றொருதலை வயிரவங் கதநின் றோங்கலாற்
பெருகெழிற் கரம்புரம் பேது செய்தவன்
உருண்மணித் தேரினு ளச்சும் போன்றதே.
81
1941 வாழிய வருந்தவம் வயக்கிப் பல்பகல்
ஆழியொன் றணிந்தத னங்கை யாற்பல
ஆழிக ளெடுத்தெடுத் தமலன் வார்விரல்
ஊழுறச் செறித்தன னுவண வூர்தியே.
82
1942 தந்தைபோற் றிக்குடை தழுவ முன்னினு
மந்தின்மற் றஃதுறா தமைத்தல் செய்தெனச்
செந்துகிற் பட்டின்மேற் சிக்க யாத்தனன்
கொந்தொளி நாணுறீஇக் கொழும்பொ னாடையே.
83
1943 கயில்படு காஞ்சனக் கழலொன் றார்த்தபின்
வெயில்விரி பன்மணி விளக்க மாண்டெழில்
பயில்பரி புரமொடு பாத சாலமுஞ்
செயிர்தபு சேவடி சேர்த்தித் தாழ்ந்தனன்
84
1944 அழகினிற் சிறந்திடு மநங்கன் றாதையாய்
அழகினிற் சிறந்தவ னான செங்கண்மால்
அழகினுக் காகர மான வேட்கணி
அழகினை யளவையி னறைய லாங்கொலோ.
85
1945 திருமக ளென்பவ டெய்வ யானையை
மருவள ருவளக வரைப்பிற் கொண்டுபோய்க்
குருமணி யாதனத் திருத்திக் கோமள
உருவொசி தரவுரைத் தாணெய் யோதியின்
86
1946 வேறு
முளிந்தவொண் ணெல்லிச் சாந்து மொய்யொலி மஞ்சட் சாந்துந்
தெளிந்தபஃ றுவருந் தெய்வ விரைகளும் பிறவுஞ் சேர்த்திக்
குளிர்ந்தவான் கங்கை நன்னீர் கொண்டன டிமிர்ந்து சால
ஒளிர்ந்திடப் பூங்கொம் பன்னா ளுருவினை மண்ணுச் செய்தாள்.
87
1947 மெய்வள ரீர மாற்றி விளங்கிழைப் பட்டுச் சாத்திக்
கைவளர் வினைஞ ரிட்ட கமழ்மலர்ப் பந்த ருள்ளால்
ஐவளர் மணிப்பொற் பீடத் தணங்கினை யிருத்தி வாச
நெய்வள ரோதி வாங்கிச் சீப்பினா னீவி விட்டாள்.
88
1948 காசறை கமழ வூட்டிக் காரகி லாவி யேற்றி
வீசொளிப் பட்டு நாணின் வீக்கியேற் றிமிலிற் கொண்டை
வாசமென் மலருட் பெய்து வயக்கிமேற் காரைத் தென்னன்
தேசவிர் தளையிட் டென்னத் தெரியல்கள் வளாவி னாளே.
89
1949 தடித்திடை விளங்கி யாங்குத் தயங்குபொன் னெஃகு தொட்டுக்
கடித்திர ளாலி யென்னக் கதிர்மணித் தொங்கன் முச்சி
தொடுத்திருண் மேகம் விண்டு துலங்குநீர்த் தாரை கான்றாங்
கெடுத்தொளி கொழுந்தப் பாங்க ரிலம்பகஞ் சூட்டினாளே.
90
1950 கொழுந்தெழு பவளக் காடு கூர்கருங் கடலின் மாட்டுஞ்
செழுந்திருக் குழவித் திங்க டிகழ்ந்தென மணிக்காழ் வீக்கி
அழுந்திய வலகப் பாங்க ரவிர்மணித் தெய்வ வுத்தி
தொழுந்தனிக் குழவித் திங்க ளிரண்டையுஞ் சுடர வைத்தாள்.
91
1951 கருங்கட னாப்ப ணிட்ட கண்ணக னணையே யென்ன
ஒருங்கிய வோதி நாப்ப ணொழுக்கிய கீற்றின் மேலால்
தருங்கதிர்ச் சுட்டி யென்னுஞ் சருப்பம்வாய் திறந்து கான்ற
பெருங்கவின் மணியே யென்னப் பிறக்கின டிலக நெற்றி.
92
1952 வேறு
முலையது தாமரை முகிழன் றம்பல
அலர்விழி யன்னவை யாத லான்மதி
சிலையுமன் றிஃதொளி திவளு நெற்றியென்
றலர்கதிர்ப் பட்டமாங் கமைய யாத்தனள்.
93
1953 சேந்தரி பரந்து தேசு திகழ்ந்துசெஞ் செவியின் காறும்
போந்தகன் றிருண்டு வெண்மை புணர்ந்துகொட் புற்று நீண்டு
நாந்தகந் தடற்றுண் மூழ்க நாமவே லம்பைச் சீறி
வாய்ந்தகண் மலர்க்கு மாதோ வஞ்சனம் வயக்கி னாளே.
94
1954 மகரவல் லேறு தூங்கும் வண்மையான் வள்ளை யேயென்
றகிலமுந் தெளியக் காதி னவிர்குழை மகர மிட்டு
நகுகதிர் முத்த நாசி நாற்றின ளிவற்றை நாடின்
முகநிதிக் கமலங் கான்ற மொய்யொளிப் பொருள்கள் போன்ற.
95
1955 உளைவற வடைந்தோர்க் கெல்லா முவப்பினைச் செய்யா நிற்கும்
வளைநிதி வெறுக்கை பாங்கர் மாண்டகப் பொழிந்தா லென்ன
விளைவரை நானஞ் சாத்தி விளங்கிய கண்டஞ் சீர்ப்பத்
திளைகதிர் மணிக்காழ் கட்டு வடத்தொடுஞ் செறியச் சூழ்ந்தாள்.
96
1956 பாசிள வேயிற் றோன்றும் பருவரைக் குலங்க ளென்ன
வீசொளி மணிக்கே யூரம் விளங்குசூ டகமும் வண்டு
மூசுமென் மாலைத் தோளு முன்கையுங் கவினச் சேர்த்திக்
காசவிர் வளையு மற்று மாழியுங் கதிர்ப்பக் கோத்தாள்.
97
1957 பொற்பொடி சிதர்ந்தா லன்ன பொறிசுணங் கலர்ந்த கொங்கை
விற்பொலி மணிச்செய் சேற்றின் வியத்தகு தொய்யி றீட்டிப்
பற்பல மணியின் கோவை பன்மலர்த் தொடலை மற்று
மற்பொலி வேழப் பாங்கர் வார்த்தபஃ றொடரி னிட்டாள்.
98
1958 ஒல்கிய மருங்குற் கொம்ப ருறுதிகொண் டிருப்ப நாடி
நல்கெழிற் சலாகை யொன்று நாட்டியொன் றுறயாத் தென்னப்
புல்லிய மயிரின் வல்லி புடைவனப் புமிழக் காசு
பல்கிய பருமக் கோவை பயிற்றின ளல்குன் மாட்டு.
99
1959 பாடக மணிந்து செம்பொற் கிண்கிணி பாத சாலஞ்
சேடுயர் மணிச்செய் பொன்னூ புரம்புற வடியிற் சேர்த்தித்
தோடவிழ் கமலம் வென்ற தூயவுள் ளடியிற் சீர்ப்பப்
பீடுயர் பஞ்சி யூட்டிப் பெரிதுவந் திறைஞ்சி நின்றாள்.
100
1960 வேறு
இன்ன வாறெலாந் தெய்வயா னையையிலக் குமிதான்
துன்னி வானணி ய்அணிந்துழித் தோகைமா மயிலோன்
மன்னு மாநகர் வலம்வர வலித்தன னறிந்து
பன்னு வானவ ராதியோர் படர்ந்துமுன் னின்றார்.
101
1961 எட்டு மாதிரக் கயங்களு மெழிலியும் பனிப்பக்
கட்டு வார்முர சாதிக ளியம்பின கதிர்கள்
விட்டு வார்கொடி விசும்புடை யகடெலாந் தூர்த்த
முட்டி லாநிழல் பரப்பின முழுமதிக் கவிகை.
102
1962 கவரி துள்ளின வசைந்தன கால்செய்வட் டங்கள்
துவள மின்னிடை மாதரார் தொடங்கின ராடல்
உவரி யின்னமிழ் தெனப்பரந் தனவுயர் பாடல்
இவர்பெ ருஞ்சனம் விலக்கின ரேந்துவேத் திரத்தோர்.
103
1963 ஒழுகு மும்மதத் தாரையி னுறுபிர மரங்கண்
முழுகு வெண்கயம் பண்ணிமு னிறுவினர் பாகர்
தொழுகு லத்தவர்க் கமுதமாய்ச் சுவைக்கும்வேல் வலத்தோன்
குழுமு வையகங் குதுகல மடையமேல் கொண்டான்.
104
1964 இவனை நேர்பவ ரிலையென மறுப்பது போலக்
கவரி தூக்கிய முறச்செவி காலெழ மறியப்
புவன மேலிது போலிலை யெனப்புரத் துடலம்
அவவி மோத்தல்போன் மோந்துமோந் துலாவிய தத்தி
105
1965 பொரியும் பாகடைத் திரளும்பொற் சுண்ணமு மலருஞ்
சொரியுந் தோயமுந் தூவிமுன் றொழுதனர் சில்லோர்
எரியுந் தீபமாங் காங்குநீ ரொடுமெதிர் சுழற்றிக்
கரியின் பாலுறக் கவிழ்த்துளங் களித்தனர் சில்லோர்.
106
1966 கரும்பின் வார்கழை தடிந்தபல் கடிகையுங் கனியுஞ்
சுரும்புண் கோதையுந் தும்பிமுன் னிறைத்தனர் சில்லோர்
விரும்பு மோகையின் விழுக்கலன் கன்னிகை பிறவும்
அரும்பு மார்வலர்க் களித்தன ராடவர் சில்லோர்.
107
1967 வளிம றைப்பிடை மறைந்துசற் றேயுடல் வயங்கி
வெளிதெ ரிந்துற நோக்கினர் மின்னனார் சில்லோர் 
வெளியின் வந்துதம் பாங்கியர் வியோகத்தின் மறைந்து
களிற டுத்தலுங் கதுமெனத் தாழ்ந்தனர் சில்லோர்
108
1968 வணங்கு நுண்ணிடைப் பாரமோர்ந் தொழிப்பவர் மான
இணங்கு மன்மிசை யெரிகதிர் மேகலை யிரங்கக்
கணங்கொல் வண்டினங் கூட்டுணுங் கருங்குழ னெகிழ்ந்து
மணங்கொண் மாலைகள் பொழிதர வணங்கினர் சில்லோர்.
109
1969 பணிந்து நின்றவர் பணிந்திலேம் யாமென மீட்டுந்
தணிந்த சிந்தையிற் றரைமிசைத் தாழ்ந்தனர் சில்லோர்
அணிந்த வஞ்சலி முடியின ரதுமறந் தெங்கை 
துணிந்த வோவெனச் சுற்றினு நோக்கினார் சில்லோர்.
110
1970 கொழுகொம் பில்லதோர் கொடியெனத் திருமுன்னர்த் தாழ்ந்து
பழுதில் பன்மணி மேகலை காத்தனர் சில்லோர்
முழுது மன்புள முகிழ்த்தெழ விழியெழின் முழுகத்
தொழுது செங்கையிற் காத்தனர் தொடிவளை சில்லோர்.
111
1971 இன்ன வாறுமூன் றுலகமு மின்புறப் பலவாய்த்
துன்னு வீதிகள் சூழ்ந்துபோய்த் தும்பியி னிழிந்தங்
கென்னை யாளுடை முருகவே ளிருங்கதி ரெறிக்குங்
கன்னி மாமணி மண்டபங் காதலிற் புகுந்தான்.
112
1972 ஆங்கு முன்னரே யரியணை வீற்றிருந் தருளுந்
தேங்கு தண்புனற் சென்னியார் திருவருள் புரிய
வீங்கி ருங்கதிர் மணிப்பொலந் தவிசின்மே லிருந்தான்
பாங்கு ருத்திர ராதியோர் பான்மையின் வதிந்தார்.
113
1973 அமரர் தம்பெரு மானருள் கொண்டயி ராணி
விமல மல்கிய தெய்வயா னையைவெறி நறுந்தார்
கமழு மண்டபத் தினிதுபோ தரக்கரு துதலும்
இமிழு மன்புடைப் பரிசன மறிந்தெழுந் தனரால்.
114
1974 வேறு
கடகமுங் குழையும் தோடுங் கதிருமிழ் மணிப்பொற் பூணும்
வடகமும் திகிலு மேனை யணிகளு மலர்ப்பூந் தாருங்
கடல்வரு மமுதுந் தெய்வக் கனிகளும் வேறு வேறு
படலிகை யமைத்து மூடிப் பற்பலா யிரர்கைக் கொண்டார்.
115
1975 பேடிய ராண்மைக் கோலம் பெரிதுமெய்த் தாங்கிக் கொண்டு
நீடிய வாள்கை யேந்தி நிரைந்துபற் பலர்கள் சூழ்ந்தார்
கோடிய புருவங் காட்டிக் கொம்மெனச் சினந்து செங்கை
ஆடிய பிரம்பி னோடு மாள்கடிக் கொண்டார் சில்லோர்.
116
1976 மருவறு கவிகை பிச்சம் வார்கொடி கவரிக் காடு
முறைமுறை யசையுங் கால்செய் வட்டமு மொய்ப்ப வீசும்
அறுவையும் பார்ப்போர்க் கெல்லா மணங்குசெய் தருகு சூழ்ந்த. 
குறளொடு சிந்து முன்னே குறுகுறு நடந்து சென்ற.
117
1977 மங்கலம் பாடு வாரும் வளரிசை பாடு வாரும்
அங்கெதி ராடு வாரு மலர்புனல் வீசு வாருஞ்
சிங்குத லறியாக் கோலச் சிவிகைதோட் காவு வாருந்
தங்கிய துறக்க வாழ்க்கைத் தையல ராயி னாரே.
118
1978 என்னிவ னோற்ற வாறென் றியாவரு மிறும்பூ தெய்தக்
கன்னியர் குழாத்தி னூடு காமரு சிவிகை யூர்ந்து
மன்னிய வதுவைக் கான மண்டப மருங்கு சார்ந்து
மின்னுகு குலிச வைவேற் றாதைபான் மேவி நின்றாள்.
119
1979 அருந்தவப் பேறு வாய்ந்த வமரர்கோன் றுணைவி யென்னத்
திருந்திய சசிமா னன்பிற் றீம்பயம் வணங்கி வாக்க
இருந்தருள் குமரன் பாத மெழில்பெற விளக்கி யந்நீர்
மருந்தினும் பருகிச் சென்னி மருங்கினுந் துளித்துக் கொண்டான்.
120
1980 முரன்றன சங்கம் பேரி முழங்கின முரச மார்த்த
நரன்றன வங்கி யங்க ணரம்பொடு மகிழ்ச்சி வெள்ளம்
வரன்றின திரண்டோ ருள்ள மடுத்தொரு மகளை நீரோ
டரன்றனிக் குமரற் கீந்தா னருமறை முறைகள் கூறி.
121
1981 இந்திரன் வளர்த்த தெய்வ யானையை யேற்றுப் பின்னர்ச்
சுந்தர முருகன் வானோர் தொழுதகு குரவன் வேதச்
செந்தழல் வளரா நின்று திகழ்மது பருக்கஞ் சொன்றி
முந்துற முறையி னிட்ட முகமலர்ந் தருளி னானால்.
122
1982 கன்றொடு காமதேனுக் கலந்துடன் போத நோக்கி
மென்றுணர்க் கரிய கூந்தன் மெல்லியல் வலக்கை பற்றி
ஒன்றவே ழடியிட் டேகி யொளிர்மணி யம்மி யண்மி
அன்றதன் முடியிர் சால வச்சுதந் தெளித்த பின்றை.
123
1983 சந்திரன் சடையில் வேய்ந்த தம்பிரான் றானு மந்நாள்
இந்தநல் வினையை நாணா தியற்றினா னென்னி லன்னோன்
மைந்தனு நாணு மாறிங் கென்னென மதித்து நக்கான்
அந்தின்மற் றதனை நோக்கி யனைவரு முறுவல் பூத்தார்.
124
1984 மகளிர்பால் வணக்க மோம்பி மைந்தர்க ளின்பந் துய்க்குந்
தகுதியு மூடன் மாட்டுச் சாருதற் கங்கி சான்றா
அகிலமுந் தெரிக்கு நீதி யாதரித் தணங்கு பாத
நகுமுகத் திளையோன்பற்றி நகைமணி யம்மி யிட்டான்.
125
1985
பங்கினண் மாட்டுச் சென்னிப் படர்புனன் மாதை வைத்த
அங்கணன் வணக்க நிற்க வவனையும் வணக்குஞ் சேயோன்
நங்கையின் வணக்க மன்ற நமக்கெலா மேற்ற மென்னா
மங்கையர் பலரு நோக்கி மகிழ்தலை சிறந்து நின்றார்.
126
1986 தந்தைத னுருவ மான தழல்வலம் வந்து நின்று
கொந்தலர்க் குழலி நல்கக் குரூஉப்பொரி யேற்றங் கட்டிச்
சுந்தர வணையின் வைகிச் சுடர்ந்தமங் கிலிய நன்னாண்
கந்தரங் கவின யாத்தான் களித்தன வுலக மெல்லாம்.
127
1987 வானவர் வளர்பூ மாரி சொரிந்தனர் மகவா னோடுந்
தேனலர் கொன்றை யார்தந் திருவருள் வழங்கப் பெற்றங்
கூனமி லளகைக் கோமா னொண்ணிதி மணிப்பூ ணாடை
போனகம் பிறவு நல்க யாவரு மகிழ்ச்சி பூத்தார்.
128
1988 பல்வகைச் சிறப்புந் தோன்றப் பம்பினோர் மகிழ்ச்சி தூங்க
எல்வளர் நகர வீதி யேந்திலை வேற்கை நம்பி
அல்வளர் கூந்தற் செவ்வா யணங்கொடு முலாப்போந் தண்மி
வில்வளர் கோயி லுள்ளால் விலங்கொலித் தவிசி னுற்றான்.
129
1989 மற்றைய நாளு மாற்றும் வதுவையின் சடங்கு சால
முற்றிய பின்றை முக்கண் முதல்வனார் மகிழ்ச்சி கூர்ந்து
பற்றிய வன்பி னீங்குப் படர்ந்துளீர் யாரும் வேட்ட
தெற்றது தருதும் வச்ல்லே யெழில்வரங் கொள்க வென்றார்.
130
1990 அவரவர் வேட்ட வேட்ட வரும்பெரும் வரங்கள் பெற்றுத்
துவரித ழுமையா ளோடுந் துணைவனார் பாதம் போற்றித்
தவலருங் களிப்புத் துள்ளச் சார்ந்தனர் விடைபெற் றேகி
இவர்தரு தத்தம் வைப்பி ன்னிதுவாழ்ந் திருந்தா ரன்றே.
131
1991 குருதிகொப் பளிக்கும் பைவேற் குமரவேள் கொழுந்தண் டேறல்
அருவிசெம் மலர்மென் கூந்த லணங்கொடு பேரூர் வைப்பின்
இருமுது குரவர் தம்பா லிருந்தன னுலக மெல்லா
மருமலர்ப் பாதம் போற்றி வைகலும் வாழ மாதோ.
132
1992 தேன்வழிந் தொழுகுங் கோதை தேவர்க ளரைய னீன்ற
கான்வழிந் தொழுகுங் கூந்தற் கன்னியைச் சூட்டி யார்க்கும்
வான்வழிந் தொழுகு மின்பம் வழங்கிய காதை கேட்டோர்
ஊன்வழிந் தொழுகும் வேலா னுலகினி லின்பந் துய்ப்பார்.
133
1992 குறைவறு தவத்திற் சான்ற கொள்கையீர் தேவர் தங்கள்
சிறையினை விடுத்துக் காத்த செம்மலார் மன்றல் சொற்றாம்
மறைவழி யொழுகுங் செங்கோல் வளர்குசத் துவச னென்பான் 
பெறுவரங் கேண்மி னென்னாப் பேசுவன் சூத மேலோன்.
134
  • தெய்வயானை திருமணப்படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் - 1993.
    ------------

    31. குசத்துவன் வரம்பெறுபடலம் (1994-2015)

    1994 உவவுமதிக் குடைநிழற்ற வுலகமொரு தாட்படுத்திக்
    குவவுநிதி முடிமன்னர் குரைகழற்றாள் பணிந்தேத்தக்
    கவவுமறை நெறியொழுகுங் கலைமதியின் வழிவந்தான்
    அவவுமனத் திரவலருக் கடர்பருவ மழையனையான்.
    1
    1995 கோடாத கோலினான் குசத்துவ னெனும்பெயரான்
    வாடாத சீர்த்தியான் மல்குபெருஞ் செல்வத்தான்
    ஓடாத தானையா னொளிவளர்வை வேலினான்
    வீடாத பெரும்போக மிசைந்துலகம் புரக்குநாள்.
    2
    1996 மக்கட்பே றில்லாமை மனைவியொடு மவ்வரையன்
    தொக்குப்பா ரிடையெல்லாஞ் சுவைத்தாலு மென்னையுடல்
    பக்குத்தூ தர்கள்வழியில் படருயிரைக் கதியேற்று
    மிக்குத்தாம் புரிகடன்மை விளைவின்றே லெனக்கவல்வான்.
    3
    1997 உலகாட்சி யமைச்சர்பா லுறுத்தெழுந்து பலவரையும் 
    மலரார்ந்த பலவனமும் வளர்சுரமும் பலகடந்து
    புலவோர்கள் பலகாலும் போற்றிசைத்துப் பெருவரங்கள்
    விலகாது பெரும்பேரூர் வியனெல்லை மருங்கடுத்தான்.
    4
    1998 தூரத்தே யெதிர்தோன்றுஞ் சுடர்வெள்ளி வரைவணங்கி
    யாரத்தாழ் விழிவெள்ள மகன்மருமத் திடையொழுக
    வாரத்தா னெழுமன்பு மனங்கொண்டு முன்னடப்பச்
    சாரத்தா னடந்தெய்தித் தவழ்காஞ்சி நதிபணிந்தான்.
    5
    1999 கரைசார மணியெறிந்து கனைத்தோடுங் காஞ்சிநதி
    விரைசாருங் குளிர்புனலின் விதியுளிதோய்ந் தெழுந்தன்பான்
    உரைசார்ந்த மறையவருக் கொண்பொருள்கண் மிகவார்த்தி
    திரைசார்ந்த மணிவீதி நேர்தொழுதா லயம்புக்கான்.
    6
    2000 சுடர்மணிக்கோ புரமிறைஞ்சித் தூவெள்ளை விடைகிடந்த
    கொடிமருங்குப் பணிந்தெழுந்து குழைந்துருகி வலம்வந்து
    கடிகமழ்பன் னீர்நிழலிற் கதித்தபெருஞ் சுவையமிழ்தை
    முடிவுமுத லில்லாத முதிர்கனியைக் கண்ணுற்றான்.
    7
    2001 ஆடினா னாராத வானந்தத் துள்ளழுந்திப்
    பாடினான் பலவேதம் படர்மனத்தி னெழும்பரிவு
    வீடினான் போலானான் விமலனா ரடித் தொண்டு
    கூடினான் பிரியாத குணங்கொண்டங் கரிதகன்றான்
    8
    2002 கார்கொண்ட கருங்கூந்தற் கடிகொண்ட திலகநுதல்
    வார்கொண்ட குவவுமுலை மரகதவல் லியையிறைஞ்சி
    ஆர்கொண்ட சடைதாழ வனவரத நடம்புரியுஞ்
    சீர்கொண்ட தம்பிரான் றிகழொளிமன் றமும்பணிந்தான்.
    9
    2003 அற்றைநா ளுணவின்றி யடர்கங்குற் றுயினீத்து
    மற்றைநாள் வருவிடியல் வைகறைச்செய் கடனாற்றிக்
    கற்றைவார் சடைப்பெருமான் கழலிணையுள் ளகத்திருத்தி
    முற்றமா தவம்புரிந்தான் முழங்குபுகழ்க் குசத்துவசன்.
    10
    2004 வேறு
    அற்றமி லமரர்க ளாண்டொ ராயிரம்
    இற்றிடு மெல்லையி லிலைகொள் சூற்படைக்
    கொற்றவன் குவிமுலைக் குமரி தன்னொடும்
    பெற்றமேல் கொண்டெதிர் பிறங்கத் தோன்றினான்.
    11
    2005 எழுந்தன னிருந்தவத் திருந்த மன்னவன்
    விழுந்தன னடித்தல மீது சென்னிமேல்
    தொழுந்தடங் கரத்தொடுந் துதிக ளார்த்தினான்
    அழுந்தின னானந்த மென்னு மாழியுள்.
    12
    2006 வழிபடு வேந்தனை நோக்கி வார்சடைப்
    பொழிகதிர் நிலவணி புனித வேதியர்
    கழிபெருந் தவம்புரி கடனிற் சீர்த்தனை
    பழிதபு வரமெது படர்ந்த தோதென்றார்.
    13
    2007 இறைவரங் கருளலு மிறைஞ்சிக் காவலன்
    பொறைகொளும் புதல்வரைப் பூப்ப வேட்டனன்
    குறைவறு வரமிது கொடுக்க வென்றனன்
    அறைமறைத் தலைவர்கேட் டருளிச் செய்வரால்.
    14
    2008 மருதமர் வரையிடை வதியும் வேற்படை
    முருகனை வழிபடின் முடிகொண் மன்னவ
    பெருவிறன் மைந்தனைப்பெறுவை யவ்வயின்
    ஒருவிய கவலையி னுவந்து செல்கவே.
    15
    2009 எந்தமைக் குறித்துநீ யிங்கு நோற்றலிற்
    சுந்தர மகளிர்க ளிருவர் தோற்றுவார்
    மைந்துடைப் பார்த்திவ வென்று மால்விடக்
    கந்தரக் கடவுளார் கர்ந்து போயினார்.
    16
    2010 அருடலைக் கொண்டுசென் றரைய னோங்கிய
    மருதமர் சாரல்வண் மலையைச் சார்ந்தனன் 
    குருபர னாகிய குமரற் கன்புசெய்
    திருநிலம் வியப்புற வரமங் கெய்தினான்.
    17
    2011 புதல்வனைப் பெரும்பரி செய்தும் பூபதி
    இதமுறு பூசியும் விழாவு மேனவுஞ்
    சதமகன் மருகனார் தமக்கும் பட்டியின்
    வதிதரு மிறைவற்கு மலிவித் தானரோ.
    18
    2012 ஆதியம் புரிவள ரமல நாயகர்
    போதியென் றருளலும் போதிக் கானநன்
    நீதிசெய் மன்னவ னீங்கிச்சென்றுதன்
    சோதிசெய் மணிநகர் துன்னி வைகினான்.
    19
    2013 ஒக்கலு முலகமு முவகை கூர்தரத்
    தொக்கதெவ் வரையர்க டுளங்கித் தேசற
    மக்களை யுயிர்த்தனன் மகிழ்ச்சி மீக்கொளத்
    தக்கபல் லறங்களுந் தழைய வாக்கினான்.
    20
    2014 குழவிகண் மணியுருக் கோல நோக்கியும்
    மழலைகள் கேட்டுங்கை மலர ளாவிய 
    விழுமிய வடிசில்கண் மிசைந்து மார்புறத்
    தழுவியு மோந்துதன் றளர்வு நீங்கினான்.
    21
    2015 சுரந்தவன் புடைக்குசத் துவசன் சந்ததி 
    வரம்பெற லிஃதொரு மன்னன் குட்டநோய்
    பிரிந்தமை கூறுதும் பேணிக் கேண்மினென்
    றுரம்பெறு சூதனங் குறுவர்க் கோதுமால்.
    22

    குசத்துவன் வரம்பெறு படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் – 2015
    -----------

    32. குலசேகரன் குட்டநோய் தீர்ந்தபடலம் (2016-2039)

    2016 கருவி மாமழை மதிதொறுங் கவிந்துநீர் பொழிய
    அருவி தாழ்மலை நாடுகாத் தரசினி தளிக்குஞ்
    செருவில் வார்கொடிச் சேரர்தங் குலத்தில்வந் துதித்தான்
    பொருவில் சீர்க்குல சேகர னெனும்பெயர் பூண்டான்.
    1
    2017 மறங்கி டந்தொளி ரொன்னலர் மணிமுடி வணக்கி
    அறங்கி டந்தொளிர் மனத்தினா னரசுசெய் திடுநாள்
    நிறங்கி டந்தொளி ராக்கையி னிறையெழி லழிக்குந்
    திறங்கி டந்தொளிர் குட்டநோய் சிவணிய தவற்கே.
    2
    2018 உருக்கு நோயினை நோக்கின னோங்கிய வரசின்
    இருக்கு நீரினுக் கியைவதன் றேயிஃ திதனை
    முருக்கு வாமென முன்னினன் மருத்துவர்க் கூவி
    நெருக்கு நோயினை நெருக்குவீ ரெனநிகழ்த் தினனால்.
    3
    2019 தேறு நோய்ப்பகை யாளர்க டெரிந்தநூல் வழிவெவ்
    வேறு லோகங்க ணீற்றியும் வெய்துநெய் வடித்து
    நூறு தேம்பொடி யமைத்துநோன் குளிகைகள் சமைத்து
    நாறு தேங்களி யாக்கியு நாடொறுங் கொடுத்தார்.
    4
    2020 கொடுப்ப தேகடன் மருந்துநோய் குமைக்குநர்க் கதுவாய்
    மடுப்ப தேகடன் மன்னனுக் குவன்றனக் கின்னல்
    படுப்ப தேகட னோய்க்கதன் பரிசினைப் பாரா
    விடுப்ப தேகடன் மருந்தினை யென்றனர் மேலோர்.
    5
    2021 ஆய வேலையி லயற்புலத் தரையர்கள் விடுத்த
    நோயி னாண்மைதேர் மருத்துவர் நுனித்தறிந் தியற்றுந்
    தூய வான்மருந் தினத்தையுந் துகளுறப் புறங்கண்
    டேயு நோய்நனி வீறிய தியாவரு மினைய.
    6
    2022 என்னை கூறுமா றிருநில மருந்தென வெடுத்துச்
    சொன்ன யாவையுந் தொகுத்தநூன் முறையின்வாய் மடுத்தான்
    கொன்னும் வான்மருந் தானும்வெவ் வேறுநோய் குனிப்ப
    மன்னும் வாடினன் மருந்துவேண் டாவென விடுத்தான்.
    7
    2023 கருகி மெய்யெலாங் கறைபொழி புண்பல வாகி
    உருகி வெண்ணிண முகநக மறவிரன் மடங்கி
    இருகை கான்முக மிருசெவி நாசியும் வீங்கி
    வெருவ நோக்குவார் வேற்றுரு வாயினன் வேந்தன்.
    8
    2024 மருந்தி னாலிது மடங்குறா தாயினு மறைகள்
    திருந்த வோதிய வறங்களாற் றீருமென் றெண்ணிப்
    பொருந்து காதலி னறமெலாம் விதியுளி புரிந்தான்.
    அருந்தி யாக்கையை யழிக்குநோய்க் கழிவினைக் காணான்.
    9
    2025 வேறு
    அரத்தச் சடிலத் தெம்பெருமா னமருந் தலங்கள் பலபோற்றி
    இரத்தச் செழும்புண் ணுடற்கீட்டி யின்னல் பெருக்கும் பெருநோயைத்
    துரத்திக் களிப்பா மெனக்கருதித் தொக்க பொருள்கண் மிகத்தழுவி
    வரத்திற் சிறந்த தலந்தோறு மாறா வன்பிற் போய்ப்பணிந்தான்.
    10
    2026 பிள்ளைக் கலைவெண் மதிமுடித்த பெருமான் சரணந் தலந்தோறும்
    உள்ளத் தெழுந்த பேரன்பி னுற்று வணங்கி வழிபடலுந்
    தள்ளற் கரிய பெரும்பிணிதான் றணியா துயரா தொருநிலைமை
    கொள்ளக் களித்தாண் டுகடோறுங் குழகன் றலங்கும் பிடலுற்றான்
    11
    2027 அவ்வா றொழுகி வருநாளோ ராண்டு தனது பதிதணந்து
    கைவா ரணத்தி னுரியார்தங் காமர் தலங்கள் பலவிறைஞ்சி
    ஒவ்வா வரக்க னுயிர்பருகி யொளிர்வா ணுதலைச் சிறைமீட்ட
    செவ்வாய் மையினான் வழிபட்ட சேது வணங்கித் திரும்பினான்.
    12
    2028 செல்லு நெறியின் மகதியாழ்த் தெய்வ முனிவ னெதிர்ப்படலும்
    வல்லை வணங்கி யெனையாளும் வரதா வடியே னுடற்கிளைத்த
    அல்லற் பிணிவிட் டகலுமா றருளா யென்றா னம்முனிவன்
    ஒல்லையிரங்கி விறல்வேந்த னுவகை கிளைப்ப வுரைக்குமால்.
    13
    2029 பண்டு புரிந்த தீவினையாற் படர்வ தாகும் பலநோயும்
    மண்டு மவற்றுண் மணிமனுநன் மருந்தாற் றீராப் பிணியேனும்
    அண்டர் பெருமா னமர்தலத்தி னகலு மனைய தலந்தம்முட்
    கண்ட வுடனே பயனளிக்குங் காமர் தலமொன் றுளதாமால்.
    14
    2030 அனைய தலம்வண் டிசைமுரல வடர்மெல் லிதழின் முறுக்கவிழு
    நனைமென் பொகுட்டம் போருகத்தி னணுகோ திமத்தி னிளம்பிள்ளை
    கனைவெண் டரங்கந் தவழ்ந்தசைப்பக் களித்துத் துயில்கூர் தடம்பொய்கை
    முனைவ னருள்போற் குளிர்பெருக்கு மூதூர்க் காஞ்சிப் பேரூரே.
    15
    2031 வேறு
    காப்பி னாலுல கத்துக் கரிசெலாம்
    ஓப்பி நேமி யுருட்டுஞ்செங் கோலினாய்
    ஆப்பி யிற்புழு வர்க்கமு றாதுகாண்
    மாப்பெ ருந்தல மாமவ் வரைப்பிடை.
    16
    2032 அன்ன மாநகர் மேன்மை யனைத்தையும்
    என்னை கூறுத லேந்தயின் மன்னவ
    துன்னி நீயந்தச் சூழலு றாமுனங்
    கன்னி நோய்கழிந் தோடுதல் காண்டியால்.
    17
    2033 கருத்தின் வேறு கருதலை யின்னினித்
    திருத்த னாதி புரத்தினைச் சேறியென்
    றருத்தி யோடு மறைந்து மறைந்தனன்
    நிருத்தன் சீர்த்தி நிகழ்த்திடும் வீணையான்.
    18
    2034 அற்றை ஞான்றடர் நோய்கழிந் தானெனப்
    பெற்ற வோகை பிறங்கவை வேலினான்
    உற்ற நாட்டை யொழிந்துயர் கொங்குசேர்ந் 
    தெற்று நீர்நதிக் காஞ்சியை யெய்தினான்.
    19
    2035 வணங்கிக் காஞ்சி வருபுன லாடினான்
    உணங்கிக் கன்ம முலக்கும்பே ரூர்வயின்
    அணங்கி னோடம ரண்ணலைத் தாழ்ந்தனன்
    பிணங்கு நோய்பிரிந் தோடிய தென்பவே. 0
    20
    2036 தேசு மிக்க திருவுரு வாயினான்
    ஈசன் மிக்கரு ளென்றரத் துஞ்செல
    நேச மிக்க நெறியில னம்மவென்
    றாசை மிக்க வகத்தொடு மாடினான்.
    21
    2037 பட்டி நாயகற் கான பணிபல
    முட்டி லாத முறையி னியற்றினான்
    விட்டு நீங்கற் கருமை விரவலிற்
    சட்ட வவ்வயிற் றங்கி வதிந்தனன்.
    22
    2038 பத்தி செய்து பணிசெயு நாளையில்
    தொத்து டற்பொறை நீங்கத்தொன் மாமலக்
    கொத்து நீங்கிக் குழகன் பதமெனு
    முத்தி யெய்தி முடிவிலின் பாயினான்.
    23
    2039 வேறு
    பிரியாத பிணிகெழுவிப் பேரன்பிற் சேரலன்றான்
    முரியாத வீடெய்து முறைமையினை வகுத்துரைத்தாந்
    திரிலோக சோழனுறு செயிர்தீர்ந்த படிமொழிதும்
    உரிதாகக் கேண்மினென வுறுவரர்க்கோ துவன்சூதன்
    24

    குலசேகரன் குட்டநோய் தீர்ந்தபடலம் முற்றிற்று
    ஆகத் திருவிருத்தம் – 2039
    ------------

    33. திரிலோகசோழன் செயிர்தீர்ந்தபடலம் (2040-2072)

    2040 இருணெ டும்பிழம் பெடுத்துவாய்ப் பெயவருங் காலம்
    பருதி தப்பினும் பருவந்தப் பாதுநீர் வழங்கி
    முருகு விம்மலர்ப் பண்ணைகண் முறைமுறை விளைக்கும்
    பெருகு காவிரி நாட்டினைப் பேணுமோர் சோழன்
    1
    2041 மும்மை வையகத் திடரெலா முதலொடு முருக்கி
    அம்ம விண்ணகத் தரையனும் வரிசைக ளாற்றச்
    செம்மை செய்தலிற் றிரிலோக சோழனென் றொருபேர்
    விம்மு காதலின் யாவரும் விளம்புவ ரவற்கே.
    2
    2042 ஒளிறு வேலவன் முறைசெய வோங்குசோ ணாட்டின்
    அளகை யாளிபோ லனைவரும் வெறுக்கைய ராகி
    வளமை யீட்டுவெண் பூதிசா தனநனி மருவி
    வெளிறில் கேள்விய ராய்ப்பெரு வாழ்க்கைமே வினரால்.
    3
    2043 சைவ ரேயலாற் பரமதத் தவர்தமைக் காணாத்
    தெய்வ மேகமழ் திருத்தகு காவிரி நாட்டின்
    மெய்வி ராவிய கல்வியர் தம்மொடு மேவி
    நெய்வி ராவிய வேலினான் முறைநிகழ்த் திடுநாள்.
    4
    2044 செல்வ மிக்கநே வாளதே யத்திடை யிருந்து 
    கல்வி கற்றகா பாலர்கள் சிலர்சென்று கலந்தார்
    வில்வ மிக்கணி விமலனார் தலம்பல விராவிச்
    சொல்வி ளைத்திடுஞ் சோழநாட் டெல்லையின் மாதோ.
    5
    2045 அனைய செவ்வியிற் சிவநிசி யடுத்ததந் நாளின்
    வினையி கந்தநல் வேதிய ரடியவர் பலருந்
    தனைநி கர்த்திடுந் திருவிடை மருதெனுந் தலத்தின்
    முனைவ னின்னருட் சேவடி வணங்கமுன் னினரால்.
    6
    44
    2046 ஆற்றன் மிக்கவச் சோழனு மன்புள மீர்ப்பக்
    கூற்றை வென்றருள் குழகனார் குரைகழற் பாதம்
    போற்ற வவ்வயிற் புக்கன னன்னது தெரிந்து
    மாற்ற மிக்ககா பாலரும் வல்விரைந் தடுத்தார்.
    7
    2047 திருந்தி ணர்ச்செழுங் கொன்றையார் சேவடி வணங்கப்
    பொருந்து செவ்விபார்த் திருந்தனன் பூபதி யொருபால்
    இருந்த வெல்லையி லெய்துகா பாலவிப் பிரர்கள்
    வருந்த லின்றியே கண்டனர் வழங்கின ராசி.
    8
    2048 கொண்ட வேடமு மன்னவர் குரூஉமணி யுருவின்
    மண்டு காந்தியு மதித்தவர் மனமதித் திலனாய்க்
    கண்ட காவலன் விருப்பொடுங் கையிணை கூப்பி
    மிண்டு தீவினை யாரையா ரெனவின வினனால்.
    9
    2049 கடாவு மன்னவன் கருத்தினைக் கதுமென நோக்கி
    விடாது நம்வழி மேவுவ னிவனென விழைந்து
    தடாத தீவினை போல்பவர் தம்முளே யொருவன்
    கெடாத மூப்புடை யானெதிர் கிளக்குவ னானான்.
    10
    2050 நமது வாழ்க்கையி னிருக்கைநே வாளநற் றேயம்
    நுமது நாட்டுடை வளமையு நுமதிரும் புகழும்
    எமது வார்செவி யேறலி னினிதுகாண் விருப்பிற்
    சமர வேற்றடங் கையினாய் சார்ந்தன மீங்கு.
    11
    2051 பண்டு மாதவம் புரிந்தனை பார்த்திவ வதனால்
    விண்ட தீவினை யாளரே மேவவிவ் விடத்துக்
    கண்டு காதலை யாயினை கரையுமந் தணமொன்
    றுண்டு சூழ்ந்தவ ரொழிதர விருந்துகே ளென்றான்.
    12
    2052 அரைய னோக்கமு மதற்குடன் பட்டமை நோக்கி
    விரைய வாங்குளா ரெழுந்துவே றிடத்தொதுங் கினறாற்
    புரையி லீரினிப் புகல்கெனப் பூபதி பணிந்தான்.
    வரைசெய் துன்மதத் தலைவனும் வழங்குதல் வலித்தான்
    13
    2053 உலக மின்புறத் தக்ககா ரியநனி யோரின்
    இலகு மைவிழி யாரினா மிணைவிழைச் சன்றே
    கலவு மற்றது காரியத் தன்றுகொ லுயிர்கள்
    பலவு மல்குத லாயின பார்த்திவ பாராய்.
    14
    2054 உலக மாக்குதற் கீசனென் றொருவனுண் டென்பர்
    புலனி லாதவ ரவர்திறம் போகவை யகத்துக்
    கலவு மீசனைக் கண்டவர் யார்கண்ணிற் காண
    நிலவு நீரதே மெய்நில வாதது பொய்யே.
    15
    2055 ஆத லாலகி லத்தினுக் கமரன்வே றில்லை
    ஓது நீண்மர மரத்துட னுரிஞிய பொழுதுஞ்
    சோதி வான்சிலை சுடரவன் கதிர்தொடும் பொழுதும்
    காது தீயெழுங் கலவியிற் றோன்றுவ துலகே.
    16
    2056 அனைய தாதலி னரும்பொரு ளிணைவிழைச் சன்றி
    வினையில் காவல வேறிலை யிணைவிழைச் சினுக்குப்
    புனையு மாட்சிமை தருவது புகல்சுரா பானம்
    இனைய பானமும் பொருளென வினிதுகைக் கோடி.
    17
    2057 தெய்வ நல்லவர் பெரியவ ரெனச்சிலர் பேசி
    உய்ய லாமென வுரைப்பர்க ளவையெலா மொழிக
    வைய மீக்கொளு மன்னவ வெனமதி மருளப்
    பொய்யை மெய்யெனப் புகன்றனன் புன்மதத் தலைவன்.
    18
    2058 வேறு
    காபால மதத்தலைவன் கடனிதுவென் றெடுத்துரைத்த
    ஆபாச நெறிவிரும்பி யறிவழிந்து திறல்வேந்தன்
    மாபாச வலைவளைப்ப மறைநெறியின் முறைதிறம்பிச்
    சீபாவி யெனவறிஞர் சிந்தைசெய வொழுகினான்.
    19
    2059 மதுநுகர்ந்து வருணநிலை வழுக்கிமட மாதரார்
    புதுநலனுண் டுயரொழுக்கம் பூண்டவரை நனியலைத்துக்
    கதுவலுறுங் காபால மதத்தவரே களிதூங்க
    இதமகன்ற கொடுங்கோன்மை யியற்றினன்வை யகத்தரசன்.
    20
    2060 மன்னவனே முறைதிறம்பின் மன்னவனா ணையினடக்குந்
    துன்னியவை யகமுறைமை தொடங்கிநடந் திடுமேகொல்
    பொன்னிவளந் தருநாட்டுப் பொருந்தியமாந் தர்களெல்லாம்
    இன்னவிலக் கிவைவிதியென் றிரண்டின்றி யொழுகினார்.
    21
    2061 முட்டாத சோணாடு முறைதிறம்புஞ் செயனோக்கி
    மட்டார்ந்த மலர்க்குரிசின் மனம்வருந்தித் தீவினையின்
    ஒட்டாத நாரதனை யுறவழைத்துக் கொடுங்கோன்மை
    தொட்டானைத் திரிலோக சோழனைநீ திருத்தென்றான்.
    22
    2062 வீணைமுனி யடிவணங்கி விரைந்துபோய்ச் சபையடுத்துப்
    பேணுபர மதத்தழுந்தும் பெருமிதமன் னவன்வணங்கா
    மாணுமடத் தினைநோக்கி மணிக்கரகத் தறலள்ளிப்
    பூணுறுமஞ் செழுத்தோதிப் பொருக்கெனவா னனத்தெறிந்தான்.
    23
    2063 அஞ்செழுத்து நவின்றெறிந்த வற்றன்முகத்திற் படிதலொடும்
    விஞ்சியதுன் மதமோகம் விளிந்ததுமன் னவனெழுந்து
    கஞ்சமலர்ப் பதம்பணிந்தான் கருணைவிழி நோக்கருளி
    எஞ்சலுறாத் தவமுனிவ னெடுத்தளித்தான் றிருநீறு.
    24
    2064 வாழ்ந்தனென் றங்கைகொடு வயங்குதிரு வெண்ணீறு
    வீழ்ந்தணிந்து விறல்வேந்தன் விழைந்திருப்ப முனிநோக்கிச்
    சூழ்ந்துமுன நீயளித்த சோணாடிப் பொழுதென்னாய்த்
    தாழ்ந்ததுபார் முறைதவிர்ந்த தன்மையா லெனநுவன்றான்.
    25
    2065 வேறு
    பார்த்து மன்னவன் பதைபதைத் துள்ளக மழிந்து
    வேர்த்து மெய்யெலா முனிவனை மீட்டெதிர் வணங்கி
    ஆர்த்த தீவினை யாளனே னடுபிழை யொருவிச்
    சேர்த்தி நன்மையென் றிரந்தனன் றுதிபல செப்பி.
    26
    2066 திருந்து மன்னனை முனிவரன் றிருமுக நோக்கி
    வருந்தன் மேலைநற் சிதம்பர வரைப்பினை யடுத்துப்
    பொருந்த லார்புரம் பொடித்தவர் பூங்கழல் பணிதி
    மருந்து தீவினைக் கதுவலா லிலையென்று மறைந்தான்.
    27
    2067 மகதி யாழினன் மன்னனைத் திருத்திய தறிந்து
    தகுதி யல்லன சார்த்துந்தா பதனமக் கென்னா
    உகும னத்தொடுந் துன்மதத் தினர்களோட் டந்தார்
    புகழ்செய் மன்னனு மடுத்தனன் புகரறு பேரூர்.
    28
    2068 தத்து வார்திரைக் காஞ்சியிற் றண்புன லாடிப்
    பத்தி யோடுயர் கோயிலிற் படர்ந்தெதிர் பணிந்து
    வைத்த வேல்விழி மரகத வல்லியோ டமர்ந்த
    அத்த னார்தமைப் போற்றின னகன்றன பிழைகள். 9
    29
    2069 சில்ல நாளவ ணிருந்துநற் பலபணி செய்திட்
    டல்லை நேர்களத் தமலனா ரருள்விடை பெற்றுச்
    நல்ல காவிரி நாட்டினை நணுகிமுன் போலச்
    சொல்லு நூல்வழி நடவினன் றுகளறு செங்கோல்.
    30
    2070 ஆளூ மண்ணலார் தலங்களி னாற்றுதீ வினையுங்
    காள கண்டமா புரமெனக் கரையிடை மருதின்
    மாளு மந்நகர் வரைப்பிடை யாற்றுவல் வினைதான்
    நீள்வ தன்றியே யாங்கணு நிலையழிந் திடாதால்.
    31
    2071 அன்ன தாகிய விடைமரு திடையிருந் தாற்றுந்
    துன்னு தீவினைத் தொடர்திரி லோகநற் சோழன்
    முன்னி நீங்கின னென்றிடின் மொழிந்தபே ரூரின்
    மன்னு மேன்மையை யாவரே வகுத்திட வல்லார்.
    32
    2072 சோழன் வல்வினை தொலைத்தமை கூறிய சூதன்
    வாழி யண்ணலார் பார்ப்பதி தனக்குமுன் வகுத்த
    தாழி ருஞ்சடை பூதிகண் மணிதளிர் வில்வங் 
    கேழி னல்லுப சாரமுங் கிளக்குவ னானான்.
    33

    திரிலோகசோழன் செயிர்தீர்ந்த படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் – 2072
    -------

    34. உபதேசப் படலம் (2073-2155)

    2073 வெள்ளியம் பலத்துமுன் விமலர் காட்டிய
    ஒள்ளிய திருநட முளத்து நாடொறு
    நள்ளுற நினைத்திடு நங்கை பார்ப்பதிக்
    கெள்ளலி லையமொன் றெழுந்த தென்பவே.
    14
    2074 அவ்விய முயிர்க்கற வாடல் கண்டிடுங்
    கொவ்வையங் கனிநிகர் கோல வாயிதழ்
    நவ்வியின் விழியுமை நங்கை நாதரைச்
    செவ்வியின் வினவுமா சிந்தை செய்தனள்.
    2
    2075 பண்ணவர் தொழுதெழும் பட்டி நாயகர்
    உண்ணெகிழ் கருணையி னொருதி னந்தனில்
    எண்ணரு மைக்ழ்ச்சியி னிருந்த செவ்வியைத் 
    தண்ணிய விமவரைத் தைய னோக்கினாள்.
    3
    2076 எழுந்தனள் வணங்கின ளிறைவ யாவர்க்குந்
    தொழுந்தர மன்றியத் தொடர்புந் தீர்சுகத்
    தழுந்துநர்க் கருளுமா னந்த தாண்டவஞ்
    செழுந்திரு முனிவர்க்குந் தெரித்த தென்னென்றாள்.
    4
    2077 குங்குமக் குவிமுலைக் குடங்கை வென்றகட்
    பங்கய மலர்முகப் பாவைக் கீர்ம்புனல்
    திங்களஞ் சடைமுடித் தெய்வக் கொன்றையின்
    அங்கண னுத்தர மருளிச் செய்யுமால்.
    5
    2078 வேறு
    பத்தி பெருகக் கோமுனியும் பட்டி முனியும் படர்செந்தீ
    ஒத்த சடையும் வெண்ணீறு முயர்கண் மணியு மிவைதரித்துக்
    கொத்து வளர்கூ விளத்தளிர்கள் கொண்டிங் குபசா ரத்தெம்மைச்
    சுத்தமளிக்கு மிலிங்கத்துத் தொடுத்து நெடுநாட் பூசித்தார்.
    6
    2079 மன்றி னடிக்கு மெமதுதிரு வடிவி னிடத்தும் பூசித்துத்
    துன்று சிறப்பின் விழாவெடுத்துத் தொழுது வணங்கி மலமைந்தும்
    வென்று விளங்கு முளத்தினராய் விழைந்தா ரதனால் வியப்பெய்த
    அன்று நடன மவர்காண வளித்தா மணங்கே யெனமொழிந்தான்.
    7
    2080 பொறிவா ளரவப் பூணணிந்த புனிதர் புகன்ற மொழிகேளா
    மறிமா னோக்கி னுமைமாது மகிழ்ந்து தலைவா விருவோருஞ்
    செறிவார் சடையா திகடரித்துத் திகழ்கூ விளங்கொண் டுபசார
    நெறியாற் பூசித் தாரென்றீ ரவற்றின் றிறமு நிகழ்த்துமென.
    8
    2081 ஆடு மரவிற் புடைபரந்த வல்கு லுமையாட் குலகுய்ய
    நீடு சடிலத் துயர்வுமொளிர் நீற்றி னுயர்வுங் கண்மணியின்
    பீடும் வளர்கூ விளத்துயர்வும் பிறங்கு முபசா ரமுமுடியிற்
    கோடு மதிவெண் கலைவேய்ந்த குழகர் தெரிய வுரைப்பாரால்.
    9
    2082 விம்மி யெழுந்து புடைபரந்து வெண்ணித் திலமா லிகைதரித்த
    கொம்மை முலையாய் நம்முடைய கோல மார்ந்த பலவுறுப்புத்
    தம்மு ளுயர்ந்த வுறுப்பாகுந் தயங்குந் தழலொத் தொளிர்சடில
    மும்மை யுலகும் வியப்பெய்த முடிமேல் விளங்குங் காட்சியான்.
    10
    2083 அரையற் குரிய வடையாள மணிந்தோர் தம்மை யரையனென
    விரைய மதித்திட் டுபசாரம் விளைப்பா ரெவரு மதுபோலப்
    புரையி லெமது சடைதரித்த புனிதர் தம்மை யாமெனவே
    உரையின் மனத்திற் காயத்தி னும்பர் முதலோர் வழிபடுவார்.
    11
    2084 வார்ந்த சடில மொரோவொன்று வயங்கு மிலிங்க மொரோ வொன்றா
    மார்ந்த சடிலம் யாரொருவ னணிந்தா னவற்கா யிரமுறைமுன்
    சார்ந்த பவத்தி னுள்ளாருந் தனக்கா யிரமா முறைபின்னர்
    நேர்ந்த பவத்தி னுள்ளாரு நீங்கி வினையெம் முலகடைவார்.
    12
    2085 கதிருஞ் சடிலந் தரித்தானைக் கண்டு வணங்கான் றவமெல்லா
    முதிரும் பரிந்து வணங்கினா னுலப்பில் பாவி யாயிடுனும்
    முதிருந் தவத்தோ டுயர்செல்வ மொய்க்கு மவற்கே செழுங்கனகப்
    பிதிருங் கணியி னறுந்தாதும் பேதுற் றிரியுஞ் சுணங்கினாய்.
    13
    2086 சுடருஞ் சடிலந் தோய்ந்தபுனற் றுளியொன் றொருவன் மேற்றெறிப்பின்
    அடரும் பெரும்பேய் பூதங்க ளலைக்குந் துட்ட தெய்வதத்தின்
    இடரும் பிணியும் பாதகமு மெனைத்து மிரியு மாதலினாற்
    படருஞ் சடிலத் தவன்பச்சைப் பாவாய் நம்மின் வேறல்லன்.
    14
    2087 புரிபொற் சடில முடிதரித்த புனிதர் குலத்திற் பிறந்தோரும்
    பிரம னுறுகற் பகங்கள்சதம் பேணி நமது சிவலோகம்
    விரவி யினிது வாழ்வரெனின் வேணி யணிந்தார் தம்பெருமை
    அரவி னகன்ற கடிதடத்தா யளக்குந் தரமோ வமரருக்கும்.
    15
    2088 வேறு
    இயம்புவை திகநீ றென்றா விலெளகிக பூதி யென்றாப்
    பயந்தரு நீறி ரண்டாம் பகர்ந்தவை திகவெண் பூதி
    உயர்ந்திடு மோம குண்டத் தொளிர்வதா மற்றைப் பூதி
    வயந்தரு புனித நல்லான் மயத்தினா னாவ தாகும்.
    16
    2089 தகுபுரா தனியே யென்றுஞ் சத்தியோ சாதை யென்றும்
    இகலில்வை திகவெண் பூதி யிருதிற னாகு நேரே
    புகழ்தகு வேத னோம குண்டத்திற் பூப்பதொன்று
    பார்தரு மறையோ ரோம்பு மங்கியிற் படுவ தொன்றாம்.
    17
    2090 இலெளகிக பூதி தானு மிருதிற னாகும் பாவம்
    உலைவுற வாற்றுந் தீக்கை யுற்றவர்க் குரிய தாக
    நிலைபெற நிறுவுஞ் சைவ நீறென்றுந் தீக்கை யின்றி
    அலைவுறு மாந்தர் தங்கட் கடுத்திடு மசைவ மென்றும்.
    18
    2091 வேறு
    கற்பமனு கற்பமுப கற்பமென மூன்றாம்
    அற்பினொடு சைவரணி யுந்தவள நீறு
    பொற்பவவை மூன்றுதிற னும்புகறல் கேளாய்
    விற்புருவ வேற்கண்விது வாணுதன்ம டந்தாய். 9
    19
    2092 கன்றுபய வாதகளி நாகுபுனிற் றுக்கோ
    கன்றிறுதி யுற்றகபி லைக்குலம ட்டான்
    கன்றுதுணை யீன்றகற வித்திரண்மு திர்ந்த
    கன்றுறு பசுக்கருவ யிற்றுவளர் பெற்றம்.
    20
    2093 வார்ந்தசெவி கோடுநெடு வாலிவைக டம்மில்
    தீர்ந்தசு ரபித்தொகுதி தீதுவளர் பவ்வீ
    ஆர்ந்துவரு காலிபிணி யான்றகுடஞ் சுட்டென்
    றோர்ந்தவிவை நீங்கவெழி லோங்கிவளர் கற்றான்.
    21
    2094 பங்குனியி னெல்லரிப னைக்கணுறு தாண்மேய்ந்
    தங்கவைவி டுத்தமய மட்டமியி ரேழில்
    தங்குபதி னைந்தின்வளர் சாதமனு வோதி
    மண்டனில்வி ழாமுன்மரை மெல்லிலையி னேற்று.
    22
    2095 வழும்பொருவி வாமமனு வோதிவளர் கவ்யம்
    பொழிந்ததில கோரமது போற்றுபு பிசைந்து
    செழும்புருடம் விண்டுதிரள் செய்துதிக ழோமத்
    தெழுந்தழன்ம டுத்தபினெ டுத்திடலீ சானம்.
    23
    2096 வேறு
    புதிய வறுவை கொடுவடித்துப் புதிய கடத்திற் கொளவமைத்துக்
    கதிசெய் மனுக்கா யத்திரியைக் கழறிப் புனித நிலத்திருத்தி
    மதுவிண் டொழுகு மலர்சாத்தி மறுவி றுகிலால் வாய்ப்பெய்தல்
    விதியின் றழலி னிடாதுனக்கி விளைவித் திடலு முறையாமால்
    24
    2097 கனத்திற் கரிய பூங்குழலாய் கற்ப முரைத்தா மனுகற்பம்
    வனத்தி லுணங்கு மயமேட மதியிற் கொணர்ந்து பொடித்ததன்கண்
    இனத்திற் சிறந்த கோசலம்வார்த் தெடுத்து நவின்ற முறையானே
    அனற்றி விளைத்துக் கொளலாகு மறைது முபகற் பமுங்கேளாய்.
    25
    2098 வளர்தீ யியல்பிற் கவர்ந்துண்ட வனத்துப் பொடியி லானைந்துந்
    தளரா தொழுக்கி மொழிந்தபடி தழல்வைத் தெடுத்துக் கொளலாகும்
    அளவாப் பிணியைத் தருநீல மாயு ணீக்குந் தாமிரஞ்சீர்
    பிளவா விசையைத் தபுஞ்செம்மை பீத மளிக்கு நல்குரவே.
    26
    2099 வெண்மை யளவில் புண்ணியத்தை விளைக்கு மதனா லதுதரிக்கும்
    வண்மை யுடைய ததுதன்னை மான்றோல் புலித்தோல் வத்திரத்தால்
    ஒண்மை விரல்பன் னிரண்டளவி னுயர மிருநான் களவகலந்
    திண்மை கொளும்வாய் வட்டமுறச் செயுமா லயத்துச் செறித்தணிவார்.
    27
    2100 தரிக்கும் விரறர்ச் சனிகனிட்டை தணந்த மூன்று மாமவற்றால்
    வரிக்கு முறைகே ளனாமிகைமத் திமையால் வாமந் தொடுத்தீர்த்துத்
    தெரிக்கும் வலப்பாற் றொடுத்திடையே திகழங் குட்டத் தெதிரீர்த்தல்
    பரிக்கும் வலத்தோட் கெதிர்முறையிற் பரிந்து தரித்தன் மரபாமால்.
    28
    2101 இடைமூ விரலி னொருங்குறநே ரிடலு முறையாஞ் சிரநுதன்மார்
    புடைசே ருந்திக் கீசான முயர்தற் புருட மகோரமனு
    நடைசேர் வாமம் புகன்றணிவர் நவில்சா தத்தின் முழந்தாடோள்
    படுசீர் முழங்கை முன்கைகளம் பரந்த வெரிந்வார் செவிக்கணிவர்.
    29
    2102 அறவொன் றுடனென் றணுகனனி யகறல் வளைத லிடையறுதல்
    பிறவு மொழிய வணிநீற்றிற் பேணு மளவு நுதலுரந்தோட்
    குறுமங் குலமூ விரண்டாகு மொழிந்த வுறுப்புக் கொன்றேயாம்
    இறுமெல் லிடையாய் திரிசூலத் தெழிலார் பூதி யிடலுமாம்.
    30
    2103 திகழுத் தூளஞ் செய்தன்றித் திரிபுண் டரஞ்சாத் தாரெவருந்
    தகுசந் திகல்செய் யாக்காலந் தன்னிற் புனனீத் தினிதணிவர்
    முகிழ்மென் முலையாய் சைவர்புரி முறைமை தெரித்தா மறைவழியிற்
    பகர்வை திகர்நீ றணிகின்ற பரிசு முரைப்பா மினிக்கேண்மோ.
    31
    2104 மறையோர் சிரம்வா ணுதன்மருமம் வாகு விரண்டு மவற்றொடுமண்
    இறையோர் செகில்வார் துடைநான்கு மிவற்றோ டேனை யோர்முழங்கை
    செறிசீர் முன்கை முழந்தாள்வெந் செவிகண் பதினொன் றினுநீறு
    குறையா தணிவர் செகிற்றுடையுங் கூட்டி மறையோ ரணிதலுமாம்.
    32
    2105 தக்க வகர மிருக்குவிரா சதவொண் குணமான் மாவென்னத்
    தொக்க பொறியா திகள்கிரியா சத்தி துகடீர் மாதேவர்
    பக்க வழல்சேர் காருகபத் தியமென் றிவற்றின் மயமாகு
    மிக்க வெழிலார் புண்டரத்துள் விளங்கு முதற்புண் டரமாதோ.
    33
    2106 வழங்கு முகர மெசுர்வேதம் வளர்சாத் துவிக மகமென்ன
    முழங்கி யிடுமான் மாவிச்சா சத்தி முடிவின் மகேசர்மிகத்
    தழங்கி யெழுந்தக் கிணச்செந்தீ சாற்று மிவற்றின் மயமாகும்
    பழங்க ணறுத்து வான்கதியிற் படுக்கு மிரண்டாம் புண்டரமே.
    34
    2107 போற்று மகர முயர்சாமம் புகறா மதமாங் குணமலநோய்
    நீற்றும் பரமான் மாநன்மை நிகழ்த்து ஞான சத்திதகத்
    தேற்றுஞ் சிவனா கவநீயஞ் செப்பு மிவற்றின் மயமாகுங்
    கீற்று மதிவா ணுதற்பாவாய் கிளந்த மூன்றாம் புண்டரமே.
    35
    2108
    மறையின் வழிச்செந் தீவேட்கு மறைஞர் முதலோர் மூவர்க்கும்
    அறைவை திகவெண் பொடியாகு மசைவ மெனமுன் மொழிந்தபடி
    பறையு மெழிலா லயத்துமடைப் பள்ளிப் பொடியு மடியர்மடத்
    துறையு மடைப்பள் ளிப்பொடியு முயர்கான் வெந்த பொடியுமாம்.
    36
    2109 தீக்கை புரியாச் சூத்திரர்க்குச் சிறப்ப தாகு மடைப்பள்ளி
    ஆக்கும் பொடிகான் வெந்தபொடி யடுப்ப தாகுஞ் சாங்கரர்க்குத்
    தீக்குச் சுரர்க்குக் குரவர்க்குத் திருமுன் வழியிற் சுத்தியில்லாப்
    பார்க்கு ளிழிஞ ரெதிரிடத்தும் பாவாய் தரித்த லிழுக்காகும்.
    37
    2110 ஒருகை யேற்ற பொடிவிதியி னுஞற்றா நீறு விலைப்பூதி
    அருள்செய் தீக்கை யிலர்போதந் தளித்த பூதி யிவையாகா
    தரையின் விழுத்த லங்காத்த றலைகம் பித்தல் கவிழ்தன்முதல்
    வரைசெய் பலவு மொழித்திடுவர் மாதே பூதி தரித்திடுங்கால்.
    38
    2111 பரவு மறையோ ருத்தூளம் படிவ முழுது நாபியின்மேல்
    அரசர் வணிகர் பட்டம்போ லணிவர் சதுர்த்த ரெழுத்தாக
    விரல்க ளொருமூன் றுறவணிவர் விபூதி யணியா தறமாதி
    புரவு வலர்நல் வினையொன்றும் போற்றார் பனுவல் போற்றுவார்.
    39
    2112 ஏத மகற்றுந் திருநீற்றி னியற்கை யறிந்து தரியாதார்
    வேத நவின்ற நெறிநின்றும் விலகும் பதித ராய்விடுவர்
    பூதி யணியார் முகம்புறங்கா டதனை நோக்கிற் புரைதீர்ந்தோர்
    தீது கழிய வொருநூறு திகழஞ் செழுத்தைக் கணித்திடுவர்.
    40
    2113 நீறு தரியார் தவமாதி நிரம்பச் செயினு முவர்வித்திற்
    கூறு பயனின் றாம்பூதி கொண்டோர் வாளாங் கிருந்திடினும்
    வீறு தவமா திகணி ரம்ப விளைத்தோ ராவர் தென்புலத்தார்க்
    கேறு தினத்தி னீறிடுவார்க் கியற்றிற் பூசைப் பயனனந்தம்.
    41
    2114 நீட லுறுந்தீ வினையனைத்து நீற்ரி விடலா னீறென்றும்
    வீடில் வெறுக்கை தருதலினால் விபூதி யென்றும் முயிர்தோறுங்
    கூடு மலமா சினைக்கழுவுங் குணத்தாற் சார மென்றுமட
    மோட வளர்சோ தியைத் தரலாற் பசித மென்று முரைப்பரால்.
    42
    2115 அலகை பூதம் வேதாள மடர்மந் திரத்தா னலைப்புறுத்தும்
    பலதெய் வதங்க ளிடரச்சம் பழிபா வங்கண் மடமென்னுங்
    கலதி முழுது மெளிதகற்றிக் காப்புக் கொளலாற் காப்புமா
    நிலவைப் பிடத்தி னதன்பெருமை நிகழ்த்த லரிதா மடமாதே.
    43
    2116 வேறு
    முப்பு ரத்தவர் முருக்கலின் முரிந்திரிந் தமரர்
    செப்பு தற்கரி தாகிய தவஞ்செயச் சென்றங்
    கப்ப தத்திமை யாதுநா நோக்கின மாக
    மைப்பெ ருங்கணாய் முக்கணும் வார்புன றுளித்த.
    44
    2117 வலக்க ணீரிடைப் பன்னிரு மரமிடப் பாற்கட்
    சலத்தி னேழிதரு மரந்தழல் விழியினீர் தோய்ந்த
    நிலத்தி னையிரு மரமுமா யினநிகழ்த் தியவிக்
    குலத்துக் கியாவருங் கூறுபே ருருத்திர வக்கம்.
    45
    2118 வெண்மை யுந்திகழ் பொன்மையும் வெண்மைபொன் மையுஞ்சேர்
    வண்மை யுங்கரு மையுமென வகுத்தநா னிறத்து
    முண்மை யக்கமா மணிகளவ் வுரைத்தன முறையே
    தண்மை யந்தணர் முதலிய நால்வர்க்குஞ் சாரும். 6
    46
    2119 ஒருமு கஞ்சிவன் வடிவுவே தியர்கொலை யொழிக்கும்
    இருமு கஞ்சிவன் சக்தியென் றிருவர்தம் வடிவாம்
    பெருக ரும்பசுக் கொலையினைப் பெயர்க்குமும் முகஞ்சீர்
    மருவு மங்கியின் வடிவுமா தர்கள்கொலை மாற்றும்.
    47
    2120 நான்மு கத்தது நான்முக னரர்கொலை தொலைக்குந்
    தேன்மு கத்தலர் பனிமலர்க் கூந்தலாய் திகழை
    வான்மு கத்தது காலவங் கிப்பெயர் வரதன்
    கான்மு கத்ததீங் குணவினாங் கரிசெலாங் கழிக்கும்.
    48
    2121 மூன்றி ரட்டிய முகமறு முகனுரு வலக்கை
    ஏன்ற ணிந்திடின் மறைஞரை யிறுத்திட வெதிரே
    தோன்று ருத்தனைத் துமிக்குமேழ் முகஞ்சுடர் சேடன்
    ஆன்ற பல்பசுக் கொலைதப நியக்கள வகற்றும்.
    49
    2122 எட்டு மாமுக மேரம்ப னுருக்குரு தாரந்
    தொட்ட பாதகந் தொகுபல தானங்க ளேற்று
    முட்டு பாதகம் பிறர்தமோ தனமுகந் துண்டு
    விட்ட பாதக மனைத்தையுங் கதுமென வீழ்த்தும்.
    50
    2123 ஒன்ப தாகிய முகம்வயி ரவனுருக் கணாதி
    வன்ப தாகிய வாளராத் தீங்குகண் மாற்றித்
    துன்ப தாகிய தொடரறு வெறுக்கைக டுறுத்திட்
    டின்ப தாகிய முத்தியு மெண்மையி னளிக்கும்.
    51
    2124 ஒருப தாகிய முகம்புவி யுண்டவ னுருவ
    மருவு நாளொடு கோள்பல மண்ணைபூ தங்கள்
    பிரம ராக்கத முதலிய பேதுறப் புரியும்
    விரவு தீங்கெலாம் வெயில்படு பனியென விளிக்கும்.
    52
    2125 ஐந்த னோடிரு மூன்றனைத் தலைப்பெயா னனந்தான்
    பந்த நீங்குருத் திரர்பதி னொருவர்தம் படிவ
    முந்து மாயிர மேதமொண் பசுக்களோ ரிலக்க
    முந்து வானிதி யுடனளித் திடும்பயன் முகிழ்க்கும்.
    53
    2126
    ஆறி ரட்டிய திருமுக மாறிரு வெய்யோர்
    வீறு மெய்யுறு வாம்பரி மேதத்தின் பயனும்
    ஏறு மிக்கொளி மேருதா னத்தெழு பயனும்
    ஊறு மஞ்சனந் தீட்டிய வோடரிக்கண்ணாய்.
    54
    2127 கந்தன் மெய்பதின் மூன்றுவாண் முகங்கலந் ததுதான்
    சிந்தை வேட்டவுஞ் செம்பொனும் வீரமுஞ் செறிக்குந்
    தந்தை தாய்மனை தனயரைத் துணைவரைக் கருவை
    அந்த மெய்துற வடர்த்தவெங் கொலைகளு மனுக்கும்.
    55
    2128 ஏழி ரட்டிய முகமெம துருவுநின் னுருவுந்
    தாழி ருங்குழ லாய்சுரர் தாபதர் முதலோர்
    சூழ நல்வசி யந்தனித் துகளறத் துறுத்து
    வாழி நம்பெருஞ் சிவபுர வரைப்பிடை யுறுத்தும்.
    56
    2129 அன்ன வேழிரு முகமரி தாமது கிடைத்தான்
    மன்ன வார்களத் தணிவது மந்திர முழுதும்
    நன்னர் வாய்மையிற் பலிக்குநா ளிலநெளி படையில்
    துன்னு மேவலர் புறந்தரும் விறன்மிகத் தோன்றும்.
    57
    2130 சத்தி செய்யினு மந்திரங் கணிப்பினுந் தவங்கள்
    எந்த நல்வினை யியற்றினுங் கண்மணி யணிந்தோர்க்
    கந்த நல்வினைப் பயன்களொன் றனந்தமாய் விளையும்
    வந்தி டும்பய னில்லையம் மணிதரி யார்க்கே. 8
    58
    2131 இழிஞ ராகமற் றவர்களேந் திழைநலா ராகக்
    கழிக ளூன்முதல் கழித்துணு மாந்தர்க ளாக
    மொழியும் வான்மணி முடிமிசை தரித்தன ராயின்
    அழியு நீள்வினை யந்தியி னமதுருப் பெறுவார்.
    59
    2132 வேறு
    சிகையினொரு மணிமுடியி னாறாறு செழுங்களமெண் ணான்கு மர்பில்
    தகைபெறவைம் பதுகரத்தி னீரெட்டு மணிபந்தந் தனிலீ ராறு
    முகமுகமுஞ் செறியவிடை முடிந்துமே ருவுமமைத்து முறையிற் கொள்வார்
    புகலமனு வடநூற்றெட் டதிற்பாதி பாதமுமாம் பூங்கொம் பன்னாய்.
    60
    2133 வடநடத்தி லனாமிகையின் மத்திமயிற் றர்ச்சனியின் மலிநோய் பாறும்
    படர்சினத்தெவ் வர்களிறப்பர் பரபோக வீடெய்தும் பசும்பொற் பாவாய்
    உடல்வெறுத்தார் மேன்மறிப்பர் கீழ்மறிப்பர் நெடும்போக முறுதல் வேட்டோர்
    கடவுண்மணி யொலியாமற் பிறர்விழிக்குப் படாமன்மனுக் கணிப்ப தாகும்.
    61
    2134 மேருவினைத் தொடுத்துமனுக் கணித்திடுவர் வடமறிந்து விரன்மேன் மீட்டு
    மேருவுறுங் காலதனைக் கடவாது வடந்திருப்பல் விதியா நன்மை
    கூருமணி வடந்தவறி நிலம்வீழ்தன் முதலான குற்றங்கட்குச்
    சேருநம துருவினுக்குச் செயுங்கழுவா யதிற்பாதி செய்வர் தக்கோர்.
    62
    2135 விரலிறைபுத் திரசீவஞ் சங்குமணி படிகமணி விளங்கு முத்து
    மரைமணிபொன் மணிகுசையின் வண்முடிகண் மணியென்ன வகுத்த வெல்லாம்
    பரவுமனுக் கணிப்பதற்கா முறையேயொன் றனுக்கொன்று பயன்மிக் காகுங்
    குரவமலி நறுங்குழலா யாதலினாற் கண்மணியே கொள்வர் சான்றோர்.
    63
    2136 மனையினுறும் பயன்பசுக்கோட் டத்தொருப தாநதியின் மருங்கு நூறாந்
    தனைநிகரா லயத்துளொரா யிரம்வனத்தி லிலக்கம்வரை தன்னிற் கோடி
    நனையொழுகு மலர்த்தொடையாய் நமதுதிரு முன்னிடத்தி னவில வொண்ணா
    தனையமணி வடமெடுத்து முறையுளிமந் திரங்கணிப்போர்க் ககிலத் தம்மா.
    64
    2137 முத்திநெறிக் கையைந்து மணிமூவொன் பான்மணிசோ பனத்துக் கின்ப
    மெத்துநிதிக் கொருமுப்பான் மணியவிசா ரந்தனக்கு விளம்பு மூவைந்
    தித்திறத்தின் வெவ்வேறு வடமியற்று வாரறிந்தோ ரிலங்கு வேற்கட்
    பைத்தமணி யரவல்குற் பைந்தொடிக்கைத் தரளநகைப் பவள வாயாய்.
    65
    2138 கண்மணியைக் கண்டவர்க்குப் பயனிலக்கந் தொட்டவர்க்குக் கருதிற் கோடி
    உண்மையின்மெய் யணிந்தவருக்குக் கொராயிரமாங் கோடியுறு செபத்த னந்தம்
    எண்மையினெய் துறும்பின்ன ரெமதுருவம் பெறுவர்பகைக் கென்றுந் தாழார்
    வண்மையுறு மதன்பெருமை யளப்பரிதாங் குழைகிழிக்கு மழைக்கண் மாதே.
    66
    2139 வேறு
    திரைதவழ் பாற்கட றேவர் யாவர்ம்
    நுரையெழக் கடைந்தநா ணுவன்ற வில்வமும்
    விரைகமழ் துளவமும் விளங்கத் தோன்றலின்
    உரைசெயு மவைநமக் குவப்புச் செய்வன.
    67
    2140 துளவினிற் சிறந்தது தூய கூவிளந்
    தளிரற முதிர்ந்தது சருக தாயினும்
    வளரிலை யிரண்டொன்று மரீஇய தாயினும்
    விளரியங் கிளவியாய் விலக்கு றாததே.
    68
    2141 வையகத் துயிர்க்கெலாம் வளமை நல்குறுஞ்
    செய்யவட் கவ்வதி காரஞ் சேர்த்தலின்
    நெய்யணி கருங்குழ னிமலை யன்னதிற்
    பொய்யறு பூமகள் பொருந்தி வாழுமே.
    69
    2142 நோயற வேண்டினு நோன்மை வேண்டினு
    மாயிரும் புவியடி வணங்க வேண்டினுந்
    தூயவிண் வேண்டினுந் துறுத்து மும்மலம்
    ஓயநன் முத்தியை யுதவும் வில்வமே.
    70
    2143 எட்டனைத் தலைப்பெயீ ரைம்ப தோதியும்
    ஒட்டிய வாயிரம் பெயர்க ளோதியும்
    பெட்டெம தடிமலர்ப் பெய்யு நற்பயன்
    மட்டவிழ் தொங்கலாய் வகுக்கொ ணாததே.
    71
    2144 வேறு
    எவ்வளவு நமைப்பூசை யியற்றிடினு மிருநிலத்தின்
    அவ்வளவு முபசார மாமதற்கோ ரளவில்லை
    கொவ்வைநறுங் கனியிதழாய் கூறியவவ் வுபசாரஞ்
    செவ்விபெற வடியார்கள் செயுமுறையிற் சிறிதுரைப்பாம்.
    72
    2145 காலையுறுங் கடன்முடித்துக் கமழ்மலரா திகல்கொணர்ந்து
    சீலமுறப் புனறோய்ந்து திகழ்சந்தி யினிதியற்றிக்
    கோலமுறு மிடஞ்சுத்தி கொலச்செய்து பரிதியினுஞ்
    சாலவெமைப் பேரன்பு தழைதரப்பூ சனைசெய்து
    73
    2146 ஐவகைச்சுத் தியுமுறையா லமைத்திலிங்கத் தாசனமு
    மொய்வளர்மூர்த் தியுமூர்த்தி மானாமெம் மையுநினைந்து
    கைவளர்பூ வானிறைத்துக் கமழ்ந்தவருக் கியநல்கி
    உய்வகையிங் கிருவென்ன வுலநெகிழ வெமைவேண்டி.
    74
    2147 மஞ்சனசா லையினேக மணிவளர்பா துகையாக
    அஞ்சிறைவண் டினமூசா வலரிருகா லருச்சித்துத்
    துஞ்சுவிரைப் புகையொளியுஞ் சுழற்றிநறும் பாத்தியமுந்
    தஞ்சமறு மாசமன வருக்கியமுந் தகக்கொடுத்து.
    75
    2148 வேறு
    வரைத்துரை யெண்ணெய் நெல்லி மாமஞ்சள் பஞ்ச கவ்யம்
    விரைத்தபா றயிர்நெய் செந்தேன் வேழமைந் தமிழ்தம் வேறே
    உரைத்தவைந் தமிர்தம் வாழை யாதியொண் கனிநீர் தாழை
    அரைத்திடும் வில மார மருக்கிய மனைத்து மாட்டி.
    76
    2149 புலர்த்திமெய் யீர நாண்கோ வணம்பொழி கதிர்ப்பட் டார
    நலத்தக வுரிஞு தேய்வை நகைமணிக் கலன்கள் வார
    மலர்த்தொடை பலவுஞ் சாத்தி வளரறு சுவைநா லுண்டி
    முலைத்தலைப் பூணா யூட்டி முதிர்சுவை நறுநீர் நல்கி.
    77
    2150 பாத்திய மாதி யீந்து பகர்பஞ்ச வாச முய்த்துத்
    தூத்தகு வதன நீவச் சுடரிழைத் தூசு நீட்டி
    வாய்த்தொளிர் தீப பேத மனைத்தும்வட் டித்து நீறு
    சாத்திமுன் னாடி காட்டித் தண்குடை கவித்து மேலால்.
    78
    2151 வார்தரு கவரிகொண்டு மருங்குற வலைத்து மெல்ல
    ஏர்தரு கால்செய் வட்டத் தினிதுற வீசி மேலாஞ்
    சீர்தரு மெழுத்தைந் தெண்ணிச் செறிபொரு ளுடலோ டாவி
    கார்தரு குழலாய் நந்தங் கையிடைக் கொடுத்துப் போற்றல்.
    79
    2152 மொழிந்தவீ துபசா ரத்தின் முறையிது வன்றி யானெய்
    பொழிந்தொளிர் தீப மேற்றல் புகழுமைம் புகையு மார்த்தல்
    அழிந்திடு பணியு மற்று மவிர்தரப் புதுக்கல் பாவம்
    ஒழிந்திடும் விழாவெ டுத்த லாதியு முபசா ரந்தான்.
    80
    2153 இத்தகு முபசா ரத்தை யியற்றினோர்க் கிடர்க ளில்லை
    உத்தம ரவர்கட் கெய்தாப் பொருள்களு முலகத் தில்லை
    சுத்தவொண் புவனத் தெய்திச் சுகப்பெருங் கடலிற் றாழ்ந்து
    முத்தியு மெளிதிற் சேர்வர் முகிழ்ந்தபூண் முலைப்பொற் பாவாய்.
    81
    2154 ஈண்டுநா முரைத்த வெல்லா மெழில்வளர் தீக்கை யில்லார்
    வேண்டினு மவர்கட் கோதார் விழுத்தகு நெறியி னின்றார்
    காண்டியா லென்றார் சூலக் கையினர் கெளரி வல்லே
    நீண்டமெய் மகிழ்ச்சி துள்ள நிமலரை வணங்கி வாழ்ந்தாள்
    82
    2155 என்றருள் கொழிக்கும் பட்டி யிறைவனா ருமையாட் கன்று
    நன்றுற மொழிந்த வேணி யாதியி னன்மை கூறித்
    துன்றிய வேணி மோலித் துறவர்க்கு நீற்று மேட்டின்
    ஒன்றுறு நீற்றின் மேன்மை யுரைக்குவ னுயர்ந்த சூதன்.
    83
    உபதேசப்படலம் முற்றிற்று,
    ஆகத் திருவிருத்தம் – 2155
    ------------ 

    35. திருநீற்று மேட்டுப்படலம் (2156-2196)

    2156 செந்தமிழ் விளங்கிய தெய்வ நாட்டிடைச்
    சந்தன மால்வரைத் தங்கு மாதவன் 
    சுந்தரக் கமண்டலஞ் சுரக்குந் தாமிர
    உந்தியின் மருங்கொரு நகர முண்டரோ.
    1
    2157 தேக்கிய மதுப்பொழில் செறிக சேந்திர
    மோக்கமென் றியாவரு மொழியு மந்நகர்
    காக்குநற் பாண்டியன் கருத லார்தமைத்
    தாக்கிய தான்மிக னென்னு நாமத்தான்.
    2
    2158 கருமமுந் தானமுங் கரிசு தீர்சிவ
    தருமமும் புரிவதிற் றாண்மிக் கெய்தினான்
    பொருமுறு பாவத்திற் பொருள்கொ டாமையின்
    ஒருவிய கீர்த்தியி னுள்ளம் வைத்திலான்.
    3
    2159 அத்தகு தான்மிகற் கமைந்த கற்பினாள்
    கொத்தொளி விரிதருங் கொடிமின் போறலால்
    வித்துரு லதையென விளம்பு நாமத்தாண்
    முத்தமிழ்க் கல்வியு முற்றக் கற்றுளாள்.
    4
    2160 அழகினிற் கல்வியி னாரு மொப்பிலா
    மழலையங் கிளவியாண் மதுரச் செந்தமிழ்
    பழகிய மாதர்கள் பலர்தற் சூழ்தரக்
    கழகமுள் ளவர்கள்கை விதிர்ப்ப வைகுவாள்.
    5
    2161 புறநகர்க் குழாத்தொடும் போந்து மென்மலர்
    நறவுகு பொழில்விளை யாட்டி னண்ணியும்
    வெறிகமழ் வருபுனல் விழைவுற் றாடியு
    முறுமகிழ் பண்ணையு முஞற்றிச் செல்லுவாள்.
    6
    2162 இன்னண மிவள்பயின் றிருக்கு நாள்வயிற்
    கொன்னவில் கொங்கண தேயத் துள்ளவன்
    மன்னிய நான்மறை முழுதும் வல்லவன்
    முன்னுநல் வினைபுரிந் தொழுகொ ரந்தணன்.
    7
    2163 வேறு
    திகழுமெவ் வளனும் படைத்துயர் மகாராட் டிரமெனுந் தேயநன் றாளுந்
    தகுபிர தாப மகுடனென் றரையன் றழைத்தெழு பெரும்புக ழுடையான்
    நகுகதிர் மணிப்பூந் திரைதவழ் கங்கை நதிக்கரை யிடைத்துலா பார
    மகனிலம் வியப்பத் தூங்குவான் சென்றா னதுதெரிந் தாவயி னடுத்தான்.
    8
    2164 மறைநெறி மொழிகண் மழையெனச் சொரிந்து மாசறச் சோதனை கொடுத்தான்
    குறைவறு தவத்தா னிவனெனக் கருதிக் கோமகன் றூங்கிய துலாத்தின்
    நிறைதரு பொருள்க ளனைத்தையு மளிப்ப நிகழ்ந்தபே ருவகையி னேற்றுப்
    பறைதரு தனது பதிவயிற் புகுதப் படருவா னின்னது நினைந்தான்.
    9
    2165 உயர்முதல் வருண முதித்ததும் வேத மொழுக்கொடு பயின்றுதெள் ளியதுஞ்
    செயிருறு வினையிற் றீர்ந்துநற் கதியிற் சேர்வதற் கேதுவாக் காது
    மயர்தரு பாவம் தளர்ந்தரு நரகின் மறிதரத் தானமிக் கேற்றிங்
    கயர்வதற் கேது வாக்கினேன் கற்ற வறிவும்வந் துதவிய தின்றே. 0
    10
    2166 புரிந்ததீ வினையைப் போக்குதற் கான புரையறு வழிக்கொள லன்றி
    விரிந்திடுந் துயர முழப்பதிற் பயனென் மேவுமிப் பொருளெலா மறத்திற்
    சொரிந்துவார்ந் தொழுகுந் தாமிர பருணித் தூயநீ ரதனிடை வினைகள்
    இரிந்தற படிது மெனமதித் தூர்புக் கில்லவ லொடும்வெளிப் பட்டான்.
    11
    2167 நெடுபடு கானும் வரைகளு முரம்பு நிரம்பிய பழுவமும் பவளக்
    கொடிவளர் புணரி மணிகொணர்ந் தெறியுங் குளிர்தகு கானலுங் கடந்து
    முடிகுலைத் தள்ளன் முலைத்தலைப் பொறிப்ப முறைமுறை கடைசியர் பதிக்குங்
    கடிமலர்க் கழனிக் கன்னிநா டெய்திக் கசேந்திர மோக்கஞ்சென் றடுத்தான்.
    12
    2168 ஆங்கொரு மருங்கு தாமிர பருணி யணிமணித் துறையின்வா னளவும்
    ஓங்கிய வரசி னீழலி னசைந்திட் டுயங்கிய செல்லல்கண் முழுது
    நீங்குறு பொழுதே யிறுதிவந் தடுப்ப நீங்கின னுடலினை விடுத்துப்
    பாங்குறு மந்தப் போதியே யிடமாய்ப் பயின்றன னரக்கனாய் மாதோ.
    13
    2169 வேறு
    கணவ னின்னுயிர் விடுத்தலுங் கையற்று மனைவி
    உணர்வ ழிந்தழு திரங்கிப்பி னொண்பொரு ணம்மைத்
    தணவு றும்பிறர் வெளவுவ ரெனவது தன்னைப்
    பிணர ரைச்செழும் போதியின் பொந்தினுட் பெய்தாள்.
    14
    2170 பொருண்ம றைத்தபூங் கொடியனாள் புல்லிய கொழுநன்
    உருவை வெந்தழன் மடுத்தன ளொருதின முழுது
    மருவி கண்கொள வழுதழு திரங்கிமா ழாந்திட்
    டிருநி லம்விழுந் திறந்தனள் வழிவரு நாளால். 5
    15
    2171 கனகங் காத்துய ரரசினிற் கடுந்துய ருழந்து
    பனவ னாகிய வரக்கனின் றனன்படர் தவத்தீர்
    வினையி னீங்குற வூக்கினும் விழுத்தவ மில்லார்க்
    கனைய தாகுமோ வாகுறா தரும்பொரு ளிருந்தும்.
    16
    2172 பெரிது மோங்கிய வத்தகு பிப்பில நிழலில்
    தெரிய வோதிய வித்துரு லதையெனுந் தெரிவை
    விரியும் வார்புனல் விழுநதி தோய்தர விழைவுற் 
    றுரிய வாயமுந் தானுமுற் றவணடுத் திருந்தாள்.
    17
    2173 இருக்கு மெல்லையின் மரஞ்சிலை யெனுமிவை தமையும்
    உருக்கு மின்னிசை யாழ்தழீஇ யுளர்ந்துபா டினளால்
    தருக்கின் வைகிய தன்மையுங் கவினுமா டகங்கள்
    திருக்கி யாழெழூஉந் திறத்தையு நோக்கின னரக்கன்.
    18
    2174 மாது மற்றிவள் போல்பவர் வையகத் தில்லை
    கோதை மல்கிய குழலியைக் குறுகுது மென்னாப்
    போதி யின்குளிர் கொம்பினைப் பொருக்கென விடுத்துச்
    சோதி மல்குபெண் கொம்பினைத் துன்னின னரக்கன்.
    19
    2175 பாடு மாடகத் திவவியாழ் பாணியின் வழுக்கி
    மாடு வீழ்தர வளரிளங் கொடிமறிந் தாங்கு
    நீடு வார்குழல் வித்துரு லதைவிய னிலமேற்
    பீடு சோர்தர விழுந்தனள் பெயர்ந்தன ளுணர்வு.
    20
    2176 மருண்டு நோக்கினள் பிதற்றினள் மருங்குளார் வினவத்
    தெருண்டு மாற்றமொன் ரியம்பிலள் திகழ்நிறங் கருகி
    வெருண்டு நோக்குவார் விதுப்புற வேறுபட் டனள்வார்
    சுருண்ட பூங்குழ லலையமெய் துளங்கினாள் பெரிதும்.
    21
    2177 புடையு ளார்பொருக் கெனச்சிவி கையிற்கொடு போந்தார்
    அடைய லார்க்குரு மேறன தான்மிக வரையன்
    நடையின் மாமயில் வென்றவிந் நங்கைதான் பிணியை
    உடைய ளாவளோ வெனப்பெருந் துயருளத் துழந்தான்.
    22
    2178 பிரம ராக்கதன் பிடித்தன னெனச்சிலர் பேச
    விரவி டாகினை மோகினி பூதவே தாளம்
    பரவு பேய்முத லானவற் றியல்பெலாம் பயின்ற
    கரவி லார்தமை யழைத்தனன் காவலன் கடுப்பின்.
    23
    2179 வல்ல வாரெலா மந்திரத் தலைவர்கண் முயன்று
    மல்ல னீங்கில ளதுகண்டு தான்மிக னிந்த
    வில்லின் மாதுபோல் வேறுமோ ரில்லெமக் குறுங்கொல்
    செல்ல றீர்ந்தில தென்செய்கே னெனத்தெரு மந்தான்.
    24
    2180 அடிய ரின்னலை யரக்குதற் கெளிவருங் கருணை
    குடிகொ ணாரதன் குறைவற நல்வினை வளர்க்கு
    முடிகொள் வேந்தனுக் கிரங்கிமுன் னடுத்தனன் வேந்தன்
    படியின் மாதவன் பதமலர் பணிந்தனன் பண்பால்.
    25
    2181 அம்மை நல்வினை சாலவு மாற்றினை யன்றி
    இம்மை நல்வினை யெதிரற வீட்டினை யினையை
    மம்ம ரின்னலின் மறுகுவ தடாதென மணிவேற்
    செம்மல் வந்தன மெனமுனி செயிர்தபக் கூறும்.
    26
    2182 மறைகள் பல்கலை முழுவதுந் தெள்ளிய மறைஞன்
    அறியு மந்திர முழுவதுங் கணித்துய ரறிஞன்
    நிறையு மொண்பொரு ணிகழ்த்திய தானத்தி னேற்றுப்
    பொறையி ருந்தனு நீத்தவன் புல்லிய வரக்கன்.
    27
    2183 ஆத லாலவன் மந்திர மாதிகட் ககலான்
    பாதி மாதொடு மிரசத மன்றினிற் பரதஞ்
    சோதி நாயகன் சுரர்தொழக் குயிற்றுபே ரூரின்
    வேதன் யாகஞ்செய் விழுத்தகு குண்டமொன் றுளதால்.
    28
    2184 அண்ண லார்திரு வருளினா னீறதில் வளரு
    நண்ணு நீற்றினைத் தரித்தவர் வினையெலா நசிக்கும்
    உண்மை யீதுநீ யொண்டொடி மனைவியைப் போதந்
    தெண்மை தீர்நதிக் காஞ்சியி னிரும்புன லழுத்தி.
    29
    2185 பிரம தீர்த்தமும் பெய்வளை யுருவினிற் பெய்து
    வரநி லாவுமந் நீற்றினை வடிவெலாந் திமிர்தி
    விரவு தீவினை யரக்கன்விட் டகலுமென் றுரைத்துச்
    சுரர்கள் போற்றுறு நாரதத் தொன்முனி மறைந்தான்.
    30
    2186 உரைத்த மாதவ னொன்கழ லுவந்தெதிர் வணங்கி
    விரைத்த பூந்தொடை வேம்பினை யாக்கிய வேந்தன்
    அரைத்த சாந்தணி யரும்பிளங் கொங்கைமா தினைக்கொண்
    டிரைத்து ராவிய கடற்படை யொடுமினி தெழுந்தான்.
    31
    2187 பழன மல்கிய கன்னிநா டெனும்பதி தணந்து
    மழலை வண்டின முல்லையின் மதுவுணுங் கானுங்
    குழவி வெண்மதி தவழ்தரு குன்றமுங் கடந்து
    விழவு மல்கிய வாதியம் புரத்தைமே வினனால்.
    32
    2188 அந்த ணர்க்கரும் பொருள்பல வார்த்தினன் காஞ்சி
    உந்தி யம்புன லுறுமுறை யுவகையிற் படிந்தான்
    சுந்த ரந்தவிர்ந் திருந்ததன் றுணைவியைத் தோய்த்தான்
    தந்து குண்டிகைத் தீர்த்தமு நங்கைக்காட் டினனால்.
    33
    2189 நீற்று மேட்டினை யடுத்தொளிர் நீற்றினை யள்ளிப்
    போற்று காஞ்சியம் புனல்கமண் டலப்புனல் பொழிந்திட்
    டாற்றன் மன்னவ னங்கையிற் குழைத்துமென் றேறல்
    ஊற்று பூங்குழ லாளுடன் முழுதும்பூ சினனால்.
    34
    2190 நீறு பூசலு நேரிழை மாதுட னின்றும்
    பாறி யாங்கொரு பாறையிற் படீரென விழுந்து
    கீறி நீண்முடி கெழுமிய பிரமராக் கதன்றான்
    கூறு தீவினை யுடலினைக் கொம்மென விடுத்தான்.
    35
    2191 விடுத்த வவ்வயின் விண்ணவ னாயினன் விமான
    மடுத்த தன்னதி னேறின னரசனை நோக்கித்
    தொடுத்த தீவினை யேனையுந் தூயனாக் கினையென்
    றெடுத்து நன்னய மியம்பின னெய்தினன் றுறக்கம்.
    36
    2192 மம்மர் நீங்கிமுன் போலுணர் வெய்தினண் மாது
    செம்மன் மன்னவ னோக்கினன் சிந்தையிற் களித்தான்
    வம்மென் றன்னவ டனைக்கொடு மறுவலுங் காஞ்சி
    விம்மி ரும்புனல் படிவித்தான் விதியுளி மாதோ.
    37
    2193 பத்துக் கோடியொண் பொருளிலக் கம்பக நூற்றுப்
    பத்துக் காமரு பரிகர் நூறுபல் கலனும்
    பத்திக் கேயெளி வரும்பட்டி நாதர்க்குக் கொடுத்துப்
    பத்தர்க் காம்பொருள் பண்பொடு பலவும்வீ சினனால்.
    38
    21994 வணங்கி நாதரை விடைகொண்டு வல்வினை தீர்ந்த
    அணங்கி னோடகன் கழனிசூழ் கன்னிநா டடுத்து
    நிணங்கொள் வேலவ னெடிதுவாழ்ந் திருந்தன னென்ப
    பிணங்கு றாதநூன் முறையுளி யறமெலாம் பெருக்கி
    39
    2195 பரவு நீற்றுமேட் டொளிர்பொடி பரித்தவர் தமக்குப்
    பிரம ராக்கத மேயன்று பெயர்வது மலடும்
    விரவு நோயும்வெவ் விடருந்தீ வினையுமே வுவன
    வரநி லாவுபல் பொருள்களும் வானமும் வீடும்.
    40
    2196 துறந்த மாதவத் தீர்திரு மேட்டினிற் சுடருஞ்
    சிறந்த பூதியின் மேன்மையைச் செப்பின மிப்பால்
    அறந்த வாதவ ராற்றுறும் விசேடபூ சனையும்
    உறந்து கேண்மினென் றுரைத்திடுஞ் சூதமா தவனே.
    41
    திருநீற்று மேட்டுப்படலம் முற்றிற்று
    ஆகத் திருவிருத்தம் – 2196

    36. விசேட பூசைப்படலம் (2197-2220)

    2197 சித்திரைத் திங்களிற் சேர்ந்த சித்திரை
    ஒத்தபூ ரணையினூ ரரவத் தொங்கலின்
    அத்தனுக் கெண்ணெயா திகண்மிக் காட்டிநற்
    பத்தியி னணியெலாம் பரிந்த ணிந்தரோ.
    1
    2198 பல்வகை யன்னமும் பல்சிற் றுண்டியும்
    பல்வகைக் கனிகளும் பண்பி னூட்டுவோர்க்
    கல்வளர் வினையெலா மனுங்கு மேதக
    நல்வினைப் பயனெலா நணுகு மென்பவே.
    2
    2199 வேறு
    இடப மதியிற் பூரணை யியைந்த விசாகத் திருநாளிற்
    கடிமிக் குயிர்க்கு முப்பழமுங் கனிவி னாட்டி யாவின்பால்
    உடன்வெந் தெடுத்த நறுமாங்கா யூட்டி யிறைவன் பதந்தொழுவோர்
    அடல்வல் வினைகள் புறங்கொடுப்ப வமலனுலகத் தினிதமர்வார்.
    3
    2200 நறுநீர் சுற்றி னுறத்தேக்கி நாற்கான் மணிப்பொன் மண்டபத்தின்
    உறுகா தலினாற் பெருவளங்க லுறுத்தி யிறைவன் றனையிருத்திப்
    பெறுநீர் மையினால் வசந்தவிழாப் பேசு மிடப மதியெடுத்தோர்க்
    கிறுநோய் பலவும் பேரின்ப மெய்தும் போக மிடையடுத்தே.
    4
    2201 மிதுன மதியிற் பூரணையின் விரவுங் கேட்டைத் திருநாளிற்
    புதிய மணிமண் டபம்வட்ட மாகப் பொலிவித் ததின்முக்கட்
    பதியை யிருவிப் பலபழமும் பாங்கி னாட்டி நிவேதிப்போர்
    கதிர்செய் மெளலிக் கடவுளர்கள் கழல்கை கூப்புங் கதியடைவார்.
    5
    2202 உரைத்த வானித் திங்களினுத் திரத்தி னுமையாள் கணவனுக்கு
    விரைத்த தயில முதற்பலவு மிதப்ப வாட்டி யலங்கரித்து
    நிரைத்த பலநிவே தனமு நிவேதித் தினிது போற்றுவோர்
    திரைத்தண் கடல்வை யகம்போற்றுந் தேவ தேவ னெனத்திகழ்வார்.
    6
    2203 ஆடி மதியிற் பூரத்தி லகில முயிர்த்த பார்ப்பதிதன்
    தோடு விரிதா மரைப்பதங்க டொழுது வணங்கிப் பூசிப்போர்
    பீடு விரியும் விழுச்செல்வம் பெருக வாழ்ந்து கடைநாளிற்
    சேடு விரியு மவளூலகிற் சென்று போகந் திளைப்பாரால்.
    7
    2204 சிங்க மதியின் மூலத்திற் சிந்தை யினிது மகிழ்கூர
    மங்கை யிடப்பா லமைத்தபிரான் மலர்த்தாட் கமலம் பூசித்துப்
    பொங்கு சுவையி னறும்பிட்டுப் பொற்ப வூட்டுந் தவத்தினோர்
    நுங்க வினைகள் பெரும்போக நுகர்வ ருலகம் புறக்கணித்தே,
    8
    2205 கன்னி மதியின் வரையுயிர்த்த கன்னி மகிழப் பேரன்பான்
    மன்னு நவராத் திரிபூசை மரபி னியற்று முறைமையோர்
    நன்ன ருலகம் பணிகேட்ப நவைதீர் செல்வத் திடைமூழ்கி
    முன்னுங் கதியி னினிதுறீஇ முடிவி லின்ப நுகரவாரால்.
    9
    2206 துலாவண் மதியிற் பூரணையிற் றூய வன்னங் கீற்றிளவெண்
    நிலாவை முடித்த பொலஞ்சடில நிமலற் காட்டும் பெருந்தவத்தோர்
    கலாவு மன்ன மொரோவொன்று தனக்குக் கற்ப மொரோவொன்று
    குலாவு சிவலோ கத்தெய்திக் கோதி லின்ப நுகர்வாரால்.
    10
    2207 வருதேண் மதியிற் காத்திகைநாண் மல்கும் விழைவிற் பூசித்துக்
    கருதார் புரங்க ணகைத் தெரித்த கடவுண் மகிழ் விளக்கிடுவோர்
    குருவார்ந் தினிய நறுநாற்றங் கொழிக்குஞ் சோதி யுருவினராய்
    ஒருவா திமையோர் பணிகேட்ப வுயர்ந்த கதியி னுவப்புறுவார்.
    11
    2208 சிலைமா மதியின் வைகறையிற் றினமும் பூசை யியற்றுவோர்
    தொலையா மலமுந் திமியவருட் டுறையிற் குளிப்ப ரம்மதியின்
    நிலையா திரையி னெய்யாட்டி நிகரில் கலவை யினிதணிவோர்
    அலையா தருளிற் கலந்தின்ப வாழி படிவ ரக்கணமே.
    12
    2209 மகர மதியிற் பரியூர்ந்து வரதன் வரக்கண் டிறைஞ்சுவோர்
    புகரில் பரியூர்ந் துயர்கதியிற் புக்குப் போக நுகர்கிற்பார்
    பகரு மனைய மதிப்பூசம் பரமர் பாதம் பூசிப்போர்
    துகண்முற் றிரிய மேலான துறக்க மாண்டு வீடடைவார்.
    13
    2210 மாசி மகத்திற் சிவநிசியியின் மழுமா னேந்தி மலர்ப்பாதம்
    பூசை புரிவோர் தாம்வேட்ட போக முழுதுங் கைக்கொள்வார்
    தேசு திகழ்பங் குனிமதியுத் திரத்திற் சிறந்த திருவிழா
    ஆசை யுடன்சென் றேத்தினோ ரன்றே முத்தி பெறுகிற்பார்
    14
    2211 வருடப் பிறப்பே மதிப்பிறப்பே வளரு மயன மோரிரண்டே
    கருது முவாவே பதினான்கே கரிசில் பதின்மூன் றேயெட்டே
    பொருவில் சோம வாரமெனப் புகன்ற விவற்றிற் பூசிப்போர்
    திருகும் வினையின் றிருக்கறுத்துச் செயிர்தீர்ந் தருளி னினிதமர்வார்.
    15
    2212 மொழிந்த தினங்க டமிற்பூசை முடியா ரேனு முடித்தபயன்
    பொழிந்து கருணை யுலாப்போதும் புனிதர் திருப்பங் குனிச்சாறு
    விழைந்து பணிவோர் வினைமுழுதும் விளிய வினிது பெற்றேகித்
    தழைந்த பெரும்போ கத்தழுந்தித் தலைவன் பாதந் தலைநிற்பார்.
    16
    2213 வென்று விளங்குங் கோமுனிவன் முதலா னோர்கள் விழைந்தெடுத்த
    அன்று தொடங்கி யிதுகாறு மமலன் றிருப்பங் குனிச்சாறு
    நன்று புரிந்து தரிசித்து நவைதீர் முத்தி யடைந்தோர்கண்
    மன்ற வளவி னடங்கிடார் மணிவா ரிதிசூழ் வையகத்தில்.
    17
    2214 பட்டிப் பெருமா னினிதூரும் பசும்பொற் கொடிஞ்சிக் கூவிரத்தேர்
    இட்டுத் தொடுத்த வடமமர ரெறுழ்த்தோ ளவுண ரிருபாலுந்
    தொட்டுப் புவியோ ருருவினராய்த் துவன்றி யீர்ப்ப ரெனினன்பான்
    ஒட்டித் திருப்ப்ங் குனிவிழா வுவப்போர் பெருமை யுரைப்பாரார்.
    18
    2215 வேறு
    மரகத வல்லி பங்கன் மான்மியந் தெரிக்கு மிந்தப்
    புரவருள் புராணந் தன்னைப் பூசிப்போர் படிப்போர் கேட்போர்
    உரிமையிற் பொருள்க ளாய்வோ ருவப்புறத் தெரிப்போ ரெல்லாம்
    விரிபுகழ்ச் சிவலோகத்தின் மேவியா னந்தந் துய்ப்பார்.
    19
    2216 வடித்தினி தெடுத்த பேரூர் வள்ளலார் புராணந் தன்னைப்
    படிப்பவர்க் கன்னஞ் செம்பொன் பரிகரி சிவிகை மற்றுங்
    கொடுப்பவர் வெறுக்கை யென்றுங் குறைவில ராகி வாழ்ந்திங்
    கடுத்துயர் சிவலோ கத்தி னரும்பெரும் போகந் துய்ப்பார்.
    20
    2217 பிப்பில வனத்தெஞ் ஞான்றும் பெரருள் வழங்கி வைகும்
    ஒப்பறு பட்டி நாதர்க் குவப்பொடு சிறப்புச் செய்வோர்க்
    கெப்பெரும் பயன்க ளுண்டா மப்பெரும் பயன்க ளூண்டாஞ்
    செப்பிய புராணந் தன்னிற் சிறப்பினி தியற்று வோர்க்கே.
    21
    2218 எனமகிழ் சிறப்பச் சூத முனிவர னியம்பக் கேட்டு
    நனிதவ முழந்து வேட்கு நைமிச வனத்தோ ரெல்லாங்
    கனிவொடு மிறைஞ்சிப் போதிக் கடிவரைப் பமர்ந்த முக்கண்
    அனகன தருளை யுன்னி யானந்தந் திளைத்து வாழ்ந்தார்.
    22
    2219 மன்னிய போதி வைப்பின் வதிந்தெனை யீர்த்து மூவாத்
    தன்னையென் னாவாற் பாடித் தமியனேன் றனையு மாண்ட
    முன்னவ னாதி நாதன் முக்கணெம் மானை யல்லாற்
    பின்னொரு தெய்வந் தன்னைப் பேசுமோ வெனது செந்நா.
    23
    2220 மாமறை முனிவர் வாழ்க மரகத வல்லி யோடும்
    பாமலி புலவர் போற்றும் பட்டிநா யகனார் வாழ்க
    காமரு வெள்ளி மன்றிற் கண்ணுத னடனம் வாழ்க
    கோமனு நீதி வாழ்க குவலயம் முழுதும் வாழ்க.
    24

விசேட பூசைப்படலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் – 2220

பேரூர்ப்புராணம் மூலம் முற்றிற்று 

திருச்சிற்றம்பலம்
------------------

 

Related Content

பேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்