logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி

(tiruvempAvai tiruppalliyezuchi)

 

  • Tamil Text & English Translation
  • thiruvempAvai
  • thirup paLLi ezuchchi

·         English Text & English Translation

·         Kannada Text & English Translation

  • thiruvempaavai
  • thirup paLLi ezucci

மாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாகவும், அதன் தன்மையை உணர்வதற்குள், மிக வேகமானதாகவும், ஆழ்த்திவிடுவதாகவும் உள்ள படுசுழியான தன் தன்மையைக் காட்டிவிடுகிறது. அதுபோல மயக்கத்தில், செல்லும் திசை தெரியாது ஆழச் செல்லும் உயிர்களை உணர்வூட்டி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என்ற பொன்னான வாசகத்தால் கைதூக்கி விடுவன திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.

திருவெம்பாவை மூலம் மணிவாசகப் பெருமான் நமக்குக் கூறும் உறுதியான அறவுரை மற்றொன்றும் உண்டு. இப்பாடல்களில் வரும் பெண்கள் என்ன செய்கிறார்கள் ? ஒன்று கூடுகிறார்கள். அவர்கள் உய்யும் வகை உய்ந்த அடியார்கள். அவர் தம் மனத்து இல்லம் தோறும் இறைவன் எழுந்தருளி இருப்பதால் என்ன குறையும் இல்லாதவர்கள். எனினும் ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ்சோதியைச் சுமக்கின்ற பரந்த மனமுடைய அவர்கள், இந்தப் பேரின்பப் பெருவழிக்கு வராது விடுபட்டுப் போன அக்கம்பக்கத்திலுள்ள தம் எல்லாத் தோழிகளின் துயில் மயக்கத்தைத் தெளிவித்து, அவருடைய உறுதியின்மையால் தாம் தளர்வுறாது, இறைவன் பால் ஒருமைப்பட்ட தம் மனத்தால் அவரையும் கண்ணுக்கினிய கருணைக் கடலான சிவபெருமானைப் பாடத் தேற்றுகின்றனர். இதுவே நமது இன்றைய தேவை. நாம் உய்யும் நெறியை உறுதியாகப் பற்றவேண்டும். அதே நேரத்தில் அவ்வாறு பற்றுவதால் நாம் பெறும் இன்பத்தை அண்டை அயலவர் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம், "எம்பிரான் மூலபண்டாரம் வழங்குகின்றான்; வந்து முந்துமினே !" என அறைகூவி அழைத்தும், அறியாதவருடைய இல்லங்களுக்கே சென்று அவர் வாழ்வையும் அண்ணாமலையாரின் அருள் ஒளி நிறைந்ததாக ஆக்க வேண்டும்.

பெருமானின் திருவருளால் அழியாத இன்பம் பெற்ற நம் ஆன்றொர்கள் செய்தது அது; நாமும் செய்யத் தக்கதும் வேண்டுவதும் அதுவே. "எது எமைப் பணிகொளும் ஆறு ? அது கேட்போம்." எனத் தலை நிற்போம்.

"அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே"


திருவெம்பாவை

(திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)

திருச்சிற்றம்பலம்
 
1.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் 
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் 
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் 
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து 
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன் 
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே 
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 1
 
        தோழியர்: துவக்கம் இறுதி இல்லாத அரிய பெரிய சோதியை
நாங்கள் பாடுகின்றொம். அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய 
கண்களை உடைய நீ தூங்குகின்றாயே ! உன் காதுகள் உணர்ச்சியற்றுப்
போய்விட்டனவா ? பெருந்தேவனான சிவபெருமானின் அழகிய கழல்களை
வாழ்த்திய வாழ்த்தொலி வீதியின் துவக்கத்தில் கேட்ட அந்தக் கணத்திலேயே
விம்மி விம்மி மெய்ம்மறந்து தான் இருக்கும் மலர் நிறைந்த படுக்கையிலேயே
தன்னை மறந்து ஒருத்தி கிடக்கிறாள். அவள் திறம் தான் என்னே ! 
இதுவோ உன்னுடைய தன்மை, எம் தோழி ?!
 
மாது - பெண்; வளருதி - தூங்குகின்றாய்; போது - மலர்; 
அமளி - படுக்கை.
 
2.
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் 
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே 
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் 
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி 
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் 
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் 
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 2

 
        தோழியர்: இரவு பகலெல்லாம் - நாம் பேசும் பொழுதெல்லாம், 
"எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்" என்று சொல்வாய். 
ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தை
உண்மையில் வைத்தாயோ ?
        படுத்திருப்பவள்: சீ சீ ! இப்படியா பேசுவது ? 
        தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ? 
(அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)
விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களை
நமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,
தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே ! நாம் எங்கே !

போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்.
3.
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென் 
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் 
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் 
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர் 
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ 
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ 
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை 
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3
         தோழியர்: முத்துப் போன்ற ஒளியான புன்னகையை உடையவளே !
எல்லார்க்கும் முன்பாகவே எழுந்திருந்து, "என் அத்தன், ஆனந்தன்,
அமுதன்" என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுவாய் !
(இன்று என்ன ஆயிற்று உனக்கு ?) வந்து கதவைத் திற !
        படுத்திருப்பவள்: பத்து குணங்களை உடையவர்களே !
இறைவனின் அடியாகளாய் முதிர்ச்சி பெற்றவர்களே !
(என்னிடம்) நட்புடையவர்களே ! புதியவளாகிய என்னுடைய
குற்றத்தை நீக்கி என்னையும் அடியார் ஆக்கிக்கொண்டால் குற்றமா ?
        தோழியர்: நீ இறைவன் பால் வைத்துள்ள அன்பு எங்களுக்குத்
தெரியாதா என்ன ? உள்ளம் ஒழுங்கு பட உள்ளவர்கள் நம் சிவபெருமானைப்
பாடாது போவாரா என்ன ? எங்களுக்கு இதெல்லாம் தேவை தான் !
 
பத்து - தசகாரியம்; பாங்கு - நட்பு;
புன்மை - கீழ்மை.

4.
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ 
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ 
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் 
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே 
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக் 
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் 
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து 
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 4
 
        தோழியர்: முத்துப் போன்ற புன்னகை உடையவளே ! 
இன்னுமா விடியவில்லை ? 
        படுத்திருப்பவள்: (அழகிய கிளி போன்ற சொற்களைப் பேசும்)
தோழியர் எல்லாரும் வந்துவிட்டார்களா ? 
        தோழியர்: உள்ளதையே எண்ணித்தான் சொல்லுகின்றோம்.
கண் துயின்று வீணாகக் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகும்
போற்றும் ஒரே மருந்தை, வேதத்தால் மேன்மையாக உணரப்படும் 
பொருளை, காண இனிய சிவபெருமானை நெக்குருகக் கசிந்து
பாட வந்துள்ள நாங்கள் இதெல்லாம் செய்ய மாட்டோம். 
வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக்கொள். குறைந்தால் தூங்கிக்கொள் !

ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில நகையாய்).
 
5.
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம் 
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் 
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் 
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் 
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ் 
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று) 
ஓலம் இடினும் உணராய் உணராய்காண் 
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5

        தோழியர்: "திருமாலும் நான்முகனும் காணமுடியாத
மலையை நாம் அறிவோம்" என்று (உணர்ந்தவர்களைப் போன்று)
பொய்யாகவே பேசிக்கொண்டிருக்கும் பாலும் தேனும் போன்ற 
(இனிய சொற்களைப் பேசும்) வஞ்சகியே, கதவைத் திற ! 
இவ்வுலகமும், விண்ணுலகமும், பிறவுலகங்களும் அறிவதற்கு 
அரிய பெருமானுடைய திருக்கோலமும், அவர் நம்மை ஆட்கொண்டு 
குற்றங்களை நீக்கும் பெருமையையும் பாடி "சிவனே! சிவனே!" என்று 
நாங்கள் ஓலமிட்ட போதும், சற்றும் உணர்ச்சியில்லாமல் இருக்கிறாயே ! 
மணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை ?!

பொக்கம் - பொய்; படிறீ - ஏமாற்றுக்காரி; ஞாலம் - உலகம்;
ஏலக்குழலி - மணம் சேர் கூந்தலை உடையவள்.

6.
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை 
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே 
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ 
வானே நிலனே பிறவே அறிவரியான் 
தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் 
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் 
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் 
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 6

        தோழியர்: மான் போன்று அழகியவளே ! நீ நேற்று,
"நாளை உங்களை நானே வந்து எழுப்புகிறேன்" என்று கூறிவிட்டு,
வெட்கமே இல்லாமல் இன்று எங்கு போய்விட்டாய் ? இன்னுமா 
பொழுது புலரவில்லை ? வானுலகும், பூமியும், பிற எல்லாமும்
அறிதற்கு அரிய பெருமான், தானே வந்து கருணையோடு நோக்கி
நம்மை ஆட்கொண்டருளுகிறான். அவனுடைய வானென நெடிய
கழலடிகளைப் பாடி வந்த எமக்கு பதில் சொல் ! உடல் உருகத்
தொழாது இருக்கின்றாய் ! இது உனக்குத் தான் பொருந்தும் !
எங்களுக்கும் ஏனைய எல்லாருக்கும் ஒரு தலைவனான 
சிவபெருமானைப் பாடு !

நென்னலை - நேற்று; தலையளித்து - கருணைகூர நோக்குதல்;
ஊன் - உடல்.
 
7.
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர் 
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான் 
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் 
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய் 
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும் 
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ 
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் 
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 7
 
        தோழியர்: அம்மா ! இவையும் உன் குணங்களில் ஒன்றோ ?!
பலபல தேவர்கள் நினைத்தலுக்கும் அரியவனான செம்பொருளாம்
பெருமானின் சின்னங்கள் கேட்ட மாத்திரத்திலேயே "சிவ சிவ" என்று
சொல்லுவாய். "தென்னாடுடைய பெருமானே" என்று சொல்லி 
முடிப்பதற்குள்ளேயே தீயிலிட்ட மெழுகு போல உருகிவிடுவாய்.
எம்பெருமானை, "என் அரசே ! இனிய அமுதம் போன்றவனே !"
என்று நாங்கள் எல்லோரும் பலவேறு விதமாகச் சொல்லுகின்றோம்.
இன்னும் நீ தூங்குகிறாயோ ! (உணர்வற்ற) கடுமையான நெஞ்சம் 
கொண்டவரைப் போல சிறு அசைவும் இன்றிக் கிடக்கின்றாயே !
தூக்கத்தின் தன்மை தான் என்னே !

உன்னல் - நினைத்தல்; இருஞ்சீர் - மிக நேரிய தன்மை; சின்னங்கள்
- சிவச் சின்னங்கள் (சங்கு முதலான ஒலிகள்); அரையன் - மன்னன்;
வாளா - சும்மா; பரிசு - தன்மை.

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் 
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும் 
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை 
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ 
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய் 
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ 
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை 
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 8

        தோழியர்: கோழி கூவப் பிற பறவைகளும் கீச்சிடுகின்றன.
இசைக் கருவிகள் ஒலிக்க வெண்சங்கும்ணொலிக்கின்றது.
ஒப்பற்ற பரஞ்சோதியான பெருமானையும், ஒப்பற்ற அப்பெருமானின்
பரங்கருணையையும், ஒப்பற்ற மேன்மையான (சிவம் சார்ந்த) 
பொருட்களையும் பாடினோம். அவையெல்லாம் கேட்கவில்லையா ?
அப்படி இது என்ன உறக்கமோ, சொல்வாய் ! திருமாலைப் போன்ற
பக்தி செய்யும் விதமும் இப்படித்தானோ ! ஊழிகள் எல்லாவற்றிற்கும்
முன்னரே தொடங்கி (அழிவின்றி) நிற்கும் மாதொருபாகனைப் பாடு !

குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);
கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்;
ஏழை - பெண்(சக்தி).

9.
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே 
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே 
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் 
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் 
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து 
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம் 
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல் 
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். 9

        பழமையான பொருட்களுக்கெல்லாம் பழமையான முதல்வனே !
இப்போது தோன்றிய புதுமையானவற்றுக்கும் புதுமையானவனே !
உன்னைப் பிரானகப் பெற்ற உன்னுடைய நேர்த்தியான அடியாரான
நாங்கள், உன்னுடைய அடியவர்களை வணங்குவோம்; அவர்களுக்கே
நண்பர்களாவோம்; அத்தகையவரையே நாங்கள் மணம் செய்துகொள்வோம்;
அத்தகையோர் சொல்லும் வகைப்படியே அவர்க்கு அடியவர்களாய்ப்
பணி செய்வோம். இவ்வாறே எங்களுக்கு எம்பிரான் அருள் செய்தால்
எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை !

பேர்த்தும் - புதுமையான; பாங்கு - நட்பு; பரிசு - முறை; தொழும்பு 
- அடிமை
 
10.
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் 
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே 
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் 
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் 
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் 
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள் 
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் 
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10

        அவனுடைய பாதமாகிய மலர்கள் பாதாளங்கள் ஏழிற்குக் 
கீழும் சென்று சொல்லுதற்கும் எட்டா வகை உள்ளன; அவனுடைய 
மலர் நிறைந்த கட்டிய சடையும் பொருள்கள் எல்லாவற்றின் எல்லைப்புறத்தன;
அவன் பெண்ணை ஒருபாகம் உடையவன்; அவன் திருவுருவங்களோ
ஒன்றிரண்டல்ல ! வேதங்கள் முதலாக விண்ணோரும், மண்ணோரும் 
துதிக்கின்ற போதும் ஒருவராலும் இவ்வாறு எனச் சொல்லப்பட முடியாதவன்;
ஒரே துணைவன்; தொண்டர் உள்ளத்து இருப்பவன்; குற்றமற்ற 
குலப்பெண்களான சிவன் கோயிற் பணிசெய்யும் பெண்களே !
அவனுடைய ஊர் எது ? பேர் எது ? யார் உறவினர்கள் ? யார்
உறவினரல்லாதவர்கள் ? அப்படிப்பட்டவனை எவ்வாறு பாடுவது ?!
 
சொற்கழிவு - சொல்லமுடியாத; போது - மலர்; உலவா - முடியாத;
கோது - குற்றம்; பரிசு - வழி.
 
11.
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக் 
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி 
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற் 
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல் 
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் 
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம் 
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11

        வண்டுகள் மொய்க்கின்ற குளத்தில் கைகளால் குடைந்து 
நீராடும்பொழுது உன் திருவடிகளைப் பாடி, வழிமுறையாக வந்த 
அடியவர்களாகிய நாங்கள் வாழ்வுபெற்றோம். ஐயனே ! ஆர்க்கின்ற 
நெருப்பு போன்று சிவந்தவனே ! திருநீறு பூசும் செல்வனே ! சிறிய
இடையையும், மை நிறைந்த அகன்ற கண்களையும் உடைய உமையின்
மணவாளனே ! ஐயா, நீ ஆட்கொண்டருளும் திருவிளையாடலில்
உய்யும் அடியார்கள் உய்யும் வகையில் நாங்களும் உய்ந்துவிட்டோம் !
நாங்கள் தளர்வுறாமல் காப்பாயாக !

மொய் - மொய்க்கின்ற வண்டு; தடம் - நீர்நிலை; பொய்கை - குளம்;
அழல் - தீ; மருங்குல் - இடை; எய்த்தல் - இளைத்தல்.

12.
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும் 
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் 
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும் 
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி 
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் 
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப் 
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம் 
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 12

        பேராரவாரம் செய்கின்ற பிறவித் துன்பம் கெடுவதற்காக 
நாம் விரும்பி வழிபடும் தீர்த்தன்; தில்லைச் சிற்றம்பலத்தில் தீயேந்தி
ஆடுகின்ற கூத்தப்பிரான்; இந்த விண்ணையும், மண்ணையும், நம்
எல்லோரையும் விளையாட்டாகவே காத்தும், படைத்தும், கவர்ந்தும்
வருபவன்; அவன் புகழைப் பேசியும், வளைகள் ஒலிக்கவும், 
மேகலைகள் ஆராவரிக்கவும், கூந்தல் மேல் வண்டுகள்
ரீங்காரமிடவும், பூக்கள் நிறைந்த இக்குளத்தில்  ஈசனின் 
பொற்பாதத்தை வாழ்த்திக்கொண்டே நீராடுங்கள் !

குவலயம் - பூமி; கரத்தல் - உள் வாங்குதல்; குழல் - கூந்தல்.
 
13.
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் 
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் 
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால் 
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த 
பொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம் 
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப் 
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் 
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 13

        குவளையின் கறுத்த மலராலும், தாமரையின் சிவந்த மலராலும்,
சிறிய உடலை உடைய வண்டுகள் செய்யும் ஒலியாலும்,
தம்முடைய குற்றங்களை நீக்க வேண்டுபவர்கள் வந்து தொழ,
எங்கள் பிராட்டியான சக்தியும், எம்பிரான் சிவபெருமானும் இருப்பது
போலக் காட்சியளிக்கும் நீர் நிறைந்த இம்மடுவில் பரவி அளைந்து,
நாம் அணிந்துள்ள சங்குகள் சலசலக்க, சிலம்பு அத்துடன் இணைந்து
ஒலிக்க, மார்பகங்கள் விம்ம, அளைந்தாடும் நீரும் விம்மி மேற்பொங்க,
தாமரை மலர் நிறைந்த இந்நீரில் ஆடுங்கள் !
 
கார் - கறுப்பு; போது - மலர்; கொங்கை - பெண்ணின் மார்பகம்; 
பங்கயம் - தாமரை; புனல் - நீர்.

14.
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் 
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச் 
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி 
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி 
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி 
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப் 
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன் 
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 14

        காதில் அணிந்துள்ள குழைகள் ஆட, 
பொன் அணிகலன்கள் ஆட, பூமாலையணிந்த கூந்தல் ஆட,
(அதைச் சுற்றும்) வண்டுக் கூட்டம் ஆட, குளிர்ந்த நீராடிச்
திருச்சிற்றம்பலத்தைப் பாடி, வேதத்தின் பொருளை -
சிவபெருமானைப் - பாடி,மிறைவன் அந்த வேதத்தின் 
பொருள் ஆகும் திறத்தினைப் பாடி, அவனுடைய சோதி 
வடிவின் பெருமையைப் பாடி,கவன் அணிந்துள்ள கொன்றைக்
கொத்தினைப் பாடி, எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்ற
வல்லமையைப் பாடி, அவனே எல்லாவற்றிற்கும் இறுதியும் 
ஆவதைப் பாடி, (மும்மலம் ஆகிய) பிறவற்றை நீக்கி நம்மை
வளர்த்தெடுத்த இறையருட் சத்தியின் பாதத் தத்துவத்தையும்
பாடி நீராடுங்கள் !

பைம்பூண் - பொன்னாபரணம்; கோதை - பூமாலை; குழாம் 
- கூட்டம்; சீதம் - குளுமை; தார் - மாலை.

15.
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் 
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர 
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப் 
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள் 
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும் 
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் 
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி 
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 15

        அவ்வப்போது "எம்பெருமான்" என்று சொல்லிச் சொல்லி,
நம்பெருமானின் பெருமையையே வாய் ஓயாமல் எப்போதும் 
உள்ளமெல்லாம் மகிழச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். 
எப்பொழுதும் விடாது வழிந்துகொண்டிருக்கும் தாரைதாரையான
கண்ணீரில் தோய்ந்து, (இறைவனையே எண்ணி எப்போதும்
அவனுடன் இருக்கும்) இவள் இவ்வுலக நினைவுக்கே திரும்புவதில்லை !
வேறு தேவர்களை இவள் பணிவதில்லை ! பேரரசனாகிய இறைவன்பால்
இவ்வாறு பித்துப் பிடிக்கும் தன்மையையும், அவ்வாறு செய்து ஆட்கொள்ளும்
வல்லவராகிய சிவபெருமானின் திருப்பாதத்தையும் வாயாரப் பாடி,
கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்களே, நாம் நேர்த்தியான,
மலர் நிறைந்த இந்நீரில் ஆடுவோம் !

ஓவாள் - ஓயமாட்டாள்; களி - மகிழ்ச்சி; பனித்தல் - ஈரமாக்குதல்; 
பார் - உலகம்; அரையர் - அரசர்.

16.
முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின் 
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் 
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம் 
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் 
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு 
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே 
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 16

        மழையே ! இந்தக் கடலில் உள்ள நீரின் ஆவியாய்த்
திரண்டு வானில் எழுந்து, உடையவளகிய உமையம்மையைப்
போல் (கார் நிறத்தில்) திகழ்க ! எங்களை ஆளுடைய அவளின்
மெல்லிய இடை போல மின்னைலாய்ப் பொலிக ! எம்பிராட்டியின்
திருவடியில் திகழும் பொற்சிலம்பின் ஓசை போல (இடியாய்) ஒலிக்க !
அவளுடைய திருப்புருவம் வளைந்தது போல வான்வில்லாய் வளைக !
நம்மை ஆளுடைய அவளோடு எப்போதும் பிரிவின்றி விளங்கும்
எம்பிரானாகிய சிவபெருமானுடைய அன்பர்களுக்கு, முனைப்போடு
தான் வந்து அவள் விரைவாகவே அளிக்கின்ற இனிய அருள்
என்பது போலப் பொழிக !

இட்டிடை - சிறிய இடை; சிலை குலவுதல் - வில்லென வளைதல்;
முன்னி - முற்பட்டு.

17.
செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால் 
எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக் 
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி 
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் 
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை 
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை 
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் 
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 17

        வண்டு தேன் உண்ணும் கரிய கூந்தலை உடையவளே !
சிவந்த கண்ணை உடைய திருமாலிடமும், திசைக்கு
ஒன்றாக நான்கு முகங்களை உடைய பிரமனிடமும், தேவர்களிடமும்
எங்குமே இல்லாத அரிய இன்பம் நம்முடையது ஆகுமாறு,
நம்முடைய குற்றங்களெல்லாம் போக்கி, நம் ஒவ்வொருவர்
இல்லங்களிலும் இருந்து செந்தாமரை போன்ற பொற்பாதங்களைத்
தந்தருள் செய்யும் தொழில் உடையவனை, அழகிய கண்களை உடைய
நம் அரசனை, அடிமைகளாகிய நமக்கு ஆரமுதமானவனை,
நம்பிரானைப் பாடுவதால் நலம் ஓங்க, தாமரைகள் நிறைந்த
இந்நீரில் பாய்ந்தாடுவோம் !

கொங்கு - தேன் (உண்ணும் வண்டு); கோதாட்டி - குற்றம் நீக்கி;
சேவகன் - ஊழியன்; பங்கயம் - தாமரை.

18.
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் 
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல் 
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் 
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப் 
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் 
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப் 
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 18

        அண்ணாமலையாரின் திருவடிகளைச் சென்று தொழும்,
விண்ணவர்களின் மகுடங்களில் உள்ள மணிகள் எல்லாம்
(இறைவரின் திருவடியின் ஒளியின் முன்னம்) தம் ஒளி குறைந்து
தோன்றுவது போல், (இறைவன் பேரொளிக்கு முன் மற்றெவரும் 
சிறு ஒப்புமைக்கும் உரியவரல்லர்.) கண்ணான கதிரவனின் ஒளி தோன்றி
இருட்டினை நீக்க, அந்நிலையில் தம் குன்றிய ஒளி மறைக்கப்பட்டு,
விண்மீன்கள் காணாது போகின்றன. பெண், ஆண், அலி மற்றும் 
ஒளி வெடிப்புகள் நிறைந்த விண்ணும் மண்ணுமாகி நின்று, இவை 
அத்தனையிலிருந்தும் தான் வேறாகவும் நிற்கின்றானை, கண்கள்
பருகி மகிழும் அமுதமாக நின்றானுடைய கழல் பூண்ட திருவடிகளைப்
பாடி, இந்தப் பூம்புனலில் பாய்ந்தாடலாம், பெண்ணே !

வீறு - ஒளி/பெருமை; கார் - இருள்; கரப்ப - நீக்க; தாரகை - விண்மீன்;
பிறங்கொளி - மின்னும் ஒளி.

19.
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று 
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால் 
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள் 
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க 
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க 
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க 
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல் 
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 19

        "உன் கையில் உள்ள பிள்ளை, உன்னுடைய கட்டுப்பாட்டில்",
என்ற பழமொழி நிகழ்ந்துவிடும் என்ற எம்முடைய அச்சம் காரணமாக,
எம்பெருமானே உன்னிடத்தில் ஒன்று கேட்போம்.
எம்முடைய மார்பகங்கள் உன் அன்பர் அல்லாதவருடைய தோளைக்
கூடக்கூடாது. (உன் அன்பரையே நாங்கள் திருமணம் செய்யவேண்டும்).
எம்முடைய கைகள் உனக்கு அல்லாது வேறு எந்த வேலையையும் 
செய்யக்கூடாது. இரவும் பகலும் எம்முடைய கண்கள் வேறு எதையும்
கண்டு நிற்கக்கூடாது. எமக்கு இவ்வகை எம் கோமானாகிய நீ 
அருளினால், சூரியன் எத்திசையில் உதித்தால் தான் எங்களுக்கென்ன ?

கொங்கை - மார்பகம்; கங்குல் - இரவு; பரிசு - வகை; ஞாயிறு - கதிரவன்.

20.
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் 
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் 
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் 
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் 
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் 
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் 
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் 
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20

போற்றி ! உன் தொடக்கமான மலர் போன்ற பாதம் அருளட்டும் !
போற்றி ! உன் முடிவான செம்மலர் போன்ற திருவடிகள் அருளட்டும் !
(இறைவனுக்கு ஆதியும் அந்தமும் இல்லாததால் அவன் பாதமே எல்லாம்).
போற்றி - எல்லா உயிர்களுக்கும் தோற்றம் ஆன பொற்பாதத்திற்கு !
போற்றி - எல்லா உயிர்களுக்கும் இன்பமாகும் பூப்போன்ற கழல்களுக்கு !
போற்றி - எல்லா உயிர்களுக்கும் முடிவாகும் இணையான இரு பாதங்களுக்கு !
போற்றி - திருமாலும், நான்முகனும் காணாத திருவடித் தாமரைக்கு !
போற்றி - நாம் உய்வுறுமாறு ஆட்கொண்டருளும் பொன்மலரான திருவடிகளுக்கு !
போற்றி ! போற்றி ! மார்கழி நீராடுவோம் !

ஈறு - முடிவு; புண்டரிகம் - தாமரை. 
               திருச்சிற்றம்பலம் 


திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி

(திருப்பெருந்துறையில் அருளியது - எண்சீர் கழிநெழிலடி ஆசிரிய விருத்தம்)

               திருச்சிற்றம்பலம் 
1.
போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !
      புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு 
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும் 
      எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் 
      திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் !
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

 
        போற்றி ! என் வாழ்விற்கு முதலாக அமைந்த பொருளே !
பொழுது புலர்ந்தது. உம்முடைய பூப்போன்ற கழலடிக்கு அதுபோன்ற
மலைகளைக் கொண்டு வழிபட்டு, உம்முடைய திருமுகத்தில் 
எங்களுக்கு அருள் செய்யும்பொருட்டு மலர்கின்ற அழகிய புன்னகையைக்
கண்டு, அதனால் (உறுதி பெற்று) உம் திருவடிகளைத் தொழுகின்றோம்.
தேன் தவழும் இதழ்களைக் கொண்ட தாமரைகள் மலர்கின்ற குளுமையான
வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே !
காளை பொறித்த உயர்ந்த கொடியை உடையவனே ! என்னை உடையவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

 
சேறு - கள்/ தேன்; ஏறு - இடபம்.

 

2.
அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய் 
      அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின் 
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் 
      கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம் 
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !
      அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !

 
        அருணன் இந்திரனின் திசையை அடைந்தான். (கிழக்கில்
விடியற்காலையின் செந்நிறம் படர்ந்தது.) அதனால் இருள் அகன்றது.
உம்முடைய மலர் போன்ற திருமுகத்தில் கருணையின் சூரியன் 
எழுவதால் உதயமாகின்றது. கண்களைப் போன்ற மணமுள்ள
மலர்கள் மலர்கின்றன. மேலும் அண்ணலே, உங்கள் அழகிய கண்மணி 
போன்ற வண்டுகள் திரள் திரளாக ரீங்காரமிடுகின்றன. திருப்பெருந்துறையில்
வீற்றிருக்கும் சிவபெருமானே, இதனை உணர்வீர் ! அருளாகிய செல்வத்தைத்
தர வரும் மலை போன்ற ஆனந்தம் உடையவனே ! (ஓயாது வந்துகொண்டிருக்கின்ற) 
அலைகடலே ! பள்ளி எழுந்தருள்க !

 
அருணன் - சூரியனின் தேர்ப்பாகன் (காலையில் சூரியன் தோன்றும் முன் 
தோன்றும் செந்நிறம் அருணோதயம் எனப்படும்); இந்திரன் திசை - கிழக்கு;
நயனம் - கண்; கடி - மணம்; அறுபதம் - வண்டு.

 
3.
கூவின பூங்குயில்; கூவின கோழி; 
      குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து 
      ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத் 
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

 
        குயில்கள் பாடின. கோழிகள் கூவின. பறவைகள் சலசலத்தன;
சங்கு ஒலித்தது. விண்மீன்களின் ஒளி மறைந்தது. காலையின் ஒளி 
மேலோங்குகிறது. தேவனே, விரும்பி எங்களுக்கு உம்முடைய நல்ல 
செறிந்த கழலணிந்த இரு திருவடிகளையும் காட்டுங்கள் ! திருப்பெருந்துறை
வீற்றிருக்கும் சிவபெருமானே ! யாராலும் அறிவதற்கு அரியவனே ! 
(அடியவராகிய) எங்களுக்கு எளியவனே ! எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

 
குருகு - பறவை; ஓவுதல் - மறைதல்; தாரகை - நட்சத்திரம்; 
ஒருப்படுதல் - முன்னேறுதல்/மேலோங்குதல்.

 
4.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
     இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
      தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் 
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

 
        ஒரு பக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள்;
ஒரு பக்கம், இருக்கு வேதமும் மற்றும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள்;
ஒரு பக்கம், நிறைய மலர்களைக் கையில் பிடித்தவர்கள்;
ஒரு பக்கம், தொழுவார்களும், (அன்பின் மிகுதியால்) அழுவார்களும், 
    (விடாது அழுது) துவண்ட கைகளை உடையவர்களும் ;
ஒரு பக்கம், சிரத்தின் மேல் கை கூப்பி வணக்கம் செய்பவர்கள்;
திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே ! 
(இவர்களோடு) என்னையும் ஆண்டுகொண்டு இனிய அருள் செய்கின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

 
துன்னிய - செறிந்த; சென்னி - தலை; அஞ்சலி - வணக்கம்.

 
5.
பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால் 
      போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர் 
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் 
      கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச் 
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
      சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து 
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் 
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

 
        "பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது அல்லாமல்,
இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை" என உம்மைப் பண்டிதர்கள்
புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி, உம்மைக் கண்டு அறிந்தவர்களை
நாங்கள் கேட்டுக்கூடத் தெரிந்துகொண்டதில்லை ! குளிர்ந்த வயல்களுடைய 
திருப்பெருந்துறைக்கு அரசே ! நினைத்துப் பார்க்கக் கூட அரியவனே ! 
(எனினும் எளியவனாகி) எம்முடைய கண் முன்னே எழுந்தருளிக் குற்றங்கள்
நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

 
சீதம் - குளிர்ச்சி; ஏதம் - குற்றம்/துன்பம்.

 
6.
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் 
      பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும் 
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின் 
      வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ் 
      திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் 
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

 
        விரிந்து செல்லுதல் இல்லாது (ஒருமைப்பட்ட மனத்துடன்),
வீடுபேற்று நிலையில் உணர்கின்ற உம்முடைய அடியவர்கள் பந்தமாகிய 
கட்டுக்களை அறுத்தனர். அவர்கள் பலரும் மையணிந்த கண்களை உடைய 
பெண்களைப் போலத் தம்மைக் கருதி உம்மைத் தொழுகின்றனர் (காதலனாக),
(உமையாகிய) பெண்ணின் மணவாளனே ! சிவந்த தாமரை கண் விழிக்கின்ற
(இதழ்களை விரிக்கின்ற) குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைச்
சிவபெருமானே ! இந்தப் பிறவியை நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற 
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

 
பப்பு - பரப்பு; அணங்கு - பெண்; செப்புறு - செம்மை உடைய.

 
7.
"அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு 
      அரிதென, எளிதென", அமரும் அறியார், 
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
      எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும் 
மதுவளர் பொழில் திருஉத்தர கோச 
      மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்; 
      எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !

 
        "அந்தப் பரம்பொருள் பழத்தின் சுவைபோல இனியது,
அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, எளியது" என 
அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை ! 
(அப்படிப்பட்ட தாங்கள்) "இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம். 
இவர் தான் அந்தப் பரம்பொருள்." என்று (கூறத்தக்க எளியமுறையில்) எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர் !
தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே !
திருப்பெருந்துறைக்கு அரசே ! எது எங்களைப் பணி கொள்ளும் வகை ? அதன்படியே நடப்போம் !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

 
ஆறு - வழி.

 
8.
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்; 
      மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் ! 
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் 
      பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித் 
      திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி 
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்; 
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

 
        முன்னரே இருக்கும் துவக்கமும், இடைனிலையும், இறுதியும் ஆனவரே !
உம்மை மும்மூர்த்திகளும் அறியவில்லை. பிறகு வேறு யார் தான் அறிய முடியும் ?!
(பூமியாகிய) பந்தினை விரலில் அணிந்தவளும் (உமை), நீயும், உன் 
அடியார்களின் (பலகாலமாக அன்பு செய்துவந்த) பழைமை வாய்ந்த 
(மனத்து) இல்லங்கள்தோறும் எழுந்தருளுகின்ற பரமனே !
சிவந்த நெருப்புப் போன்ற அழகிய மேனியும் காட்டி,
திருப்பெருந்துறையில் கோயிலும் காட்டி, அந்தணனாக அமரும் கோலமும் 
காட்டி என்னை ஆண்டாய் ! விரும்பி உண்ணும் அமுதம் போன்றவனே ! 
பள்ளி எழுந்தருள்க !

 
மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற.

 
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா 
      விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள் 
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
      வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம் 
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
      கடலமுதே ! கரும்பே ! விரும்படியார் 
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
      எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !

 
        விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே !
உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து 
வாழ வழிவகை செய்தவனே ! அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே !
வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே !
கடலிலிருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே ! கரும்பே ! விரும்பித்
தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே ! உலகுக்கு உயிரானவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

 
நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) - 
அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி.

 
10.
"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம் 
      போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி 
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித் 
      திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம் 
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் 
      படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் 
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !
         "இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக உய்யக் கொள்கின்றது 
(சிறந்த இடம்). அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை வீணாகக்
கழித்துக்கொண்டிருக்கிறோம்." என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும்,
பிரமன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே,   
உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள்,
இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர் ! அத்தகைய விருப்பம் தரும்
அமுதமே ! பள்ளி எழுந்தருள்க !
புவனி - பூமி; மலரவன் - பிரமன்; அவனி - உலகம்.
               திருச்சிற்றம்பலம் 

 

Related Content

The Pilgrim's Progress

Thiruppalliyezhuchi - Meaning

Thiruvasagam Part-1 - Romanized version

Thiruvempavai

சிவ பராக்ரம போற்றி அகவல்