logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருக்கேதாரம் (கேதார்நாத் ஜ்யோதிர்லிங்கம்) தலபுராணம்

Om symbol

இறைவர் திருப்பெயர்: கேதாரேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: கேதாரகௌரி.

தல மரம்:

தீர்த்தம் : மந்தாகினி நதி, உதககுண்ட தீர்த்தம்

வழிபட்டோர்: உமையம்மை, பாண்டவர்கள், சம்பந்தர், அப்பர், சுந்தரர், திருமூலர், சேக்கிழார், ஆதிசங்கரர் முதலியோர்

Loading map...

Sthala Puranam

  • 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. முனிவர், தேவர், யக்ஷரால் வணங்கப்படுவது என்று ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்திரத்தில் போற்றப்படுவது திருக்கேதாரம்.
  • ஸ்கந்த புராணத்தில் மஹேஸ்வர கண்டத்தில் வரும் கேதாரம் உருவான வரலாறு: முதல் மன்வந்தரமான ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் மிகவும் பலசாலியான ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் இருந்தான். அவனும் அவனுடைய அசுரர் சகாக்களும் தேவர்களை விரட்டிவிட்டு யக்ஞங்களில் அவர்களுக்கு உரிய ஹவிர்பாகத்தைத் தாங்கள் எடுத்துக்கொண்டனர். இந்திரனும் தேவர்களும் இமயத்தில் சரணடைந்து பெருந்தவம் செய்தனர். அவர்களின் தவத்திற்கு மெச்சி சிவபெருமான் ஒரு எருமையின் வடிவத்தில் ஆக்ரோஷமாகத் தோன்றி, "யாரை முட்டவேண்டும்?" (கே தாரயாமி?) என்று கேட்க, இந்திரன் தொழுது, ஹிரண்யாக்ஷனும் அவன் சகாக்களான சுபாஹு, வக்ரகந்தரன், திரிசிருங்கன், லோஹிதாக்ஷன் என்போர் செய்யும் கொடுமைகளைக் கூறினர். எருமை வடிவத்தில் இருந்த இறைவன் அந்த அசுரர்களை வீழ்த்தினார். பின்னர் இந்திரனிடம் "இன்னும் என்ன வரவேண்டும் கேள்" என்றார். இந்திரன் அவரை வணங்கித் "தாங்கள் இந்த உருவத்துடனே இங்கு எழுந்தருளி வணங்குவோருக்குத் திருவருள் செய்து மோக்ஷமும் அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். சிவபெருமான் அங்கு ஒரு தீர்த்தகுண்டம் உருவாக்கி சுத்தம் உள்ளவராக யார் இக்குண்டத்தில் இடது கரத்தால் ஒரு முறையும், வலது கரத்தால் ஒரு முறையும் இரு கரங்களாலும் ஒரு முறையும் தீர்த்தம் அருந்தித் தன்னை தரிசிக்கிறார்களோ அவர்களது தாய் வழி மூதாதையரும், தந்தை வழி மூதாதையரும், தானும் நற்கதி அடைவர் என்று திருவருள் புரிந்து அங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.
  • இந்திரன் சிவபெருமானை நோக்கி, "கே தாரயாமி" என்று தாங்கள் கேட்டதால் இத்தலம் கேதாரம் என்று அழைக்கப்படட்டும். தினமும் உங்களை சுவர்க்கத்திலிருந்து வந்து வழிபடுவேன் என்றான். அன்று முதல் தினமும் வழிபாடு செய்யத் தொடங்கிய இந்திரன், பனிக்காலத்தில் கேதாரம் முழுமையும் பனியால் மூடப்படுவது கண்டு, இங்கு வழிபட வரும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாவர் என்று கேதாரேஸ்வரரிடம் விண்ணப்பம் செய்ய, சிவபெருமான் 8 மாதங்கள் கேதாரத்தில் அருள்வதாகவும், பனி மூடும் 4 மாதங்கள் ஹாடகேஸ்வரத்தில் அருள் புரிவதாகவும் வரம் தந்தார். 
  • கேதாரம் என்றால் சமவெளி என்று பொருள். மலைகளுக்கு நடுவே நிலமாக இருப்பதால் இப்பெயர் பெற்றது.
  • பிருங்கி முனிவர் வண்டு உருவம் தாங்கி,ஈசனை மட்டும் வலம் வந்து போற்றிய நெறிகண்டு, கேதார விரதம் அனுட்டித்து, உமையம்மை இடப்பாகம் பெற்ற திருத்தலம். அனேகதங்காவதம் என்னும் கௌரிகுண்டத்தில் அம்மை தவம் புரிந்தார். இவ்விரண்டு தலங்களும் தொடர்புடையன. அருகில் இருப்பன.
  • விஷ்ணு ஸ்வரூபமான நர நாராயணர்கள் பத்ரிகாஸ்ரமத்தில் தவம் செய்தனர். அவர்கள் தவத்தை மெச்சி பரமேஸ்வரன் தோன்றி வேண்டிய வரம் கொடுத்தார். அப்போது அவர்கள் அந்தப் பனிமூடிய பிரதேசத்தில்  என்றும் இருந்து வணங்குவோருக்கு அருள் தர வேண்டினர். இறைவன் அவ்வாறு திருவருள் நிறைந்து இருக்கும் இடமே திருக்கேதாரம்.
  • பாண்டவர்கள் மஹாபாரதப் போரில் வெற்றிபெற்று ஆட்சி மேற்கொண்டாலும் தங்கள் உறவினர்களைப் போரில் வீழ்த்தி வென்றதற்கு வருந்தினர். அவர்கள் தங்கள் பேரன் பரிக்ஷித்திடம் நாட்டை ஒப்படைத்துவிட்டுத் தங்கள் பாவங்களைப் போக்கி சுவர்க்கம் செல்ல எண்ணினர். எல்லா வினைகளையும் போக்குபவரான சிவபெருமானை வணங்க இமயமலை வந்தனர். பாண்டவர்கள் காணா வண்ணம் இறைவன் ஒரு தலத்தில் மறைந்து நின்றார். அது குப்தகாசி எனப்படுகிறது. இறைவனை எங்கு காண்பது என்று வருந்தினர். இறைவன் அங்கிருந்த எருமைக்கூட்டத்தில் ஒன்றாக இருப்பதை உணர்ந்தனர். தொடர்ந்து சென்று வீமன் அவ்வெருமையின் வாலைப் பிடிக்க அவ்வுருவில் இருந்த சிவபெருமான் பூமிக்குள் சென்று மறைந்தார். பீமன் பற்றிய பின்பகுதி கேதாரேஸ்வர சிவலிங்கமாகக் காட்சி தந்தது. சிவவழிபாடு செய்து உய்வுறவேண்டும் என்ற பாண்டவர்களின் உறுதியான முயற்சியை மகிழ்ந்த பெருமான் அவர்களுக்குத் தன் அங்கங்களாகப் பஞ்ச கேதாரங்களிலும் காட்சியளித்து அவர்கள் பாவங்களைப் போக்கி சுவர்க்கத்திற்கு வழிகாட்டினார்.
  • பாண்டவர்கள் வழிபாடு செய்து பின் சுவர்க்கம் சென்ற பஞ்ச கேதாரம் இவையாவன: திருக்கேதாரம் (திருப்புட்டம் - பின்பகுதி), மத்மஹேஸ்வர் (திருவயிறு), துங்கநாத் (திருக்கரங்கள்), ருத்ரநாத் (திருமுகம்), கல்பேஸ்வர் (திருச்சடை). இவற்றுள் கல்பேஸ்வர் மட்டும் ஆண்டு முழுமையும் பக்தர்கள் தரிசனத்திற்குத் திறந்திருக்கும். மற்றவை கோடை உள்ள ஆறு மாத காலத்திற்கு மட்டுமே திறந்திருக்கும். இமயத்தின் மலைகள் காடுகள் ஊடாக இறைவன் உறையும் இத்தானங்களை தரிசிக்கச் செல்லும் பஞ்ச கேதார புனித யாத்திரை அற்புதமானது.
  • ஸ்கந்த மஹா புராணத்தில் கேதார கண்டம் இருக்கிறது.
  • சுந்தரரும், சம்பந்தரும் இத் தலத்தைக் காளத்தியிலிருந்து தரிசித்தனர். இத்தலத்திற்குரிய இவ்விருவர் திருப்பதிகங்களும் தவத்தைப் போற்றுவதாக அமைந்துள்ளன. இது தவம், ஞானம், மோக்ஷத்திற்கான திருத்தலம் என்பதை அழகாக எடுத்துக்காட்டுகிறார்கள்.

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்     - 1. தொண்டரஞ்சு களிறும் (2.114);                      சுந்தரர்       - 1. வாழ்வாவது மாயம்மிது (7.78); பாடல்கள்      :    அப்பர்        -       திரையார் புனற்கெடில (6.7.4),                                            பூதியணி பொன்னிறத்தர் (6.51.2),                                            ஆண்டானை அடியேனை (6.54.1),                                            உஞ்சேனை மாகாளம்  (6.70.8),                                            கந்தமா தனங்கயிலை (6.71.9);                    சேக்கிழார்     -      அங்கண் வடதிசை (12.28.1026) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                            வட மாதிரத்துப் (12.29.198) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,                                            மன்னு திருக் கேதாரம் (12.30,3) திருமூல நாயனார் புராணம்.  

 

Specialities

  • thirukedharam templeஇமய மலையின் பனி சூழ்ந்த சிகரங்களுக்கு மத்தியில் எழிலோடு காட்சியளிக்கின்றது.
  • திருக்கேதாரத்திலிருந்து திருக்கயிலாயம் செல்ல முன்பு பாதை வழக்கத்தில் இருந்தது. திருமூலர் திருக்கயிலாயத்திலிருந்து திருக்கேதாரம் வழிபட்டுப் பின்னர் தென்னாட்டிற்கு யாத்திரை மேற்கொண்டார். ஆதிசங்கரர் திருக்கேதாரம் தொழுது பின்னர் திருக்கயிலை சென்றார் என்பர்.
  • கேதாரம் கடல்மட்டத்திலிருந்து 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் பின்னணியில் சௌகம்ப பனிமலைச் சிகரமும், பெரும் பனிப்பாறைத் தொகுதிகளும் உள்ளன. எனவே பனியுதிரும் சடையர் உறையும் திருக்கேதாரம் கோடைகாலத்திலும் குளிராகவே இருக்கும்.
  • ஹர்த்வார் சொர்க்கத்திற்கு நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. இதற்கு மாயாபுரி என்றும் பெயர். ஹர்த்வாருக்குப் பிறகு, ரிஷிகேஷ், தேவ்பிரயாக், சோன்பிரயாக் மற்றும் திரியுகி நாராயண், கௌரிகுண்ட் போன்ற புனித தலங்கள் உள்ளன. கேதார்நாத்துக்கு இந்த இடங்கள் வழியாகத்தான் செல்ல வேண்டும். பயணத்தின் ஒரு பகுதி வாகனம் மூலம் செல்லக்கூடியது, மீதமுள்ள பகுதி நடந்து செல்ல வேண்டும். இமயமலை வழியாக செல்லும் இந்தப் பகுதி மிகவும் கடினம். ஆனால் பக்தர்கள் இதையெல்லாம் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் கடந்து செல்கிறார்கள். அவர்கள் எல்லா சிரமங்களையும் விடாமுயற்சியுடன் சமாளிக்கிறார்கள்.
  • கௌரிகுண்டத்திலிருந்து 15 கிமீ மலையேற்றத்தில் திருக்கேதாரத்தை அடையலாம்.
  • கேதாரத்தின் பனிப்பாறைகள் உருகி இங்கு மந்தாகினி நதி உற்பத்தி ஆகி கேதாரேஸ்வரர் திருக்கோயிலை இரண்டு பக்கமும் சூழ்ந்து ஓடுகின்றது. இது தேவபிரயாகையில் மற்ற இமயப்பனிவரை நதிகளுடன் கூடி கங்கையாகிறது.
  • ஆறு மாதங்கள் தேவர்களாலும், ஆறு மாதங்கள் மனிதர்களாலும் வழிபடப்படுகிறது. சித்திரை மாதம் அக்ஷய திருதியையில் கேதார்நாத் திருக்கோயில் பக்தர்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்படும். கேதார கௌரி விரதமான ஐப்பசி அமாவாசையில் நடை சார்த்தப்படும். அதன் பின் வரும் பனிக்காலத்தில் கேதாரநாதர் உக்கிமட் என்ற இடத்தில பூஜிக்கப்படுகிறார்.
  • கேதாரேஸ்வரர் அற்புதமான சுயம்பு லிங்கத் திருமேனி.
  • பிரம்ம கமலம் என்ற பூ இங்குள்ள மலைச்சாரலில் பூக்கிறது. இது கேதாரேஸ்வரருக்குச் சிறப்பாகச் சார்த்தப்படுகிறது.
  • சார்தாம் யாத்திரை பிரபலமானது. சார்தாம் எனப்படுவன கங்கோத்திரி, யமுனோத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் (இந்திரநீலப் பருப்பதம்) ஆகும். சார்தாம் யாத்திரை செல்பவர்கள் கங்கோத்திரியிலிருந்து கங்கை நீரையும் யமுனோத்திரியிலிருந்து யமுனை நிறையும் கொண்டுவந்து கேதாரேஸ்வரப் பெருமானுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். 
  • இன்றும் கேதார விரதம் ஐப்பசி மாத அமாவாசை நாளில் அனுட்டிக்கப்படுகிறது.
  • கேதார மாவிரதத்திற்குப் பின், ஸ்ரீ கேதாரேஷ்வரர் திருவுருவம் நந்தா விளக்கு ஏற்றிய பின்  கோவிலிலிருந்து வெளியே கொண்டு வரப்படுகிறது. பின்னர் குளிர்காலத்திற்காக கோயில் மூடப்படும். கார்த்திகை மாதம் முதல் சித்திரை வரை ஸ்ரீ கேதாரேஷ்வரரின் உறைவிடம் பள்ளத்தாக்கில் உள்ள உக்கி மடத்திற்கு மாற்றப்படுகிறது. வைகாசி மாதத்தில், கோவில் கதவுகள் திறக்கப்படும் போது, நந்தா விளக்கு இன்னும் எரிந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இந்த அற்புதத்தைக் கண்டு மகிழ்கிறார்கள். 
  • கேதார்நாத் யாத்திரை மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது.
  • அருகில் உள்ள மலையில் காவல் தெய்வமான பைரவர் சந்நிதி உள்ளது.
  • பஞ்ச கேதாரம் (Panch Kedar)
    பஞ்ச கேதாரம் என்பது கேதார்நாத்தை சுற்றியுள்ள சிவபெருமானின் ஐந்து திருக்கோயில்கள் ஆகும். அவை: கேதார்நாத், மத்தியமகேஷ்வர், ருத்ரநாத், துங்கநாத், மற்றும் கல்பேஷ்வர். ஒவ்வொரு ஆண்டும், பஞ்ச கேதார யாத்திரைகளில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
    துங்கநாத் (Tungnath)
    துங்கநாத் உள் இமயமலைத் தொடரில் உள்ள மிக உயரமான கோவில் ஆகும். சோப்தாவிலிருந்து 3 கி.மீ. மேடான மலையேற்றப் பாதையில், சென்றால் துங்கநாத்தை அடையலாம். இது சந்திரசிலா சிகரத்திற்குக் கீழே அமைந்துள்ளது. 3,886 மீ உயரத்தில் உள்ள இந்தக் கோவிலில் சிவபெருமானின் கரம் வணங்கப்படுகிறது. இந்தக் கோவில் பண்டைய கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சற்றே இடப்பக்கம் சாய்ந்த, கறுப்பு நிறமான, ஒரு அடி உயர லிங்கம் இங்கு மையமாக உள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் இயற்கை நறுமணம் மிக்க மலர்களுக்கும் இந்த இடம் பிரபலமானது.
    ருத்ரநாத் (Rudranath)
    ருத்ரநாத் அடர்ந்த வனத்தின் நடுவில் 2286 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் கோபேஷ்வரிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தக் இயற்கை பாறைக் கோவிலில் சிவபெருமானின் முகம்  நீலகண்ட மகாதேவராக வணங்கப்படுகிறது. இந்தக் கோவிலில், சிவபெருமானின் திருவுருவம் அவருடைய முகத்தின் அடையாளமாக, மிகவும் அழகான, வசீகரமான, காண அரிதான, அமைதியான மற்றும் அழகிய வடிவமாகப் புன்முறுவலுடன் வணங்கப்படுகிறது. ருத்ரநாத் கோவிலுக்கு அருகில் சூர்ய குண்டம், சந்திர குண்டம், தாரா குண்டம், மானஸ குண்டம் போன்ற பல புனித தீர்த்தங்கள் உள்ளன. ருத்ரநாத் கோவிலில் இருந்து ஹாதி பர்வத், நந்தாதேவி, நந்தா குண்டி, திரிசூலி மற்றும் பல சிகரங்களின் அற்புதமான காட்சிகளைக் காணலாம்.
    மத்தியமகேஷ்வர் (Madhyamaheshwar)
    மத்தியமகேஷ்வர் கடல் மட்டத்திலிருந்து 3289 மீ உயரத்தில், சௌகம்பா சிகரத்தின் அடிப்பகுதியில், குப்தகாசியின் வடகிழக்கில் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமானின் நாபி வணங்கப்படுகிறார். இந்த பாரம்பரிய கோவில் கட்டிடக்கலை வட இந்திய பாணியைச் சேர்ந்தது. இங்கிருந்து கேதார்நாத் மற்றும் நீலகண்ட சிகரங்களையும் காணலாம். இந்தக் கோவிலை, புகழ்பெற்ற காளிமத்தின் சித்த பீடம் வழியாகவும் மலையேற்றப் பயணம் மூலம் அணுகலாம்.
    கல்பேஷ்வர் (Kalpeshwar)
    கல்பேஷ்வர் ஒரு சிறிய பாறைக் கோவில், இது தியானம் செய்யும் முனிவர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகும். இந்தச் சன்னதி ஊர்கம் பள்ளத்தாக்கில் (Urgam Valley) கடல் மட்டத்திலிருந்து 2,134 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமானின் சடை (முடி), ஜடாதாராக வணங்கப்படுகிறது.

அநேகதங்காவதம் (கௌரிகுண்டம்) தல வரலாறு

கேதார விரத மகிமை (தீபாவளி நோன்பு)

கேதார விரத பூஜை
 

முந்தைய தலம்<அநேகதங்காவதம் (கௌரிகுண்டம்)

 அடுத்த தலம்>திருநொடித்தான்மலை  (திருக்கயிலாயம், கயிலாயம்)

Contact Address

அமைவிடம் இமயமலைச் சாரலில் உள்ள தலம். டில்லியிலிருந்தும், ஹரித்வாரிலிருந்தும் பஸ் வசதி இருக்கிறது. கௌரிகுண்டதிலிருந்து, 13கீ.மீ.தூரம் மலைப்பாதை. ஆதலால் நடந்தோ, குதிரை மூலமாகவோ செல்ல வேண்டும்
Loading map...

Related Content

திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயில்

திருஇந்திரநீல பருப்பதம் (பத்ரிநாத் - நீலகண்ட சிகரம்)

அநேகதங்காவதம் (கௌரிகுண்டம்) தல வரலாறு

திருக்கயிலாயம் (திருநொடித்தான்மலை) - கயிலையின் பெருமை - கயி

ஸோமநாதம் ஜோதிர்லிங்கம் (சோம்நாத், சௌராஷ்ட்ரம், குஜராத் )