logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருக்கருவூரானிலை - (கரூர்)

Om symbol

இறைவர் திருப்பெயர்: பசுபதீஸ்வரர், ஆனிலையப்பர்

இறைவியார் திருப்பெயர்: அலங்கார நாயகி, கிருபாநாயகி, சௌந்தர்யநாயகி,

தல மரம்:

தீர்த்தம் : ஆம்பிராவதி ஆறு , பிரம தீர்த்தம்

வழிபட்டோர்:பிரம்மா, காமதேனு, முசுகுந்த சக்ரவர்த்தி, புகழ்ச்சோழ நாயனார், எறிபத்த நாயனார், சிவகாமியாண்டார், சம்பந்தர், கருவூர்த் தேவர்

Loading map...

Sthala Puranam

  • karur templeசுவாமி சுயம்பு மூர்த்தி.
  • ஊரின் பெயர் கருவூராயினும், இங்குள்ள கோவிலுக்கு, காமதேனு வழிபட்டதால் ஆனிலை என்று பெயர். 
  • பிரம்மனுக்கு படைத்தல் தொழில் செய்வதால்  தன்னையே வியந்த ஒரு கர்வம் உண்டாயிற்று. அந்த நேரத்தில்  காமதேனு நாரதர் கூறிய படி வஞ்சிவனமாக இருந்த இத்தலத்தில் வந்து தவம் செய்தது. அப்போது புற்றில் இருக்கும்  சுயம்பு சிவலிங்க மூர்த்தியை  தினமும் பாலை சொரிந்து வழிபாடு செய்தது.  ஒரு நாள்  இறைவன் திருமுடியில் காமதேனுவின் குளம்பு  பட்டு விட  அதனைக் கண்டு காமதேனு மனம் வருந்தியது.  இறைவன் காமதேனுவுக்கு அருள்புரிந்து  காமதேனு வழிபட்டதால் ஆநிலையப்பர் பசுபதீஸ்வரர் என்ற பெயரால்  அழைக்கப்பட  அருள் செய்தார்.  அத்துடன் காமதேனுவுக்கு பிரம்மனைப் போல  படைப்புத் தொழில் செய்யவும் வல்லமை கொடுத்தார். அதன்படி காமதேனு படைத்தல் தொழில் செய்யத் தொடங்கியது. சிவபெருமானின் திருவருளாலேயே எல்லோராலும் பெரும் திறன் பெற இயலுகிறது என்பதை உணர்ந்து பிரம்மனின்  கர்வம் நீங்கியது.  கர்வம் நீங்கிய பிரம்மன் வழிபட  இறைவன் மீண்டும் பிரம்மனுக்குப் படைத்தல் தொழிலைக் கொடுத்தார். படைப்புத் தொழில் அருளியமையால் இவ்வூர் கருவூர் எனப் பெயர் பெற்றது.
  • இந்திரன் தன மகளான தெய்வானை திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானுடன் திருமணம் செய்வதற்கு கருவூரில் ஆண்ட முசுகுந்த சக்கரவர்த்திக்கு அழைப்பு விடுத்தான். இதிலிருந்து, கருவூரின் பழம் பெருமை புலனாகும்.
  • இருபத்தொரு சருக்கங்களையும் ஆயிரத்துநூற்றிருபத்தொன்பது திருவிருத்தங்களையும் கொண்ட புராணம் ஒன்று உள்ளது.

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்   :  சம்பந்தர்  -  1. தொண்டெ லாமலர் தூவி (2.28); பாடல்கள்    : சேக்கிழார் -     செல்வக் கருவூர்த் திருவானிலைக் (12.28.339) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

 

 

Specialities

  • மூலவர் - சிவலிங்கத்தின் மீது மாட்டுக்குளம்பு பட்டது போல இருபக்கங்களிலும் பள்ளங்கள் உள்ளன. மேற்புறம் சொரசொரப்பாகவும் உள்ளது. காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம்.
  • சுமார் இரண்டடி உயரம் உள்ள இந்த சிவலிங்கம் வடபுறமாகச் சற்றே சாய்ந்தாற்போலக் காட்சியளிக்கிறது. 
  • அறுபத்து மூவருள், புகழ்ச் சோழர் ஆண்ட பதி. புகழ்ச்சோழ மண்டலம் என்னும் இடம் தனியாக உள்ளது.
  • எறிபத்த நாயனார் அவதரித்த தலம். அவதாரத் தலம் : கருவூர் (கரூர்) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : கருவூர் (கரூர்) குருபூசை நாள் : மாசி - அஸ்தம் எறிபத்த நாயனாரின் திருவுருவச் சிலை கோயில் வளாகத்தில் உள்ளது.
  • சிவகாமியாண்டார் வாழ்ந்து திருத்தொண்டு செய்த பதி.
  • திருவிசைப்பா அருளியவர்களுள் ஒருவரான கருவூர்த் தேவரின் தலம்.
  • இரு அம்பாள் சந்நிதிகள் இருக்கின்றன. இவ்விரு அம்பாள் சந்நிதிகளுள் கிழக்கு நோக்கியுள்ள அலங்கார நாயகி சந்நிதியே ஆதியானது. 
  • இந்தத் தலம் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டது.
  • இது சோழமன்னர் முடிசூட்டிக்கொள்ளும் பதிகள் ஐந்தனுள் ஒன்று.
  • ஏழுநிலை ராஜகோபுரம்.
  • பங்குனி உத்திரம் - 13 நாட்கள் உத்சவம் 
  • பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரியனின் ஒளி பசுபதீஸ்வரர் திருமேனி மீது படுகிறது.
  • கல்வெட்டு: இக்கோயிற் சுவர்களில் பதினேழு கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் ஆறு படி எடுக்கப்பட்டன. அவைகளில் ஒன்று தவிர மற்றவை 11, 12, 13ஆம் நூற்றாண்டுச் சோழர்களின் கல்வெட்டுக்களேயாம். இவை மெய்க்கீர்த்திகள், அரசருடைய பெயர்கள் இவற்றைக் காட்டுகின்றன. 
  • இறை, புரவு, சிற்றாயம், எலவை, உடைமை, தெண்டகுற்றம் முதலிய அக்காலத்து வரிப் பெயர்களைக் காட்டுகின்றன. அரசரின் ஆணைகள் எழுதும் விவரம் அரசனுடைய அலுவலாளர்களின் பெயர்கள் முதலியனவும் காணலாம். 
  • நன்மை தீமைகளுக்கு இரட்டைச்சங்கு ஊதி, பேரிகை கொட்டி, பாதரட்சையிட்டு, வீடுகளுக்குச் சாந்து பூசிக்கொள்ள அரசன் ஆணை கொடுக்கப்பட்டது.
  • கல்வெட்டுக்களில் இறைவர் திருவானிலை ஆளுடையார் என்னும் திருப்பெயரால் கூறப்பெற்றுள்ளனர். 
  • விக்கிரமசோழன் காலத்தில் இவ்வூர் வீரசோழ மண்டலத்து வெங்காலநாட்டுக்கும், மூன்றாங்குலோத்துங்கசோழன் காலத்துச் சோழகேரள மண்டலத்து வெங்காலநாட்டுக்கும் உட்பட்டிருந்தது. மூன்றாங்குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கருவூர் முடிவழங்கு சோழபுரம் என்னும் பெயரையும் பெற்றிருந்தது. மூன்றாங் குலோத்துங்கசோழன் திருவானிலை ஆளுடையாருக்கு வெங்காலநாட்டுத் தட்டையூர் நாட்டுக் கேரளபள்ளியிலும், மன்றையிலும் ஐம்பது வேலி நிலத்தைத் திருநாமத்துக் காணியாகக் கொடுத்திருந்த செய்தி அறியப்படுகின்றது.
  • ``திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்`` எனத் தொடங்கும் மெய்க் கீர்த்தியையுடைய ஸ்ரீ இராசேந்திரசோழ தேவரின் கல்வெட்டு வெங்காலநாட்டு நெல்வாய்ப்பள்ளியில் பூசைக்கும் திருப்பணிக்கும் நிலம் அளிக்கப்பெற்றதைக் குறிப்பிடுகின்றது. வீரராசேந்திரசோழன் பாக்கூரிலும் திருநாமத்துக்காணியாக நிலம் கொடுத்திருந்தான். கோனேரின்மை கொண்டான் அந்தனூரான வீரசோழநல்லூரை உவச்சர், தேவரடியார், தவசியர் இவர்களுக்காக அளித்திருந்தான்.
முந்தைய தலம்<திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)

 அடுத்த தலம்>திருநெல்வாயில் அரத்துறை

Contact Address

அமைவிடம் செயல் அலுவலர், அ/மி. ஸ்ரீபசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர் - 639 001. தொலைபேசி : 04324 - 262010. அலைபேசி : +91 - 9994012627. மாநிலம் : தமிழ் நாடு தமிழகத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் இவ்வூருக்கு பஸ் வசதியும், இரயில் வசதியும் உள்ளது.
Loading map...

Related Content

திருப்புக்கொளியூர் அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

திருநணா (பவானி) சங்கமேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீஸ்வரர் தி

வெஞ்சமாக்கூடல் (வெஞ்சமாங்கூடலூர்)