இறைவர் திருப்பெயர்: | விசுவநாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | விசாலாட்சி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | கங்கை |
வழிபட்டோர்: |
வருணா - அசி ஆகிய இரு நதிகளின் சங்கமத் தலம்; ஆதலின் இஃது 'வாரணாசி' என்றாயிற்று.
இத்தலத்தில் இறப்பவர்க்கு விசுவநாதப் பெருமான் தாரக மந்திரத்தை உபதேசித்து முத்தியருளுகின்றார் என்பது சாஸ்திரக் கருத்து.
வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - மாட்டூர் மடப்பாச் சிலாச்சி (2-39-7), அப்பர் - தேனார் புனற்கெடில (6.7.11), அப்பர் - மண்ணிப் படிக்கரை - 6.70.6, சேக்கிழார் - அன்ன நாடு கடந்து - 12.27.353, சேக்கிழார் - கங்கை நீர்த்துறை - 12.36.4
இங்கே ஓடும் புண்ணிய நதியான கங்கையில் 84 படித்துறைகள் உள்ளன. இவற்றுள்ளும் 1. அசிசங்கம காட், 2. தசாசுவமேத காட், 3. மணிகர்ணிகா காட், 4. பஞ்சகங்கா காட், 5. வருணா சங்கம காட் ஆகிய ஐந்தும் மிக சிறப்புடையவை. இவ்வைந்திலும் நீராடுவது / நீரைத் தெளித்துக் கொள்வதை பஞ்சதீர்த்த ஸ்நானம் என்று சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
சுவாமி விசுவநாதருக்குத் தங்க விமானம் - சுவர்ண பந்தனம், மரகத மூர்த்தி, அவரவர் விருப்பப்படி தேன், பால், தயிர், தண்ணீர், வில்வம், விபூதி கொண்டு அபிஷேகம் செய்து தொட்டுக் கும்பிட்டு வழிபடலாம்.
'காசியில் இறக்க முத்தி' என்பதற்கு ஏற்ப "அரிச்சந்திர காட்"டில் பிணங்கள் எரிந்து கொண்டிருப்பதைக் கண் கூடாகக் காணலாம். இத்தலத்திற்கு இறந்து போவதற்கென்றே வருவோர் ஏராளம் பேர்.
விசாலாட்சி சந்நிதி தனிக்கோயில் - நகரத்தாரின் பொறுப்பில் உள்ளது. அர்த்தசாம வழிபாடும் அவர்களாலேயே நடத்தப்பெறுகின்றது.
நாடொறும் இரவு 7.30 மணியளவில் விசுவநாதர் சந்நிதியில் நடைபெறும் சப்தரிஷி பூசையை அவசியம் தரிசிக்க வேண்டும்.
அன்னபூரணி - தனிக்கோயில்; சலவைக் கல்லால் ஆனது. அவள் ஒரு கையில் தங்கத்தாலான அன்ன பாத்திரம் மறுகையில் தங்கத்தாலான அகப்பை ஏந்தியிருக்க அருகில் பிச்சையோடு ஏந்தியவாறு பிட்சாடனர் வெள்ளி வடிவில் தரிசனம் தருகின்றார்.
ஸ்ரீ ஆதி சங்கரர் விசுவநாத அஷ்டகம், அன்னபூரணி அஷ்டகம், மணி கர்ணிகா அஷ்டகம் முதலியவை பாடியுள்ளார்.
'அநுமான் காட்' பகுதியில் ஸ்ரீ சங்கரமடமும், 'கேதார் காட்' பகுதியில் திருப்பனந்தாள் குமாரசாமி (ஸ்ரீ காசி மடம்) மடமும் உள்ளன.
அமைவிடம் மாநிலம் : உத்தர பிரதேசம் புது டில்லியிலிருந்து செல்ல ரயில் / பேருந்து வசதியுள்ளது.