logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கொள்ளம்பூதூர் (திருக்களம்புதூர், திருக்களம்பூர்) திருக்கோயில் தலவரலாறு Sthala puranam of Thirukkollampudur Temple

இறைவர் திருப்பெயர்: வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி, அழகு நாச்சியார்.

தல மரம்:

தீர்த்தம் : பிரம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், காண்டீப தீர்த்தம் (அருச்சுன தீர்த்தம்), முள்ளியாறு.

வழிபட்டோர்:சம்பந்தர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேடன், இடைக்காடர்,அருச்சுனன், வரகுண பாண்டியன், கோச்செங்கட்சோழன்,பிருகுமுனிவர், காசிபர், கண்வர், அகத்தியர், வசிட்டர்,வாமதேவர் முதலியோர்.

Sthala Puranam


 

Full appearance of the temple

  • பஞ்சாரண்யத் தலங்களுள் ஐந்தாவதான வில்வாரண்யம் எனப்படும்

  • இத்தலம் வில்வவனம் - கூவிளவனம் என்னும் சிறப்பினது. (கூவிளம் - வில்வம்) கூவிளம்புதூர் - கொள்ளம்புதூர் ஆயிற்று.

  •  

    இத்தலம், வில்வவனம், பிரம வனம், பஞ்சாக்ஷரபுரம், காண்டீபவனம், ஆகிய பெயர்களையும் கொண்டது. 

  • வில்வாரண்யத்தில் சுயம்பு மூர்த்தியாகச் சிவபெருமானைத்தரிசித்த பிரம தேவன் , அங்கு ஒரு தீர்த்தம் தனது பெயரில் உண்டாக்கி , இறைவனை வழிபட்டு வந்தான். இதனால் மகிழ்ந்த பெருமான், பூத கணங்களோடும், உமா தேவியாரோடும் எழுந்தருளி, பஞ்சாக்ஷர உபதேசம் செய்தருளி,பிரமனுக்கு மீண்டும் படைப்புத் தொழிலை அருளியதாகத் தல புராணம் கூறுகிறது.   எனவே,இத்தலம், பிரம வனம் என்றும்,பஞ்சாக்ஷர புரம் என்றும் பெயர்கள் பெற்றது.

  • தேவர்கள் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தபோது, அமுதத் திவலைகள் சிதறி இங்கு விழுந்து, வில்வ மரங்களாக மாறி, வில்வ வனம் ஆகியது என்பர்.

  • காண்டீபனாகிய அர்ச்சுனன் தவமியற்றி, இத்தலம் என்பெயரை உடையதாக இருக்க வேண்டும் என வரம் வேண்டியதால், காண்டீப வனம் எனப்பட்டது.

  • பொதிகை மலையிலிருந்து இங்கு எழுந்தருளிய அகத்திய முனிவர் , வெட்டாற்றில் நீராடி, இறைவனை வழிபட்டு , ரிஷப வாகன தரிசனம் பெற்றார். நதிக்கும் அகஸ்திய காவேரி என்ற பெயர் ஏற்பட்டது.

  • அர்ச்சுனன் இப்பெருமானை வழிபட்டுப் பாசுபதம் பெற்றதால், காண்டீப வனம் என்று இத்தலம் பெயர் பெற்றது.

  • விநாயகர், கங்கை, காவேரி, சாண்டில்யர், ஆதிசேஷன், இடைக்காடர், வரகுணபாண்டியர், கோச்செங்கட்சோழர்,பிருகு முனிவர், காச்யபர், மார்கண்டேயர், கண்வர்,வசிஷ்டர், வாமதேவர் ஆகியோரும் பூஜித்துள்ளனர். 

  • பன்றியாகப் பிறந்த அந்தணன் ஒருவன் இங்கு வந்து அகத்திய தீர்த்தத்தில் மூழ்கி, தேவ வடிவம் பெற்று முக்தி அடைந்தான். 

  • கொள்ளை அடிக்கும் எண்ணத்தோடு  இத்தலத்திற்கு வந்து இரவு முழுதும் கண் விழித்திருந்த திருடனும் நற்கதி பெற்றான்.

  • ஞானசம்பந்தர், பாண்டிய நாட்டில் சைவம் தழைக்கச் செய்து, சோழ நாட்டில் கொள்ளம்பூதூருக்கு வருகை தந்தபோது முள்ளியாற்றில் வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. ஓடஞ் செலுத்த முடியாமையால் ஓடக்காரர்கள் தங்கள் ஓடங்களைக கரையில் நிறுத்திவிட்டுப் போயிருந்தனர். அங்கு வந்த ஞானசம்பந்தர், அவ் ஓடங்களுள் ஒன்றினை அவிழ்த்து நாவினையே ஓடக் கோலாகக் கொண்டு "கொட்டமே கமழும்" எனத் தொடங்கும் பதிகம் பாடி மறுகரையை அடைந்தார். இறைவன் காட்சிதர, தரிசித்து, ஆலயத்தை அடைந்து போற்றிப் பதிகத்தை நிறைவு செய்து வழிபட்டார். (இவ்வற்புதம் இன்னும் இத்தலத்தில் 'ஓடத் திருவிழா 'வாக ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது).

திருமுறைப் பாடல்கள்		: 

பதிகங்கள்     :        சம்பந்தர்         -    1. கொட்ட மேகமழுங் கொள்ளம் (3.6); 

பாடல்கள்      :   நம்பியாண்டார் நம்பி  -       மாடத் தொளிரும் (11.40.6) ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை; 

                        சேக்கிழார்         -      தேவர் பிரான் அமர்ந்த (12.28.898 & 899) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

 

 

Specialities

rAjagOpuram

  • ஊருக்குப் பக்கத்தில் முள்ளியாறு எனப்படும் வெட்டாறு ஓடுகிறது. இது அகத்திய காவேரி எனப்படும். இவ்வாற்றின் எதிர்க்கரையில் ஞானசம்பந்தர் கோயில் உள்ளது. இக்கோயிலை 'நம்பர் கோயில்' என்றழைக்கின்றனர். நம்பர் என்பது ஞானசம்பந்தரைக் குறிக்கும். இந்த ஆற்றை ஓடம் போக்கி ஆறு என்றும் மக்கள் வழங்குகின்றனர்.

 

  • இத்தலத்தில் ஓடத்  திருவிழா ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் நடைபெறுகிறது. திருஞானசம்பந்தர் அடியார்களுடன் ஆற்றின் மறுகரையிலிருந்து பதிகம் பாடிக்கொண்டே ஓடத்தில் ஏறி இக்கரைக்கு வரும் காட்சியும் மேலவாயிலில் ரிஷபாரூடராகப் பெருமான் அவருக்கும் மற்ற அடியார்களுக்கும் தரிசனம் கொடுக்கும் காட்சியும்   மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
  • கோவிலுக்கு முன்புறம் உள்ள பிரம தீர்த்தம் , பிரமனால் ஏற்படுத்தப்பட்டது. இதில் தை வெள்ளிகளில் நீராடுவர். 
  • கோயிலுக்கு வடப்புறம் உள்ள அர்ஜுன தீர்த்தத்தில் பங்குனிப் பௌர்ணமியில் நீராடினால்  நற்பயன்களை அடையலாம். 
  • அகத்தியர் தோற்றுவித்த அகத்திய தீர்த்தத்தில் கார்த்திகை சோம வாரங்களில் நீராடி தோஷங்கள் நீங்கப்   பெறலாம்.

 

  • முல்லைவனமாகிய திருக்கருகாவூரில் உஷக் காலத்திலும், பாதிரி வனமாகிய அவளிவ நல்லூரில் கால சந்தி காலத்திலும், வன்னி வனமாகிய ஹரித்துவார மங்கலத்தில் (அரதைப்பெரும் பாழியில்)   உச்சிக்காலத்திலும், பூளைவனமாகிய ஆலங்குடியில் (திரு இரும்பூளையில்) சாயரக்ஷையிலும் , திருக்கொள்ளம்பூதூரில் அர்த்த ஜாம தரிசனமும் செய்வது மிகவும் சிறந்த பலன்களை அளிக்க வல்லது என்பார்கள். இவை ஐந்தையும் ஒரே நாளிலும் தரிசிப்பர்.

  • பிரமவனம், பஞ்சாட்சரபுரம், காண்டீபவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாம்.

     

  • சுவாமி விபுலானந்தர் அவர்கள் - யாழ் நூலின் ஆசிரியர் பல காலம் ஆராய்ந்து வெளியிட்ட யாழ் நூலை (1947-ல்) அரங்கேற்றிய இடம் இத்தலமேயாகும்.

     

  • இத்திருக்கோயிலில் நாடொறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன.

     

  • மூன்றாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலுள் உள்ளன.

     

  • கல்வெட்டுக் குறிப்பில் சுவாமி 'கொள்ளம்பூதூர் உடையார் ' என்றும்; தேவி 'அழகிய நாச்சியார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளனர்.

     

  • ஆலயத்தில் நந்தா விளக்கெரிக்கவும், நாள் வழிபாட்டுக்கும் நிவந்தங்கள் விட்ட செய்திகளை இக்கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

     

  • கல்வெட்டில் இத்தலம் 'அருமொழிதேவ வளநாட்டுச் சோற்றூர்க் கூற்றத்துத் திருக்கொள்ளம்பூதூர் ' என்று குறிக்கப்பட்டுள்ளது.

  • இத்தலத்தின் அருகே, பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான இடைக்காட்டுச் சித்தரின் கோயில் அமைந்துள்ளது.

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் வழியாகக் குடவாசல் செல்லும் பேருந்தில் சென்று கொள்ளம்பூதூரை அடையலாம்.

Related Content