இறைவர் திருப்பெயர்: ஸ்ரீவாஞ்சியநாதர்.
இறைவியார் திருப்பெயர்: வாழவந்தநாயகி, மங்களநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : குப்த கங்கை,யம தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், திருமால், பிரமன், யமன், இந்திரன், பராசரர், அத்ரி முதலியோர்
Sthala Puranam
இறைவன் திருக்கயிலையிலிருந்து இத்தலத்திற்கு வந்ததால், அம்பிகை "வாழ வந்த நாயகி"யாக இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள் என்ற செய்தி இத்தல புராணத்தில் காணப்படுகின்றது. பராசர முனிவர் இத்தலத்தில் நீராடி, வீரதனு மன்னனைப் பற்றிருந்த பிரமகத்தியைப் போக்கிய சிறப்பால் இத்தீர்த்தம் அம்முனிவர் பெயரால் விளங்குகின்றது. அத்திரி முனிவர் நீராடித் தத்தாத்ரேயரை மகவாகப் பெற்ற சிறப்பால் அத்திரி தீர்த்தம் என்று வழங்குகிறது. பூமகள், திருமகள் இருவர்க்கும் ஏற்பட்ட பிணக்கால் திருமகள் திருமாலை விட்டுப் பிரிந்தாள் என்றும், திருமால் திருவாஞ்சியத்தை அடைந்து இவ்விறைவனை வழிபட்டு, திருமகளை வாஞ்சித்துப் பெற்றதால் திருவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது என்றும் தலபுராணம் கூறுகிறது. உரோமச முனிவர் தவம் செய்து முத்திப் பெற்ற வரலாறு புராணத்தில் கூறப்படுகிறது. திருமால் வழிபட்டுத் திருமகளை அடைந்ததோடு, காத்தல் தொழிலைப் பெற்றார். நான்முகன் வழிபட்டுப் படைத்தல் தொழிலைப் பெற்றார். இந்திரன் சாபம் நீங்கப் பெற்றான். மகுடவர்த்தனன் என்னும் மன்னன் பகைவர்களால் உண்டாகும் அச்சம் நீங்கப்பெற்றான். மகாதனு என்ற மன்னன் அரக்க உருவம் நீங்கி ஆனந்த வடிவமுற்றான். விருட்சி என்பவனின் மனைவி சாருமதி கயநோய் நீங்கப் பெற்றாள். தர்மத்துவசன் என்ற வணிகன் நற்கதி எய்தினான்.
இயமன் எல்லா உயிர்களையும் கவரும் தன் பாவம் தீர இத்தலத்து இறைவரை வழிபட்டுப் பாவம் நீங்கப்பெற்று, இவ்விறைவனுக்கு வாகனமாகும் பேற்றையும் பெற்றான். இயமனுக்கு மூலஸ்தானம் தனியே உள்ளது. இறைவன் இயமனுக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்த ஐதீகத் திருவிழா மாசி மாதம் பரணியில் நிகழ்கின்றது. இத்தலத்தில் வாழ்கின்ற / இறக்கின்றவர்களுக்கு எமவாதனை இல்லை எனவும், இங்கு இறப்போர் வலச் செவியில் இறைவன் ஐந்தெழுத்து (பஞ்சாட்சரம்) ஓதி சிவலோகத்தில் சேர்ப்பித்துக் கொள்கிறான் எனவும் தலபுராணம் கூறுகின்றது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வன்னிகொன்றை (2.07); அப்பர் - 1. படையும் பூதமும் பாம்பும் (5.67); சுந்தரர் - 1. பொருவனார் புரிநூலர் (7.76); பாடல்கள் : அப்பர் - மருக லுறை (4.15.6), வாரேறு வனமுலையாள் (6.02.4), சிந்தும் புனற்கெடில (6.07.10), புலிவலம் (6.70.11); மாணிக்கவாசகர் - திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து (8.02.79 வது வரி பாடல்) கீர்த்தித் திருவகவல்; குன்றங் கிடையுங் (8.18.3) வரைபொருட்பிரிதல், திருக்கோவையார், சேக்கிழார் - நாலூர் தென் திருச்சேறை (12.21.216 & 263) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், அவனி மிசை (12.28.572 & 573) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், வாசி அறிந்து காசு அளிக்க (12.29.60) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
தல மரம் : சந்தனம்
Specialities
இத்தல தீர்த்தம் (குப்தகங்கை), அத்திரி, பரத்துவாசர், ஜமதக்கினி, விசுவாமித்திரர், வசிட்டர், கௌதமர் ஆகியோர் நிறுவியருள் பெற்ற சிறப்புடையது. காசியில் கங்கைதன்னிடம் மக்கள் போக்கிக்கொள்ளும் பாவங்கள் சேர்ந்ததைத் தீர்க்க கங்கை வந்து இத்தலத்தில் தங்கி வழிபட்டுப் பாவங்களை நீக்கிக் கொண்டாள். இறைவன் தீர்த்தம் கொடுக்கும் சிறப்பால் உயர்வு பெற்ற சிறப்புடையத் தலமாகும். நான்கு யுகங்களில் முறையே புண்ணிய தீர்த்தம், அத்திரி தீர்த்தம், பராசர தீர்த்தம், முனி தீர்த்தம் என்ற நாமங்களைக் கொண்டு விளங்கியுள்ளது. கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் இறைவன் இங்குத் தீர்த்தம் கொடுத்தருளுகின்றார். பஞ்சமா பாதகம், பிரமகத்தி, நோய்கள், பிற பீடைகள், சிவத்துரோகம் முதலிய பாவங்கள் அனைத்தையும் நீக்கி வெற்றி, ஆனந்தம், வீடுபேறு முதலிய பயன்களை அளிக்கவல்லது இத்தலம். இத்தீர்த்தக் கரையில் தருமம் செய்வோர் சிறந்த பலன்களைப் பெறுவர்.
இத்தலம் மூவர்த் தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 70-வது திருத்தலமாகும். மாணிக்கவாசகரும் கீர்த்தித் திருவகவலிலும், திருக்கோவையாரில் 268-வது பாடலிலும் இத்தலத்தைக் குறித்துள்ளார். இஃது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்பிலும் சிறந்து விளங்குகிறது. இத்தலம் ஸ்கந்தபுராணம், பிரும்மாண்டபுராணம், ஆக்நேயபுராணம் ஆகிய வடமொழி நூல்களில் மிகவும் சிறப்புடன் போற்றப்பட்டுள்ளன. பாவங்களை ஏற்று அகற்றும் கங்கா நதியானவள் தனது 1000 கலைகளில் ஒரு கலையை மட்டும் காசியில் வைத்து மீதி 999 கலைகளுடன் இத்தல தீர்த்தத்தில் வசிப்பதால் இத்தல தீர்த்தம் "குப்தகங்கை" என வழங்குகின்றது. தல விருட்சம் சந்தனமாகும்.
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இரண்டு உள்ளன. தலபுராணங்கள் வடமொழியிலும், தமிழிலும் உள்ளன. தமிழில் தலபுராணம் பாடியவர் களந்தைக் குமரன் ஆவார். சிவராமசுந்தரம் பிள்ளை பாடிய மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் உள்ளது. இராமலிங்க சுவாமிகள் பாடலும், முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனையும் உள்ளன. தருமை குருமுதல்வர் ஸ்ரீகுருஞானசம்பந்தர் சிவபோகாசாரத்தில் முத்தித் தலங்களில் ஒன்றாக இதனைக் குறித்தருளுகிறார்.
இத்தலத்தில் 27 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுளன. பிற்கால சோழர்கள் கல்வெட்டுகள் ஏழும், பாண்டியர்கள் கால கல்வெட்டுகள் ஏழும், நாயக்கர்கள் கால கல்வெட்டு ஒன்றும், ஏனைய பொது. கல்வெட்டுக்களில் முறையே - குலோத்துங்கச் சோழவள நாட்டில் பனையூர் நாட்டில் ஸ்ரீவாஞ்சியம் என்ற குறிப்பு உள்ளது. இராஜகம்பீர சதுர்வேதி மங்கலம் என்றும் இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது. விற்பனை நில தானம், வரி தள்ளுபடி முதலிய தகவல்கள் உள்ளன.
Contact Address