logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கோகர்ணம் (கோகர்ணா) கோயில் ஸ்தல வரலாறு

இறைவர் திருப்பெயர்: மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: கோகர்ணேஸ்வரி, தாம்ரகௌரி.

தல மரம்:

தீர்த்தம் : கோடி தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், கபிலதேவ நாயனார், சேக்கிழார், இராவணன், பிரமன், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், சரஸ்வதி, வசிட்டர், நாகராசன் முதலியோர்.

Sthala Puranam

thirugokarnam temple

கோ - பசு, கர்ணம் - காது. சுவாமி பசுவின் காதுபோலக் குழைந்து காணப்படுவதால் இத்தலம் இப்பெயரைப் பெற்றது. இதற்கு ருத்ரயோனி, வருணாவர்த்தம் முதலிய பெயர்களும் உண்டு.

 

இலங்கை வேந்தன் இராவணன் கயிலைமலை சென்று சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். சிவபிரான் உமையம்மையோடு காட்சித்தந்து வேண்டுவன யாது, என வினவினார். இராவணன் இலங்கை அழியாதிருக்க அருளவேண்டும் என்றான். அதற்கிசைந்த பெருமான் இராவணன் கையில் பிராணலிங்கத்தைக் கொடுத்து இதனை இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தால் இலங்கை அழியாது; இச்சிவலிங்கத்தைத் தலையில் சுமந்து செல்லவேண்டும், வழியில் இதனைக் கீழே வைத்தால் எடுக்கவாராது என அருளி மறைந்தார். இராவணன் பிராணலிங்கத்தைச் சிரவில் சுமந்து இலங்கை நோக்கிச் சென்றான். நாரதர் மூலம் இதனை அறிந்த இந்திரன் பிராண லிங்கத்தை இராவணன் பிரதிட்டை செய்துவிட்டால் இராவணன் அழியான், தேவர்கள் துயர்நீங்காது என எண்ணித் தேவர்கள் புடைசூழ கயிலைமலை சென்று விநாயகரை வேண்டினான். இந்திரனின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர் இராவணன் கோகரணத்தை அடையும் வேளையில் அவன் வயிற்றில் நீர்சுரக்குமாறு செய்ய வருணனை ஏவிவிட்டு, ஒரு சிறுவன் போல அவன்முன் தோன்றி நின்றார். இராவணன் வந்த அந்தச் சிறுவனை நோக்கிச் சிவலிங்கத்தை அச்சிறுவன் கையில் கொடுத்துச் சிறுநீர் கழித்து வருமளவும் அதனைக் கையில் வைத்துக்கொண்டு நிற்குமாறு வேண்டினான். சிறுவனாக வந்த விநாயகர், இராவணனை நோக்கி என்னால் சுமைபொறுக்க இயலாத நேரத்தில் மூன்றுமுறை உன்னை அழைப்பேன் அதற்குள் வராவிட்டால் நிலத்தில் வைத்துவிடுவேன் என அருளினார். இராவணனும் இசைந்து சென்றான். நெடுநேரம் ஆகியும் அவன் வராதரால் மூன்றுமுறை, அழைத்து சிவலிங்கத்தைப் பூமியில் வைத்துவிட்டார். இராவணன் வந்து சிவலிங்கத்தை இருபது கரங்களாலும் எடுக்க முயன்றான். பெருமான் பசுவின் காதுபோலக் குழைந்து காட்டினார். இராவணன், மகாபலம் உடையவர் இவ்விறைவர் எனக் கூறி அந்த அந்தணச்சிறுவன் செய்த தவறுக்காக மூன்றுமுறை அவனது தலையில் குட்டினான். சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டிப் பந்துபோல அவனைத் தூக்கி எறிந்து விளையாடினார். இராவணன் பிழைபொறுக்க வேண்டினான். விநாயகர், உன் தலையில் இவ்வாறே மூன்றுமுறை குட்டிக்கொள் என்று கூறினார். இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் குருதிசோரத் தலையில் குட்டிக் கொண்டு அவரை வழிபட்டு அருள் பெற்றான். விநாயகர் சினம் தணிந்து தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோருக்கு வேண்டும் வரங்கள் தருவதாகக் கூறி இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருனி£ர்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்     - 1. என்றுமரி யானயல வர்க் (3.79);                      அப்பர்       -     1. சந்திரனுந் தண்புனலுஞ் (6.49); பாடல்கள்      :    அப்பர்       -        செழுநீர்ப் புனற்கெடில (6.7.5),                                            குற்றாலங் கோகரணம் (6.43.2),                                            தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.1);             கபிலதேவ நாயனார்  -       பார்கால்வான் நீர்தீப் (11.23.79 & 80) சிவபெருமான் திருவந்தாதி;                    சேக்கிழார்     -       கூற்றுதைத்தார் மகிழ்ந்த (12.28.1027) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                            அம் மருங்கு கடந்து (12.21.350) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.

 

 

Specialities

  • இத்தலத்தை அப்பர், தாம் அருளிய திருஅங்கமாலையில் வைத்துப் பாடியுள்ளார்.

 

  • இத்தலத்தில் சிவலிங்கம் ஒரு கொட்டைப்பாக்கு அளவில் ஆவுடையாரில் அடங்கியிருப்பதைக் காணலாம்.

 

  • இத்தலத்து வழக்கப்படி மக்கள் திருமேனியைத் தொட்டி நீராடி மலர்சூட்டி வழிபடலாம்.

 

  • கோயிலமைப்பு, தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறானது; கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது.

 

மூலத்தானம் சிறிய அளவுடையது; நடுவிலுள்ள சதுரமேயில் வட்டமான பீடமுள்ளது, இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது; இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவிலுள்ள வெள்ளை நிறமான உள்ளங்கையளவுள்ள பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது. தொட்டுப்பார்த்து உணரலாம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.

 

"துவிபுஜ" விநாயகர் - இவர்முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இஃது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்கின்றனர்.

 

இத்தலத்தில் உள்ள கோகர்ப்பக்குகை கண்டுகளிக்கத்தக்கது. இங்கு 33 தீர்த்தங்கள் உள்ளன; அவற்றுள் கோகர்ண தீர்த்தம், தாம்ரகௌரிநதி, கோடிதீர்த்தம், பிரமகுண்ட தீர்த்தம் முதலியவை சிறப்புடையவை; இவற்றுள்ளும் சிறப்புடையது கோடி தீர்த்தமாகும்.

 

இத்தலத்திற்கு வருவோர் முதலில் கோடி தீர்த்தத்தில் நீராடி, பின்பு கடல் நீராடி, பிண்டதர்ப்பணம் செய்து, மீண்டும் நீராடி பிறகு மகாபலேஸ்வரரை வழிபட வேண்டும்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : கர்நாடகா கர்நாடக மாநிலம் - பெங்களூரிலிருந்தும், மங்களூரிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன. சென்னையிலிருந்து இரயில் மூலம் செல்வதாயின், ஹூப்ளி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்ல வேண்டும். தொடர்புக்கு :- 08386 - 256167 , 257167.

Related Content