தலமரத்தின் பெயரால், இதுஇப் பெயர் பெற்றது. (பாசு - மூங்கில்).
அம்பாள் வழிபட்டதலம்.
திருமால் மத்ஸ்யாவதாரத்தில் நேர்ந்த தோஷம் போக இத்தலத்தில் வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார்.
சந்திரன் வழிபட்டதலம்.
ஒருகாலத்தில் இத்தலம் மூங்கில் காடாக இருந்திருக்கிறது.
சோழ அரசன் காட்டை அழித்து, நாடாக்கிய போது, வாசு என்னும் மரம் வெட்டும் கருவிகொண்டு மூங்கிலை வெட்டியபோது, ஒரு புதரிலிருந்து செங்குருதி வெளிப்பட்டது. அரசன் வெட்டுவதை நிறுத்திவிட்டு, சோதித்துப் பார்த்தபொழுது சிவலிங்கம் இருக்கக்கண்டான். தன்னுடைய தவறுக்கு வருந்தி ஒரு பெரியகோயிலை எழுப்பினான். சிவலிங்கத்தின் மீது இன்றும் மரம்வெட்டும்போது ஏற்பட்ட தழும்புகள் அடையாளமாகத் திகழ்கின்றன.
குறும்பர் அரசனுக்குச் சார்பாகச் சமணர்கள், கரிகால்சோழன் மீது ஏவிய பாம்பை இறைவன் எழுந்தருளித் தடுத்தார். இதை, அப்பர் இத் தலத்திற்குரிய தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கரிகாலன், இக் கோயிலைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. இக் கோயிலைக்கட்ட எண்ணிய கரிகாலன் காளி உபாசனை பெற்ற, இப்பகுதியை ஆண்டு வந்த குறுநில மன்னன் ஒருவனுடன் ஒருமுறை போர் செய்ய நேரிட்டது. அவ்வாறு போரிடுங்கால் அம்மன்னனுக்குத் துணையாகக் காளி வந்து போரிட்டதால் கரிகாலனால் வெற்றி பெற முடியவில்லை. மனம் சோர்ந்த கரிகாலன் இப்பெருமானிடம் விண்ணப்பித்தான். பெருமான் நந்தியைத் துணையாக அனுப்ப, மீண்டும் கரிகாலன் சென்று போரிட்டான். போரின்போது காளி தோன்ற, நந்தியெம்பெருமான் அவளை உற்றுநோக்க அவளும் வலியடங்கி நின்றாள். நந்தி அக்காளிக்கு விலங்கு பூட்டி இங்கு அடைத்தார்; வெற்றி பெற்ற மன்னன் உள்ளம் மகிழ்ந்து இத் திருக்கோயிலைக் கட்டினான் என்பர். இது தொடர்பாகத் தற்போது கோயிலில் வெளிப்பிராகாரத்தில் சிதைந்திருக்கும் நூற்றுக்கால் மண்டபத்தின் முன் 'விலங்கு இட்ட காளி'யின் சிற்பம் உள்ளது.
சுவாமிக்கு எண்ணெய்க் காப்பு மட்டும் செய்யப்படுவதில்லை.
இத்தலத்தை உச்சிக்காலத்தில் தரிசித்தால் விசேஷம் என்று தலபுராணம்கூறுகிறது. ஏனையதலங்களின் கலைகள் அங்கு வந்து அச்சமயத்தில் கூடுவதால் உச்சிக்காலதரிசனம் சிறப்பாகக் கருதப்படுகிறது.
இங்கு 11 விநாயகர்கள் உள்ள விநாயகர் சபை உள்ளது. விஷ்ணு பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது.
சோழர் காலக் கல்வெட்டுகளும், மற்றைய காலத்தவைகளும் ஆக 16 கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலுள்ள கல்வெட்டுகள் மூலம் அரசர்கள் இக்கோயிலுக்குச் செய்த தானதருமங்கள் தெரியவருகின்றன. ராஜராஜன் பூஜைக்காக 47 பொன்காசுகள், விளக்கிற்காக 32 பசுவும், முரசுவாத்தியத்திற்காக 1 எருதும் அளித்தான் என்றும் குலோத்துங்கன் காலத்தில் ஒரு மாது திருஆபரணத்திற்காக 30 பொன்காசும், நாள்ஒன்றுக்கு 2 படி அரிசியும் கொடுத்ததாகத் தெரியவருகிறது.
ஒரு காளிங்கராயன் பத்து விளக்குக்களுக்காக எழுபத்தெட்டுக்காசு கொடுத்துள்ளான். வீரகம்பணன் நாளில் ஒருவன் ஒரு தோட்டத்தைக் கொடுத்துள்ளான்.
தொண்டைமண்டலம், ஈக்காடு கோட்டம், காக்கலூர் நாட்டுத் திருப்பாசூர் என்று இருக்கின்றது.
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, திருவள்ளூர்க்கு வடக்கில் 5-கி. மீ. தூரத்தில் இருக்கிறது. திருவள்ளூர் - பேரம்பாக்கம் நகரப் பேருந்திலோ, காஞ்சிபுரத்திலிருந்து கடம்பத்தூர் வழியாக திருவள்ளூர் செல்லும் பேருந்துகளிலோ சென்று இத்தலத்தை அடையலாம்.
தொடர்பு :
09894486890