இறைவர் திருப்பெயர்: மணிகண்டேஸ்வரர், தயாநிதீஸ்வரர், பிரவாளேஸ்வரர், சாதரூபர், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், மால்வணங்கீசர், தீண்டச் சிவந்தார், சாகிசனர்.
இறைவியார் திருப்பெயர்: அஞ்சனாட்சி, கருணாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : சக்கர தீர்த்தம் . பாலாறு
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், பட்டினத்துப் பிள்ளையார்,சேக்கிழார், திருமால், சந்திரன் முதலியோர்.
- மக்கள் வழக்கில் 'திருமால்பூர் ' என்று வழங்குகின்றது.
- திருமால், இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம், ஆதலின் 'மாற்பேறு ' என்னும் பெயர் பெற்றது.
- திருமால் வழிபட்டுச் சக்ராயுதம் பெற்ற தலமாதலின் இதற்கு 'ஹரிசக்ரபுரம் ' என்றும் பெயருண்டு.
- இத்தலத்தில் இறைவனுக்கு பல திருநாமங்கள் இருப்பினும் 'மணிகண்டேஸ்வரர் ' என்னும் திருநாமமே வழக்கில் உள்ளது.
- திருவீழிமிழலைக்குரிய வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. அதாவது, திருமால், நாடொறும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சித்து வழிபட்டாரென்றும், ஒரு நாள் மலர் ஒன்று குறைய, தன் கண்ணையே பறித்து இறைவன் திருவடியில் சார்த்தி அர்ச்சித்தார்; கருணையே வடிவான இறைவன் திருமாலுக்கு பத்மாட்சன் என்ற நாமத்தை அருளி, அத்தலத்திற்கும் திருமாற்பேறு என்னும் நாமம் விளங்க அருள் செய்தார் என்பது தல வரலாறு. இவ்வாறு வழிபட்டுத் தம் சக்ராயுதமான 'சுதர்சனத்தை'த் திரும்பப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. (இதை உறுதிப்படுத்தும் வகையில் திருமாலின் உற்சவத் திருமேனி ஒன்று, ஒரு கையில் தாமரை மலரும் மறு கையில் 'கண்'ணும் கொண்டு, நின்ற கோலத்தில் இருப்பதை இக்கோயிலில் காணலாம்.)
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. ஊறி யார்தரு நஞ்சினை (1.55), 2. குருந்தவன் குருகவன் (1.114); அப்பர் - 1. மாணிக் குயிர்பெறக் (4.108), 2. பொருமாற் றின்படை (5.59), 3. ஏது மொன்று மறிவில (5.60), 4. பாரானைப் பாரினது (6.80.); பாடல்கள் : சம்பந்தர் - மலையினார் (1.76.1); அப்பர் - திரையார் (6.07.4), புலிவலம் (6.70.11), வாரார்ந்த (6.81.5), விலையிலா (6.82.8); பட்டினத்துப் பிள்ளையார் - சென்றேறி (11.30.63) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; சேக்கிழார் - அந்நகரில் (12.21.327) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், அப்பதியில் (12.28.1002 & 1003) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்திலிருந்து அடிக்கடி இத்தலத்திற்கு பேருந்து உள்ளது. அரக்கோணம் - காஞ்சிபுரம் இருப்புப் பாதையில் இத்தலம் உள்ளது. இந்நிலையத்திலிருந்து 5-கி. மீ. உள்ளே சென்றால் இத்தலத்தை அடையலாம்.
தொடர்பு :
04177 - 248220, 09345449339