இறைவர் திருப்பெயர்: நீலகண்டேஸ்வரர், சுவேதார்க்கவனேஸ்வரர், திருக்குமாரசாமி
இறைவியார் திருப்பெயர்: வீறாமுலையம்மை, நீலமலர்கண்ணி, நீலோற்பலாம்பாள்.
தல மரம்:
தீர்த்தம் : நீலோற்பலதீர்த்தம். கந்த தீர்த்தம், செங்கழுநீர் தீர்த்தம், நீல தீர்த்தம்.
வழிபட்டோர்:வியாக்ரபாதர், உருத்திரசன்மர், சம்பந்தர், சேக்கிழார் ஆகியோர்.
- வெள்ளெருக்கைத் தலமரமாகக் கொண்டுள்ள தலமாதலின் எருக்கத்தம்புலியூர் என்று பெயர் பெற்றது.
- வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) பூசித்த தலங்கள் 'புலியூர்' என்ற பெயருடன் விளங்குகின்றன. அவற்றுள் இத்தலமும் ஒன்று. (ஏனையவை:- (1) பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம் - தென்புலியூர்) (2) திருப்பாதிரிப்புலியூர் (வடபுலியூர்) (3) ஓமாம்புலியூர் (4) பெரும்புலியூர்.)
- கைலாயத்தில் சிவன் வேதங்களின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் போது பார்வதியின் கவனம் சிதறியது. அதனால் அவளை பரதவர் குலத்தில் மீனவப் பெண்ணாகப் பிறக்குமாறு இறைவன் சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன், தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார். முருகனின் இச்செயலுக்காக இறைவன் அவரை மதுரையில் தனபதி என்பவரின் மகனாக உருத்திரசர்மர் என்ற பெயரில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். உரிய வயது வந்த போது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டுப் பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் திருக்குமாரசாமி என்ற பெயரிலும் இத்தலத்தில் விளங்குகிறார். உருத்திரசன்மரின் உருவம் இக்கோவிலில் உள்ளது.
- இத்தலத்தின் பெருமையை கேட்ட தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட்டு வந்தனர். அங்கே வந்த வேடர்கள் பறவைகளை கொல்லவும், மரங்களை வெட்டவும் முயன்றனர். தேவர்களும், முனிவர்களும் இறைவனிடம் முறையிட, அவர்களை யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி வழிபடும்படி கூறி மறைந்தார். அவ்வாறே அவர்கள் யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி, இத்தலத்தில் இறைவனை வழிபட்டனர்.
- சுவேதன் என்ற மன்னன் முன் வினைப் பயனால் வெண் குஷ்டத்திற்கு ஆளானான். இந்த மன்னன் எருக்கத்தம் புலியூர்த் தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்து நோய் நீங்கப் பெற்றான். எருக்கிற்கு வெண்குஷ்டத்தைப் போக்கும் சக்தி உண்டு.
- ராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர பாக்கியத்தையும், அவனுடைய மகன் ராஜேந்தர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம்.
- இராஜேந்திர சோழ மன்னன் இவ்வாலயத்திற்கு ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கிறான். ஆதலால் இத்தலத்திற்கு இராஜேந்திரப் பட்டிணம் என்று பெயர் வந்தது.
திருமுறைப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. படையார் தருபூதப் (1.89);
பாடல்கள் : சேக்கிழார் - இரும் தடங்களும் (12.28.178) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,
எருக்கத்தம் புலியூர் (12.69.1) திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்.
அமைவிடம்
அ/மி. நீலகண்டேசுவரர் திருக்கோயில்,
இராஜேந்திரப்பட்டினம் - 608 703.
கருவேப்பிலக்குறிச்சி (வழி),
விருத்தாச்சலம் வட்டம்,
கடலூர் மாவட்டம்.
மாநிலம் : தமிழ் நாடு
இஃது, விருத்தாசலம் - ஜயங்கொண்டம் பேருந்துச் சாலையில் உள்ள தலம். சென்னை - தஞ்சை நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பை அடுத்து, ஸ்ரீமுஷ்ணம் - விருத்தாசலம் பாதையில் சென்று ஸ்ரீ முஷ்ணத்தை அடுத்துள்ள இத்தலத்தை அடையலாம்.
தொடர்பு :
04143 - 243533, 09360637784.