இறைவர் திருப்பெயர்: | சக்கரவாகேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | தேவநாயகி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | காவிரி. காக தீர்த்தம் |
வழிபட்டோர்: | சம்பந்தர், சேக்கிழார், திருமால், சயந்தன், தேவர்கள், சக்கரவாகப்பறவை, (பிரம்மன் சக்கரவாகப் பறவையாக உருமாறி வழிபட்டார் என்பார்.), குபேரன், அநவித்யநாதசர்மா, அகவிக்ஞை ஆகியோர். |
சக்கரவாகப் பறவை வழிபட்டதாலும், (சக்கரமங்கை வழிபட்டதாலும்) இவ்வூர் சக்கரப்பள்ளி என்று வழங்கலாயிற்று.
சக்கரவாகப்பறவை தவமிருந்து இறைவனைப் பூஜித்தபடியால், சுவாமிக்கு சக்ரவாகீச்வரர் என்றும் தலத்திற்கு சக்கரப்பள்ளி என்றும் பெயர்கள் வந்தன. கோவில் சுவற்றில் ஈசனை சக்கரவாகப்பறவை பூஜிக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் திருமுடியைத்தேடி பிரமன் சக்கரவாகப் பறவையாக வடிவெடுத்துப் பறந்து சென்றும் காணமுடியவில்லை.தன் பிழைக்கு வருந்தி பிரமன் பூசித்துப் பழி நீங்கியதாக வரலாறு.
திருமால் வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலம்.
பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தியன்று சூரியன் இவ்விறைவனை வழிபடும் அற்புதக் காட்சியைக் காணலாம்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. படையினார் வெண்மழுப் பாய்புலித் (3.27); பாடல்கள் : சேக்கிழார் - மொய் தரும் சோலை சூழ் (12.28.361,362 & 363) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் : வில்வம்
மக்கள் வழக்கில் இவ்வூர் ஐயம்பேட்டை என்று வழங்குகிறது. (இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இதை தஞ்சாவூர் ஐயம்பேட்டை என்று கூறுகின்றனர்.)
கருவறை கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை.
அம்பாள் சன்னதி எதிரில் பெண்களுக்கு மாங்கல்ய பலன் தருவதும், யம பயம் நீக்க வல்லதுமான குங்குலியக் குண்டம் அமைந்துள்ளது.
கல்வெட்டுக்களில் இவ்வூர், "குலோத்துங்க சோழவள நாட்டு, விளநாட்டு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்" என்று குறிக்கப்பட்டுள்ளது.
(மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12-ஆவது ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூர்ச்சபைக்குரிய சில விதிகளைக் கூறுகின்றது. நாற்பது வயதுக்கும் மேற்பட்டவரே ஊர்ச்சபை உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுள் உறுப்பினர்க்கு நிற்காதவராக இருக்க வேண்டும் என்றும் ஊர்ச்சபை விதிகள் கூறப்பட்டுள்ளன.)
சப்த ஸ்தானப் பல்லக்கு விழா: பங்குனி மாதம் சித்திரை நக்ஷத்திரமன்று சக்கரப் பள்ளி கோவிலில் இருந்து புஷ்பப் பல்லக்கில் சக்கரவாகீச்வரரும் வேத நாயகியும் எழுந்தருள வெட்டிவேர் பல்லக்கில் நாதசன்மா – அனவித்தை தம்பதிகளும் தொடருகின்றனர். இப்பல்லக்குகள், புறப்பட்டு சப்த மங்கைகளில் உள்ள மற்ற ஆறு தலங்களுக்கும் சென்று திரும்புகின்றன
![]() |
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் ஐயம்பேட்டை உள்ளது. கும்பகோணம் - தஞ்சாவூர் புகைவண்டி மார்க்கத்தில் ஐயம்பேட்டை புகைவண்டி நிலையம் உள்ளது. ஊர்ப் பெயர் ஐயம்பேட்டை; கோயில் இருப்பது சக்கரப்பள்ளி என்றபகுதியில். தொடர்பு : 04374-292971 09345439743